Skip to content
Home » என் சுவாசம் உன் வாசமாய் – 23

என் சுவாசம் உன் வாசமாய் – 23

அத்தியாயம் – 23 

அவன் இழுத்த இழுப்பில் சென்றவளுக்கு என்ன செய்வது, ஏது செய்வது என்று புரியாமல் கலங்கினாள். தன் தாத்தாவின் உடலை வாங்கி அவருக்குச் செய்ய வேண்டிய கிரியையைச் செய்ய வேண்டும் என்று எண்ணினாளே… இப்போது தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவே ஓட வேண்டி இருக்கிறதே… என்று எண்ண எண்ண அவளது இதயம் வெடித்துவிடும் போல வலித்தது. அவளது அதிர்ந்த முகத்தை ஒரு கதவின் ஓரம் நின்று பார்த்துக் கொண்டு நின்ற இஷானுக்கு அவன் எடுத்த முடிவு மேலும் உறுதியளித்தது. இனி இவளைக் கஷ்டப்பட வைக்கக் கூடாது என்று எண்ணினான். அவள் தனது சுயம் அடையும் முன் அவளது பாட்டியை வைத்து நகர்த்தி வருவதைக் கண்டு ஆணி அடித்தது போல் நின்றாள்.

அவள் அப்படியே நிற்பதை உணர்ந்து திரும்பிப் பார்க்க,

“அ..அண்ணா, பா..பாட்டினா” என்று மலங்க மலங்க விழித்தபடி கூற அவளைப் பார்க்கப் பார்க்க உள்ளம் வலித்தது தண்டபாணிக்கு.

அவளைத் தோளோடு அணைத்தவன், “நாம பார்த்துக்கலாம்டா… நான் இருக்கேன்டா” என்று கூறி அவளைக் கூட்டிக் கொண்டு நடக்க நிமிர்ந்து அவனைப் பார்த்தவளைப் பார்க்க,

“தா..தாத்தா… அவருக்கு நான் எ..எல்லாம் செய்யனுமே?” என்று கூற அவனும் நின்றான்.

அவளோ அவனைப் பார்த்துப் பிறகு தன் பாட்டியைப் பார்க்க தண்டபாணியின் கண்களோ இஷானைத் தேட அதுவரை இவர்களையே பார்த்து இருந்தவன் கண்களும் கலங்கி இருக்க, “நான் பார்த்துக்கிறேன்” என்பது போல் சைகை செய்ய,

“ந..நாம அதுக்கு ஏதாவது ஏற்பாடு செய்வோம்டா… இப்போதைக்கு பாட்டியக் காப்பாத்துறது முக்கியம்டா… அவங்களப் பத்தி யோசிப்போம். ப்ளீஸ், லேட் பண்ணாத கயல் கிளம்பு” என்று கூறியபடி அவளிடம் பர்தாவை நீட்ட கண்களை அழுத்தித் துடைத்துக் கொண்டவள் அதை வாங்கி அங்கேயே அணிந்து கொண்டாள். கையிலிருந்த மாஸ்க்கை தண்டபாணியும் மாட்டிக் கொண்டு மரகதத்தை அவனும் டாக்டர் நர்ஸ்ஸுடன் சேர்ந்து தள்ளிக் கொண்டு செல்ல தன் கையில் நர்ஸ் கொடுத்த  பையைப்  பார்த்தாள் கயல். அதில் பாட்டி திணித்த பணம் நியாபகம் வர அதை வெளியே எடுத்தாள்.

அவளது கெட்ட நேரம் அதில் வெறும் இரண்டு லட்சம் மட்டுமே இருந்தது.

‘அப்போ நகையெல்லாம் இருந்த பை அங்கேயே விழுந்ததா?’ என்று எண்ணியவள் அதிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் கட்டை எடுத்தவள் தண்டபாணியிடம் நீட்டினாள். 

அவளைப் பார்த்தவன், “எதுக்கு இது?” என்று கேட்க,

“நீங்க செஞ்ச ஏற்பாட்டுக்கு… எப்படியும் பாட்டிக்கு செலவு ஆகி இருக்கும்லணா… அதான், பே பண்ணிடுங்க” என்று கூற அவளை முறைத்தான் தண்டபாணி. அவனது முறைப்பை உணர்ந்தவள்,

“நான் உங்களுக்குக் கொடுக்கலை. நீங்க எப்படியும் பில் பே பண்ணி இருப்பீங்கல்ல?அதும் வண்டிக்குலாம் காசு வேணும்ல” என்று கூற,

“அதெல்லாம் நான் பார்த்துக்க மாட்டேனா?” என்று கேட்க,

“வேணாம்ணா… நீங்க எங்களைக் காப்பாத்தி இவ்வளவு செய்யுறதே பெரிசு… இந்த நன்றிக் கடனையே என்னால எப்படி அடைக்க முடியும்னு தெரியல… இதுல திரும்பத் திரும்ப என்னைக் கடன்காரி ஆக்காதீங்க? ப்ளீஸ்னா வாங்கிக்கோங்க” என்று கூற அவளது நிலையை உணர்ந்தவன் சரியென வாங்கிக்கொண்டு,

“இது உனக்காக தான் வாங்குறேன். இதைத் திரும்ப உனக்குதான் யூஸ் பண்ணுவேன், இதை நீ தடுக்கக் கூடாது…” என்றவன் அவள் ஏதோ சொல்ல வர,

“என்னை அண்ணனா நினைச்சா?” என்று கூறச் சரியென அமைதியாகி விட்டாள்.

அவர்கள் அருகில் தள்ளிக் கொண்டு வந்த ஸ்ட்ரெச்சரில் மரகதத்தின் நெஞ்சுப் பகுதியில் பெரிய கட்டு, அதில் ரத்தம் நின்ற பாடில்லை. அவருக்கு இரத்தம் ஒருபக்கம் செலுத்தப்பட்டுக் கொண்டு இருந்தது. மூச்சுக்கு ஆக்ஸிஜன் மாஸ்க் வைக்கப்பட்டு இருந்தது. கீழே விழுந்ததில் அவரது தலையிலும் பெரிதாக அடிபட்டு இருந்தது. அதுவும் கட்டு போடப்பட்டு இருந்தது. இதயம் செயல்படுவதைக் கண்காணிக்கத் தேவையான உபகரணங்கள் எல்லாம் பொருத்தப்பட்டு இருக்கத் தள்ளிக் கொண்டு வந்தனர். கூடவே இரண்டு மருத்துவர்களும் இரண்டு நர்ஸ்களும் வந்தனர். அவரைப் பார்த்தவள் கண்கள் கலங்க வலுக்கட்டாயமாக கண்ணீரை உள்ளே இழுத்தவள் அவர்களுடன் சேர்ந்து நடக்க ஆரம்பித்தாள். அவளுக்கு முன் அவளது கையைப் பற்றி அழைத்துக் கொண்டு போனான் தண்டபாணி. அவருக்காக ஸ்பெஷலாக சற்றுப் பெரிய ஆம்புலன்ஸ் ரெடி செய்யப்பட்டு இருந்தது. அதுவரை டிரைவருடன் பேசிக்கொண்டு இருந்த இஷான் இவர்களைக் கண்டதும் மறைந்து கொண்டு,

“சொன்னதுலாம் நியாபகம் இருக்குல… ஃபோன் சார்ஜ் இருக்கா..? எனக்கு உடனுக்குடன் தகவல் வரணும், அண்ட் அவங்க பாதுகாப்பு ரொம்ப முக்கியம், புரியுதாடா?” என்று கேட்க அந்த டிரைவர்,

“நான் பார்த்துக்கறேன்டா” என்று கூற, அதற்குள் அவளைப் பார்த்தவன்,

“சரி, நான் அந்தப் பக்கம் போறேன்… எப்பவும் என்னைத் தெரிஞ்ச மாதிரி காட்டிக்கக் கூடாது, புரிஞ்சுதா? அப்புறம் இன்னொரு விஷயம் நீ போலீஸ்னு யாருக்கும் தெரியவே கூடாது” என்று கூற,

“அதெல்லாம் நான் பார்த்துக்கறேன்” என்று கூற அவனைவிட்டு நகர்ந்து தூரமாகச் சென்றான் இஷான். அவனுக்குக் கண் காட்டிய தண்டபாணியின் அருகில் உடைந்து போய் வருபவளைப் பார்த்த இஷான் மனதைக் கல்லாக்கிக் கொண்டு திரும்பி நின்றான்.

அடுத்து அடுத்த அவரசமாக நடந்தது எல்லாம். மரகதத்தை ஆம்புலன்ஸில் ஏற்றியதும் டாக்டர்கள், நர்ஸ்கள் ஏறப் பிறகு கயலை முன்பக்கம் ஏற்றியவன் கடைசியாக ஏறும்முன் இஷானைப் பார்க்கக் கட்டை விரலை உயர்த்திக் காட்ட “போ” என்று வாயசைத்து வழியனுப்பினான் இஷான். தண்டபாணிக்கு ஃபோட்டோ காட்டும்போதே தங்களது நண்பன் என்று அறிந்ததால் அவனும் எதையும் காட்டிக் கொள்ளாமல் அவனது அருகில் அமர்ந்தான். டிரைவர் அவர்களை ஒரு பார்வை பார்த்தவன் இஷானைப் பார்த்து விட்டு வண்டியை இயக்கினான். சைரனை அதிரவிட்ட வண்டி புயல் வேகத்தில் புறப்பட்டது. எல்லோரும் மிக அவசரம் சத்தத்தை உணர்ந்து வழிவிட சீக்கிரமே ஆம்புலன்ஸ் அங்கிருந்து கிளம்பியது.

ஒரு பெருமூச்சை விட்ட இஷான் அடுத்து கவனிக்க வேண்டிய விஷயங்களில் கவனம் செலுத்தினான்.

அடுத்து அவன் சென்று நின்றது கயலின் வீட்டில்தான்.

ஏனெனில், இவர்கள் பெண் கேட்டு வந்ததையும் ஈஸ்வரன் இவர்களைக் கேவலமாகப் பேசி அனுப்பியதையும் அங்கிருந்தவர்கள் கூற உடனடியாக அவனைக் காவல்துறை தொடர்பு கொண்டு வரச் சொன்னார்கள்.

ஏனெனில், அவர்களின் சந்தேகம் ஒருவேளை, அந்த இளைஞன் இஷானோ என்று…

அவனோ எதுவும் தெரியாதவன் போல் வந்தவன் கயலின் வீடும் அதைச் சுற்றி இருந்த இடமும் எரிந்ததைப் பார்த்து அதிர்ந்தவன் ஓடிவர…

அங்கு நின்றிருந்தவர்களிடம் என்ன ஏது என விசாரித்தான். விவரம் தெரிந்ததும் அவனது முகம் கலங்கியது.

அவனிடம் விசாரணை நடத்தினர் போலீஸார். விசாரணையில் இந்தர் போலீஸ் ட்ரெயினிங்கில் இருப்பதாகக் கூற உடனே அதை விசாரித்து உறுதி படுத்தியவர்கள் கயல் மற்றும் அவளது தாத்தா, பாட்டி இறந்து விட்டதாக அவனுக்குத் தகவல் கொடுக்கும்படி கூறிவிட்டு இஷானிடம் வந்தனர்.

“சார், அவங்களுக்குச் சொந்தம்னு யாரும் வரலையா சார்… இப்போ அவங்களை எப்படி சார் அடக்கம் பண்ணுவீங்க?” என்று கவலையாய் கேட்டான். அவனுக்கு இராஜமாணிக்கத்தின் உடலைப் பார்க்கப் பார்க்கக் கலங்கியது சர்வமும். பெற்ற தகப்பனை இப்படிக் கூடவா ஒருவன் கொல்லுவான் என்ற ஆத்திரமும் வந்தது.

அதைக் கண்ட இன்ஸ்பெக்டர், “சார், உங்களையும் உங்க ஃபேமிலியையும் அந்தப் பொண்ணோட அப்பா அசிங்கப்படுத்தி அனுப்பினதாய் கேள்விப்பட்டோம்… தென் எப்படி நீங்க அவங்களுக்காக இரக்கப்படுறீங்க?”என்று கேட்கக் கலங்கிய கண்களைத் துடைத்தவன்,

“அந்த ஆளு, பண்ண பாவத்துக்கு தண்டனை அனுபவிக்கிறான் சார்… ஆனா, இவங்க என்ன சார் பாவம் பண்ணாங்க? ரொம்ப நல்லவங்க சார்… என்கிட்ட வந்து அந்தக் கேடுகெட்டவன் செஞ்ச வேலைக்கு மன்னிப்புலாம் கேட்டாரு சார்… அவ்வளோ நல்ல மனசு சார் அவருக்கு. அப்படிப் பட்டவரோட குடும்பத்தைக் கொல்ல அந்த ஆளுக்கு எப்படி மனசு வந்தது? விரோதிக்குக் கூட பாவம் பார்த்து தான் பழக்கம் எங்களுக்கு. ஆனா அவன் மனுஷனே இல்ல” என்று கோபமாய் பேச,

“ரிலாக்ஸ் மிஸ்டர். இஷான்… இதுக்குக் காரணம் ஈஸ்வரன் தான்னு தெரிய வந்தா அவருக்குத் தண்டனை இன்னும் அதிகமாகும்… ஆனா, இதுவரைக்கும் அந்தப் பொண்ண யாரோ ஒரு பையன் காப்பாத்த வந்ததாய் சொல்றாங்க, அவனுக்கு என்ன ஆச்சுனு தெரியல…

அந்தப் பாட்டிக்கும் பேத்திக்கும் என்ன ஆச்சுனு தெரியல, கேஸ் சிலிண்டர் அடுத்து அடுத்து வெடிச்சு இருக்கு. அதனால மே பி அவங்க உள்ளயே இறந்து இருக்கலாம் போல… இவங்களத் தேடி இதுவரைக்கும் யாருமே வரல, அதுதான் இன்னும் ஷாக்கிங்…” என்று இன்ஸ்பெக்டர் கூற கயல் இறந்திருக்கலாம் என்ற யூகமே அவனுக்கு வருத்தம் தர ஏதோ யோசித்தவனாய்,

“சார்… அவங்களுக்கு இருந்த சொந்தக்காரங்க எல்லாம் அந்த ஈஸ்வரனால இவங்களைக் கண்டுக்கிறது இல்ல. அடிக்கடி அநாதை ஆசிரமம் மட்டும் தான் போயிட்டு வருவோம்னு ஒருமுறை கயல் சொல்லி இருக்காங்க… இந்தக் குடும்பத்தோட நல்ல மனசுக்காகவே இவங்கள நானே நல்லடக்கம் செய்யுறேன் சார்… வித் யுவர் பர்மிஷன்?” என்று கேட்க, அவனை ஆச்சரியமாய் பார்த்த இன்ஸ்பெக்டர், 

“கிரேட் சார் நீங்க… வேற யாராவது இருந்திருந்தா இந்நேரம் எனக்கும் இவங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லைனு ஓடி இருப்பாங்க. ஆனா, நீங்க அவங்க பண்ண தப்பையெல்லாம் மறந்து அவங்களுக்காக வருத்தப்படுறீங்களே, கிரேட்” என்று கூற அவரது பேச்சில் குறுக்கிட்டவன்,

“இல்ல சார்… ராஜமாணிக்கம் சார்தான் கிரேட். இப்படி ஒருத்தனுக்கு அப்பாவா இருக்கோமேனு அந்த மிருகம், எங்க குடும்பத்துக்குப் பண்ண தப்புக்கு அவர் வந்து மன்னிப்பும் கேட்டு, அந்த ஆளுக்குத் தண்டனையும் ஸ்ட்ராங் ஆகுற மாதிரி ஃஹெல்ப் பண்ணாரே… அவரு குணம் யாருக்கு வரும்? எல்லாருக்கும் நல்லது யோசிச்சவர் அவரோட உயிரைக் காப்பாத்திக்க மறந்துட்டாரேனு தான் இருக்கு… அப்படிப் பட்டவங்க உடலை அடக்கம் செய்யக் கூட ஆள் இல்லாம இருக்குறது எனக்குப் பிடிக்கலை, அதான் கேட்டேன்” என்று விளக்கம் தர,

“ம்ம்… வெரி நைஸ் பர்சன் யூ ஆர்… இன்வெஸ்டிகேஷன் முடிஞ்சதும் நான் உங்களுக்கு இன்ஃபர்மேஷன் கொடுக்கிறேன் சார்” என்று கூற அவனும் சரியெனத் தலையாட்டியவன்,

“சார், தீ எப்போ அணையும்? வி..விழி… சாரி… கயல்விழிக்கும், பாட்டிக்கும் எதுவும் ஆகி இருக்காதுல? யா..யாரோ பையன்னு சொன்னீங்களே, யாரு என்னானு தெரிஞ்சுதா?” என்று திக்கித் திணறிக் கேட்க,

“தெரியலை சார்… பின்பக்கம் ஒரு வாசல் இருக்கு. அங்கேயும் சிலிண்டர் இருந்து இருக்கும்போல. ரெண்டு பக்கமும் தீ ரொம்ப அதிகமா இருக்கு… வேற எங்க, என்ன இருக்குனு தெரியல. அக்கம் பக்கத்திலயும் தீ பரவுது. அதைத் தடுக்க முதல்ல முயற்சி செஞ்சு சரி செஞ்சோம்… எங்க ஆளுங்க உள்ளே போக ட்ரை பண்றாங்க. ஆனா, முடியல, ரெண்டு பக்கத்தில இருந்தும் தீ வருது… அதனால முழுசா தீயை அணைச்சாதான் அவங்களப்பத்தித் தெரிய வரும்… அண்ட் தென் அந்தப் பையன் மாஸ்க் போட்டு இருந்தான், தலையை வேற குனிஞ்சு இருந்தான். அதனால பார்க்க முடியல. ஒருவேளை, இவங்ககிட்ட வேலை செஞ்சவனா இருக்கலாம்னு சொன்னாங்க. விசாரிச்சுட்டு இருக்கோம், தகவல் கிடைச்சதும் உங்களுக்குச் சொல்றேன் சார்” என்று கூற,

“நா..நான் வேணா இங்கேயே இருக்கலாமா சார்? ” என்று கேட்டான் இஷான்.

“வொய் நாட்? தாராளமா இருங்க” என்று பேசிக்கொண்டு இருக்கும் போதே ஒரு காவல்துறை அதிகாரி அவரிடம் ஓடி வந்தார்.

“சார்..சார்… தீயை அணைச்சாச்சு சார்” என்று கூற இன்ஸ்பெக்டரின் கவனம் அங்கே திரும்பியது. இஷானும் இதையெல்லாம் கவனிப்பது போல நின்றான்.

இராஜமாணிக்கம் உடல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

2 thoughts on “என் சுவாசம் உன் வாசமாய் – 23”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *