“ஆரா… ஆரா… காப்பாத்து ப்ளீஸ்!” என்று அரைத் தூக்கத்தில், பயத்தில், பிதற்றிக்கொண்டிருந்தாள் நித்திலா.
மீண்டும் முன்பு வந்த அதே ஆக்டோபஸ் கனவு. அந்தமான் வந்ததிலிருந்து, கண்ணை மூடும் நேரமெல்லாம் ஆக்டோபஸ் கனவில் வந்து பயமுறுத்திக்கொண்டிருந்தது. இந்த உலகில் அவளுக்கு அதிக பயம் என்றால், அது ஆக்டோபஸ் மீது தான் என்று சொன்னால் மிகையல்ல. கனவில் வரும் அதே சம்பவம் நிஜத்திலும் நிகழ்ந்து, அன்று ஆரா தான் அவளைக் காப்பாற்றியிருந்தான்.
அந்தச் சம்பவத்திலிருந்து ஆக்டோபஸ் மீது தொற்றிக்கொண்ட பயமும் சரி, ஆரா மீது துளிர்விட்ட காதலும் சரி. இரண்டையும் அடியோடு அழிக்க முயன்று தோற்றுக்கொண்டு தான் இருக்கிறாள்.
அந்தச் சம்பவம் நிகழ்ந்து நான்காண்டுகள் இருக்கும். இத்தனை நாட்கள் இல்லாமல், இப்பொழுது ஏன் அடிக்கடி கனவில் வந்து இம்சிக்கிறது என்று புரியவில்லை.
ஒவ்வொரு முறையும் ஆக்டோபஸ் இவளை நெருங்குவதும், இவள் பயத்தில் ஆராவைத் தேடுவதும், அவன் வராமல் போவதும், பயத்தில் கனவைத் தொடர விரும்பாமல் இவள் முயன்று கண்விழித்துக்கொள்வதும் வழக்கமாகியிருந்தது.
அதே போல் இப்பொழுதும், கண்விழித்தாள் நித்திலா. கண்விழித்தவள் நிஜத்திலும், “காப்பாத்துங்க!” என்று கத்திக்கொண்டு எழுந்தாள்.
காரணம், அவள் படுத்திருந்த இடத்திற்கருகில், மராகுவா இனத்தவர் ஒருவர், மண்டியிட்டு அமர்ந்து, குனிந்து இவள் முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார். இவள் விழிக்கவும், இவள் முகத்திற்கு நேராக அந்த மனிதரின் முகம் தான் இருந்தது.
இவள் எழுந்து ஓடவும், அந்த மனிதரும் இவளைப் பின் தொடர முயன்றார். அதைக் கண்டு, இன்னும் பயம் தொற்றிக்கொள்ள, அந்தக் குடிலைவிட்டு, “தீரன்!!!” என்று உச்சக்கட்ட குரலில் கத்திக்கொண்டே ஓடினாள்.
காலை பத்துமணி போல் எமரால்ட் தீவிற்கு வந்து சேர்ந்தனர் நித்திலாவும், தீரனும். வரும்வழியிலேயே அவ்வப்போது அமர்ந்தபடியே உறங்கிவிட்டதால், கரை சேர்ந்த பின்பு தெம்பாய் நடமாடினான் தீரன். ஆனால், வரும் வழி முழுதும், நின்றபடி வேடிக்கைப் பார்த்துவந்த நித்திலாவுக்கு மிகுந்த அசதி.
முன்பு, ஆராய்ச்சி செய்தர்வர்களுக்கென போடப்பட்டிருந்த குடில்கள் இன்னும் இருக்க, அதில் அமுதன் தங்கியிருந்த குடிலுக்கு அவளை அனுப்பி ஓய்வெடுக்கச் சொன்னான் தீரன். பசி வயிற்றைக்கிள்ளியதால் அவர்களுடன் சமைப்பதற்கென வந்தவரை, ஏதேனும் செய்துத்தரும்படி நச்சரித்துக்கொண்டிருந்தான்.
அமுதன் காணாமல் போய் கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகியிருக்கும். அப்போது காலி செய்த சமையலறையை, இப்போது தான் மீண்டும் உயிர்ப்பித்துக்கொண்டிருந்தார் அந்தச் சமையல்காரர். இதில் தீரனின் நச்சரிப்பு வேறு!
எப்படியோ, அவசரத்திற்கு ஒரு உப்புமாவைச் செய்து அவன் கையில் தந்தார் அவர்.
‘பசிச்சா இந்தப் புலி உப்புமா கூட சாப்பிடும் டா!’ என்று ஒருவழியாக அப்போது தான் முதல் வாய் உணவைக் கையில் எடுத்தான்.
“தீரன்!” என்று அலறிக்கொண்டு ஓடி வந்தாள் நித்திலா.
‘இவ வேற!’ என்று அவன் மனம், பாவம் பசியில் சளித்துக்கொண்டது.
“என்ன நித்திலா?” என்று கேட்டவனிடம், “அந்தக் காட்டுவாசி… இங்கயும்… நான் தூங்கிட்டு இருக்கப்போ…” என்று மூச்சு வாங்க பேசினாள்.
“என்னது? இங்கயா?” என்று உணவுத்தட்டைக் கீழே வைத்துவிட்டு, தீரனும் அந்தச் சமையல்காரரும் கண்ணுக்கெட்டிய தூரம் வரைத் தேடினர். ஆனால், நித்திலா சொன்னது போல் யாரும் அவர்கள் கண்ணில் சிக்கவில்லை.
“நித்திலா. யாரும் இல்லையே!”
“நான் பாத்தேனே. என் முகத்துக்கு அவ்ளோ கிட்ட”
“நாங்க எல்லாரும் இதுக்கு முன்னாடி ஆறு மாசம் இந்தத் தீவுல தான் இருந்திருக்கோம். ஒரு தடவை கூட அவங்கள பார்த்ததில்ல. இப்போ மட்டும் ஏன் வரப் போறாங்க! கனவு ஏதாவது கண்டிருப்ப”
“கனவு கண்டேன் தான். ஆனா, காட்டுவாசி கனவு இல்ல. நிஜத்துல தான் பாத்தேன்”
“அப்போ கனவுல என்ன பாத்த?”
“ஆக்டோபஸ். அது அந்தமான் வந்ததுல இருந்து அப்பப்போ வருது. அதை விடு!”
“உனக்கு இன்னும் ஆக்டோபஸ் மேல பயம் போகலையா?” என்று சிரித்தான்.
“இல்ல. கனவுல அதைப் பார்த்து பயந்து எழுந்தா, நிஜத்துல காட்டுவாசி” என்று இப்போதும் குரலில் திகிலுடன் பேசினாள் நித்திலா.
“ஒருவேளை. நீ இன்னைக்கு வர்ற வழில மராக்குவாஸைப் பார்த்து, அவங்கள பத்தி கதை எல்லாம் கேட்டுட்டு வந்தல்ல. அதனால நீயே அவங்க வந்த மாதிரி கற்பனைப் பண்ணியிருப்ப!” என்றான் தீரன்.
“இல்ல. நிஜமாவே வந்தாங்க. நம்பு”
“சரி. வந்தாங்க. இப்போ இல்ல. என்ன பண்ண முடியும். போய் தூங்கு. திரும்ப வந்தா பாத்துக்கலாம்”
“திரும்ப வந்தா? நான் என்ன பண்றது?”
“திரும்ப கனவுல ஆக்டோபஸ் வந்தா என்ன பண்ணுவ?”
“பாதியில எழுந்துடுவேன்”
சிரித்தான் தீரன்.
“அடுத்த முறை, கனவோ நிஜமோ, பயத்தைப் பார்த்து ஓடாம அதை எதிர்கொள்ள முயற்சி பண்ணு” என்றான்.
சரி என்பது போல் தலையசைத்தாள் நித்திலா.
“தீரன், நீ சாப்பிட்டு வா. எனக்கு இதுக்கு முன்னாடி இங்க இருந்தவங்க ஆராய்ச்சி பண்ண லேப்’ஐ பார்க்கணும்” என்றாள்.
“சரி” என்றவன், இருந்த பசியில் அவசரமாகத் தட்டில் இருந்தவற்றை எல்லாம் உண்டு முடித்தான்.
“எனக்கு வேணுமான்னு ஒரு வார்த்தைக் கேட்டியா?” என்று நித்திலா கேட்கவும், “ஐயையோ! பசிக்குதா?” எனக் கேட்டான் தீரன்.
அவனை முறைத்தவள், “நான் ப்ரெட் சாப்டுக்கறேன், இப்போ வா” என்று அவனைச் சமைக்கும் இடத்திலிருந்து அழைத்துச் சென்றாள்.
இதற்கு முன் அங்கே ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சிக் கூடத்திற்குச் சென்றார்கள்.
அங்கே செய்த ஆராய்ச்சிகளின் தடயம் எதுவுமே இல்லாமல் இருந்தது.
“எல்லாமே சுத்தமா முடிச்சிட்டீங்க போல. எந்த ஆதாரமும் இல்லாம!” என்று சிரித்தாள் நித்திலா.
புன்னகையைத் தவிர வேறு பதிலில்லை தீரனிடம்.
“உனக்கு என்னைப் பத்தி, நான் உன்னைச் சந்திக்குறதுக்கு முன்னாடியே தெரியும்ல்ல தீரன்?” என்று நித்திலா கேட்க, “தெரியுமே! நித்திலான்னு ஒருத்தவங்க தான் அமுதனோட போஸ்ட்க்கு வராங்கன்னு எங்க பாஸ் சொன்னாரு” என்றான் தீரன்.
“அதைக் கேட்கல. என்னையும் ஆராவையும் பத்தி உனக்குத் தெரியும்ல்ல”
“என்னது? உன்னையும் அமுதனையும் பத்தி என்ன? என்ன கேக்கற?”
சாதாரணமாக ஏதோ கேட்கிறாள் என்று தான் நினைத்தான் தீரன். ஆனால், அவள் முகத்தில் சட்டென்று குடிபுகுந்த கடுமையைப் பார்த்ததில், என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் குழம்பினான் தீரன்.
“எனக்கு ஆக்டோபஸ்ன்னா பயம்ன்னு நான் உன்கிட்ட சொல்லவே இல்லையே. ஆராவைத் தவிர வேற யாரும் அதை உன்கிட்ட சொல்லியிருக்க வாய்ப்பில்ல தான தீரன்?” என்று நித்திலா கேட்ட கேள்விக்கு, ‘இல்லை’யென்று சொல்ல காரணம் தேடித் தோற்றான் தீரன்.
“ஆமாம்” என்றான்.
“அப்போ. எனக்கு ஆராவைத் தெரியும்ன்னு உனக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தும், எதுவுமே தெரியாத மாதிரி நடிச்சிருக்க? அதுக்கு என்ன காரணம்?”
“அது…” என்று எங்கிருந்து தொடங்கி இவளிடம் எதை எப்படிச் சொல்வது என்று யோசித்துக்கொண்டிருந்தான் தீரன்.
அதற்கான அவகாசத்தை அவனுக்கு அளிக்க விரும்பாதவள் போல் குறுக்கிட்டாள் நித்திலா.
“அப்படி உன் மேல தப்பில்லைன்னா, நீ ஆராவை எதுவும் செய்யலைன்னா, நீ ஏன் என்னைத் தெரியாத மாதிரி நடிக்கணும். ஆரா உங்களைப் பத்தி முன்னாடியே சொல்லியிருக்கான்னு என்கிட்ட சொல்ல வேண்டியது தான!” என்று அவள் பேசப் பேச, கோபம் வந்தாலும், பொறுமை காக்க முயன்றான் அவன்.
“நித்திலா. அப்படியில்ல” என்று ஏதோ சொல்ல வந்தவனைப் பேச விடாமல், “அவனை என்ன பண்ணீங்க! கொன்னுட்டீங்கன்னா, அதையாவது சொல்லிடேன்” என்று சொல்ல, அதற்கு மேல் இழுத்துப்பிடித்திருந்த பொறுமையைத் தக்கவைத்துக்கொள்ள முடியாமல், கத்தினான் தீரன்.
“எத்தனை தடவை சொல்றது உனக்கு. அமுதனை நான் எதுவும் பண்ணல. அவன் செத்துட்டானா, இல்லை உயிரோட இருக்கானான்னு உனக்கு எப்படித் தெரியலயோ, அதே மாதிரி தான் எனக்கும்.
நீ சொன்ன மாதிரி, உன்னைப் பத்தி எல்லாமும் எனக்கு அமுதன் சொன்னான் தான். காதல்வயப்பட்டவன் எப்படி சதாசர்வ காலமும் காதலியைப் பத்தி பேசிக்கிட்டே இருப்பானோ, அப்டி தான் உன் மேல இருக்க காதலை உணர்ந்ததுக்கு அப்புறம் அமுதனும் பேசிக்கிட்டு இருந்தான்.
உன் கிட்ட, என்னை என்னனு வந்து சொல்ல சொல்ற?
நீ சொல்லேன், உனக்கு அமுதன் யாரு?” என்று அவன் கேள்வியில் நிறுத்த, திடீரென அவன் கத்தியதில் ஸ்தம்பித்து இருந்தவள், “ஆரா… எனக்கு… நான் லவ் பண்ண பையன்” என்றாள் வார்த்தையை மென்று விழுங்கி.
“ரைட்டு. நீ லவ் பண்ற. அது தான உனக்குத் தெரியும். ஆனா, அவன் உன்ன எவ்ளோ லவ் பன்றான்னு என்னைத் தவிர, உன்னையும் சேர்த்து யாருக்கும் தெரியாது” என்று தீரன் பேச, அதற்குப் பதில் பேச முடியாமல், அவன் சொன்னதையெல்லாம் உள்வாங்கிக்கொள்ளும் முயற்சியில் இருந்தாள் நித்திலா.
“உன்னைப் பொறுத்தவரைக்கும் அவன் உன்னைக் காதலிக்கல. அதுக்கே, இதோ இப்போ இங்க வரைக்கும் வந்து நின்னு கேள்வி கேட்கற.
அவன் உன்ன பத்தி என்கிட்ட சொல்லியிருக்கான்னு சொல்லி, அவன் உன்ன காதலிச்சதை உனக்குத் தெரியப்படுத்த சொல்றியா?
எனக்குத் தெரியல நித்திலா. உன்கிட்ட நான் என்ன சொல்லணும்ன்னு.
நான் அவன் கண்ணுல பார்த்த காதல, இந்த ஜென்மத்துல உனக்குப் பார்க்கக் குடுத்துவச்சிருக்கான்னு எனக்குத் தெரியல.
அவன் இன்னும் எங்கயாவது உயிரோட இருக்கானா? இல்ல, செத்துட்டானா? எனக்கும் தான் தெரியல.
அப்படி, அவன் இல்லங்கிற பட்சத்துல, உன்கிட்ட அவன் காதலைப் பத்தி சொல்லி, நீ மூவ்-ஆன் ஆகுறத இன்னும் கடினமாக்க வேணாம்ன்னு நெனச்சேன்”
மனதில் உள்ளதை மொத்தமாகக் கொட்டிவிட்டு பின், ஒரு ஆசுவாசப் பெருமூச்சு விட்டான்.
“ரொம்ப நன்றி! எதையும் உன்கிட்ட சொல்லாம, மறைச்சு வச்சி பேசுறது எனக்குக் கஷ்டமா தான் இருந்துச்சு. ஆனா, உனக்குக் கஷ்டமா இருக்கக்கூடாதுன்னு தான் எதுவும் சொல்லல. இப்போ பாரம் கொறஞ்ச மாதிரி இருக்கு” என்றவன், நித்திலாவைப் பார்க்க, அவள் கண்கள் கண்ணீரால் பளபளத்தது.
“நீ அழு! உன் லவ்வு. நீ அழுது தான் ஆகணும். உன்ன கஷ்டப்படுத்த வேணாம்ன்னு நினைச்சது தான் என் தப்பு” என்றவன் “இருந்தாலும், ஒருத்திக்கு இவ்ளோ சந்தேகம் ஆகாது!” என்று முணுமுணுத்தான்.
“தீரன். ஆரா, என்னை லவ் பண்றேன்னு சொன்னானா? நிஜமாவா?” என்று அவள் கலங்கிய கண்களுடன் கேட்க,
“நான் சொல்ற எதையுமே நம்ப மாட்டியா நீ!” என்றான் கோவமும் பாவமுமாக.
“என்கிட்ட ஒரு முறையாவது சொல்லியிருக்கலாம்” என்று அழுதவளைப் பார்த்தவனுக்கு மனம் இறங்கியது.
“சரி. அழுவாத” என்று அவன் அமைதியாய் சொல்ல, இன்னும் அதிகம் அழுதாள்.
“நீ வர்ற வரைக்கும், என் பாஸ் அமுதனை ஏதாவது பண்ணியிருப்பாரான்னு நான் யோசிக்கவே இல்ல. ஆனா, இப்போ அந்தக் கோணத்துல யோசிச்சிப் பார்க்க தோணுது. என் பக்கத்துல இருந்து ஏதாவது கண்டுபிடிக்க முடியுதான்னு பார்க்கறேன்” என்றான்.
நிற்காமல் வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள்.
“அமுதனோட டீம், ரிஸர்ச் பண்ண ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட ஆதாரங்கள் எல்லாத்தையும் அழிக்கத் தான் சொன்னாங்க. ஆனா, சாஃப்ட்-காபீஸ் எல்லாம் பேக்-அப் எடுத்து வச்சிருக்கேன். ஒருவேளை தேவைப்படுமோன்னு. என் லேப்டாப்ல இருக்கு. அதுல உனக்குத் தேவைப்படுற மாதிரி ஏதாவது இருக்கான்னு பாரு” என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு வெளியேறினான்.
சுமார் பத்து நிமிடங்கள், நின்ற இடத்திலேயே நின்று அழுதுவிட்டு, வெளியே சென்றவளுக்காக, கையில் ப்ரெட், பிஸ்கெட் எல்லாம் வைத்துக்கொண்டு நின்றிருந்தான் தீரன்.
“சாப்பிடு. சாப்பிடாம இருந்து, உனக்கு ஏதாவது ஆகி, இந்த அமுதன் உயிரோட இருந்து, அப்புறம் என் சட்டையைப் புடிச்சி, ‘என் ஆளை என்ன டா பண்ண?’ன்னு கேக்குறதுக்கு” என்று சொல்லிக்கொண்டே கையில் வைத்திருந்ததை எல்லாம் அவள் கையில் திணித்தான்.
“சாரி” என்றாள் தலைக் குனிந்து.
முறைத்தான்.
அவள் உண்ணத்தொடங்கியதும், அவன் தங்குவதற்கென இருக்கும் குடிலுக்குள் நுழைந்தான் தீரன்.
தீரனுக்கு மிகவும் இளகிய மனமெல்லாம் இல்லை தான். ஆயினும், அவள் இவனைச் சந்தேகமாகப் பார்ப்பதையோ, இல்லை இவன் கண் முன்னால் அவள் அழுவதையோ எல்லாம் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை அவனால்.
‘கடவுளே! என் கூட இருக்கும் போதாவது அவளை அழ வைக்காதப்பா!’ என்று ஒரு வேண்டுதல் வைத்தான்.
இவர்கள் இருவரும், உரையாடிக்கொண்டிருந்த அதே நேரம், இவளை நேரில் பார்த்த அந்த மராக்குவா மனிதர், க்ரிஸ்டல் தீவின் நாயகன் ஆகியிருந்தார்.
‘அந்தப் பெண்ணைக் கண்டேன்!’ என்று அந்தத் தீவுவாசிகள் அனைவரிடமும் சொல்லியிருந்தார் அந்த மனிதர்.
உடல் முழுவதும் காயங்களுடன், கால்களை அசைக்கக் கூட முடியாத வண்ணம், படுத்திருந்த ஆராவமுதனிடமும் அந்தச் செய்தியைச் சொல்ல விழைந்தனர்.
இவன் பேசுவது அவர்களுக்கு முழுதும் புரியவில்லை என்றாலும், கொஞ்சம் புரிந்தது. அவர்கள் மொழி இவனுக்கு மொத்தமாகவே புரியவில்லை. ஆனால், அவர்கள் சைகைகளை வைத்து ஓரளவு புரிந்துக்கொள்ள முயற்சித்தான்.
அவன் கையிலிருந்த கீ-செயினைக் காண்பித்த அந்த மனிதர், அதிலிருக்கும் நித்திலாவின் புகைப்படத்தைக் காண்பித்து, அவளைக் கண்டேன் என்று சொன்னது புரிந்தது.
சென்னையிலிருக்கும் அவளை இந்த மனிதர் இங்கே எப்படி, எங்கே சந்தித்திருப்பார் என்ற கேள்விகள் எல்லாம் அவனுக்கு இரண்டாவதாகத் தான் தோன்றியது. முதலில் தோன்றியது உவகை தான்.
அவளுடன் ஆட்கள் இருப்பதாகவும், அவள் இவரைக் கண்டாலே அஞ்சுவதாகவும், எப்படியாவது அவளை இங்கு அழைத்து வருவதாகவும் ஆராவமுதனிடம் சொன்னார் அந்த மனிதர்.
வார்த்தைகளால் நன்றி சொல்ல முடியவில்லை என்றாலும், அவன் முகபாவங்கள் அவருக்கும் புரிந்தது.
அவன் கையில் வைத்திருந்த அந்த கீ-செயினை அவரிடம் கொடுத்தான். அதைக் காண்பித்து அவளை அழைத்து வரச்சொல்கிறான் என்று புரிந்துக்கொண்டார்.
இங்கு வந்து எத்தனை நாட்கள் ஆனது என்று அவனுக்குத் தெரியாது. சுயநினைவு இல்லாமல் பல நாட்கள் கிடந்தான். அவன் கண் திறந்து இன்று ஆறாவது நாள்.
நாற்கணக்கு வைத்துக்கொள்வதற்கோ, இல்லை ஒருவேளை அவன் இறந்துவிட்டால், அவன் மனதில் நினைத்ததை எல்லாம் நித்திலாவிற்குச் சொல்வதற்கென்றோ தினமும் அவளிடம் சொல்ல நினைக்கும் ஏதோ ஒன்றை அவனிடமிருந்த சிறிய நாட்குறிப்பில், உடலில் மிஞ்சியிருக்கும் தெம்பையெல்லாம் சேர்த்து எழுதிவைத்திருந்தான்.
“எனக்கு வாழ்க்கை இன்னும் ரொம்ப நாள் இல்லைன்னு தெரியும். ஆனா அதுக்கு முன்னாடி உன்னை ஒரு முறைப் பார்த்துடனும்! அது நடக்கும்ன்னு இப்போ நம்பிக்கைப் பிறந்திருக்கு”
.. “ஆரா”
என்று இன்றைய தின குறிப்பை எழுதினான் ஆராவமுதன்.
** ** ** ** ** **
Super👍
Thank you
சூப்பர். .. ஆரா நித்திலன் ஜோடி சேர்த்து வைங்க
Thank u so much sis. Final episodes posted. Padichitu thittaadheenga 🤧
nianchen crt antha kathai mariye ivanukum nadanthu iruku apo ivan sonna adayalam vachi tha anha marakuvas vanthu pakuraru aduthu nithila kitta solli ivana vanthu paka vaikanum rendu perum seranum
Thank you so much sis