Skip to content
Home » என் சுவாசம் உன் வாசமாய் – 32

என் சுவாசம் உன் வாசமாய் – 32

அத்தியாயம் – 32

வரிசையாகப் புகைபடங்களை இருவரும் பார்த்துக் கொண்டே வர,  “நீங்க பார்த்துட்டு என்கிட்டே கொடுங்கோ பாவா” என்று ஜக்கம்மாவின் தம்பி கேட்க அவனிடம் ஏதோ பேசியபடி அடுத்த புகைப்படத்தை தள்ளியவர் கண்களில் பட்டது இஷானின் குடும்ப ஃபோட்டோ. அதைப் பார்த்து அதிர்ந்து எழுந்து நின்றார் சஹானாவின் தந்தை.

அவர் எழவும் கூடவே எழுந்த ஜக்கம்மாவும் என்னவென்று புரியாமல்,

“பாவா… என்ன ஆச்சு பாவா? ஏன் அந்த ஃபோட்டோ பார்த்து இப்படி நிக்கறீங்க?” என்று கேட்க எல்லோரும் அவரையே புரியாமல் பார்க்க இஷானைப் பார்த்தவர்,

“நீ..நீ… மீராக்காவோட பையனா?” என்று கேட்கப் புரியாமல் நின்றவன் ஆம் என்று தலையாட்டியபடி,

“எங்க அம்மாவை உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்க அவருக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை.

“அம்மு… இவ.. இவன் யாரு தெரியுமா? மீராக்கா… என் அக்காவோட பையன்” என்று திக்கித் திணறிக் கூற அவர் பேசிய விஷயத்தில் எல்லோரும் அதிர்ந்து நின்றனர்.

இஷானிடம் ஓடியவர், “நா..நான் யாருனு தெரியுமா? உ..உங்க அம்மாவோட சொந்தத் தம்பி பா… உ..உனக்குத் தாய் மாமா” என்று கூற இஷானுக்கு மேலும் அதிர்ச்சி. தன் தாய்க்கு ஒரு தம்பி இருந்தார் என்று தானே அம்மா கூறி இருக்கிறார் என்று குழம்பியவன்,

“அ..அப்போ நீங்க உயிரோட தான் இருக்கீங்களா? எங்க அம்மா எனக்கு ஒரு தம்பி இருந்தான், இப்போ இல்லனு தான் சொல்லுவாங்க…” என்று கூறச் சட்டென அவர் முகம் சோகமாய் மாறியது.

அவரை “பாவா” என்று ஜக்கம்மா தாங்க அப்படியே அமர்ந்தவர், “அப்படித்தான் சொல்லுவா… நான் அவளைத் தனியாத் தவிக்க விட்டு ஓடி வந்துட்டேன்ல, அப்படித்தான் சொல்லி இருப்பா” என்றபடி அவர் புலம்ப அவர் அருகில் வந்து நின்றவன்,

“ஐயம் சாரி சார்… அவங்க அப்படித்தான் சொல்லுவாங்க, அதனால கேட்டேன். உங்க மனசு கஷ்டப்பட்டு இருந்தா என்னை மன்னிச்சிடுங்க” என்று கேட்க,

“அதெல்லாம் விடுப்பா… உங்களைக் குழந்தையாப் பார்த்தது. இப்போ வளர்ந்து என் பொண்ணுக்கே புருஷனா வந்து நிக்கிற… அம்மு பார்த்தியா, உன்கிட்ட அடிக்கடி சொல்லுவேன்ல. எங்க அக்காகூடப் பேச்சு வார்த்தை நல்லபடியா இருந்து இருந்தா அவங்க பசங்க ரெண்டு பேருல ஒருத்தருக்கு தான் நம்ப பொண்ணக் கொடுக்கனும், இதுதான் என் ஆசைனு சொன்னேன்ல. கடைசியில என் ஆசை பலிச்சுடுச்சு… என் அக்கா பையனே நம்ம மருமகன்” என்று ஜக்கம்மாவிடம் கண்களில் கண்ணீருடன் கூற அவரும் ஆமாம் எனத் தலையாட்டினார். மற்றவர்கள் அனைவருக்கும் ஏதோ அதிர்ச்சி அப்படியே இருந்தனர்.

இங்கு சஹானாவோ, “நாம ஒண்ணு யோசிச்சா இங்க வேற ஒண்ணு நடக்குதே? இப்போ நான் என்ன பண்ணப் போறேன்? இந்தக் கல்யாணத்தை எப்படி ரத்து பண்ணப் போறேன், இந்த இஷான் எப்படி இதை ஹாண்டில் பண்ணப் போறாரு?” என்றபடி யோசனையில் நின்றாள்.

ஜக்கம்மாவிற்கோ கணவனின் மகிழ்ச்சியே அவருக்கு முக்கியமாய் பட்டது.

இஷானோ, “நீ..நீங்க எப்படி சார், எங்க அம்மாவை விட்டுப் பிரிஞ்சீங்க?” என்று கேட்க அவனது அந்நியத் தன்மையில் மனம் வலித்தது அவருக்கு.

“நான் ஒரு வேலை விஷயமா ஹைதராபாத் வந்து இருந்தேன். அப்போதான் அங்கே ஒரு ஹோட்டல்ல அம்முவைப் பார்த்தேன். அவளோட கம்பீரமான பேச்சு, நடை எல்லாம் புடிச்சு அவ பின்னாடியே சுத்திச் சுத்தி லவ் பண்ணேன். ஆனா அப்புறம்தான் அவ படிப்பை விட்டுட்டு அவ அப்பாவோட கிரானைட் தொழிலை எடுத்து நடத்துறானு தெரிஞ்சது. முதல்ல என்னை வெறுத்தாலும் அடிக்கடி அவளைப் பார்த்துப் பேசிப் பேசி அவளை லவ் பண்ண வெச்சேன். எனக்காகவே தமிழ் கத்துகிட்டா. ஆனா, என் அக்காக்கு அவங்க பார்த்த பொண்ணை தான் நான் கட்டிக்கனும்னு ஆசை. அதனால என் லவ்வைச் சொன்னப்போ பெருசா சண்டையாச்சு. மாமா எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அக்கா ஒத்துக்கவே இல்லை. என்னைத் திட்டி அடிச்சு வீட்டைவிட்டுத் துரத்திட்டாங்க. அதனால நான் ஹைதராபாத் வந்து இங்கேயே வேலை செஞ்சேன். எனக்காக இவளும் அவங்க வீட்ல சண்டை போட்டு என்னைக் கல்யாணம் செஞ்சுகிட்டா. அப்புறம் அவளோட அப்பாக்கு ரொம்ப உடம்பு முடியலேனு, அப்போ அவ தம்பி சின்னப் பையன். அதனால எங்களைக் கடப்பாக்கு கூப்பிட்டு பொறுப்பெல்லாம் எங்ககிட்ட ஒப்படைச்சுட்டு அவரு இறந்துட்டாரு…

நான் வீட்டைவிட்டு வரும்போது உங்களுக்கு ரெண்டு வயசு… உங்களுக்குப் பேர் வெச்சதுகூட நான்தான்… அப்புறம் அக்காவைத் தேடி வந்தேன், எனக்குக் கல்யாணம் ஆகிடுச்சுனு சொல்ல. ஆனா, அவங்க வேற ஊருக்கு டிரான்ஸ்பர் ஆகிப் போயிட்டாங்க. எங்கே போனாங்கனு சொல்லக் கூடாதுனு சொல்லிட்டுப் போயிட்டாங்களாம்… அதுக்கு அப்புறம் நான் மனசு கேட்காம வருவேன். டெல்லி முழுக்கச் சுத்துவேன். ஆனாலும், உங்களப் பத்தி எந்தத் தகவலும் எனக்குக் கிடைக்கல, அதனால நான் அங்க வர்றதை நிறுத்திட்டேன்…

என்னைக்காவது என் அக்கா என்னை ஏத்துக்க மாட்டாளானு தான் தவிப்பேன்… இன்னைக்கு என் அக்கா பையனே எனக்கு மருமகனா வந்து இருக்காரு…” என்று கூறி முடிக்க,

“அம்மா லவ்க்கு அப்படி ஒண்ணும் எதிரி இல்லையே, அப்புறம் ஏன் அப்படி நடந்துகிட்டாங்க?” என்று இஷான் கேட்க,

“லவ்வுக்கு எதிரி இல்ல, அவ சொன்ன சொல்லுக்குக் கட்டுப் படாதவங்க தான் எதிரி… அவள் ஒருத்தர்கிட்ட வாக்குக் கொடுத்தா அதைக் காப்பாத்திடனும்னு துடிப்பா. இல்லனா உயிரே விட்டுடுவா… அன்னைக்கு நான் லவ் பண்றேன்னு சொல்லும்போது எங்க அக்காக்கு நெஞ்சுவலி வந்துடுச்சு, அப்போவும் நான் என் முடிவுல பிடிவாதமா நிக்கவும்தான் என் உறவே வேணாம்னு உறவை முறிச்சுத் துரத்திட்டாங்க… ஹாஸ்பிடல்ல கூட என்னைப் பார்க்க விரும்பலனு சொல்லிட்டாங்க. அதனாலதான் திரும்ப அவங்களத் தேடி நானும் போகலை… அம்மா மாதிரி வளர்த்த அக்காவோட உடம்பு சரியில்லாம போக நானே காரணம் ஆகிட்டேனேனு ஒரு குற்ற உணர்ச்சி இன்னும் என் மனசுல இருக்கு. அப்படியே..என்னைக்காவது என் அக்கா என்னை மன்னிச்சுட்டால் போதும் எனக்கு” என்று கூற இஷானுக்குத் தலையே சுற்றியது.

கிட்டத்தட்ட இருபத்தி மூன்று வருடங்கள் கழித்துத் தானும் தன் மாமன் செய்த செயலையே செய்து இருக்கிறேனே தன் தாயின் நிலை என்னவாகும்? உறவுகளையே அடியோடு வெறுத்து விடுவாரோ? இல்லை உயிரையே விட்டு விடுவாரோ? தாய்மாமன் உயிரோடு இருக்கிறார் என்று மகிழ்வதா? தன் சுயநலத்திற்காக அவரது மகளைத் திருமணம் செய்ததை எண்ணி வேதனை அடைவதா? இல்லை, நான் வாக்குக் கொடுத்து விட்டேன், நீ கல்யாணம் செய்துக்கற இல்ல நீ என்னை உயிரோடு பார்க்க முடியாது என்று கறாராகக் கூறிய தாயை எண்ணிக் கலங்குவதா? அத்தனையும் ஒன்று சேரத் தலையே வெடித்துவிடும் போல் ஆனது அவனுக்கு. அப்படியே தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான்.

அவன் அப்படி அமரவும் அவனது நண்பன் “இஷா” என்று ஓடிவர அனைவரும், “என்ன ஆச்சு?” என்று அவனிடம் ஓடி வந்தனர்.

சஹானாவோ கைகால்கள் நடுங்க அருகில் செல்லலாமா வேண்டாமா? என்று எண்ணி சற்றுப் பதட்டமாய் நிற்க அவளைப் பார்த்த அவளது தந்தை,

“சஹா, ஓடிப்போய் தண்ணி கொண்டு வா” என்று கூற அவளும் ஓடினாள்.

தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க அதை வாங்கிப் பருக வைத்தார் அவர். பருகியவன் சற்று தெம்பு வர, “ஐயம் ஓகே… ஐயம் ஆல்ரைட்” என்று கூறிவிட்டுச் சஹானாவின் தந்தையைப் பார்த்து,

“உங்க பேர் என்ன சார்?” என்று கேட்க,

“ஈஸ்வரன்… அதுகூடச் சொல்லலையா என் அக்கா?” என்று வருந்திக் கூற மேலும் அதிர்ந்தவனில் அருகில் இருந்தவன்,

“சுத்தம்டா… உன்பாடு இனி ரொம்பத் திண்டாட்டம் தான்” என்று அவன் காதில் அவனது நண்பன் கூற அவனுக்குப் புரையேறியது.

சட்டென ஈஸ்வரன் அவனது தலையில் லேசாகத் தட்டிவிட அவனுக்கு இருமல் கம்மியானது.

‘ஆண்டவா! நான் உனக்கு என்ன பாவம் பண்ணேன்? நல்லது யோசிச்சது ஒரு குத்தமா? எல்லாப் பக்கமும் தெளிய வெச்சுத் தெளிய வெச்சு அடிக்கிறியே?’ என்று தன்னையே நொந்தவன் எல்லோரும் தன்னையே பார்ப்பதை உணர்ந்து,

“இல்ல… உங்க பேரு எனக்குத் தெரியாது. இல்லாத ஒருத்தரப் பத்தி ஏன் தெரிஞ்சுக்கனும்னு அம்மா பேச மாட்டாங்க, உங்களப் பத்திக் கேட்டா… ஐயம் சோ சாரி சார்… அம்மா அப்படித்தான் சொன்னாங்க, அதான்” என்று கூற வருத்தமாய் புன்னகைத்தவர்,

அவனது தலையைத் தடவி, “அவளோட கோபம் நியாயம் தானேபா.. விடுங்க… அவகிட்ட நான் பேசி இருக்கனும். அவ வாக்கு கொடுக்குறதுக்கு முன்னமே நான் என் லவ் விஷயத்தைச் சொல்லி இருக்கனும்… சொல்லாம விட்டது என் அக்காவ அத்தனை பேர் முன்னாடி அவமானப் படுத்தியது நான்தானே… அப்போ தப்பு என்னோடது தானே” என, அவனுக்கும் அப்போது தான் உரைத்தது தன் தாயிடம் தன் திருமணத்தைப் பற்றிக் கூறவில்லை என்பது.

‘ஊருக்குப் போனதும் முதல் வேலையா அம்மாகிட்ட நேர்ல எடுத்துச் சொல்லி சமாதானம் பண்ணிடனும். ஃபோன்ல சொல்லப் போய் அம்மாவுக்கு ஏதாவது ஆகிட்டா… பக்கத்தில நானும் இல்ல, தம்பியும் இல்ல, தண்டபாணியும் இல்ல… அதனால நேர்ல சொல்றதுதான் சரி’ என்று தன்போக்கில் எண்ண அவனது சிந்தனையைக் கலைத்துப் பேசினார் ஈஸ்வரன்.

“முடிஞ்சு போன விஷயத்தைப் பேசி என்ன ஆகப் போகுது? இனி நடக்க வேண்டியதைப் பார்ப்போம்… சீக்கிரமே நீங்க பேரனோ, பேத்தியோ பெத்துக் கொடுத்துட்டா என் பேரப் பிள்ளையை வெச்சு நானும் எங்க அக்காகிட்ட சமாதானம் ஆகிடுவேன்” என்று விட்டு ஜக்கம்மாவிடம் திரும்பி,

“என்ன அம்மு, எதுவும் ஏற்பாடு பண்ணலையா?” என்று கேட்க அவரோ…

“பாவா, அதெல்லாம் யசோதா சம்பந்தி பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டாங்க… அவங்க நைட்டு சமைக்கிறேன்னு சொன்னாங்க, நான்தான் நீங்க வேணாம், வேற ஆள் போடுறேன்னு சொன்னேன். ஆனா அவங்க இவங்களும் என் புள்ளைங்கதான், இவங்கள கவனிச்சுக்கறது என் பொறுப்பு. அதனால நானே அவங்களுக்கு எல்லா வேலையும் செய்யுறேன்னு கேட்டாங்க… அவங்க இவங்க ரெண்டு பேர் மேல அவ்ளோ பாசமா இருக்குறது சந்தோஷமா இருக்கு. அதை எப்படி நான் வேணாம்னு சொல்ல? அதான் சரினு சொல்லிட்டேன்… இவங்களுக்கும் நம்ம வீட்டு ஆள் ஒருத்தர் கூட இருக்காங்கனு நிம்மதியா இருக்கும்ல” என்று கூற இஷானுக்கும் சஹானாவிற்கும் அடுத்த கட்ட அதிர்ச்சி.

2 thoughts on “என் சுவாசம் உன் வாசமாய் – 32”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *