Skip to content
Home » என் சுவாசம் உன் வாசமாய் – 34

என் சுவாசம் உன் வாசமாய் – 34

அத்தியாயம்-34

அவளது நடுக்கம் எதனால் என்று யோசனையோடு அவளைப் பார்த்தவன் அப்போது தான் அவளது அலங்காரத்தைக் கவனித்தான். தன் கையணைப்பில் இருந்தபடியே அதிர்ச்சியில் விழிகள் விரிய, பார்த்துக் கொண்டு இருந்தவளின் அலங்காரம் ஏதோ செய்யச் சட்டென அவளை விட்டு நகர்ந்தான். அவன் விட்ட வேகத்தில் ஒரு சுற்றுச் சுற்றி கீழே விழப்போனவளை மீண்டும் தாங்கினான் அவன்.

எங்கே விழுந்து விடுவோமோ என்று எண்ணி விழப்போனவள் கண்களை இறுக மூடியபடி இருக்க, அவனால் அவளை விட்டு விலகவே முடியவில்லை.

மூடிய விழிகளும், அவளது நடுங்கும் தேகமும் அவனுள் ஏதோ மாற்றத்தை உருவாக்கிக் கொண்டே இருக்க… அவளிடம் பேச வேண்டும் என எண்ணி இருந்தது எல்லாம் மறந்து போக, அவளில் மயங்கிப் போனான். ஆனால், அவள் கண் விழித்ததும் அவனிடமிருந்து விலகப் பார்க்க, அந்தச் செயல் அவனை இயல்பு நிலைக்குத் திரும்ப வைத்தது.

அவள் விலக முயற்சிக்க அவளைத் தன்னிடமிருந்து விலக்கியவன், அவளை விட்டுத் தூரம் நின்றபடி,

“ஐயம் சாரி” என்றான்.

“ம்ம்” என்றவளுக்கு இதைத் தவிரப் பேசவேண்டும் என எண்ணியது எதுவும் வாயில் வார்த்தையாக வரவில்லை.

நீண்ட நேரம் கழித்துத் தன்னிலை பெற்ற இஷான், ‘என்னடா இது? நான் வேற ஒரு பொண்ண லவ் பண்ணி இருக்கேன். அவளைக் கிஸ் பண்ணி இருக்கேன். ஆனா அப்போலாம் இல்லாத ஒரு ஃபீலிங் இப்போ வருதே… அதுவும், பார்த்துக் கொஞ்ச நாளே ஆன பொண்ணு கிட்ட? அவ கழுத்துல தாலினு கட்டினதாலயா? இல்ல சொந்தத் தாய்மாமன் பொண்ணுனு உரிமையினாலயா? ஆனா லவ் பண்ண கயல்கிட்ட நான் இந்த மாதிரி ஃபீல் பண்ணினதே இல்லையே… இவகிட்ட மட்டும் ஏதோ ஃபீல் ஆகுதே, இது என்னவா இருக்கும்? அப்போ நான் கயலை லவ்வே பண்ணலையா?’ என்று எண்ணியபடி நின்றவன்,

இன்றே இவளிடம் பேசிட வேண்டும் என்று எண்ணியபடி முடிவெடுத்தவனாய் திரும்ப சஹானாவும் ஏதோ யோசனையில் இருந்ததைப் பார்த்தவன் தொண்டையைச் செருமினான்.

அதில் அவள் அதிர்ந்து திரும்ப,

“ஹேய்… வெயிட், வெயிட்… எதுக்கு இவ்ளோ டென்ஷன்… நான் தாலி கட்டிட்டேன்னோ இல்ல, நீங்க என் மாமா பொண்ணுனோ எந்த அன்வான்டேஜும் எடுத்துக்க மாட்டேன். எனக்கு உங்ககிட்டக் கொஞ்சம் பேசணும் சனா. சாரி சஹானா… உங்களுக்கு ஒரு உதவியா நான் தேவைப்பட்ட மாதிரி எனக்கு ஒரு உதவியா நீங்க தேவைப்பட்டீங்க… அதனாலதான், கல்யாணம் பண்ண ஒத்துக்கிட்டேன்… 

பட், நீங்க என் மாமா பொண்ணா ஆகிட்டதால உங்ககிட்ட நான் என்னைப்பத்திச் சொல்லியே ஆகணும். அதை சொல்லத்தான் வெயிட் பண்ணேன்… சொல்லிடுறேன்” என்று விட்டு ஒன்று விடாமல் எல்லாவற்றையும் சொல்லி முடித்தான். முதலில் அதிர்ந்தவள் அவன் சொல்லச் சொல்ல இவனுக்கு எவ்வளவு நல்ல மனசு என்று எண்ணியபடி அவனையே மெய் மறந்து பார்த்து நின்றாள். அவள் மனம் அவன்பால் சாய ஆரம்பித்தது மெல்ல…

எல்லாவற்றையும் கூறியவன் சிறு தயக்கத்துடன் அவளைப் பார்க்க அவளோ அவனை ஆவெனப் பார்க்க, அவனுக்கோ அந்தோ பரிதாபம். பேச எடுத்த முயற்சி அனைத்தும் வீண் என்பது போலானது.

‘என்ன இவ இப்படிப் பார்க்கிறா? நாம சொன்னது ஏதாவது இவ மண்டையில ஏறி இருக்குமா?’ என்று எண்ணியவன் அவளைப் பிடித்து மெல்ல உலுக்கினான்.

அதில் சுயம் அடைந்தவள்,

“சா..சாரி… அது..வந்து” என்று இழுக்க,

“என்னங்க, நான் எவ்ளோ முக்கியமான விசயம் சொல்றேன். உங்களுக்கு ஏதாவது புரிஞ்சுதா?” என்று கேட்க,

புரிஞ்சது என்னும் விதமாக அவள் தலையை ஆட்ட சற்று தயங்கியவன்,

“என்னைத் தப்பா எதுவும் எடுத்துக்கலயே? நா..நானும், ஒரு தேவைக்காகதான் இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன்… ஆ..ஆனா, நீங்க என் தா..தாய்மாமா பொண்ணுனு சத்தியமா எனக்குத் தெரியாது. தெரிஞ்சிருந்தா, இந்தக் கல்யாணம் வேணாம்னு சொல்லி இருப்பேன்” என்று கூற அவள் அதிர்ந்து பார்த்தாள்.

“ஏ..ஏன்?” என்று அவள் கேட்க,

“அது… இப்படி ஒரு மாமா உயிரோட இருக்குறதையே எங்கம்மா சொல்லாம விட்டு இருக்காங்கனா, எவ்வளவு வெறுப்பு இருந்து இருக்கும் அவர்மேல. இப்போ அவரோட பொண்ணையே கல்யாணம் பண்ணேன்னா எங்க அம்மா உங்களையும், என்னையும் சேர்த்து வெறுத்துடுவாங்க.., ஆனா, இதை இப்போ எப்படிச் சமாளிக்கப் போறேன்னு எனக்குத் தெரியலை…” என்று அவன் கூற அவளுக்கும் கவலையானது. ஆனால், அதை வேறுவிதமாகப் புரிந்து கொண்டவன்,

“அதுக்காக உங்க அப்பா சொன்ன மாதிரிலாம் நான் எதுவும் செஞ்சு உங்களைக் கஷ்டப்படுத்த மாட்டேன், கவலைப்படாதீங்க… நீங்க உங்க கேரியர்ல சாதிக்கக் கல்யாணம் தடையா வந்துடக் கூடாதுனு தானே இப்படி ஒரு பொய் சொல்லி, அது நம்மள டிராமாவா கல்யாணம் செய்ய வெச்சது… அதனால, உங்களைக் கஷ்டப்படுத்த மாட்டேன். ஆனா, என்னைக்காவது ஒரு நாள், எங்க அம்மாகிட்ட எனக்குக் கல்யாணம் ஆகிடுச்சு, இவதான் என் பொண்டாட்டினு ஃபோட்டோ காட்டினா நம்ப மாட்டாங்க. அப்போ மட்டும் நீங்க நேர்ல வந்து சொல்ல வேண்டி வரும்… ப்ளீஸ், வருவீங்க தானே?” என்று அவன் அவள் கண் பார்த்துக் கேட்க…

அவனையே பார்த்த அவள் கண்கள் கலங்கிப் போனது.

அவனைப் பொறுத்தவரை அது நாடகக் கல்யாணம். ஆனால், அவளுக்கு அப்படித் தோன்றவே இல்லையே… அப்படித் தோன்றும்படி அவன் நடந்து கொள்ளவே இல்லையே…

பார்த்துப் பார்த்து எல்லாம் செய்தவன், அவள் கண்ணோடு கண் பேசிக் காதலை விதைத்தவன், தற்போது தன் அத்தை மகன்… இப்போது இது எதுவுமே இல்லையெனச் சொன்னால் பேதை மனம் ஏற்க மறுக்கிறதே…

தன் மனம் அவன் தாலி கட்டிய நொடிக்கு முன்னிருந்தே அவன் பக்கம் சாய ஆரம்பித்து விட்டதே… இதை அவனிடமிருந்து எப்படி மறைப்பாள்.

அதிலும், அவன் அத்தை மகன் என்று தெரிய வந்த பிறகும், இப்போது அவனது காதல் கதையைக் கேட்ட பிறகும் மேலும் மேலும் அவன்பால் மனம் செல்வதை எப்படித் தடுப்பாள்? எங்கேயாவது ஓடிவிடுவோமா? என்றே யோசிக்க ஆரம்பித்து விட்டாள். 

அவள் வேறு ஏதோ யோசனையில் இருப்பதைப் பார்த்தவன், அவள் தோளைப் பிடித்துக் குலுக்க,

“ஹான்” என்று சுயம் அடைந்தவள்,

“எ..என்ன சொன்னீங்க?” என்று கேட்டவளின் அறியாப்பிள்ளை முகமும், அவளின் துறுதுறு கண்களும் அவனை அவன் வசம் இழக்க வைத்தது. தலையைக் குனிந்து தன்னைச் சமன் செய்தவன்,

‘இதுக்கு நான் இவகிட்டப் பேசாமலே இருந்து இருக்கலாம்… நான் வேற ஒரு பொண்ண லவ் பண்ணவன்னு சொன்னா, எவனாவது நம்புவானா? இவகிட்ட அடிக்கடி மனசு தடுமாறுதே? இனி இவ பக்கமே வரக்கூடாது’ என்று எண்ணியவன்,

“அ..அது ஒண்ணுமில்ல… நீ..நீங்க தூங்குங்க, நான் அந்தச் சோபால படுத்துக்குறேன்” என்றுவிட்டு அங்கிருந்த சோஃபாவில் படுத்துக் கொண்டான்.

‘ஆளாளுக்கு என் வாழ்க்கையைப் பந்தாடுறாங்களே? எனக்குனு ஒரு வாழ்க்கையை நான் வாழவே முடியாதா?’ என்று எண்ணியபடி பெருமூச்சை விட்டவள் கட்டிலில் படுத்து அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.

‘இவரை நான் ஏன் பார்த்தேன்? இவர்கிட்ட மட்டும் ஏன் என் மனசு தடுமாறுது? இவருதான் அத்தை பையன்னு தெரியும் முன்னமே என் மனசு இவரையே சுத்திச் சுத்தி வந்துச்சே… அது எதனால? இப்போ இப்படி ஒரு லவ் ஸ்டோரி சொல்லி என்னை இவர் பக்கம் ரொம்ப இழுத்துட்டாரே… இவர் இன்னும் ஹெல்ப்பா தான் கல்யாணம் பண்ணேன்னு சொல்லிட்டு இருக்காரு… அப்படினா அவர் மனசுல அந்தப் பொண்ணு தான் இருக்கா? அப்போ நான் இல்லையா?” என்று யோசித்து யோசித்துக் கவலையானாள்.

அங்கு சோபாவில் படுத்தவனுக்கும் அதே நினைவுதான்.

‘இவள ஏன் நான் பார்த்தேன்… பார்த்து ஆறு மாசமே ஆன பொண்ணு கழுத்துல தாலி கட்டுற அளவுக்குப் போயிட்டேனே… அப்படினா, நான் கயல லவ் பண்ணதுலாம் லவ்வே இல்லையா? கயல்கிட்ட நமக்குனு எந்த ஈர்ப்பும் இல்லையா? அவளுக்கு ஒண்ணுனா ஏன் என்னால இந்தர் மாதிரி துடிக்க முடியல… அவளை இந்தர் காதலிச்சான்னு நானே அவளை விட்டுக் கொடுத்துட்டதாலயா? ஆனா இவகிட்ட ஏதோ ஒண்ணு என்னை ஈர்த்துக்கிட்டே இருக்கே… மனைவினு நானே உரிமையா எடுத்துக்கிறேனா? இல்ல, இவதான் கடவுள் எனக்குனு கொடுத்தவளா?’ என்று எதை எதையோ யோசித்தபடி திரும்பிப் படுக்க அவனிடம் அசைவை உணர்ந்தவள், கண்ணை கெட்டியாக மூடிக் கொண்டாள் தூங்குவது போல.

அவளது அமைதியான முகம் அவனது அமைதியை மொத்தமாய் குலைத்தது.

‘இவகிட்ட ஏதோ ஒண்ணு இருக்கு. அதுதான் இவகிட்ட நம்மள இழுத்துட்டுப் போகுது… இவளோட தான் என் வாழ்க்கைனா, வாழ்ந்து பார்த்தா தான் என்ன? எங்களுக்குப் பொறக்குற குழந்தை யாரை மாதிரி இருக்கும்?’ என்று எண்ணியவனுக்குத் திக்கென்று ஆனது.

‘என்னடா இஷா, குழந்தை வரைக்கும் போயிட்ட’ என்று அவன் மனசாட்சி கேள்வி கேட்க, 

‘ஏன் பொறந்தா என்ன? என் பொண்டாட்டியோட தானே நினைக்கிறேன். அடுத்தவன் பொண்டாட்டியவா நினைக்கிறேன்? அதுவும் இல்லாம, அவ என் மாமன் மகள்… அவகிட்ட எனக்கு இல்லாத உரிமை வேற எவனுக்கு இருக்கு? அவளுக்கு உரிமையான மாமனும் நானே, அவளுக்கு உரிமையான புருஷனும் நானே’ என்று தன் மனசாட்சியோடு சண்டை போட்டவன் அவளைப் பார்த்தபடியே தூங்கிப் போனான். அவன் பார்க்கிறான் என்று கண்ணை மூடியவள் காலையிலிருந்து பட்ட அலைச்சலில் அப்போதே உறங்கி விட்டாள்.

அப்படியே அந்த நாள் விடிய முதலில் எழுந்த இஷான், அவளைப் பார்க்க அவள் இன்னும் உறங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தவன், சத்தமில்லாமல் எழுந்து தன் வேலைகளை முடித்துக் குளிக்கச் சென்றான். குளித்து முடித்து வெளியே வர அப்போது யாரோ கதவு தட்டும் சத்தம் கேட்டு அடித்துப் பிடித்து எழுந்தவள்,

“ஐயோ, இவ்ளோ நேரம் தூங்கிட்டோமா? யாரது? வர்றேன்” என்று பேசிக் கொண்டே எழுந்து சென்று கதவைத் திறக்கப் போக, 

“ஹேய்ய்…” என்றபடி அவளது கையைப் பிடித்து இழுக்க, அவன் இழுத்த வேகத்தில் அவன் மேல் விழப்போக, அவளை இருபக்கமும் அணைவாய் பிடித்தவன், அப்படியே சுவற்றில் சாய்த்து நிறுத்த… வேகமாய் எங்கோ சுழன்று விழுந்தோம் என எண்ணியவள் உடல் பயத்தில் நடுங்க, தூக்கக் கலக்கம் எல்லாம் எங்கோ பறந்து போக, அவனை ஆவெனப் பார்த்தபடி நின்றாள்.

தூங்கி எழுந்த முகமும், கலைந்த கூந்தலும், சிறு குழந்தை போல் ஜொள் விட்டுத் தூங்கியதில் வாயின் ஓரம் அதன் ஈரம் காய்ந்த கறையும், வெள்ளைக் கோடாய் இருக்க பார்க்கப் பார்க்க அவ்வளவு அழகாய் இருந்தாள்.

அதில் அப்படியே அவன் மயங்கி நிற்க, குளித்து முடித்து டவலோடு வந்தவனின் வெற்று மார்பில் கைவைத்து நின்றிருந்தவளுக்கு, இனம் புரியாத உணர்வு எழ அவளோ இமைக்கவும் மறந்து அவனில் மயங்கி நின்றாள்.

அவளை அப்படிக் கண்ட நொடி, தன்வசம் இழந்தவன் நிலைமை மோசமாய் ஆனது.

அவளும் தன்வசம் இல்லாது அசையாது அவனைப் பார்க்கக் குனிந்து அவளை முத்தமிடச் செல்ல… அதனைப் பார்த்து அவளது கண்கள் ரெண்டையும் மூடிக்கொண்டு, அவனது வெற்று மார்பில் கைவத்தாள். அது மேலும் அவனது உணர்வைத் தூண்ட அவளது கண்களின் இமைகளின் மேல் முதல் முத்தத்தைப் பதித்தான்.

அதில் அதிர்ந்து அவள் கண்களைத் திறக்க அவளது முகத்தைக் கையில் ஏந்தியவனுக்கு, அவளது நடுக்கம் புரிந்தாலும் அவளை நோக்கி ஈர்க்கும் உணர்வு புரியாமல் தடுமாறினான். அடுத்து அவளது கன்னத்தில் முத்தமிட அவனது மார்பில் வைத்திருக்கும் கை நகர்ந்து அவனை அணைத்தது. அதில் மேலும் முன்னேறி அவளது இதழை நோக்கிக் குனிய மீண்டும் கதவு தட்டும் சத்தம்… அப்போது தான் தன்னுணர்வு வந்தது. சட்டென இருவரும் விலக,

“ஐ..ஐயம் சாரி… நா..நான் ஏதோ நியாபகத்துல…” என்றவனுக்கு அதற்குமேல் பேச வரவில்லை. அவளுக்கும் தன் உணர்வுகளில் இருந்து வெளியே வர சில நிமிடங்கள் ஆனது.

“உங்க மேல த..தப்பு இல்ல. நா..நானும் தானே அப்படி இருந்தேன். ஹஸ்பண்ட் அண்ட் ஒயிஃப்க்குள்ள இது சகஜம்தானே… நா..நான் வெளியே போறேன்” என்றவளை மீண்டும் கையைப் பிடித்துத் தடுத்தான்.

அவள் என்ன என்று பார்க்க, “இப்படியே போகாதே சனா…” என்றபடி அவளைப் பார்க்க எப்படி என்றபடி தன்னைப் பார்த்தவள், அப்போது தான் அவன் சொல்ல வருவது புரிந்து, தன் உடையை லேசாகக் கலைத்துவிட்டுக் கதவைத் திறக்க, அங்கே அவளின் தாய் ஜக்கம்மா நின்றிருந்தார்.

அவளது கோலத்தைப் பார்த்தவருக்கு மனம் திருப்தியாக, “நீ உன் துணியெல்லாம் அந்த ரூம்லயே விட்டுட்ட சஹா… அதான், எடுத்து வந்தேன். இங்கேயே குளிச்சுட்டு ரெடியாகி வா… அங்க அப்பா, மாமாலாம் இருக்காங்க” என்றவர் வேறு ஏதும் பேசாமல் அவளிடம் கொடுத்து விட்டுப் போய்விடத் திருதிருவென முழித்தாள் சனா.

2 thoughts on “என் சுவாசம் உன் வாசமாய் – 34”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *