Skip to content
Home » என் சுவாசம் உன் வாசமாய் -36

என் சுவாசம் உன் வாசமாய் -36

அத்தியாயம் -36

இவர்களின் வாழ்க்கை சில பல மோதல்களுடன் சந்தோஷமாகவே சென்றது.

இந்தரும் தன் டிரெயினிங் முடித்து தனது ஏரியாவிற்கே பதவி ஏற்று வருவதாக இருந்தது. அவன் பதவி ஏற்க வரும்போது அவனிடம் தனது திருமண விஷயத்தை நேரில்தான் சொல்ல வேண்டும் என்று மறைத்திருந்தான் இஷான்.

ஆனால், அவன் வருவதற்கு இரண்டு நாட்கள் முன்பு அவன் தாயிடமிருந்து உடனடியாகக் கிளம்பி வரச்சொல்லி ஃபோன் வந்தது.

எப்படியும் தாயிடம் திருமணம் ஆனதைச் சொல்லி விடவேண்டும் என்று எண்ணியவன், தாய் வரச் சொல்லியதும் சஹானாவையும் உடன் அழைத்துக் கொண்டு செல்ல முடிவெடுத்து அவளிடம் கூறினான். அதற்கு அவளோ மறுத்தாள்.

“வேணாம். நீங்க போய் முதல்ல அவங்ககிட்ட எடுத்துச் சொல்லுங்க. அவங்க கோபத்தைத் தாங்குற அளவுக்கு எனக்குத் தெம்பு இல்ல… அதனால, முதல்ல அவங்ககிட்டச் சொல்லி சமாதானம் செய்யுங்க. அவங்க சம்மதத்தோட வந்து என்னைக் கூட்டிட்டுப் போங்க” என்று பயந்தபடி கூற…

“சனா… நம்ம கல்யாண விஷயத்தை நான் சொல்லும்போது என்கூட நீ இருக்குறது தான் நல்லதுனு நினைக்கிறேன். அதும் இல்லாம, அவங்களுக்கு உங்க அப்பாமேல இருக்குற கோபம் உன்னைப் பார்த்துக் குறையலாம்ல… ப்ளீஸ், என்கூட வா சனா” என்று கெஞ்சி அவளைக் கூடவே அழைத்துச் சென்றான்.

ஆனால், வீட்டுக்கு மகன் யாரோ ஒரு பெண்ணுடன் வருகிறான் என்பதைக் கேள்விப்பட்ட மீரா கொதித்துப் போனார்.

விஷயம் சரண்யாவின் வீட்டுக்கும் தெரிய அவர்களும் உடனடியாகக் கிளம்பி வந்து விட்டனர். வந்ததும் சரண்யாவின் தந்தை,

“இதுதான் நீங்க கொடுத்த வார்த்தையைக் காப்பாத்துற லட்சணமோ? என் பொண்ணுதான் உங்க மூத்த மருமகள்னு ஊர் பூரா சொல்லிட்டு இப்போ எவளோ ஒருத்தியக் கூட்டிட்டு வர்றான். அவங்கள வரவேற்கத் தடபுடலா ரெடியாகிட்டீங்களோ? இதுதான் உங்க புள்ளை உங்க பேச்சைக் கேட்கிற லட்சணமா? இவ்ளோதான் உங்க வளர்ப்பா? இதெல்லாம் ஒரு பொழப்பா?” என்று கேள்வி கேட்டு அவரைக் கேவலமாய் பார்த்து வைக்க அப்போது அங்கே வந்த இஷான் அவர் பேச்சைக் கேட்டு கோபமாய்,

“மாமா… வார்த்தையை அடக்கிப் பேசுங்க. எங்க அம்மா வளர்ப்புல என்ன குறை கண்டீங்க? ஏதோ என் அம்மாவுக்குத் தூரத்து உறவுனு அமைதியா இருக்கேன். இல்ல இங்கேயே அசிங்கமாகிரும்” என்று கத்த,

மீராவிற்கோ அத்தனை பேர் முன்பும் தன் மகனால் தனக்குத் தலை குனிவா என்று கோபம்… இதையே தானே தனது தம்பியும் செய்துவிட்டுச் சென்றான், என்ற ஆத்திரம் எல்லாம் இஷான் மேலும் கூட வந்த பெண் மேலும் திரும்பியது.

“என்னத்த பார்த்துப் பேசணும்? உங்க அம்மாதான் என் வீடு தேடி வந்து என் பொண்ணுதான் உனக்குப் பொண்டாட்டினு வாக்கு கொடுத்தாங்க? கொடுத்த வாக்கை நிறைவேத்தத் துப்பு இல்ல, இதுல பார்த்துப் பேசணுமாம்ல” என்றுவிட்டுத் திரும்ப,

“அவங்க யாரு என்னன்னு தெரியாம வார்த்தையை விடாதீங்க?” என்று மீண்டும் இஷான் கத்த,

மீராவோ நெஞ்சைப் பிசைய அங்கேயே மடங்கி அமர்ந்தார்.

ஓடிவந்து அவரைத் தாங்க வந்த இஷானையும், கண்ணில் நீருடன் பயந்து நின்ற சஹானாவையும் பார்த்தவர், அவனை அங்கேயே நிற்கச் சொல்லிக் கையை நீட்டித் தடுத்தார்.

“அம்மா” என்று அவன் ஓடிவரப் பார்க்க அவனைத் தன் அருகில் வரவிடாமல் தடுத்தவர் நெஞ்சைப் பிடித்தபடி,

“நீயும் உன் மாமன் மாதிரி என்னை அசிங்கப்படுத்திட்டல்ல? சாகுற அளவுக்கு என்னைக் கேவலப்படுத்தி நிக்க வெச்சுட்டல்ல? நான் கொடுத்த வாக்கைக் காப்பாத்த முடியாத பாவி ஆக்கிட்டல்ல? நம்பிக்கை துரோகம் பண்ணிட்டியேடா? உன்னை நம்புனனே?” என்று அவர் இருமிக் கொண்டே கூற, அவர் அருகில் செல்ல முயன்ற சரண்யாவின் தந்தையை அவள் கரம் தடுத்து நிறுத்தியது. அதில் மகளைத் திரும்பிப் பார்த்தவரை நடப்பதை அமைதியாக வேடிக்கை பார்க்கும்படி கண்களாலேயே கூறினாள். அதனால், அவரும் அவரது மனைவியும் அமைதியாக நின்றிருந்தனர்.

“அம்மா, நான் சொல்றதைக் கொஞ்சம் கேளுங்க… வாங்க, முதல்ல ஹாஸ்பிடல் போலாம்” என்று கூற,

“எதுக்கு? உன் தாய்மாமன் ஒருமுறை என்னைக் கொன்னான்… இப்போ நீயா? அவனாலதான் நான் வாக்கு தவறினவளா ஆனேன். அந்த அசிங்கமே இன்னும் போகலை. அதுக்குள்ள நீ புது அசிங்கத்தைத் தேடிக் கொடுக்குறியா? அசிங்கப்பட்டு, அவமானப்பட்டு நான் சாகணுமா? அதுதான் உன் ஆசையா?” என்று கேட்டார் அப்போதும்.

“அம்மா, அப்படியெல்லாம் இல்லம்மா. நான் சொல்றேன்ல… அக்கா மாத்திரை எடுத்துட்டு வாங்க” என்று வேலையாளிடம் கூறிவிட்டு அவன் கதறி அவர் அருகில் வரத்துடிக்க,

அவனுக்கும் சற்று முன்னே கண்களைத் துடைத்தபடி வந்தவள்,

“மன்னிச்சிடுங்க… இது உங்க குடும்பப் பிரச்சனைனு தான் நான் ஒதுங்கி நின்னேன். ஆனா, இதுல என்னைச் சம்பந்தப்படுத்திப் பேசவும்தான் நான் பேச வேண்டி இருக்கு” என்றவள் ஒரு முடிவுடன் பேச பதறிய இஷானோ,

“சஹானா… ஒரு நிமிஷம் அமைதியா இருங்க” என்று கூற.

“நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிடுறேன் சார்” என்று அவனைத் தள்ளி நிறுத்தினாள் பேச்சில்.

“சஹானா” என்று அதிர்ந்தவன் சிலையாய் நிற்க, அதை கவனிக்காதவளாய்,

“நான் சஹானா… இவர்கூட ஆந்திராவுல ஆடிட்டர் வொர்க் செஞ்சேன்… இப்போ நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து தான் அந்த வேலையை முடிச்சுக் கொடுக்கனும். அதுக்காகதான் இவர்கூடக் கிளம்பி வந்தேன்” என்று கூற அவளை மாறாத அதிர்ச்சியோடு பார்த்து நின்றிருந்தான் இஷான்.

“நீங்க சொல்றதெல்லாம் நம்புறதுக்கு நாங்க என்ன கேனையனுங்களா? இவன் யாரோ ஒரு பொண்ணைக் கூட்டி வருவானாம். ஆனா, அது கூட வேலை செய்யுற பொண்ணு தான்னு சொன்னா நாங்க உடனே நம்பனுமாம்… அவ்ளோ நல்லவன் அவன்னா இப்போவே இந்த நிமிஷமே அவங்க அம்மா எனக்குக் கொடுத்த வாக்குப்படி என் பொண்ணு கழுத்துல தாலி கட்டச் சொல்லுங்க, அப்போ நம்புறேன். இதெல்லாம் உண்மைனு” என்று கத்தினார் சரண்யாவின் தந்தை.

“அதானே, தாலி கட்டச் சொல்லுங்க, நாங்க நம்புறோம். மீராம்மாவோட புள்ள அவஙக வார்த்தையை மீறவே மாட்டான்னு” என்று அங்குக் கூடியிருந்தவர்களும் கூற இஷானோ முதலில் தெளிந்தவன்,

“அம்மா, இது இப்போ முக்கியம் இல்லம்மா… முதல்ல மாத்திரைய சாப்பிடுங்க. உங்க உடம்பு சரி ஆகட்டும், அப்புறம் பேசுங்க” என்று கூற அவனைத் தீர்க்கமாய் பார்த்த மீரா,

“என் தம்பினு இருந்த ஒருத்தனால போன என் மானம் உன்னாலதான் திரும்ப வரப்போகுதுனு நினைச்சேன். நம்பினேன்… அவன் ஓடிப்போய் கல்யாணம் பண்ணப்போ நான் பட்ட அசிங்கம் இன்னும் நெஞ்சுல இருக்கு. அது உன்னால தான் போகும்னு நம்பினேன். அந்த நம்பிக்கையில தான் அவங்களுக்கு வாக்குக் கொடுத்தேன். நீ தயங்குறது என்கிட்டப் பொய் சொல்ற மாதிரி இருக்கு… அந்தப் பொண்ணு யாரா வேணா இருந்துட்டுப் போகட்டும். உனக்கு நான் உயிரோட இருக்கணும்னா, நீயும் அந்தப் பொண்ணு சொல்றதும் உண்மைனா இப்போவே சரண்யா கழுத்துல தாலி கட்டு. இல்லனா, நான் இப்படியே எப்படியோ நம்பிக்கைத் துரோகிங்களால சாகறேன், விட்டுடு” என்று நெஞ்சம் வலிக்கக் கையால் நெஞ்சை நீவியபடி பேசினார் அவர்.

திக்குத் தெரியாத காட்டில் கண்ணைக் கட்டி விட்டது போல அதிர்ந்து போனான் இஷான்.

ஒருமுறை திரும்பி தன்னவளைப் பார்க்க அவளோ கண்களாலேயே அவனிடம் கெஞ்சினாள். பின்னே இத்தனை வருடம் ஆகியும் தன் தந்தையின்மேல் இவ்வளவு கோபமாக இருப்பவர், அவரது மகள்தான் தான் என்று அறிந்தால் உயிரையும் விட்டுவிடுவார் போலிருந்தது அவளுக்கு. தன் தந்தை நல்லவர்தான் எனத் தான் நிரூபிக்க வேண்டும் என முடிவெடுத்தவள் இஷானைத் தீர்க்கமாய் பார்த்து,

‘என்மேல சத்தியம், நீங்க எந்த உண்மையும் சொல்லிடக் கூடாது’ என்று கண்களாலேயே அவனுக்குச் செய்தியைக் கடத்தியவள் மீராவைப் பார்க்கும்படி கண்காட்ட,

அவளது எண்ணத்தை அறிந்தவன்..கண்கள் கலங்க, தன் தாயைப் பார்க்க அவரோ பிடிவாதமாய் தன் வலியைப் பல்லைக் கடித்து அடக்கியபடி இருந்தார்.

தன் கண் முன்னே தன் தாயை இழப்பதா? அவரது உயிர் அவனது முடிலில் எனும்போது அவனும் என்னதான் செய்வான்?

‘ஏன்? என் ஒருத்தனுக்கு இப்படி ஒரு நிலமை…’ என்று எண்ணியவன் மானசீகமாகத் தன்னிடம் சத்தியம் வாங்கியவளைப் பார்த்துக் கண்களை மூடித் திறந்தவன் தன் தாயைப் பார்த்து, “சரிமா, நா..நான் அந்தப் பொண்ணைக் க..கல்யாணம் செஞ்சுக்குறேன்… நீங்க முதல்ல மாத்திரையைப் போடுங்க, ப்ளீஸ்” என்று கெஞ்சினான் தன் தாயிடம்.

மறுப்பாய் தலையசைத்த மீரா, “நீ… ச..சரண்யா கழுத்துல தாலி கட்டு, நான் சாப்பிடுறேன்” என்று அவர் வாதத்தில் நிற்க,

“பெத்த அம்மாவோட உயிரை ஊசல்ல விடுறியே, நீயெல்லாம் என்னப்பா பையன்?” என்று கூடியிருந்தவர்கள் கூற இடிந்து போனவன், இப்போது சரண்யாவின் பின்புறம் நின்றிருந்த சஹானாவைப் பார்த்தான். அவள் யாரும் பார்க்காத வண்ணம் தன் தலையில் கை வைத்துச் சத்தியம் என்பது போல கையெடுத்துக் கும்பிட நடை பிணமாகவே மாறிப் போனான் இஷான்.

அதற்குள் அவன் முன் சரண்யா நிற்க தன் தாயைப் பார்த்தவன், அவர் நீட்டிய மஞ்சள் கயிறைச் சரண்யாவின் கழுத்தில் தன்னவளைப் பார்த்தபடியே கட்டினான். அவளை ஒரு இன்ச் அளவு கூடத் தீண்டாமல்.

சஹானாவின் இதயம் ஊமையாய் அழுதது. தந்தை செய்த தவறுக்குப் பிராயச்சித்தமாக தன் வாழ்க்கையையே கொடுத்து விட்டாள். உள்ளுக்குள் நொறுங்கிப் போனாள். தன்னவனை எத்தகைய சூழ்நிலையில் நிறுத்தினோம் என்று… எந்த மனைவிக்கும் இப்படி ஒரு பாவம் நேரக்கூடாது. தன்னுடன் ஒன்றாய் இணைந்த இணையை பாகம் பிரித்து வேறு இணையுடன் இணைக்கும் கொடிய காட்சி. இதைப் பார்த்தும் நான் உயிரோடு இருக்க வேண்டுமா? இப்போதே நான் இறந்துவிடக் கூடாதா?’ என்று எண்ணியவள் எல்லோர் முன்னும் அழக்கூட முடியாத தனது நிலையை அறவே வெறுத்தாள்.

தாலியை வாங்கிக் கொண்ட சரண்யா முகத்திலும், அவளது பெற்றோர் முகத்திலும் எதையோ சாதித்த களிப்பு.

மீராவிற்கோ அப்போது தான் உயிரே வந்தது. வேலையாள் கொடுத்த மாத்திரையை விழுங்கியவர் அங்கே போடப்பட்ட சேரில் சாய்ந்து அமர்ந்தார்.

“அப்புறம் என்ன மீராம்மா… உன் பையன்தான் நீ கொடுத்த வாக்கைக் காப்பாத்திட்டானே… உங்க தம்பியால நீங்க பட்ட அசிங்கம் உங்க பிள்ளையால போயிடுச்சு, சந்தோஷமா இருங்க” என்று அங்கிருந்தவர்கள் கூற,

“ஆமா, இத்தனை நாளா நடைபிணமா இருந்தேன். என் பையன் எனக்கு உயிர் கொடுத்திட்டான்” என்று கூறித் தன் மகனை அருகில் அழைக்க, குற்ற உணர்வும், நடந்த கொடூரங்களும் உள்ளம் வலிக்கக் கஷ்டப்பட்டு தன் தாய் அருகில் சென்றவன் நிற்க, அவனுடன் வந்து நின்றாள் சரண்யா. முகம் முழுவதும் புன்னகையோடு…

2 thoughts on “என் சுவாசம் உன் வாசமாய் -36”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *