Skip to content
Home » என் சுவாசம் உன் வாசமாய் – 35

என் சுவாசம் உன் வாசமாய் – 35

அத்தியாயம் – 35

அவளது திருட்டு முழியைப் பார்த்தவனுக்கு பக்கெனச் சிரிப்பு வந்துவிட்டது. அதைப் பார்த்தவள் அவனை முறைக்கத் தன் வாயில் கையை வைத்து மூடியவன்,

“நீ குளிச்சிட்டு சொல்லு சனா. நா..நான் வெளியே வெயிட் பண்றேன்” என்று கூறி அவன் வெளியே போகப் பார்க்க அவசரமாய் அவனைத் தடுத்தாள்.

‘என்ன?’ என்பதுபோல் அவன் பார்க்க…

“எ..எல்லாரும் நம்மளைதான் கவனிச்சுட்டு இருப்பாங்க… நீங்க வெளியே போனா… ந..நமக்குள்ள” என்று நிறுத்தியவள் முகம் சிவக்க, அதை ரசித்தவன்,

“நா..நான் இங்கேயே இருக்கவும் முடியாதே?” என்று கேட்க,

“பரவாயில்லை… நான் பாத்ரூம்லயே டிரஸ் சேன்ஜ் பண்ணிக்கிறேன், நீங்க இங்கேயே இருங்க” என்றுவிட்டு அவசரமாக ஓடினாள் குளிக்க.

குளித்து முடித்து அங்கேயே உடை மாற்றி வர அதுவரை வெயிட் செய்தவன் அப்படியே சாய்ந்து உறங்கி விட்டான். வெளியே வந்தவள் அவன் உறங்குவதைப் பார்த்து அவனது அருகில் வந்தவள் இவன் என் கணவன் என்னும் உரிமையில் அவன் உச்சியில் இதழ் பதித்தாள்.

‘தன் அருகே சோப்பின் வாசம் வர விழித்தவன் அவள் எந்நிலையில் இருக்கிறாளோ, குரல் கொடுக்கட்டும் கண் விழிப்போம்’ என நினைத்தவனுக்கு நெற்றியில் அவள் முத்தம் அவனுக்குள் ஏதேதோ பரிமாற்றம் புரிந்தது.

விழிமூடி அதை அனுபவித்தவனுக்கு அப்போது தான் உரைத்தது, அவளுக்கும் தன்னைப் பிடித்து இருக்கிறது என்று.

ஆனால், அவன் கண்ணைத் திறக்கவே இல்லை என்பதைப் பார்த்தவள்,

‘அச்சோ சனா, என்ன பண்ற?’ என்றுவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டாள்.

அவள் சென்றதும் கண் திறந்தவன் லேசாகச் சிரித்துக் கொண்டே எழுந்து குளியலறைக்குச் சென்றான்.

வெளியே சென்ற சஹானாவைப் பார்த்த பெரியவர்கள் அவள் முகத்தில் இருந்த வெட்கத்தில், அவர்கள் எதுவும் பேசாமல் கணவன் மனைவி இருவருக்கும் டீயைக் கொடுக்க,

‘மறுபடியும் அவர்கிட்டப் போகணுமா?’ என்று யோசிக்க,

“கொண்டு போ சஹா…” என்று ஜக்கம்மா கூற அவரது கட்டளையான குரலில் பயந்தவள், அதை வாங்கிக் கொண்டு சென்றாள்.

உள்ளே சென்றவள் பார்த்தது குளித்து முடித்து வேஷ்டியுடன் பனியன் அணிந்து நின்றவனை தான். ஆவென அவள் பார்க்க அவள் அருகே வந்தவன், “தூங்கும்போது தான் எல்லாம் போல?” என்று கேட்க அவளோ புரியாமல் முழிக்க,

“இல்ல… தூங்கிட்டேனே, எழுப்பிட்டுப் போய் இருக்கலாம்லனு கேட்டேன்” என்று கூற,

“அது நீங்க ந..நல்லாத் தூங்கிட்டு இருந்தீங்க” என்று கூறும்போதே அவளுக்கு வெட்கம் வந்துவிட அவளது வெட்கத்தை ரசித்தவன் தனக்கான டீயை எடுத்துக்கொண்டு அமர, அவளும் அவனுக்கு முகத்தைக் காட்டாமல் அமர்ந்தாள். ஆனால், அவன் தன்னையே பார்ப்பதை அவள் உணர்ந்து தான் இருந்தாள்.

ஆனாலும், எதையும் பேசவில்லை. டீயைக் குடித்ததும் அவள் கப்பை வாங்கக் கை நீட்ட அவளிடமிருந்த தட்டைத் தானே வாங்கி இரண்டு கப்புகளையும் அதில் வைத்தவன் தானே எடுத்துக் கொண்டு, “போலாமா?” என்று கேட்க,

“கொடுங்க, நான் எடுத்துக்குறேன்” என்று கூற மறுத்தவன் தானே எடுத்துக்கொண்டு அவளையும் அழைத்துக் கொண்டு வெளியே வர அவர்களைதான் அனைவரும் பார்த்துக் கொண்டு இருக்க ஜக்கம்மாவோ,

“என்ன சஹா இது? அவருகிட்ட தட்டைக் கொடுத்துட்டு வர்ற?” என்று கோபமாய் கேட்க, அவளுக்குப் பயத்தில் பேச்சே வரவில்லை. அவளது கையைப் பிடித்து அழுத்தியவன்,

“ஏன் அத்த? நான் எடுத்துட்டு வரக்கூடாதா? என்னைப் பொறுத்த வரைக்கும் ரெண்டு பேரும் ஈக்குவல்தான். அதனால எங்க வேலையை நாங்களே பிரிச்சு செஞ்சுப்போம்” என்று கூற அவனது பதிலில் ஜக்கம்மா லேசாகக் குழம்பிப்போக, ஈஸ்வரனோ மனைவியைப் பார்த்துச் சிரித்து விட்டார்.

அதைப் பார்த்து ஜக்கம்மா முறைக்க, “அவரு பொண்டாட்டிய அவரு வேலை வாங்குவாரு, இல்லனா அவரே பொண்டாட்டிக்காக வேலை செய்வாரு. நமக்கு எதுக்குமா அதெல்லாம்” என்று கேட்க,

“என்னமோ போங்க?” என்றுவிட்டு அவர் உள்ளே சென்று விட்டார்.

“இதுக்குத்தான், அப்போவே நானே எடுத்துக்கிறேன்னு சொன்னேன்” என்றுவிட்டு வேகமாய் அவன் கையில் இருந்த தட்டைப் பிடுங்கியவள் கோபமாக தாய் பின்னே செல்லப் போக,

“மெல்ல மெல்ல…” என்று கூறிச் சிரித்தான். அவனது பேச்சில் ஈஸ்வரனுக்கும் சிரிப்பு வந்துவிட, மகளது கோபமும் ஆச்சரியமாய் இருந்தது.

அவரது அருகில் வந்து இஷான் அமர…

“முதல் தடவையா என் பொண்ணு கோபப்பட்டு பார்க்கிறேன்” என்று அவனிடம் கூற…

“என்கிட்ட மட்டுமே” என்றுவிட்டு அவனும் சிரிக்க, அவரும் புன்னகைத்து ஆமெனத் தலையாட்டியவர் வேறு விஷயங்களைப் பேச அன்றைய பொழுது அப்படியே சென்றது.

இப்படியே ஒரு மாதம் சென்றது.

இருவரின் பார்வையும் ஒருவர்மேல் ஒருவர் உரிமையாய் பதிய ஆரம்பித்து இருந்தது. தனது வேலையும் இன்னும் ஓரிரு மாதத்தில் முடியும் தருவாயில் இருந்தது இஷானுக்கு. இடையில் தண்டபாணியும் ஒருமுறை ஃபோன் செய்ய, அவனிடம் நடந்த அனைத்தையும் சொன்னவனுக்கு அவனும் ஆறுதல் கூறினான்.

“நீ ஏற்கனவே எடுத்த முடிவு தானேடா… எதுவும் காரணம் இல்லாம நடக்காது. உனக்கான பொண்ணு அவதான்னு ஆண்டவன் முடிவு பண்ணிட்டான், அதுதான் உன் வாழ்க்கை. அதை நல்லபடியா வாழு… நீ வாழுறதைப் பார்த்தாலே கயல் நல்லா வாழ ஆரம்பிச்சிடுவா” என்றுவிட்டு வைத்தான். இப்போது அவனது யோசனை சஹானாவை இப்படியே எப்படி விட்டுச் செல்வது என்பதே… அடுத்த முகூர்த்தத்தில் ஜக்கம்மாவின் தம்பி திருமணம் இருப்பதால் இருவரும் ஊருக்குப் புறப்பட்டனர்.

இப்போது இருவரும் சற்று நெருக்கமாகப் பழக ஆரம்பித்து இருந்தனர். ஒருவர் மீது ஒருவருக்கு இருக்கும் ஈர்ப்பை உணர்ந்து நெருங்க ஆரம்பித்து இருந்தனர்.

கடப்பாவிற்கு முதல் முறையாக இருவரும் செல்வதால் இருவரையும் அழைத்துவரக் கார் அனுப்பி இருந்தார் ஜக்கம்மா.

இருவர் பக்கமும் தனக்கு நெருக்கமானவர்கள் என்பதால் கூட இருந்து எல்லா வேலையையும் கணவனும் மனைவியும் செய்தனர். திருமணத்தில் சஹானா அழகாக வலம்வர அவளைப் பார்த்துத் தன்னைக் கட்டுப்படுத்த ரொம்பவே திணறினான் இஷான்.

திருமணம் நிறைவாக முடிய யசோதாம்மாவின் மகனாக நின்று அவரது மகளுக்கு அவர் மறுக்க மறுக்க அனைத்துச் சீரும் சிறப்பாகச் செய்தான் இஷான். 

அன்று மாலை இருவரும் வெளியே சென்று வரும்போது இரவு தாபா ஒன்றில் உண்ண, ஏதோ வேறு உலகில் இருப்பது போல உணர்ந்தனர் இருவரும்.

வீட்டுக்கு வரும் வழியில் வண்டி பஞ்சர் ஆகிவிட பத்து நிமிடம் தான் வீட்டை அடைய என்று வண்டியை அங்கேயே நிறுத்திவிட்டு நடந்து வந்தனர்.

ஊரே உறங்கி இருந்தது அந்த நள்ளிரவில்…

பாதி தூரம் நடந்து இருப்பர், சட்டென மழை. தூரலும் இல்லாமல் வேகமாகப் பொழிய அவனது கையைப் பிடித்தவள் வீட்டிற்கு இழுத்துக் கொண்டு ஓட அவனும் அவளது இழுப்புக்குக் கட்டுப்பட்டு ஓடினான்.

ஆனாலும் வீட்டுக்கு வரும்முன் இருவரும் நனைந்து விட்டிருந்தனர்.

திருமணக் களைப்பில் அனைவரும் உறங்கிக் கொண்டு இருக்க அவனை அமைதியாக அழைத்துக் கொண்டு தன் அறைக்குச் சென்றாள். அதுவரை ஏதோ மந்திரத்திற்கு கட்டுப்பட்டவன் போல வந்தவனை அப்போது தான் நிமிர்ந்து பார்த்தாள். அப்போது தான் அவனைக் கைப்பற்றி இழுத்து வந்தது நியாபகம் வர பட்டென அவன் கையை விட்டாள்.

மழையில் இருவருமே நனைந்திருக்க, இருவரது உடையும் மொத்தமாய் நனைந்து உடலோடு ஒட்டி இருக்க, அவளைப் பார்த்தவன் பார்வை வேறு விதமாய் மாற அவளுக்கோ நாணம் வந்துவிட, அங்கிருந்து நகரப்போக அவளது கரம் பற்றி நிறுத்தினான் அவளை. இதயம் படபடக்க அவன்புறம் திரும்பாமல் அவள் நிற்க அவளைத் தன்னை நோக்கி இழுத்தான் இஷான்.

அதில் அவன்மேல் வந்து விழ, அவளது இடையில் அழுத்தமாய் கைவைத்துத் தன்னோடு அணைத்தவனுக்கு உலகமே மறந்து போக, அவளுக்கும் புது உணர்வுகளின் பிடியில் அனைத்தும் மறந்து அவனுடன் நின்றாள்.

அவள் முகம் நிமிர்த்தி நெற்றியில் முத்தமிட மழைநீரோடு இருந்தவள் முகம் அவன் மோகத்தைக் கூட்ட, அவளைத் தன்னைக் காணச் செய்யும் நோக்கில் அவளது இமைமேல் முத்தமிட, கண்ணைத் திறந்து பார்த்தவளின் விழிகளில் இருந்த மயக்கம், அவனை மேலும் முன்னேற வைக்கப் பட்டென அவளது இதழில் முத்தம் வைத்து அவளை ஆட்கொள்ள, அவனோடு இழைந்து இசைந்து நின்றாள் அவனது சனா…

அந்நேரம் இருவரும் ஒருவரையொருவர் அதிகமாகவே தேடினர்.

கூடல் முடிந்து அவளைத் தன் நெஞ்சில் தாங்கியவன் அவளது தலையைக் கோதியபடி, “சனா” என்று அழைக்க,

“ம்ம்” என்றாள் அவள்.

“உனக்கு ஏதும் சங்கடம் இல்லையே?” என்று கேட்க அவன் கேட்க வருவதைப் புரிந்தவள் நிமிர்ந்து அவன் முகம் பார்க்க அவனும் அவளைத்தான் பார்த்தான்.

“இந்த ஜென்மத்தில எனக்கு நீங்க மட்டும் தான், அதனால எனக்கு எதுவும் இல்ல… நீங்க ஃபீல் பண்ணுறீங்களா?” என்று அவள் கேட்க, சிரித்தபடி அவளது நெற்றியில் முத்தமிட்டவன்,

“உன் சம்மதம் கேட்கலையே, அதான் கேட்டேன்” என்று கூற,

“எப்பவோ சம்மதம் சொல்லியாச்சு” என்றுவிட்டு அவன் நெஞ்சில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டாள். சிரிப்புடன் அவளை அணைத்தவன் மீண்டும் அவளுடன் தன்னை இணைத்துக் கொண்டான்.

வாழ்வில் எல்லாருக்குமே காதல் வரும். ஆனால் எல்லா காதலும் கைகூடுவது இல்லை. நூறு பேர் லவ் பண்ணினால் அதுல நாற்பத்தொன்பது சதவிகிதம் தான் லவ் மேரேஜ், மீதி ஐம்பத்து ஓரு சதவிகிதம் அரேன்ஜ் மேரேஜ் தான் நடக்குது…

இதுதான் நிதர்சனம், இதுதான் எதார்த்தம்னு புரிஞ்சுதான் எல்லாரும் தன் காதலை மறந்து தன்னை நம்பி வந்தவளோடு வாழ்க்கையைப் பகிர்ந்து வாழ்கின்றனர். 

2 thoughts on “என் சுவாசம் உன் வாசமாய் – 35”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *