Skip to content
Home » என் சுவாசம் உன் வாசமாய் – 24

என் சுவாசம் உன் வாசமாய் – 24

அத்தியாயம் -24

அதற்குள் பயிற்சி முடித்து வந்த இந்திரஜித்திற்கு வந்த தகவலைக் கூற அப்படியே இடிந்து போய் அமர்ந்தான். அவனைப் பார்த்த தன்விக் அவன் அருகில் வந்து என்னவென்று கேட்க இந்தர் அறிந்த செய்தியைக் கூற உள்ளம் பதறியது அவனுக்கும்.

“என்னடா சொல்ற? இது உண்மையா?” என்று அவனை உலுக்க வலியோடு அவனைப் பார்த்த இந்தர் உடனே எழுந்து ரூமுக்குப் போகத் திரும்ப அங்கே தமிழ் தொலைக்காட்சியில் கயலின் செய்தி தான் ஒளிபரப்பானது. அதைப் பார்த்தவனுக்கு இதயத்தில் ஏதோ ஒரு வலி. ஆனாலும், எங்கோ ஓர் மூலையில் ‘அவளுக்கு எதுவும் ஆகி இருக்காது, அவள் நன்றாக இருப்பாள்’ என்று மனது அடித்துக் கூற விறுவிறுப்பாக எழுந்து தன் அறைக்குச் சென்று ஃபோனை எடுத்து தமையனுக்கு டயல் செய்தான்.

இந்தரிடம் என்ன சொல்வது என்று புரியாமல் ஃபோனை அட்டென்ட் செய்தவனைப் பேசக்கூட விடாமல் பேசினான் இந்தர்.

“அண்ணா… க..கயல் எங்கே? அவளுக்கு ஒண்ணும் ஆகலை தானே? அவ சேஃப் தானே?” இதுதான் அவன் முதல் கேள்வி.

அதிலேயே அப்படியே நின்றான் இஷான்.

‘என்ன மாதிரியான காதல் இது? நான்கூட கயலுக்கு ஏதோ ஆகி இருக்கும் என்று எண்ணினேன். ஆனால், இவனோ அவள் நிச்சயமாக உயிரோடு இருக்கிறாள் என்பது போல பேசுகிறானே… நான்தான் நல்ல காதலன்னு என்னை நானே ஏமாத்திட்டு இருந்து இருக்கிறேன் போல’ என்று அவன் எண்ண, அதற்குள் பத்துமுறை அவனை அண்ணா என்று அழைத்து விட்டான் இந்தர்.

அதற்குள் சுயநினைவு அடைந்தவன் அவனுக்கு இப்போது இதைப்பற்றி எதுவும் தெரியாமல் இருப்பதே நலம் என்று எண்ணியவன்,

“இந்தர்… க..கயல்… அவங்களப் பத்தி எந்தத் தகவலும் கிடைக்கலைடா… அவங்கள ஒரு பையன் காப்பாத்தறேன்னு வீட்டுக்குள்ள கூட்டிப் போய் இருக்கான், உடனே ஃபயர் ஆகி இருக்கு… எதுவுமே புரியலடா” என்று கூற, அப்படியே இடிந்து போய் அமர்ந்தான் இந்திரஜித்.

“அ..அண்ணா… நீ..நீங்க அங்க போய் பாருங்க. அவளுக்கு எதுவும் ஆகி இருக்காதுன்னு எனக்குத் தெரியும். ப்ளீஸ், போய் பாருங்க” என்று கூற,

“நா..நான் இங்கதான் இருக்கேன் இந்திரா… நீ..நீ… கவலைப் படாதே. நான் என்னன்னு விசாரிச்சு சொல்றேன்” என்று அவன் கூறிக்கொண்டு இருக்கும் போதே அவனிடம் வந்த இன்ஸ்பெக்டர்,

“சார்… நெருப்பைக் கம்ப்ளீட்டா அணைச்சுட்டோம் சார்… உள்ள ஒரு பாடி தான் சார் கிடைச்சு இருக்கு, அது ஒரு பையனோட பாடி. மே பி இங்க இருக்குறவங்க சொன்ன பையன்னு நினைக்கிறேன். மீதி ரெண்டு பேருக்கும் என்ன ஆச்சுனு தெரியல சார்… விசாரணை போயிட்டு இருக்கு. நீங்க இராஜமாணிக்கம் சார் பாடிய வாங்கிக்கிறேன்னு சொன்னதால வந்து ஃபார்மாலிட்டீஸ் முடிச்சுட்டா நாங்க பாடிய ஒப்படைச்சுடுவோம் சார், எங்க கூட வாங்க” என்று கூற அந்த வழியே கேட்டுக்கொண்டு இருந்தவனுக்கு அப்போது தான் நிம்மதியாக இருந்தது.

‘அப்போ கயலுக்கும் அவ பாட்டிக்கும் எதுவும் ஆகலை… தாத்தா’ என்று எண்ணியவனுக்கு மனம் கனத்தது. இராஜமாணிக்கத்தின் நல்ல மனதை அவனும் அறிவானே.

“இதோ வர்றேன் சார்…” என்ற இஷான், “ஹலோ..இந்திரா” என்று அழைக்க, தன்னிலை அடைந்தவன் “சொல்லுடா” என்று கேட்க,

தனது தமையன் நார்மலாகி விட்டான் என்பதை உணர்ந்த இஷான்,

“நீ நினைச்சது சரிதான்டா, அவங்க தப்பிச்சுட்டாங்க போல… அந்த ஆளு பண்ண பாவத்துக்கு அந்த நல்லவரோட கடைசிப் பயணம் பாதிக்கக் கூடாதுல. அதான், தாத்தாவோட ஈமக்கிரியை நான் பண்ணப் போறேன்டா… நீ கவலைபடாதே, அவங்களுக்கு எதுவும் ஆகி இருக்காது, தேடலாம். நீ கவலைபடாதேடா… நா..நான் அப்புறம் பேசுறேன், ஃபார்மாலிட்டீஸ் முடிக்கனும்” என்றுவிட்டு அவனது அனுமதி கூடக் கேட்காமல் ஃபோனை வைத்து விட்டவனுக்குப் பெருமூச்சு தான் வந்தது. தம்பியிடம் கூட உண்மையை மறைத்தான். காரணம் அவனது அவசரபுத்தி. அவனிடம் பேசுவதை யாராவது கேட்டு கயலுக்கும் ஆபத்து வந்தால் என்னவாகும் என்று எண்ணியே அவனிடம் மறைத்தான். அதும் இல்லாமல் இப்போது தமையனின் காதலின் ஆழம் அறிந்ததும் தனது திட்டத்தைச் சீக்கிரமே செயலாற்ற வேண்டும் என்று நினைத்தான்.

அதற்குள் செய்தியாளருக்குப் பேட்டியளித்த இன்ஸ்பெக்டர், “உள்ளே நெருப்பை அணைச்சாச்சு. உள்ளே மூணு பேர் போனதா இங்க இருக்கிறவங்க சொல்றாங்க. ஆனா, உள்ளே ஒரு ஆண் சடலம்தான் கண்டு பிடிக்க முடிஞ்சது. அவரு யாருனு கண்டுபிடிக்க விசாரணை நடந்துட்டு இருக்கு, அந்தப் பொண்ணும், அவங்க பாட்டியும் பத்தித் தகவல் இல்லை. தேடிட்டு இருக்கோம். இதை ஈஸ்வரன்தான் செஞ்சார்னு டவுட் இருக்கு. விசாரணையில் தெரியவரும், தேங்க்ஸ்” என்றுவிட்டு வர அது லைவாக டெலிகாஸ்ட் ஆகியது.

அதனைப் பார்த்துக் கொண்டு இருந்த இந்தருக்கு உள்ளே ஏதோ உடைவது போல் இருந்தது. அவனது அருகில் வந்த தன்விக்,

“என்ன தான்டா ஆச்சு? கயலுக்கு எதுவும் இல்லையே? இஷான் அண்ணா என்ன சொன்னாரு?” என்று கேட்க அவனிடம் அனைத்தையும் கூறியவன் தளர்ந்துபோய்,

“அவளை ஏன்டா நான் பார்த்தேன்? அங்க சுத்தி இங்க சுத்தி அவ என் கண்ணுலயா படனும். நானும் ஏன்டா அவகூடப் பழகனும்… எதுக்கு அவள அண்ணாகிட்ட டியூஷன் சேர்க்கனும்? என்னை அணு அணுவா கெல்றாடா… அவளுக்கு எதுவும் ஆகி இருக்காதுனு தோணுது. ஆனாலும், அவளுக்கு ஏதாவது ஆகி இருக்குமோனு படப்படப்பா இருக்குடா… முடியலடா இந்த வலி… அவள விட்டுத் தூரமா ஓடணும்னு தானே, இந்தப் போலீஸ் வேலையை இழுத்துட்டு வந்தேன்… அப்படியும் என்னால முடியலடா… எங்க அண்ணனோட லவ்வுக்கு நானே எதிரியாப் போய் நின்னுடுவேனோனு பயமா இருக்குடா. டேய், ஒருவேளை நான் லவ் பண்ணது அண்ணனுக்குத் தெரிஞ்சிருக்குமோ? அதான் ஒரு மாதிரிப் பேசினாரோ?” என்று புலம்பல் பாதி, வேதனை மீதி என்று அவன் பேச தன்விக்கிற்கு அவனது நிலை கஷ்டமாகிப் போனது.

“டேய், அதெல்லாம் தெரிஞ்சு இருக்காதுடா. தெரிஞ்சா அண்ணா உன்கிட்டக் கேட்டு இருப்பாருல… அவரு நார்மலா தானே பேசினாரு. நீ கவலைப் படாதேடா… உன் லவ் யாருக்கும் தெரியாது. அதனால, உன் வலியை உள்ளேயே வெச்சுகிட்டு தான் ஆகனும். அண்ணாக்கு நீதான் ஆறுதல் சொல்லனும்டா, அதை யோசி” என்று கூற அப்போது தான் அவனுக்கு உரைத்தது, தனது தமையனிடம் தான் கயலைப் பற்றி விசாரித்ததும், தனது தமையன்தான் தன்னை ஆறுதல் படுத்தினான் என்பதையே உணர்ந்தான். தானாவது தூரத்தில் இருந்து கேள்வியுற்றவன். ஆனால், நேரில் சென்று பார்த்த அண்ணனுக்கு யார் ஆறுதல் சொல்வது என்று அப்போது தான் எண்ணினான். இப்படி ஒரு கோணத்தில் யோசிக்காத தனது மடத்தனத்தை எண்ணித் தலையிலடித்துக் கொண்டவன் உடனே தனது சகோதரனுக்கு ஃபோன் செய்தான்.

என்னவோ ஏதோ என்று அழைப்பை ஏற்ற இஷான் காவல் துறையில் இருந்து ஃபார்மாலிட்டீஸ் முடித்து இராஜமாணிக்கத்தின் உடலை வாங்கிக் கொண்டு கிளம்பி இருந்தான். தமையனிடமிருந்து ஃபோன் வரவும் அவனது மனதின் தவிப்பைப் புரிந்தவனாய் எடுத்துப் பேசினான்.

“சொல்லுடா இந்திரா… கயலோட தாத்தா பாடிய வாங்கிட்டு இப்போதான் கிளம்பினேன். கயலையும் அவ பாட்டியையும் தேடிட்டு இருக்காங்கடா” என்று கூடுதலாகத் தகவல் சொன்னான் இந்தருக்கு. அவனது நிலையிலும் தன்னை அவன் தேற்றுவது குறித்து எண்ணியதில் அவனுக்குக் கண்கள் கலங்கியது. அவனது தோளில் தன்விக் தட்டத் தெளிந்தவன்,

“அ..அண்ணா… உன்னோட கஷ்டமான நேரத்தில என்னால உன்கூட இருக்க முடியலையே? நா..நான் அங்க இருந்திருந்தா இந்நேரம் உனக்கு ஆறுதலா இருந்து இருப்பேனே… லவ் பண்ண பொண்ணு உயிரோட இருக்காளா? இல்லையானு தெரியாத வருத்தம் உங்களுக்கு எவ்வளவு வலியைக் கொடுத்து இருக்கும்னு புரியுதுணா. ஆனா, இக்கட்டான நேரத்தில என்னால கூட இருக்க முடியலையே?” என்று தன் வலியை மறைத்துத் தமையனின் வலியைத் தேற்ற முயன்றான்.

2 thoughts on “என் சுவாசம் உன் வாசமாய் – 24”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *