Skip to content
Home » என் சுவாசம் உன் வாசமாய் – 40

என் சுவாசம் உன் வாசமாய் – 40

அத்தியாயம் – 40

அதில் விவரங்களைப் பார்த்தவள் அதிர்ந்து நிற்க, அவளது அதிர்ச்சியைக் கண்ட தண்டபாணி அதை வாங்கிப் பார்க்க அவனுக்கும் அதிர்ச்சி தான்…

நண்பன் தன்னிடம் கூடச் சொல்லாமல் திருமணம், அதிலும் குழந்தைக்காகக் கயலையே அணுகி இருப்பது என்பது அதிர்ச்சியாக இருந்தது.

அவனுக்கே அதிர்ச்சி என்றால் கயலுக்கு? என்று எண்ணியவன் அவளைப் பார்க்க, அவளோ அதிர்ச்சியாக இருந்தாலும் இது தான் நிதர்சனம் என்பதை உணர்ந்தவள் தன்னைத் தானே தேற்றிக் கொண்டாள்.

கண்களைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்தவள் தன்னையே பார்த்துக் கொண்டு இருந்த தண்டபாணியைப் பார்த்து புன்னகைத்தாள்.

அவளைப் பார்த்து வருத்தப்பட்டவன், “மன்னிச்சிடு கயல், எனக்கே அவனுக்குக் கல்யாணம் ஆனது தெரியாது… இ..இந்தப் ப்ரபோசல வேணாம்னு சொல்லிடலாம் கயல். உன் மனசைக் கஷ்டப் படுத்திக்காதே… நாம காசுக்கு வேற ஏற்பாடு பண்ணலாம்மா… வா போலாம்” என்று அவளைக் கைப்பற்றி அழைக்கக் கலங்கிய கண்களோடு அவனை ஒரு பார்வை பார்த்தவள்,

“எனக்கு இது தேவையில்லை அண்ணா… எ..எனக்கு இப்போ என் பாட்டியைக் காப்பாத்தனும். எனக்குனு இருக்குற ஒரே உறவை நான் காப்பாத்தியே ஆகணும். என் தாத்தாவும், பாட்டியும் என்னைக் காப்பாத்த உயிரையே பணயம் வெச்சாங்க. அவங்கள்ல என் தாத்தாவை தான் காப்பாத்த முடியாத பாவி ஆகிட்டேன்… என் பாட்டியையாவது நான் தக்க வெச்சுக்கனும். அதுக்கு உடனடியா பாட்டிக்கு ஆபரேஷன் பண்ணனும். அதுக்கான பணம் எனக்கு உடனே வேணும். என்னைப் பொறுத்தவரை அது யாரோட குழந்தையா இருந்தாலும் பரவாயில்லை. நான் சாரோகேட் மதரா மாறத் தயார்… முடிஞ்சு போன எதைப் பத்தியும் நான் யோசிக்க விரும்பலணா” என்று கூற,

“ஆனா கயல்… அவங்களுக்கு நீதான் சாரோகேட்னு தெரிஞ்சா? உனக்குனு ஒரு லைஃப் இருக்கு கயல், அதை யோசி… நாளைக்கு உனக்கு எப்படிமா கல்யாணம் ஆகும்? உங்க பாட்டி பிழைச்சாலும் இதைக் கேள்விப்பட்டா அவங்க தாங்குவாங்களா? ஏன்டா பொழைச்சோம்னு நினைப்பாங்கமா… நாம வேற வழியில பணத்துக்கு ரெடி பண்ணலாம்மா… இது வேணாம்மா, அதும் இவங்களுக்கு… ச்சே… அவனுக்கு எப்படிமா மனசு வந்தது?” என்று கூற, மனதைத் திடப்படுத்தியவள் கண்ணீரை உள்ளிழுத்து,

“அன்னைக்கு அவங்க அம்மா அவரை இழுத்துட்டுப் போனப்பவே அவரை வேணாம்னு முடிவு பண்ணிட்டேன்ணா… என்னைப் பொறுத்தவரை அவங்க எனக்குப் பணம் கொடுக்கப் போறவங்க அவ்ளோதான். இதுக்கு மேல அவங்களைப் பத்தி வேற பேசாதீங்க அண்ணே… இருங்க, இதுல சைன் பண்ணிக் கொடுத்துட்டு புரோசீஜர்ஸ் கேட்டுட்டு வர்றேன்” என்று விட்டுச் செல்ல முயன்றவளைத் தடுத்தவன்,

 “நாளைக்கு உனக்குனு ஒரு வாழ்க்கை இருக்கு கயல், அதை யோசிமா… உங்க பாட்டி நல்லா ஆனாலும் உனக்குக் கல்யாணம் செஞ்சு வைக்கத்தான் யோசிப்பாங்கமா…” என்று கூற அவனைப் பார்த்து விரக்தியாகச் சிரித்தவள்,

“பெத்த தகப்பனே பொண்டாட்டி, அப்பா, அம்மா, பொண்ணுனு கொலை பண்றான். அப்படிப் பட்டவனோட பொண்ணைக் கல்யாணம் பண்ணி உயிரைவிட யாரு தயாரா இருப்பாங்க ணா… அப்படிப்பட்ட கேவலமானவனுக்குப் பொறந்த பொண்ணுக்கு கல்யாணம் ஒரு கேடா? எனக்கு யாரும் வேணாம் ணா… எனக்கு என் பாட்டி மட்டும் போதும். அவங்க கூடவே என் லைஃப் போக்கிக்குவேன். வீணா யாரையும் கொல்ல நான் தயாரா இல்ல” என்றபடி சென்ற அவளைப் பார்த்தபடி நின்றான் தண்டபாணி.

கயல் வாடகைத் தாயாக இருக்க ஒப்புக் கொண்டு தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு கையெழுத்துப் போட்டுக் கொடுத்தவள், மனதின் ஓரம் வலி, அவளைச் சுவாசிக்கக் கூட விடாமல் தடுக்க, ஆழ்ந்து மூச்சை இழுத்து விட்டவள், சொல்லி அழக்கூட ஆளில்லாத தன் நிலையை எண்ணி உள்ளம் வலிக்கக் கல்லாய் நின்றாள்.

யாரோ முகம் தெரியாதவருக்கு வாடகைத் தாயாய் போவதை மனம் ஒப்புதல் தரவில்லை அவளுக்கு. முதலில் இஷானின் திருமண புகைப்படம் அதிர்ச்சியைத் தந்தாலும், ஈஸ்வரனின் மகள் தான் தான் என்று தெரிந்த பிறகு தன்னை ஏறெடுத்தும் பார்க்காமல் சென்ற இஷானின் மேல் இருந்த காதல், என்றோ வேரோடு அழிந்த உணர்வை உணர்ந்தவள் அதன்பின் அவனைப் பற்றி யோசிப்பதைக் கூட மறந்தாள். தன் கண் எதிரிலேயே பறி கொடுத்த தாத்தாவின் இறுதிச் சடங்கு கூட செய்ய முடியாத வகையில், பாட்டியினை உயிருக்கு ஆபத்தான நிலையில் ஊரைவிட்டு யாருமற்ற அகதியைப் போல, ஓடி வரவேண்டிய நிலையில் இஷானையெல்லாம் அவள் கொஞ்சம் கூட யோசிக்கவில்லை என்பது தான் உண்மை.

ஆனால், அன்று இந்திரஜித்தின் அவளைக் குற்றம் சாட்டும் பார்வையைத் தாங்க முடியாமல், எப்படியாவது நான் நடிக்கவில்லை என்று நம்பு இந்தர் என அதை மட்டும் மனதில் யோசித்துக் கொண்டே தான் இருந்தாள் என்பதை எண்ணியவள்,

இஷான் எப்படியும் திருமணம் செய்து கொள்வான். அவனது தாய் மீரா தன்னை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார். அதிலும் அவரின் குடும்பத்திற்குத் தன் தந்தையால் நேர்ந்த விபரீதம் அவளை இஷானோடு சேர்த்து யோசிக்கக் கூட விடவில்லை. இப்போது அவனது திருமண புகைப்படம் கண்டவளுக்கு அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தவே இல்லை.

எல்லாக் காதலும் சந்தோஷமான முடிவை அடைவது இல்லையே அதனால் அதைப் புறம் தள்ளியவள், இனி தன் வாழ்வை தன் பாட்டியோடு மட்டுமே கழிக்க வேண்டும் என உறுதியான முடிவை எடுத்தாள்.

தன்னைக் காக்க வேண்டி உயிருக்குப் போராடும் தன் பாட்டிக்காக தன் கருப்பையை வாடகைக்கு விடத் தயாரானவள், டாக்டர் நீட்டிய டாக்குமெண்ட்ஸ் எல்லாவற்றிலும் என்ன ஏது எனக் கூடப் பார்க்காமல், கைகள் நடுங்கக் கண்ணில் ஒரு துளி நீர் வழிய, கையெழுத்துப் போட்டு விட்டு நிமர்ந்தவளுக்கு மெடிக்கல் செக்கப் செய்யப் பணித்தார் மருத்துவர்.

அவளது ஆரோக்கியம் குழந்தையைச் சுமக்கப் பொருத்தமானதா? அவளது இரத்தம் என்ன வகை? அவளுக்கு இதற்குமுன் ஏதாவது பிரச்சனை இருந்து இருக்கிறதா? இதெல்லாம் தெரிந்த பின் தான் அவளை வாடகைத் தாயாக ஏற்று வேண்டிய பணத்தைக் கொடுப்பர்.

அதற்காக அவளுக்கு அவகாசம் குறைவு, பணம் உடனடித் தேவை. அதனாலேயே உடனடியாக செக்கப் செய்ய வேண்டும் எனக் கூறினர். எல்லாவற்றுக்கும் தலையாட்டியவள் மரம் போலத் தன்னை ஒப்புக் கொடுத்துவிட்டு நின்றாள்.

இதையெல்லாம் கூட இருந்து பார்த்தவனுக்கு மனம் பாரமாகிப் போனது. இஷானின் மேல் ஆத்திரமாக வர உடனே அவனுக்கு ஃபோன் செய்து விட்டான்.

எடுத்த இஷானிடம், “டேய், என்னடா பண்ணி வெச்சு இருக்க? அந்தப் பொண்ணு சரண்யாவைப் போய் கல்யாணம் பண்ணி வெச்சு இருக்க? இதுல சாரோகேட் மதரை வேற தேடுறீங்க? என்ன தான்டா நடக்குது அங்க?” என்று கேட்ட நண்பனின் கேள்விக்குப் பதில் சொல்லாமல்,

“கயல் சாரோகேட் மதரா ஆகச் சம்மதிச்சுட்டாளா?” என்று கேட்டதும், அதிர்ந்து போய் ஃபோனை பார்த்தான் தண்டபாணி.

“என்னடா சொல்ற? க..கயல்கிட்ட உங்க ப்ரபோசல் வந்து இருக்கு, என்னன்னு கேட்க ஃபோன் பண்ணா நீ கயல் சம்மதிச்சுட்டாளானு கேட்குற? என்னடா பண்ணி வெச்சு இருக்க?” என்று கேட்டான் அதிர்ச்சி மாறாமல்.

“அன்னைக்கு கயலோட தாத்தாவுக்குச் செஞ்சு கொடுத்த சத்தியப்படி அவளை இந்தர்க்கு கல்யாணம் செஞ்சு வைக்க வேணாமா?” என்றான் இஷான். அதைகேட்டு அதிர்ந்த தண்டபாணிக்கு அன்றைய நாளை நினைவு படுத்தினான் இஷான்.

அன்றைக்கு இஷானைச் சந்திக்க வந்த இராஜமாணிக்கம் பேசியது இதுதான்…

“தம்பி, நான் சுத்தி வளைச்சுலாம் பேச விரும்பல, நேரடியாவே பேசிடுறேன்… எங்க கயலை உங்க வீட்டு மருமகளா ஏத்துக்கோங்க தம்பி” என்று கேட்க அதிர்ந்து அவரைப் பார்த்தனர் இஷானும், தண்டபாணியும்.

“உட்கார்ந்து பேசுங்க சார்… இல்லீங்க… என்னால கயலைக் கல்யாணம் செஞ்சுக்க முடியாது சார்” என்று கூற,

அதைக் கேட்டபடி அமர்ந்தவர் லேசாகச் சிரித்து, “நீங்க உங்க அம்மா கூப்பிட்டப்போ, என் பேத்தியை நிமிர்ந்து கூடப் பார்க்காம போனீங்களே, அதுலேயே தெரிஞ்சுக்கிட்டேன். நீங்க அவளை உண்மையாக் காதலிக்கலை. ஏதோ, அவமேல இருந்த ஈர்ப்புல தான் கல்யாணம் வரை வந்து இருக்கீங்கனு தெரிஞ்சுகிட்டேன்…” என்று கூற அவரை ஆச்சரியமாகப் பார்த்தான் இஷான்.

“நான் சொன்னது சரிதானுங்களே” என்று கேட்க ஆமென மண்டையை ஆட்டினான் இஷான்.

“ஆனா இப்போ நீங்க?” என்று அவன் கேள்வியாய் நிறுத்தி அவரைப் புரியாமல் பார்க்க…

“நான் சொன்னது உங்க வீட்டுக்கு மருமகளா ஏத்துக்கோங்கனு தான். உங்களுக்கு மனைவியா இல்ல, உங்க தம்பிக்கு மனைவியா தான்” என்று கூற அவரை இன்னும் ஆச்சரியமாய் பார்த்தான் இஷான்.

“ஆமாம் தம்பி, நீங்க வீட்டுக்கு வந்தப்போ உங்க கண்ணுல ஈஸ்வரன் பொண்ணுனு என் பேத்திமேல வருத்தத்தை தான் பார்த்தேன். ஆனா, உங்க தம்பி கண்ணுல அவமேல கோபம். நீ ஏன் இவனோட பொண்ணாப் பொறந்தன்னு ஆற்றாமை. உண்மையை மறைச்சுப் பழகிட்டியேனு ஆத்திரம், எல்லாம் பார்த்தேன்… அதே சமயம், என் பேத்தி கண்ணுல நான் ஏமாத்தல, என்னை நம்பு இந்தர்னு அவனைப் பார்த்த பார்வையைத் தான் பார்த்தேன். அப்போவே புரிஞ்சுக்கிட்டேன். அவ ஆழ்மனசுல யார் இருக்காங்க, யாரோட நம்பிக்கையை அவ வாங்கனும்னு நினைக்கிறானு தெரிஞ்சுகிட்டேன்.

அவளுக்கும் உங்கமேல இருந்தது ஒருவித அந்த வயசுக்கு வர்ற ஈர்ப்புங்கிறதைப் புரிஞ்சுக்கிட்டேன்… நான் உங்ககிட்டப் பேசுறேன்னு சொன்னப்ப கூட அவ உங்ககிட்டப் பேச வேணாம்னு சொல்லிட்டா… ஆனா உங்க தம்பி அவளை நம்பாத பார்வை பார்த்தாருனு தான் அவ புலம்பினா, அதுலதான் புரிஞ்சுக்கிட்டேன். அவ மனசுல யாருனு… அதான் உங்க தம்பிக்கு அவளைக் கட்டி வைக்கச் சொல்லி கேட்த வந்தேன்…” என்று விட்டு சிறு இடைவெளி விட்டவர்,

“இதை என்னோட சுயநலமா கூட எடுத்துக்கலாம் தம்பி” என்று கூறியவரைப் புரியாமல் பார்த்தனர் இஷானும் தண்டபாணியும்.

“உங்களுக்கு நான் சொல்லி என் பையனைப் பத்தித் தெரிய வேண்டியது இல்ல தம்பி… எங்களையே கொல்லக்கூட தயங்க மாட்டான். அவன் அவ்ளோ கேடு கெட்டவன். நல்லவனா வளர்க்காம பெரிய பாவம் சேர்த்து வெச்சுட்டேன்…

ஆனா அந்தக் கேடு கெட்டவன்கிட்ட இருந்து என் பேத்தியைக் காப்பாத்தி அவனுக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்க உங்க தம்பியால தான் முடியும். ஏன்னா, உங்க தம்பி போலீஸ் ஆகப்போறாரு. அவருகிட்ட அதிகாரம் வந்தா அவர் உடனே ஈஸ்வரனை ஏதாவது செஞ்சு உள்ளேயே வைக்கத்தான் பார்ப்பாரு. அதே சமயம், அவன் நெருங்க முடியாத இடத்தில கயல் இருந்தா தான் அவளுக்கும் பாதுகாப்பு…

உங்களக் கல்யாணம் பண்ணா அவளுக்கு நிச்சயம் உங்களால பாதுகாப்புத் தரமுடியாது தம்பி… என்னதான் இருந்தாலும் அண்ணன் பொண்டாட்டி, அதும் ஈஸ்வரன் பொண்ணுனு அவரு கொஞ்சம் அலட்சியமா இருக்கலாம். ஆனா மனைவினு வந்துட்டா, அவமேல எந்தத் தப்பும் இல்லன்னும், அவளைக் காப்பாத்த வேண்டிய பொறுப்பும், அவங்க வாழுற வாழ்க்கை அவருக்கு உணர்த்தும். எல்லாத்துக்கும் மேல உங்க தம்பி தான் அவளை உயிரா நேசிக்குறாருனு தோணுது… அவர் கண்ணுல உரிமையான கோபத்தைப் பார்த்தேன். அது எங்க நமக்கானவ இவன்னு தோணுதோ, அங்கதான் உரிமையா கோபம் வரும்… அதுதான் அவங்க ரெண்டு பேரும் சேர்ந்தா சந்தோஷமாவும், பாதுகாப்பாவும் இருப்பாங்கனு தோணுது… எங்க காலம் இன்னும் எவ்ளோ நாளோ, அதுக்குள்ள உங்களப் பார்த்துப் பேசிடலாம்னு வந்தேன் தம்பி… நீங்க யோசிச்சு முடிவு பண்ணுங்க தம்பி… 

அப்படி எங்க பேத்திய உங்க தம்பி ஏத்துக்கலனா நான் என் பேத்தியோட பாதுகாப்புக்கு வேற வழி தேடணும்” என்று நீளமாகப் பேசி முடித்தார் இராஜ மாணிக்கம்.

எழுந்து அவரது அருகில் வந்த இஷான், “நான் யோசிச்சதைதான் நீங்களும் யோசிச்சு இருக்கீங்க. ஆனா அதை உணர வேண்டிய ரெண்டு பேரும் உணராம இருக்காங்க. நீங்க கவலைபடாதீங்க சார்… இந்தரையும், கயலையும் சேர்த்து வைக்க வேண்டியது என் பொறுப்பு” என்று கூறியவனை ஆச்சரியமாய் பார்த்தார் இராஜ மாணிக்கம்.

“நானும் நீங்க சொன்ன விஷயத்தைத் தான் யோசிச்சிட்டு இருந்தேன் இவ்ளோ நேரம். கயலுக்கு என்மேல இருக்குறது வெறும் ஈர்ப்பு தான்னு அன்னைக்கே புரிஞ்சது. எனக்கும் அது தான்னு புரிஞ்சது… அப்போதான் இந்தரோட காதல் உண்மையானதுன்னும் புரிஞ்சது… அவனைத் தவிர வேற யாராலயும் கயலை பத்திரமாப் பார்த்துக்க முடியாது. அதனால அவங்க சேர்றது தான் எல்லாருக்கும் நல்லது… நீங்க தைரியமா போங்க சார். கயலும் இந்தரும் கண்டிப்பா ஒண்ணா சேருவாங்க, நான் சேர்த்து வைப்பேன்…” என்று கூற அவனது கையைப் பற்றிக் கொண்டு நன்றி கூறியவர் கிளம்பிச் சென்றார். அன்றைய தினமே அவரது மரணம் இஷானது முடிவை உறுதியாக இருக்க வைத்தது. ஆனால், இந்தர் முதலில் ஐ.பி.எஸ்ஸாக வேண்டுமே… அதிகாரம் அவன் கையில் இருந்தால் தான் அவனால் ஈஸ்வரனைத் தைரியமாக எதிர்க்க முடியும். அதுவரை கயலைப் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்பதால் தான் அவளைக் கேரளாவிற்குத் தண்டபாணி துணையுடன் அனுப்பினான்.

இதையெல்லாம் நினைவு படுத்தியவன், “இப்போ புரியுதா?” என்று கேட்க தண்டபாணி முழுவதுமாய் குழம்பியவன்,

“டேய், அதுக்கும் இப்போ கயலை உன் குழந்தைக்கு வாடகைத் தாயா மாத்துறதுக்கும் என்னடா சம்பந்தம்? எப்போடா கல்யாணம் பண்ண?” என்று கேட்டான் குழப்பமாய்.

2 thoughts on “என் சுவாசம் உன் வாசமாய் – 40”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *