Skip to content
Home » என் சுவாசம் உன் வாசமாய் – 33

என் சுவாசம் உன் வாசமாய் – 33

அத்தியாயம் – 33

‘சோதிக்காதீங்கடா என்னைய’ இதுதான் இருவரின் மைண்ட் வாய்ஸாக இருந்தது.

“அது வந்து… நான் என்ன சொல்றேன்னா?” என்று இஷான் ஆரம்பிக்க…

“நீங்க ஏற்கனவே ஒண்ணா தான வாழ்ந்துட்டு இருக்கீங்க… நாங்க என்ன புதுசாவா ஏற்பாடு பண்ணப் போறோம். ஏதோ எங்க மனசு திருப்திக்காக இதெல்லாம், தடுக்காதீங்க மாப்பிள்ளை” என்று ஈஸ்வரன் கேட்க,

திருதிருவென முழித்தனர் இருவரும். அதை வெட்கம் என்று தவறாகப் புரிந்து கொண்டவர்கள் சிரித்தபடி,

“இத்தனை நாள் எப்படி இருந்தீங்களோ எனக்குத் தெரியாது. கூடிய சீக்கிரமே எனக்கு பேரப்பிள்ளை வேணும்… அப்போதான் என் பாவா அவங்க அக்காவைப் பார்த்துப் பேச முடியும். அவர் அவங்களப் பார்க்காம, பேசாம எவ்வளவு வருத்தத்துல இருந்தாருனு எனக்கு தான் தெரியும்… பேரக்குழந்தை வந்துட்டா சம்பந்திங்கற முறையிலாச்சும் பேசுவாங்க… எங்க பொண்ணைப் புடிக்கலனாலும் பேரப்பிள்ளையை வெச்சு ஏத்துக்குவாங்க… அதனால சீக்கிரமே பிள்ளை பெத்துக் குடுக்குற வழியைப் பாருங்க” என்று அதிகாரமாய் முடித்தார் ஜக்கம்மா.

அவர் பேசியதில் ஈஸ்வரனுக்கும் ஜக்கம்மாவின் தம்பிக்கும் சிரிப்பு வரச் சஹானாவோ பலவிதமான உணர்வில் இருந்தாள். முதல் அதிர்ச்சி இஷான் முறைப்படி தன்னைத் திருமணம் செய்தது. அடுத்த அதிர்ச்சி அவன் தன் தந்தையின் சொந்த அத்தை மகன் என்பது. அடுத்து ஜக்கம்மாவின் வார்த்தைகள் என்று கலவையான யோசனையில் இருந்தவளுக்குத் தலையை வலித்தது.

 அதனால், அவள் அங்கிருந்த வேறு அறைக்குள் நுழைந்து கொள்ள அதையும் வெட்கம் என்று நினைத்தவர்கள், சிரித்துக் கொண்டே முதலிரவுக்கான ஏற்பாட்டைத் துவங்கினர் இஷானின் அறையில்.

என்ன சொல்லித் தடுப்பது என்று எண்ணியவனிடம் பேச வந்த அவனது நண்பனையும் பேச விடாமல் உதவி செய்யும்படி இழுத்துச் சென்று விட்டனர்.

‘போலீஸ்காரன்னு எவனாவது மதிக்கிறானா பாரு… இதுக்குத்தான் எவனுக்கும் ப்ரண்டா இருக்கவே கூடாது’ என்று புலம்பலாய் எண்ணியவன் அவர்கள் சொன்ன வேலைகளைச் செய்வதற்குச் சென்றான். மாலை நேரம் இருவரையும் குளித்து ரெடியாகச் சொன்னார்கள் ஜக்கம்மாவும் ஈஸ்வரனும்.

தன்னைப், பற்றி அவளிடம் சொல்லி விடவேண்டும் என்ற எண்ணத்தில் இஷானும் இன்று அவனிடம் பேசியே தீரவேண்டும் என்ற எண்ணத்தில் சஹானாவும் எதுவும் பேசாமல் குளித்து ரெடியாகினர். ஜக்கம்மா தன் மகளிடம் வந்தார். தலையைக் குளித்து யசோதாம்மா கொடுத்த புடவையை அணிந்து கொண்டு அமர்ந்திருந்தவளைத் தயாராக்கிக் கொண்டு இருந்தனர் யசோதாம்மாவும், அவரது மகளும். அவளைத் தயார் செய்துவிட்டுத் தன் மகளை வீட்டுக்குப் போகும்படி அனுப்பினார் யசோதா.

பின் மகளின் அருகில் வந்த ஜக்கம்மா அவளது தலையில் மல்லிகையைச் சூட அவர்கள் பேசட்டும் என்று அங்கிருந்து சென்றார் யசோதாம்மா.

“இங்க பாரு சஹா, இது நீயா தேடிக்கிட்ட வாழ்க்கை. நான் என் தம்பிக்கு நல்ல மனைவியா நீ இருப்பனு நினைச்சு தான் கல்யாணம் செய்ய நினைச்சேன்… அந்தக் கோபத்துல தான் கத்தினேன், வந்து சண்டை போட்டேன்… ஆனா, அது தப்புனு புரியவெச்சுட்ட. அதுவும் இல்லாம அவனுக்குப் புடிச்ச வாழ்க்கையை அமைச்சுக் கொடுக்கனும்னு முடிவும் பண்ணிட்டேன், அது அமையவும் போகுது…

அப்பவும் பெத்தவளா எனக்கு ஒரே ஒரு கவலைதான். நீயா தேடிக்கிட்ட வாழ்க்கை உனக்கு நல்ல விதமா அமையுமா? இல்லையானு தான்… எவனோ ஊர் பேர் தெரியாதவனைக் கட்டிகிட்டு வந்து நிக்குறாளேனு தான் என் கோபமே இருந்துச்சு…

ஆனா, உங்க அப்பா என்கிட்டப் பேசுனதுக்கு அப்புறம்தான் என் கோபம் கொஞ்சம் குறைஞ்சது. கட்டிகிட்ட பொண்டாட்டிக்குப் புருஷன் பார்த்துப் பார்த்துச் செய்யுறது எவ்வளவு பெரிய வரம் தெரியுமா? அதுவும் அவளோட குடும்பத்தைத் தன் குடும்பமா நினைச்சுத் தாங்குறது பெரிய விஷயம்…

கழுத்துல தாலி இல்லனு நான் சண்டை போட்டுக் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணும்போது கூட அவரு உனக்கு எங்களுக்குனு பார்த்துப் பார்த்துச் செஞ்சாரு எல்லாத்தையும்… உன்னை நாங்க கூட ஏதும் தப்பா நினைச்சுடக் கூடாதுனு அவரு பொண்டாட்டினு உரிமையா எல்லாம் செலவு செஞ்சாரு…” என்று நிறுத்த சஹானாவின் முகம் யோசனையில் இருந்தது.

அதைப் பார்த்துவிட்டு மேலும் தொடர்ந்தார்.

“அவரோட உரிமையை அவர் எங்கேயும் விட்டும் கொடுக்கலை, தட்டியும் பறிக்கலை… அவரோட பாசமான அணுகுமுறையில அதையெல்லாம் நல்ல விதமாவே மாத்திட்டாரு… அதுலயே எனக்கும் உங்க அப்பாக்கும் அவர்மேல நல்ல அபிப்பிராயம் வந்துடுச்சு. அதுவும் இல்லாம இப்போ அவரு உன் அத்தை பையன்னு தெரிஞ்ச அப்புறம் இன்னும் உங்க அப்பாவுக்குச் சந்தோஷம் தாங்க முடியல… எனக்குத் தெரியும், உங்க அப்பாவோட அக்கா பாசம். எனக்கு நல்லாவே தெரியும். அவங்கள அவர் தேடாத இடம் இல்ல. அவங்கமேல அவ்வளவு பாசம்… அந்த அக்காவோட பையனே மருமகனா வந்து இருக்காருனா அவருக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கும். ரொம்ப வருஷம் கழிச்சு அவரோட சந்தோஷத்தைப் பார்க்கிறேன்…

நானும் நீ பொண்ணாய் பொறந்தப்போ எப்படியாவது உங்க அத்த பசங்கள்ல ஒருத்தருக்கு உன்னைக் கட்டி வைக்கலாமானு யோசிச்சேன். ஆனா, அவங்கள மாதிரியே உங்க அத்தை உன்னையும் வெறுத்துட்டா, உங்க அப்பா பொண்ணு வாழ்க்கை போச்சேனு வருத்தப்படுவாருனு தான், நான் உங்க மாமனுக்குக் கட்டி வைக்கனும்னு முதல்லேயே அவருகிட்டச் சொல்லிட்டேன். ஆனா விதி, உங்களைதான் சேர்த்து இருக்கு… இதுல எனக்கும் சந்தோஷம்தான், ஆனா முழு சந்தோஷம் எப்போ தெரியுமா?” 

என்று நிறுத்தியவர் ஒரு பெருமூச்சை விட்டுக் குழம்பிய மகளின் முகத்தைக் கையில் தாங்கிப் பேசினார்.

“நீ சந்தோஷமா வாழ்ந்து ஒரு புள்ள பெத்து உங்க அத்தை உங்களையும் உங்க அப்பாவையும் ஏத்துக்கிட்டாதான் எனக்கும் சந்தோஷம், உங்க அப்பாக்கும் சந்தோஷம்… எல்லாருக்கும் சந்தோஷம்டாமா… எல்லாம் உன் கையில தான் இருக்கு. படிச்ச பொண்ணு, உனக்கு நான் சொல்ல வேண்டியது இல்ல… பார்த்து நடந்துக்கடாமா… ரொம்ப நேரமாப் பேசுறேன், நீ கிளம்பு. மாப்பிள்ளை காத்திட்டு இருப்பாரு” என்று கூறி அவளுக்குத் திருஷ்டி கழித்தவர் அவளை இஷானின் அறைக்கு அனுப்பினார்.

தன் தாய் தன்னிடம் இவ்வளவு சாந்தமாகப் பேசியதே இல்லை என்ற அதிர்ச்சியும், அவர் சொன்ன செய்திகளும் சேர அதிர்வின் உச்சியில் இருந்தவளுக்கு அறை வாசலில் அன்னை விட்டுவிட்டுக் கதவை வேறு தட்டி விட்டுச் செல்லும்போது பயமும் சேர்ந்து கொள்ள அங்கேயே விழுவது போல இருந்தது.

அப்போது கதவைத் திறந்த இஷானைப் பார்த்து மேலும் பயந்தவள் நடுங்கி விழப்போக, அவளது கையில் இருந்த பால் சொம்பும் சேர்த்து கீழே விழப் பார்க்க, ‘இவள் நாம பேச நினைச்சதைக் கெடுத்துடுவா போலவே’ என்று அவளை ஒரு கையிலும், சொம்பை இன்னொரு கையிலும் தாங்கியவன்,

“ஏன் சனா, நீங்க வேற அப்போ அப்போ விழுறீங்க? ஏற்கனவே நடந்துட்டு இருக்குறதெல்லாம் பத்தலயா?” என்று விட்ட பால் சொம்பைத் தன் கையில் வாங்கியவன் அவளையும் விடாமல் உள்ளே அழைத்துச் சென்றான். 

பால் சொம்பை அங்கிருந்த டேபிளில் வைத்தவன் கதவைத் தாழ்போட அவளுக்கு மேலும் நடுக்கம் வர ஆரம்பித்தது. அவளை யோசனையோடு பார்த்தவன் அப்போது தான் அவளது அலங்காரத்தைக் கவனித்தான்.

1 thought on “என் சுவாசம் உன் வாசமாய் – 33”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *