Skip to content
Home » காற்றோடு காற்றாக-11

காற்றோடு காற்றாக-11

11

“செய்யவட்டி, ஒய் செரியவட்டி”

“என்னங்கய்யா…..?”

“தோ பாரு, நம்ம செவலை வெயில்ல நிக்குது. இழுத்துக் கிட்டுப் போய் கொட்டாயில கட்டு”

“சரிங்க”

“கொஞ்சம் வைக்கோலை பிரிச்சிப் போடு”

‘ஐயா, உங்களுக்கு போன் வந்திருக்கு” கௌரி கையில் கைப்பேசியைக் கொண்டு வந்து

தந்தாள்.

“யாரு இந்த நேரத்தில?”

“சங்கரு தான்”

“இந்நேரத்தில பேச மாட்டானே. என்னவாம்?” என்று கேட்டார்.

“அப்பாட்ட கொடுன்னு சொல்லிரிச்சுங்கய்யா”

அவள் நீட்டிய கைப்பேசியை வாங்கி கொண்டு உள்ளே வந்த மகாதேவனுக்கு வயது எழுவது.

நல்ல உயரம். அதற்கேற்ற ஆகிருதி. சிவந்த ரெட்டை நாடி சரீரம். நாலு முழ வேட்டி, மேலே

ஒரு துண்டு நெற்றியில் விபூதிப்பட்டை. வைதீக குடும்பம். இவர் மனைவி ராஜலட்சுமி

இவருக்கு நேர் எதிர். ஒல்லியாக சராசரி உயரத்தில் நீண்ட முடியுடன் அறுவது வயதுக்கு

சற்றே மாநிறமாக களையான முகத்தில் வைத்தோடும் வைர மூக்குத்தியும் ஜொலி ஜொலிக்க

அப்படியே அந்த மீனாட்சியாம்மனைப் போல இருப்பவள்.

“ஹல்லோ”

“அப்பா நான் சங்கர் பேசறேன்ப்பா”

“இந்நேரத்தில கூப்பிட்டியா… என்னவோ ஏதோன்னு நெனச்சிட்டேன் சங்கரு”

“அப்பா ஒரு விஷயம் சொல்லணும்பா”

“நீ இப்போ கூப்பிட்ட போதே புரிஞ்சதுப்பா. சொல்லு”

“எப்படி சொல்றதுன்னு …..?” தயங்கியவனை

“ஏனப்பா…என்னாச்சு? சொல்லுப்பா. எதுவாக இருந்தாலும் தயங்காமல் சொல்லுப்பா”

“என்னை சரியா புரிஞ்சிக்கனும்ப்பா”

“என்னடா புதுசா இத்தனை பீடிகை போடறே?”

“நான் எந்த தப்பும் பண்ணலைப்பா”

“பரவாயில்லை சங்கர். எதுவாக இருந்தாலும் தைரியமாக சொல். சொல்றதுக்காகத் தானே

எனக்கு போன் பண்ணினே. சொல்லு”

பிரியாவைப் பற்றி, தொடக்க விழாவைப் பற்றி, மழை பெய்ததால் வெளியே தங்க

நேர்ந்ததைப் பற்றி, அதனால் அவளுடன் தங்கிய தன்னுடன், அவள் பெயர் இணைத்து

அபவாதம் ஏற்பட்டுப் போனதைப் பற்றி, அதனால் அரவிந்தனுடன் அவளுக்கு ஏற்பாடாகி

இருந்த கல்யாணம் நின்று போனதைப் பற்றி சொல்லி முடித்தான்.

அவன் விரிவாக சொல்லி முடிக்கும் வரை அமைதியாக கேட்டு விட்டு “தம்பி,நீ வேணும்னே

இதை செய்யலேன்னு எனக்கு புரியுது. இயற்கை சதி செய்ததற்கு நீங்கள் ரெண்டு பேரும்

என்ன செய்ய முடியும்? உன்னை நான் நம்பறேன். அந்த பெண்ணின் கல்யாணம் நின்னுப்

போனது வருத்தமாகத் தான் இருக்கு. அதுக்கு நாம் ஏன்ன செய்வதுப்பா?” என்றார்

ஆதங்கத்துடன்.

“அவளுடைய அப்பாவும் பெரியப்பாவும் என்னைத் தேடி வந்தாங்கப்பா”

“ஏன்.. என்ன…எதுக்கு? எதுக்கு உன்னைப் பார்க்க வரணும்? டேய் நெசத்தை சொல்லு.

அவுங்க வீட்ல உன்னை அடிச்சி கிடிச்சி போட்டுட்டாங்களா?” பதறினார் அவர்.

“இல்லைப்பா. இல்லை”

“உண்மையை சொல்லு. உனக்கொன்னும் ஆகலையே”

“இல்லை”

“அப்புறம் எதுக்கு வந்தாங்க?”

“அவுங்க பெண்ணை எனக்கு கல்யாணம் பண்ணித் தராங்களாம். அதை கேட்கத் தான்

வந்தாங்க”

“ஓ” என்றவர் ஆசுவாசமாகிப் போனவராக பொதுவாக இதைப் போன்ற தருணங்களில் பெண்

வீட்டார் இவனைத் தானே அடிப்பார்கள், ஆனால் இவர்களோ நம் பையனை அடிக்காமல்

இந்த பெண்ணைத் தருகிறேன் என்றல்லவா சொல்கிறார்கள். பரவாயில்லையே என்ற கவலை

நீங்கியவராக அவர்களைப் பற்றி உண்டான நல்ல அபிப்ராயத்தை சொன்னார்.

”பரவாயில்லை. நியாயம் தருமம் தெரிஞ்சவங்களா இருக்காங்க” என்று.

“நான் எங்க அப்பா அம்மாவைக் கேட்டு சொல்கிறேன் என்று சொன்னேன் அப்பா” என்றான்

சங்கர். தொடர்ந்து கேட்டான்.”அப்பா நான் என்ன சொல்ல?”

“சொல்வதற்கு ஒன்றுமில்லை”

“அப்பா……?”

“பெண்பிள்ளை சமாச்சாரம். நம்மால் ஒரு பெண் குழந்தையின் வாழ்வு பாழாயிடக் கூடாது”

“அப்படின்னா நாளைக்கு அவர்களை அழைத்துக் கொண்டு வரட்டுமா?”

“இருப்பா. அம்மாவிடம் கேட்டு விடுகிறேன். போனை வை. நான் கூப்பிடுகிறேன்”

“சரிப்பா. கொஞ்சம் சீக்கிரம் சொல்லுங்கப்பா”

“கௌரி, அம்மா எங்கே?”

“எதிர்த்த வீட்டு மைதிலிக்கு குழந்தை பிறந்திருக்கு. பார்க்க போயிருக்காங்க”

“நான் கூப்பிட்டேன்னு சொல்லி கூட்டிக் கிட்டு வாம்மா”

பரபரவென்று உள்ளே வந்த ராஜலட்சுமி “மனுஷாளை கொஞ்ச நேரம் உட்கார விட

மாட்டீங்களே” என்றாள். அதே வேகத்தோடு “எதுக்கு இப்போ அத்தனை அர்ஜென்ட்” என்றும்

கேட்டாள்.

“சங்கர் போன் பண்ணினான்”

“சங்கரா……? இந்நேரம் பண்ண மாட்டானே? கொழந்தைக்கு உடம்பு கிடம்பு சரியில்லையா?

ஆபிசுக்கு போகலையா? என்னவாம்?”

“ஹோல்ட் ஆன். எதுக்கு இப்படி பதறுவே?”

“சொல்லும் போதே விவரமா சொல்லலாம் இல்லையா? பதறாம என்ன செய்யும் எனக்கு?”

“இரு ராஜி”

“என்னவாம்?”

“எல்லாம் சுப காரியம் தான்”

“நமக்குத் தெரியாம என்ன அப்படி சுப காரியம்?”

“அப்படி சந்தேகப்படாதே நம்ம புள்ளையைப் பத்தி”

“சரி சொல்லுங்கோ” என்றவள் “கெளரி, அந்த காத்தாடியை பெருசா வை. இவரோட

அழிச்சாட்டியத்தில் எனக்கு படபடப்பே வந்து விட்டது”

“சொல்றதைக் கேளேன் ராஜி”

“அதுக்குத் தானே இப்படி அடிச்சி பிடிச்சி ஓடி வந்திருக்கேன். சொல்லுங்க”

“நான் சொல்லி முடிக்கும் வரை வாயைத் திறக்க கூடாது”

“என்ன பீடிகை ரொம்ப பலமாயிருக்கு”

“சங்கர் சொன்னான்…….!” என்று தொடங்கியவர் சங்கர் சொன்ன முழு விவரத்தையும் ஒன்று

விடாமல் முழுவதும் சொல்லி முடித்தார். ராஜியும் அவர் முடிக்கும் வரை அமைதியாக கேட்டுக்

கொண்டிருந்தாள்.

சொல்லி முடித்து விட்டு “நாளைக்கு அவர்கள் நம்மை பார்க்க வருகிறார்களாம்” என்றார்.

“ம்” யோசனையாக இருந்தாள்.

“என்ன ராஜி, அவர்களை அழைத்து வர சொல்லலாமா?”

“கண்டிப்பாக”

“படக்குன்னு சொல்லிட்டே. பரவாயில்லையா?”

“ஒரு பொண்ணோட வாழ்வு நம் சங்கரால் கெட்டதுன்னு இருக்கக் கூடாது”

“நானும் அதைத் தான் நெனச்சேன் ராஜி”

“தெய்வத்திற்கு பயப்படனும். நமக்கும் ஒரு பெண் இருக்கிறாள். அவளுக்கும் ஒரு பெண். பழி

பாவத்துக்கு அஞ்சணும்”

“நீ இப்படி சொல்லுவேன்னு எனக்குத் தெரியும்”

“நம்மாலே ஒரு அபவாதமும் வரக் கூடாது” ராஜி சொல்லி முடிக்கவும் மகாதேவன் அவளை

பரிவுடன் பார்த்தார்.

ராஜலக்ஷ்மியின் மன விசாலம், தெய்வத்திற்கு பயப்படும் பண்பு மகாதேவனுக்கு

சிலிர்ப்பூட்டியது. சங்கர் அவர்களுக்கு ஒரே மகன். அவன் திருமணத்தை ஒட்டி ராஜிக்கு

ஏகப்பட்ட கனவுகளும் கற்பனைகளும் வரவு செலவுகளும் இருந்தது. ஆனால் தன் மகனால்

ஒரு பெண்ணிற்கு அபவாதம் ஏற்படும் என்ற நிலையில் எல்லாவர்றையும் ஓதுக்கி

நிதர்சனத்தை உணர்ந்து கொண்ட அவளுடைய பாங்கு மகாதேவனுக்கு எப்போதும் தன்

மனைவியை நினைத்தால் எற்படும் பிரமிப்பை இப்போதும் கொடுத்தது.

“லாவண்யாவுக்கு தகவல் சொல்லணும்”

“நான் அவளிடம் பேசறேன். நீங்கள் சம்பந்தியை நாளைக்கு வர சொல்லி விடுங்கள்”

“முதலில் சங்கரிடம் பேசு ராஜி”

சங்கரிடம் பேசினாள். அவன் வாயாலேயே மீண்டும் ஒருமுறை இந்த கதைகளைக்

கேட்டறிந்தாள்.

“அம்மா நான் எந்த தப்பும் பண்ணலைம்மா”

“நம்பறேன் தம்பி. உன்னை நம்பாமல் நான் யாரை நம்பப் போறேன்”

“தேங்க்ஸ் மா”

“நாளை அவர்களை அழைத்துக் கொண்டு வா”

சங்கர் அவனுடைய அக்கா லாவண்யாவிடம் பேசினான். லாவண்யா முதுநிலை பட்டதாரி.

கணவன் மாதவனுடன் டில்லியில் வசிக்கிறாள். டில்லி யுனிவெர்சிடியில் லெக்சரர் ஆக

பணியில் இருப்பவள். கணவன் மத்திய அரசில் மிக உயர்ந்த பொறுப்பில் இருப்பவன்.

இவன் கதையைக் கேட்ட லாவண்யா அவனிடம் கேட்டது.”உன்னை விட அதிகமான படிப்பு.

உன்னை விட உயர்ந்த பதவி. நீ அவளிடம் தான் பணியாற்றிட வேண்டும். எனவே நல்லா

யோசி. ஈகோ இல்லாமல் உன்னால் சமாளிக்க முடியுமா?”

“முடியும் அக்கா” அவனுடைய ஒற்றை வார்த்தையில் சமாதானமாகிப் போனாள் லாவண்யா.

மறுநாள் சங்கர் தேவநாதன் கஜநாதன் மாதவி மற்றும் விமலாவை அழைத்துக் கொண்டு

வந்தான். வந்தவர்கள் சங்கர் போனில் சொன்ன விஷயத்தை மீண்டும் ஒருமுறை நேரில்

சொன்னார்கள்.

அந்த பூபதி குடும்பத்தின் செல்வாக்கு, அதிகாரம் பணபலம் அவர்கள் தங்களை விரட்டியது

தங்கள் ஊர்பக்கம் தங்கள் இனத்தில் வேறு யாருக்கும் தன் பெண்ணை கொடுக்க இயலாமல்

செய்து விடுவது என்று சொன்ன போது நிஜமாகவே வயதிலும் அனுபவத்திலும்

பெரியவர்களான மகாதேவன் தம்பதியினர் மிகுந்த மன உருக்கமாகிப் போனார்கள். அதனால்

தேவநாதன் குறித்திருந்த நாளில் அதே முகூர்த்தத்தில் பிரியாவை சங்கருக்கு திருமணம் செய்ய

மகாதேவன் தம்பதியினர் ஒப்புக் கொண்டனர்.

வெறும் பத்து நாட்களில் திருமண எற்பாடுகளை முடிக்க வேண்டும். சங்கர் விடுமுறை எடுத்து

உடன் இருந்து திருமண எற்பாடுகளை செய்வதாக முடிவாயிற்று.

மறுநாள் சங்கரின் பெற்றோர் கிளம்பிப் போய் பிரியாவை பார்த்து விட்டு வந்தவர்கள்

ரொம்பவே திருப்தி அடைந்தார்கள். “ரொம்பவே நல்ல பெண். பெரியவர்களுக்கு நல்ல

மரியாதை தருகிறாள். மிகவும் தன்மையுடன் பழகுகிறாள். கூடுதலாக நல்ல அழகி”

லாவண்யாவிடம் கைப்பேசியில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ”அம்மு, நாமலே நம்ம

சங்கருக்கு பொண்ணு பார்த்திருந்தால் கூட இத்தனை அருமையான பெண் கிடைத்திருப்பாளா

என்று நிச்சயம் இல்லை. எல்லாம் கடவுள் செயல்.” என்று.

திருமண நாள் வருவதற்கு ரெண்டு நாட்கள் முன்னதாகவே சுந்தரவல்லி குடும்பத்துடன் வந்து

இறங்கி விட்டாள். இந்த வரன் எப்படி? கல்யாணத்துக்கு மாப்பிள்ளையின் பெற்றோர்கள்

சம்மதித்தார்களா? அவர்கள் வசதி என்ன? வரவு செலவு என்ன? என்று எத்தனை ஆயிரம்

கேள்விகள். மொத்தத்தில் இவள் ஏன்டா இப்போதே வந்தாள் என்று இருந்தது.

பெரியவள் பிரியா தான் கை நழுவிப் போய் விட்டாள். சின்னவள் மதுவை எப்படியாவது

மடக்கி விடு என்று சொல்லி அழைத்து வந்திருப்பாள் போலும். ராஜா மதுவின் வழியில்

நிற்பதும் அவளைக் கண்டால் இளிப்பதும், தொட்டு பேச முயற்சிப்பதும் மற்றவர்களிடம்

வெட்டிப் பந்தா பண்ணுவதும் என்று…..! ச்சை. ஏன்தான் அப்பாவுக்கு இப்படி ஒரு தங்கையோ

என்று அலுத்துக் கொண்டார்கள் பிள்ளைகள்.

சுந்தரவல்லி ரகசியம் பேசுவதாக காண்பித்துக் கொண்டு மிகுந்த உரத்த குரலில் பேசுவது

அவள் இயல்பான ஒன்று. அப்படியாகத் தான் பிரியாவை குத்தி கிழித்து நார்நாராக்கி

விட்டிருந்தாள். அடுக்கடுக்கான குற்றசாட்டுகள்.

“அதானே பார்த்தேன்., பிரியா பெரிய ஆள் தான் நீ. நல்லா திட்டம் போட்டு நீ காதலித்த இந்த பையனோடு வேண்டுமென்றே கல்யாணத்திற்கு முன்பே வெளியே ராத் தங்கியிருக்கிறாய்”

“பாவப்பட்ட அந்த பூபதி குடும்பம் உன் சூது வாது புரியாமல் உங்க அப்பனை நம்பி நல்ல

குடும்பம் ஆச்சே ரொம்ப சின்ன வயசுல தெரிந்தசவங்களாச்சே என்று நிச்சயம் செய்து ஏமாந்து

போனார்கள்”

“உள்ளூர்காரின்னு என்னைக் கூப்பிட்டு சொன்னார்களே. அப்போதே அந்த நிமிஷமே பூமி

பிளந்து அப்படியே உள்ளே போய் விட மாட்டோமா என்று இருந்தது. என்ன செய்ய? என் அண்ணன் பிள்ளையாச்சே. விட்டுக் குடுக்க முடியுமா? அவர்களிடம் எவ்வளவு சண்டை போட்டேன். ஆனால் என்ன பிரயோஜனம். அவர்கள் சொன்னதைப் போலத் தானே நடந்திருக்கு”

“நல்லவேளை. அத்தமட்டும் அவனைக் கட்டிக் கிட்டு இவனோடு கூத்தடிக்காமல் போனாயே”

“உங்க அம்மாவை சொல்லணும். எப்போதும் நான் சொல்வேன். அண்ணி உன்

பெண்ணுங்களை கொஞ்சம் கண்டிச்சு வை என்று. ஒருநாளாவது கேட்டிருப்பபாங்களா?”

“எங்க அண்ணன் தான் ஆகட்டும். பெண்டு பிள்ளைகளுக்கு ரொம்பவே இடம் கொடுத்து

விட்டார்”

“ம்..நான் என்ன சொன்னாலும் தலைப்பாடாக அடித்துக் கொண்டாலும் கொஞ்சமாவது

என்னை ஒரு பொருட்டாக மதித்திருப்பார்களா?”

“ஏழை சொல் அம்பலமேராது”

“பெரியவள் தான் இப்படி. இந்த சின்னது எப்படியோ?”

“யார் கண்டது எந்த புற்றில் எந்த பாம்பு இருக்குமோ?”

“நல்லவேளை இந்த கண்றாவி கூத்தை எல்லாம் பார்க்காமல் என் சித்தப்பாவும் சித்தியும்

காலாகாலத்தில் பரலோகம் போய்ட்டாங்க”

திருமணத்தன்றும் அவள் வாய் மூடவில்லை. வந்திருந்த உறவினர்களிடம் ஏன் முன்பு நிச்சயிக்கப்பட்ட கல்யாணம் நின்றது, இந்த பையனுக்கும் பிரியாவிற்கும் இருக்கும் காதல்

கடைசி நிமிஷத்தில் தெரிய வந்து, பூபதி குடும்பம் திருமணத்தை நிறுத்தி விட்டது, இது தான்

சாக்கு என்று காதலித்தவனுக்கே இப்போது தடால் புடால்ன்னு கட்டிக் கொடுப்பது என்று

அவள் கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டு அந்த குதிரை போன போக்கில கதையை

விட்டாள் அவள். மொத்தத்தில் கல்யாண வீட்டின் சந்தோஷத்தையே கெடுத்து விட்டிருந்தாள்

சுந்தரவல்லி.

அதோடு விட்டாளா அவள்? ஊரில் இருந்து வந்திருந்த சொந்தக்காரப் பெண்ணை பிடித்து

இழுத்து அருகில் அமர்த்தி மீண்டும் இந்த கதைகளை விலாவாரியாக விஸ்தாரமாக

சொன்னவள் “நல்லவேளை, ம்… இந்த பிரியாவுக்கு என் மகனை கல்யாணம் கட்டி வைக்க

சொல்லி என் தவடையைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினார்கள். ஊஹூம். நான் கூட

என்னுடைய அண்ணன் மகளாச்சுதே என்று கொஞ்சம் யோசித்தேன். என்ன இருந்தாலும்

ரத்தம் மணக்கும் அல்லவா! ஆனால் என் கணவர் ஊஹூம்…மூச்..! தலை கீழாக நின்னாலும்

ஒத்துக் கொள்ளவில்லையே. பிறகு எனக்கும் வேறு வழியில்லாமல் ஒரே நிலையாக நின்று

வேண்டவே வேண்டாம் என்று மறுத்து விட்டோம். அப்பாடா… ஒருவேளையாக நானும் என்

மகனும் தப்பினோம்”

இதை எல்லாம் காதில் கேட்டு பிரியா கொதிநிலைக்குப் போனாள். மேற்கொண்டு

திருமணத்திற்கு வந்திருந்த ஷீலா “ஓஹோ, கதை அப்படி போயிற்றா? ரொம்ப நல்லவளாக இருந்தாயே என்று நினைத்தேன். கடைசியில் அவன் விரித்த வலையில் விழுந்து விட்டாயே” நேரிடையாக பிரியாவைக் கேட்டாள்.

சங்கர் தன்னை நிராகரித்த விஷயம் அறியாதவள் பிரியா. இவளிடமே வன்மத்துடன் சொன்னாள். “ரெண்டு பேரும் எங்கே போனாலும் ஒன்னாவே திரிஞ்சாங்க. அப்பமே தெரியும்”

“இது இப்படித் தான் முடியும்னு” பைஜூ சொன்னான். பிரியாவிடம் குத்துப்பட்டவன்

அல்லவா! சமயம் கிடைத்தால் வெச்சி செஞ்சிர மாட்டானா?

“உங்களுக்குள்ளே நல்ல புரிதல் இருக்கு. அது காதலாக மாறியது ஒன்றும் தப்பில்லை. யார் என்ன சொன்னாலும் கவலைப்படாமல் சந்தோஷமாக இரு பிரியா” சுகந்தி நம்பி சொன்ன

வார்த்தைகள். இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு காதலித்தது தப்பில்லை என்றால்

காதலித்தது உண்மை என்று சுகந்தி நம்புவது நிஜம் தானே. மயிலிறகால் வருடினாலும்

காயம்பட்ட இடத்தில் வலிக்கத் தானே செய்யும்.

நீயுமா சுகந்தியக்கா என்று கண்கள் கசிந்தது பிரியாவிற்கு. அவளுடைய கணவரோ தூங்கிக்

கொண்டிருந்த குழந்தையை தோளில் போட்டவாறு பிரியாவின் அருகில் இருந்த சங்கரிடம்

“மச்சான். ஆபிசரே மனைவியாக வந்தாச்சு. இனி நீ தாமதாமாக போனாலும் பிரச்சினை

இல்லை” அவர் கவலை அவருக்கு.

“நிச்சயம் செய்தவன் ஆள் அம்சமாக இருக்கான். அவனை விட்டுட்டு இவனிடம் என்னத்தைக்

கண்டு மயங்கினாளோ”

“நிச்சயம் செய்த உடனே தடால் புடால்னு கல்யாணத்தை முடிச்சிறனும். இல்லாட்டி சைக்கிள்

கேப்பில் எவனாவது புகுந்து ஆட்டையைக் கலைச்சிருவானுங்க”

“கலைச்சாலும் கூட பரவாயில்லை. நாம் நிச்சயம் பண்ணின ஆளை நோகாமல் லவட்டிக்

கொண்டு போய்டுவானுங்க”

“பரவாயில்லையே காதலிச்சவனையே கட்டிக் கிட்டாளே மகராசி. அந்த மட்டும் சரி தான்”

காதில் நேரிடையாக விழுந்த விமர்சனங்கள், மற்றவர்கள் சொன்னதாக சொல்லப்பட்ட

விஷயங்களுக்கும் அடிப்படை ஒன்றே ஒன்று தான்.

அது……… சங்கர்…..சங்கர் மட்டும் தான்…!

அவனோடு நட்பாக பழகியதனால் அல்லவா நமக்கு இந்த இழிநிலை.! நம் பெற்றோருக்கும்

தலைக்குனிவு.

நான் சங்கரை வெறுக்கிறேன்.

நான் சங்கரை முற்றிலுமாக வெறுக்கிறேன்.

மனதிற்குள் மீண்டும் உருவேற்றிக் கொண்டாள் அவள்.

அதே மன நிலையில் தான் திருமணம் முடிந்த அந்த முதல்நாள் இரவில் தன் அறையில்

நுழைந்தாள் அவள்.

இந்த திருமணத்திற்கு சங்கரா காரணம்?

இத்தனைக்கும் காரணம் விடாத பெய்த அடாத மழையல்லவா?

செய்வதை எல்லாம் செய்து விட்டு ஒன்றும் தெரியாத அப்பாவிக் குழந்தையைப் போல

இப்போதும் அது பாட்டுக்கு சிலுசிலுவென்று தூறிக் கொண்டிருந்தது அந்த மழை.

2 thoughts on “காற்றோடு காற்றாக-11”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *