Skip to content
Home » என் சுவாசம் உன் வாசமாய் – 38

என் சுவாசம் உன் வாசமாய் – 38

அத்தியாயம் -38

எப்போதும் பணம் பணம் என்று அலையும் சரண்யாவின் குடும்பத்திற்குப் பற்றாய் கிடைத்தது தான் இஷானது குடும்பம்.

சிறுவயதில் ஈஸ்வரன் காதலித்துத் திருமணம் செய்தபோது தமையனால் மனமுடைந்து இருந்த மீராவிற்கு, நான் தமையனாய் இருக்கிறேன் என்று தூரத்து உறவாய் வந்த சரண்யாவின் தந்தையும், தாயும் மீராவிற்கு ஆறுதலாய் இருப்பது போல் நடித்து அவரது நிழலில் சுரண்டத் துவங்கி இருந்தனர்.

மீராவின் சொத்துக்கள் வேறு இருக்க, அதையெல்லாம் தங்களது வசம் அடையவே இந்த நாடகம். இதில் இஷானோ அவர்களைப் பற்றி அவ்வளவு விவரம் அறியாதவன். விவரம் தெரிந்த இந்திரஜித்துக்கு இந்தக் குடும்பத்தைக் கண்டாலே ஆகாது. அதனால் ஏதாவது குத்தும்படி பேசி விடுவான். அதனாலேயே, அவன் இல்லாத சமயம் திருமணம் நடந்தே ஆகவேண்டும் என முடிவெடுத்தவர்கள் அவன் ஊருக்கு வருவதற்குள் நாடகமாடி திருமணத்தை நிகழ்த்தி இருந்தனர்.

இந்தருக்கு தான் இவர்களைப் பற்றித் தெரியுமே… அதிலும் இன்றைய நிலையில் கூட மீரா தன் தமையனை வெறுக்கக் காரணமே சரண்யாவின் பெற்றோர்தான். அவர்கள்தான் ஈஸ்வரனைப் பற்றித் தப்புத் தப்பாகப் பேசிப் பேசியே அவர்மேல் இன்றளவும் வெறுப்பை நிலைநிறுத்தி வைத்துள்ளனர்.

“ஓடிப்போன உங்க தம்பி உங்கள எல்லார் முன்னாடியும் அசிங்கப்படுத்திட்டுப் போனாரே, நீங்க இருக்கீங்களா? செத்தீங்களானு வந்து பார்த்தாரா? உங்க மேல பாசம் இருந்தா மாமா செத்தப்பவாச்சும் உங்களத் தேடி வந்து இருப்பாருல… இத்துணூன்டு ஊரு, அதுல உங்களப் பத்திக் கேட்டால் சொல்ல மாட்டாங்களா? சொத்துக்காக மட்டும் தான் வருவாரு போல… அதுக்காக தான் சொத்து மதிப்பு கூடட்டும்னு வராமலே இருக்காரு போல… நீங்க கவலைப் படாதீங்ககா… உங்களுக்குத் தம்பியா நாங்க இருக்கோம்…” என்று பேசியே அவரை இன்றளவும் அவர்மேல் வெறுப்பை வளர்த்துக் கொண்டே தான் இருக்கின்றனர்.

இதுதான் காரணம் எனத் தெரியாது. ஆனால், இவர்களைப் பார்த்தாலே ஏதோ சரியில்லை என்று உறுத்தும். அதனாலேயே அவர்களைத் தூர நிறுத்தினான் இந்திரஜித்.

எங்கே அவன் இருந்தால் இந்தக் கல்யாணத்தைத் தடை செய்வானோ என எண்ணியவர்கள் இந்தர் டிரெயினிங் சென்றிருந்த சமயமாகப் பார்த்து, மீராவிடம் நாடகமாடி கல்யாணத்துக்கு வாக்கு வாங்கியவர்கள், இப்போது யாரோ ஒரு பெண்ணுடன் இஷான் வருகிறான் என்பதை அறிந்ததும் பதறிப் போய் ஓடிவந்தவர்கள், எங்கே சொத்து கைவிட்டுப் போய் விடுமோ என எண்ணியவர்கள், அப்போதே மீண்டும் மீராவிற்கு ஈஸ்வரன் மீதான கோபத்தைத் தூண்டிவிட்டு அவராலேயே இஷானைத் தாலி கட்டும்படி செய்தனர். இனி இந்தர் வந்தால், அவனால் இவர்களை எதுவும் செய்ய முடியாது என எண்ணிக்கொண்டு சந்தோஷமாய் இருந்தனர்.

மறுநாள் வரவிருக்கும் இந்திரஜித்துக்கு அடுக்கடுக்காய் சோதனையை வைத்து இருந்தான் இஷான்.

இரவு தனது அறையில் இருந்த இஷானிடம் பேச வந்தாள் சரண்யா. இந்தர் தான் கோபக்காரன், இஷானை ஈஸியாகத் தன்வச[ படுத்தலாம் என்று எண்ணியவள் சந்தோஷமாகச் சென்றாள் இஷானின் அறைக்கு.

ஆனால், அவனோ அவளிடம் பேச நினைத்ததையெல்லாம் பேசப் பேச, அவளுக்குத் தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டோமோ என்று யோசிக்க ஆரம்பித்து விட்டாள்.

“மாமா” என்று வெட்கமே இல்லாமல் வந்து நின்றவளிடம்,

‘நானே என் பொண்டாட்டி என்னை வேணாம்னு விட்டுக் கொடுத்துட்டுப் போயிட்டாளேனு கடுப்புல இருக்கேன். இவ ஒருத்தி பைத்தியம் மாதிரி’ என்று எண்ணியவன் அவளிடம் தன் கோபத்தை எல்லாம் இறக்கினான்.

“இங்கே பாரு சரண்யா… எனக்கு உன்னை, உன் குடும்பத்தைச் சுத்தமாப் பிடிக்காது. இந்தத் தாலிய கட்டினதால எல்லாம் நீ என் பொண்டாட்டி ஆகிட முடியாது. பேசாம அந்தத் தாலியைக் கழற்றிக் கொடுத்துட்டுப் போயிட்டே இரு…” என்று கத்த ஆரம்பித்து இருந்தான். 

அதில் பயந்தவள்,

என்ன இவன்? அவ்ளோ அமைதியா இருந்தவன், இப்போ இப்படி கத்துறான்னு யோசிச்சவள் அவனது மிரட்டலில் அதிர்ந்து போனாள்.

“அது..அது வந்து… மாமா, எங்க அப்பா அம்மா தான் எ..என்னை  வற்புறுத்திக் கல்யாணம் செய்ய வெச்சாங்க” என்று திக்கித் திணறி அவள் கூறி முடிக்க,

சட்டெனத் தன் கோபத்திலிருந்து தணிந்தவன், ‘ஓஓ… இவளும் அப்பா, அம்மா டார்ச்சர்லதான் கல்யாணம் செய்து கிட்டாளா?’ என்று எண்ணியவன் அவளிடம் தன்மையாகப் பேசினான்.

“அப்போ நாம ரெண்டு பேரும் அப்பா, அம்மா டார்ச்சர்லதான் கல்யாணம்… ச்சே அதைக் கல்யாணம்னு கூடச் சொல்ல எனக்குப் பிடிக்கலை. இங்க பாரு சரண்யா, இது நமக்குள்ளேயே இருக்கட்டும். என் மனைவிங்கிற எந்த உரிமையும் என்கிட்ட எதிர்பார்க்காதே, உனக்கு அதுதான் நல்லது… நாம சீக்கிரமே டைவர்ஸ் வாங்கிக்கலாம். நான் உனக்கு செட்டில்மெண்ட் பண்ணிடுறேன்…” என்று அவன் பேசிக் கொண்டே போக முதலில், ‘என்ன பேசுறான் இவன்? நம்மள வசதியா வாழ விடமாட்டான் போலயே’ என்று எண்ணியவள் இறுதியில் அவன் சொன்ன செட்டில்மெண்ட் என்ற வார்த்தையில் அவனைப் பார்க்க, 

“அது வந்து… எங்க அம்மா பண்ண தப்புக்கு நான் என் பங்கு பிராப்பர்ட்டிய எல்லாம் உனக்கு நஷ்ட ஈடாக் கொடுக்குறேன்… நீ உனக்குப் புடிச்ச வாழ்க்கையை வாழலாம்… நீ நீ… யாரையாவது லவ் பண்ணாலும் அவங்களுக்கு உன்னை நான் கல்யாணம் பண்ணி வைக்கிறேன். ஆனா அதுக்கு உன் ஒத்துழைப்பு எனக்கு வேணும் சரண்யா” என்று பேச,

‘இதுக்கு மேல என்ன வேணும்? இவனோட பணம் காசுக்கு தானே நான் இவனைக் கல்யாணம் பண்ணவே வந்தது… என்னோட ஜாலி லைஃப்க்கு இவனைக் கல்யாணம் பண்ணா சந்தோஷமா செலவு பண்ணலாம்னு இருந்தா, இவனே மொத்தமாய் கொடுக்கிறேன்னு சொல்லும்போது நமக்கு என்ன வேணும்? இவன் சொல்றதுக்குச் சம்மதிப்போம்’ என்று எண்ணிக் குதூகலித்தவள் அவனிடம் அமைதியான பெண்போலத் தலையை ஆட்டினாள்.

“என்னால உன் வாழ்க்கை பாழாகிடக் கூடாது சரண்யா. அதனால தான், டைவர்ஸ்க்கு சொன்னேன். என்னால உன் கூடலாம் வாழ முடியாது, அதான் பிரியலாம்னு சொன்னேன். எங்க அம்மா என்ன பேசினாலும் கேள்வி கேட்டுக்காதே, நான் உன் லைஃபை செட்டில் பண்றேன்” என்று கூறிவிட அவளும் அமைதியானாள்.

“நீ தூங்கு சரண்யா” என்றுவிட்டு அவன் அங்கிருந்த கட்டிலில் படுத்துக் கொள்ள இவளோ,

‘என்ன இவன்? இவன் பாட்டுக்குப் பேசினான். அவன் பாட்டுக்கு படுத்துத் தூங்குறான்…’ என்று எண்ணியவளோ,

‘எதுவோ ஒண்ணு, நமக்குச் சொத்து வந்தாப் போதும்’ என்று எண்ணியவள் தூங்கச் சென்றாள். படுத்தவனுக்கு மெஸெஜ் வர அதை எடுத்துப் பார்த்தவன், தன் நண்பனிடமிருந்து வந்தது என்று அறிந்ததும் உஷாரானான். அவசரமாகத் தனது ஹெட்ஃபோனை எடுத்து மாட்டியவன் அவன் அனுப்பிய ஆடியோவைக் கேட்கக் கேட்க அவனது முகம் கனிவானது.

அதுவரை அவன் முகத்தைப் பார்த்தவள், அவனது அலப்பறைகளைப் பார்த்து என்னவோ ஏதோ என்று பார்த்தவள், அவனது முகம் மாறுவதைப் பார்த்தவள், என்னவோ இருக்கு அதைக் கண்டு புடிக்கனும் என்று எண்ணியவள் அமைதியாகப் படுத்துக் கொண்டாள்.

இஷானோ, தன்னவளின் வார்த்தைகளில் அவளைப் புரிந்து கொண்டவன், உடனே அவளைக் காண வேண்டும் என்ற ஆவலைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.

‘எவ்ளோ தான் இருந்தாலும், என்னைத் தூக்கிக் கொடுத்துட்டல, நான் உனக்கு அவ்ளோ ஈஸியா போயிட்டேன்ல, இதுக்கு நீ ஃபீல் பண்ணனும்டி. அப்போதான் உன்கிட்ட வருவேன்’ என்று எண்ணியபடி உறங்கிப் போனான்.

அங்கு சஹானாவோ அழுதபடியே இருந்தாள்.

தன் கண் முன்னே கணவனை வேறு ஒருத்திக்குத் தூக்கிக் கொடுத்து வந்துவிட்ட தன் நிலையை எண்ணி எண்ணி வலி அதிகமாகியது. அவனை விட்டுத் தனக்கு ஒரு வாழ்க்கை அமையுமா என்று எண்ணியபடி அழுது அழுது உறங்கிப் போனாள் சஹானா.

மறுநாள் ஐ.பி.எஸ் இந்திரஜித்தாக வந்து இறங்கிய இந்தரைப் பார்த்துச் சரண்யாவின் குடும்பம் சற்று அடக்கி வாசித்தது. வந்தவுடன் தமையனின் கல்யாணத்தைப் பற்றிக் கேள்வி பட்டவன் தன் தாயையும் தமையனையும் திட்டித் தீர்த்து விட்டான். ‘இவன் இப்படி செஞ்சா கயலோட வாழ்க்கை என்னாகுறது’ என்ற கோபமே அவனுக்கு அதிகமாக இருக்க, தன் தாயைக் கத்தியவன் இஷானின் மனைவி சரண்யா என்று அறிந்து இன்னும் கத்த ஆரம்பித்தான்.

“என்ன தான் நினைச்சுட்டு இருக்கீங்க உங்க மனசுல? இப்படி உங்க இஷ்டத்துக்குச் செஞ்சா அப்புறம் நான் யாரு இந்த வீட்டுல” என்று கேட்க மீராவோ மகனைக் கூட ஒரு வார்த்தை கேட்காமல் விட்டது தவறாகவே பட அவனிடம் சமாதானமாய் பேசினார்.

“இல்ல இந்திரா, உன்கிட்டச் சொல்லக் கூடாதுனு இல்ல, சந்தர்ப்பம் அப்படி ஆகிடுச்சு பா…” என்றவரை முறைத்தவன்,

“உங்களுக்கு உங்களைச் சேர்ந்தவங்க சந்தோஷத்தை விட உங்களோட வார்த்தைக்குக் கட்டுப்பட்டு நிக்கணும், அதான் முக்கியம்ல” என்று கேட்டுவிட்டு விறுவிறுவெனச் சென்று விட்டான். தன் தாயை முறைத்த இஷான்,

“இனி இந்த வீட்டுல முடிவு எல்லாம் எங்களோடதா தான் இருக்கும்மா… நீங்க செஞ்ச நல்லதுலாம் போதும், இனி நாங்க பார்த்துக்கறோம்” என்று கூறிவிட்டு அவனும் சென்றுவிட அவரோ அதிர்ந்து நின்றார் இரு மகன்களின் கூற்றில்.

2 thoughts on “என் சுவாசம் உன் வாசமாய் – 38”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *