Skip to content
Home » என் சுவாசம் உன் வாசமாய் – 39

என் சுவாசம் உன் வாசமாய் – 39

அத்தியாயம் – 39

வந்தவுடனே இந்தர் தன் தாண்டவத்தை ஆட ஆரம்பித்து விட சரண்யாவின் குடும்பம் சற்று மிரண்டு தான் போனது. மீராவைப் பார்த்தவர்களுக்கு, அவரது அதிர்ந்த முகமே பீதியைக் கிளப்பியது. இதுவரை இவரை வைத்துக் காரியம் சாதிக்கலாம் என்று எண்ணியவர்கள், இப்போது அவரது புதல்வர்கள் அப்படிப் பேசிச் சென்றதும் தங்களது நிலை என்னாவது என்று தான் யோசித்தனர்.

மீராவிடம் பேச வந்த தன் பெற்றோர்களைத் தனியே இழுத்துச் சென்றாள் சரண்யா.

“என்னம்மா இது? இந்த அம்மா கையிலதான் அதிகாரம் இருக்குனு நம்பி உன்னைக் கல்யாணம் பண்ண வெச்சா, அந்தப் பையன் வந்து இப்படிப் பேசிட்டுப் போறான். இப்போ நம்மளோட நிலமை என்னாகுறது? பேசாம நீ அவன் கட்டின தாலியைக் கழற்றி வீசிட்டு வா, நாம வேற ஆளைப் பார்க்கலாம்” என்றார் சரண்யாவின் தந்தை.

அவரைப் பார்த்து முறைத்தவள்,

“நீங்க நினைச்சா கல்யாணம் பண்றதுக்கும், வேணாம்னா விட்டுட்டு உடனே வர்றதுக்கும் நான் என்ன பொம்மையா? அந்தம்மா மூலமா வரவேண்டிய சொத்து, அவங்க பையன் மூலமா எனக்கு வரப்போகுது. அதை வாங்காம வந்து என்ன பண்ணச் சொல்றீங்க?” என்று கூற அவளை ஆச்சரியமாய் பார்த்தவர்கள்,

“என்னம்மா சொல்ற?” என்று கேட்க நைட் இஷான் பேசியதைக் கூறினாள் அவள்.

“எதுவுமே செய்யாம எனக்கு அந்த இஷானோட சொத்து வருது. அதுவும் நான் எதுவுமே செய்யாம இது வரப்போகுது. அதை வேணாம்னு சொல்லிட்டு வர நான் என்ன முட்டாளா? அவன்கிட்ட டைவர்ஸ் வாங்குற வரை வாய வெச்சுக்கிட்டு அமைதியா இருங்க. அவனே எனக்கு நல்ல மாப்பிள்ளை பார்க்குறானாம். அவனும் பணக்காரனா இருந்தா இவன் மூலமாவே நமக்கு டபுள் லாபம். அதனால கொஞ்சம் அடக்கி வாசிங்க, புரிஞ்சுதா” என்று அவள் பேச இருவரும் ஈஈஈ என்று இளித்தபடி அமைதியானார்கள். 

மீராவிற்கு தன் நிலையை எண்ணி எண்ணி வருத்தமே மேலிட, நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டார். அப்போது அங்கே வந்த இஷான், தன் தாயைப் பார்த்துப் பதறியவன் இந்தரைக் கூப்பிட்டு உடனே அவரை ஹாஸ்பிடல் அழைத்துப் போக ஏற்பாடு செய்தவன், சரண்யா கூட வருகிறேன் என்று கூற சரியென அவளையும் அழைத்துக் கொண்டு சென்றனர்.

அங்கே மருத்துவமனையில் மீராவிற்கு உடல்நலம் மோசமாக இருப்பதாகவும், அவரது இதயம் பலவீனமாக இருப்பதாகவும் கூற, அவரை வேதனைப்படுத்தும் எதையும் அவரிடம் சொல்ல வேண்டாம் என்று கூறி அவரைப் பார்க்கப் போகச் சொல்ல, இந்தர் கல்போன்று நிற்க இஷான்தான் அவரைப் பார்க்கப் போனான். அங்கு அவரோ தன் மகனிடம் ஏதேதோ பேசி சத்தியம் வாங்கி இருந்தார்.

‘இன்னும் எவ்வளவுதான் நான் அனுபவிக்கனும்’ என்றுதான் அவன் தன்னிலை எண்ணி நொந்து போனான். இதையெல்லாம் அறியாத இந்தரோ விறைப்போடே சுத்திக் கொண்டு இருந்தான்.

மீராவைக் கவனிப்பது போலச் சில வாரங்கள் நாடகமாடிய சரண்யா அதன்பின், அவரைக் கவனிப்பதை விட்டு விட்டு அவரையே குறை சொல்ல ஆரம்பித்து இருந்தாள்.

அதையும் தன் மகனுக்காகப் பொறுத்துக் கொண்டார் மீரா.

இங்கோ இஷான் தன்னவளைத் தொடர்பு கொள்ள முயன்று தோற்றுப் போனான். அவளிடம் பேச வேண்டும் என்று எண்ணி அவளுக்கு ஃபோன் செய்ய அவளோ அவனை அறவே தவிர்த்தாள். அவளை நேரில் சென்று சந்திக்க முடியாதபடி அவனது வேலைகளும், மீராவின் உடல் நிலையும் கட்டிப் போட்டது.

அப்போது தான் மீராவிற்குச் செய்த வாக்குப்படி சரண்யாவிடம் பேசத் துவங்கினான்.

மீராவோ, தனக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயத்திலேயே இஷானை உடனடியாகக் குழந்தை பெற்றுக் கொள்ளச் சொன்னவர், அவன், ‘முடியாது என் மனதில் வேறு ஒருவள் இருக்கிறாள்’ என்று கூற கயலை மனதில் வைத்துதான், அவன் இவளோடு வாழ மறுக்கிறான் என்று எண்ணியவர், தனக்கு இஷான் மூலமாகக் குழந்தை வேண்டும் என்று தன் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு பேசினார். அதனால், அவருக்குச் சத்தியம் செய்து கொடுத்தான் இஷான்.

அதனைச் செயல் படுத்தவும் செய்திருந்தான்.

அவனது ஏற்பாட்டின்படி அவனைத் தொடர்பு கொண்டு பேசினான் தண்டபாணி. காரணம் ஈஸ்வரனை ஜெயிலில் சென்று சந்தித்த இந்திரஜித், அவனது கோபத்தைத் தூண்டி விடும்படி பேச அவனோ, அவர்களைக் குடும்பத்தோடு அழிப்பேன் என்று சூளுரைக்க, அவன் ஜெயிலில் இருந்து கொண்டு எதுவும் செய்ய முடியாது என்று அவனது கோபத்தைத் தூண்டிவிட, அதில் கோபம் கொண்ட ஈஸ்வரன் ஜெயிலில் இருந்து தப்பித்து விட்டவனுக்கு முதலில் கிடைத்த செய்தி தன் மகள் சாகவில்லை எங்கோ இருக்கிறாள் என்பது தான். அதனால் தன் ஆட்கள் மூலம் அவளைத் தேடி அலைந்தான். ஆனால், இந்தரின் கண்ணுக்குச் சிக்கக்கூடாது எனத் தெளிவாக இருந்தான். இஷானுக்குத் திருமணம் நடந்த விஷயமும் சேர, இவன் என்ன அவன் தம்பிக்கு அவளை விட்டுக் கொடுக்கப் பார்க்கிறானா? பெத்த தகப்பனையே ஜெயிலுக்கு அனுப்பினவ எப்படி நல்லவளா இருப்பா? அவளையும் அந்த இஷான், இந்திரஜித்தையும் கொல்ல வேண்டும் என்று பயங்கர வெறி பிடித்தவன் போல் அலைந்தான்.

ஆறுமாத காலமாக கயல் அங்கிருந்த ஒரு ஃபெர்டிலிட்டி சென்டரில் வேலை செய்து தன் பாட்டிக்குத் தேவையான மருத்துவச் செலவுகளைப் பார்த்துக் கொண்டு இருந்தவளுக்கு இஷான்மேல் எந்த எண்ணமும் எழாமலே போனது. ஆனால், இந்தர் மட்டும் தன்னைத் தப்பாக எண்ணி இருந்தானே என்று மட்டுமே அவளது மனதில் உறுத்திக் கொண்டே இருந்தது.

இத்தனை மாதங்களில் தன்னை உணர்ந்து இருப்பானா இந்தர் என்ற எண்ணமே அவளுக்கு இருந்ததில் தன் காதலையெல்லாம் மறந்தே போனாள்.

திடீரென டாக்டர் அவளது பாட்டிக்கு ஆபரேஷன் செய்ய வேண்டும். அவரது மூளைக்குச் செல்லும் இரத்தக் குழாயில் திடீரென அடைப்பு ஏற்படுவதாகவும், ஆபரேஷன் செய்தால் அவர் பழைய நிலைக்கு மாற வாய்ப்பு உள்ளது. ஆனால் அதுவும் எழுவது சதவிகிதம் தான். ஆபரேஷன் செய்யவில்லை என்றால் அவர் அதிகபட்சம் ஒரிரு வாரம்தான் உயிரோடு இருப்பார், என்று கூற தனக்கென்று இருக்கும் ஒரே உறவை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று அவள் ஆபரேஷன் செய்யக் கேட்க,

அதற்குக் குறைந்த பட்சம் எட்டு லட்சம் செலவாகும் என்று கூற அப்படியே இடிந்து போய் அமர்ந்தாள் கயல்.

அவளது சூழ்நிலையைப் பார்த்த அங்கிருந்த மருத்துவர் அவளையும், தண்டபாணியையும் அழைத்துப் பேசினார்.

“மோளே… நிங்கள்ட கஷ்டம் எனக்கு அறியாம்… ஆனா, இந்த சுட்சுவேஷன்ல எங்களால உங்களுக்கு ஃபுல் அமவுண்ட்டும் ஃப்ரீ பண்ண ஆகாதல்லோ… அதுக்கு நீங்கள் மனசு வெச்சா பணம் கிடைக்கும் மோளே” என்று கூற அவர் என்ன சொல்லப் போகிறாரோ என்று பீதியோடு அவரைஒ பார்க்க தண்டபாணியோ குழப்பத்தோடு பார்த்தான்.

அவளுக்குச் சிறிது நேரம் கொடுத்த மருத்துவர்,

“நிங்களுக்கும் காசு பிரச்சன உள்ளது. அவ்ளோ காசு யாரும் ஈஸியாகிட்டு கொடுக்கில்லல்லோ… அதுக்கே நான் இதைப் பத்திப் பேச வந்தது. என் ப்ரண்ட்டோட பேஷண்ட்க்கு தமிழ் அறிஞ்ச பெண் இந்த கேரள நாட்டிலே வாடகைத் தாயாய் வேணும்னு அவர்கள் கேட்டது. அதும் கல்யாணம் ஆகாத பெண்ணாக இருந்தா மதினு அவர்கள் நினைக்குது. அவங்க வீட்டு வாரிச சுமக்கப் போறதுக்கு அவங்க பத்துப் பனிரெண்டு லட்சம் கூட கொடுக்க ரெடியாயிட்டு… ஆனால் கன்டிஷன் இதுதான். அவங்களுக்கு கல்யாணம் கழியாத தமிழ்நாட்டுப் பொண்ணு தான் வேணும்னு… உங்களுக்கும் உடனே காசு வேணுமல்லே, அதான் உங்களுக்கு விருப்பம் இருந்தா இந்தப் ப்ரபோசலை கன்சிடர் பண்ணுங்க. இதுல அவங்க ஃபேமிலி டீடெய்ல்ஸ் இருக்கு. தங்களோட வாரிசு சுமக்குற பெண்ணுக்குத் தங்களைப் பத்தித் தெரிஞ்சால் மதி. அவளைப் பத்தி எங்களுக்கு ஏதும் தெரிய வேண்டிய அவசியம் இல்லனு சொல்லிட்டாங்க” என்றுவிட்டு எழுந்து செல்ல திக்கற்ற காட்டில் தொலைந்தவள் போல் நின்றாள் கயல்.

திருமணம் ஆகாமல் யாரோ ஒருவருடைய மகவை தான் சுமப்பதா? என்ற கேள்வி அவளை உருக்குலைக்க, அவள் தண்டபாணியைக் கண்ணீரோடு ஏறிட்டாள்.

என்னவென்று பேசி ஆறுதல் சொல்லுவான். அவனும் தன்னாலான உதவியை அவளுக்குச் செய்து அவளது பாதுகாப்புக்கு வழி செய்துகொண்டு தானே இருக்கிறான். இப்படி ஒரு இக்கட்டான நிலை வரும் என அவனும் எதிர்பார்க்கவில்லையே. அதுவும் பாட்டியின் உயிருக்கு விலையாகத் தன் பெண்மையைப் பலிகொடுக்க எந்தப் பெண் துணிவாள்?

“கயலு, இதுக்கு உயிரே போனாலும் ஒத்துக்காதேமா… பணத்துக்கு நாம வேற யார் கிட்டயாவது கேட்போம்மா… இது வேணாம்மா, நான் சொல்றதைக் கேளு கயல்…” என்று கூறியவனைப் பார்த்து விரக்தியில் சிரித்தவள்,

“அங்கே உயிருக்குப் போராடுறது எனக்காக உயிரையே பணயம் வெச்ச என் பாட்டிணே… அவங்களுக்கு நான் எதையுமே செய்யலையே அண்ணே… என் உயிரைக் காப்பாத்தப் போய்தான் அவங்களுக்கு இந்த நிலமைண்ணே… அவங்களைக் காப்பாத்த நான் இந்த முடிவைச் செய்யலாம்னு இருக்கேன்” என்று திடமாய் கூறியவள் தன் கையில் இருந்த அந்தத் தம்பதியின் விவரங்களை எடுத்துப் பார்த்தவள் அதிர்ந்தாள்.

2 thoughts on “என் சுவாசம் உன் வாசமாய் – 39”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *