Skip to content
Home » என் சுவாசம் உன் வாசமாய் -31

என் சுவாசம் உன் வாசமாய் -31

அத்தியாயம் – 31

ஜக்கம்மா ஏதோ கோபமாய் பேச வாயெடுக்க, “நீங்க என்னைத் திட்டப் போறீங்கனு தெரியும்… என் பொண்ணுக்கு இல்லாத வசதியா? அவளுக்கு செய்ய எங்களால முடியாதா? நீ வாங்கிக் கொடுத்து உன் மாப்பிள்ளை பவுசைக் காட்டுறியா? இதானே திட்டப் போறீங்க?” என்றவனை ஆச்சரியமாய் பார்த்தார் ஜக்கம்மா. பின்னே அவர் நினைத்ததை அவன் அப்படியே சொன்னால் அவரும் என்ன செய்வார். அவரது கணவனோ சிறு புன்னகையோடு பார்த்துக் கொண்டு இருக்க, ஜக்கம்மாவின் தம்பியோ வாய்க்குள் சிரித்துக் கொண்டு இருந்தான். சஹானாவோ இப்ப என்ன பிரச்சனையோனு தவிப்பாய் பார்த்தாள். இஷானுக்கே ஜக்கம்மாவின் திகைப்பு சிரிப்பை வரவைக்க, அவர்முன் கையை ஆட்டியவன் அவர் அவனை முறைப்பதைப் பார்த்து,

“இதானே திட்ட வந்தீங்க, நானே திட்டிக்கிட்டேன். ஆனாலும், சொல்ல வந்ததைச் சொல்லிடுறேன்… எனக்கு அம்மா அண்ட் என்னோட ட்வின் ப்ரதர் தான். ரெண்டு பேரும் இப்போதைக்கு கல்யாணத்துக்கு வரமுடியுமாது… அம்மா இன்னும் கோபமா தான் இருக்காங்க. அண்ட் தம்பி ஐபிஎஸ் ட்ரெயினிங்கில் இருக்கான். அவனைக் கான்டாக்ட் பண்ணவே முடியல. அதான் என் சார்பா என் ப்ரண்டும் யசோதாம்மாவும் இருப்பாங்க. அதனால அவங்களுக்கு ட்ரெஸ் எடுத்தேன். அப்படியே சனா, இப்போ உங்க பொண்ணு இல்லை. எப்பவோ என்னோட மனைவியா ஆகிட்டாங்க. அதனால, அவங்க என் பொறுப்பு இல்லையா, அதான் என் மனைவிக்கு நான் வாங்கினேன்… 

அப்படியே மனைவியோட குடும்பமும் என் பொறுப்பு தானே… அப்போ உங்களுக்கும் நான் செய்யலாம்ல? எனக்கு அந்த உரிமைகூட இல்லையா? இப்போதைக்கு சனாக்கு மட்டும் இல்ல, எனக்கும் அம்மா அப்பா நீங்கதான்… செய்யனும்னு தோணுச்சு செஞ்சேன். ஏத்துக்கறதும் ஏத்துக்காததும் உங்க இஷ்டம்” என்று கூறிவிட்டு அமைதியாய் நின்று கொண்டான். அவனது நண்பனே ‘நீயாடா இது?’ என்பது போல யோசிக்க ஆரம்பித்து விட்டான்.

‘ரைட்டு, பெரிய ஐஸ்ஸா தூக்கி என் அக்கா தலையில வெச்சுட்டான்… நீ பொழைச்சுக்குவடா தம்பி’ என்பதைப் போலச் சிரித்தபடி பார்த்தான் ஜக்கம்மாவின் தம்பி. அவனைப் பார்த்துக் கண்ணடித்தவன் பரிதாபமாக முகத்தை வைத்துக் கொள்ள, சஹானாவிற்கோ ‘இவர் ஏன் இவ்வளவு மெனக்கெட்டு நடிக்க வேண்டும்’ என்றுதான் தோண்றியது.

நடிக்கச் சொல்லி நாமதான் கேட்டோம், அதுக்காகதான் இப்படியெல்லாம் நடந்து நடிப்பை எல்லாரும் உண்மைனு நம்புற மாதிரிச் செய்யுறார் போல… அம்மா அப்பா கிளம்பினதும் இவரு செலவு பண்ண காசுலாம் கொடுத்துடனும்’ என்று எண்ணிக் கொண்டாள்.

ஆனால், அவன் இவள் திருப்பிக் கொடுப்பதைத் தாங்குவானா?

அவன் பேசியதைக் கேட்ட ஜக்கம்மாவிற்கே உருகி விட்டது. அவன் கையை நீட்டியபடியே இருக்க அதைப் பார்த்தவர் கையை நீட்டி அதை வாங்கிக் கொள்ள அதைப் பார்த்த அவரது கணவன் சிறு புன்னகையோடு இருக்க இதைக் கவனித்த ஜக்கம்மாவின் தம்பியோ சிரித்த முகமாய்,

“எங்க பாவா தான் அக்காவப் பேசியே கவுப்பாருனு நினைச்சுட்டு இருந்தேன். இப்போ மருமகனும் அந்த லிஸ்ட்ல சேர்ந்தாச்சு போலவே பாவா?” என்று கிண்டலடிக்க, இஷானுக்கோ பெருமையானது. அவனது முகமே அதைக் காட்டிக்கொடுக்க ஜக்கம்மாவோ,

“அப்படிலாம் ஒண்ணுமில்லடா… அம்மா அப்பாவா நினைச்சு வாங்கித் தர்ற பிள்ளைகிட்ட எப்படிக் கோவிச்சுக்க முடியும்? சரிதானே பாவா?” என்று கணவனைத் துணைக்கு அழைக்க,

“நீ சொன்னா சரியா தான்மா இருக்கும்” என்று கூற,

“ஆரம்பிச்சுட்டாரு” என்று ஜக்கம்மாவின் தம்பி கூற,

“போடா” என்றவருக்குச் சிரிக்கும் தம்பியைப் பார்த்து வருத்தம் வர அவரது நிலையை உணர்ந்த இஷான்,

“அவருக்கு நாம எல்லாரும் சேர்ந்து நல்ல பொண்ணாப் பார்த்து கல்யாணம் செஞ்சு வைக்கலாம்மா, கவலைப்படாதீங்க” என்று கூற, 

முகத்தை வைத்து மனதை அறிந்து ஆறுதல் பேசும் அவனது மென்மையான குணம் அவருக்கு மிகவும் பிடித்துப் போனது. சரியென அவர் தலையசைக்க அனைவரும் உண்டுவிட்டுப் படுக்கச் சென்றனர்.

ஒருத்தியைத் தனியே விட்டு அவளது குடும்பத்தோடு ஐக்கியம் ஆகியவனை ஆச்சர்யமாய் பார்த்தவள் கிடைக்கும் சந்தர்ப்பத்தில் அவனுடன் நிச்சயம் பேச வேண்டும் என்று எண்ணினாள்.

மறுநாள் காலை அனைவருக்கும் பரபரப்பாகவே விடிந்தது. சஹானாவோ அவனிடம் இது நாடகக் கல்யாணம்தான் என்பதைத் தெளிவு படுத்த வேண்டுமே என்று எண்ணியே உறக்கம் தொலைத்தாள்.

அவர்கள் வேலை செய்ய வந்த அதே புஷ்பகிரி கோயிலிலேயே திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

இஷானுக்கோ தன் குடும்பத்தில் ஒருவருக்கும் தெரியாமல் தன் திருமணம் நடக்கிறதே என்பது தான் வருத்தம். அட்லீஸ்ட் தன் நண்பன் தண்டபாணிக்காவது சொல்லலாம் என்றால் அவனையும் தொடர்பு கொள்ள முடியாத நிலை. தமையனையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவன்தான் கேம்பிங் சென்று இருக்கிறானே, அவனையும் தொடர்பு கொள்ள முடியவில்லை… யாரும் இல்லாமல் இருப்பதற்கு பதில் ஒரு நண்பனாவது கூட இருக்கிறானே என்று எண்ணி ஆறுதல் ஆனான்.

பெரும் குழப்பத்திலேயே தன் தாய் தந்தையின் சந்தேகப் பார்வைக்கு பயந்தே சாதாரணமாக இருப்பது போல் காட்டிக் கொண்டு ரெடியானாள் சஹானா.

காதல் ஜாதி, மதம் கடந்து மனிதர்களைக் கடந்து வரும். அதைத் தடுக்க நம்மால் முடியாது என்ற உண்மையை உணர்ந்தவர் காதல் மணம் புரிந்த ஜக்கம்மா. அதனாலேயே அவருக்குக் கோபம் இருந்தாலும் மகளது வாழ்க்கை கேலிப் பொருளாய் பேசப்படக் கூடாது என்றே இந்தத் திருமணம் நடக்க வேண்டும் என்று எண்ணியவர் மன நிறைவுடனும் வெளியே விறைப்புடனும் வலம் வந்தார்.

மனைவியின் மனம் தனக்குத் தெரியாதா என்ன? என்று சிறு புன்னகையோடே அவரது கணவரும் மகளின் திருமணத்தில் நின்றார், இஷான் வாங்கிக் கொடுத்த உடையை அணிந்து கொண்டு…

ஓடி ஓடித் திருமண வேலையைச் செய்யும் தம்பியைப் பார்க்கும் போதுதான் ஜக்கம்மாவின் மனம் வலித்தது. 

மகளை இவனுக்குத் திருமணம் செய்து வைப்பதாகச் சொல்லித் தானே அவனது திருமணத்தைத் தள்ளிப் போட்டபடி இருந்தார். 

யசோதாம்மாவும் அவரது மகள் மற்றும் மகன் கணவனுடன் வந்து திருமண வேலைகளைச் செய்ய தனது மகளைத் துணைக்கு அமர்த்தினார்.

ஜக்கம்மாவின் தம்பிக்குத் துணையாக யசோதாம்மாவின் மகள் வேலை செய்ய, அவளைப் பார்த்தவனுக்கு மனதில் ஏதோ சொல்ல முடியாத பரவசம் தோன்ற அவனது பார்வை அந்தப் பெண்ணையே வட்டமிட்டது. அதைக் கவனித்த இஷானும், ஜக்கம்மாவின் கணவரும் சேர்ந்து ஜக்கம்மாவிடம் ஜாடை மாடையாகக் காட்ட இதுவரை இல்லாத பரவசத்தில் தன் தம்பியைப் பார்த்தவருக்கு காதல் செய்யும் மாயம் புரிந்து போனது. இதனை வீணாக்க விரும்பாமல் உடனடியாக யசோதாவிடமும் அவரது குடும்பத்தினரிடமும் பேசினார். முதலில் பயந்த யசோதாம்மா இஷானின் கண்ணசைவில் இருந்த கலக்கம் எல்லாம் நீங்கி அவர்களும் சம்மதம் கூறினர்.

அடுத்து வரும் முகூர்த்தத்திலேயே திருமணம் பேச இருவருக்கும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இருவரின் பார்வைப் பரிமாற்றங்களே பெரியவர்களுக்குத் திருப்தியைக் கொடுத்தது.

இஷானிடம் பேச வேண்டும் என்று எண்ணிய நண்பனுக்கோ அவனது ஒவ்வொரு செயலுமே சொல்லாமல் சொல்லியது, சஹானாவுக்கும் அவனுக்கும் ஏற்பட்டுள்ள பந்தத்தை. இனி இவன் வாழ்வு இந்தப் பெண்ணோடு தானோ என்று எண்ணும் வகையில் இருந்தது.

ஐயர் மந்திரம் சொல்லி பெண்ணை அழைத்து வரச் சொல்ல, பதட்டமும் பயமும் இருந்தாலும் இஷான் வாங்கிய சேலையும் நகையும் அவ்வளவு பொருந்திப் போகப் பார்ப்பவர் அனைவருக்கும் அவள் பேரழகியாகத் தெரிந்தாள். அமைதியாக வந்து இஷானின் அருகில் அமர அவளைப் பார்த்தவன் இமைக்க மறந்தான். மை தீட்டிய மருண்ட விழிகள் அவன் வாழ்வை உயிர்ப்புடன் வைக்குமா?

இருவரது ஜோடிப் பொருத்தத்தையே அந்தக் கோவில் மக்கள் முழுக்கப் பேசிக் கொண்டு இருந்தனர். அவர்களின் பொருத்தம் அங்கிருந்த அனைவரின் கண்களை நிறைத்தது. ஜக்கம்மாவிற்கும் மனம் நிறைவாய் இருந்தது அவர்களைப் பார்க்கவே. இஷானை லேசாக இடித்த அவனது நண்பன்,

“போதும்டா, ஆத்துல வெள்ளம் அதிகமாகுதாம் உன்னால” என்று கூற அப்போது தான் தன்னிலை உணர்ந்தவன் அவனிடம் மொபைலை நீட்டிப் புகைப்படம் எடுக்கச் சொன்னான். 

ஐயர் மந்திரம் ஓத அவர் கொடுத்த மங்கள நாணை வாங்கி அவளைப் பார்க்க அவளும் அவனைத் தான் பார்த்தாள் பயத்தோடு. அவளது பயத்தைப் போக்க எண்ணியவன் தன்னையும் அறியாமல் லேசாகப் புன்னகைத்துக் கண் சிமிட்ட தன்னையும் மீறி அவளது விழிகள் பயம் நீங்கி வெட்கம் வந்து குடியேற தலை வணங்கி அவனது மனைவியாக மாறினாள். 

அதனையெல்லாம் இஷானின் மொபைலில் அழகாய் பதிய ஃபோட்டோகிராபரும் அதைத் தன் கேமராவில் பதிந்து கொண்டார்.

மணமக்கள் மேல் அனைவரின் வாழ்த்துக்களும் அட்சதையாய் தூவ திருமணம் இனிதே நடைபெற்றது. பெரியவர்கள் மற்றும் சஹானாவின் பெற்றோர் மற்றும் யசோதாம்மா தம்பதியர் காலில் விழுந்து இருவரும் ஆசீர்வாதம் வாங்கினர். அனைவரும் மனம் நிறைந்து வாழ்த்தினர். பின் அனைவரும் உணவருந்தி விட்டு வீட்டுக்கு வர எல்லோரும் ஓய்வாய் அமர மதிய வேளை ஆனது. சஹானாவின் தந்தையோ சஹானாவிடம்,

“சஹாமா… காலையில கல்யாண ஃபோட்டோ எடுத்தாங்கல்ல மாப்பிள்ளை ப்ரண்டு. அவர்கிட்டக் கேட்டு வாங்கிட்டு வாயேன் பார்ப்போம்” என்று கேட்க, அதுவரை ஏதோ ஒரு தயக்கம் இஷானைப் பார்க்க இருந்து கொண்டே இருந்தது. அதனாலேயே அவள் ஹாலிலேயே அமர்ந்து இருக்க இஷானும் ஏதோ யோசனையில் ரூமிற்குள் சென்று விட்டான்.

இந்நேரம் பார்த்துச் சஹானாவின் தந்தை ஃபோட்டோ கேட்க,  “இதோ வாங்கிட்டு வர்றேன்பா” என்றபடி எழுந்து இஷானின் அறைக்குச் செல்ல வந்தாள்.

சிறிது நேரம் அறையில் அங்கும் இங்கும் நடந்தவன் மனம் ஏதோ போல் இருக்க வெளியே செல்லக் கதவைத் திறக்க அந்நேரம் கதவைத் தள்ள சஹானா கையை வைக்க கதவு திறந்து கொள்ளவும், அதிர்ந்து அவள் சுதாரிக்கும்முன் உள்ளே விழப்போனவளை சுதாரித்து கதவைத் திறந்த இஷான் பிடிக்க, அவனது மார்பில் இடித்து நின்றாள். திடீரெனத் தன்மேல் வந்து விழுந்தவளைத் தாங்கியவனுக்குத் தன்மேல் மோதி நிற்கும் தன் மனையாளைப் பார்க்கச் சிரிப்பு தான் வந்தது.

பின்னே வந்து விழுந்தவள் சட்டெனச் சுதாரித்து அவனிடம் இருந்து விலகி மெதுவான குரலில், “சா..சாரி நா..நான்… அ..அப்பா வந்து” என்று உளற அவள் பயந்த முகமும், அவளது திக்கித் திணறும் பேச்சும் அவனுக்குச் சிரிப்பை வரவழைக்க, அவனும் ரகசியம் போலவே பேசினான்.

“இருங்க சனா… என்னைப் பார்த்தா உங்களுக்கு என்ன பேய் மாதிரி இருக்கா? எதுக்கு இவ்ளோ பதட்டம்… காம் டவுன்… எல்லாரும் இங்கதான் பார்க்கிறாங்க, அதனால பதட்டப்படாம எதுக்கு வந்தீங்கனு சொல்லுங்க?” என்று பேச அவனது நெருக்கமான பேச்சும், மூச்சும் ஏதோ செய்ய அவனிடமிருந்து சற்று ஒதுங்கி நின்றவள்,

“உ..உங்க ப்ரண்ட் காலையில எடுத்த ஃபோட்டோவை அ..அப்பா பார்க்கனும்னு கேட்டாரு. அதைக் கேட்கத்தான் வந்தேன்” என்று ஒருவழியாக வந்த விஷயத்தைக் கூறி முடிக்கச் சிரித்தபடி டேபிளில் இருந்த தனது மொபைலை எடுத்து அவளிடம் நீட்ட அவளோ மொபைலை வாங்கிக் கொண்டு வேகமாய் நகரப்போக…

“பாஸ்வேர்ட் ரிமூவ் பண்ண வேணாமா?” என்று சிரித்தபடியே கேட்க சட்டென நின்றவள் திரும்பி அவனிடம் மொபைலை நீட்ட,

“பாஸ்வேர்டே போடல மேடம்” என்றான் நமட்டுச் சிரிப்புடன்.

அப்போது தான் அவன் கிண்டல் செய்கிறான் என்பது புரிய அவனை நிமிர்ந்து முறைத்தவள் கோபமாய் திரும்பிச் செல்ல, “பார்த்து பார்த்து…” என்று சிரிப்புடனே சொன்னான். 

இதுவரை கோபம் என்பதே அறியாத சஹானா முதல் முறையாக ஒருவன்மீது உரிமையாய் கோபம் கொள்கிறாள் இதை உணர்ந்து இருந்தால் அவளுக்கும் அவளது காதல் அவன்தான் என்பது புரிந்து இருக்குமோ?

மொபைலைக் கொண்டு சென்று தன் தந்தையிடம் நீட்ட அவ்வளவு நேரம் அவர்களின் சேட்டைகளைச் சிரிப்புடன் பார்த்துக் கொண்டு இருந்தவர் மொபைலை வாங்கி ஃபோட்டோவைப் பார்க்க, ஒவ்வொன்றாய் கணவனும் மனைவியும் நகர்த்தி நகர்த்திப் பார்க்க கடைசியாக வந்த புகைபடத்தைப் பார்த்து அதிர்ந்து எழுந்தார் சஹானாவின் தந்தை.

2 thoughts on “என் சுவாசம் உன் வாசமாய் -31”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *