Skip to content
Home » காற்றோடு காற்றாக-15

காற்றோடு காற்றாக-15

15

“மெல்ல, மெல்ல பார்த்து வா” என்று கல்லில் இடறிக் கொண்ட பிரியாவை சங்கர் கைகளைப்

பிடித்து தன் பக்கமாக இழுத்துக் கொண்டான். காலில் செருப்பை சரியாகப் பொருத்திக்

கொண்டு அவனோடு மரஞ்செறிவுக்குள் புகுந்து பின் தொடர்ந்தாள்.

“ஐம்பது ஏக்கர் நெல் சாகுபடி செய்வது. ஆனால் இப்போதெல்லாம் அப்பாவால் சரியாக

விவசாயத்தை கவனிக்க முடியவில்லை”

“இப்போது யார் பார்த்துக்கறாங்க?”

“குத்தகைக்கு விட்டாச்சு. ஐந்து ஏக்கர் தென்னந்தோப்பையும் குத்தகைக்கு விட்டாச்சு”

“ஓஹோ” என்றவாறே அந்த தோப்பின் குளுமையை அனுபவித்துக் கொண்டு உடன் வந்தாள்.

அவன் மேலும் விளக்க முற்பட்டு “பப்பாளி. கொய்யா, வாழை, சப்போர்ட்டா மாந்தோட்டம்

எல்லாத்துக்கும் சொட்டு நீர் பாசனம் செஞ்சிருக்கு. மீதமுள்ளவை நெல் சாகுபடி தான்.

இப்போதெல்லாம் விவசாயத்துக்கு ஆள் கிடைப்பதில்லை”

அவன் பேசுவதை கேட்டுக் கொண்டே பின்னால் வந்த பிரியா கேட்டாள். “உங்கள்

அப்பாவுக்கு வயசாச்சு. நீங்க விவசாயம் செஞ்சிருக்கலாம் இல்ல”

“நான் இங்கே இல்லாமல் அங்கே உன்னுடன் வேலைப் பார்த்ததால் தானே நீ எனக்கு

கெடச்சே” காதில் விழாத வண்ணம் வாய்க்குள் சொல்லிக் கொண்டான்.

“எது? என்ன சொன்னீங்க?”

டக்கென்று சுதாரித்தவனாக “செஞ்சிருக்கலாம் தான். அது என்னவோ எனக்கு என்னவோ

விருப்பமில்லாமல் போய் விட்டது”

“ஓஹோ”

“ஆனால்……. இப்போது உன் புராஜெக்டிற்காக கிராமம் கிராமமாக அலைந்ததில் கிராம

வாழ்க்கையில் இருக்கும் எளிமையை தொலைத்து விட்டோம் என்ற நினைப்பு வருகிறது”

தண் என்றிருந்த அந்த குளிர்ச்சியும் சிறு சலசலப்புடன் ஓடும் வாய்க்கால் தண்ணீரும் இடை

தழுவும் மெல்லிய பூங்காற்றும் தூரத்தில் குனிந்து வேலை செய்யும் வேலையாட்களும் ரொம்ப

ரம்யமாக இருந்தது அந்த காட்சி.

வயல்களில் நெல் கதிர் பிடிக்கத் தொடங்கியிருந்தது. நெற்கதிரின் பால் மணம் மாறாத பச்சை

வாசனை நெஞ்சை நிறைத்தது.வாய்க்கால் நீரில் மூக்கை விட்டு ஆட்டுவதும் உடலை சிலிர்த்து

மேலே இருந்த நீரை விசிறி அடிப்பதும் என்று தத்தி தத்தியும் சிறு தவ்வளுமாக சிட்டுக்

குருவிகள். வித்தியாசமான பறவை ஒலிகள், நகரத்தின் சாயல் இல்லாத அந்த சூழலும்

பசுஞ்சாணி வாசனையும் ……….ம்…..மூச்சை நன்றாக இழுத்து விட்டார்கள் இருவரும்.

வரப்பில் நடக்கும் போது சங்கர் தன் செருப்பை கழட்டி கையில் எடுத்துக் கொண்டான்.

பிரியாவையும் செருப்பைக் கழட்டி கையில் எடுத்துக் கொள்ள சொன்னான்.

“ஏன்?”

“அது, நமக்கு சோறு போடும் அன்னலட்சுமி இந்த வயல்கள். அதை செருப்பு காலால் மிதிப்பு

அந்த பூமி தாயை செருப்பு காலால் நெஞ்சில் மிதிப்பதைப் போன்றது”

“அடடா! என்னவொரு விளக்கம்”

“நான் சொல்லலை. இங்கே பெரியவர்கள் சொல்வது. இங்கே யாருமே வரப்பிற்கு மேல்

கால்களில் செருப்புடன் நடக்க மாட்டோம்” அவன் சொல்லிக் கொண்டிருந்த போது

பிரியாவின் கால்கள் வழுக்கவும் அவளை மீண்டும் தன்னோடு சேர்த்து அனைத்துக்

கொண்டான்.

“எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், வெறும் காலில் நடக்கும் போதே வரப்பு

வழுக்குகிறது. அதனால் செருப்பு போட வேண்டாம் என்பதற்காக சொல்லியிருந்திருப்பார்கள்”

“இருக்கலாம்”

“எதையும் விஞ்ஞான பூர்வமாக யோசிக்க மாட்டீர்களா?” என்று நக்கலடித்தாள் அவள்.

“இருக்கட்டும். விஞ்ஞானபூர்வமாக யோசித்து விஞ்ஞானிகளையா சந்தோஷப்படுத்தப்

போகிறோம்.?”

“அது சரி”

“பெரியவர்கள் சொன்னபடி செய்து அவர்களுக்கு மரியாதைக் கொடுப்போம்” என்றவன்

தொடர்ந்தான். “மேலும், இந்த மாதிரி சடங்கு சம்பிரதாயங்களைக் கைக் கொள்ளுவது,

நம்பிக்கைகளை கடைப்பிடிப்பது ஒரு பாரம்பரியத்தின் அடையாளத்தை நாம்

பெரியவர்களிடம் பெற்று நம் அடுத்த தலைமுறைக்கு கடத்துகிறோம். அது நமது பொறுப்பு.

இல்லையா?”

ஓ…! இவன் தன்னை எந்நேரமும் சீண்டி விளையாடும் விளையாட்டுப் பிள்ளை இல்லை.

ஆழமான வேர்களை உடையவன். பிரியா ஒப்புதலாக தலையாட்டினாள்.

பேசிக் கொண்டே நடந்து இருவரும் ஒரு ஓட்டு வீட்டின் அருகே வந்து விட்டிருந்தார்கள்.

வேலிப்படலை தள்ளிக் கொண்டு சங்கர் முன்னே நுழைந்தான். அவர்கள் இருவரையும்

பார்த்து விட்ட ஒல்லியான உயரமான நடுத்தர வயது மனிதன் “வாங்க வாங்க” என்று

வரவேற்று விட்டு உள்ளே “கெளரி யாரு வந்திருக்கான்னு பாரு” என்று உற்சாகமாக கூவிக்

கொண்டே உள்ளே ஓடி சென்று சட்டையை மாட்டிக் கொண்டு வந்தான்.

வெளியே எட்டிப் பார்த்தாள் கெளரி. “வா சங்கரு, வா பிரியா” என்று கட்டிலை எடுத்துப்

போட்டாள்.”உட்காரு”

“உனக்கு கௌரியை தெரியுமல்லவா! இது அவள் கணவர் ஏகாம்பரம். கௌரிக்கு தாய்மாமன்.

அதனால் எங்களுக்கும் அவர் மாமா தான்” அவன் குரலில் ஒரு வாஞ்சை இருந்தது.

“கெளரி என்னை விட ரெண்டு வயது சின்னவள். அவளுக்கு அம்மா இல்லை. சின்ன

வயசிலேயே இறந்து போய்ட்டாங்க. அதனால் எந்நேரமும் எங்கள் வீட்டில் தான் இருப்பாள்.

அதிலேயும் என்னோடு தான் அதிகம் இருப்பது. பள்ளிகூடத்துக்குன்னாலும் சரி. குளத்திலே

குளிக்கிறதுன்னாலும் சரி”

“கிட்டத்தட்ட நிழல் மாதிரி” சிரித்தாள் கெளரி.

“என்னடா ஒழுங்கா படிக்கிறீங்களா?” கௌரியின் இரு மகன்களிடம் கேட்டான் சங்கர்.

அவர்கள் இருவரும் பிரியாவின் மேல் ஒரு பார்வையை வைத்தவாறு “ம்.” என்றார்கள்.

“வாயைத் திறந்து சொல்லுங்க” என்றான் ஏகாம்பரம்.

“படிக்கிறோம் மாமா” என்றார்கள் கூச்சத்துடன்.

“வெரி குட். நல்லா படிக்கணும்”

அதற்குள் கெளரி ரெண்டு லோட்டா நிறைய காப்பிக் கொண்டு வந்து தந்தாள். பொதுவான

விஷயங்களைப் பேசி விட்டுக் கிளம்பினார்கள்.

“எங்கே கிளம்பிட்டீங்க?” கெளரி கேட்க.

“நம்ம வயக்காட்டை காண்பித்து விட்டு உன்னையும் பார்த்து விட்டு அப்படியே சிவன்

கோயிலுக்கு போய் வரலாம் என்று கிளம்பினோம்”

“காலா காலத்தில் போயிட்டு சீக்கிரம் வாங்க”

காப்பி லோட்டாவை கையில் எடுத்துக் கொண்டாள் பிரியா. உண்மையில் காபி சுவையாக

இருந்தது. “சுவை வித்தியாசமா இருக்கு”

“நாட்டு சக்கரை போட்டிருக்கு. ஜீனி வாங்கறது இல்லை”

“ஓ. நல்லது. பரவாயில்லையே” என்று சிலாகித்துக் கொண்டாள்.

“நெஜமாவே நல்லாயிருக்கா. உனக்கு பிடிச்சிருக்கா? ஜீனி இல்லையே. இந்த நாட்டுசக்கரை

சுவை பிடிக்கணுமே என்று கவலைப்பட்டேன். முதல்முதல் வீட்டுக்கு வரே” என்றாள்

உண்மையான கவலையுடன்.

“ச்சே. ச்சே. நீ நம்ம வீட்லயும் எனக்கு நாட்டு சக்கரையே போடு”

“கெளரி நாங்க வரோம். கோயிலுக்குப் போயிட்டு அப்படியே ஆத்துக்குப் போயிட்டு வரோம்”

“சரி. இருட்டற வரைக்கும் இருக்காமல் காலாகாலத்திலே வீட்டுக்கு வந்துடுங்க”

“ஆத்தில தண்ணி விட்டுருக்கானா?”

“ஆமாம். புது தண்ணி. ஆத்துல இறங்காதே” என்றாள் கெளரி.

கொஞ்ச தூரம் போய் அந்த தெரு முக்கு தாண்டியதும் எதிரே வந்த லட்சிமி இவனைக் கண்டு

விட்டு கிராமத்தினருக்கே உரிய தெரிந்து கொள்ளும் ஆர்வம் சற்றும் குறையாமல் “என்ன

சங்கரு, நல்லாயிருக்கியா?” என்று கேட்டாள்.

அவளுக்காக நின்றவன் “நல்லாயிருக்கேன் லக்கு. நீ எப்படி இருக்கே?” என்று பதிலுக்கு

அன்புடன் கேட்டான்.

“ம். நல்லாயிருக்கேன். அது சரி. புதுப் பொண்டாட்டியைக் கூப்பிட்டுக் கிட்டு எங்கே

கிளம்பிட்டே?”

“சும்மா அப்படியே ஊரை சுத்திட்டு வரலாம்னு”

அவன் முடிக்கும் முன் “ஆஹா, இந்த பட்டிக்காட்டில் சுத்திப் பார்க்க என்ன இருக்காம்?” என்று

அதிசயப்பட்டாள் அவள்.

“கோயில் குளம் ஆறுன்னு எத்தனை இல்லை” என்றவன் “அது போகட்டும். நாராயணன்

எப்படி இருக்கான்? எப்போ ஊருக்கு வந்துட்டு போனான்?” என்று கேட்டான்.

“பிள்ளையின் பெரிய லீவுக்கு வந்துட்டு போனது தான்”

“நல்லா இருக்கனா?”

“நல்லா இருக்கான்”

“நீ அவனுக்கு போன் பண்ணும் போது நான் (வி)சாரிச்சதா சொல்லு”

“ஆகட்டும்”

அவள் போனதும் சங்கர் பிரியாவிடம் சொன்னான். ”லட்சுமியும் அவள் அண்ணன்

நாராயணனும் எங்கள் தெருவில் தான் இருந்தார்கள். நாங்கள் சின்ன வயதில் ஒன்றாக

விளையாடினவர்கள். இவள் அண்ணன் நாராயணனுக்கு வாய் ஒரு பக்கம் கோணலாக

இருக்கும். அதனால் அவன் பட்ட பெயர் கோணவாய் நாராயணன். நாங்க அவனை

செமத்தியாய் கலாய்ப்போம்”

சொன்னவன் அன்றைய நினைவில் சிரித்து கொண்டான். ”அவனை விட்டோமா? வாய், வாய்

கோணவாய். அணா அணா நாராயணா என்றதும் அடிக்க வருவான். இப்படிப்பட்டவன்

ஒருநாள் அவனும் கூட நம்ம தெரு ஹீரோ ஆனான்”

“எப்படி?”

“எங்கிருந்தோ ஒரு நாய்க்குட்டியை கொண்டு வந்தான். அது நல்ல பிரவுன் கலரில் இருக்கும்.

மொச்சு மொச்சுன்னு குண்டாயிருக்கும். துறுதுறுன்னு பார்க்கவே செம்மையா இருக்கும். கீழே

விட மாட்டான். எப்போதும் கையிலே தான் வெச்சிருப்பான். அதை எங்கள் கையில் தர

சொல்லி ரெண்டு நாள் அவன் பின்னால் திரிந்தது இப்போது நெனச்சாலும் சிரிப்பகத் தான்

இருக்கு.” என்று சிரித்தான்.

“கொடுத்தானா இல்லையா?” கதையின் போக்கில் அவளுமே சுவாரஸ்யமாக கேட்டாள்.

“ஊஹூம்.” கதையின் போக்கில் அவளைப் பார்த்து புன்னகைத்தவன் “எங்க லாவக்கா எனக்கு

அதை கொடுடா என்று ரொம்ப கெஞ்சிக் கொண்டே இருந்தாள். சும்மா கொடுக்க முடியாது

என்று எட்டணாவுக்குக் கொடுத்தான். அதுக்கு பேர் வைக்கணும். அவள் அந்த நாய்க்குட்டிக்கு

எட்டணா என்றே பெயர் வைத்து விட்டாள்”

அவன் சொன்னதைக் கேட்டு பிரியா சிரித்தாள்.”எட்டணா.. நல்லா தான் இருக்கு பேரு”

“ம். அக்காட்ட வந்ததும் அவள் அந்த நாய்க்குட்டியை நல்லா பழக்கினாள். வாயில் டெய்லி

பேப்பரைக் கவ்விக் கொண்டு வந்து தரும். பந்தை போட்டால் எடுத்துக் கொண்டு வந்து

நம்மிடம் தரும். நன்றாக விளையாடும். என்ன சொன்னாலும் புரிந்து கொண்டு வாலை

ஆட்டும். சூப்பரா இருக்கும் தெரியுமா?” என்றவன் “இந்த நாராயணனின் ரோதனை

தாங்கவில்லை”

“ஏன் என்னாச்சு? திருப்பிக் கேட்டானா நாய்க்குட்டியை”

“ஆமாம். எட்டணாவைத் திருப்பி தந்துடறேன். என் நாய்க்குட்டியை தா என்று தான்”

“குடுத்திட்டீங்களா?”

“ஒருநாள் அதனால நல்லா உதை வாங்கினோம் அம்மா கிட்ட”

“ஏன்?”

“அது என்னை பிராண்டிரிச்சு. அக்கா அதை அம்மாவிடம் எட்டணா தம்பியை கடிச்சிருச்சுன்னு

சொல்லிட்டா. விழுந்ததே உதை எங்கள் ரெண்டு பேருக்கும். செம அடி. அதனால் நாயை

திருப்பி தந்து விட்டோம். எனக்குத் தான் தொப்புளை சுத்தி பதினாலு ஊசி போட்டாங்க”

என்றான் சிறுவனின் குரலில்.

“நாராயணிடம் போய் அப்புறம் கொஞ்ச நாளில் அந்த குட்டி செத்துப் போச்சு. அதற்கு நானும்

அக்காவும் மூணு நாள் கிடையா கிடந்து அழுதோம். அதுக்குப் பின்னாடி எங்க அம்மா நாயே

வளர்க்கவிடலை”

பேசிக் கொண்டே இருவரும் குளக்கரைக்கு வந்தார்கள். அது ஒரு மிகப் பெரிய குளம். இந்த

மழைக்காலத்தில் நிறைய நீர் நிரம்பி இருந்தது. கரைகள் உயரமாக பலமாக இருந்தது. நான்கு

கரைகளும் படித்துறையும் நடுவே நீராழி மண்டபமும் இருந்தது. நான்கு கரையை சுற்றி

சரக்கொன்றை, வேம்பு புங்கை மரங்கள் நேர்த்தியாக நடப்பட்டு நன்றாக

பரமாரிக்கப்பட்டிருன்தது. நடைபயிற்சிக்கு ஏற்றார் போல தரையும் பாவியிருந்தது.

ஆங்காங்கே நடைப்பயிற்சிக்கு வந்தோரும் மற்றோரும் உட்காருவதற்கு வசதியாக சிமென்ட்

பெஞ்ச் போட்டிருந்தது. இப்போதும் கூட பெஞ்சில் பெரியோர்களும் வாலிபர்களும்

உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். குளத்தின் மேல் கரையில் சோழன் காலத்து சிவன்

கோயில் இருந்தது.

சாமியை பார்க்கும் முன்பு இடதுபுறம் இருக்கும் கிணற்றடிக்குப் போனான் சங்கர். “இந்த

கிணற்றில் வாளி வாளியாக தண்ணீர் சேந்தி இங்கே இருக்கும் நந்தவனத்தில் செடிகளுக்கு

ஊத்தி விட்டு தான் சாமி கும்பிடப் போவோம்” என்றவாறு நீர் இறைத்து அங்கே இருந்த

நந்தியாவட்டை செம்பருத்தி சங்கு புஷ்பம் துளசி பவளமல்லி மகிழம்பூ சாமந்தி என்று அந்த

மிகப் பெரிய நந்தவனத்தில் செடிகளுக்கு ஊற்றினான். தளதளவென்று வளர்ந்திருந்த

பூச்செடிகளும் நீர் பட்டதும் மலர்ந்து மகிழ்ந்தன.

கோயிலுக்குள் வந்து சாமிக் கும்பிட்டார்கள். கற்பூர தீபாதாரனை செய்து விட்டு வந்த குருக்கள்

இவனைக் கண்டதும் நலம் விசாரித்தார். பதிலுக்கு சங்கரும் அவரிடம் “என்ன சிவசு,

எப்படியிருக்கே? சிவகாமி எப்படி இருக்கா? மன்னார்குடி தானே ஜாகை? விசாரித்ததா சொல்”

என்றான்.

பிரகாரம் சுற்றி விட்டு வந்து உட்கார்ந்தார்கள். சிலுசிலுவென காத்து பிச்சிக் கொண்டு

போனது அங்கே. அந்த இடமே தெய்வீகமாக இருந்தது. நீண்ட தாடியுடன் காவி வேட்டி கட்டி

ஒரு பெரியவர் தேவாரம் ஓதிக் கொண்டிருந்தார். நல்ல குரல் வளம்.

“விதித்த பல்கதிர்கொள் சூலம்

வெடிபடு தமருகம்கை

தரித்தோர் கோலாகல பைரவனாகி

வேழம் உரித்து உம்மை அஞ்சக் கண்டு

ஒண் திருமேனி வாய் விள்ளச்

சிரித்தருள் செய்தார் சோறைச்

செந்நெறி செல்வனாரே திருச்சேறை ஸ்தலத்தில்”

திருநாவுக்கரசர் பாடிய பதிகம். பொருள் விளங்காவிட்டாலும் அந்த தமிழ் உச்சரிப்பும் குரலும்

பாவமும் அவருடைய பக்தியும் கேட்க கேட்க திகட்டவில்லை இருவருக்கும்.

வெளியே வந்து செருப்பு போடும் போது பிரியா “எவ்வளவு பெரிய கோயில்.! எவ்வளவு

பெரிய குளம்! இந்த சூழ்நிலையே அமைதியாக ரம்யமாக இருக்கு” என்று கண்கள் விரிய

ஆச்சரியப்பட்டவள் மீண்டும் “இவ்வளவு பெரிய குளத்தில் இப்போதும் கரை தொடும்

அளவிற்கு தண்ணி இருப்பது தான் ஆச்சரியமா இருக்கு” என்றாள்.

“இந்த குளத்தை கோடையில் தூர்வாரி கரையை உயர்த்தி பலப்படுத்தி தயாராக

வைத்திருப்பார்கள். காவிரியில் தண்ணீர் திறந்து விட்டதும் எங்க ஊர் கால்வாய்க்கு நீரவரத்து

வந்ததும் அதை இந்த குளத்தில் இணைப்புக் கால்வாய் மூலம் நிரப்பி வைப்பார்கள். அதனால்

தான் இந்த குளத்தில் எப்போதும் தண்ணீர் இருக்கும்”

வீட்டிற்கு திரும்பும் வழியில் பெரிய தெருவில் ஒரு வீட்டைக் காண்பித்து “ இது தான் எங்கள்

ஊர் போஸ்ட் ஆபிஸ். போஸ்ட் மாஸ்டர் வீடும் அது தான். அவரே ஸ்டாம்ப் விற்பார்.. அவர்

மகள் மங்கையர்க்கரசி என்னோடு படித்தவள். அவர் ரிடயர் ஆனதும் அவள் இந்த ஊரை

விட்டுப் போய் விட்டாள்.”

“போஸ்ட் ஆபிஸ் வேலை என்றால் என்ன பண்ணுவீர்கள்?”

“டவுனுக்கு போகணும்”

“மங்கையர்கரசியைப் பார்க்கணும் என்றால்…?”

“மாயவரத்துக்கு போகணும்” ஒரு ப்ளோவில் சொன்னவன் அவளுடைய சிரிப்பு சத்தத்தினால்

நிறுத்தி விட்டு அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தான். என்ன அழகாக சிரிக்கிறாள்!

“எப்படி? மாயவரத்துக்கு போகனுமா?”

“ஹி..இல்ல. அது…”

“ஏற்கனவே போயிருக்கிறாப் போல…”

“ச்சே. ச்சே. இல்லை. இல்லை” என்று அவசரமாக மறுத்தான்.

“மாயவரம் மன்னார்குடி.. அவ்வளவு தானா….? இல்ல….! ம்…இன்னும் என்னென்ன ஊருக்கு

போகணும்?”

“ஊருக்கு வந்தால் சின்ன வயசு ஞாபகம் வரும். கூடவே……!”

“கூடவே..” பிரியா தலையை சாய்த்து சங்கரைப் உன்னை எனக்குத் தெரியும் என்ற பார்வை

பார்த்தாள்.

“சிவகாமி, லக்ஷ்மி, மங்கை எல்லோரும் என்னோடு கூடவே சுத்திக் கொண்டிருப்பவர்கள்”

என்று ஒரு கள்ள சிரிப்பு சிரித்தான்.

“ஆ..ஆமாம். பலராமன் சொன்னாரே”

இவர்கள் இருவரையும் இணைத்த மழை இப்போது இவர்கள் உறவைப் போல,

மனநிலையைப் போல மெல்லிய தூறலாக தூர ஆரம்பித்தது. கால்களை எட்டிப் போட்டு

வீட்டை நோக்கி விரைந்தார்கள்.

தூறலும் ஆனந்தமாக அவர்களைப் பின் தொடர்ந்தது.

2 thoughts on “காற்றோடு காற்றாக-15”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *