Skip to content
Home » என் சுவாசம் உன் வாசமாய் – 29

என் சுவாசம் உன் வாசமாய் – 29

அத்தியாயம் -29

“முதல்ல அழுகையை நிறுத்துங்க சனா.. நீங்க செஞ்சுட்டு வந்த காரியத்துல எனக்கும் கெட்ட பேரு… வாங்க சனா, உடனே இதை உங்க அம்மாகிட்டத் தெளிவா சொல்லிப் புரிய வையுங்க” என்று அழைக்க அதில் அவள் நடுங்க,

“ப்..ப்ளீஸ் இஷான்… ப்ளீஸ்… எ..எங்க அம்மா பத்தி உங்களுக்குத் தெரியாது. அவங்க எ..என்னை என் மாமாக்கே கட்டி வெச்சுடுவாங்க” என்று பதற மனம் வருந்தினாலும், 

“அதுக்கு நான் என்ன பண்ண முடியும்? நீங்க கட் அண்ட் ரைட்டா உங்க அம்மாகிட்டச் சொல்லுங்க… அவங்களுக்கு முதல்ல உங்களுக்கும் எனக்கும் எந்த ரிலேஷன்ஷிப்பும் இல்லனு புரிய வைங்க. ப்ளீஸ் அண்ட் இன்னொரு முறை அவங்க என்னையோ என் வளர்ப்பையோ தப்பாப் பேசினா நான் அவங்கமேல கேஸ் கொடுத்திடுவேன். வாங்க போலாம்…” என்று அழைக்க பயந்தவள் மேலும் நடுங்க அவளது நடுக்கத்தைப் பார்த்தவன்,

“என்ன?” என்று கேட்டான்.

“நா..நான், அ..அம்மாகிட்டச் சொல்ல முடியாது. சொன்னா ஒண்ணு என்னை இங்கேயே கொன்னுடுவாங்க… கல்யாணமே பண்ணாம ஒரு ஆம்பளைகூட இருந்தேன்னு… இ..இல்லனா மாமாக்கு. கல்யாணம் பண்ணிடுவாங்க… ப்ளீஸ் ப்ளீஸ், என்னை எப்படியாவது காப்பாத்துங்க. அம்மா கோபப்படுவாங்க, நான் சமாளிக்கிறேன்… எ..எனக்காக அவங்க சொன்ன பொய்யைச் சொல்லுங்க, ப்ளீஸ்… நீ..நீங்கதான் என் புருஷன்னு அவங்க ரொம்ப நம்புறாங்க… அதுக்கு மட்டும் கொஞ்சம் நடிங்க ப்ளீஸ்… அ..அப்புறம் நான் உங்கள எந்த டிஸ்டர்பும் பண்ணாம கிளம்பிப் போயிடுறேன் இஷா… ப்ளீஸ் ஹெல்ப் மீ” என்று கைகூப்பி அவனிடம் மன்றாட, 

“ஏங்க விளையாடுறீங்களா? இதுல ரெண்டு பேரோட லைஃபும் இருக்குங்க… அண்ட் என்னோட சைடுல இருந்து யோசிங்க. என் ஃபேரண்ட்ஸ்க்கு நான் என்ன பதில் சொல்ல… அவங்களுக்கு எவ்வளவு பெரிய அவமானம்னு யோசிங்க” என்று அவன் கேட்க,

“பு..புரியுது, ஆனா… இது இங்கேயே என்னோடயே போயிடும். நா..நான் கண்டிப்பா உங்க லைஃப் ஸ்பாயில் ஆகுற மாதிரி நடந்துக்க மாட்டேன். ப்ளீஸ், அவங்க எனக்கு வேற கல்யாணம் பண்றதைப் பத்தி யோசிக்கக் கூடாதுனு தான் இந்த ஹெல்ப் கேட்கிறேன், ப்ளீஸ்… எனக்கு ஹெல்ப் பண்ணுங்க” என்று அவனிடம் கை கூப்ப, அவனுக்கோ தன்னை இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நிறுத்தியவள் மேல் கொலை வெறியே வந்தது. ஆனால் அவளது நிலை அவனை யோசிக்க வைத்தது. அடக்குமுறை வாழ்க்கையில் இருந்து வெளியே வந்து சுதந்திரமாக வாழ நினைக்கும் பெண்ணுக்குத் தன்னால் ஆன உதவி என்றே அதை எண்ணினான். 

‘ஒருவேளை, நாளை அம்மா எனக்குப் பார்த்த பொண்ண அவாய்ட் பண்ண நானும் இதே பொய்ய யூஸ் பண்ணிக்கலாம் போலயே… எனக்கும் வேற வழி இல்ல, இவங்களுக்கும் வேற வழி இல்ல… ஊரே எங்களைச் சந்தேகமா தான் பார்க்குது. அதுக்கு இப்படி ஒரு பொய் தேவைதான்’  என்று எண்ணியவன் அவளைப் பார்க்க அழுது அடிவாங்கி ஓய்ந்து போய் பயந்து நடுங்கிக் கொண்டு இருந்தவளைப் பார்க்கவே அவனுக்கும் பாவமாய் இருக்கச் சரியென ஒப்புக்கொண்டு அவளிடம் பேசினான்.

“ஓகே… ஆனா அவங்க நாம கல்யாணம் பண்ணிக்காம ஒண்ணா இருக்குறதாச் சொல்றாங்களே? அதை எப்படிச் சமாளிக்க?” என்று கேட்க அவன் ஓகே சொன்னதில் கொஞ்சம் தெம்பு வர,

“அது..அது… ஹான், நாம மோதிரம் மாத்தி ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டோம்னு சொல்லிடலாம்” என்று கூற,

“சரி வாங்க… ஆனா, அவங்ககிட்ட நான் பேச மாட்டேன், நீங்களே பேசுங்க” என்றுவிட்டு அவன் முன்னே செல்ல கையைப் பிசைந்தபடி அவளும் சென்றாள்.

வெளியே வருபவர்களை முறைத்தபடி நின்றிருந்தார் ஜக்கம்மா. அவரைச் சமாதானம் செய்யத் தெரியாமல் திணறினான் அவரது தம்பி.

இன்ஸ்பெக்டரும் அவரிடம் ஏதோ பேசி இருப்பார் போல. அதனால், அமைதியாக முறைத்தபடி நிற்க, இஷானும் சஹானாவும் வெளியே வர மேலும் இரண்டு வண்டி வந்து நின்றது.

ஒன்றில் அந்தக் கோயிலின் நிர்வாகத்தினரும் இன்னொரு காரில் சஹானாவின் தந்தையும் வந்து இறங்க, அவரைப் பார்த்த ஜக்கம்மா தன் தம்பியை முறைக்க… அவனோ தலையைக் குனிந்து கொண்டான். சஹானாவோ,

“அப்பா” என்று அழுது கொண்டே அவரை ஓடிச் சென்று அணைத்துக் கொண்டாள். அவளை ஆதரவாய் வருடியவர்,

“என்கிட்ட கூட உனக்குச் சொல்லத் தோணலையாடா? நான் உன்கிட்ட அப்படியா பழகினேன்?” என்று கேட்டுக் கண் கலங்க,

“தப்பு தான்ப்பா மன்னிச்சிடுங்க ப்பா.. நான் வேணும்னு எதையும் செய்யலபா… அம்மாகிட்ட எதிர்த்து இந்தக் கல்யாணம் வேணாம்னு சொல்லத் தெரியலப்பா” என்று அழ அங்கிருந்தே கத்தினார் ஜக்கம்மா.

“ஆமா, என்கிட்டக் கல்யாணம் வேணாம்னு சொல்ல பயமாம். ஆனா, ஓடிவந்து கல்யாணம் பண்ணாம அவன்கூட குடும்பம் நடத்த மட்டும் பயம் இல்ல அவளுக்கு. ஒத்தப் பொண்ணுனு செல்லம் கொடுத்து என் பேரை எப்படிக் கெடுத்து வெச்சு இருக்கா பாருங்க” என்று அவர் கத்த அவர் பேசியதைக் கேட்டு அதிர்ந்தவர் அப்போது தான் அங்கு நின்ற இஷானைப் பார்த்தார்.

அவனை எங்கோ பார்த்த நினைவு வர அதை ஓரங்கட்டியவர், தன் மகளிடம், “என்னம்மா இது அம்மா என்ன என்னமோ சொல்றாங்களே? உண்மையா இதெல்லாம்?” என்று தன் வளர்ப்பு தவறாய் போனதோ என்ற ஆற்றாமையோடு கேட்க அதை மறுத்தாள்.

“அப்பா… நீங்களாவது நம்புங்கப்பா… நான் அவரைக் கல்யாணம் பண்ணலைனு சொன்னதை அம்மா தப்பாப் புரிஞ்சுகிட்டு அவரையும் என்னையும் ரொம்பக் கேவலமா பேசிட்டாங்க… நாங்க நாங்க… முறைப்படி” என்று சொல்ல முடியாமல் அவள் அழுதபடி திக்க, அவளது நிலையைக் கண்ட இஷான் பொறுக்க முடியாமல்,

“நாங்க முறைப்படி ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டோம் சார்… மோ..மோதிரம் மாத்தி” என்று கூற அவனை ஏறிட்டுப் பார்த்தவர் தன் மனைவியையும் பார்த்தார். அவருக்கு அப்போது தான், தான் அவர்களைப் பேசவே விடாமல் கத்தியது நினைவு வந்தது. ஆனாலும் திமிராகவே நின்றார்.

தன் மகளிடம் திரும்பி “இதை ஏன்மா நீங்க ரெண்டு பேரும் அம்மா கிட்டச் சொல்லல?” என்று கேட்க,

“அ..அம்மா” என்று அவள் தேம்ப இஷானைப் பார்த்தார் அவர்.

“அவங்க எங்களைப் பேசவே விடலை சார்… நாங்க என்ன சொல்ல வர்றோம் என்று கூடக் கேட்காம அவங்க பாட்டுக்குக் கத்துறாங்க… இவங்களை அடிக்க வர்றாங்க…” என்று கூற மகளை அடிக்க வந்தார் மனைவி என்று கேட்டதும் மனைவியைப் பார்த்தார்.

“ஆமாம் அடிச்சேன்… கழுத்துல தாலி இல்ல, அவ பாட்டுக்குக் கல்யாணம் பண்ணலனு சொன்னா, பெத்தவளுக்கு இதைக் கேட்க எவ்வளவு அசிங்கம் பாவா… அதான் அடிச்சேன். அதான், அவ புருஷன் அவ்ளோ கோபமா என்னையே எதிர்த்துப் பேசி அவளைக் கட்டிப்புடிச்சுக் காப்பாத்திட்டானே..” என்று திமிராகவே கூற,

“அம்மு… மரியாதையா பேசுமா… அவரு நம்ம பொண்ணோட புருஷன்” என்று கூற, 

“எது? கழுத்துல தாலி கட்டாம வாழுறவனுக்கு நான் மரியாதை கொடுக்கனுமா? நாளைக்கே அவளை விட்டுட்டு ஓடமாட்டான்னு என்ன நிச்சயம்? ஏன் உங்களுக்குத் தெரியாதா? தமிழ்நாடு கலாச்சாரம், ஆந்திரா கலாச்சாரம். தாலி இல்லாதவளை நம்ம ஊர்ல எப்படி கேவலமா பார்ப்பாங்கனு தெரியும்ல? அவளுக்கு என்ன பேர் வரும்? இந்த அசிங்கத்தை எல்லாம் பார்த்துட்டு நானும் நீங்களும் உயிரோட இருக்கனுமா?” என்று அவர் ஏக கோபத்தில் பேச அதை கேட்டு இஷானே அதிர்ந்துவிட்டான்.

“என்னம்மா இப்படிலாம் பேசுற? அப்படிலாம் எதுவும் ஆகாதுமா? இவரைப் பார்த்தா நம்ப பொண்ணை ஏமாத்துற ஆள் மாதிரி தெரியலைமா?” என்று கூற,

“ம்க்கும்… உங்க கண்ணுக்குக் கொலைகாரன்கூட நல்லவனாதான் தெரிவான்… எனக்கு நம்பிக்கை இல்லைங்க… முதல்ல வெள்ளையா இருக்குறதுலாம் பாலுனு நம்புறத நிறுத்துங்க” என்று கோபமாய் கூற சஹானாவோ கையைப் பிசைந்து கொண்டு நின்றிருந்தாள்.

அவரது தம்பியும் வந்து, “அக்கா நேனு செப்பிந்தி விண்ணு… வால் இதுரினு சூடக்கா எந்த சக்கன ஜன்த்தகா உண்டாரு… நேன்தா முந்தர அதி நன்னி ஒத்தனி செப்பிந்தினேஸி கோபம்லோ அரிஸ்தினி… கானி அமினி அதானு எட்லா பரிச்சிந்திதனி சூஸின் அப்டே அர்த்தமாயா மேன பாப்பா ஏம்டிக்கி நன்னி ஒத்தனி செப்பிந்தினேஸி…” 

(அக்கா.. நான் சொல்றததைக் கொஞ்சம் கேளுக்கா… அவங்க ரெண்டு பேரையும் பாருக்கா எவ்வளவு பொருத்தமா இருக்காங்க. நான்தான் முதல்ல அவ என்னை வேணாம்னு வந்த கோபத்தில கத்தினேன். ஆனா, அவளை அவரு தாங்கினதைப் பார்த்தப்போதான் புரிஞ்சது, நம்ம பாப்பா ஏன் என்னை வேணாம்னு சொல்லுச்சுனு…) என்று கூற அவனைக் கேள்வியாய் பார்த்தார் ஜக்கம்மா. சஹானாவும் இஷானும் அவன் பேசுவதைத் தான் பார்த்தபடி நின்றிருந்தனர்.

இஷானோ ஒன்றும் புரியாமல் நின்றபடி,

“அவரைத் தமிழ்ல பேசச் சொல்லுங்க சனா” என்று கூற அதைக் கேட்டு லேசாகச் சிரித்த அவன்,

“தமில்லயே செப்புறேன்… எனிக்கு ரெம்ப தமில் வராது. தப்பா போச்சுனா மன்னிங்க…” என்று கூற,

‘இவனைத் தமிழ்ல பேசச் சொல்லி நாம தப்பு பண்ணிட்டோமோ?’ என்று யோசித்தவனைப் பார்த்தவன் சிரித்தபடி,

“உங்ககிட்டப் பேச இன்னும் நல்லா கத்துக்கறேன் மாப்ள… அக்கா பொண்ணுனு அவமேலே உரிமை இருந்துச்சு… அதனாலயும் என் அக்காவும் அவ எனக்குனு சொன்னதுல அவளைக் கட்டிக்கனும்னு ஒரு ஆசை இருந்துச்சு. அதனால எங்களுக்குப் பொருத்தமா இருக்குமா? இல்லையானுலாம் நான் பார்க்கலை. அதேமாதிரி, சஹானாவை நான் புரிஞ்சுக்கக் கூட முயற்சி செய்யலே. ஏன்னா, அது அப்படியே வளர்ந்துட்டேன். அவளுக்கு மரியாதை கொடுத்துக் கூடப் பேசத் தெரியாது. என் அக்கா அவள அடிக்கும்போது கூட நானும் அடிக்கனும்னு நினைச்சேனே. ஆனா உங்கள மாதிரி ஓடிவந்து அவளைத் தடுக்கனும்னு நினைக்கலை… நான் தூக்கி வளர்த்த பொண்ண நானே கல்யாணம் பண்ணி வாழ நினைச்சேனே தவிர அவளோட ஆசை என்னானு கூடக் கேட்காம விட்டுட்டேனே… நீங்க ஓடிவந்து அவளே தாங்குறதும் அவ உங்களைக் காப்பாத்துறதும் உங்களுக்குள்ள இருக்குற லவ்வ சொல்லுச்சு… நீங்கதான் அவளுக்கு ஏத்த ஜோடினு புரிஞ்சுச்சு… நீங்க அவள சனானு கூப்பிடுறதும் உங்க லவ்வ சொல்லுது…” என்று கூறி முடிக்க,

அவனது சனா என்ற அழைப்பை அப்போது தான் அவளே உணர்ந்தாள். அவனும்தான்… உணர்ந்தவனுக்கு திக்கென்றானது. அப்படியே ஒரு அதிர்வோடு அவன் சஹானாவைப் பார்க்க அவளும் அவனைத்தான் பார்த்தாள். இருவரது பார்வையையும் காதல் என்று தவறாகப் புரிந்து கொண்ட ஜக்கம்மா,

“நீ ஆயிரம் பேசினாலும் எனக்கு ஏத்துக்க முடியாதுடா? உன்னை வேணாம்னு வந்தவ முறையா தாலி கட்டி வாழ்ந்தா நீ பேசுறதுலாம் சரினு நான் ஏத்துப்பேன்… இப்படி ஒரு கல்யாணத்தை என்னால ஏத்துக்கவே முடியாது…” என்று கூற அவரிடம் வந்த சஹானாவின் தந்தை,

“அதுக்குனு இப்போ என்ன இன்னொரு முறை கல்யாணமா பண்ணச் சொல்ற அம்மு?” என்று சற்று கோபமாய் கேட்க,

“ஆமாம்… இப்போவே இங்கேயே அவ கழுத்துல தாலி கட்டச் சொல்லுங்க… எனக்கு இந்த அசிங்கத்தைச் சகிச்சுக்க முடியல” என்று கத்த இஷானும், சஹானாவும் அதிர்ந்து ஒருவரையொருவர் பார்த்து நின்றனர்.

இன்ஸ்பெக்டர் இவர்களே பேசித் தீர்க்கட்டும் என்று நின்றிருந்தார். யசோதாவும் ஜக்கம்மாவை எதிர்த்துப் பேச முடியாமல் நின்றிருந்தார். கோவிலின் நிர்வாகிகளும் வந்து சேர்ந்தனர்.

2 thoughts on “என் சுவாசம் உன் வாசமாய் – 29”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *