Skip to content
Home » கண்ணுக்குள் கடல்-12

கண்ணுக்குள் கடல்-12

அத்தியாயம்-12

மானஸ்வின்னு சென்னையில் எந்த கிரிமினல் பெயரும் இல்லை என்று கலீயமூர்த்தி உரைத்திட, விஹான் கடுமையான முகபாவத்தோடு வீற்றிருந்தான்.

“சரி சார். வேற யாராவது புது கிரிமினலா இருக்கலாம்” என்று எழவும், “அப்படி தான் தெரியுது. ஏன்னா.. இங்க பணத்துக்கு டிமான்ட் வரவும், காலேஜ் படிக்கிற பொண்ணு கூட தப்பு பண்ணுறாங்க.

தன் மானத்தையும், மற்றவர் உயிரையும் மதிக்காம, பணம் மட்டுமே குறிக்கோளாக இருக்கறவங்க பெருகுறாங்க. அதன் விளைவு புது புது கிரிமினல் உருவாகறாங்க.
அவங்க மாட்டிக்காத வரை நம்மளோட இரண்டற கலந்த மக்கள் தான்‌.” என்று கூறியதை விஹான் கேட்டுக்கொண்டான்.

ஏனோ அந்த பெண் மானஸ்வி குற்றம் புரியும் முகமாக தெரியவில்லை. ஆனால் அண்ணன் இழப்பால் அவன் யாரையும் நல்லவர் தீயவர் என்று காண்பதை காட்டிலும் கண்மூடித்தனமாக இருந்தான்.

இந்த மானஸ்வி ஏதோ நெருடலாய் வீட்டை நோட்டமிட்டதை நேரில் கண்டதால் நம்பாமலும் இருக்க முடியவில்லை.

அந்த முகம் எளிதில் மறக்க முடியவில்லை. சாதாரண காட்டன் சுடிதார் விஹான் இழுக்க உடை வேறு கிழிந்தது.‌ அந்த நேரம் அப்பெண்ணின் கண்ணில் இருந்தது‌ உண்மையான மானம் போனால் கவலை என்று கலங்கிய முகம். அதை விஹானால் உறுதியாக கூறமுடியும்‌.

எதற்கும் தேடுதலை நிறுத்தாமல் பைக்கை இயக்கியவனுக்கு அந்த பொண்ணு உண்மையை சொல்லியிருந்தா? அண்ணா அவளை காப்பாற்றியிருந்து அவ அண்ணனை காண வந்திருந்தால்? என்றதும் பைக்கை நிறுத்தினான்.‌

கலீயமூர்த்தியிடம் உரைத்திட எண்ணி வண்டியை திருப்ப முயன்றான். ஆனால் ஒருவழி பாதை என்பதால் நேராய் சென்றான்.

பட்டினப்பாக்கம் பீச் பக்கம்‌ வண்டியை நிறுத்தி நடந்தான். அண்ணன் திருமணம் முடித்து இத்தனை நாட்கள் கழித்து ஆசையாக காண வந்தவனுக்கு இத்தனை பெரிய தண்டனை கடவுள் கொடுத்திருக்க கூடாது.

  இதையே நினைத்து நடந்தான். வீட்டிலிருந்து தந்தை போனில் அழைத்தார்.‌

‌ “எங்கயிருக்க?” என்று கேட்டார்.

  விஹானிற்கு சினம் துளிர்த்தது. “எப்ப பாரு எங்க இருக்க? என்ன பண்ணற? எவளோட கூத்தடிக்குற? இதை தவிர உங்களுக்கு என்னிடம் பேச எதுவுமில்லையா?” என்று கத்தினான்‌

  அவன் பக்கத்தில் மணலில் புரண்டு படுத்த நாய் கூட விஹானின் சத்தத்தில் எழுந்து வேறிடம் பார்த்தது.

   “எங்க பேச்சை தட்டாத பிள்ளை ஒருத்தன் இருந்தான் டா. அவனை எமனுக்கு கொடுத்துட்டு உட்கார்ந்திருக்கேன். இப்ப உன்னை விசாரித்து உன் நலனை தெரிந்துக்க போன்‌ பண்ணறேன். அது தப்பா?” என்றதும் விஹான் கோபம் தணிந்தது.

   “அண்ணன் கேஸ் விஷயமா கலீயமூர்த்தி சாரிடம் பேசிட்டு திரும்பி வந்துட்டு இருக்கேன்.” என்று கூறினான்.

‌ “அந்த பையன் எங்கயிருக்கான்னு தெரிந்ததா?” என்று கேட்டார்.

   “இல்லை.. தொரிந்தா அட்லீஸ்ட் அவர் அப்பாவிடம் சேர்த்து வைப்பேன்.” என்று கூறினான்.

   “உங்கண்ணி இன்னிக்கும் சரியா  சாப்பிடலை. இப்படியே போனா இந்த வீட்டு வாரிசு பிறக்கறது நம்ம கையில் இல்லை.” என்றார்.

  “நான் வந்து பேசறேன்.” என்று துண்டித்து விட்டான். இதற்கு மேல் போனில் பேசமுடியாது. தந்தையிடும் சண்டையிடும் விஹானுக்கு, அவரது அழுகையோ குரல் கமறி பேசினால் தாங்காது.

அண்ணி பிருந்தா இரண்டு மூன்று தினமாக சாப்பிடாமல் இருப்பது அவர்களும் அவர்கள் வயிற்றில் வளரும் அண்ணன் குழந்தைக்கும் ஆபத்தாயிற்றே.

   வீட்டிற்கு வந்தப்போது அத்தை பங்கஜம் பிருந்தா அண்ணியின் தாலியை கழட்ட சென்றார்.

   விஹானோ ‘இதெல்லாம் ஏன் செய்யறிங்க?” என்று தடுக்க முனைந்தான்.

  “இல்லை… இறந்துப்போன பிறகு தாலி எப்படிய்யா போட்டுயிருப்பா? பொட்டு வேண்டுமின்னா இருக்கட்டும். தாலி?” என்று சங்கடமாய் நிறுத்தினார்.‌

   விஹான் என்ன நினைத்தானோ ‘என்னவோ பண்ணி தொலையுங்க” என்றவன் ஜெய்சங்கரிடம் வந்து, உங்க பையனோட போட்டோ கேட்டிருந்தேனே?” என்று முன் வந்தான்.

   ஜெய்சங்கர் கொடுக்கவும் டிவியில் பல முன்னெனி செய்தி சேனலில், காணாமல் போனவர்கள்’ என்று பெயர் வயது அங்க அடையாளம் எல்லாம் கொடுத்து, தந்தை தங்கை தேடுவதாக கொடுத்தான். அண்ணன் போலீஸ் என்றாலும் தம்பி அதிரடியாக காக்கி உடையின்றி தூரிதமாக செயல்பட்டான்.
 
பணத்தை அதற்கு தண்ணியாக செலவழித்தான்.

   பிருந்தா அடிக்கடி பார்த்த ஏரியாவில் அதிகப்படியாக மிஸ்ஸிங் சைல்ட்’ என்று பிரிண்ட் செய்யப்பட்ட தாள்கள் ஆங்காங்கே ஒட்டப்பட்டது. இதெல்லாம் அடுத்த நாளே வீதியில் போவோர் வருவோரின் கவனத்தில் பதிந்தது.
 
  அப்படி தான் தன் வீட்டில் அடைக்கலம் கொடுத்த பெண் காவேரிக்கு அந்த பேப்பர் கண்ணில்பட்டது.

  இந்த பையன் நம்ம வீட்ல இல்லை ஜுரத்துல இருக்கான். அந்தக்கா அழுதுட்டு இருந்துச்சு. அப்ப அதோட தம்பி இல்லையா? பெத்தவங்க தேடறார்னு போட்டுயிருக்கே.

  இதுல தகவல் சொன்னா பணம் தருவதா போட்டுயிருக்கு’ என்று சிந்தித்து நடந்தாள்.

  குடிசை வீட்டில் இருப்பவருக்கு பணம் தேவை தான். அதுவும் கணவனும் அவளும் வாழும் வீட்டில், கணவன் பாதி நாட்கள் மீன்பிடிக்க சென்றிட, பணம் கிடைத்தால் லாபம் என்று முடிவெடுத்தாள்.

  தன் போனிலிருந்து அணுக வேண்டிய எண்ணிற்கு அழைத்தாள்.

   வெறும் கழுத்தில் அண்ணி சுவரோடு சாய்ந்திருக்க, அதனை கண்டு விஹானோ பழிவாங்கும் வேகத்தில் பல்லை கடித்து இருந்தான்.
அப்பொழுது புதிதான எண்ணிலிருந்து அழைப்பு வரவும் சட்டென எடுத்தான்.
  
  “சார் நான் காவேரி பேசறேன். காணாமல் போன பையன் நிரஞ்சனை பத்தி தகவல் தர போன் பண்ணினேன். நீங்க அவங்க அப்பாவா?” என்று கேட்டாள்.

  “நிரஞ்சன் எங்கே? நீங்க எங்கேயிருந்து பேசறீங்க?” என்று கேட்டான்.‌ ஜெய்சங்கர் இருக்குமிடமிருந்து தள்ளி வந்துவிட்டான்.‌

  “சார் நான் பட்டிணப்பாக்கம் மீனவ குப்பத்துல இருக்கேன். நிரஞ்சனை அந்த அக்கா எங்க வீட்ல கூட்டிட்டு வந்ததிலருந்து அழுவுது.” என்று கூறினார்.‌

  “பெயர் என்ன? அட்ரஸ் சொல்லுங்க” என்றான் விஹான்.

  ”என்‌ பெயர் காவேரி சார். அட்ரஸ் என்று கூற ஆரம்பிக்கும் முன், “அய்யோ அங்கிருக்கற பொண்ணு பெயர் என்ன?” என்றான்.

   “தெரியலை சார். வந்ததிலிருந்து அந்த பையன் ஜுரத்துல இருக்கான். இந்தக்கா அழுதுட்டு இருக்கு‌. நடுவுல எங்கயோ போயிட்டு வந்தாங்க. ஆனா இப்ப வீட்ல  தான் இருக்காங்க.

  ரோட்ல இங்க தெருவுக்கு தெரு  பேப்பர்ல அந்த பையன் போட்டோ என்றதும் கால் பண்ணினேன்.” என்று  கூறினாள்.‌

  ”ஓ..ஓகே. அந்த பொண்ணிடம் எதுவும் சொல்லாதிங்க. நான் வந்துட்டு இருக்கேன்.” என்று அட்ரஸை மேப்பில் போட்டு வண்டியை வேகமாக ஓட்டினான்.

   இருபது நிமிடத்தில் வாசலில் நிறுத்தி முடிக்க, காவேரிக்கு போனில் அழைத்தான்.‌

   ”சார்.. பச்சை கலர் பெயிண்ட் இருக்குற குடிசை வீடு” என்று கூற, மானஸ்வி படுத்திருந்தவள் “யாரு… யாரு வரப்போறாங்க” என்று பதற, விஹான் அனலை விழுங்கியவனாக வாசலில் தலைக்குனிந்து வந்தான். 

  சர்வானந்தன் இறந்த வீட்டில் இவரை பார்த்தோமே. தான் அணிந்திருந்த உடையை கிழித்தார், தன்னை காரில் கட்டி வைத்தார்.’ என்று யோசிக்கும் போது, விஹானோ ‘நீயா’ என்றான்.‌

   மானஸ்வி பயத்துடன் நிரஞ்சன் அருகே வந்தாள்.

  “தள்ளுடி” என்றான்.‌

   ”யா..யார் நீங்க?” என்று கேட்டாள்‌. “எதுக்கு நிரஞ்சனை தேடறிங்க. அவனை அனுப்ப மாட்டேன்” என்று கூறினாள்.

‘பளீரென’ அறை தரவும் மானஸ்வி சுருண்டு விழவும் நிரஞ்சன் கண் திறந்தான்.

  கண் திறந்தவன் ‘விஹான் அண்ணா” என்று சுரத்தையின்றி உச்சரித்தான்.

  “எ..என் பெயர் உனக்கு எப்படி தெரியும்?” என்று நிரஞ்சன் தலை கோதி கேட்டான்.
 
    “சர்வானந்தன் சார் பர்ஸ்ல உங்க போட்டோ பார்த்தேன். அவர் தான் என் தம்பி விஹான்னு சொன்னார்‌.” என்று உட்கார முயன்றான்.‌

  கால் கட்டு போட்டிருக்க கையை ஊன்றி அமர முயன்றான்.‌

   நிரஞ்சன் புதியவனை கண்டு அஞ்சாமல் பேசவும் மானஸ்வி கன்னத்தை பிடித்து, நிரஞ்சன் சாய்ந்து அமர தலையணையை வைத்தாள்.

     “எங்கண்ணா… எங்கண்ணாவை எப்ப பார்த்த? எப்படி அறிமுகம் கிடைச்சது? அவரை யார் என்ன செய்தாங்க. உனக்கென்ன ஆச்சு? இந்த பொண்ணு யாரு?” என்று விடாமல் கேள்வி கேட்டு தொலைத்தான்.

   ”நான்..‌ நான் சர்வானந்தன் சாரை இரண்டு மூன்று முறை பார்த்திருக்கேன். முதல் முறை ஹோட்டலுக்கு வெளியே, இரண்டாவது முறை கோவில்ல, மூன்றாவது முறை என்னை கட்டி வச்சவங்களிடமிருந்து காப்பாற்றினப்ப.

   நான் இருந்தது மதுரை சார். அப்பா திட்டியதால பஸ் பிடிச்சு சென்னை வந்துட்டேன். இங்க வந்து ரொம்ப நாளாகுது. கையில் வச்சிருந்த பணம் காலி. அதனால் திருடியும் பிச்சையெடுத்தும் சாப்பிட்டேன்.

அப்படி ஒரு நாள் திருடினப்ப மாட்டி செம அடி. அதனால் அடுத்த நாள் பிச்சை எடுத்து வர்ற பணத்துல அம்மாவுக்கு கால் பண்ணி சாரி கேட்டு, ஊருக்கு எப்படி வர்றதுனு  கேட்டு அப்பா அம்மா கூடவே வாழ நினைச்சேன். ஆனா அப்ப பிச்சை போட்ட ஒரு அண்ணா என்‌னிடம் விசாரிச்சார். 

நான் தவளை மாதிரி நடந்ததை சொன்னேன்.‌அப்படியாவது யாராவது மதுரையில அம்மா அப்பாவிடம் என்னை சேர்த்து வைப்பாங்கனு எதிர்பார்த்தேன். ஆனா அவங்க  சாப்பாட்டை வாங்கி தந்து என்னை கடந்த பார்த்தாங்க. நான் ஆட்டோவுல போறப்ப சர்வானந்தன் சார் என்னை அடையாளம் கண்டுபிடிச்சு பாலோவ் பண்ணிருக்கார்.

   என்னை கூட்டிட்டு வந்த ஆட்டோவை வழி மறைச்சு என்னை காப்பாத்தினார்.

  ‘டேய் நீ தானே நிரஞ்சன் உங்கப்பா அம்மா உன்னை மதுரையில் தேடறாங்க. நீ என்ன பண்ணுற” என்று கேட்டு விசாரிக்க ஒருத்தன் அவர் மண்டையில் அடிச்சு அங்கிருந்த பெரிய வண்டில் (கண்டெய்னர்ல) எங்க இரண்டு பேரை தள்ளிட்டான். இதுல அவசரமா மூடிட்டான்.

அப்பறம் சர்வானந்தன் சாரை நான் எழுப்பியதும் ‘இது ஒரு கண்டெய்னர். அவனுங்க கதவை மூடிட்டாங்க. இனி அவங்க திறந்தா தான். இந்த வண்டி ரன்னிங்கல இருக்கு” என்று பேக்கெட்டுல போனை தேடினார். அவர் போன் இல்லை.

  என்னிடம் ஏன்டா வீட்டை விட்டு ஓடிவந்த. இப்ப பாரு கடத்தல் ஆட்களிடம் மாட்டியிருக்க திட்டினார். சரி விடு என் உயிரை கொடுத்தாவது காப்பாத்தறேன்னு சொன்னார்.

  பர்ஸ்ல உங்க போட்டோ இருந்தது. அப்ப தான் இது என்‌ தம்பி விஹான்னு காட்டினார்.‌
  
    நான் அப்ப எனக்கு கூட ஒரு தங்கை இருக்கா சார் என்று சொன்னேன்.‌

   அப்ப தான் வண்டி நிற்கற சத்தம் கேட்டுச்சு. ஆனா அந்த பெரிய வண்டி கதவு திறக்கலை. யாராவது கதவை திறந்தா அவங்களை அடிச்சி போட சர்வானந்தன் சார் ரெடியா இருந்தார்.

  கதவு திறந்தாங்க. அப்ப தான் அவர் சொன்ன மாதிரியே கதவை திறந்தவனை‌ அடிச்சார்.

  அவனும் மயங்கிட்டான்.‌ ஆனா அந்த இடத்துல நாங்க இருந்த வண்டி மாதிரி நிறைய வண்டி இருந்தது. சர்வானந்தன் சார் தான். ஏதோ சரியில்லை. நீ இங்க இரு. நான் பிரச்சனை முடியவும் உன்னை காப்பாத்தறேன். வேறொரு கண்டெய்னர் அடுத்த மாதம் போறதா டேட் போட்டு ஒட்டியிருந்தது. அதுல என்னை மறைச்சு வச்சார். ஆனா அந்த இடத்துல அதிக நேரம் இருக்க முடியாது. 
அதனால வந்துடுவேன்னு பிராமிஸ் பண்ணினார். ஆனா திரும்ப வரவேயில்லை.” என்று அழுதான் நிரஞ்சன்.

  விஹானோ கண்ணீரை துடைத்து விட்டு, கட்டியணைத்தான்.‌

  மானஸ்வி விசும்ப, “நீ யாரு?” என்றான்‌ விஹான்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

6 thoughts on “கண்ணுக்குள் கடல்-12”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *