Skip to content
Home » என் சுவாசம் உன் வாசமாய் – 25

என் சுவாசம் உன் வாசமாய் – 25

அத்தியாயம் – 25

தன் துயரம் மறைத்துத் தன் தமையனின் துயரம் தீர்க்கப் பேசிக் கொண்டு இருந்தவனின் பாசத்தில் உருகியவனின் கண்கள் கலங்கியது. குரல் கரகரக்க,

“இந்திரா… அ..அதெல்லாம் ஒண்ணுமில்லடா, நான் பார்த்துக்கிறேன்… நீ உன் ப்ராக்டிஸைக் கரெக்டா ஃபினிஷ் பண்ணி ஐ.பி.எஸ் ஆகி வா… அது நமக்கு நிறைய வகையில உதவும். அந்த ஈஸ்வரன் அழியுற வரை நமக்கு நிம்மதி இருக்காதுடா… அதுக்காகவாச்சும் நீ போலீஸா வா… அதுவரை எந்த விஷயத்துக்கும் நீ ஃபீல் பண்ணாதேடா, நான் இருக்கேன். நான் பார்த்துக்கிறேன்…” என்று அவனுக்கு ஆறுதல் கூறினான் இஷான்.

அவனது விளக்கத்தில் உடல் விறைக்க நிமிர்ந்தவன், தனது கவலையை எல்லாம் ஓரம் கட்டியவனுக்கு ஈஸ்வரன்மேல் கொலை வெறியே வந்தது. அவனை அழிக்கத் தன்னையே ஆயுதமாய் மாற்ற வேண்டும் என்று எண்ணியவனுக்கு, கயலுக்கு என்ன ஆனதோ என்ற கவலையும் சேர்த்தே வந்தது. அவனுக்குப் பெண்ணாய் பிறந்த காரணத்தால் அவள் படும் கஷ்டங்கள் மனதில் வந்து போனது. ஆனால், ஈஸ்வரனின் மகளாக அவளை எண்ணுகையில் அவள்மேல் உரிமையான கோபமும் வந்தது. அதை அவன் உணர்ந்தானோ இல்லையோ இஷான் உணர்ந்தான்.

“இந்திரா…” என்று அழைக்க தனது எண்ணங்களில் இருந்து வெளியே வந்தவன்,

“சொல்லுடா” என்று கூற,

“அந்த ஈஸ்வரனுக்குப் பொண்ணா பொறந்ததைத் தவிர அவ வேற எந்தத் தப்பும் பண்ணலடா.., எல்லாத்தையும் இழந்து நிக்குறா, அவமேல வெறுப்ப வளர்த்துக்காதேடா… அவளுக்கு நீதான் ஆறுதலா இருக்கனும்டா, புரியுதா?” என்று அவன் மனதில் அவளைப் பதிய வைத்து விடும் நோக்கில் கூற அங்கு அவனோ,

அவளை அண்ணன் காதலித்ததால், நாளை அவளே அவனுக்கு மனைவியாக வந்தால், அப்போது தனது கோபம் அவர்கள் வாழ்க்கையைப் பாதிக்கக் கூடாது என எண்ணுகிறான் போல என நினைத்துக் கொண்டவனுக்கு இதயத்தின் ஓரத்தில் ஒருவித வலி பரவியது.

ஆயிரம்தான் இருந்தாலும் அவள் தனது அண்ணியாக வரப்போகிறவள். அதனால், இனி அவளைக் காதலியாக நினைப்பது தவறு என்று எண்ணியவனுக்கு இந்த வலியைப் போக்கும் வழிதான் தெரியாது போனது.

இருப்பினும் தனது மனதைக் கஷ்டப்பட்டுத் தைரியப்படுத்தியவன், “சரி இஷா… இனி நான் அவ..அவங்க மேல கோபப்படமாட்டேன். நீ..நீ கவலைப் படாதே… ச..சரி நான் வைக்கிறேன்” என்று வைத்து விட்டான். அவ்வளவு இக்கட்டான சூழ்நிலையில் கூட இஷானின் முகத்தில் சிறு புன்னகை வந்தது, தன் தமையன் பேச்சில் கயலை மரியாதையாகக் கூறியது எண்ணி. இஷானுக்கும் மனதில் வலி வந்து போனது, தான் காதலித்த பெண்ணைத் தமையனும் காதலித்து இருக்கிறான். ஆனால், தன்னைப் போல அவன் காதல் வெளிப்பட்டு இருந்தால்கூட இவ்வளவு வலி இருக்காது. யாரிடமும் சொல்ல முடியாமல் எப்படியெல்லாம் தவிக்கிறான்… அவனுக்குத் தன்னால் ஆறுதல் சொல்ல முடியாத நிலைமையை எண்ணி அவனுக்கு இதயம் வலித்தது.

தம்பியின் காதலை அறிந்தது முதல் கயல் இனி தன் வாழ்வில் இல்லை என்ற முடிவை எடுத்தவனின் காதலித்த மனம் தவியாய் தவித்தது. கயலைத் தன்னால் மறக்க முடியுமா என்ற எண்ணம் ஆலமரமாய் எழுந்து நிற்க, வலித்த தலையைப் பிடித்துக் கொண்டான். ஒரு முடிவுடன் நெற்றியை நீவியவன், “மறப்பேன்… நிச்சயமாக மறப்பேன்…” என்றபடி இராஜமாணிக்கத்தின் உயிரற்ற உடலைப் பார்த்தவன் அவரது கடைசி வார்த்தைகளை எண்ணிப் பார்த்துத் தன் முடிவினில் உறுதியாய் நின்றான்.

இராஜமாணிக்கத்தின் இறுதிச் சடங்கை முன்னின்று நடத்தியவனுக்குத் தன் தாயிடமிருந்து ஃபோன் வந்தது. எடுத்துப் பேசியவனுக்கு அடுத்த அதிர்ச்சி…

மீரா தான் ஃபோன் செய்து இருந்தார்.

“என்னடா இஷா? நியூஸ்ல பார்த்தேன், என்ன என்னமோ கேள்விப் பட்டேன். நீ ஏன்டா அங்க போன? அந்த ஈஸ்வரனோட அப்பாவோட பாடியை நீ வாங்கிக்கிறேன்னு சொல்லி இருக்க, என்னடா இதெல்லாம்? நீ எங்க இருக்க? உடனே வீட்டுக்கு வா…” என்று அவர் வரிசையாய் அடுக்க அவனுக்கு ஐயோ என்றானது.

“அம்மா… கொஞ்சம் நான் சொல்றதைக் கேளுங்கம்மா” என்றவன் இராஜமாணிக்கம் தன்னை வந்து பார்த்தது, அங்கிருந்தவர்கள் இவர்கள் பெண் கேட்டுப் போனதைச் சொன்னது, எல்லாம் சொன்னவன் இராஜமாணிக்கம் என்ன பேசினார் என்பதை மட்டும் வேறு மாதிரி மாற்றிச் சொன்னான்.

அதையெல்லாம் கேட்ட மீரா, “அந்த ஈஸ்வரன் எப்போ சாகுறானோ அப்போதான் நமக்கு விடிவு காலம்டா… சரி, இதோட அந்தக் கஷ்டம் நம்மளை விட்டுப் போச்சுனு, இனி அந்தக் கயலைப் பத்தி இந்த வீட்டுக்குள்ள எந்தப் பேச்சும் வரக்கூடாது. செத்துப் போனவளைப் பத்தி இனி நமக்கு என்ன கவலை?” என்று கூற உடனே,

“அம்மா” என்று கத்தினான் இஷான்.

“என்னடா? என்கிட்டக் கத்திப் பேசுற அளவுக்கு ஆகிட்டியா?” என்று கேட்டார் மீரா.

“ம்மா இல்லம்மா… கயல் செத்துட்டதா சொன்னீங்களா, அதான் கோபமா கத்திட்டேன்” என்று சமாதானமாய் பேச,

“ஆமான்டா, அந்தப் பொண்ணு இருந்தா என்ன? செத்தா நமக்கு என்ன? போதும், அவளால பட்ட அசிங்கமும் போதும். அவ அப்பனால பட்ட அவமானமும் போதும்… இத்தோட எல்லாத்தையும் தலை முழுகிட்டு வந்து நான் பார்க்குற பொண்ணைக் கல்யாணம் பண்ற வழியப் பாரு… என் தூரத்துச் சொந்தம்ல இருக்க ஒரு பொண்ணைப் பேசி முடிச்சுட்டேன், வந்து தாலியைக் கட்டு. இன்னும் ரெண்டு மாசத்துல கல்யாணம்” என்று பெரிய குண்டாய் தூக்கி அவன் தலையில் வைத்தார்.

‘இப்போ கல்யாணமா, எனக்கா?’ என்று யோசித்தவன்,

“அம்மா, எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு. நான் வெளியூர் வேலைக்கு ஒத்துக்கிட்டேன்… நான் நாளைக்குத் திருப்பதி பக்கத்தில போறேன், முக்கியமான ஆடிட்டிங் வேலைமா… போன மாசமே முடிவு பண்ணது, அதுக்குள்ள என்ன என்னமோ ஆகிடுச்சு… அங்கே போனா வர ரெண்டு மாசம் ஆகும்மா… எனக்குக் கொஞ்சம் மனசு மாற டைம் கொடுங்கமா… அதுக்குள்ள கல்யாணம் அது இதுனு முடியலமா, ப்ளீஸ்” என்று கேட்க அதில் கோபமான மீரா,

“அதெல்லாம் தேவையில்ல. அந்தக் கம்பெனி வேலை போனாப் போகுது. வேற கம்பெனி ஆடிட்டிங் எடுத்துக்கலாம், நீ கிளம்பி வா”  என்று கூற,

“அம்மா… புரிஞ்சுக்கோங்க, இது கவர்ன்மெண்ட் ஆர்டர்… திருப்பதி பக்கத்துல இருக்குற கோவிலோட ஆடிட்டிங்… நான் அங்க ரிப்போர்ட் சப்மிட் பண்ணனும், இல்லனா எனக்கு எந்த வேலையும் கிடைக்காது. இந்த டீல் எடுக்க நான் எவ்ளோ கஷ்டப்பட்டேன், நீங்க அசால்ட்டா வேணாம்னு சொல்றீங்க? என் வேலையில தலையிடாதீங்கமா. அதான் ரெண்டு மாசம் டைம் கொடுங்கனு சொல்லிட்டேன்ல, அப்புறம் என்ன?” என்று அவனும் கத்த, இத்தனை நாளாய் இல்லாமல் சாந்தமான மகன் கோபமாய் பேசவும், நாமும் பேசினால் காரியம் நடக்காது என உணர்ந்த மீரா,

“சரிடா… நீ வேலையை முடிச்சுட்டே வா. ஆனா ஒண்ணு, வந்ததும் கல்யாணம், சரியா? நான் அவங்களுக்கு வாக்குக் கொடுத்துட்டேன்” என்று கூற பட்டென அழைப்பைத் துண்டித்தவன் தலையைத் தாங்கிக் கொண்டு அப்படியே கீழே அமர்ந்து விட்டான்.

மீண்டும் அவனது மொபைல் அலறியது. எடுத்துப் பார்த்தவன் அவசரமாய் பேசினான்.

“சொல்லுடா… நேர்ல வந்து எல்லாம் சொல்லுடா”

“.…..”

“சரி வைக்கிறேன்” என்றுவிட்டு வைத்தான்.

கயலும், அவளது பாட்டியும், தண்டபாணியும் நல்ல படியாகக் கேரளாவில் ஒரு ஆசிரமத்தில் தங்கி அங்கிருந்த மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற வசதி செய்யப்பட்டது. தண்டபாணி கூடத் தங்க முடியாது எனக் கூறி விட்டதால் அவன் அருகில் இருந்த குடிலில் தங்கிக் கொண்டான். அதைத்தான் ஆம்புலன்ஸ் ஓட்டிச் சென்ற அவனது நண்பன் சொல்வதற்கு ஃபோன் செய்ய, அவனை நேரில் வந்து சொல்லச் சொன்னதால் அமைதியாக ஃபோனை கட் செய்தவன் கிளம்பினான் மருத்துவர்களையும் நர்ஸையும் அழைத்துக் கொண்டு…

அன்று இரவு சென்னை வந்தவனை அவசரமாகச் சந்தித்த இஷான் விவரங்களைக் கேட்டறிந்து கொண்டு அங்கு நடக்கும் விஷயங்களைத் தெரியப்படுத்த டாக்டர் ஒருவரை ஏற்பாடு செய்ததாகச் சொல்லியவன் அந்த டாக்டர் பற்றிய விவரங்களைக் கொடுத்துவிட்டுச் சென்றான்.

ஆபீசில் இருந்து ஆள் அனுப்பித் தனது உடைமைகளை எடுத்து வரச் சொல்லியவன் போலீஸில் இன்ஃபார்ம் செய்துவிட்டுக் கிளம்பினான் திருப்பதி அருகில் இருந்த புஷ்பகிரி என்னும் கிராமத்திற்கு.

2 thoughts on “என் சுவாசம் உன் வாசமாய் – 25”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *