Skip to content
Home » என் சுவாசம் உன் வாசமாய் – 30

என் சுவாசம் உன் வாசமாய் – 30

அத்தியாயம் – 30

ஜக்கம்மா கத்தியதைக் கேட்ட இஷான் அதிர்ச்சியில், “என்ன கல்யாணமா?” என்று அதிர்ச்சியாய் கேட்க, சஹானாவிற்குப் பதட்டத்தில் என்ன செய்வது என்றே புரியவில்லை. கையைப் பிசைந்து கொண்டு நின்றவள், “அம்மா என்ன சொல்றீங்க?” என்று கேட்க,

“என்னடி, என்ன சொல்றீங்க? ஏற்கனவே அதான் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக் குடித்தனம் பண்றீங்க… இப்போ எல்லார் முன்னாடியும் தானே கல்யாணம் பண்ணச் சொல்றோம்” என்று கத்த,

இஷானுக்கும் இதை எப்படி எதிர்கொள்வது என்றே தெரியவில்லை. ஆனால், அவன் அப்படிக் கேட்டதும் ஜக்கம்மா அவரது கணவன் இருவருக்கும் சந்தேகம் வர ஆரம்பித்தது.

“பாவா… சூடன்டி… இவரு ஏமி செப்தாரு? இப்போ புரியுதா? நான் ஏன் இந்த ரிஜிஸ்டர் கல்யாணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கலனு? அவரு கல்யாணம் பண்ண பொண்ணு தானே, அவளோட குடும்பமே நடத்தி இருக்காரு. ஆனா, அவ கழுத்துல தாலி கட்ட மாட்டாராம்… நாளைக்கே ஒரு பிரச்சனைனா இப்படியே என் பொண்ண விட்டுட்டுப் போயிடலாம்னு யோசிக்கிறாரு போல” என்று கோபமாய்க் கூற சஹானாவின் தந்தையும் கேள்வியாய் இருவரையும் பார்த்தார்.

அங்கு வந்த கோவில் நிர்வாகிகள் பிரச்சனையைக் கேட்டுவிட்டு இருவரும் கணவன் மனைவி என்ற விஷயத்தை அறிந்ததும் முதலில் அதிர்ந்தவர்கள், அங்கிருந்த ஜக்கம்மாவையும் அவரது தம்பியையும் பார்த்தவர்கள் சஹானா அவரது மகள் என அறிந்து கொஞ்சம் பயந்தாலும், அவரது கணவன் இருப்பதால் அமைதியாக இருப்பார் என்று தெரிந்து தங்கள் பக்கத்திலிருந்து பேசினர். ஜக்கம்மா தன் தரப்பைப் பற்றிக் கூறவும் அவர்களுக்கும் ஜக்கம்மா சொல்வதே சரியெனப் பட இஷான் மற்றும் சஹானாவிடம் பேசினர்.

(ஆமா தம்பி, அவங்க பேசுறதும் நியாயம் தானே? நீங்க பாட்டுக்கு கல்யாணம் ஆச்சுனு சொல்றீங்க. ஆனா, பார்க்குறவங்களுக்கு அது தெரியாதுல. ஒவ்வொரு ஆளுகிட்டயா போய் விளக்கம் சொல்லிட்டு இருப்பீங்களா? எங்களுக்கு கல்யாணம் ஆச்சுனு. கழுத்துல தாலினு ஒண்ணு இருந்தா பார்க்குறவங்களும் உங்களைத் தப்பா நினைக்க மாட்டாங்க. அந்தப் பொண்ணுக்கும் அதானே பாதுகாப்பு… கழுத்துல தாலி இல்லாம ஒருத்தன்கூட குடும்பம் நடத்தினா இந்த ஊர்லனு இல்ல, உங்க ஊர்ல கூட அந்தப் பொண்ண தப்பாதான் பார்ப்பாங்க… படிச்ச உங்களுக்கு நாங்க சொல்லிப் புரிய வேண்டியது இல்லையே… ஊரே திரண்டு இருக்கு… அவங்க அப்பா அம்மாவும் இருக்காங்க. நீங்க உங்க வீட்டுல பெரியவங்கள வேணா வரச்சொல்லுங்க. பேசி நல்ல நாள்ல கல்யாணம் வைக்கலாம். இல்ல, இன்னைக்கே முகூர்த்த நாள். இப்பவே கூட அவங்க கழுத்துல கோயில்ல வெச்சுத் தாலி கட்டுங்க) என்று கோவிலின் நிர்வாகி கூற அனைவருக்கும் அவர் கூறுவதே சரியெனப்பட அது அனைத்தையும் கூட வந்திருந்த ட்ரான்ஸ்லேட்டர் மொழிபெயர்ப்பு செய்து கூற பயங்கரமாய் கடுப்பானான் இஷான். 

சஹானாவோ உதவி செய்ய வேண்டி அவனை இக்கட்டான சூழ்நிலையில் நிறுத்தி வைத்த தன் மடத்தனத்தை எண்ணித் தன்னையே நொந்து போனாள். அவளுக்கு எங்கே தன் தாய் தன்னை இங்கேயே தன் மாமனுக்குத் திருமணம் செய்து வைத்து விடுவாரோ என்ற பயம் போய் இப்போது இஷானுக்குத் திருமணம் செய்து வைத்து விடுவாரோ என்ற பயம் அதிகமாக அங்கேயே மயங்கி சரியப் போனவளைக் கோபமாய் திட்டத் திரும்பியவன் அப்படியே தாங்கினான்.

அப்போதும் அவன் அவளைத் தாங்கியதைப் பார்த்த அனைவரும் பொண்டாட்டி மேல் பாசம் என்றே நினைத்துச் சிரித்தனர். ஆனால், அது இயல்பிலேயே அமைதியான இஷானின் ஓடிச்சென்று உதவும் குணம் என்பதை அவர்களுக்கு யார் சொல்வது? அவள் மயங்கியதைப் பார்த்து ஓடிவந்த ஜக்கம்மா, அவரது கணவன், தம்பி எல்லோரும் இஷான் தாங்கியதைப் பார்த்து அங்கேயே நின்று விட்டனர். 

அங்கே ஓரமாக நின்றிருந்த யசோதாம்மாவைப் பார்த்தவன் தண்ணீர் எடுத்து வரும்படி சைகை செய்ய அவரும் ஓடிச்சென்று எடுத்து வந்தார். அவரது கையில் அவளை ஒப்படைத்தவன் அவளது முகத்தில் நீரைத் தெளிக்க அவளோ லேசாகக் கண் விழிக்க அவளது எதிரே தாய் தந்தை நின்றிருக்க, யசோதாம்மா தன்னைத் தாங்கி இருக்க அவளுக்கு இஷான் தண்ணீரைக் குடிக்கக் கொடுத்தான். அவளது கைகள் நடுங்குவதைப் பார்த்தவன் தானே அவளுக்குத் தண்ணீரைப் புகட்ட அவளுக்கோ அவனை எல்லோர் முன்னிலையில் சிறைக் கைதியாய் நிற்க வைத்த தன் மடத்தனத்தை எண்ணிக் கண்ணீர் வழிய அவனைப் பார்க்க நீரை அருந்துமாரு அவன் கண்ணை மூடித் திறக்க நீரை அருந்தியவளுக்கு திடம் வர யசோதாம்மா உதவியுடன் எழுந்து நிற்க முயல அவரால் அவளது வெயிட்டைத் தாங்க முடியாமல் அவரும் தடுமாறத் தானே அவளைத் தாங்கியபடி எழுந்து நிற்க உதவினான்.

அதுவரை இருந்த நடுக்கம் இறுக்கமாய் மாற அவள் தன் தாயிடம் உண்மையைக் கூற வேண்டும் என்ற முடிவுடன், “அ..அம்மா… நாங்க க..கல்யாணம்” என்று கூற அதற்குள் அவளது தோளில் அழுத்தம் கொடுத்த இஷான்,

“நாங்க கல்யாணம் பண்ணிக்கிறோம், கோயில்ல ஏற்பாடு பண்ணுங்க” என்று கூற அவனை அதிர்ந்து பார்த்தாள் சஹானா.

“இ..இஷான், எ..என்ன?” என்று அவள் அதிர்ந்து கேட்க அவளைப் பார்த்தவன்,

“நமக்கு தான் ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சே சனா… அப்போ உங்க அப்பா அம்மா இல்லனு கஷ்டப்பட்டீங்கல்ல. இப்போ அவங்க மட்டும் இல்லாம ஊர் ஜனங்க முன்னாடியே நம்ம கல்யாணம் நடக்கப் போகுது” என்று கூற அவன் பேசுவது புரியாதவள் போல விழித்தவள்,

“இ..இல்ல. நான் என்ன சொல்ல வர்றேன்னா” என்று கூற அவளைப் பார்த்தவன்,

“என் பொண்டாட்டி யார் கிட்டயும் அவமானப்பட்டு நிற்க நான் விடமாட்டேன் சனா. புரிஞ்சுதா? கல்யாணம் ஆகட்டும், அப்புறம் பேசிக்கலாம்” என்று கூறி அவளது கையை அழுத்த அவளுக்குக் குழப்பமே…

‘இவர் என்ன இப்படிப் பேசுறாரு? உண்மையைச் சொல்ல வாயெடுத்தா அவர் என்ன பேசவே விடமாட்டேங்கிறாரு… கல்யாணம்னா இவருக்குப் பெருசாத் தோணலையா?’ என்றெல்லாம் யோசனையோடு அவள் இருக்க ஜக்கம்மா கோபத்தோடே அமர்ந்திருக்க கல்யாண வேலைகளைச் செய்து கொண்டு இருந்தான் அவரது தம்பி. மனைவியின் மனதிற்கும் உணர்விற்கும் மதிப்பளித்து அவருடனே அமர்ந்திருந்தார் சஹானாவின் தந்தை.

அவளிடம் சொல்லிவிட்டு அமைதியாக அறைக்குள் சென்று விட்டான் இஷான். சென்றவன் உடனே தனது போலீஸ் நண்பனுக்கு ஃபோன் செய்ய, அவனும் ஒரு கேஸ் விஷயமாக வேலூர் சிறைக்கு வந்திருப்பதால் உடனே கிளம்பினான் புஷ்பகிரிக்கு.

அன்று செவ்வாய்க் கிழமை என்பதால் எல்லோரும் சேர்ந்து ஒருமனதாக மறுநாள் புதன்கிழமை நல்ல நேரம் இருப்பதால் அப்போதே கல்யாணத்தை வைக்கலாம் என்று கூற,

இஷானோ நடப்பதையெல்லாம் ஏதோவொரு பொம்மை போல பார்த்துக் கொண்டு இருந்தான்.

நடக்கவிருப்பதைத் தனது நண்பன் தண்டபாணிக்கும், இந்தருக்கும்  சொல்ல வேண்டும் என்று முயற்சி செய்ய அவன் செய்த முயற்சி அனைத்தும் வீண் என்றே ஆனது.

ஜக்கம்மா எதிலும் ஒட்டாமல் அதே நேரம் விலகியும் இல்லாமல் இருந்தார். அவரது தம்பிதான் ஓடி ஓடி எல்லா ஏற்பாட்டையும் செய்தான். சஹானாவோ எதையும் அவனிடம் தனியாகப் பேச முடியாமல் தவித்தாள். அன்று இரவு வந்து சேர்ந்தான் இஷானின் நண்பன். அவனுக்கோ கேட்க கேள்விகள் நிறைய இருந்தாலும் இஷானின் முகம் ஏதோ ஒரு முடிவைக் கூற அவனிடம் எதையும் கேட்காமல் அமைதியாக இருந்து விட்டான்.

சஹானாவின் தந்தையோ இவனை எங்கு பார்த்தோம் என்ற யோசனையிலேயே உழன்றார். அதனால் இஷானின் இறுக்கமும், மகளின் தவிப்பும் கவனிக்கப்படாமல் விடப்பட்டது.

இரவு அவனிடம் தனியாகப் பேசிட வேண்டும் என்று எண்ணிய சஹானாவால் அவனது அறைப்பக்கம் கூடப் போக முடியவில்லை. அவளைத் தாயும் தந்தையும் தன்னுடனே நிறுத்தி வைத்தனர்.

மற்றொரு காரணம் இஷானின் நண்பன். அவளை இஷானிடம் நெருங்கவே விடாமல் அவனுடனே இருந்தான்.

அவனிடம் இஷான் ஏதோ மும்முரமாக வேறு பேசிக்கொண்டு இருந்தான். அதனால் பேச்சில் குறுக்கே செல்வது அநாகரிகமாக எண்ணி கையைப் பிசைந்து கொண்டே இருந்தாள்.

இஷானோ கயலின் நிலையையும், அவளது பாட்டியின் நிலையையும் விசாரித்தவன், தான் ஏன் இந்த முடிவை எடுத்தேன் என்று தன் நண்பனிடம் விளக்க, இவன் கூறியதும் அவனுக்குச் சரியாகப்பட்டது. ஆனாலும்,

“சரிடா, நீ சொல்ற காரணம்லாம் சரிதான்… ஆனா, இது பொம்மைக் கல்யாணம் இல்ல, அதையும் புரிஞ்சுக்கடா… அந்தப் பொண்ணோட வாழ்க்கையையும் யோசிடா?” என்று கூறினான். அவன் சொல்வதும் சரிதான், என்னதான் சுயநலமாக யோசித்தாலும் அவளும் ஒரு பெண்ணல்லவா? அவளது எதிர்காலம் தன்னால் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்று எண்ணி அமைதியாகவே இருந்தான் இஷான்.

“நல்லா யோசி இஷா… உன் மனசுல கயல்மேல இருந்தது காதலானு முதல்ல யோசி. இல்ல அது ஜஸ்ட் இன்ஃபாக்சுவேஷன்னு நினைச்சா ஏதோ ஒரு வகையில இந்தப் பொண்ணு உன் மனசுல தாக்கம் பண்ணி இருக்கனும்டா. இல்லைனா நீ இந்த அளவுக்குக்  கொண்டு வரமாட்ட. அதனால உன் மனசு முதல்ல எங்கே இருக்குனு யோசி… எங்கேயோ ஏதோ ஒரு மூலையில இந்தப் பொண்ணுமேல உனக்கு லவ் இருக்குதானு யோசி. அப்போதான் இந்தக் கல்யாணத்தை நீ முழுமனசா ஏற்ப. கயல விட்டுட்டு இந்தப் பொண்ணு கழுத்துல தாலி கட்டப் போறனா, அப்போ இதுக்குப் பேர் என்னானு நீயே யோசி” என்று விட்டுச் சென்று விட்டான். சிறிது நேரம் யோசனையோடு இருந்தவன் அவனை அழைத்துக் கொண்டு வெளியே சென்றவன் நீண்டநேரம் கழித்து வந்தான். வரும்போது கையில் இருவரும் சில பைகளைத் தூக்கி வந்தனர்.

யசோதாம்மாவோ இருவரின் முகத்தை வைத்தே ஏதோ சரியில்லை என்று உணர்ந்தார். ஆனால், தன்னால் எதையும் செய்ய முடியாது என்று அமைதியாக இரவு உணவை அனைவருக்கும் பரிமாறியவரைப் பார்த்த இஷான், அவரது அருகில் வந்தவன் சாப்பிட அமர்ந்து இருந்த சஹானாவை அழைத்தான்.

அவள் வந்து அமைதியாக நிற்கவும் அவளைப் பார்த்தவன் அப்போது தான் அவளை முழுதாக அளவிட்டான்.

வந்த அன்று பார்த்த மதிமுகம், குண்டு குண்டாய் கண்கள் நடனமாட நின்றிருந்தவளைப் பார்த்தவனுக்கு கயல் என்னும் ஒருத்தி மறந்தே போனாள். (அது ஒரு நேரத்தில் வரும் ஈர்ப்பு. ஆனால், இவளைப் பார்க்கும் போது ஈர்ப்பையும் தாண்டி ஏதோ ஒர் பந்தம் இருப்பதை உணர்நதான்)

அவனது பார்வை ஏதோ செய்ய தலையை நிமிரவே இல்லை அவனது சனா. அனைவரும் உண்பதை நிறுத்தி அவர்களையே பார்த்துக் கொண்டு இருந்தனர்.

இருவரையும் பார்த்த யசோதாம்மாவிற்கு அவனது பார்வையிலேயே அவள் மேல் உள்ள ஈர்ப்பை உணர்ந்தவர் சிரித்துக் கொண்டே தொண்டையைச் செருமினார்.

அதில் சுயம் அடைந்தவன் அவனது நண்பனை அழைக்க அவன் ஒரு பையைக் கொண்டு வந்து நீட்டினான். அதில் புடவை மற்றும் வேஷ்டி சட்டை அவரது மகளுக்கும், மகனுக்கும் துணி இருக்க, அதை அவரிடம் நீட்ட அவரோ கேள்வியாகப் பார்க்க,

“நான் சொல்றதை இவங்ககிட்டச் சொல்லு சனா” என்றவன்,

“சனாக்கு அவங்க அம்மா, அப்பா எல்லாரும் இருக்காங்க கல்யாணத்துல. ஏற்கனவே எங்க அம்மா சம்மதிக்காததால தான் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணி இங்க வந்தோம். அதனால, அவங்கள கல்யாணத்துக்குக் கூப்பிடலை. ஏதாவது மனசு கஷ்டமாப் பேசிடுவாங்க. அதனால, நாளைக்குக் கல்யாணத்துல நீங்க என் அம்மாவா என்கூட வந்து நின்னா நான் ரொம்பச் சந்தோஷப் படுவேன்” என்று கூற அதை அவள் அப்படியே தெலுங்கில் கூற கேட்டவருக்குக் கண்கள் கலங்கி விட்டது.

“தம்பி, நான் இங்க சமைக்கிற ஆளு. என்னைப் போய்?” என்று அவர் கேட்க அதை சஹானா கூறவும்,

“நல்ல மனசு இருந்தால் போதும்மா… நான் உங்களை என் அம்மா மாதிரி நினைச்சு தான் கூப்பிட்டேன் இத்தனை நாளா… அதனால நீங்க அம்மாவா வர்றீங்களா?” என்று கேட்க சஹானா அதைக் கூறச் சரியெனத் தலையாட்டினார் அவர் கண்ணீரோடு.

ஆனால் ஜக்கம்மாவிற்குக் கோபம் வந்தது, ஒரு வீட்டு வேலை செய்பவர் தனக்கு நிகராக வந்து நிற்பதா என்று. அதையே அவர் தமிழில் கோபமாய் கேட்க அவரைக் கோபமாய் பார்த்த இஷான்,

“உங்க தகுதி உங்க பணம்லாம் உங்களோடயே வெச்சுக்கோங்க. எனக்கு நல்ல மனுஷங்க என்கூட இருந்தால் போதும்… என் கல்யாணத்துல யார் இருக்கனும், யார் இருக்கக்கூடாதுனு நான்தான் முடிவு செய்வேன்… பிடிக்கலைனாலும் இதை நீங்க ஏத்துக்கத்தான் வேணும்” என்று அவனும் கோபமாய் கூற,

“நீ அமைதியா இரும்மா… அவரு கல்யாணம், அதுல அவரோட ஆசைக்கும் நாம மதிப்புக் கொடுக்கனும்மா” என்று ஜக்கம்மாவின் கணவர் பேச கோபமாய் முகத்தைத் திருப்பினார் ஜக்கம்மா.

ஆனால் மனதில் மருமகனை மெச்சினார். குணத்தில் தன் கணவன் போலவே இருக்கிறானே என்று. சஹானாவிற்கும் அதே எண்ணம்தான், அதையே எண்ணியபடி அவனை ஆவெனப் பார்க்க அவனுக்கே வெட்கம் வந்துவிட்டது. லேசாகச் சிரித்தவன், அவள் முன் சொடுக்கவும் அவள் அப்போது தான் தன்னிலை உணர்ந்தவள் மீண்டும் தலையைக் குனிந்து கொண்டாள்.

தன் நண்பனிடம் கையை நீட்டியவன் அவனிடமிருந்த பையை வாங்கிக் கொண்டு சஹானாவின் கையைப் பிடித்து டைனிங் ஹாலின் அருகில் வந்தவன் சஹானாவின் தாய் தந்தையிடம் அதை நீட்டினான். ஒன்றில் மூவருக்குமான ஆடை இருக்க இன்னொன்றில் அழகிய பன்னீர் ரோஸ் நிறத்தில் பட்டுப்புடவையும் கூடவே நகையும் இருந்தது.

இதைப் பார்த்த ஜக்கம்மா பேச வாயெடுக்கும் முன் இஷானே பேசினான்.

2 thoughts on “என் சுவாசம் உன் வாசமாய் – 30”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *