Skip to content
Home » என் சுவாசம் உன் வாசமாய் – 37

என் சுவாசம் உன் வாசமாய் – 37

அத்தியாயம் -37

தன்னவள் செய்த சத்தியத்திற்காகத் தன் தாய்க்கு மதிப்பளித்து சரண்யாவின் கழுத்தில் தாலி கட்டினான். பணம் ஒன்றே மதியான சரண்யாவின் குடும்பத்திற்கு எக்கச்சக்க சந்தோஷம்.

ஆடிட்டராக இஷானின் சம்பாத்யம், அவர்கள் பரம்பரைச் சொத்து என அதிகம் தான். ஆனால், அதையெல்லாம் அவர்கள் வேண்டாம் என ஒதுக்கிவிட்டு சாதாரண வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். ஆனால், உயிலின்படி இஷானுக்கும், இந்திரஜித்துக்கும் வரப்போகும் மனைவிகளால் தான் இந்தச் சொத்தையெல்லாம் அடைய முடியும், என எப்படியோ அறிந்து கொண்டவர்கள் தான் இவர்களோடு உறவாடி இந்தச் சம்பந்தத்தை உருவாக்கிக் கொண்டு இருந்தனர்.

உயிர் போகும் வலிதான் இருவருக்கும்…

ஆனாலும், தன் தந்தையால் அத்தைக்கு ஏற்பட்ட அவமானத்தைத் தன்னால் நீக்கியதாகவே நினைத்தாள் சஹானா. கண்கள் கலங்கி அழுகையை அடக்க அடக்க அவளால் முடியவில்லை.

இங்கிருந்தால் அழுது அவர்களுக்குத் தன்னைக் காட்டிக் கொடுத்து விடுவோம் என்று எண்ணியவள் கிளம்பி விடலாம் என நினைத்துத் திரும்ப அவளைத் தடுத்தது மீராவின் குரல்.

“எங்கம்மா போற, உள்ளே வா” என்று அவளை அழைத்தார் மீரா.

“இஷா, அவளைக் கூப்பிடுப்பா. உன்கூட வந்த பொண்ணு தானே” என்று கூற அவனோ கல்போல நின்றான்.

அவனது நிலை உணர்ந்தவள் திரும்பி மீராவிடம், “இல்ல அ..அம்மா, நா..நான் கிளம்புறேன்… என்னை வெச்சு இங்கே பிரச்சனை ஆன அப்புறம் எனக்கு இங்க இருக்க அன்கம்ஃபர்டபிளா இருக்கு, நான் கிளம்புறேன்” என்று கூற,

மீராவிற்கோ அவள் பேசியது ஏதோ போல் ஆக, “மன்னிச்சுக்கோ மா… நான் ஏதோ கோபத்துல” என்று கூறப் பதறியவள்,

“பெரியவங்க என்கிட்ட எதுக்கு? விடுங்க… நான் கிளம்புறேன்” என்றுவிட்டுத் திரும்ப, என்ன தோன்றியதோ வந்து மீராவிடம் ஆசீர்வாதம் வாங்கியவள் அடுத்து ஒரு நிமிடம் கூட நிற்காமல் கிளம்பி விட்டாள்.

“இஷா… அந்தப் பொண்ணு கிளம்புறாடா… கூப்பிடுடா, இல்ல கூட யாரைனா அனுப்புடா” என்று மகனை உலுக்கியவர் அவன் அப்படியே நிற்க அவனை நம்பிப் பிரயோஜனம் இல்லை என உணர்ந்தவர் அவனது நண்பனை அழைத்து அவளுக்குத் துணையாகக் கொண்டு சென்று விடும்படி பணித்தார்.

இஷான் வரும்போது தான் அவனது போலீஸ் நண்பனையும் வரச்சொல்லிக் கூறி இருந்ததால், அவன் வர அப்போது தான் சஹானா இஷானைப் பேச விடாமல் செய்து இருந்தாள்.

‘இந்தப் பொண்ணு ஏன் இப்படி ஒரு பைத்தியக்காரத்தனம் செஞ்சா?’ என்று தான் அவன் யோசித்தான். அதை அவளிடம் கேட்க வேண்டும் என்று எண்ணியவன் மீரா அவளுக்குத் துணையாகப் போகச் சொல்ல,

“என்கூட வாங்கமா… நான் உங்களக் கூட்டிட்டுப் போய் விடுறேன்” என்று கூறியபடி அழைக்க தங்களது திருமண விஷயம் அறிந்த ஒருவன் அவன்தான் என்று அவனுடன் சென்றாள் சஹானா. இஷானைத் திரும்பியும் அவள் பார்க்கவில்லை. ஆனால், இஷான் அவளை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்தான். அவனது உயிர்  போகும் பார்வை சரண்யாவின் மனதில் ஏதோ ஒரு சந்தேகத்தை விதைத்தது.

‘பிறகு பேசிக் கொள்வோம், இப்போது நல்ல பிள்ளையாக நடப்பதே நல்லது’ என்று எண்ணியவள் அமைதியாக நின்றாள்.

அங்கிருந்த பெண்மணியிடம் ஆலம் சுற்றச் சொல்ல, அவர் ஆலம் கரைத்துக் கொண்டு வர இஷானின் அருகே வந்து நின்றாள் சரண்யா.

தன் அருகில் தன்னவள் அல்லாமல் வேறு எவளோ நிற்க எரிந்தது இஷானுக்கு. ஆலத்தைத் தட்டி விட்டவன் தன் தாயைப் பார்த்து, “அவசரப்பட்டுட்டீங்க, அதுக்கெல்லாம் அனுபவிப்பீங்க” என்றுவிட்டு வேகமாக உள்ளே சென்று விட்டான். எல்லோரும் அதிர்ந்தாலும்,

“அவன் திடீருனு கல்யாணம் செய்து வைக்கவும் என்மேல கோபமா இருக்கான், தப்பா எடுத்துக்காதீங்க” எனச் சமாதானம் செய்ய தன்னை இவ்வளவு அசிங்கப்படுத்தி விட்டானே என இஷான்மேல் கோபம்தான் வந்தது சரண்யாவிற்கு.

‘போயிட்டா… என்னை விட்டுட்டுப் போயிட்டா… எப்படிடி மனசு வந்துச்சு உனக்கு, உன் புருஷனை அசால்ட்டா தூக்கி வேற ஒருத்திகிட்டக் கொடுக்க, எப்படிடி மனசு வந்துச்சு உனக்கு? நான் வேணாமா உனக்கு? அப்போ என்மேல நீ வெச்ச பாசம் வேணாமா? நாம வாழ்ந்த வாழ்க்கை வேணாமா? இப்படியா உன்மேல சத்தியம் பண்ணி என்னை வேற ஒருத்தி கழுத்துல தாலி கட்ட வைப்ப… நீ நினைச்ச உடனே தூக்கிக் கொடுக்க நான் என்ன பொம்மையா? சூழ்நிலைக் கைதியா என்னை நிக்க வெச்சதுக்குப் பதில் நீ என்னைக் கொன்னு இருக்கலாம் சனா’ என்று தன் பக்க நியாயத்தையே எண்ணியவன் அவள்புறம் யோசிக்க மறந்தான்.

அங்கோ சஹானாவை அழைத்துக் கொண்டு சென்றவன் ஆள் அரவமற்ற சாலையில் காரை நிறுத்திவிட்டு அவன் கீழிறங்கி அவள் புறம் கதவைத் திறந்தவன்,

“இறங்குமா, கொஞ்சம் பேசணும்” என்று கூற பொம்மை போல சொன்னதைச் செய்தவள் இறங்க,

“ஏன்மா, இப்படி ஒரு முடிவு எடுத்த? உன் புருஷன வேறு ஒரு பொண்ணுக்கு விட்டுக் கொடுக்குற அளவுக்கா உங்க லைஃப் இருந்துச்சு. உங்க ரெண்டு பேர் கண்ணுலயும் நான் காதலைப் பார்த்து இருக்கேன், கல்யாணத்தப்போவே… நடிப்புக்குனு அவன் ஒத்துக்கிட்டான் தான். ஆனா, கல்யாண ஏற்பாடு நடக்கும் போதே அவன் உங்கமேல அவ்வளவு பாசமாகிட்டான். அது ஏன்னு அவனுக்கே தெரியல… அதனால தான் கல்யாணத்துல எதுவும் மிஸ் ஆகிடக்கூடாது, நீங்க ஃபீல் பண்ணக் கூடாதுனு பார்த்துப் பார்த்துச் செஞ்சான்…

இத்தனை மாசமா அவன் அவ்ளோ சந்தோஷமாப் பேசினது உங்களைக் கல்யாணம் பண்ணதுக்கு அப்புறம்தான்… நீங்களும் அவன்மேல உயிரையே வெச்சு இருந்தீங்க, எனக்குத் தெரியும்.. ஆனா திடீருனு இப்படி ஒரு முடிவு ஏன்?” என்று அவன் பேசப் பேச அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகையை அடக்க முடியாமல் கதறி அழுதாள்.

அவள் அழுவது பொறுக்காமல், “அழாதீங்க சஹானா… நான் அண்ணன் பொறுப்புல இருந்து உங்க கல்யாணத்தை நடத்தினவன். அதனால தான் கேட்கிறேன், அழாதீங்க சஹானா” என்று அவளுக்குக் குடிக்கத் தண்ணீரை எடுத்து நீட்ட மறுக்காமல் வாங்கியவள் குடித்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தாள். அவள் பேசுவதை அவளுக்கே தெரியாமல் ரெக்கார்ட் செய்தான் அவன்.

“எல்லாம் அவருக்காக தான் அண்ணா… அவருக்காக அவரையே விட்டுக் கொடுத்துட்டேன்” என்று கூற,

“புரியலமா” என்றான் அவன்.

“அவங்க அம்மா, என்னோட அப்பாவால அசிங்கப் பட்டதை சொல்லித்தான் அவரையும் அசிங்கப் படுத்தினாங்க… இன்னும் அவங்க எங்க அப்பாவை மன்னிக்கவே இல்ல. இதுல இவரு ஏதோ ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணாருனு கோபப்பட்டவங்க, அந்தப் பொண்ணு அவங்களுக்கு அவமானம் தேடிக் கொடுத்த அவரோட தம்பி பொண்ணு தான்னு தெரிஞ்சா, அவங்க உயிரோடவே இருக்க மாட்டாங்க. அதுவும் இல்லாம இவரை நம்பிக்கை துரோகினு சொல்லிடுவாங்க… எங்க அப்பாவால மீரா அத்தைக்கு ஏற்பட்ட அவமானம் இவராலயும் ஆகிடக் கூடாதுல்ல, அதுனால தான். இவரும் குற்ற உணர்ச்சில காலம் பூராவும் துடிக்கக் கூடாதுல்ல அதுக்கு தான், நா..நான் அவரை விட்டு யாருனே தெரியாத மாதிரி விட்டுட்டு வந்துட்டேன்…

எங்க அப்பா பண்ண தப்பை என்னால சரி பண்ண முடியாது. ஆனா, என் புருஷன் பண்ண தப்பை என்னால சரி பண்ண முடியும்ல. அதைச் செய்ய நான் அவரைவிட்டு வந்து தான் ஆகணும்னா, அதனாலதான் அந்த நேரத்தில அவரை என்மேல சத்தியம் செஞ்சு, வாயத் தொறக்க விடாம செஞ்சு, அத்தையோட ஆசையை நிறைவேற வெச்சேன்…

ஒரு மருமகளாவும், ஒரு தம்பி மகளாவும் அவங்களுக்கு நான் நியாயம் செஞ்சுட்டேன்… ஆ..ஆனா, ஒரு மனைவியா நா..நான் அவருக்குப் பாவம் பண்ணிட்டேன்… எ..எனக்கு நம்பிக்கை இருக்கு, அவர் என்னைப் புரிஞ்சுப்பாருனு” என்று அழுது புலம்பியவள் அங்கேயே அமர்ந்து விட்டாள்.

“கண்டிப்பா அவன் புரிஞ்சுப்பான் மா… ஆனாலும், நீங்க அவசரப்பட்டு இருக்க வேணாம்னு தான் இப்பவும் தோணுது. ஆனா, என்ன செய்ய? நடந்த எதையும் மாத்துற அளவுக்கு நமக்கு வல்லமை இல்லை… இஷாவை நினைச்சாதான் கஷ்டமா இருக்கு” என்று கூறியவனைப் பார்த்தவள் தன் அழுகையை நிறுத்திவிட்டுக் கண்களைத் துடைத்தவள்,

“அவர் கூடவே இருங்கண்ணா ப்ளீஸ்… நான் உங்ககிட்ட ரிக்குவஸ்ட்டா கேட்கிறேன்” என்று கேட்க,

“கண்டிப்பா மா… வாங்க, சாப்பிட்டுப் போலாம்” என்று விட்டு அவளை அழைத்துக் கொண்டு சென்றான். அவளைக் கஷ்டப்பட்டு சாப்பிட வைத்தவன் யசோதாம்மாவிடம் சொல்லி விட்டு வந்தான், நேரே தன் நண்பனைக் காண.

மீராவிற்கோ தரையில் நடக்க முடியவில்லை. தன் மகன் தன் பேச்சை மீறவில்லை என்பதே அவருக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது. மகனின் கோபத்தைச் சீக்கிரமே சரிசெய்து விடலாம் என்று எண்ணியவர் மகனுக்குப் பிடித்ததாக சமைக்கச் சொன்னார்.

சரண்யாவிடம் தனது நகைகளைக் கொடுத்தவர் அதை அணிந்து கொள்ளச் சொல்ல, அவளும் மற்றதை மறந்து மகிழ்வோடு இருந்தாள். அவளது பெற்றோரிடமும் தன் இளைய மகன் வந்ததும் ரிசப்ஷன் வைத்து ஊருக்கெல்லாம் சொல்லிக் கொள்ளலாம், அதுவரை பொறுமையாக இருங்கள் எனக் கூறிவிட அவர்களும் அமைதியாகவே இருப்பது போல நடித்தனர்.

சரண்யாவைத் தயார் செய்தவர் மகனுடன் சேர்ந்து உணவைச் சாப்பிடுமாறு சொல்லிவிட, அவளுக்கோ கோபமாய் வந்தாலும் சரியெனத் தலையை ஆட்டியவள் அவனை உண்ண அழைப்பதற்காகச் சென்றாள்.

தீர யோசித்தவன், தன்னவள் தனக்காகவே இதனைச் செய்து இருப்பாள் என்று உணரவே இவ்வளவு நேரம் பிடித்தது அவனுக்கு. ஆனாலும், அவனை ஏதோ பொம்மையைக் கொடுப்பதைப் போல விட்டுச் சென்றது கோபமே… சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவது நல்லது என உணர்ந்த இஷான், சரண்யாவிடம் பேசி அவளைத் தன்னை விட்டுச் செல்லும்படி கேட்டுக் கொள்ள வேண்டும். அப்போது தான் தன் சனாவையும், அவளது தந்தையையும் அழைத்து வரமுடியும் என்று உறுதியான முடிவை எடுத்தான். அதன்படி சரண்யாவிடம் பேசவேண்டும் என எண்ணியவனுக்குக் கதவு தட்டும் ஒலி கேட்க சென்று கதவைத் திறந்தவன் சரண்யாவைப் பார்த்து அதிர்ந்தான்.

அவளோ அமைதியான பெண்போல, “உங்களோட சேர்ந்து சாப்பிடச் சொல்லி அத்தை சொல்லிட்டாங்க. அதான் உங்களைச் சாப்பிடக் கூப்பிடலாம்னு வந்தேன்” என்று தான் இவனுக்கெல்லாம் அடக்கமானவளாய் நடிக்க வேண்டுமா என்று எண்ணி பல்லைக் கடித்தபடி பேசினாள்.

இவளிடம் பேச வேண்டும் என எண்ணியவன் தற்போது அவளிடம் சமாதானம் போலச் சமாளிக்க வேண்டும் என எண்ணி,

“ம்ம் வர்றேன், ஃபைவ் மினிட்ஸ்” என்று விட்டு உள்ளே சென்று உடை மாற்றி முகம் கழுவி வந்தான். அவன் வரும்வரை வாசலிலேயே நின்றாள் சரண்யா. அவளைப் பார்த்தவன் முன்னே நடக்க அவளும் நடந்தாள்.

சரண்யா மேல்தட்டு வர்க்கமாகப் பிறக்க வேண்டும் என எண்ணுபவள். ஆனால், வசதியில்லாத குடும்பத்தில் பிறந்ததால் வசதி வாய்ப்புகள் குறைவே… அதனால், தான் வசதியானவள் போலத் தன் நண்பர்களிடத்தில் காட்டிக் கொள்வாள். வீட்டில் சண்டை போட்டு தினமும் அதற்கெனக் காசைப் பிடுங்கிக் கொண்டு வருவாள். அவளின் தாயும், தந்தையும் மற்றவர்களைச் சுரண்டி வாழும் பழக்கத்தினர். அதனால் கிடைக்கும் சொந்தங்களிடத்தில் ஒட்டுண்ணி போல ஒட்டிக் கொண்டு திரிவர்.

2 thoughts on “என் சுவாசம் உன் வாசமாய் – 37”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *