Skip to content
Home » கானல் – 3

கானல் – 3

தனது நண்பர்களில் சிலரைத் திருமணத்திற்கு அழைக்க வேண்டி, அரை நாள் விடுப்பு எடுத்து கல்லூரியிலிருந்து வீட்டிற்கு வந்தான் மிதுல்.
வீட்டிற்கு வந்தவன் குளித்து முடித்து, மதிய உணவை வயிற்றில் போதிய அளவில் நிரப்பியவன், பத்திரிகை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.
போகும்முன் ஜோதியிடம் சொல்லித் தான் சென்றான், ‘நானே கீர்த்தியை பள்ளியிலிருந்து அழைத்து வந்துடுவேன், மதுகிட்ட சொல்லிடுங்கமா.’ என்று தெளிவாக சொல்லித்தான் சென்றான் சொன்னான்.
ஆனால் ஜோதியோ சொல்ல மறந்து சாப்பிட்டு தூங்கச் செல்ல, வழக்கமாக மகளை அழைக்க பள்ளிக்குச் சென்றாள் மது.


கீர்த்தி, ஆருவைப் பிடித்து தள்ளிவிட்டு விளையாடினாள். ஆராதனாவும் கீழே விழுந்தாள். மறுபடியும் எழுந்து அமரச் சென்றவளை மீண்டும் பிடித்து தள்ளிவிட்டாள்.
ஆராதனாவிற்கு கோபம் வந்தது, வேகமாக இவளும் அவளைத் தள்ளிவிட கிட்ட நெருங்கும் போதே, கீர்த்தி அவளாக கால் இடறி கீழே விழுந்தாள்.
அதுவரை அலைபேசியைப் பார்த்தபடி பள்ளி வளாகத்தில் வந்த மது, கீழே கீர்த்தி விழுந்ததைப் பார்த்து விட்டாள். ஆராதனா தான் தள்ளிவிட்டாள் என்று கோபம் கொண்டு அவர்கள் அருகே சென்றாள்.
“கீர்த்தி…!” என சத்தமாக அழைத்து, தன்னை நோக்கி வரும் தாயைப் பேரதிர்ச்சியுடன் பார்த்தாள். ஆராதனாவோ மதுமிதாவை சிரிப்புடன் பார்த்தாள்.
கீர்த்தி எழுந்து நிற்க அவள் உடம்பை ஆராய்ந்தவள் ஆராதனா புறம் திரும்பி, “அறிவிருக்கா, இல்லையா? ஆங்… என் பொண்ணை பிடிச்சி கீழ தள்ளி விடுற… இதான் விளையாட்டா? அவளுக்கு ஏதாவது ஆச்சுன்னா நீ வந்து பாப்பீயா?” என திட்ட, ஆராதனாவின் கண்கள் கலங்கிப் போயிருந்தன.
“நான் தள்ளி விடல ஆன்ட்டி! அவளா தான் விழுந்தாள்…” அழுது கொண்டே சொன்னாள்.
அவள் சொன்னதும் மதுவிற்கு கோபம் அதிகரித்தது, “பொய் சொல்லாத… நீ தள்ளி விட்டுதான் கீழ விழுந்தா… இந்த வயசுல பொய் பேசற…? உன்னால தான் நேத்து எங்க வீட்ல பிரச்சனை. இப்போ என் பொண்ணை தள்ளி விடுற… வா, உன்னை பிரின்சிபால்கிட்ட கூட்டிட்டு போறேன்…” என கையோடு அவளை அழைத்துக் கொண்டு போக, அழுதபடி உடன் சென்றாள் ஆராதனா.
கீர்த்திக்கு தன் அன்னை வந்ததே பேரதிர்ச்சி என்றால், ஆருவை செய்யாத தப்பை செய்தததாய் சொல்லி முதல்வரிடம் அழைத்துப் போவது எண்ணி பயமாக இருந்தது.


பள்ளிக்கு வலதுபக்கச் சாலையில் சைந்தவியும் இடது பக்கச் சாலையில் மிதுலும் வந்து கொண்டிருந்தனர். பள்ளியின் வாசலில் மதுவின் வண்டியை தூரத்தில் கண்டதுமே இவனுக்கு உள்ளுக்குள் கிலி பிடித்து விட்டது. வண்டியைப் பார்த்துக் கொண்டிருந்தவன், எதிரே வந்த சைந்தவியைக் கவனிக்கவில்லை.
அவளோ வண்டிய நிறுத்த இடம் கண்டு செல்ல இருவரும் மோதிக் கொள்ள, தடுமாறிப் போன சைந்தவி தன்னை நிலைப்படுத்திக் கொண்டு, எதிரே நின்றிருந்தவனை கோபத்துடன் பார்த்தாள்.
அவனும் தன் மேல் தவறுள்ளதால் அவளிடம், “சாரிங்க! என்னோட மிஸ்டேக் தான்… வெரி சாரி!” என்றான்.
அதற்கு மேல் அவள் எதுவும் சொல்லாமல் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு உள்ளே செல்ல, அவனும் அவசரமாக வண்டியை நிறுத்திவிட்டு அவள் பின்னே நடந்து வந்தான்.
தன் பின்னே வரும் மிதுலை திரும்பி ஒரு கணம் பார்த்தாள். தன்னைத் தொடர்வது போல் தெரிய தன் நடையை மெல்ல தளர்த்தினாள். இவனோ அவளை கண்டுகொள்ளாது முன்னே நடந்தான்.
‘நம்ம பின்னாடி வரல!’ என நெஞ்சில் கை வைத்து எண்ண, ‘ஆசைதான்…’ என்றது அவள் மனது. உள்ளுக்குள் அதனுடன் நொடித்துக் கொண்டு வேகமாக நடந்தாள்.


அங்கே பள்ளி முதல்வரோ மதுவிடம் மாட்டிக் கொண்டு முழித்தார்.
“இவ பேரண்ட்ஸ கூப்டு சொல்லுங்க மேம்… இந்த வயசுல பொய் சொல்றத பாருங்க…”
“மேம்! நான் பொய் சொல்லவே இல்ல… அவளாதான் விழுந்தா… நான் தள்ளி விடல…”
“பாருங்க! மறுபடியும் அதே சொல்றா… நான் பார்த்தேன், சொல்றேன். திரும்ப திரும்ப அதே சொல்ற…!” என ஆருவைக் கடிந்து கொள்ள, கீர்த்தி பயந்து போனாள்.
“மேம் இருங்க, நான் விசாரிக்கிறேன். நீங்க எதுவும் கேட்காதீங்க…” என்றவர் ஆருவின் பக்கம் திரும்பி, “நீ இந்த பொண்ணை தள்ளி விட்டியா?”
“இல்ல மேம்… இவதான் என்னை ரெண்டு வாட்டி தள்ளி விட்டா. நான் தள்ளிவிட போகும் போதே இவளா கீழ விழுந்துட்டா மேம்.” என உண்மையை சொன்னாள்.
கீர்த்தியின் பக்கம் திரும்பி, “இவ சொல்றது உண்மையா?” எனக் கேட்டார்.
ஆராதனா சொல்வது உண்மை என தெரிந்தும், தன் அன்னைக்கு பயந்த கீர்த்தி அன்னையின் முகம் பார்த்தாள், ஆராதனாவின் முகத்தையும் பார்த்தாள். பின் முதல்வர் முகத்தையும் பார்த்தாள். உண்மையை சொல்ல தைரியம் இல்லை அவளுக்கு. மூவரின் முகத்தை மட்டுமே பார்த்தாள்.
“பதில் சொல்லுமா…” என்றார் மீண்டும்.
“இல்ல மேம், இவதான் என்னை தள்ளி விட்டா, நான் தள்ளி விடல. இவ பொய் சொல்றா…” என மாற்றிச் சொன்னாள்.
பெரிய கண்களை விரித்த ஆருவோ, “இல்ல மேம்… இவதான் பொய் சொல்றா…” என்றதும் மதுவிற்கு கோபம் வந்தது.
“யாரு பொய் சொல்றா? ஆங்! நீ தள்ளி விட்டுட்டு அவதான் தள்ளிவிட்டானு பொய் வேற சொல்றியா? அப்படியே அறைஞ்சிடுவேன் பார்த்துக்க…” என அவள் முன் கையை அறைவது போல கொண்டு சொல்ல,
“யார் பொண்ணை யார் அடிக்கிறது?” என அங்கு வந்தாள் சைந்தவி.
இருவரையும் தேடிய மிதுலும் அங்கு வந்தான். சைந்தவியை ஒரு கணம் பார்த்துவிட்டு தன் அக்காவின் பக்கம் வந்து நின்றான்.
சைந்தவியும் அவனை ஒரு கணம் பார்த்துவிட்டு, “என் பொண்ண அடிக்க நீங்க யாருங்க? உங்க பொண்ண கண்டிக்கிறதோட நிறுத்திக்கங்க. என் பொண்ண தொடுற வேலைய வச்சிக்காதீங்க. எதுக்கு என் பொண்ண திட்றீங்க?” என அவளும் விடவில்லை.
“என் பொண்ணை தள்ளிவிட்டு இல்லன்னு பொய் சொல்றா… நான் பார்த்தேன் சொல்லியும் பொய் சொல்றா… அத கேட்டு சும்மா இருக்க சொல்றியா?”
“ஆரு, நீ கீர்த்திய தள்ளிவிட்டியா?” சைந்தவி கேட்டதற்கு அதே பதிலை தான் சொன்னாள்.
“கீர்த்தி இவளை நீ தள்ளிவீட்டியா?” என கீர்த்தியிடம் கேட்க, அவளோ மென்று முழுங்கி இல்லை என தலையை அசைப்பதிலே கண்டுகொண்டாள், அவளிடம் தான் ஏதோ தவறு இருக்கிறது என்று.
“என் பொண்ண ஏன் கேக்குற? அவளை கேளு, ஏன் பொய் சொல்றனு கேளு… பொய் சொல்றது தப்புனு சொல்லி கொடுங்க.” என்றாள்.
“இவ, கீர்த்திய தள்ளிவிட்டத பார்த்தீங்க. கீர்த்தி இவள தள்ளிவிட்டத பார்க்கலன்றதுனால அது பொய் ஆகிடுமா? ஏன் உங்க பொண்ணு சொல்றது உண்மையா தான் இருக்குமா? நீங்க அவளை நம்பினால் நான் இவளை நம்புறேன். என் ஆரு பொய் சொல்ல மாட்டா. தப்பு செஞ்சா ஒத்துப்பா.”
“அப்ப, நான் என் பொண்ண ஒழுங்கா வளர்க்கல சொல்றியா?”
“நான் என் பொண்ண சரியா வளர்கிறேன் சொல்றேன். தெரியாத ஒரு விஷயத்தை பத்தி பேசற பழக்கம் எனக்கு இல்ல.” என்றாள் பதிலுக்கு.
“என்ன சரியா வளர்க்கற நீ? பொய் சொல்லி தப்பிக்க நினைக்கிறா… இதுக்கும் மேல இவளால எங்க வீட்ல எவ்வளவு பிரச்சனை தெரியுமா? என் பொண்ணு பரீட்சைக்கு வர்றா, வரலை… இவளுக்கு என்ன? ரேங்க் ஹோல்டர் வரமாட்ட, பிரைஸ் வாங்க மாட்டனு சொல்லி, இவ மனசை மாத்தி கல்யாணத்தை நிறுத்திடு சொல்ல வச்சிட்டா உன் பொண்ணு. வீட்ல நல்ல காரியம் நடக்கும் போது இந்த பேச்சை நாங்க கேட்கணுமா?”
“உங்க பொண்ணு கல்யாணத்தை நிறுத்திடு சொன்னதுக்கும் ஆருவுக்கும் என்ன சம்பந்தம்? உங்க பொண்ணு சொன்ன வார்த்தைக்காக, ஆருவால தான்னு இவ மேல பழி போடுறீங்க. தன் தவற ஒத்துக்காம அடுத்தவங்க மேல பழி போடுற பழக்கம் கீர்த்திக்கு எப்படி வந்ததுனு இப்போதான் புரியுது.” என்றதும் மிதுலுக்கு கோபம் வந்தது.
“எந்த பழக்கத்தை கீர்த்தி எங்ககிட்ட கத்துக்கிட்டானு சொல்றீங்க? அப்படி பார்த்தால் பொய் சொல்ற உங்க பொண்ணு உங்ககிட்ட இருந்து தான் கத்திருக்கானு சொல்லட்டுமா? வார்த்தைய பார்த்து பேசுங்க! உங்க பொண்ணு மேலே பழிய போடணும்னு எங்களுக்கு எந்த அவசியமும் இல்ல. எங்க அக்கா தள்ளிவிட்டத்தை பார்த்ததால தான் பேசுறா… சும்மா நாங்க யாரும் யார் மேலயும் இங்க பழிய போடல, புரிஞ்சதா?”
“அப்போ உங்க அக்கா, கீர்த்தி சொன்ன வார்த்தைக்கு ஆருவ காரணம் சொல்லி பழிய போட்றாங்களே, அது சரில? ஆரு, அவளுக்கு தெரிஞ்சத கேஸுவலா பேசி இருக்கா. அவளுக்கு தெரியுமா, இவ போய் கல்யாணத்தை நிறுத்த சொல்வான்னு? எங்களுக்கு என்னவோ உங்க கல்யாணத்தை நிறுத்த இன்டன்ஷன் இருக்கிறது போல பேசிட்டு இருக்காங்க உங்க அக்கா, அத சரி சொல்றீங்களா?
யாருனே தெரியாத உங்க கல்யாணத்தை நிறுத்த நாங்க நினைப்போமா? இல்ல, இந்தக் குழந்தை தான் நினைக்குமா? குழந்தைங்க இரண்டு பேரும் விளையாண்டு இருக்காங்க, கீர்த்தி தள்ளிவிட்ருக்கலாம், நீங்க பார்க்காம இருந்திருக்கலாம். ஆரு தள்ளிவிட்டதை மட்டும் பார்த்து, நீங்க ஆருவ கார்னர் பண்றது சரியில்ல.
உங்க கோபம் எல்லாம் உங்க பொண்ணு சொன்ன வார்த்தை தான். அதுக்கு காரணம் ஆருனு நினைச்சிட்டு அவ பண்றதெல்லாம் குத்தம் சொல்லிட்டு இருக்கீங்க. ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ், அவங்களுக்குள்ள நடக்கற விஷயத்தை பெருசாக்கிட்டு இருக்காதீங்க. கீர்த்திக்கிட்ட எடுத்து சொல்லி புரிய வைக்கிறது உங்க கடமை, ஆருவ காரணம் சொல்றது தப்பு. எப்பவும் எந்த சூழ்நிலைலையும் பொய் சொல்ல கூடாது. தவறு செய்தா நிமிர்ந்து அதை ஒத்துக்கணும்னு சொல்லி குடுத்து இருக்கேன்.
நீங்க அதை கீர்த்திகிட்ட சொல்லி வளர்த்திருக்கீங்களானு பார்த்துக்கங்க. நாங்க வர்றோம் மேடம்…” என்று ஆருவை கூட்டிச் சென்றாள்.
“எப்படி திமிரா பேசிட்டு போறாங்க பார்த்தீங்களா மேம்? அந்த பொண்ணால தான் இவ இப்படி பேசி இருக்கானு சொல்றேன். ஒரு சாரி கூட சொல்லாமல் நியாயம் பேசிட்டு போறாங்க. இதுல என் பொண்ண நான் ஒழுங்கா வளர்க்கணும்னு வேற சொல்லிட்டு போறா…” என கடுப்பில் பேச,
“மேம்! ஆராதனா எங்க ஸ்கூல்ல ஃபாலோ பண்ற ப்ரோசிஜர தான் பேசி இருக்கா. கல்யாணத்தை நிறுத்த சொன்னதுக்கு முழுக்க முழுக்க பொறுப்பு உங்க பொண்ணு மட்டும்தான். அதை நீங்க அக்சப்ட் பண்ணிக்கணும். கீர்த்திகிட்ட சொல்லி புரிய வைக்கணும். கீர்த்தி முன்னாடி ஆராதனா காரணம் சொன்னா. கீர்த்தியும், அவங்க சொன்னது போல, தப்பு தன் மேலே இருந்தாலும் பழிய இன்னொருத்தர் மேலே போடதான் செய்வா.
கண்டிக்கணும்னா உங்க குழந்தையை மட்டும்தான் கண்டிக்க முடியும். மத்த குழந்தைங்க மேலே உங்களுக்கு எந்த உரிமையும் இல்ல. இனி நாங்க கவனமா இருக்கோம்.” என்று முடித்துக் கொள்ள,
மீண்டும் மது ஏதோ சொல்ல எத்தனிக்க, “அக்கா, வா!” என்று அவளைப் பேச விடாமல் அழைத்துக் கொண்டு போனான்.
வீட்டிற்கு வந்ததும் மது பள்ளி முதல்வரையும் பெயர் தெரியாத சைந்தவியையும் ஆராதனாவையும் திட்டித் தீர்த்துவிட, மற்ற மூவரும் அமைதியாக தங்கள் வேலையை செய்து கொண்டிருந்தனர்.
கீர்த்தி தனியாகச் சென்று அமர்ந்து விட்டாள். அவள் அருகே மிதுலும் அமர்ந்தான்.
“சாரி டால்! இப்படி நடக்கும்னு நான் நினைக்கவே இல்ல. அம்மாகிட்ட சொல்லிட்டு தான் போனேன். ஆனா அக்கா அங்க வருவானு எனக்கே தெரியாது. சாரி டால்!” என மருமகளிடம் மீண்டும் கெஞ்ச,
“மாமா… ஆரு எந்த தப்பும் பண்ணல, நான்தான் அவளை ரெண்டு தடவ தள்ளி விட்டேன். அவ என்னை தள்ளிவிட வந்தா, நானா பேக் தட்டி கீழ விழுந்தேன். அம்மாக்கு பயந்து பொய் சொல்லிட்டேன். இனி ஆராதனா என்கிட்ட பேசவே மாட்டல…? அவ என்கிட்ட ஃப்ரெண்ட்டா இருக்க மாட்டா…” என தேம்பி தேம்பி அழுதாள். அவனுக்கு சைந்தவியின் வார்த்தைகள் வந்து முள்ளாய் வந்து குத்தின.
கண்ணை மூடித் திறந்தவன், மருமகளைத் தூக்கி மடியில் வைத்தான். “கீர்து குட்டி! நீங்க பண்ணது தப்புதான். ஆரு பொய் சொல்லாம உண்மைய எல்லார் முன்னாடியும் சொன்னாங்கல… அதே போல நீங்களும் எல்லார் முன்னாடியும் தைரியமா உண்மைய சொல்லணும் இல்லையா?
பொய் சொல்லி அந்த நேரத்துல நாம தப்பிச்சுட்டோம்னு நினைச்சாலும், அந்த பொய் நம்ம பின்னாடியே வந்து ஒரு நாள் உன்னை மாட்டி விடும். உண்மைய சொல்லி உனக்கு கிடைக்கற தண்டனைகளை விட, அதிகமான தண்டனைகள் கிடைக்கும். தேவையா நம்மளுக்கு?
பொய் சொன்னா நம்மகிட்ட இருக்க நல்ல உறவுகள், நம்மளை விட்டு போயிடுவாங்க. யாரும் பேச கூட மாட்டாங்க. சோ, இனி கீர்த்தி குட்டி எப்பவும் பொய் சொல்ல கூடாது, ஓகேவா?” என்றான்.
“ஓகே, இனி பொய் சொல்ல மாட்டேன் மாமா. ஆரு என்கிட்ட பேசுவாதான?”
“பேசுவா… அதுக்கு முன்ன, நீ அவகிட்ட போய் சாரி கேட்கணும். உனக்காக, எனக்காக, அம்மாக்காக நீங்க ஆருகிட்ட மன்னிப்பு கேட்கணும். நீ சாரி கேட்டா அவ உன்கிட்ட பேசுவா. ஃபீல் பண்ணாம வாங்க, சாப்பிட போலாம்.” என்று மருமகளைத் தூக்கி உள்ளே சென்று உணவை ஊட்டிவிட்டு, உறங்க வைத்து அக்காவின் அறைக்குள் தூக்கிச் சென்றான்.
அறைக்குள் மது திரையின் வழியே வேலை செய்து கொண்டிருந்தாள். “அக்கா!” என்று அழைக்கவும், உள்ளே வர சொன்னாள். மருமகளை மெத்தையில் கிடத்திவிட்டு தன் அக்காவின் அருகே அமர்ந்தான்.
“உனக்கு ஏன்க்கா இவ்வளவு கோபம் வருது? சின்ன விஷயத்தை பெரிய இஸ்யூ ஆக்கிட்ட… குழந்தைங்க பேசுறது எவ்வளவு அழகு?! அதை ரசிக்காம அதுல ஏதாவது காரணத்தை பிடிச்சி சண்டை போடலாமா? கீர்த்தி சொன்ன வார்த்தைக்கு ஆராதனா மேலே நீ பழி போட்டது தப்புதான். கீர்த்தி என்கிட்ட உண்மையா சொன்னா அக்கா…” என்று நடந்ததை சொன்னவன்,
“ஏன்கா என் விஷயத்துல இவளோ சென்சிடிவ்வா இருக்க? அதனால மத்தவங்க ஹர்ட் ஆகுறாங்க…”
“புரியுது கிருஷ்ணா! உன் வாழ்க்கை என்னை போல ஆகிடக் கூடாதுனு தான் பயத்துல இப்படி நடந்துக்கிறேன். கீர்த்தி அந்த வார்த்தைய சொன்னதும் எனக்கு சகலமும் அடங்கிருச்சி கிருஷ்ணா.
கீர்த்தி மேல, அவள சொல்ல வச்ச ஆராதனா மேல அநியாயத்துக்கு கோபம் வந்திடுச்சு தடுமாறிட்டேன். அமைதியா போய் கீர்த்தியை கூப்பிடணும்னு தான் போனேன். ஆராதனா தள்ளிவிடுறத பார்த்து மொத்த கோபமும் சேர்ந்திருச்சி. என் மேலதான் தப்பு. இனி நிதானமா இருக்க முயற்சி செய்றேன் கிருஷ்ணா.” என்றாள்.
“லவ் யூ அக்கா! கோபம் தான் உறவுகளை அழிக்கிற பெரிய ஆயுதம்! நாம பார்த்து கையாளணும், இல்லைனா நம்மளையும் கிழிச்சிடும். பார்த்துக்க க்கா…” என்று ஆறுதலாக பேசிவிட்டு அவளது தலையை அழுத்தி சென்றவனுக்கு தெரியவில்லை, அந்தக் கோபம் அவனையும் ஆட்டிப்படைக்கப் போவதை.


மது மிரட்டியதில் ஆருவிற்கு காய்ச்சலே வந்துவிட்டது. ஊசி போட்டு, உணவை ஊட்டியவள் பக்கத்தில் அமர்ந்து தட்டிக் கொடுத்து அவளை உறங்க வைத்தாள்.
வெளியே தாய், தந்தை பேசிக் கொள்வது கேட்டது. “என்ன பொண்ணோ? குழந்தை பேசுறதெல்லாம் பெரிசாக்கி மிரட்டி அடிக்கற அளவுக்கு போறது சரியில்ல… அவளுக்கும் பிள்ளை இருக்குல, தப்பு பண்ணாம நாம போய் திட்டினா ஏத்துப்பாளா? அடுத்தவங்க வீட்டு பொண்ணுன்னா இளக்காரமா போச்சா…” என புலம்பிக் கொண்டே இருக்க, அவரை சமாதானம் செய்தார் சக்திவேல்.
மருமகளை நெற்றியில் இதழ் பதித்து, கட்டிக்கொண்டு படுத்து விட்டாள் சைந்தவி.


“இந்த கல்யாணத்தை நிறுத்திடலாம் சம்மந்தி.” என்று மூர்த்தியின் தலையில் பெரும் இடியை இறக்கினார், மிதுல் கட்டிக்க போகும் பெண்ணின் தந்தை

8 thoughts on “கானல் – 3”

  1. Avatar

    இந்த மது கொஞ்சம் கூட நிதானம் இல்லை இப்படி குழந்தைகள் பேச்சுக்கலாம் சண்டை. .. ஆச்சோ இவங்க ரெண்டு பேரால சைந்தவி கஷ்ட படுவாலோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *