Skip to content
Home » காற்றோடு காற்றாக-14

காற்றோடு காற்றாக-14

14.

லாவண்யாவின் புகுந்த வீடு இருக்கும் கிராமத்திற்கு விருந்திற்கு சென்றார்கள் சங்கரும்

பிரியாவும். அது அரசநல்லூருக்கு அருகில் உள்ள ஒரு வயல் சார்ந்த கிராமம். தோப்பும்

துரவுமாக இருந்த பெரிய வீடு அது. முகப்பு மட்டும் நவீனமாக இருந்தது.

வாசலுக்கு வந்து வரவேற்றார்கள் மாதவனின் பெற்றோரும் தம்பி பலராமனும். ஒரு இதமான

சூழ்நிலை பரவியிருந்தது. அந்த வீட்டினர் எல்லோருமே இயல்பாக இருந்தார்கள்.

“வாம்மா பிரியா. உனக்கு நாங்கள் பெரியப்பாவும் பெரியம்மாவும் என முறை வேண்டும். நீ

எங்களை அப்படியே அழை” என்று வாஞ்சையுடன் சொன்னார்கள்.

“பிரியா, என் அண்ணன் மாதவன் உனக்கு அண்ணன் என்றால் நானும் உனக்கு அண்ணன்

தான்” என்றான் வீராப்புடன் அந்த உடன் பிறந்த சகோதரிகள் என்று யாருமில்லாதவன்.

அதற்குள் லாவண்யாவின் ரெண்டு பெண் குழந்தைகளும் அத்தை அத்தை என்று பிரியாவை

சுற்றி சுற்றி வந்தார்கள்.

பிரியாவிற்கே அது ஒரு புது விதமான அனுபவமாக இருந்தது. பெண் என்பவள் ஒரு ஆணை

திருமணம் செய்து ஒரு வீட்டிற்குள் நுழையும் போது கணவன் என்ற உறவு மட்டுமல்லாது

மருமகள் அண்ணி நாத்தி தங்கை சித்தி அத்தை அக்கா என்று எத்தனை பரிமாணங்கள்.

திருமணம் என்னும் ஒரே ஒரு சடங்கின் மூலம் அவளுடைய உலகம் தான் எத்தனை விரிந்து

பரந்து விசாலமாகி விடுகிறது.

அதிலும் இந்த இரு குட்டீஸ் அத்தை அத்தை என்று பூனைக்குட்டி உரசுவதைப் போல

மிசுமிசுவென்று உரசி நிற்பதும் விழிகள் மலர்த்தி கதைகள் சொல்வதும் அவளுக்கு

புதுவிதமான மனக்கிளர்ச்சியைக் கொடுத்தது.

உற்சாகன மனநிலையில் அவள் உலா வந்தது கொஞ்சநேரம் தான். அதற்குள் நாடகமேடையில் காட்சிக்கான படுதா மாறுவதைப் போலை அவளுக்கும் இங்கே காட்சி மாறியது.

அதே தெருவில் உள்ள மற்ற வீட்டுக்காரர்களும் வந்து பிரியாவையும் சங்கரையும் திருமணம்

விசாரித்து சென்றார்கள். போகிறவர்கள் சும்மாவா போனார்கள்?

“என்ன சங்கரு, உன்னை பெத்தவங்களுக்கு வேலை வெக்காமல் நீயே பார்த்து உனக்குப்

பிடிச்ச மாதிரி அழகா அம்சமா கட்டிக்கிட்டே. ம். ஜமாய்” என்றார்கள்.

பலராமன் ஆளப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் சங்கருடன் ஒன்றாகப் படித்தவன்.

அவனும் சங்கரை பிரியாவிடம் கிண்டலடித்தான். “பிரியா உனக்கு ஒன்னு தெரியுமா? இவன்

ஆளு அம்சமா இருக்கானா?” என்று ஆரம்பித்தான். “இருக்கானா இல்லையா?” என்று கேட்டு

மிரட்டினான்.

“நீங்க கதை சொல்றதுக்கு நான் எதுக்கு பதில் சொல்லணும்?” சிரித்துக் கொண்டே கேட்டாள்

அவள்.

“பிரியா சொல்லிரு. இல்லாட்டி கேள்வி கேட்டே கொன்னுடுவான்” சங்கரும் கண்களுக்குள்

சிரித்தவாறே கேட்டான். அவள் வாயால் கேட்கும் ஆவலைத் தவிர வேறு என்ன! அவளும்

அவன் கண்களுக்குள் பார்த்தாள். பதில் சொல்ல முடியாது. தான் மயங்கியிருந்தால் அல்லவா

பதில் சொல்ல?

“மயங்கவில்லையா பிரியா?” மனது கேட்டது.

அறிவு சொன்னது. “மயங்கவில்லை. ஆனால் அவன் அருகாமை எனக்குப் பிடித்திருந்தது

தானே”

“அது எதனால்?” மனது கேட்டது.

“எதனால்?” பதிலுக்கு கேட்டது அறிவு.

“ஆள் ரொம்ப ஸ்மார்ட்டாக இருந்தது தானே” மனது மீண்டும் வலியுறுத்தியது.

“அ….ஆமாம்” அறிவு கேட்க,

“அப்புறம் என்ன?” என்றது மனது.

“ஹல்லோ கேள்வி கேட்டது நான். கேள்வி கேட்டால் பதில் சொல்லணும். அதை விட்டு விட்டு

உங்கள் காதல் கற்பனைகளுக்கு பிளாஷ் பேக் போயிரக் கூடாது”

“இல்லை” என்று சிரித்தாள்.” சொல்லுங்கள்”

“இவன் எம்ஜியார் மாதிரி இருப்பனா?”

“யாரு நானு?” என்று கேட்டான் சங்கர் வடிவேலு மாதிரி.

“ஆமாம்” என்றான் அவனும் கண்களில் கேலியுடன்.

“நீ கேளு பிரியா. டேய் நீ நடுநடுவுல பேசி என் பேச்சைக் கெடுக்காதே” என்றவன் “நீ கேளு

பிரியா” என்று மேலும் தொடர்ந்தான்.” படிக்கும் போதே இவன் பின்னால் பெண் பிள்ளைகள்

தான் அதிகம் சுற்றுவார்கள். எங்களுக்கெல்லாம் அப்பமே தெரியும் இவன் கண்டிப்பாக காதல்

திருமணம் தான் செய்வான் என்று”

பிரியாவின் முகம் வேறுபட்டது. அதன் பின் அவள் உற்சாகம் வடிந்து போனது.

அமைதியாகவே உண்டார்கள். கிளம்பினார்கள். வீட்டிற்கும் வந்து சேர்ந்தார்கள். சராசரியாக

இல்லாமல் கொண்டு செலுத்தபட்டதைப் போல இருந்தாள் அவள். அவளுடைய

இயந்திரத்தனமான அமைதி அவனை கவனிக்க வைத்தது. தங்கள் அறையில் என்ன என்று

கேட்டான். முதலில் ஒன்றுமில்லை என்றவள் அவன் மீண்டும் மீண்டும் கேட்கவும் ஒருவாறாக வாய் திறந்தாள்.

“நாம் எந்த மாதிரியான சூழலில் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்?” கேள்வியாக இருந்தாலும்

கண்கள் கலங்கியிருந்தது அவளுக்கு. அது அன்றைய சூழலை நினைத்தா அன்றி இவனை

கல்யாணம் செய்து கொள்ள வேண்டியதாகி விட்டதே என்று நினைத்தா? புரியவில்லை

அவனுக்கு.

அதனால் பொத்தாம் பொதுவாக “அதுக்கு என்ன?” என்றான்.

“ஆனால் நாம் காதலித்து மணந்ததைப் போல எல்லோரும் சொல்வது தான் கஷ்டமாயிருக்கு”

“புரியுது. சரி விடு பிரியா நிம்மதியா இரு” என்றான் ஆறுதலாக.

“திரும்ப திரும்ப அதையே சொல்லி அது தான் உண்மை என்று நம்மையே நினைக்க வைத்து

விடுவார்கள். எரிச்சலா இருக்கு”

முகம் அவனுக்கு நேர் எதிர்புறத்தில் திரும்பியிருந்ததால் அவள் வார்த்தைகளால் சொன்ன

எரிச்சலை முகத்தில் காண முடியவில்லை. எனவே அவளை தன்புறம் திருப்பி வலது கரத்தை

அவள் இடது தோளில் வைத்து அவளை ஊன்றிப் பார்த்தான்.

அவன் புறம் திருப்பட்டவள் தனக்கேற்பட்ட எரிச்சலை சற்றும் மறைக்காமல் படக்கென்று

முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்டாள். மீண்டும் அவள் முகவாயை தனக்காக திருப்பி

“பிரியா, என்னைப் பார்” என்றான் உணர்ச்சி மிகுந்த குரலில்.

திரும்பிப் பார்த்தவளிடம் “நம் திருமணத்திற்கு ஐநூறும் வரவேற்புக்கு ஐநூறும் ஆக மொத்தம்

ஆயிரம் பேர் வந்திருப்பார்களா?”

“ஆமாம். அதற்கென்ன?”

“பொறு”

“உம்”

“அதில் ஒரு ஐம்பது பேர் கேட்டிருப்பார்களா நம் திருமணம் காதல் திருமணம் என்று?”உள்ளே

கனன்ற எரிச்சலை அடக்க மாட்டாமல் “இப்போது எதற்கு இந்த புள்ளி விவரம்?” என்றாள்.

“கவனி. நான் சொல்வதை புரிந்து கொள். இவர்கள் அத்தனைப் பேரையும் ஒன்றாக உட்கார

வைத்தோ அல்லது தனித்தனியாகவோ நம்மால் பதில் சொல்ல முடியுமா?”

“அப்படியே சொன்னாலும் அவர்கள் தான் ஒத்துக் கொள்ளப் போகிறார்களா?”

“ம். கரெக்ட். ஒத்துக் கொள்ள மாட்டார்கள். இல்லையா?”

“தெரிஞ்ச விஷயத்தை இழுத்து சொல்லாமல் என்ன சொல்ல வரீங்கன்னு தெளிவா

சொல்லுங்க” எரிச்சல் இப்போது அவர்கள் புறம் இருந்து இவனுக்காக இடம் பெயர்ந்தது.

“என்ன சொல்றேன்னா..! இவர்களுக்கு பதில் சொல்ல முடியாத போது நாம் ஏன் அவர்கள்

கேள்வியை ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டு மூட் அவுட் ஆகணும்?”

அவன் கேள்வியில் உள்ள நியாயம் புரிந்து அமைதியாக கட்டிலின் மீது அமர்ந்தாள்.

அவளருகே அமர்ந்தவன் அவளை இடையோடு அணைத்து தனக்காக இழுத்து நெற்றியில்

மென்மையாக முத்தமிட்டான்.”பிரியா, எப்போதுமே காற்று அடிக்கும் திசைக்கு எதிரே நிற்க

கூடாது. அது ஊரில் இருக்கும் குப்பை கூளங்களை வாரிக் கொண்டு வந்து நம் மேல் வீசும்”

அவன் சொன்ன உண்மை அவளுக்குப் புரிந்தது.

“இதே காற்றோடு காற்றாக நில். பாலென்ஸ் பண்ணுவது கஷ்டமாக இருந்தாலும் எப்படியும்

நம்மை கொண்டு கரை சேர்த்து விடும்” என்றவன் மேலும் தொடர்ந்தான்.”புரிந்து கொள்

பிரியா. நம்முடையது காதல் திருமணம் இல்லை. சந்தர்ப்ப சூழ்நிலை நம்மை இந்த

திருமணத்தில் இணைத்தது என்று சொல்லி அவர்களுடன் மல்லுக் கட்டுவதை விட, “ஆமாம்.

அப்படித் தான் “ என்பதைப் போல சின்னஜ் சிறிய புன்முறுவலின் மூலம் இந்த அக்கப்போரை

எல்லாம் புறந்தள்ளுவது சிறந்தது அல்லவா!”

அவன் பேசியதின் நியாயம் அவளுக்குப் புரிந்தது. இது காதல் திருமணம் என்று எல்லா

இடத்திலேயும் எல்லா நிலையிலும் ஊர்ஜிதமாகி விட்டது. இப்போது இந்த திருமண

பந்தத்திலிருந்து வெளியேற முடியாது. அப்படி வெளியேறும் பட்சத்தில் அது முன்னிலையைப்

பார்க்கிலும் பின் நிலை கேடாகிப் போகும். எனவே இது தான் வாழ்க்கை. வாழ்க்கை

இலகுவாக போக வேண்டுமெனில் காற்றோடு காற்றாக நின்று ஆம் அப்படித் தான் என்று

தோளைக் குலுக்கி இந்த அக்கப்போர்களை புறந்தள்ளுவது ஒன்று தான் நல்லது என்பது

அவள் அறிவுக்கும் தெரிந்தது.

மனதில் இருந்த பாரம் அகன்றது. சமாதானம் ஆயிற்று. எரிச்சல் மறைந்தது. அவனோடு

இணக்கமாக இருக்க முடிந்தது.

திருமணத்திற்கு முன்பு நினைத்ததைப் போல ஒரு திருமணத்திற்கு அடிப்படையான காதல்

மனதிற்குள் இப்போது இல்லாவிட்டாலும், எதிர்காலத்தில் ஏற்படக் கூடும் என்ற

நம்பிக்கையும் தென்படாவிட்டாலும் விதி போகும் பாதையில் தன் வாழ்க்கை இலகுவாக

பயணப்பட தன் சிந்தனையை எரிச்சல் சூழாவண்ணம் காத்துக் கொள்ள முடிந்தது

பிரியாவிற்கு.

2 thoughts on “காற்றோடு காற்றாக-14”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *