Skip to content
Home » என் சுவாசம் உன் வாசமாய் – 6

என் சுவாசம் உன் வாசமாய் – 6

அத்தியாயம் – 6

நம்ம ஹீரோயின் கயலுக்கு ஒரு பெரிய வியாதி இருக்கு… என்னதான் டீச்சர் புளி, எலுமிச்சை பழம் போட்டு விளக்கினாலும் எங்கேயாவது டவுட் கேட்டுட்டே இருப்பா… 

அதும் நடத்தும்போது எந்த டவுட்டும் வராது அம்மணிக்கு. எல்லாம் நடத்தி முடிச்சு ரொம்ப நேரம் கழிச்சுதான் டவுட் வரும்…

அதனால மேடம்க்கு டவுட் வர அதை அவள் கேட்டுக் கேட்டுக் கிளியர் செய்ய அவளது தோழிகள் இருவருக்கும் காதில் புகையாய் வந்தது.

நாட்கள் வேகமாய் நகர்ந்தது. ஆறுமாதம் ஓடிவிட்டது.

கீர்த்தியும் ரேணுவும் இஷானிடம் நெருங்கவே முடியவில்லை.

பின்ன டவுட் வந்தா தானே அவங்க கேட்க முடியும். அதுக்கு முதல்ல புரியனுமே… “இவ மட்டும் சார்கிட்ட க்ளோஸ் ஆகுறா? நம்மளைக் கழற்றி விடுறா? நாமளும் எப்படியாவது சார்கிட்டக் க்ளோஸ் ஆகனும்…” என்றபடி ப்ளான் செய்தனர்.

இவர்களைப் பற்றி எதுவும் கண்டும் காணாமல் நடந்து கொண்டான் தன்விக். ஏனெனில், அவன் வயதில் இஷான், இந்திரஜித், கயலை விடச் சிறியவன். ஆனால், எதையும் ஆராய்ந்து பக்குவமாக நடந்து கொள்ளும் பழக்கம் உண்டு. அதனால், தான் அன்று கயலின் வெட்கத்தைக் கண்டும் அவளே ஏதாவது இருந்தால் கூறுவாள். நாமளே எதையாவது கேட்டு இல்லாததைக் கூடக் கிளறி விட்டுவிடக் கூடாது என்று அவன் அமைதியாக அனைத்தையும் கவனித்தபடி இருந்தான்.

அதிலேயே அவனுக்கு இஷானது பார்வை கயல் மேல் படிவதும், அவளது பார்வையின் மாற்றமும் நன்றாகவே தெரிய இதைப்பற்றி இந்திரஜித்திடம் பேச வேண்டும் என முதலில் எண்ணியவன் பிறகு அந்த எண்ணத்தைக் கைவிட்டான்.

ஆனால், அப்பொழுதே அதைப் பேசி இருந்தால் இப்பொழுது நடக்கும் அனர்த்தங்கள் அனைத்தும் நடக்காமல் இருந்து இருக்குமோ?

இஷானும் அநியாயமாக இறந்திருக்க மாட்டானோ? விதி வலியது!

அவ்வப்போது இந்தர் தன் நண்பர்களின் படிப்பைப் பற்றித் தண்டபாணியிடம் கேட்டுத் தெரிந்து கொள்வான். தண்டபாணியும் இஷான், கயலைப் பற்றி அவனிடம் பேச எண்ணித் தன் நண்பனைப் பற்றி நாமே தவறாக எண்ணிவிடக் கூடாது என்று அமைதியாகி விட்டான். ஆனால் அப்படி இந்தர் பேசும்போது தான் கயல்விழி இஷானைவிட இரண்டு வயது தான் சிறியவள், அவள் ஏன் இத்தனை வருடம் படிக்காமல் இருந்தாள் என்ற காரணமும் தெரியவர, அதை அப்படியே இஷானிடம் கூறத் தாயை இழந்தவளது வலி அவனுக்கும் அதிகமாய் வலித்தது. தந்தையின் செயல்கள் பிடிக்காமல் அவள் வந்து தாத்தா பாட்டியுடன் படப்பையில் தங்கி இருக்கிறாள் என்ற எண்ணமும் அவள்மேல் ஒரு சாஃப்ட் கார்னரும் உண்டானது. ஆனால், அப்போதும் அவளது தந்தை யாரென அறிந்து கொள்ள அண்ணன் தம்பி இருவரும் முயலவில்லை.. 

ஆனால், அவள் மிகவும் அழுத்தமானவள் என்பதும் அதில்தான் அறிந்து கொண்டான். அப்போதைய நிலையில் அவளுக்கு படிப்பு மிக அவசியம் என்பதை உணர்ந்தவன் அவளுக்கு மிகச் சிரத்தையுடன் கற்றுக் கொடுக்க அவளும் எளிதாகப் புரிந்து புரியாதவற்றை சந்தேகம் கேட்டுத் தெரிந்து கொள்ளும் பாங்கும், அவளது அறிவும் அவனை ஆச்சரியப்படுத்தியது.

இதில் மற்ற இரு பெண்களுக்கும் அவள் மேல் சற்றுப் பொறாமையே. பின்னே, இந்த ஆறுமாத காலத்தில் இஷான் ஆடிட்டர் ஆபீசில் ஜுனியராக ஆகிவிட்டான். 

அவன் காலை கிளம்புவதற்கு முன் இவர்களுக்குக் கிளாஸ் எடுத்துவிட்டு உடனடியாகக் கிளம்புவான். இதில் கீர்த்தியும், ரேணுவும் கிளாஸ் முடிந்து வீட்டுக்குச் சென்று யூனிஃபார்ம் மாற்றி வருவர். ஆனால், கயல்விழிக்கு அங்கிருந்து வீடு சற்றுத் தொலைவு என்பதால் அவளை இங்கேயே இருந்துவிட்டுப் பள்ளிக்குச் செல்லுமாறு இஷானும், இந்திரஜித்தும் கூறிவிட அனைவரும் சென்ற பின்னும் அவள் மட்டும் இருப்பாள். அதனாலேயே இஷானுக்கும், அவளுக்கும் நெருக்கம் அதிகமாகியது. இதனைக் கண்டித்த தண்டபாணி தன் நண்பனுடனே இருப்பான்.

ஆனால், அதே சமயம் இஷானின் தாய் மீராவிற்கோ அவளது வேலைகள் படிப்பு, அறிவு எனப் பார்த்தும், இஷான் சொல்லியும் ரொம்பப் பிடித்து விட்டது. இஷான் அவ்வளவு சீக்கிரம் யாரையும் புகழ மாட்டான் என்பதே முக்கியக் காரணம்.

அதன்மூலம் அவள் காலையில் அங்கிருந்து தான் பள்ளிக்குப் போக வேண்டும் என்பது அவரது நிபந்தனை ஆகியது. காலையில் இஷான் கிளம்பும் முன் டீ சாப்பிடுவது அவனது வழக்கம். அதையும் அவள் கையால் அவனுக்குக் கொடுக்கும்படி செய்து விட்டார்.

காலையில் அவன் அங்கிருந்தே, “அம்மா, டைம் ஆச்சு டீ கொடுங்க” என்று கேட்க அவரோ, 

“நான் லன்ச் பாக்ஸ் பேக் பண்றேன் டா அங்க பசங்க யாருனா இருந்தா அனுப்பு, கொடுத்து விடுறேன்.” என்று கூறிவிட அதிர்ந்து பார்த்தான் இஷான்.

பின்னே தங்களது நெருங்கிய சொந்தங்களைத் தவிர வேறு யாரையும் உள்ளே வர அனுமதி அளிக்காதவர். நண்பன் தண்டபாணியைத் தவிர வேறு யாரையும் உள்ளே விடாதவர். இந்தரின் ப்ரண்ட் என்பதால் தன்விக்கை மட்டுமே உள்ளே வரை அனுமதித்தவர். பெண்கள் மூவரையும் வெளியவே நிறுத்திப் பேசி அனுப்பச் சொல்பவர். 

எல்லோரும் கிளம்பி விட்டனர் எஞ்சியது கயல் மட்டுமே எனத் தெரிந்தும் இப்படி ஒரு வார்த்தையைச் சொன்னால் அவனது சின்ன இதயம் அதிருமா? அதிராதா? அன்றைக்குத் தண்டபாணிக்கு ஒரு பயிற்சிக் கூடத்தில் இன்டர்வியூ இருந்ததால் அவனும் முன்கூட்டியே கிளம்பிவிட மிச்சம் இருந்தது கயலும் இஷானுமே.

‘இவனை நிமிர்ந்து பார்த்தா தானே மனசு அவன் பக்கம் பாயுது. ஏதேதோ ஆசை வருது… நாம படிக்கிற வேலையை மட்டும் பார்க்கலாம்னு’ அவள் தலையை முழம் நீளத்துக்கு புக்குல புதைச்சு வெச்சு இருக்க அன்று எடுத்துச் செல்ல வேண்டிய முக்கியமான ஃபைலை எடுத்துச் சரிபார்த்துக் கொண்டு இருந்தான் இஷான். இந்திரஜித் குளித்துக் கொண்டு இருந்தான்.

“ம்மா, தண்டபாணிகூட கிளம்பிட்டான்மா… நான் முக்கியமான வேலையா இருக்கேன். கொண்டு வாங்க ப்ளீஸ்” என்று அவன் கேட்க,

“நானும் பேக்கிங்ல பிஸிடா, போட்டு வெச்சுட்டேன். அதான் அந்தப் பொண்ணு இருக்கால்ல, அவள வந்து வாங்கிட்டு வரச் சொல்லு… டீ ஆறிப் போய்டும், சீக்கிரமே வரச் சொல்லு” என்றுவிட்டு அவர் மும்முரமாக வேலையில் இருக்க, அவர் கூறியது அவளது காதிலும் விழவும் இவனும் முக்கியமான வேலையாக இருக்கவும் தானே போக எழுந்தாள்.

“இல்ல, நீங்க இருங்க. நானே இந்த வேலை முடிச்சுட்டுப் போய்க்கிறேன்” என்று இஷான் தடுக்க,

“பரவாயில்லை சார், நீங்க முக்கியமான வேலையா இருக்கீங்க. நானே வாங்கிட்டு வர்றேன்” என்றபடி அவள் சென்று வாசலில் நின்று “ம்மா.. சார்க்கு டீ” என்று கூற,

“உள்ள வா மா… இங்க இருக்கு. கையெல்லாம் எண்ணெயா இருக்கு, நீயே எடுத்துக்க” என்று கூற அவளுக்கோ அதிர்ச்சி என்றால், உள்ளிருந்து குளித்துவிட்டு அவள் வந்து நின்றதையே பார்த்திருந்த இந்திரஜித்துக்கு ஆச்சரியம். தன் தாய் சொந்தக்காரங்களைக் கூட கிட்சனுள் நுழைய அனுமதிக்க மாட்டார். அவ்வளவு பஞ்சாங்கம். ஆனால் இவளை அவரே அழைத்தது ஆச்சரியம் தானே…

அவளோ சற்றே தயங்கியபடி உள்ளே அடியெடுத்து வைக்க அவளிடம் டீ கப்பைக் காட்டியவர்,

“அவன் குடிச்சதும் கொண்டு வந்துடுமா, நான் லன்ச் பாக்ஸ் கொடுக்கிறேன்” என்று கூற மேலும் அதிர்ந்தவள் தலையாட்டியபடியே டீயை எடுத்துச் சென்றவள் அவன் உட்காரச் சொல்லியும் உட்காராமல் அவன் டீயை அருந்தி முடித்ததும் கப்பிற்காகக் கை நீட்டினாள்.

“அம்மா லன்ச் பாக்ஸ் கொண்டு வரும்போது எடுத்துப்பாங்க, நீங்க உட்காருங்க” என்றான் அவன் அவளைப் பார்த்து.

“இ..இல்ல சார்… நீ..நீங்க டீ குடிச்சதும் கப்பைக் கொண்டு வந்து வெச்சுட்டு உங்க ல..லன்ச்சை என்னை எடுத்திட்டு வந்து கொடுக்கச் சொன்னாங்க” என்று கூற இஷானுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. அவன் அப்படியே நிற்க அவனிடமிருந்து கப்பை வாங்கியவள் சென்று அதைக் கொடுத்துவிட்டு நிற்க அவளிடம் லன்ச் பாக்ஸை நீட்டியவர்,

“டெய்லி மங்களகரமா இருக்கற பொண்ணு முகத்துல முழிச்சுட்டுப் போனா அவனுக்கு நல்லது நடக்கும்மா… என் மூஞ்சில முழிச்சா எப்படி நல்லது நடக்கும். அதான்மா உன்னை லன்ச் பாக்ஸ் கொடுக்கச் சொன்னேன். தப்பா எடுத்துக்காம இதை தினமும் காலையில் சாயங்காலம்னு செய்யுறியா? எனக்காக? எனக்கும் இங்க அங்கனு ஓட முடியலமா… சிரமம் பார்க்காம கொஞ்சம் செய்யுறியா?” என்று கூற, 

“இதுல ஒண்ணும் சிரமம் இல்லம்மா… நீங்க கூப்பிட்டா நாங்க வரப்போறோம். நீங்க உடம்ப வருத்திக்காதீங்க. ஆனா ஒண்ணுமா அம்மாவ விட பிள்ளைங்க வாழ்க்கையில அக்கறை இருக்குறவங்க யாருமில்ல. அதனால நீங்க இப்படியெல்லாம் யோசிக்காதீங்க…” என்று கூறிவிட்டு லன்ச் பாக்ஸை எடுத்துக் கொண்டு செல்ல அவனும் கிளம்பி வெளியே வந்தவன்,

“ம்மா வண்டி சாவி” என்று கேட்க அவசரமாய் லன்ச் பேக்கை அவனிடம் நீட்டியவள், “நான் வேணா வாங்கிட்டு வரவா சார். அவங்களுக்கு ஓடிவர முடியலனு சொன்னாங்க” என்று கூற மீண்டும் அதிர்ச்சியில் சரியென அவன் மண்டையை ஆட்ட அவள் வரும்முன் அவளிடம் சாவியை நீட்டினார். புன்னகையுடன் வாங்கியவள் அதே புன்னகையோடு அவனிடம் நீட்ட,

அவளது சிரித்த முகமும், எப்போதும் அழகிய விழியோடு சேர்ந்து ஜொலிக்கும் குங்குமமும் அவனுக்கு ஏதோ செய்ய மனதில் இதமாய் உணர்ந்தவன் இரண்டையும் வாங்கிக் கொண்டு திரும்ப, 

“பைல் எடுத்துக் கிட்டீங்களா?” என்று கேட்க அப்போது தான் நியாபகம் வந்தவன் ஷூவை கழற்றப் போக, 

“இருங்க, நானே கொண்டு வர்றேன்” என்றபடி அவளே கொண்டு வந்து நீட்ட அவளை நிமிர்ந்து பார்த்தவன் அவளது சின்னச் சிரிப்பில் அன்றைய நாளே வண்ணமயமானது போல் மாற,

‘வர்றேன்’ என்பது போலத் தலையாட்டி விட்டுக் கிளம்பினான். அவளோடு சேர்ந்து அவனது நாய் டைகரும் அவனுக்கு டாடா சொல்லியது.

ஆம், இப்போ ரெண்டு பேரும் திக் ப்ரண்ட்ஸ்…

தினமும் அவள் தடவிக் கொடுக்காமல் அது உணவே உண்பதில்லை.

தன் தாய் நடந்து கொண்டதையும், கயலின் நல்ல குணத்தையும் புரிந்து கொண்ட இந்திரஜித் சீக்கிரமே தனது குறிக்கோளை அடைந்து நினைப்பதைத் தன் தாயின் மூலம் நிறைவேற்ற வேண்டும் என எண்ணிக் கொண்டான்.

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்?

3 thoughts on “என் சுவாசம் உன் வாசமாய் – 6”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *