கவிதையே… தெரியுமா…!?
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
நான் கவிதை எழுதுவது நெருங்கிய உறவினருக்கு நல்லா தெரியும். அதுலயும் அப்பாவோட சின்ன தங்கையின் மகள்(அண்ணி) ‘பிரவீ நீ கவிதை எழுதுவல முகநூலில் கவிதை குரூப் நிறைய இருக்கு. ஜாயின் பண்ணி விடவா’னு கேட்டாங்க. கரும்பு திண்ண கூலியா? “சேர்த்து விடுங்க அண்ணி கவிதை வாசிப்போம்’ சொன்னேன்.
அவங்களும் இரண்டு மூன்று கவிதை குரூப்ல என்னை கோர்த்து விட்டாங்க. முதல்ல எப்பவும் பார்வையாளராக பார்ப்பேன். நாம இருக்கற இடம் என்ன மாதிரியான இடம். இங்க நாம கால் பதிக்கலாமா வேண்டாமானு. ஏன்னா கண்டதுலயும் நுழைந்திட மாட்டேன். ஒரு இடம் போறோம்னா முதல்லயே அது எத்தகைய இடம்னு தெளிவாக தெரிந்துக்கிட்ட பிறகு போகணும். போனப் பிறகு அய்யோ அம்மானு புலம்பறதுல எனக்கு உடன்பாடுயில்லை.
அதனால் முதல்ல வாட்ச் பண்ணினேன்.
நாட் பேட்…
மிக நல்ல கவிதைகள் கொஞ்சம் சுமாரான கவிதை, கொஞ்சம் ஆர்வகோளாறான கவிதைகள் என்று எல்லாவிதமான கவிதைகளும் அங்கே குவிந்தது.
நிறைய வாசித்து பார்ப்பேன். மனசாட்சியோ ‘ஏ பெண்ணே… ஒரு காலத்தில் நீயும் கவிதை எழுதி மேகஸினுக்கு அனுப்பி அது அப்புத்தகத்திலும் வந்திருக்கு. நீயென்ன வெறும் வாசிக்க பிறந்தவளாக இருக்க. ‘பேப்பரை எடு கவிதையை கிறுக்கு’னு தூண்டிவிட்டது.
நானும் கிறுக்கினேன். எஸ்… நான் கிறுக்கினேன். எனக்கு தெரியும்…. நான் இன்னமும் அரை வைத்தியன். மிக அற்புதமான கவிதை எழுதுபவள் இல்லை.
மேகஸினுக்கு எழுதப்பட்ட பொழுது அதற்கான முதிர்ச்சி + முயற்சி இருந்தது. தற்போது மீண்டும் என்னிடம் சிறுபிள்ளை தனம் மிச்சம் எஞ்சியிருந்தது.
நானும் தினமொரு கவிதை கிறுக்கி குரூப்ல போடுவேன். இயற்கையை பற்றி, காதலை பற்றி சமூகத்தின் அவலம் இப்படி கிறுக்குவேன். அப்ப தான் போட்டி நடக்கு அங்க கவிதை எழுதி பாருனு சொன்னாங்க.
முயன்றேன்…
சில விஷயம் மேஜிக் மாதிரி நடக்கும். போட்டிக்குன்னு கவிதை வரிகளை எதார்த்தமான வார்த்தை கொண்டு கோர்த்தேன். நிகழ்காலத்திற்கு தேவையான விஷயம் அந்த போட்டி கவிதைக்கு தேவையானதாக என்னிடம் இருந்தது. அதனால் வெற்றியும் கிட்டியது. எண்ணிக்கையில் அடங்காத சான்றிதழ் வரிசையாக வந்தது.
எப்பவும் ஜெயிச்சிட்டே இருந்தா ஒருவிதமான சலிப்பு வரும். அந்த சலிப்பு வந்துச்சு.
எனக்கு வெற்றி தோல்வி பெரிய விஷயமில்லை. இரண்டையும் சமபங்கா பார்ப்பேன். அந்த தெளிவு எப்பவும் இருக்கு.
ஆனா ஈஸியா ஜெயிக்கறேன்னா? போட்டில சக போட்டியாளரின் எண்ணிக்கை குறைவா? அதனால நான் ஜெயிச்சேனா? இப்படி தான் யோசித்தேன். ஏன்னா அப்படி கலந்துக்கிட்டவங்க குறைவா இருந்து, எனக்கு வெற்றி கிடைத்தால், அது வெற்றி கிடையாது. ஆளில்லாத இடத்தில் பத்துல ஒன்னு தேறியது. அப்படி தான் நினைப்பு போகும் எனக்கு.
எனக்கு தேவை அதிகமான போட்டியாளர்கள் பங்கு பெறும் போட்டியில் நான் கலந்துக்கணும். தோற்றாலும் பரவாயில்லை. போட்டி கஷ்டமா இருக்கணும்.
அடுத்து கவிதை போட்டியில் யார் எல்லாம் கலந்துக்கறாங்க. எத்தனை பேர் போட்டியில் இருக்காங்க. எனக்கு இது ஆரோக்கியமான போட்டியா. இங்க கஷ்டப்பட்டு தான் நான் முன்ன வர்றேனா? என்றெல்லாம் அலசி ஆராய்ந்தேன்.
இந்தமுறை எத்தனை போட்டியாளர் என்று கணக்கெடுத்தப்ப மலைச்சிட்டேன். 50 ல இருந்து 80 கிட்ட வரை போட்டியாளர்கள் இருந்தாங்க.(குறைவானவங்க தான்)
அதனால் இத்தனை பேர்ல என் கவிதை முன்ன வர்றப்ப, வெற்றி பெற்றதும் மகிழ்ந்தேன்.
ஐம்பது எண்பது பேர்ல ஐந்து பேருக்கு சர்டிபிகேட் என்றதில் நான் அதை பெருமையா உணர்ந்தேன்.
வார்த்தையில் கவனம் போச்சு. கவிதை எழுதவும் என் பழைய சுறுசுறுப்பு துளிர்விட்டது.
அப்ப தான் ஒரு கவிதை குரூப்ல இ-மின்னிதழில் மாதம் மாதம் அந்த குரூப்ல வர்ற கவிதைகளை கவனித்து, அதில் சில கவிதையை தேர்ந்தெடுத்து மின்னிதழில் பிரசுரிப்பாங்க.
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதை…. நோட் பண்ணுங்க… தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதை.
அதனால் இதுல என் கவனம் போச்சு. நமக்கு போட்டி கடினமா வேண்டும். அப்ப தான் அதுல நுழைவேன்.
டார்க்கெட் வச்சேன்.
இந்த மின்னிதழில் நம்ம கவிதை வரணும். அதுக்கு ஆக்கப்பூர்வமா எழுதணும். வசன கவிதை என்றாலும் கவிதையின் கரு ஆழமா உள்ள தாக்கணும். ஏதோ புதிதான சிந்தனை அல்லது உணர்வுகளை புகட்டணும்னு யோசித்து தினமும் பெரிய கவிதையா எழுதி தள்ளினேன்.
எப்பவும் என்னை சுற்றி இருக்கற இடத்தை சரியா கவனிக்க மாட்டேன். கவனிக்கணும்னு நான் முடிவு எடுத்து பார்த்தா மட்டும் தான் அந்த இடத்தையே லேசர் பார்வையால் துழாவுவேன்.
அப்படி தான் காணும் எல்லா இடத்தையும் கவனிக்க ஆரம்பிச்சேன். வாடகை தாயாக… இறைவன் … சில நல்ல கவிதை உதிர்த்தது.
ஒவ்வொரு மாதமும் சிலருக்கு சிறந்த கவிதையாளர் என்று பட்டமும் ஏதாவது ஒரு கவிதை மின்னிதழில் வெளிவரும் அதெல்லாம் பார்த்து, ‘பச் நான் இன்னமும் நல்லா எழுத ஆரம்பிக்கலை என்று வாடினேன்.
இந்த இடத்துல இடம் பெறணும்னா அப்ப ஏதோ என் எழுத்துல குறையுதுன்னு புரிந்தது.
அது என்னனு கூர்மையா கவனிச்சேன்.
எஸ்… எதை மிஸ் பண்ணினேன்னு கண்டுபிடிச்சேன். அடுத்தடுத்து எழுதினேன்.
உழைப்புக்கும், வெற்றியை துரத்தறதுக்கும் பலன் இல்லாமலா? நான் எதிர்பார்த்த கவிதை குரூப்ல மின்னிதழில் என் கவிதை வந்துச்சு. கிட்டதட்ட பல ஆயிரம் மெம்பர்ஸ் கொண்ட குரூப். பல்வேறு ஆண் பெண் கவிஞர்கள் இருக்கும் இடம். என் கவிதை வந்துச்சு.
கவிதை போட்டியில் பங்கேற்றதும் இந்த மற்றொரு குரூப்ல மின்னிதழில் கவிதை வந்ததும் எனக்குள்ள மீண்டும் ஒரு ஆற்றல்.
ஹைக்கூ போட்டி, குறுங்கவிதை போட்டி, படம் பார்த்து கவிதை எழுதுவது, இப்படி எல்லாத்திலும் அன்னா ஆவன்னா படிச்ச பிள்ளையா தலைகாட்டி அந்த படில ஏறினேன். எஸ் ஆரம்பகால இடம் தான்.
அந்த நேரம் கவிதை எழுதி போட்டில வின் ஆனவங்களுக்கு விழாவில் கோப்பை சர்ட்டிபிகேட் தருவதாக சொன்னாங்க. நான் பரிசு கோப்பை வாங்கற லிஸ்ட்ல இருக்கேன். அதோட சென்னையில் தான் அந்த விழா. அதனால் யோசிக்காம போனேன். ஏன்னா என் கூட என் வழிக்காட்டியான முத்து அத்தையும் அந்த இடத்துக்கு அவங்களும் பரிசு பெற வந்தாங்க. அதனால் அது என்முதல் மேடை ஏறிய தருணம்.
என் கவிதையை நானே வாசித்து முடித்து பரிசு வாங்கி சான்றிதழ் வாங்கி வந்த நாள்.
இதுவரை இ-சர்டிபிகேட் மட்டுமே பார்த்திருந்த எனக்கு ஷீல்ட் கிடைச்சது ரொம்ப சந்தோஷமா இருந்தது. ஆனா என்னோட இலக்கு என்ன?னு நான் அப்பவும் முடிவெடுக்கலை. அதுவொரு ஜாலியான மௌமொண்ட் என்று தான் இருந்தேன்.
அதே போல திருச்சியிலும் ஷீல்ட் சர்டிபிகேட் கிடைத்தது. அதையும் ஒரு அனுபவமா, ஜாலியா போய் வாங்கிட்டு வந்தேன். எனக்கான இலக்கு குறிக்கோள் எதையும் நான் உணரவில்லை.
நிறைய பேருக்கு இலக்கு இல்லாம வாழும் போது இதான் உன்பாதை பிடிச்சிக்கோ இதுல தொடர்ந்து போ.’ அப்படின்னு ஒரு கன்பார்ம் மெஸேஜ் கடவுள் தருவார். அது அப்பவும் எனக்கு தோணலை.
ஏதோ கவிதை கிறுக்கினா இரண்டு ஷீல்ட் வாங்கினா’ இதான்..… அடுத்து காட்டுல தீக்குச்சி கிடைச்ச கதையோட வர்றேன்.
-தொடரும்.
