பாரதி பிரியம்வதாவிடம் தொடர்ந்து தெரபிக்குச் சென்றுவந்தாள். அவர் கொடுத்த மருந்துகளையும் உட்கொண்டாள். மருந்துகளின் பக்கவிளைவாக சில நேரங்களில் அவளையும் மீறி கோபத்தில் கத்திவிடுவாள். ஆனால் பாலா மருத்துவரின் ஆலோசனையைக் கருத்தில் கொண்டு அவளைக் குழந்தை போல பார்த்துக்கொண்டான்.
அவள் ‘வெர்சுவல் குரு’ மூலம் சம்பாதித்த பணத்தை வைத்தே சிகிச்சைக்குச் செலவு செய்வதாகச் சொல்லிவிட்டாள். மற்ற விசயங்களில் அவளோடு சண்டைக்கு நின்றாலும் இதில் மட்டும் பணிந்தே போனான் பாலா.
அவளது பாதிப்பிற்கான காரணம் தெரிந்ததும் தான் நடந்துகொண்ட முறையில் அவனுக்கே இப்போது வெறுப்பு உண்டானதே இதற்கு காரணம்.
இந்நிலையில் தான் பாலாவின் டீமில் பணியாற்றும் பெண் ஒருத்தியின் நிச்சயதார்த்தத்துக்குப் அவனையும் பாரதியையும் அழைத்திருந்தாள் அப்பெண்.
அவனும் மனைவியோடு வருவதாகக் கூறிவிட்டான். பாரதியும் அவனோடு வருவதற்கு சம்மதம் தெரிவித்தாள்.
நிச்சயதார்த்தத்திற்கு அவனது அலுவலகத்திலிருந்து அனைவருமே வந்திருந்தார்கள். பாலாவுடைய தோழமைகளும் அதில் அடக்கம்.
மாப்பிள்ளையும் பெண்ணும் மோதிரம் மாற்றிக்கொண்டார்கள். பிறகு சம்பிரதாயப்படி நிச்சய ஓலை வாசிக்கப்பட்டது. பெண்ணும் பையனும் கேக் வெட்ட அலுவலக தோழமைகள் செய்த கலாட்டாவால் அந்த நிச்சயதார்த்த நிகழ்வே சிரிப்பிலும் மகிழ்ச்சியிலும் நிரம்பிப்போனது.
பாரதிக்குப் பாலாவின் தோழமைகளோடு பழகுவதில் எந்தச் சிரமமும் இல்லை.
“நீங்க ஆன்லைன்ல ஸ்போக்கன் இங்கிலீஸ் க்ளாஸ் எடுக்குறதா பாலா சொன்னான்… என் சிஸ்டரோட பொண்ணுக்குச் சொல்லித் தர முடியுமா?” என்று விவரம் கேட்டாள் பாலாவின் டீமிலிருந்த பெண்ணொருத்தி.
“கண்டிப்பா சொல்லித் தர்றேன்… ஆப் மூலமாவே அவங்களை ஜாயின் பண்ணிக்க சொல்லிடுங்கம்மா” என்றாள் பாரதி.
“யூ ஆர் சஷ் அ டார்லிங் பாரதி” என்று அந்தப் பெண் பாரதியின் மோவாயைப் பிடித்துக் கொஞ்சவும் தூரத்தில் நின்று பார்த்த பாலாவின் கண்களில் மெல்லிய பொறாமை!
அதைக் கவனித்த அவனது தோழமைகள் கலாய்க்க அவனும் வெட்கிச் சிரித்தான்.
கேக்கை துண்டுகளாக்கி வந்தவர்களுக்குக் கொடுக்க பெண்ணின் தோழமைகளோடு சேர்ந்து பாரதியும் உதவினாள்.
பாலாவும் அவனது தோழர்களும் நின்று பேசிக்கொண்டிருந்த இடத்திற்கு ட்ரேயில் கேக் துண்டுகள் அடங்கிய சிறு தட்டுகளை ஏந்திக்கொண்டு சென்றாள் அவள்.
சில அடிகள் தொலைவிலேயே நண்பர்கள் பேசியது காதில் விழுந்தது அவளுக்கு.
“ஜி! உங்க ஃபேவரைட் மியா காலிஃபாவோட ஹஸ்பெண்ட் அவங்களை ரொம்ப கொடுமைப்படுத்துறாங்களாம்… ஃபேஸ்புக்ல ஒரு வீடியோ பாத்தேன்… உடனே உங்க ஞாபகம் தான் வந்துச்சு” என்று ஒரு இளைஞன் சொல்ல பாலா அவன் முதுகில் அடித்தான்.
“ஏன் ஜி அடிக்கிறிங்க? உங்களுக்குப் பிடிச்ச ஆளாச்சேனு சொன்னேன்” என அந்த நண்பன் முதுகைத் தடவிக்கொள்ள அதற்குள் இறுகிய முகத்தோடு அவர்களை நெருங்கியிருந்தாள் பாரதி.
அவளது முக இறுக்கத்திற்கு என்ன காரணமென புரியாமல் பாலா விழிக்கும்போதே அனைவருக்கும் கேக்கை வினியோகித்தவள் அவனிடம் தட்டைக் கொடுத்துவிட்டு விறுவிறுவென அங்கிருந்து போய்விட்டாள்.
நண்பர்கள் பேசியதை அவள் கேட்டிருப்பாளோ என பாலா சந்தேகித்தான். ஆனால் பாரதி அவனது டீமில் இருந்த பெண்களுடன் முகங்கொள்ளா புன்னகையோடு சிரித்துப் பேசுவதைக் கண்டு அப்படி எல்லாம் இருக்காதென தனக்குத் தானே சமாதானம் சொல்லிக்கொண்டான்.
“கல்யாணத்துக்கு நீ கண்டிப்பா வரணும்… பாலா வேலை அது இதுனு சொன்னாலும் நான் கார் அனுப்புறேன்… நீ வந்துடுடா” என மணப்பெண்ணின் அன்னை ஆசையாக வழியனுப்பிவைத்தார் பாரதியை.
காரிலேறியதும் “நீ வர்ஷினி ஃபேமிலி கூட ரொம்ப சீக்கிரமா மிங்கிள் ஆகிட்ட போல… அந்த ஆன்ட்டிக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்குனு அவங்க பேச்சுலயே கண்டுபிடிச்சிட்டேன்” என்றன் அவன்.
“ம்ம்” யோசனையோடு பதிலளித்தாள் பாரதி.
இவ்வளவு நேரம் பெண்கள் கூட்டத்தோடு சேர்ந்து சிரித்துப் பேசி மகிழ்ச்சியாக இருந்தவளுக்கு இப்போது என்னவாயிற்று என்ற கேள்வியோடு பாலா காரைச் சாலையில் செலுத்தினான். வேகமாக ஓட்டியவன் வீடு வந்து சேர்ந்ததும் அவளது திடீர் அமைதிக்கான காரணத்தை வினவினான் மனைவியிடம்.
அவளோ “விடுங்க! நான் கேட்டா நீங்க ஹர்ட் ஆகிடுவிங்க” என்று சொல்லிவிட்டு உடைமாற்ற போய்விட்டாள்.
பாலா விடாக்கண்டனாக அவளைத் தொடர்ந்து வந்தவன் அவள் புடவை பின்னில் கை வைக்கவும் தடுத்தான்.
“என் கேள்விக்குப் பதில் சொல்லிட்டு ட்ரஸ் சேஞ்ச் பண்ணு”
“இது என்னங்க பிடிவாதம்?” பாரதி சலித்துக்கொள்ள அவனோ விடுவேனா என்றான்.
பாரதி ஆழ்ந்த மூச்சுகளை எடுத்து விட்டாள்.
“உங்க ஃப்ரெண்ட்ஸ் மியா காலிஃபா பத்தி ஏதோ சொன்னாங்க… நான் அதை கேட்டேன்” என்றாள் மொட்டையாக.
பாலா அதை கேட்டதும் தடுமாறிப்போனான்.
“அது… பாரதி… வந்து..”
நிறுத்து என்பது போல கையை உயர்த்தி சைகை காட்டினாள் பாரதி.
“மியா காலிஃபா ஆர்ட் ஃபிலிம்ல நடிக்குற ஆக்ட்ரஸ் இல்லனு எனக்கும் தெரியும்… பார்ன் மூவிஸ்ல நடிக்குறவங்க…. அவங்களை உங்களுக்குப் பிடிக்கும்னா அவங்களோட வீடியோவ நீங்க பாத்திருக்கிங்கனு தானே அர்த்தம்?” என்று விசாரிக்கும் தொனியில் கேட்டாள் அவள்.
அதில் குற்றம் சாட்டும் தொனியோ, நீ மட்டும் ஒழுங்கா என்ற நக்கலோ இல்லை. ஒரு மனைவியாகத் தனது கணவனிடம் அவள் கேட்க விரும்பிய கேள்வியை அமைதியாகவே கேட்டாள்.
பாலா என்ன பதில் சொல்வதென தெரியாமல் திணறிப்போனான். ஆபாச வீடியோவைப் பார்த்து கதை எழுதியவள் என்று அவளை அருவருத்தவன் இப்போது எப்படி பேசுவான்?
கணவனின் நிலமை பாரதிக்குப் புரிந்தது.
நம்மை சுற்றியுள்ள ஆண்களில் பெரும்பாலானோர் சன்னி லியோனையும், மியா காலிஃபாவையும் அறிந்தவர்கள் தான்! ஆனால் அவர்களின் மனைவியரோ காதலிகளோ “எனக்கு ஜானி சின்ஸ் பிடிக்கும்” என்று சொல்லிவிட்டால், அவளது நடத்தையைக் கேவலப்படுத்துவதில் ஆரம்பித்து செக்ஸ் வெறி பிடித்தவள் என்று அசிங்கப்படுத்துவது வரை அனைத்தையும் செய்வார்கள்.
பாரதி மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டாள்.
“நான் உங்களை மட்டம் தட்டணும்னு இதை கேக்கலங்க… ஆணோ பொண்ணோ பார்ன் வீடியோஸ் பாக்குறது தப்பு… அது எனக்கும் தெரியும்… ஆனா ஆம்பளை பார்ன் வீடியோ பாத்தா வயசுக்கோளாறுனு சமாதானம் சொல்லுறிங்க… பொண்ணு பாத்தா மட்டும் அதை கலாச்சார சீர்கேடு, ஒழுக்கக்கேடுனு சொல்லி அவ நடத்தையையே கேள்விக்குறி ஆக்குறிங்க… அவளும் வயசுக்கோளாறுல அதை பாத்திருக்கலாம்… பின்னாட்கள்ல அது ரொம்ப தப்பான பழக்கம்னு அவளும் அந்த மாதிரி வீடியோஸ் பாக்குறதை நிறுத்திருக்கலாம்னு ஏன் யோசிக்க மாட்றிங்க? நான் செஞ்ச தப்பை நியாயப்படுத்தவோ பார்ன் பாக்குறது தப்பு இல்லனு ஆர்கியூ பண்ணவோ நான் இந்தக் கேள்வியை கேக்கல… வயசுக்கோளாறுல தப்பு பண்ணி நான் அதுல இருந்து பாடம் கத்துக்கிட்டேன்… அப்பிடி இருந்தும் நீங்க என்னை அருவருப்பா பாத்திங்க… இப்ப நான் உங்களை அருவருப்பா பாத்தா என்ன செய்விங்க?”
பாரதியின் கேள்விகள் பாலாவைக் குற்றவாளி கூண்டில் நிற்கவைத்தது. ஒழுக்கக்கேடான தவறுகளை யார் செய்தாலும் பாலின வேறுபாடின்றி அது தவறு என்று சுட்டிக்காட்டும் பழக்கம் சமுதாயத்தில் என்று ஆரம்பிக்கிறதோ அன்று தான் மோசமான பழக்கங்களை ஒழிப்பதற்கான சூழலும் உருவாகும். அதை விடுத்து ஆண் செய்த ஒழுக்கக்கேடான தவறுகளுக்கு ‘வயதுக்கோளாறு’, ‘க்ஷண நேரத்து சபலம்’ என்று சமாளிப்பது எவ்வகையில் நியாயம்?
பாலாவால் பாரதியின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியவில்லை. அவன் இடத்தில் வேறொரு ஆண்மகன் இருந்திருந்தால் கட்டாயம் வேறு மாதிரியான எதிர்வினை அங்கே நிகழ்ந்திருக்கும்.
“ஆமாடி நான் அப்பிடி தான் பார்ப்பேன்” இதுவே பெரும்பாலான ஆண்களின் பதிலாக இருந்திருக்கும். ஆனால் பாலா அப்படிப்பட்டவன் இல்லை. நியாயமாக யோசிக்கத் தெரிந்தவன். எனவே பாரதியிடம் மன்னிப்பு கேட்கும் பார்வையை வீசினான்.
“சாரி குட்டிமா” இறங்கிய குரலில் மன்னிப்பையும் வேண்டினான்.
பாரதிக்குக் கண்கள் கலங்கிப்போயின. அமைதியாக உடையை மாற்ற ஆரம்பித்தாள். பாலா குளியலறைக்குள் புகுந்துகொண்டவன் அங்கிருந்த கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தான்.
தனது வார்த்தைகள் பாரதியை எந்தளவுக்குப் பாதித்திருக்கிறது என்றே இதுநாள் வரை யோசித்தவன் அன்று வித்தியாசமாக யோசித்தான்.
என் கண்ணிலிருந்த உத்திரத்தைத் தூக்கிப்போடாமல் பாரதியின் முதுகிலிருந்த தூசியைத் தட்டுவதில் கவனமாக இருந்திருக்கிறேனே என்று நாணினான் அவன்.
முகத்தில் தண்ணீரை அடித்துக் கழுவியவன் வெளியே வந்தபோது பாரதி நிச்சிந்தையாகப் படுத்திருந்தாள். அவளிடம் எப்படி பேச்சை ஆரம்பிப்பதென தெரியாமல் “மாத்திரை போட்டியா பாரதி?” என்று கேட்டபடி இலகு உடைக்கு மாறினான்.
“ம்ம்”
“நீ எங்கேஜ்மெண்ட் ஃபங்சன்ல சரியா சாப்பிடல… பால் காய்ச்சி கொண்டு வரட்டுமா?” என்று கேட்டான்.
“வேண்டாம்”
இதற்கு மேல் என்ன பேசுவதென தெரியாமல் அவனும் படுக்கையில் விழுந்தான். பாரதி முதுகு காட்டிக்கொண்டு படுத்ததும் அவளை அப்படியே அணைத்துக்கொண்டான்.
“விடுங்க என்னை” என்று திமிறியவளின் கன்னத்தில் முத்தமிட்டவன்
“நான் செஞ்சது தப்பு தான் குட்டிமா… ரெட்டைவேசதாரியா நடந்துக்கிட்டேன்… அதுக்கு என்னை மன்னிச்சிடுடி… ப்ளீஸ்… இப்பிடி இக்னோர் பண்ணாத… ஹர்ட் ஆகுது” என்றான் வலியுடன்.
பாரதி அவன் புறம் திரும்பிப் படுத்தாள்.
“உங்களை ஹர்ட் பண்ண வேண்டாம்னு தான் நான் சொல்லமாட்டேன்னு சொன்னேன்… நீங்க தான் பிடிவாதமா கேட்டிங்க”
“இனிப்பான பொய்களோட நம்ம வாழ்க்கை நகருறதுல எனக்கு உடன்பாடு இல்ல பாரதி…. கசப்பா இருந்தாலும் ஒருத்தருக்கு ஒருத்தர் உண்மைய சொல்லியே வாழுவோம்…. இப்ப எனக்கு நீ கேட்ட கேள்வி செருப்பால அடிச்ச மாதிரி இருந்துச்சு… நீ என் கிட்ட கேட்ட மாதிரி அன்னைக்கு நானும் உன் கிட்ட சுமூகமா பேசிருக்கலாம்… அசிங்கம், அருவருப்புனு உன்னை ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன்”
அவனது சுழித்த புருவங்கள் அவன் அனுபவிக்கும் வேதனையை எடுத்துச் சொன்னது.
“நீங்களே நினைச்சாலும் ஒரு எல்லைய தாண்டி உங்களால என்னை ஹர்ட் பண்ண முடியாதுங்க…. நீங்க என்னை உதாசீனப்படுத்துனதால தான் நான் எனக்குனு ஒரு சோர்ஸ் ஆப் இன்கமை தேடிக்கிட்டேன்… கெட்டதுலயும் ஒரு நல்லதா தான் நான் அதை பாக்குறேன்… எனக்கு இருக்குற பிரச்சனையோட தீவிரத்தைப் பாத்ததும் நீங்க ஷாக் ஆனது என் கண்ணுக்குள்ள நிக்குது… எத்தனை ஆம்பளைங்க இதைக் கண்கூடா பாத்தாலும் பொண்டாட்டிய அனுசரணையா பாத்துக்குறாங்க, சொல்லுங்க”
பாரதி தன்னிடம் ஆதுரமாகப் பேசவும் எம்பி அவளது நெற்றியில் முத்தமிட்டான் பாலா.
“எனக்கு உன்னைப் பழைய பாரதியா பாக்கணும் குட்டிமா” என்றான் ஏக்கத்தோடு.
பழைய பாரதி என அவன் குறிப்பிடுபவளைத் தானே அவளும் தேடிக்கொண்டிருக்கிறாள். அவளுக்கு எப்போது விமோசனம் கிடைக்கும் என்று தானே அவளும் தவம் இருக்கிறாள்.
“நம்ம என்கேஜ்மண்டுக்கு அப்புறம் நான் உங்க கிட்ட பேசுவேன்ல, அப்பல்லாம் என்னை மீறி என் உடலோ உணர்வோ தூண்டப்படலங்க… எனக்குள்ள அழகான சிலிர்ப்பு மட்டும் இருக்கும்… நீங்களும் என் கிட்ட பழைய பாலாவா இருப்பிங்களா? அப்பிடி இருந்தா நான் நார்மல் ஆகிடுவேன்னு தோணுது” என்று அவள் கண்கள் நிறைய ஆசையோடு கூறவும்
“கண்டிப்பா குட்டிமா” என்றவன் அவளது கரங்களைப் பற்றி ஒவ்வொரு விரலுக்கும் குட்டி முத்தங்களை ஈந்தான்.
அந்த முத்தங்கள் அடிவயிற்றில் பட்டாம்பூச்சிகளைப் பறக்க வைக்கும் வகையறா முத்தங்கள் இல்லை. உனக்கு நான் இருக்கிறேனடி பெண்ணே எனத் தைரியம் அளிக்கும் ஊக்கிகள் அந்த முத்தங்கள்.
உடலின் உணர்வுகளைத் தூண்டி வேட்கையில் களிக்க வைக்கும் முத்தங்கள் அல்ல அவை! அலைபாயும் மனதை அமைதியாக்கி இதமளிக்கும் முத்தங்கள் அவை!
பாரதியும் அமைதியானாள். அவளது அகக்கடல் பொங்கி அலைப்பாய்வதிலிருந்து மீண்டு அமைதியானது. கணவனை நீங்கி பி.ஜியில் தங்கிக்கொளும் முடிவை அக்கணமே மனதிலிருந்து அழித்துவிட்டாள்.
பாலா இரு கரங்களையும் விரித்து என்னிடம் வா என அழைக்க அழகாக அந்த விரிந்த கரங்களுக்குள் பொருந்தி அடைக்கலமானாள் பாரதி.
கணவனின் அன்பையும், ஆதரவையும் தவிர வேறென்ன வேண்டும் பெண்களுக்கு! அது கிடைத்தாலே யானை பலம் வந்துவிடுமே! தன் பாதிப்பை எதிர்த்து போராடும் தைரியமும் பலமும் பாரதிக்கும் வந்தது பாலாவின் ஆதரவான அணைப்பில்!
Kandipa oru ponnuku mrg ku apram oru husband support tha mukiyam avanga ivlo close ah oru aaruthal koduthu aravanacha ve thairiyam thana vanthudum
இந்த மாதிரி புரிஞ்சுக்குற ஹஸ்பெண்ட் கிடைச்சுட்டா,
எப்படிப்பட்ட கஷ்டத்துல இருந்தும் மீண்டு வந்துடலாமே…!
லவ்லி அப்டேட். லாஸ்ட் லைன் ❤️❤️❤️
அருமை. .. பாலா பாரதி புரிந்துக் கொண்டது அருமை
Spruuu👌👌👌
Good👍
❤️❤️❤️❤️❤️