Skip to content
Home » காற்றோடு காற்றாக-16

காற்றோடு காற்றாக-16

16

பின்னால் விரட்டிக் கொண்டு வீடு வரை வந்த மழை, தேய்ந்து தூறலாகி அவர்களை

வீட்டிற்குள் அனுப்பி விட்டு, வந்த வேலை முடிந்ததென்று முற்றிலும் நின்று விட்டிருந்தது.

இரவு அவர்கள் அறையில் படுத்திருந்தனர். ஜன்னல் வழியாக வானம் தென்பட்டது.

நட்சத்திரங்கள் மின்னியது. பௌர்ணமியானதால் நிலாவட்டம் முழுமையாக இருந்தது.

அதுவும் கிட்டத்தில் இருந்தது. இனி மழை வெறித்து விடும். கிராமத்தில் ஒரு பழமொழி

உண்டு.

“நிலாவட்டம் கிட்ட இருந்தால் மழை எட்டி இருக்கும். நிலாவட்டம் எட்டி இருந்தால் மழை

கிட்டி வரும் என்று”

தூக்கம் கலைந்ததால் திரும்பி மேஜையின் மேலிருந்த அலாரம் கடிகாரத்தை எடுத்து நேரம்

பார்த்தான். மணி அதிகாலை மூன்று பத்து. முற்றிலும் தூக்கம் கலைந்து விட்டது. எழுந்து

செய்வதற்கு வேலை ஒன்றும் இல்லை. ஹெட் போனை எடுத்து காதில் வைத்து பாட்டுக்

கேட்டு ஆரம்பித்தான்.

நிலா வெளிச்சம் ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்து பக்கத்தில் படுத்திருந்த பிரியாவை

நனைத்திருந்தது. நன்றாக அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தவள் புரண்டு இவன் புறமாக

திரும்பி அவன் தோளில் முட்டிக் கொண்டவள் அந்த அசைவில் மெல்ல கண்களைத் திறந்து

அவனைப் பார்த்து விட்டு மீண்டும் அவன் தோளிலேயே தலையை சாய்த்துக் கொண்டாள்.

அவளுக்கு வாகாக நகர்ந்து அவளை ஓட்டிப் படுத்து அவள் தலையை தன் இடது தோளில்

தாங்கிக் கொண்டான்.

ஒருநாள் தன் நண்பர்களிடம் தான் சொன்னது அந்த நள்ளிரவிலும் நினைவிற்கு வந்தது.

“இவளை எதிரில் வைத்துக் கொள்வதே கஷ்டம். அப்படி இருக்கையில் இவளை இடது பாகம்

வைத்துக் கொள்வது யாரால் ஆகும்?”

இதோ இவள் தன் தோளில் சாய்ந்து கொண்டு நிச்சலனமாக உறங்கிக் கொண்டிருக்கிறாள்.

தானே இவளை தன் இடது பாகத்தில் வைத்திருக்கிறோம். இடது பாகத்தில் மட்டுமா!

உயிருக்குள்….வேண்டாம். வேண்டாம். மேற்கொண்டு யோசித்து கலங்கி குழம்ப வேண்டாம்.

தன்னை வெறுக்கும் அவளிடம் இன்னும் தன்னைத் தானே தரம் தாழ்த்திக் கொள்ள

வேண்டாம். அன்று பிரியாவிற்கு தான் சொன்னதைப் போல காற்றுக்கு எதிர் நிற்காமல்

காற்றோடு காற்றாக அதாவது விதி போகும் பாதையில் போவோம். பெருமூச்சு விட்டான்.

எனக்கு என்னாச்சு என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டவனுக்கு தன்னை புரிந்தது.

இரக்கமுள்ள நித்திரா தேவி அவனை ஆட்கொள்ளும் வரை பாடல் தொடர்ந்து காதில்

ஒலித்துக் கொண்டிருந்தது. “என்ன ஆச்சு? எனக்கென்ன ஆச்சு? எங்குமே உன் முகம்

பார்க்கிறேன்”

“அம்மா, நானும் பிரியாவும் என் பிரென்ட் அசோக் வீட்டுக்கு விருந்துக்குப் போயிட்டு வரோம்”

“யாரு? எந்த அசோக்?”

“அது தான்மா. ஆத்தாங்கரைக்கு அக்கரையில இருக்கே ஒரு பெரிய தோட்டம்.”

“ஓ! அவனா! நம்ம சாலாட்சியின் மாந்தோப்பையும் பக்கத்தாலே இருக்கும் முருகேசனின்

தோப்பையும் வாங்கி விவசாயம் செய்யறான் என்பாயே. அவனா. சரி போய் வா”

“பிரியா ரெடியா? போகலாமா?”

பிரியாவிற்கு ஒருபுறம் அவனோடு பைக்கில் செல்வது ஒரு புது அனுபவமாக இருந்தது

என்றால் பேச்சுக்கு பேச்சு அவன் தன்னை பிரியா பிரியா என்று பெயர் சொல்லி அழைப்பது

மற்றொரு புதுமையாக இருந்தது. அவன் எப்போதும் அவளை மேடம் என்று தானே

அழைப்பான்.! இப்போது திருமண பந்தம் தந்த சொந்தம் இப்படி உரிமையாக அழைக்கிறான்

போலும்.

மோட்டார் வண்டி, இந்த மழையினால் பள்ளமும் மேடுமான சாலையில் ஏறி இறங்கி போய்க்

கொண்டிருந்தது. பள்ளத்தில் விழும் போதெல்லாம் அவன் மீது மோதிக் கொள்ளவே செய்தாள்

அவள். அவன் முதுகில் பட்டு நிமிரும் ஒவ்வொரு முறையும் தன் மனதில் உண்டாவது

குறுகுறுப்பா அல்லது கிளுகிளுப்பா என்று புரியாவிட்டாலும் அனுபவம் புதுமையாக

இருந்தது. இந்த பயணம் இன்னும் சற்று தூரம் நீளக் கூடாதா என்றும் இருந்தது ப்ரியாவிற்கு.

காவிரி ஆற்றின் கிளை கால்வாய் அது. பாசனத்திற்காக வெட்டப்பட்டது. ஆலையில்லா

ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை என்பது போல காவிரி பாயும் தஞ்சை ஜில்லாவில்

அரசநல்லூருக்கு ஆறில்லாத காரணத்தால் இந்த கால்வாயே ஆறாகிப் போயிருந்தது.

ஆத்தங்கரை ஓரத்தில் சர்கார் கேணியை ஒட்டி உள்ள பாலத்தை கடந்து அக்கரைக்குப்

போனார்கள். பாலம் தாண்டியதும் ஆடாதொடை செடியும் கள்ளியும் பூவரசு மரமுமாக நீண்ட

ஒரு வேலி ஓடியது. அதோடு போய் வலதுபுறம் திரும்பினதும் மீண்டும் அதே வேலியோடு

போய் ஒரு பெரிய கேட்டின் முன் நின்றது வண்டி.

கேட்டிற்கு உள்ளேயிருந்து வந்த காய்கறி கூடைகள் ஏற்றப்பட்டிருந்த டிராக்டருக்கு வழியை

விடுவதற்கு சற்று ஒதுங்கி நின்ற போது கேட்டின் முகப்பில் “செல்லம்மாள் பசுமை பண்ணை”

என்ற பெயர் பலகை கண்ணில் பட்டது. உள்ளே தள்ளினால் போல் ஒரு பெரிய வீடும் அதை

ஓட்டினார் போல் ஒரு கார் செட்டும் அதில் ஒரு காரும் நின்றிருந்தது. கேட்டின் வலப்புறம்

மாட்டு வண்டியில் இளநீர் ஏற்றிக் கொண்டிருந்தார்கள் ஆட்கள்.

இடதுபுறம் நின்றிருந்த மோட்டார் பைக்கின் அருகில் தன் வண்டியையும் நிறுத்தி விட்டு

வீட்டை நோக்கி நடந்தார்கள். அதற்குள் வீட்டுக்குள்ளிருந்து அசோக் ஓடி வந்து சங்கரின்

கையைப் பற்றிக் கொண்டான். பிரியாவை பார்த்து வாங்க என்று அவன் அழைத்த விதம்

அத்தனை அருமையாக இருந்தது. அவளும் புன்னகைத்தவாறே வீட்டிற்குள் சென்றாள்.

உள்ளே மற்ற நண்பர்கள் கதிரேசன் தென்னவன் நாடிமுத்து எதிர்கொண்டு இவர்களை

வரவேற்றார்கள். சங்கர், பிரியாவை அழைத்துக் கொண்டு அசோக்கின் அம்மா

செல்லம்மாவைப் போய் பார்த்து காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார்கள். அந்த அம்மாள்

திருநீரை எடுத்து இருவருக்கும் நெற்றியில் வைத்து விட்டு பிரியாவை தொட்டு எடுத்து நெட்டி

முறித்து சொன்னார்கள்.”சங்கரு, உன் பெண்சாதி ரொம்ப அழகாயிருக்கா”

அசோகின் மனைவி ரம்யா அவர்கள் குடிக்க டம்ளரில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள்.

அவளோடு நாடிமுத்துவின் மனைவி சுந்தரியும் உடன் வந்தாள். பிரியாவிற்கு அசோக்

எல்லோரையும் அறிமுகப்படுத்தி வைத்தான்.

கீழே தரையில் உட்கார்ந்து கொள்ள வாழையிலைப் போட்டு உணவு பரிமாறப்பட்டது.

நண்பர்களிடையே பேச்சு பல விஷயங்களை சுற்றி வந்தது. சாப்பாடு முடிந்து எல்லோரும்

பண்ணையை சுற்றிப் பார்க்க கிளம்பினார்கள். பாதி இடம் மாந்தோப்பாகவும் மீதியில் பாதி

காய்கறியும் மீதி பழத் தோட்டமாகவும் பிரித்திருந்தார்கள்.

சங்கர் வரும் வழியில் அவர்களைப் பற்றி தன்னுடன் உள்ளூர் பள்ளியில் ஒன்றாகப்

படித்தவர்கள் என்று பிரியாவிடம் சொல்லியிருந்தான். அதனால் அவள் அவர்களை எல்லாம்

சாதாரண கிராமத்து இளைஞர்கள் என்ற அளவிலே நினைத்திருந்தாள்.

ஆனால்…….!

அசோக் அவன் மனைவி ரம்யா இருவரும் இன்ஜினியரிங் பட்டதாரிகள். ஏழு வருடங்களாக

அசோக் யு.எஸ் ஸில் பணியாற்றி விட்டு இயற்கை விவசாயத்தின் மேல் இருந்த ஆசையில்

லட்சம் லட்சமாக சம்பாதித்துக் கொண்டிருந்த வேலையும் இன்றைய இளைஞர்களின்

சொர்க்கபுரியான அமெரிக்காவையும் விட்டு விட்டு நிரந்தரமாக இங்கே வந்து விட்டான்.

போன வருடம் தான் ரம்யாவை திருமணம் முடித்திருந்தான். அவளும் பிறந்து வளர்ந்த

சென்னையை விட்டு விட்டு இங்கே வந்து இவனுடன் விவசாயம் செய்கிறாள். அசோகின்

பூர்விகமான சொத்துக்களுடன் தான் சம்பாதித்து கொண்டு வந்த பணத்தையும் முதலீடு

போட்டு இன்னும் விஸ்தாரமாக செய்து கொண்டிருந்தான். அவன் தாய் தான் இயற்கை வழி

விவசாய முறைகளில் அவனுக்கு வழிகாட்டியாக இருக்கிறார்கள்.

தென்னவன் ஊராட்சி மன்ற தலைவராக ரெண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்

பட்டிருக்கிறான். பி.எஸ்சி. கணிதம் படித்தவன். அவன் மனைவி ஆளப்பாடி அரசு

மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியை. இது தான் பிரியாவுக்கு மிக மிக ஆச்சரியம்.

அரசியல்வாதிகளுக்கே உரிய வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை இல்லாமல் ஜீன்ஸ்ம்

டீஷர்ட்டும் என்று நன்றாக உடுத்தியிருந்தான். குளக்கரையில் நீர் மேலாண்மை பற்றி

சொன்னது இவன் செய்தது தான்.

குளத்தை சுற்றி மரம் வளர்ப்பது, பள்ளிக்கு சுற்றுசுவர் கட்டிப் பராமரிப்பது, சாவடியில்

பேருந்து வந்து திரும்புவது, விளையாட்டு திடல் சரி செய்து கொடுத்தது அங்கே கிராமத்தின்

மற்ற இளைஞர்களோடு விளையாடி வருவது என்று எல்லாமே இவன் வேலை தான்.

குட்டைகளில் மீன் பிடிக்க குத்தகைக்கு விட்டும் ஊர் புறம்போக்கு நிலத்தில் கடைகள் கட்டி

வாடகைக்கு விட்டும் ஊராட்சிக்கு நிரந்தர வருமானத்திற்கு வழி பண்ணியிருதான். படிக்கும்

மாணவர்களுக்கு கல்விக்கடனும் விவசாயிகளுக்கு வங்கிக் கடன் முன்னின்று வாங்கிக்

கொடுப்பான்.

நாடிமுத்துவும் அவன் மனைவி சுந்தரியும் நகரத்தின் விவசாயப் பண்ணையில் பணியாற்றிக்

கொண்டிருந்தார்கள். இருவருமே விவசாயத்தில் உயர் படிப்பு படித்தவர்கள். அதனுடன்

நாடிமுத்து தங்கள் பூர்வீக நிலத்துடன் அக்கம்பக்கத்தில் உள்ள சிறு குறு விவசாயிகளின்

நிலத்தையும் சேர்த்து கூட்டுப் பண்ணை நடத்திக் கொண்டிருக்கிறான்.

கதிரேசன் பொதுப்பணித்துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் இஞ்சினியரிங் பட்டதாரி.

இன்னும் திருமணம் ஆகவில்லை. ஓய்வு நேரத்தில் தந்தைக்கு உதவியாக இருக்கிறான்.

ஆக மொத்தம், அந்த ஊர் இளைஞர்களின் ஆதர்ச ஹீரோக்கள் இவர்கள் தான். இவர்கள்

எல்லோரும் ஒட்டு மொத்தமாக சொன்னது ஒன்றே ஒன்று தான். அது…..! சங்கருக்கு

இருப்பதைப் போல ஐம்பது ஏக்கர் நிலமும் ஒரே இடத்தில் ஒட்டு மொத்தமாக இருந்தால்

விவசாயத்தில் இன்னும் சாதிக்க முடியும் என்பது தான். எங்கோ தொலை தூரத்தில்

வேலைக்குப் போகும் அவசியம் இல்லை என்பது தான். சங்கருக்கும் அவர்களின் ஆதங்கம்

புரிந்ததால் பதில் பேசாமல் அமைதியாகவே இருந்தான்.

பிரியாவுக்குமே பிரமிப்பாகத் தான் இருந்தது. சங்கர் சொல்லி வந்த அவனுடைய

இளமைக்கால கதைகளில் இந்த நண்பர்கள் கூட்டம் செய்த அட்டூழியமும் சேட்டைகளும்

விளையாட்டுத்தனமான குறும்புகளும் என்று சாதாரண கிராமத்து இளைஞர்களின் வாழ்க்கை

முறை தான் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது. ஆகையினால் இன்றைய இந்த நிலையில் நண்பர்கள்

என்றதும் அந்த லெவலில் தான் அவள் அவர்களை நினைத்திருந்தாள். ஆனால் அவர்கள்

அப்துல் கலாமின் நம் தாய்நாட்டிற்கான கனவு காணும் இளைஞர்கள் என்பது புரிந்தது.

இனி வரும் காலங்களில் பெரும் கார்பொரேட் கம்பனிகள் விவசாயத்தில் நேரடி முதலீடு

செய்து விளைச்சலை நேரடியாக கொள்முதல் செய்து அவர்களே விலை நிர்ணயம் செய்து

பெரும் லாபம் ஈட்டும். அதை விட நவீன விவசாய முறை நவீன சேமிப்பு கிடங்கு நவீன

சேமிப்பு முறைகள் செயற்கையான உணவு தட்டுப்பாடு அதன் தொடர்ச்சியான பெரும் லாபம்

என்று போய்க் கொண்டே இருக்கும். இதை எல்லாம் தடுத்து நிறுத்தக் கூடிய ஒரே சக்தி நம்

இளைஞர்கள் தான்.

ஆதி நவீன விவசாய உத்திகள், குறைந்த பட்ச மனித உழைப்பு சக்தி, இயற்கை வழி

விவசாயம் என்று நம்மாழ்வாரின் வழியில் போனால் மட்டும் தான் இந்த மண்ணின்

மலட்டுத்தனம் போய் நல்ல உணவு உற்பத்தி இருக்கும். அதற்கு இளைஞர்கள் நேரிடையாக

விவசாயத்தில் இறங்கி மற்றோருக்கு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் இருக்க

வேண்டியது தான் இன்றைய இந்தியாவின் அவசியம்.

ஒரு இளைஞர் படை நாட்டைக் காக்கும் அரணாக நின்றால் இதோ இந்த இளைஞர் படை நம்

மக்களுக்கு உணவிடுவதன் மூலம் நாட்டுக்கு பசி நீக்கி அரணாக நிற்கிறார்கள்.

இதை சரியாகப் புரிந்து கொண்டு இவர்களுக்கு துணை நிற்கும் இவர்கள் மனைவிமார்களும்

பாராட்டுதலுக்கு உரியவர்களே.

2 thoughts on “காற்றோடு காற்றாக-16”

  1. Kalidevi

    Unmaiyana nitharasanam innaiku nama sapdura sapadula irukurathu next generation ku kedaiyathu . Atha alaga padichavanga panna perumai

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *