Skip to content
Home » காற்றோடு காற்றாக-10

காற்றோடு காற்றாக-10

10

இங்கே வேலைக்கு சேர்ந்த போதே, அதே நிறுவனத்தில் பணியாற்றும், பக்கத்து வீட்டில்

இருக்கும் ஷீலா அவ்வப்போது பேச நேரிடும் சமயங்களில் எல்லாம் பிரியாவின் பிரிவில்

பணியாற்றும் ஊழியர்களைப் பற்றி அவர்கள் குணாதிசயங்களைப் பற்றி சொல்வாள். “இதற்கு

முன்பு அதிகாரியாக இருந்தவரிடம் மிகுந்த உரிமையோடு வம்பு பேசுவார்கள். ரொம்ப

தாமதமாகத் தான் பணிக்கு வருவார்கள். மொத்தத்தில் கொஞ்சம் இடம் கொடுத்தால் மடத்தை

பிடுங்குகின்ற ரகம்”

அதனால் அதற்கு இடம் கொடாத வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்று தீர்மானித்து

வந்த புதிலேயே ரொம்பவும் கறாராகவும் கண்டிப்புடனும் நடந்து கொண்டாள். அதிலும்

சங்கரைப் பற்றி ஷீலா சொன்னது தான் மனதிற்குள் இருந்து கொண்டே இருந்தது. ஆனால்

அவனோ பயிற்சிக்கு என்று சென்னைக்கு சென்றிருந்தான்.

“பிரியா சங்கரிடம் மட்டும் வைத்துக் கொள்ளாதே. ஒரு பொம்பிள்ளை என்றில்லாமல்

எல்லோரிடமும் கடலை போடுபவன் அவன். அவனோட பேச்சுல மயங்கி கொஞ்சம் இடம்

கொடுத்தால் தலையில் ஏறி உட்கார்ந்து விடுவான். ஜாக்கிரதையாக இரு. கொஞ்சம்

கண்டிப்பாக இரு” என்றாள் ஷீலா.

முதன்முதலில் சங்கரை பார்த்தது இன்றும் நினைவில் இருந்தது பிரியாவிற்கு. தண்ணீர்

சொட்டும் தலையும் கலைந்த முடியுமாக சற்றே கசங்கிய சட்டையும் அதை அவன்

பேண்டிற்குள் செருகியிருந்த விதமும் கால்களில் அணிந்திருந்த ஹவாய் செப்பலும் என்று

கண்ணியமற்ற முறையில் அலுவலக டேகோரம் கிஞ்சித்தும் அற்ற தோற்றத்தில்,

அசால்ட்டாக கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்து தன்னிடம் பதிவேட்டிற்காக கை நீட்டி

நின்றதை கண்ட பிரியாவிற்கு ஷீலா சொன்னது அல்லாமல் அவளுக்கும் சுயமாகவே

எரிச்சலாகத் தான் இருந்தது. அந்த சிடுசிடுப்பு மறைய வெகு நாளாயிற்று.

ஆனால் தன்னுடைய எரிச்சலை அவன் கண்டு கொள்ளாமல் அதே நேரத்தில் தன்னை

அசட்டை செய்யாமல் அதிகாரியான தன்னிடம் அபரிமிதமான பணிவையும் காட்டாமல் அதே

நேரத்தில் பவ்வியமாக இருப்பதைப் போல நடிக்கவும் இல்லாமல் இயல்பாக இருக்கவும்

அவளுமே சிடுசிடுப்பு குறைந்து இயல்பானாள். சங்கர் அவளை எதிர்த்து நின்றதுமில்லை.

அதே நேரத்தில் அளவிற்கு அதிகமாக தாழ்ந்தும் போனதில்லை. மொத்தத்தில் ஒரு

அதிகாரியாக மட்டுமன்றி ஒரு பெண்ணாகவும் அவன் தன்னிடம் மரியாதையாகவே நடந்து

கொண்டான்.

தன்னுடைய புராஜெக்டைப் பற்றி சக ஊழியர்களுக்கு விளக்க முற்பட்டு எப்படி

தொடங்குவது என்று தயக்கமேற்ப்பட்ட போது கூட அவனுடைய இயல்பான பேச்சினால்

அந்த இடமே கலகலப்பாகி பிரியாவின் வேலையை சுலபமாக்கியது நிஜம். யதார்த்தமாய்

பொருத்தமாய் அவன் கேட்கும் கேள்விகள் அவளுக்கு விவரிக்கும் வேலையை எளிதாக்கியது.

அவன் கேட்கும் கேள்விகளில் வெளிப்பட்ட அவனுடைய புத்திசாலித்தனம், அதை அவள்

விவரிக்கும் போது அதை உடனடியாக கிரகித்துக் கொள்ளும் அவனுடைய புத்தி கூர்மை,

அந்த முதல் நாளுக்குப் பிறகு எப்போதும் கண்ணியமாக உடையணியும் பாங்கு, நேரம்

தவறாமை என்று அவன் பக்கத்தில் மதிப்பெண் கூடிக் கொண்டு போய் நாளடைவில் அவன்

பால் ஏற்பட்டிருந்த எரிச்சல் மறைந்து அவள் வயதினருக்கே உரிய இயல்புடன் பழக

முடிந்தது. எல்லாரிடமும் சகஜமாக இயல்பாக பழகியவள் இப்போதெல்லாம் சுகந்தியை

மற்றவர்களைப் போல அக்கா என்றே அழைத்தாள்.

சங்கர் புராஜெக்ட் விஷயமாக அன்று போன இடங்களையும் சந்தித்த மனிதர்களையும் பற்றி

சுவைப்பட சிரிக்க சிரிக்க விவரிக்க முற்படும் போது மற்றவர்களைப் போல இவள் மனதில்

தனி முத்திரையாக பதிந்து தான் போனாள். இது நாளடைவில் யாரும் இல்லாவிட்டாலும்

சங்கரை நேரே பார்க்கும் போது புன்முறுவலுடன் இயல்பாக பேச முடிந்தது.

அன்று வட்டார வளர்ச்சி அதிகாரியை சந்திக்க இருவரும் போயிருந்தார்கள். நீண்ட

நெடுநேரம் காத்திருக்கும்படி ஆயிற்று. அவள் பொறுமை இழக்கத் தொடங்கும் போதே அவன்

சொன்னான். ”மேடம், அரசு அலுவலகங்கள் அப்படித் தான். அதிலும் அரசு அதிகாரிகள்

எப்போதுமே அப்படித் தான். கொஞ்சம் பொறுமையாக இருங்கள்”

“அதுக்குன்னு இப்படியா?”

“என்ன பண்றது. இவ்வளவு நேரம் காத்திருந்து விட்டோம்”

“இன்னும் எவ்வளவு நேரமோ?”

“அவுங்க எப்போ கூப்பிடுவாங்களோ அது வரை” புன்னகைத்தான்.

“நானும் தானே அதிகாரியாக இருக்கிறேன்”

“ஆனால் நாம் தானே அவர்களை தேடிக் கொண்டு வந்திருக்கிறோம்”

“ஒரு சின்ன விஷயத்துக்கே இப்படின்னா?” அலுத்துக் கொண்டாள்.

“வீரியம் பெரிசில்லை. காரியம் தான் பெரிசு”

அவன் சொல்லி முடிக்கவும் நல்லவேளையாக அவர்கள் உள்ளே அழைக்கப்பட்டார்கள்.

உள்ளே நுழைந்ததுமே அவர்களைப் பார்த்தும் பார்க்காத மாதிரி பாவனையில் அந்த பி,டி.ஓ

அமரும்படி சொல்லாமல் தன் கையில் இருக்கும் வேலையில் கவனமாக இருந்தார். பிரியா

சங்கரை முறைத்தாள். கண்களால் அவளை உட்கார சொன்னான் அவன். இவர்களின் கண்

ஜாடையைப் பார்த்து விட்டு அப்போது தான் அவர்கள் இருவரும் உள்ளே வந்ததைப் பார்த்தது

போல பாவனையுடன் உட்காரும் படி சைகை செய்தார். அவருக்கு என்ன கடுப்போ, என்ன

கோபமோ தெரியவில்லை. சங்கரின் மலர்ச்சியான முகமனைக் கூட பெரிதாக எடுத்துக்

கொள்ளவில்லை.

அவள் தாங்கள் அவரை சந்திக்க வந்ததின் நோக்கத்தையும் திட்டத்தைப் பற்றி விளக்கியும்

முடிக்கும் முன்பாகவே அவளைக் குடைந்து குடைந்து கேள்வி மேல் கேள்வியாக கேட்டு

கொண்டேயிருந்தார். அவளுடைய வியாக்கியானங்களை காதில் போட்டுக்

கொள்ளவேயில்லை அவர்.

அவளுடைய படிப்பையும் பதவியையும் அறிந்தவருக்கு படித்து முடித்து விட்டு நேராக வந்து

விட்டாள். களப்பணியில் என்ன முன் அனுபவம் இருக்கப் போகிறது என்ற எண்ணம்.

அதனால் தான் நீ நினைப்பதைப் போல உன் புராஜெக்ட் அத்தனை சுலபமாக நடந்து விடக்

கூடியது இல்லை. அதற்கு கை தேர்ந்த களப்பணியாளர்கள் இருந்தால் தான் ஆகும் என்பதை

அவளுக்கு உணர்த்தி விட நினைத்தவரை புரிந்து கொண்டு விட்ட சங்கர் அவருடைய

கேள்விக்கெல்லாம் பொறுமையாகவே பதில் அளித்து வந்தான்.

எப்போதும் அவனிடம் காணப்படும் அய். அம். வெரி குட் அட் மை வொர்க் என்பதான

தன்னம்பிக்கையுடன் பிரியாவிடம் கேட்டு தெளிவு பெற்றிருந்த விளக்கங்களை அதே

மிடுக்குடன் அவரை வெறுப்பேற்றி விடாத வண்ணம் சொல்லி வந்தான்.

இறுதியாக அவரை உரிய விதமாக புகழ்ந்து அவருடைய பங்கும் ஆலோசனையும்

தலைமையும் இல்லாமல் தங்களால் இந்த புராஜெக்டை செய்யவே முடியாது என்பதாக அவன்

சொல்ல, அவரிடம் வேலை ஆக வேண்டிய பாதையை சட்டென்று பிடித்துக் கொண்டவளாக

சங்கரை ஒட்டியே அவளும் பேசவே போய்த் தொலையுங்கள் என்பதாக ஒரு வழிக்கு வந்தார்

பி.டி.ஓ திரு சதாசிவம். தொடக்க விழா அன்று இத்தனை கூட்டமும் மத்திய மந்திரியின்

புகழ்ச்சியும் அவரை பிரியாவிற்கு நன்றி சொல்ல வைத்தது வேறு கதை. வெளியே வந்ததும்

“ரொம்ப நன்றி சங்கர்” என்றாள் ஆத்மார்த்தமாக.

“பரவாயில்லை மேடம்” என்று மெல்ல புன்னகைத்தான் அவன். அவளைப் பார்த்து அவன்

புன்னகைத்த அந்த ஒரு நொடி ஏனோ மிகவும் பாதுகாப்பாக உணர்ந்தாள் பிரியா. தன்

தந்தையிடம் தவிர வேறு யாரிடமும் ஏற்பட்டிராத பாதுகாப்பு உணர்வு அவனிடம் தனக்கு ஏன்

ஏற்பட்டது என்பதை இந்த நிமிடம் கூட அவளால் மறுக்க முடியாது. ஆனால் ஏன் அதுபோல

ஏற்பட்டது என்பதற்கான காரணம் தான் இப்போதும் விளங்கவில்லை.

அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு மனத்தடைகள் அற்று இயல்பாக அவர்களால் பேசிக் கொள்ள

முடிந்தது. அது ஒரு நல்ல புஸ்தகத்தையா? திரைப்படமா? இளையராஜாவா? இயற்கை

அழகா? விசித்திரமான மனிதர்களா? மனிதர்களின் விசித்திரமான பழக்க வழக்கங்களா?

குணாதிசயங்களை அலசுவதிலா? என்று அவர்களுக்கும் எப்போதும் ஒரு தெளிந்த

நீரோடையைப் போல பேச்சு பிரவாகமாக தங்கு தடையின் பொங்கி பெருகிப் போகும்.

மற்றவர்கள் புருவத்தை உயர்த்துகிறார்கள் என்பது புரிந்தாலும்.

தொடக்க விழா நிகழ்ச்சியின் போது வெள்ளை பின்புலத்தில் பிங்க் பார்டரில் கைத்தறிப்

புடவையில் காதில் வெண்முத்து கம்மலும் கழுத்தில் ஒரு வெண்முத்து மாலையும் தலையை

விரித்து விட்டு உச்சியில் சிறு கிளிப்பில் முடியைப் பொருத்தி தேவதையாக வந்தாள். கிளம்பும்

போதே சுகந்தியின் விமர்சனமும் நிகழ்ச்சி நடக்கும் திருமண மண்டபத்தில் நுழையும் போதே

அரவிந்தனின் ரசனையான பார்வையும் மற்றவர்களின் கண்களில் இருந்த ரசனையையும்

அவளுக்கு இன்று தான் மிகவும் அழகாக இருப்பதான தன்னம்பிக்கையிக் கொடுத்தது.

எதிரே வந்த ரமேஷ் தன்னையறியாமல் “மேடம் மிகவும் அழகாக உடுத்திக் கொண்டு

இருக்கிறீர்கள்” என்று உண்மையாக சொன்னான்.

அவனுடைய அருமையான வார்த்தை பிரயோகத்தை மனதிற்குள் சிலாகித்துக் கொண்டு சிறு

சிரிப்புடன் “தேங்க்ஸ். சங்கர் எங்கே ரமேஷ்?” என்று கேட்டாள்.

“அவன் மேலே டைனிங் ஹாலில் உள்ளான். இருங்கள். கூப்பிடுகிறேன்” என்று மொபைலை

எடுத்தான்.

தடுத்தவாறே “ வேண்டாம் ரமேஷ். எனக்கும் டீ குடிக்கணும். நானே மேலே போய்க்கிறேன்”

என்றாள்.

அவள் மாடிப்படியில் மேலே ஏறும் போதே சங்கர் கீழே இறங்கிக் கொண்டிருந்தான். இருவரும்

லேன்டிங்கில் சந்தித்துக் கொண்டனர். சங்கர் கீழே இறங்கிக் கொண்டிருக்கும் போதே மேலே

ஏறி வரும் பிரியாவைப் பார்த்து விட்டான். அவன் மெய் மறந்து அவளையேப் பார்த்துக்

கொண்டு நின்றது என்னமோ சில நொடிகள் தான். ஆனால் என்னவோ முன் எழு

ஜென்மங்களாக அவளைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் போன்றதொரு பார்வை. இமை

மூடவும் மறந்த, அவன் உயிர் உருகி, தன் உயிரை உருக்கக் கூடியதான பார்வை….! என்ன

ஒரு பார்வை! இப்போது நினைத்தாலும் அந்த பார்வை அவளை என்னவோ செய்தது.

ஒரு திரைப்படத்தில் வருமே ஒரு பாடல்.”தொட்டு தொட்டு என்னை, சுட்ட களிமண்ணை

சிற்பமாக யார் செய்ததோ?” என்று மண்ணாக இருந்த தன்னை பெண்ணாக உணர வைத்த

தருணம் அது. ஏனெனில் அவனுடைய பார்வையில் அவளுடைய பருவம் தெரிந்தது இன்று.

அவளை மிகவும் நெருங்கி நின்றான் அவன். அவனுடைய உஷ்ண மூச்சு அவள் வகிட்டில்

தகித்தது. எல்லாம் மறந்து தன்னை பெண்ணாக மட்டும் பார்த்த பார்வையில் தானும் எல்லாம்

மறந்து வெறும் பெண்ணாக நின்ற, நிற்க வைத்த பார்வையும் தருணமும் இப்போதும் மறக்க

முடியவில்லை.

ஏனோ இதை இந்த நிமிடம் நினைத்துப் பார்த்த இந்த நொடியில் பிரியாவிற்கு மேனி

சிலிர்த்தது.

தொடக்க விழா முடிந்து மத்திய அமைச்சர் புறப்படுகையில் நிறுவனத்தின் இயக்குனரிடம்

இந்த திட்டத்திற்கு வேண்டிய உதவிகளை செய்யவும் கண்காணிக்கவும் ஆலோசனை சொல்லி

விட்டு பி.டி. ஓ சதாசிவத்திடம் வேண்டிய உதவிகளை தடையில்லாமல் செய்ய உத்தரவிட்டு

இந்த புராஜெக்ட் பைலட் புரோக்ராம் ஆக வெற்றி பெற்றால் தேசம் முழுவதற்குமாக மெயின்

ப்ரோக்ராமாக கொண்டு போகப்படும் என்று உறுதியளித்து சென்றார்.

பிரியாவை அதிகாரிகளும் இயக்குனரும் பாராட்டி விட்டு சென்ற போது இந்த திட்டத்திற்காக

மற்றவர்கள் எல்லோரையும் விட அதிகமாக உழைத்த, எப்போதும் தனக்கு பக்கபலாமாக

நின்ற சங்கரிடம் மனசு இளகி நின்றது.

மழை சற்று விடவும் எல்லோரும் கிளம்பிய பின் அரவிந்தன் இவளருகில் வந்து நின்றான்.

”வெல்டன் பிரியா. வாழ்த்துக்கள்” என்றான்.

“தேங்க்ஸ்” என்றாள் உண்மையான சந்தோஷத்துடன்.

‘போய் வருகிறேன்”

“ஆங்.”

“போய் வருகிறேன்” என்று மீண்டும் சொன்னவனின் பார்வை சென்ற இடத்தை இவளும்

திரும்பிப் பார்த்தாள். சங்கர் வவுச்சரில் கையெழுத்து வாங்குவதும் பணத்தை எண்ணிக்

கொடுப்பதுமாக இருந்தான்.

இவள் பார்ப்பதைப் பார்த்து விட்டு அவளருகில் அரவிந்தன் நிற்பதைக் கண்டு “மேடம் நீங்கள்

கிளம்புங்கள். நான் முடித்து விட்டு வருகிறேன்” என்றான்.

அவள் திரும்பி அரவிந்தனைப் பார்த்தாள். அவனோ எந்த வித உணர்சியும் அற்ற பார்வைப்

பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.

“நீங்கள் போங்கள் மேடம். நாளைக்கு உங்களுக்கு எல்லா கணக்கையும் சப்ஜாடா

கொடுக்கிறேன்” என்றான் மீண்டும் சங்கர்.

அரவிந்தன் அவளை வா என்றும் கூப்பிடவில்லை. உன் கணக்கு முடியும் வரை உடன்

இருக்கிறேன் என்றும் சொல்லவில்லை. இவள் என்ன சொல்லப் போகிறாள் என்று தெரிந்து

கொள்ள நிற்பதைப் போல இருந்தது அவன் அணுகுமுறை.

நானாக நான் உன்னுடன் வருகிறேன் என்று சொல்ல வேண்டும் என்று எதிர்பார்த்து

நிற்கிறான். இவன் நம்மை வா என்று அழைப்பான் என்று எதிர்பார்த்தது நம் தவறு. ச்சை.

இவனிடம் என்ன எதிர்பார்ப்பது! அவளுக்கே உரிய ஈகோ அவனுடன் செல்ல விடாமல்

தடுத்தது.

“இல்லே சங்கர். நாம் முடித்து விட்டே கிளம்புவோம். நானும் உதவுகிறேன். என்ன ஒரு அரை

மணி நேரம் முன்னே பின்னே ஆகும். பார்த்துக்கலாம்”

இந்த பதிலுக்காகத் தான் காத்திருந்ததைப் போல அரவிந்தன் ஏதும் பேசாமல் அங்கே இருந்து

நகர்ந்தான்.

மரியாதையான இடம் விட்டு நகர்ந்து உட்கார்ந்து அவன் செய்யும் வேலைகளை கவனித்துக்

கொண்டிருந்தாள். சொல்லப் போனால் உண்மையில் பிரியாவிற்கு அங்கே ஏதும் வேலை

இல்லை. சங்கர் சரியாக செய்து கொண்டிருந்தான். குனிந்திருந்த அவன் தலையைக் கண்டதும்

மனம் நெகிழ்ந்தது பிரியாவிற்கு. மதியமே சாப்பிடவில்லை என்று சொன்னான். இரவு

வீட்டிற்கு போனால் ஏதாவது இருக்குமா அவன் சாப்பிடுவதற்கு?

“போகும் போது எங்கேயாவது சாப்பிட்டு விட்டுப் போகலாம் சங்கர்”

பணத்தை எண்ணிக் கொண்டே அவளைப் பார்த்து சரி என்பதாக தலையை அசைத்தவனைக்

கண்டு முறுவலித்தாள் அவள்.

இப்போது நினைத்துப் பார்க்கும் போது சங்கர் தன்னை எப்போதுமே கண்ணாடி

பாத்திரத்தைக் கையாள்வதைப் போல ஒரு ஜாக்கிரதையுடன் அக்கறையுடன் மரியாதையுடன்

கையாள்வான் என்பது புரிந்தது.

ஆனால் ஒரு திருமணத்திற்கு இது போதுமா?

போதாதே.

அதற்கும் மேல் பிடிப்பது என்று ஒன்று உண்டே!

அரவிந்தனைப் பிடித்தா நான் திருமணம் செய்ய ஒப்புக் கொனேன்? அசந்தர்ப்பமான கேள்வி

மனதில் வந்தது.

இல்லையே….!

அப்பாவுக்காக, குடும்பத்திற்காக, பெரியப்பா அப்பாவின் சின்ன வயசு கனவுக்காக

கௌரவத்திற்காக என்று எத்தனை பிற காரணிகள் இருந்தது.

இதோ இன்று இப்படி ஒரு அபவாதம். அதுவும் திருமணம் நின்று போகுமளவிற்கு. இந்த

அபவாதத்தில் இருந்து மீள, விடுபட, எனக்கு சங்கரைத் திருமணம் செய்வதைத் தவிர வேறு

வழியில்லை.

ஒரு அதிகாரியாக அவன் தன்னிடம் நடந்து கொண்டதற்கும் கணவனாக தன்னிடம் நடந்து

கொள்ளப் போவதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. கண்டிப்பாக இருக்கும்.

அரவிந்தனோடு தனக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த திருமணத்தில் ஏற்பட்டிருந்த உறுத்தல்கள்

எதுவும் சங்கரை மணாளனாக நினைக்கும் போது இல்லை என்பதை தன் அறிவின் துணை

கொண்டு ஆராய்ந்து பார்த்ததில் புரிந்து கொண்டாள்.

காலப்போக்கில் சங்கருடன் ஒரு இயைந்த வாழ்க்கை வாழ முடியுமா? பார்ப்போம். விதி விட்ட

வழியில் என் வாழ்க்கைப் போகிறது. அது எங்கே எப்படி தன்னை கொண்டு கரை சேர்க்கிறது

என்று பார்ப்போம். …!

இப்போதைக்கு கல்யாணத்தை நிறுத்துவோம். ஒரு வருடம் கழித்துப் பார்த்துக் கொள்ளலாம்

என்றால் ஒரு வருடம் கழித்து மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கணும்.

வாழ்க்கையின் திருப்பங்களையும் புதிர்களையும் புரிந்து கொள்ள மிகுந்த பொறுமை

வேண்டும். அது நம்மால் முடியாது. ஒரே வளாகத்தில் இருந்து கொண்டு திருமணமாகாமல்

அரவிந்தனின் அபவாதத்தைப் பொறுத்துக் கொள்ளவும் முடியாது. திருமணம் செய்து

கொள்ளலாம் என்று தீர்மானித்து விட்டு ஒன்றுமே தெரியாததைப் போல சங்கருடன் பழகவும்

முடியாது.

“எங்கே கால் போகும்? போக விடு.முடிவைப் பார்த்து விடு.

காலம் ஒருநாள் கைக் கொடுக்கும். அதுவரை காத்திரு”

அவள் முகத்தில் இருந்த தெளிவைக் கண்ட பின்பு தான் மாதவிக்கும் விமாலாச்சிக்கும் உசுரே

வந்தது.

கஜநாதனும் தேவநாதனும் சங்கரைப் பார்க்க கிளம்பினார்கள்.

2 thoughts on “காற்றோடு காற்றாக-10”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *