Skip to content
Home » காற்றோடு காற்றாக-13

காற்றோடு காற்றாக-13

13

“எல்லோரும் ஏறியாச்சா? சாமான்களை ஒருமுறை சரி பார்த்துக் கொள்ளுங்கள். கிளம்பலாமா

.ரை. ரைட்.”

பிரியாவின் உறவினர்கள் ஒரு சொகுசுப் பேருந்தில் ஏறிக் கொள்ள இன்று எல்லோரும்

மணமகன் வீட்டுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். சங்கரின் கிராமம் தஞ்சை ஜில்லா

பட்டுக்கோட்டையிலிருந்து மன்னார்குடி போகும் வழியில் மெயின் ரோடின் இடதுபுறம்

ரெண்டு கிலோமீட்டர் உள்ளே செல்ல வேண்டும். அந்த ஜங்சனுக்குப் பெயர் ஆளப்பாடி.

வயல்வெளிகள் சார்ந்த கிராமம் சங்கரின் ஊர் அரசநல்லூர்.

பேருந்தில் ஊருக்கு முன்னால் சுந்தரவல்லி தான் ஏறி உட்கார்ந்து கொண்டாள். அவளுக்கு

மணமகனின் வீட்டைப் பார்க்கணும். அவர்களுக்கு என்ன ஐவேஜ், அதாவது சொத்துப்பத்து

வரவு செலவு எல்லாம் எப்படி என்று தெரிந்து கொண்டே ஆக வேண்டும்.

பேருந்து ஆளப்படி ஜங்சன் வந்ததும் நிறுத்தப்பட்டது. அனைவரையும் வணக்கம் கூறி

வரவேற்றார்கள் அரசநல்லூரை சேர்ந்த முக்கியஸ்தர்கள். மழை பெய்திருந்ததால் சம்பா

சாகுபடிக்கு தயாரான விவசாயிகள் சேற்றில் இறங்கி வேலை செய்திருந்தவர்கள் சேற்றுக்

கால்களுடன் ஓடி வந்தார்கள். ஊரே வெளியே நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது.

மாலைகளை மணமக்களிடம் கொடுத்து மாற்றிக் கொள்ள வைத்தது கூட்டம். பெரிய

இளைஞர்கள் கூட்டம் கூடி நின்றது. முக்கியஸ்தர்கள் மணமகள் வீட்டார் பரஸ்பரம்

ஒருவருக்கு ஒருவர் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டார்கள்.

ஐந்து வருடங்களுக்கு முன்பு காதல் திருமணங்களை ஆதரிக்காத ஊர் இப்போது மெல்ல

மெல்ல பழமையில் இருந்து மாறி வருகிறது. இந்த ஊரில் யார் வீட்டு திருமணம் என்றாலும்

வெளியூரிலிருந்து இந்த ஊருக்கு கல்யாணம் கட்டி வரும் பெண்ணுக்கும் அவள்

குடும்பத்தாருக்கும் இத்தகைய ஒரு வரவேற்பு கொடுப்பது இந்த ஊரின் பழக்கம்.

இந்த சம்பிரதாயத்தின் மூலமாக பெரியவர்கள் இன்னும் இந்த ஊரை தங்கள் கட்டுப்பாட்டில்

வைத்திருப்பதாக காட்டிக் கொண்டாலும் இளைஞர்கள் அதற்கு கட்டுப்பட்டவர்களாக

இசைவாகவே இருந்தார்கள்.

இந்த சம்பிரதாய வரவேற்பிற்குப் பிறகு இளைஞர்களின் அலப்பறை தான். அவரவர்

சக்திக்கும் செல்வாக்குக்கும் ஏற்ப ஊர்வலம் நடக்கும். எல்லோருக்கும் சந்தனம் குங்குமம்

கொடுக்கப்பட்டது. நடக்க முடியாதவர்கள் இறங்க வேண்டாம். பேருந்திலேயே இருக்கலாம்

என்ற போதும் ஆர்வ மிகுதியில் எல்லோருமே கீழே இறங்கி நடந்து வந்தார்கள்.

நாதஸ்வர இசை கச்சேரி ஆரம்பமானது. அங்கேயே பத்து நிமிஷம் ஊர்வலம் நின்றது.

ஜனரஞ்சகமான திரை இசை பாடல்கள் வாசிக்கப்பட்டது. அரை பர்லாங் தூரம் போனதும்

அங்கேயுள்ள குடியிருப்பின் சார்பில் செண்டை மேளம் வரவேற்பும் கொடுக்கப்பட்டது.

அதைப் போல ஆங்காங்கே ஊர்வலம் நிறுத்தப்பட்டு கரகாட்டம் தப்பாட்டம் பொய்க்கால்

குதிரை மயிலாட்டம் ஒயிலாட்டம் என்று தொடர்ந்தது.

சங்கரின் வீட்டின் முன் எல்லா இசைக்கலைஞர்களும் வானமே கிடுகிடுப்பதைப் போலவும்

தென்றல் வருடுவதைப் போலவும் தனி ஆவர்த்தனம் செய்தார்கள். பிரமாதமாகவும்

பிரமிப்பாகவும் இருந்தது. இவர்கள் வீட்டின் முன், தெருவை அடைத்து கீற்றுப்பந்தல்

வேய்ந்திருந்தார்கள். குலை தள்ளிய வாழைமரங்கள் முகப்பில் கட்டப்பட்டிருந்தது. அதைத்

தொடர்ந்து செவ்விளநீர் குலை, பனை குலை, ஈச்சங்குலை தென்னம்பாளை கமுகு பாக்கு

குலைகள் கட்டி மாவிலையாலும் தென்னங்கீத்தாலும் ஆன தோரணங்கள் கட்டப்பட்டிருந்தது.

எல்லா வீட்டு வாசலிலும் பெரிய பெரிய வர்ண கோலங்கள் போடப்பட்டிருந்தது. ஊர்வலம்

கலைந்து பந்தலில் போடப்பட்டிருந்த இருக்கைகளை ஆக்கிரமித்துக் கொண்டது.

தேவநாதனுக்கு சின்ன வயசில் மாரப்ப பூபதிக்கு மிருனாளினி நாச்சியாருடன் நடந்த

திருமணத்தில் ஏற்பட்டிருந்த பிரமிப்பை விட இன்று இங்கே இந்த கோலத்தில் இப்படி ஒரு

பாரம்பரியமான பிரமிக்க தக்க ஊர்வலம் தன் மகளுக்கும் அவளால் தங்களுக்கும் காண

கிடைக்கும் பேறு கிட்டும் என்று நினைக்கவேயில்லை.

தமிழ் பேராசிரியையான மாதவிக்கோ பண்டைய தமிழ் இலக்கியங்களில் வரும் திருமணம்

போல ஒரு மாயை உண்டாயிற்று. ஈச்சங்குலையும், கமுகு, பாக்கு குலைகளும் காணக்

கிடைக்காத காட்சிகள்.

மதுவுக்கோ திருவிழா அதுவும் கிராமத்து திருவிழாவிற்கு வந்ததைப் போல இருந்தது.

அவளோடு வந்திருந்த இளம் பெண்களுக்கு அடடா…. இப்படி ஒரு கிராமத்து பண்டைய

பாரம்பரியத்தின் நிறைவான விழாவாக இது இருக்கும் என்று தெரிந்திருந்தால் நாமும்

அதற்கேற்றார் போல பொறுத்தமாக உடை அணிந்து வந்து இருப்போமே என்று

ஆவலாதியாக இருந்தது.

மேடையில் அமர வைக்கப்பட்டிருந்த மணமக்களை வாழ்த்தும் முகமாக பெரியவர்களும்

முக்கியஸ்தர்களும் பாரம்பரிய வைதீக குடும்பமான மகாதேவனின் மருமகளை வாழ்த்தி

வரவேற்றார்கள். இளைஞர்கள் வாழ்த்தி வாழ்த்து மடல் வாசித்தார்கள்.

அதே தெருவில் பொன்னிறை மைனர் ஜாகை ஒன்று நாகசாமியின் பொறுப்பில் இருந்தது.

அதில் தான் மணமகள் வீட்டினர் இறங்கியிருந்தனர். பிரியாவும் சங்கரும் கிருகப்பிரவேசம்

செய்ததும் சங்கர் தன்னறையில் அவளைக் கொண்டு வந்து விட்டு விட்டு அவள் உறவினர்கள்

தங்கியிருந்த வீட்டிற்கு விசாரிக்க சென்று விட்டான். அவன் திரும்ப வரும் போது பிரியா உறங்கி விட்டிருந்தாள்.

காலையில் எழுந்து கொள்ளும் போது பிரியாவிற்கு முதலில் தான் எங்கே இருக்கிறோம் என்று

ஒன்றும் புரிபடவில்லை. விழிப்பு வந்தும் படுக்கையை விட்டு எழுந்து கொள்ளாமல் படுத்தே

கிடந்தாள். அறைக்குள் பரவிய விடியற்காலை வெளிச்சத்திற்கு கண்கள் பழகி, தான் இருக்கும்

இடம், சூழ்நிலை மனதுக்குப் புரிந்து தன்னருகில் சங்கரை காணத் தேடிய போது அவனைக் காணவில்லை. எங்கே போயிருப்பான்? அவனுடைய வீடு. என்ன வேலையோ?

அப்போது தான் அவன் கமகமவென மணக்கும் காப்பியுடன் உள்ளே வந்தான். ச்சை. இப்படித் தூங்கி விட்டோமே! புதிய இடத்தில் வந்த முதல் நாளே பெரியவர்களும் மற்றவர்களும் என்ன நினைப்பர்கள்? என்று பதறி எழுந்தாள். போதாக்குறைக்கு இவன் வேறு ரொம்ப

கனகாரியமாக காப்பியைக் கையில் ஏந்தி வருகிறான்.

“மெல்ல. மெல்ல பார்த்து”

அவனை ஒரு முறை முறைத்தாள். “எழுப்பியிருக்கக் கூடாதா?”

“ஏன்? இப்போ என்ன? காப்பியைக் குடித்து விட்டு மெள்ள குளித்துக் கிளம்பி வா.அவ்வளவு தானே” சிரித்துக் கொண்டே காப்பியை அவள் கையில் கொடுத்து விட்டுப் போய் விட்டான்.

பிரியாவின் உறவினர்கள் சொல்லிக் கொண்டு கிளம்பினார்கள். மகாதேவனின் கைகளைப் பற்றியிருந்த தேவநாதனின் கண்களின் ஓரம் கசிந்திருந்தது. மிகவும்

உணர்சிவசப்பட்டிருந்தார்கள் அண்ணனும் தம்பியும். ஆனால் அதையும் மீறி சந்தோஷமும்

நிறைவாகவும் இருந்தது முகம்.

பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்து புகுந்த வீட்டில் விட்டு விட்டு பிரிந்து செல்லும்

பெற்றோர்களின் நிலை காலங்காலமாக மனநிறைவுடன் கூடிய சந்தோஷமான சோகம் கலந்த

நெகிழ்ச்சியான தருணம் தானே. தொன்று தொட்டு நடக்கும் ஒரு நிகழ்ச்சி தானே. அது தான்

இப்போதும் அங்கே அரங்கேறியது.

அரவிந்தனை திருமணம் செய்திருந்தால் நம் அப்பாவும் பெரியப்பாவும் தரையோடு தரையாக

குனிந்து பணிவும் பவ்வியமாக நின்றிருப்பார்கள். ஆனால் இப்போதோ சரிசமமாக

சந்தோஷமாக அவர்கள் மகாதேவனின் கரங்களைப் பற்றிக் கொண்டு நிற்பதைக் காணும்

போது இந்த ஒரு காரணத்திற்காகவே இந்த திருமணம் நல்லதாகவும் நியாயமானதாகவும்

தோன்றியது பிரியாவிற்கு. அப்பாவும் அமாமாவும் கிளம்பும் போது பிரிவு துயர் நெஞ்சை அடைத்தது.

மது பிரியாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டு “அக்கா, இன்னும் ஒரு வாரத்தில் அங்கே

வந்துடுவே. இருந்தாலும் நீ இல்லாமல் இருப்பதை நெனச்சால் கஷ்டமாகத் தான் இருக்கு.”

மதுவின் கண்கள் கலங்க அதை கீழே சிந்தாதவாறு அணை போடுவதற்கு அவள் முயற்சித்தது

பிரியாவிற்கு இன்னும் சங்கடமாக இருந்தது.

சுந்தரவல்லி அந்த ஒரு இரவில் என்னத்தை கண்டுபிடித்தாளோ பிரியாவை நெட்டி முறித்து

“பரவாயில்லை பிரியா, உன் அம்மா மாதிரி மகா கெட்டிக்காரி தான். புடிச்சாலும் புடிச்சே

புளியங்கொம்பைத் தான் பிடிச்சே” என்றாள்.

“ம்..ஏக்கரா கணக்கில் நிலம் நீச்சு வாகனம் சொந்த விவசாயம்..ம். இந்த பக்கத்திலே

பண்ணையார் என்ற அந்தஸ்து செல்வாக்கு. ம். பரவாயில்லை. கணக்குப் போட்டுத் தான்

மடக்கியிருக்கே”

பிரியாவிற்கே இந்த செய்திகள் புதிது தான். அதனால் தான் ஷீலா இவனைப் பத்தி வம்பு

பேசியிருக்கிறாள் போலும். சங்கர் எப்போதும் தான் ஒரு பெரிய வசதியான வீட்டு பையன்

என்பதை காட்டிக் கொள்ள மாட்டான்.

சுந்தரவல்லி தொடர்ந்தாள். ”உன் கல்யாணத்துல கூட இவுங்க சாதாரணமாக நடந்து

கொண்டார்கள். இங்கே வந்து பார்த்தால்….ஏ…அப்பா” என்று அதிசயத்திவள் பிரியாவை பார்த்து “உனக்கு எப்படித் தான் தெரியுமோ? ஒருவேளை இதுக்கு முன்னாடி இந்த வீட்டுக்கு

வந்திருக்கிறாயா?” என்று நேருக்கு நேர் கேட்டாள்.

“விரை ஒன்னு போட்டால் சுரை ஒன்னா முளைக்கும். மீன் குஞ்சுக்கு நீந்த கத்துக் கொடுக்கனுமா என்ன? உங்க அம்மா மாதவி லேசுப்பட்டவளா? அவள் சாமர்த்தியத்தில்

உனக்கு கொஞ்சமாவது இருக்காதா” என்று விஷம் கக்கினாள்.

அவளே மேலும் தொடர்ந்து “பூபதி வீட்டுக்கு பழைய பேரு மட்டும் தான் மிச்சம் இருக்கு.

உள்ளே ஒன்னும் இல்லை. பழைய பெருங்காய டப்பா. ஆனால் இங்கே அப்படி

இல்லைடியம்மா. பரவாயில்லை. எப்படியோ அந்த பயலை கைக்குள்ளப் போட்டுக்கிட்டே.

ராத்திரி வெளியே தங்கி காரியத்தை முடிச்சிக்கிட்டே”

பிரியாவிற்கு உடம்பு எரிந்தது. என்னெவெல்லாம் பேசுகிறாள்? இதை எல்லாம் கவனித்துக்

கொண்டிருந்தாளோ என்னமோ ராஜி பிரியாவின் அருகில் வந்து அவள் புடவையை சரி செய்வதைப் போல “அவள் என்ன வேணா சொல்லிட்டுப் போகட்டும். பொறாமைக்காரியாக இருப்பாள் போலும். நீ சாதாரணமாக இரு. முகம் சரியில்லை பாரு” என்றாள் ஆதரவாக.

அவள் எதையோ மருமகள் காதில் கூறுவதை வன்மத்துடன் கண்டவள் வெகு காரியமாக

“எங்கள் பிரியாவை நல்லா பார்த்துக்கங்க. செல்லமா வளர்ந்தவ. நல்லா இங்க்லீஷ் பேசுவா.

வீட்டு காரியம் கொஞ்சம் போதாது. அதுக்காக கோவிச்சிக்காதீங்க. நல்லா பார்த்துக்கங்க”

என்றாள்.

ராஜி அவளுக்கு பதில் சொல்லாமல் ஒரு வெற்று சிரிப்பை காதுவரை இழுத்து காண்பித்து

விட்டு பிரியாவை அணைத்தார் போல அவளிடமிருந்து நெட்டி தள்ளிக் கொண்டு போனாள்.

பிரியாவின் உறவினர்கள் உரிய முறையில் வரவேற்க்கபட்டு சரியான முறையில் கௌரவிக்கப்பட்டு வழியனுப்பி வைக்கப்பட்டார்கள். எல்லோருக்கும் பரம திருப்தி.

அவர்களை ஜங்சன் வரை வழியனுப்பி வைக்க சங்கரும் மாதவனும் சென்றிருந்தார்கள்.

மொத்தத்தில் தான் வாழ்க்கைப்பட்டு வந்த வீடு பாரம்பரியத்திலும் புராதனத்திலும்

செல்வாக்கிலும் செல்வத்திலும் அந்தஸ்திலும் எல்லாவற்றுக்கும் மேல் பண்பாட்டிலும் மிகவும்

உயர்ந்தவர்கள் தான் என்று பிரியாவிற்குப் புரிந்தது.

“வா பிரியா, உனக்கு வீட்டை சுற்றிக் காட்டுகிறேன்” அருகில் வந்து அன்புடன் கைகளைப் பற்றிக் கொண்ட லாவண்யாவை சிநேகமுடன் பார்த்து விட்டு அவளுடன் சென்றாள் பிரியா.

அது நான்கு கட்டு பெரிய வீடு. மகாதேவனின் தாத்தா காலத்து வீடு. காம்பவுண்ட் சுவரைத்

தாண்டி உள்ளே பெரிதாக இருந்தது வீடு. ரெண்டு பக்கமும் திண்ணை. வலது திண்ணையில்

சிமெண்டில் ஒரு சாய்மானம். ஏறி உள்ளே சென்றால் ரேழி, இடதுபுறம் மாகாதேவனின்

அலுவல் அறை. வலதுபுறம் சங்கரின் அறை. ரேழிக்கு எதிரே முற்றம். முற்றத்தின் இடதுபுறம்

ஒரு நீண்ட கூடம். அதில் நல்ல பர்மா தேக்கு ஊஞ்சல். முடிவில் மகாதேவன் தம்பதியரின்

அறை. முற்றத்தின் வலதுபுறம் நீண்டு கிடந்த கூடத்தில் இன்றைய நவீன மோஸ்தரில் சோபா,

டீபாய், டிவி என்று நவீனமாக இருந்தது. கூடத்தின் முடிவில் லாவண்யாவின் அறை.

ரெண்டாம் கட்டில் மீண்டும் இரு அறைகள். மூன்றாம் கட்டில் பூஜை மற்றும் ஸ்டோர் சாமான்

அறைகள், நான்காம் கட்டில் சமையல் கட்டு, எதிரில் சாப்பாட்டு கூடம். சமையலறை, வீட்டின்

புராதனத்திற்கு நேர்மாறாக அதி நவீனமாக இருந்தது. சகல மின் உபகரணங்களும் இருந்தது.

அத்தனையையும் கௌரிக்கு ஆளவும் தெரிந்திருந்தது.

சமையல் கட்டில் கௌரி வேலையாக இருந்தாள். லாவண்யா அவளை பிரியாவிடம்

அறிமுகப்படுத்தினாள்.”இவள் தான் கெளரி. சிறுவயதில் இருந்து இங்கே தான் வளர்ந்தவள்.

என்னை விட சங்கருடன் தான் எந்நேரமும் கூடவே சுற்றிக் கொண்டிருப்பாள். நானும் மேல்

படிப்பிற்காக வெளியூருக்குப் போனதிலிருந்து அம்மாவுக்கு சகலமும் இவள் தான்”

பிரியா கெளரியைப் பார்த்து சிநேகமாக புன்னகைத்தாள். பதிலுக்கு கௌரியோ நாணம்

கலந்த கிராமத்து வெள்ளந்தியான சிரிப்பை கொடுத்தாள். அதே புன்னகை லாவண்யாவின்

முகத்திலும் விரிந்து “ சமையல் என்று இல்லை வீட்டிலும் சரி பண்ணையிலும் சரி. இப்போது

இவள் இல்லாமல் நம் வீட்டில் எதுவும் நடக்காது”

“காப்பி வேணுமா பிரியா” என்றாள் அதே வாஞ்சையுடன் கெளரி. அவள் கொடுத்த காப்பியை

கையில் வாங்கிக் கொண்டு மகாதேவனின் அறைக்கு சென்றாள்.

அந்த அறைக்குள் நுழைந்ததும் பிரியா பிரமித்துப் போனாள். எத்தனை புத்தகங்கள்.

கிட்டத்தட்ட மூவாயிரம் இருக்கும். மிகவும் நன்றாக பராமரித்திருந்தார்கள். தனித்தனி

தலைப்பிட்டு ஆன்மிகம், தத்துவம், இலக்கியம் மருத்துவம் கிளாசிகல் ஆங்கில நாவல்கள்,

இசை என்றில்லாமல் சமையல் மற்றும் சமகால எழுத்தாளர்கள் வரை. அநேக கவிதைத்

தொகுப்புகள்.

இத்தனைப் புத்தகங்களுக்கிடையே கொஞ்சம் ஓலைச் சுவடிகள், விதவிதமான எழுத்தாணிகள்,

உலக வரைப்படம், பழைய காலத்திலிருந்து சேமிக்கப்பட்டிருந்த பேனாக்கள், அறிய வகை

புகைப்படங்கள், ஆல்பங்கள்.

அப்பா………யப்பாப்பா..எத்தனைக் கலெக்சன்”

“இத்தனையும் என்னோட அப்பா, தாத்தாவோட கலக்சன் பிரியா” என்றவள்.”இதோ இதைப்

பார்” என்று ஒரு மர பீரோவை திறந்து காண்பித்தாள். “இதெல்லாம் ஷங்கர் கலக்சன்” பிரியா

அங்கே இருந்த சி.டி க்களை ஆர்வமுடன் பார்த்தாள். எல்லாம் பழைய கால ஆங்கில தமிழ்

சினி கிளாசிகல் மூவிஸ். ஆலம் ஆரா, பாபி, மேரா நம் ஜோக்கர், ஒவையார் காளிதாஸ்

சவுண்ட் ஆப் மூசிக் என்று பார்க்க பார்க்க தெவிட்டவில்லை.

“ஆங்கில புத்தகங்கள் வேறு இத்தனை இருக்கே”

“ஆமாம் பிரியா, என் தாத்தாவே ஆங்கிலம் படிப்பார். என் அப்பாவுக்கு ஷேக்ஸ்பியர்

அத்துப்படி”

அந்த அறையின் புத்தகங்களின் வாசனையே பிரியாவுக்கு மனவெழுச்சியைக் கொடுத்தது.

“என் தாத்தா இராமாயண காலட்சேபமும் ராதா கல்யாணமும் செய்வார் பார். இன்னும் என்

நினைவில் உள்ளது” என்றவள் தொடர்ந்து “அப்பா ஷேக்ஸ்பியரின் நாடகங்களை வாசித்துக்

காட்டுவார். எங்களையும் வாசிக்க வைப்பார்” என்றாள்.

அப்படியானால் உண்மையிலேயே சங்கர் தன்னுடன் சகஜமாக பேசியக் காலங்களில்

இயல்பாக அவன் பேசிய பேச்சில் தென்படும் இலக்கிய சுவை இங்கேயிருந்து தான்

வந்திருக்கிறது. மற்றப்படி தன்னை இம்ப்ரெஸ் செய்வதற்காக முயற்சிக்கவில்லை என்று

நினைத்துக் கொண்டாள்.

வடுவூர் துரைசாமி அய்யங்காரின் நாவலான திகம்பர சாமியார் புத்தகத்தை எடுத்து வைத்து

அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம் என்று புரட்டிக் கொண்டிருந்தாள். நேரமானது

தெரியாமல் அதிலே மூழ்கியவள் என்னடா லாவண்யாவின் அருவத்தைக் காணவில்லையே

என்று திரும்பிப் பார்த்தாள். பின்னால் அவளை ஒட்டி நின்ற சங்கர் மேல் மோதிக்

கொண்டாள்.

இவன் எப்போது உள்ளே வந்தான்? சத்தம் காட்டாமல நிற்கிறானே?

லாவண்யா எங்கே?

அவன் கண்களின் மினுமினுப்பில் திரும்பி நின்று கொண்டாள். அருகில் வந்து இடுப்போடு

சேர்த்து அணைத்து தோளின் வளைவில் முகம் புதைத்துக் கொண்டான்.”ரிலாக்ஸ் பிரியா.

ரிலாக்ஸ்”

அவளோ அவன் கைகளில் நெளிந்தாள். அவனிடமிருந்து விடுபட முயன்றாள்.”ச். விடுங்க”

“ஏன் பதட்டப்படுவே?”

“யாராவது வந்து விடப் போகிறார்கள்”

“அப்பா……! என்ன வாசனை பிரியா உனக்கு” இன்னும் அதிகமாக அவளை சேர்த்து இறுக

அணைத்துக் கொண்டான்.

அவன் கையைப் பிடிங்கி விட துடித்தாள். “விடுங்க”

“ஊஹூம்”

“அக்கா வந்துடப் போறாங்க”

“அப்போ உன் பிரச்சினை அது தானா?”

“ஊம்”

“அப்போ யாரும் வரலேன்னா பரவாயில்லையா?”

எரிச்சல் வந்தது அவளுக்கு. என்ன தைரியம்? என்னவொரு பிடிவாதம்?

அவனைப் பார்த்து முறைத்தாள்.

“எப்போய்..! பயமாயிருக்கு…!” என்றவாறே கைகளைத் தளர்த்தினான். அவள் அவன் கையை

விலக்கி விட்டு விழுந்தடித்து ஓடினாள். அவன் வாய் விட்டு சிரித்த சிரிப்பின் சத்தம் அவள்

பின்னோடு தொடர்ந்தது.

2 thoughts on “காற்றோடு காற்றாக-13”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *