Skip to content
Home » ஒரு ஊரில் ஒரு நிலவரசி-4

ஒரு ஊரில் ஒரு நிலவரசி-4

4
சித்திரை மாதத்தின் அக்கினி நட்சத்திரத்தின் உக்கிர வெய்யிலுக்கு பயந்து யாரும் வெளியே
வராமல் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் அந்த உச்சி வேளைப் பொழுது. தார்க் கட்டி
நெருப்பில்லாமல் உருகி விடக் கூடிய வெப்பம். ஆடு மாடுகளும் கூட கொட்டகையில் தான்
அடைந்து கிடந்தது. தாகத்திற்கு நீர் குடிப்பதற்காக என்றால் கூட வெளியே போக விரும்பாத
வெய்யில்.
ஊரும் உலகமும் முடங்கிக் கிடக்கும் பொழுதில் சாவடியில் வந்து நின்ற மகாசுரனை யாரும்
பார்க்கவில்லை. கொஞ்ச நேரம் பொறுத்துப் பார்த்த மகாசுரன் தான் வந்து நின்றதற்கு
எந்தவிதமான பதட்டமும் இல்லாமல் இந்த கிராமம் இத்தனை துணிச்சலுடன் நிம்மதியாக
இருக்கிறதே என்று முதலில் சற்று ஆச்சரியப்பட்டவன் “ஊஹூம் இது சரிப்படாது. இவர்களை
ஒரு வழி செய்தால் தான் சரி” என்று தீர்மானித்தவனாக சுற்றும் முற்றும் பார்த்தான். என்ன
செய்யலாம்?
வெய்யிலுக்கு குடிசையின் நிழலில் கிடந்த ஒரு வெள்ளை நாயை எட்டி ஒரு உதை
உதைத்தான். எதிர்பாராமல் தன் மேல் விழுந்த தாக்குதலில் படுத்திருந்த இடத்தை விட்டு
ரெண்டு தெரு தள்ளிப் போய் விழுந்த அந்த நாய் வலி பொறுக்காமல் அலறி ஊளையிட்டது.
வீட்டுத் திண்ணையில் படுத்திருந்த ஒரு கிழவியின் மீது இந்த உதை வாங்கிய நாய் போய்
விழுந்து அந்த கிழவி ஆ என்று ஒரு மரண அலறில் தன் உயிரை விட்டாள்.
அப்போதும் ஊர் அமைதியாகத் தான் இருந்தது. மகாசுரன் பொறுத்துப் பார்த்தான். ஊஹூம்.
ஒரு குஞ்சு குழுவும் வெளியே வரவில்லை. பலம் கொண்ட மட்டும் தன் வாயில் காற்றை
நன்றாக உள்ளிழுத்து பட்டென்று வெளியே ஊதி விட்டான். சட்டென்று சூறாவளிப் போல
காற்று வரவும் சுதாரித்துக் கொண்ட கிராமத்தினர் இந்த திடீர் பருவ மாறுதலை
ஆச்சரியத்துடன் எதிர் கொண்டவர்களாக வெளியே காயப் போட்டிருந்த மிளகாய்
வற்றலையும் வெட்டி காயப் போட்டிருந்த மாங்காய் துண்டுகளையும் எடுப்பதற்காக வெளியே
வந்தார்கள். சட்டென்று வெளியே வந்து தேவையானவற்றை எடுத்து பத்திரப்படுத்துவதில்
முனைப்பாக இருந்ததினால் அப்போதும் மகசுரனை அவர்கள் கண்டுக் கொள்ளவில்லை.
பொறுமை இழந்து கோபத்தின் உச்சிக்கு போனவனாக தன் கையால் அருகில் இருந்த
குடிசைகளின் கூரையை பிடித்து இழுத்து விசிறி அடித்தான். சூறாவளி காற்றில் தான் கூரை
பிய்த்துக் கொண்டு போய் விட்டது என்று பதறியவனாக வீட்டின் உடமைக்காரன் வெளியே
வந்தான்.
அங்கே உறுமிக் கொண்டு நின்றிருந்த மகாசுரனைக் கண்டு விட்டான். நிமிஷ நேரத்தில்
அவனுக்கு கன்னியப்பன் சொன்ன அரக்கனின் நினைவு வரவே வீட்டிற்குள் ஓடி மனைவி
மக்களை இழுத்துக் கொண்டு வெளியே ஓடினான். அவர்கள் போட்ட அலறில் சுதாரித்துக்
கொண்ட கிராமத்தினர் எதற்காக இவன் இப்படி அலறுகிறான் என்று வெளியே எட்டிப்
பார்த்து உண்மை நிலவரம் அறிந்தவர்களாக மகாசுரனுக்கு பயந்து ஓடத் தொடங்கினார்கள்.
என்ன பிரயோசனம்? பின்னால் விரட்டிக் கொண்டு வந்து ஓடியவர்களில் சிலரை பிடித்து
விழுங்கினான். அவன் கால் பட்டு காயப்பட்டவர்களும் பயந்து உயிரை விட்டவர்களும்
அநேகர். எல்லாவற்றையும் துவம்சம் செய்து விட்டு நிதானமாக கிராமத்தை விட்டு நகர்ந்தான்.
அரை மணி நேரத்தில் அந்த கிராமமே அனுமார் புகுந்த அசோகவனம் போல
சின்னாபின்னமாயிற்று.
அடிக்கடி அந்த கிராமத்திற்கு வந்து எதிரில் தென்படுபவர்களை எல்லாம் பிடித்து விழுங்கி
விட்டு நிதானமாக போவான் என்னை யாரால் என்ன செய்து விட முடியும் என்ற
இறுமாப்புடன். உண்மையும் அது தானே. அவனை யாரால் என்ன செய்து விட முடிந்தது?
ஒருநாள் மாந்தோப்பில் நுழைந்தான் மகாசுரன். யாரையும் காணவில்லை. எதிரில் இருந்த
மரங்களை எல்லாம் வேரோடு சாய்த்துக் கொண்டும் சில பல பெரிய ஆல மரங்களையும் அரச
மரங்களையும் தன் தோளினால் இடித்து தள்ளிக் கொண்டு மனிதர்களைத் தேடிக் கொண்டு
மாந்தோப்பையே நாசமாக்கியவாறு சென்றான்.
மணி தன் தோழர்களுடன் சேர்ந்து கொண்டு உண்டிவில்லில் சிறு கற்களை வைத்து
மாங்காயைக் குறி பார்த்து அடித்துக் கொண்டிருந்தான். அவனோடிருந்த மற்ற சிறுவர்கள்
அவசர அவசரமாக கீழே விழுந்த மாங்காய்களைப் பொறுக்கி பைகளில் போட்டுக்
கொண்டிருந்தார்கள்.
தோப்புக்காரன் வந்தால் குரல் கொடுத்து எச்சரிப்பதற்கு ஒரு பொடியன் தோப்பின் முகப்பில்
நின்று இருந்தவன் மகாசுரனைக் கண்டு விட்டான். இவ்வளவு பெரிய உருவத்தை அவன்
ஆயுள்நாளில் கண்டவன் இல்லையாதலால் பயந்து அலறி அடித்து உள்ளே மணியை நோக்கி
ஓடினான்.
“மணி, மகாசுரன்………” அவன் திக்கித் திணறி சொல்லி முடிப்பதற்குள் மகாசுரனே அருகில்
வந்து அந்த சிறுவனை பிடித்து அவர்கள் கண் முன்னே விழுங்கி விட்டான். மற்ற சிறுவர்களோ
அசுரனின் கால்களுக்கிடையே புகுந்து ஓடினார்கள். அகப்பட்டுக் கொண்டான் மணி. அசுரன்
மணியைப் பிடித்து தூக்கி வாயருகே கொண்டு போன போது……..!
அசுரனின் கையில் திமிறிய மணி தன்னை நிதானப்படுத்திக் கொண்டு கையில் வைத்திருந்த
உண்டி வில்லால் சிறு கல்லை அசுரனின் நெற்றிப் பொட்டில் ஒரு அடி விட்டான்.
சர்ர்……………………..சர்ர்………….!
நிலை தடுமாறினான் அசுரன். தன் கால் சட்டைப்பையில் வைத்திருந்த கற்களை எடுத்து
அடுத்து…… அடுத்து …..! என்று எடுத்து சர்ர்…..சர்ர்……என்று அசுரனின் நெற்றியைக் குறி
வைத்து உண்டிவில்லால் அடிக்கத் தொடங்கினான் மணி. ஒரு குறியும் தப்பாமல் அசுரனின்
நெற்றியில் விழவே நிலை தடுமாறிய அசுரன் கையைத் தளர விட்டான். கீழே தொப்பென்று
விழுந்த மணி தன் கையில் உண்டிவில்லை பிடித்து மீண்டும் சரமாரியாக குறி பார்த்து
அடித்துக் கொண்டே இருந்தான்.
அசுரன் தலை தட்டாமாலை சுற்றி கீழே சரிந்தான். மரங்களை எல்லாம் முறித்துக் கொண்டு
பூமி அதிர பெரிய குரலில் ஊங்காரமிட்டவாறு கீழே விழுந்த அசுரனை பார்க்க ஓடிப் போன
மற்ற சிறுவர்கள் மெல்ல மெல்ல வந்தார்கள். மணி அவர்களை உரத்தக் குரலில் கூவி
அழைத்தான். பிறகு எல்லா சிறுவர்களும் ஒன்று சேர்ந்து தங்கள் கையில் வைத்திருந்த உண்டி
வில்லால் அடிக்க தொடங்கினார்கள்.
ஒரே நேரத்தில் உடம்பின் எல்லாப் பகுதியிலும் அடி விழவே மயங்கிப் போனான் அசுரன்.
பிறகு எல்லா சிறுவர்களும் ஒன்று சேர்ந்து அவன் உடலுக்குக் கீழே மரக்கட்டைகளை

Thank you for reading this post, don't forget to subscribe!

17

கொடுத்து நகர்த்தி கொண்டு போய் ஊருக்கு வெளியே காட்டில் விட்டு வந்தார்கள்.
தேவர்களையே கிடுகிடுக்க வைத்த அந்த மகாசுரன் சிறுவர்களின் உண்டி வில் கல்லினால்
சரிந்தான். பெரிய பெரிய சாம்ராஜயங்கள் எப்படி சிறு சிற்றர்சர்களால் சாயக்கபட்டதோ
அதைப் போல.
எப்போதுமே அதர்மம் பெரிய பாறையாக உருண்டு வரும் நம்மை உருட்டித் தள்ள. ஆனால்
தர்மம், உண்மை என்னும் சிறு உளியுடன் மட்டும் தான் வரும் அந்த பாறையை அடித்து
நொறுக்க. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.
என்றைக்கு இந்த உலகில் அதர்மம் வெற்றிக் கொண்டுள்ளது????
தாமதித்தாலும் தர்மம் அல்லவா ஜெயிக்கும்!
மகாசுரன் என்னும் அதர்மம் இப்போதைக்கு அடங்கித் தான் போயிருக்கிறதே தவிர அழிந்து
விடவில்லை. எந்த ரூபத்தில் மீண்டும் வருமோ? பொறுத்திருந்து பார்ப்போம்.

1 thought on “ஒரு ஊரில் ஒரு நிலவரசி-4”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *