Skip to content
Home » என் சுவாசம் உன் வாசமாய் – 26

என் சுவாசம் உன் வாசமாய் – 26

அத்தியாயம் – 26

ரொம்ப அழுகாச்சியாப் போகுதுபா… அதனால கயலைப் பத்தி அப்புறம் பார்க்கலாம். இப்போ இஷானின் மறுபக்கம் பார்க்கலாம்.

சுற்றிலும் கடப்பா தெலுங்கு பேசும் மக்கள். கடப்பா செல்லும் வழியில் அமைந்துள்ள கிராமம் புஷ்பகிரி என்னும் ஊர்.

அவ்வூரின் பழமையான சிவன் கோவிலின் கணக்கு வழக்குகளைச் சரிபார்த்து அதன் ரிப்போர்ட்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும். ஏனெனில், அந்தக் கோவிலின் பூர்வீக உரிமையாளர் ஒரு தமிழர். தனது மனைவிக்காக அந்தக் கோவிலைக் கட்டினார். ஆனால், அவரது சந்ததியினர் வெளிநாட்டிற்குச் சென்று விட்டதால் அவர்கள் அந்தப் பொறுப்பை அங்கிருந்த உறவினரிடம் ஒப்படைக்க, அவரும் சாமி காரியம் என எல்லாம் பொறுப்பாய் செய்ய அவரின் வயோதிகம் காரணமாக அந்தப் பொறுப்பு எல்லாம் இப்போது அரசாங்கம் கைவசம் ஒப்படைக்க முடிவு செய்தார். அதற்காகதான் அங்கு வந்துள்ளான்.

அவனுக்கு உதவியாக அந்தப் பகுதியில் இருக்கும் இன்னொரு ஆடிட்டரும் வருவார் என்று அவனுக்குச் செய்தி சொல்லி இருந்தனர்.

இஷான் தங்குவதற்கு அங்கு ஒரு பண்ணைவீடு போன்ற அமைப்பு இருந்தது. அதில் தான் அவனுடன் வேலை செய்ய இருக்கும் இன்னொருவரும் தங்குவதாகக் கூறி இருந்தனர். ஆனால், அவர் மறுநாள் தான் வருவதாகச் சொல்லியதால் அங்கிருந்த ஒரு அறையில் அவன் தங்கிக் கொண்டான்.

இன்னொரு அறை வருபவருக்காக ஒதுக்கப்பட்டு இருந்தது. இவர்களுக்குப் பொதுவாகச் சமைக்க ஒரு வயதான பெண்மணி நியமிக்கப்பட்டு இருந்தார். வந்த அன்றே அவரிடம் விழி பிதுங்கி நின்றான் இஷான்.

உள்ளே வந்த இஷான் அவரிடம், தன் பெயர் இஷான் என்று கூற அவரும் தன் பெயர் யசோதா என்று கூறி இருந்தார். அவரைப் பார்க்க மீராவின் நியாபகம் வரவும் அம்மா என்றே அழைத்தான்.

“அம்மா எனக்கு ஒரு டீ” என்றான். அதில் அவருக்கு டீ என்பது மட்டும் தான் புரிந்தது. அதனால் சக்கரை அதிகமாகப் போடனுமா இல்லையா என்பதை அவனிடம் வினவினார்.

“சக்கெரா எக்கவனா? லே தக்கவனா சார்?” (சர்க்கரை ஜாஸ்தியாவா? இல்ல கம்மியாவா சார்?) என்று கேட்க, அவனுக்கு அவர் பேசியது புரியாததால் திருதிருவென முழிக்க அவருக்குத் தெரிந்த ஆங்கிலத்தில்,

“சுகர்” என்று கேட்க,

‘என்னயப் பார்த்தா சுகர் ஃபேஷன்ட் மாதிரியா இருக்கு இவங்களுக்கு’ என்று எண்ணியவன்,

“ஏம்மா, சக்கரை இல்லாமல் குடிக்க நான் என்ன சுகர் ஃபேஷன்ட்டா?” என்று முறைத்தபடி கேட்க அவன் தப்பாகப் புரிந்துள்ளான் என யூகித்தவர், 

“சுகர்” என்றபடி அதிகமாகவா? கம்மியாகவா? என்று ஜாடை செய்யப் புரிந்தவன்,

“ஓஓ… சாரி” என்றவன்,

“2 ஸ்பூன் சுகர்” என்று கூற அவரும் தலையாட்டி விட்டுச் சென்று அவன் சொன்ன அளவு சக்கரை சேர்த்து டீ தயாரித்துக் கொடுத்தவர் தயங்கியபடி நிற்க டீயைப் பருகியவன்,

“சூப்பர்மா” என்று கூற மகிழ்ந்தவர் இவனிடம் அடுத்ததை எப்படிப் பேசுவது என்று யோசித்தார்.

“என்ன?” என்று இவன் சைகையில் கேட்க,

“ராத்ரிக்கி ஏமி போஜனம் செய்யாலி” (நைட்டுக்கு என்ன சமையல் செய்வது?) என்று அவர் கேட்க,

“இந்த ஊர்ல போய் ஆடிட்டிங் பண்ண வந்தேன்ல, என்னை அடிச்சுக்கனும்… எங்க அம்மாவோட தான் தலைவலினு தப்பிச்சு இங்க வந்தா இங்க அதுக்கு மேல இருக்கே?” என்று தலையில் கைவைத்தவன், அவரைப் புரியாமல் பார்த்தான். அவரோ சாப்பிடுவது போல சைகை செய்ய,

“ஓஓ… சாப்பாடா?” என்று கேட்க அவரும் ஏதோ புரிந்தவர் போல் தலையாட்ட,

“எனக்குச் சாப்பாடு தான் சாப்பிடனும் போல இருக்குமா. அதனால, நீங்க சாதம் வடிச்சுக் காரக்குழம்பு வெச்சுத் தர்றீங்களா?” என்று கேட்டவன் அவர் புரியாமல் முழிக்க,

“ரைஸ்… அச்சோ, காரக்குழம்புக்குத் தெலுங்குல தெரியாதே, நான் என்ன சொல்ல?” என்று புலம்பியவன் காரக்குழம்புக்கு கூகிள் ஆண்டவரைத் துணைக்கு அழைக்க அவர் கூறியதைக் கூறினான். தொட்டுக் கொள்ள அப்பளம் வைக்கச் சொன்னான்.

அவன் சொன்னதைப் புரிந்தவர் போல அவரும் சமைச்சு வைத்து அவனைச் சாப்பிட அழைக்க,

அதற்குள் அவன் குளியல் முடித்து எடுத்து வந்த பொருட்களை எல்லாம் எடுத்து வைத்தவன் சாப்பிட வந்து அமர்ந்தான்.

அவர் பரிமாறச் சாப்பிட்டவன், “ஆஆஆ” வென அலறினான்.

அவ்வளவு காரம்…

கண்கள் கலங்கி, இருமல் வந்து நாக்கு எரிச்சலைத் தர தண்ணீரை எடுத்து மடக்கு மடக்கு எனக் குடித்தான்.

அவரோ ஒண்ணும் புரியாமல் பதறியபடி, “ஏமி அய்யிந்தி பாபு. எந்துக்கு இலா சத்தேசேரு?” (என்ன ஆச்சு தம்பி. ஏன் இப்படிக் கத்துறீங்க?) என்று கேட்க,

“ஐயோ, இவங்க வந்த அன்னைக்கே என்னைக் கொல்லப் பார்க்குறாங்களே? இந்த அநியாயத்தை நான் எங்க போய் சொல்லுவேன்” என்று புலம்பியவன் அங்கிருந்த உப்பை எடுத்து வாயில் போட்டான். காரம் சற்று மட்டுப்பட்டது. ஆனால், நாக்கும் மூக்கும் எரிச்சல் அடங்கிய பாடாய் இல்லை.

அவருக்கோ அவன் என்ன செய்கிறான் என்று புரியவே இல்லை. பதட்டமாய் என்ன என்ன என்று கேட்டுக் கொண்டே இருந்தார்.

அவரது பதட்டத்தைக் கண்டவன் அப்போது தான் ஒன்றை யோசித்தான். ஆந்திராவில் காரம் அதிகம் சேர்த்துச் சமைப்பார்கள் நாம்தான் அவரிடம் காரம் குறைவாகப் போடச் சொல்ல மறந்து விட்டோம் என்பதை யோசித்தவன், பசி ஒருபக்கம் எடுக்க அவரைப் பார்த்து,

“அம்மா காரம் நோ… ஒன்லி ஸ்வீட்… நாக்கு மரத்துப்போச்சு. இதை நான் அடக்கம்தான் பண்ணனும் போல” என்று கூற, அவனது தவிப்பு அப்போது தான் அவருக்குப் புரிய மேலும் பதறியவர்,

“ஷமின்சண்டி பாபு. மீரு காரம் தக்கவ வெய்யாலினி செப்பலே. தானின்சி நேனு மாமுலுங்க சேசேனட்ல சேசேஸ்தினி. ஒக ஐது நிமிஷாலு ஈயண்டி. நேனு காரம் லேகுண்ட ஆகாரம் சேசிச்சேனு” (மன்னிச்சிடுங்க தம்பி… நீங்க காரம் கம்மியாப் போடனும்னு சொல்லலை. அதனால, நான் வழக்கமா செய்யுற மாதிரி செஞ்சுட்டேன். ஒரு அஞ்சு நிமிஷம் கொடுங்க, நான் காரம் இல்லாம சமைச்சுக் கொண்டு வர்றேன் தம்பி, மன்னிச்சிடுங்க) என்று அவர் வருத்தமாய் கூறிவிட்டு நகரப் பார்க்க,

அவரது வருத்தம் மனசிற்கு வலிக்க “அம்மா… அம்மா, நில்லுங்க… எனக்கு இப்போ எதுவும் வேணாம்… நான் சாப்பாட்டுல தண்ணி ஊத்திச் சாப்பிட்டுக்கிறேன்” என்று கூறிவிட்டு அப்படியே சாப்பிட அவரோ வருந்தி அவனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டே இருந்தார்.

“விடுங்கமா… இதுலாம் ஒரு விஷயமே இல்ல… இதைவிடப் பெரிய பெரிய கஷ்டத்தை அனுபவிச்சுத்தான் இங்க வந்து இருக்கேன். நாளைக்குக் கொஞ்சம் காரம் கம்மியா செய்யுங்க” என்று கூற அவருக்கோ வந்த அன்றே அந்தப் பிள்ளையை வருத்தி விட்டோமே என்று கஷ்டமாகியது.

காரம் அதிகமானதில் சிவந்து கண்கள் கலங்கியபடி இருந்தவனிடம் பாலை லேசான சூட்டில் சர்க்கரை சற்று அதிகமாகச் சேர்த்துக் கொடுத்தார்.

அதை வாங்க யோசித்தவனிடம், “பாபு ஆகலிதோ உண்டுதுரு. சக்கெரா எக்கவங்க வேசுண்டேனு. கொந்துக்கி பாக உண்டு… தாகண்டி.” (தம்பி, பசியில இருப்பீங்கல்ல… சக்கரை கொஞ்சம் அதிகமாப் போட்டு இருக்கேன், தொண்டைக்கு நல்லா இருக்கும்… குடிங்க) என்று கூறச் சிரித்தபடி வாங்கி அருந்தியவனுக்கு தொண்டைக்கு இதமாக இருந்தது. பசியில் தண்ணீர் ஊற்றிய சாதமும் சரியாகச் சாப்பிட முடியாமல் எழுந்தவனுக்கு இந்தப் பால் நன்றாக இருந்தது.

“தேங்க்ஸ்மா” என்று அவன் புன்னகையுடன் கூற தலையாட்டியபடி அவரும் காலிக் கப்பை வாங்கிச் சென்றார்.

புது இடம், புதிய மனிதர்கள்… கூடவே கயலின் நிலை… அதை அறிய முடியாத தவிப்பு… என்று பலவிதமான கலவையில் உறங்கச் சென்றவனுக்கு அதனாலோ என்னவோ சரியாகத் தூக்கமே வரவில்லை. அதிகாலையில் எழுந்தவன் வெளியே வந்து பார்க்க எங்கும் பச்சைப் பசேல் என அழகாக இருந்தது. காலையில் டீ குடிக்க வேண்டும் போல இருக்க ஐந்து மணிக்கே வந்து விட்டார் யசோதா. அவருக்கும் தூக்கமே வரவில்லை. இரவு சரியாகச் சாப்பிடாமல் கண்கள் சிவந்து இருந்தவனைப் பார்க்கப் பார்க்க அவருக்கு அவ்வளவு கஷ்டமாகிப் போனது. அதனாலேயே அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து வந்து விட்டார். இன்றாவது அவனுக்குச் சரியாக சமைத்துக் கொடுக்க வேண்டும் என்று பால் வாங்கிக் கொண்டு மேலும் சில பொருட்களைத் தூக்கிக்கொண்டு அவர் அவசரமாக வருவதைப் பார்த்தவன்,

“ஏம்மா, இவ்ளோ சீக்கிரமே வந்துட்டீங்க?” என்று கேட்க அவருக்குப் புரியாமல் பார்க்க, அவனோ கையில் இருந்த கடிகாரத்தைக் காட்டி 5 என்று சைகை காட்ட சீக்கிரமே வந்ததைக் கேட்கிறான் எனப் புரிந்தவர்,

“லேது பாபு, மீரு ராத்ரி சரிங்க போன்ச்சைலேது காதா… அதிதா நாக்கு மனசு வினலே. தான்னின்சி இப்புடு கொன்சம் தொந்தரகா வண்டா செய்யடானிக்கி வச்சானு. ஏம் வண்டாலி?” (இல்ல தம்பி, நீங்க ராத்திரி சரியாச் சாப்பிடலையா? அதான் தம்பி, மனசே கேட்கலை. சீக்கிரம் வந்து உங்களுக்குச் சமைக்கலாம்னு வந்தேன் தம்பி… என்ன சமைக்கனும்?) என்று பெருசாய் பேச அவனுக்கு எதுவும் புரியவில்லை. ஆனால், அவரது வருத்தமான பேச்சில் இரவு நடந்ததை எண்ணி வருந்துகிறார் என்பதைப் புரிந்தவன் இனிக் குழம்பு மட்டும் இவரிடம் கேட்கக் கூடாது என்று எண்ணியவன்,

“இன்னைக்கு இட்லி சாம்பார் செய்யுங்க” என்று கூற இட்லி சாம்பார் எனப் புரிந்ததும் தலையாட்டி உள்ளே நுழைந்தவர்,

அவசரமாக அவனுக்கு டீ போட்டார். அதற்குள் அவன் பல் துலக்கி வர அவனிடம் டீயை நீட்டினார்.

நன்றி சொல்லி வாங்கியவனைப் பார்த்துப் புன்னகைத்தவர் உள்ளே சென்று இட்லி மற்றும் சாம்பார் காரமின்றி வைத்தவர் கூடவே கொஞ்சமாகக் காரப்பொடி செய்தார். தனது காலை வேலைகளை முடித்து வேலையைத் துவக்க அவசரமாகக் கிளம்பி வந்தவனுக்கு அவர் உணவைப் பரிமாறச் சாம்பாரை சாப்பிடலாமா? என்ற பயமே அவனுக்கு அதிகமாக இருந்தது.

அவனது முகத்தைப் பார்த்தவர்,

“பாபு, நேனு காரம் வேயலே. மீ ஊரிலோ வாடே காரப் பொடி கொன்னானு. தானின்ச்சி காரம் உண்டது…” (“தம்பி, காரம் போடலைங்க… உங்க ஊருல உபயோகிக்கிற மிளகாய்ப் பொடி தான் வாங்கி வந்தேன், காரம் இருக்காது”) என்று கூற அசடு வழிந்தவன் ஒரு வாய் சாப்பிட்டுப் பார்த்தான். அமிர்தமாக இருக்க நாலைந்து இட்லிகளைச் சந்தோஷமாக உண்டவன், ‘சூப்பர்’ என்று சைகையில் காட்டிவிட்டுச் சாப்பிட்டு முடித்து எழுந்து கிளம்பியவன் கோவிலுக்குக் கிளம்பினான்.

அப்போது அவனுக்கு ஃபோன் வர எடுத்துப் பேசியபடியே கோவிலின் உள்ளே காலை வைக்க, அங்கே எண்ணெய் கொட்டி இருந்ததைப் பார்க்காமல் அவன் கால் வைத்துக் கீழே விழப்போக அவனது கையைப் பிடித்து இழுத்தது ஒரு பெண்ணின் மென்மையான கரம். இழுத்ததில் அவன் அந்தப் பெண்ணின் மீதே சாய அவனது பாரம் தாங்காமல் அவளும், அவனைத் தாங்க முடியாமல் சரிய இருவரும் சேர்ந்து விழுந்தனர்.

அதில் கண்கள் அதிர்ச்சியாக அவனைப் பார்க்க, அவனும் அதிர்ந்து அவளைப் பார்த்தான்.

கருப்பும் இல்லாமல் சிவப்பும் இல்லாமல் கோதுமை நிறத்தில் இருந்தாள் அவள். அழகிய குண்டுக் கன்னமும் குழந்தை போன்ற முகமும் அழகாக இருந்தது அவளுக்கு..,

அதில் சிறிது நேரம் அவன் நினைவிழக்க, அவன் பாரம் தாங்காமல் அவள் அவனைத் தட்டி அழகிய தெலுங்கில் திட்டிக் கொண்டே உலுக்கினாள்.

“ஹெலோ மிஸ்டர், மேல்கொண்டி. இதேமி மீ இல்லா? கல்லு கண்ட்டு உண்டேரு? இதிகோ மேலுகோ” (ஹலோ மிஸ்டர்… எழுந்திருங்க, இதென்ன வீடா கனவு கண்டுட்டு இருக்கீங்க? யோவ், எழுந்திருயா?) என்று அவள் திட்டச் சட்டென சுயம் அடைந்தவன் தன் தவறை உணர்ந்து, “சாரி மேம்… சாரி” என்றபடி டக்கென எழப்போக அப்போது மீண்டும் எண்ணெய் வழுக்க அவள்மீது விழப் போனவன் அவளது பயந்த விழியைப் பார்த்து அப்படியே கையை ஊன்றிச் சமாளித்து நின்றான்.

அதில் அவள் நிம்மதிப் பெருமூச்சு விட, “சாரி… சாரி, நா..நான் கவனிக்கலை” என்று கூறியவன் விழாதபடி எழுந்து அவளுக்கும் எழக் கை கொடுக்க அவளும் எழுந்தாள். அதுவரை நடந்த அனைத்தையும் அங்கிருந்தவர்கள் வேடிக்கை பார்த்துச் சிரித்துத் தங்களுக்குள் பேசிக் கொள்ள வந்த முதல் நாளே இப்படியா என்று அவன் தலையைக் கோத அவனது நிலை உணர்ந்தவள் போல அவள் எதுவும் பேசாமல் உள்ளே சென்று விட்டாள்.

1 thought on “என் சுவாசம் உன் வாசமாய் – 26”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *