Skip to content
Home » காற்றோடு காற்றாக-17

காற்றோடு காற்றாக-17

17

என்னவென்று சொல்வது? யதார்த்தமா? யதேச்சையா? அன்றி விதியின் போக்கா?

என்னவென்று சொல்வது?

பிரியா தான் எழுதிய தேர்வில் தேர்ச்சி பெற்று வருவாய் துறையில் உயர் பதவி பெற்று

பட்டுக்கோட்டையில் வேலையில் சேர்ந்ததை என்னவென்று சொல்வது?

சங்கரும் தன் வேலையை ராஜினாமா செய்து விட்டு ஊரோடு வந்து விட்டான். அவன்

பெற்றோருக்கு மிகவும் சந்தோஷம். பிரியாவின் பெற்றோருக்குமே சந்தோஷமும் பெருமையும்

தான். சங்கர் அசோகின் பண்ணைக்குப் போய் விடுவான். குத்தகை காலம் முடிவிற்கு

வந்ததால் மீண்டும் குத்தகைக்கு விடாமல் அவனே நேரிடையாக விவசாயம் செய்ய

திட்டமிட்டான். சங்கருக்கு விவசாயத்தின் அடிப்படை தெரிந்திருந்தாலும் அதையே முழு நேர

தொழிலாக செய்திட கொஞ்சம் தயக்கமாகத் தான் இருந்தது. ஆனால் மகாதேவன் கெளரி

மற்றும் நண்பர்கள் கொடுத்த ஊக்கமும் உற்சாகமும் தான் சங்கருக்கு நம்பிக்கையை தந்தது.

சங்கர் விவசாயம் செய்யப் போகிறான் என்றானது அவனுடைய சித்தப்பா மகாதேவனின்

தம்பி சகாதேவனின் மகள் வெளிநாட்டில் வசிக்கும் காயத்ரி சங்கரின் தங்கை, தங்களுடைய

ஐந்து ஏக்கர் நிலத்தையும் இவனிடமே கொடுத்து விட்டாள். சகாதேவனுக்கோ நிலம்

பாழாகாமல் தன் அண்ணன் மகன் பொறுப்பெடுத்துக் கொண்டதில் மகிழ்ச்சி தான். அவருமே

சங்கருக்கு உறுதுணையாக இருந்தார்.

பிரியா, அரசநல்லூர் வீட்டிலில் இருந்து பட்டுக்கோட்டைக்கு அலுவலகத்திற்கு சென்று

வந்தாள். அரசாங்க ஜீப் வீட்டு வாசலில் நிற்பதில் சங்கரின் பெற்றோருக்கு ஏகத்திற்கும்

பெருமை தான். இருக்காதா பின்னே. கால் காசு என்றாலும் கவர்மென்ட் காசாயிற்றே.

பிரியா சங்கரின் வீட்டில் குடியேறியதும் காலையில் அலுவலகத்திற்கு கிளம்பும் முன்

கௌரிக்கு சமையலில் உதவி செய்வாள். திருமணத்திற்கு முன்பு இவர்கள் எல்லார்

துணியையும் கெளரி தான் தோய்ப்பாள். இப்போது வாஷிங் மெசின் வாங்கி அதை பிரியாவே

உபயோகிப்பதால் காலை நேர பரபரப்பில் ராஜலக்ஷ்மியும் உதவ வருவாள். அது பிரியா,

கௌரிக்கும் மட்டுமன்றி மாமியார் மருமகளுக்கு இடையே நல்ல அன்னியோன்யத்தை

உண்டாக்கியது.

பிரியாவிற்கு ஊரும் இங்கே இருக்கும் மனிதர்களும் உறவினர்களும் அவர்களின் உறவின்

முறை அழைப்பும் புதிது. ஒரு சிலர் தான் அவளை பிரியா என்று அழைப்பது. மற்றவர்கள்

வாய் நிறைய சங்கர் பொண்டாட்டி என்று அழைப்பது அவளுக்கு புதுமையாக இருந்தது. இனி

தான் இத்தகைய அழைப்பிற்கு பதில் சொல்ல பழகிக் கொள்ள வேண்டும்.

ஏற்கனவே வேலை செய்து முன் அனுபவம் இருந்ததால் இந்த புது வேலை இடத்தில் மிகச்

சரியாக பொருந்தி விட்டாள்.

கெளரி, காலையில் பிரியா எழுந்து சமையல்கட்டிற்கு போகும் முன்பே வந்து விட்டிருப்பாள்.

இவளைக் கண்டதும் ரொம்பவே சிநேகமாக முறுவலித்து சுடச்சுட காப்பியைத் தருவாள்.

பிரியாவின் வயதொத்தவள் ஆதலால் அவளுடன் பேசுவதும் பழகுவதும் பிரியாவிற்கு

இயல்பாக இருந்தது.

கெளரி இயல்பில் மிக நுண்ணிய அறிவுள்ளவள். அதனால் பிரியா தான் வேலை செய்யும்

இடத்தில் அன்றாடம் நடக்கும் விஷயங்களை விஸ்தரிக்கும் போது அதற்கு சிறு சிறு

ஆலோசனைகள் சொல்வாள் கெளரி. அது எப்போதும் மெச்சிக் கொள்ளும்படியாகவே

இருக்கும்.

கெளரி ரொம்ப நேர்மையான சிந்தனையும் ஓயாத உழைப்பும் உண்மையான அன்பும்

அக்கறையும் கொண்டவளாக இருந்தாள். தாயில்லாத அவளுக்கு ராஜலஷ்மியிடம்

எப்போதுமே இயற்கையான ஒரு ஒட்டுதல் இருந்தது. யாரும் எதுவும் சொல்லாமலே அல்லது

கேட்காமலே அவரவர் தேவை அறிந்து அதை செய்து விடுவாள் அவள். அதனால் மகாதேவன்

தம்பதியருக்கு அவள் இன்றியமையாதவளாகி போனாள்.

நண்பர்கள் உட்கார்ந்து சங்கரின் நிலத்தில் எத்தகைய வேலையை மேற்கொள்வது என்று

அமர்ந்து திட்டமிட்டனர். பால் பண்ணைக்குத் தேவையான மாடுகள் வாங்குவது, மாடுகளுக்கு

கொட்டகை அமைப்பது, தீவனம் வளர்ப்பது, அவற்றுக்கு தேவையான நீர் வசதி, சாணத்தில்

இருந்து பயோ கேஸ் எடுப்பது, பயோ வேஸ்ட் மேனேஜ்மென்ட், இவற்றுக்கு நான்கு

குடும்பத்தை குடியமர்த்துவது, அவர்களுக்கு வீடு கட்டுவது, இவற்றுக்கு வங்கிக்கடன் வசதி

பெறுவது, சோலார் பேணல் அமைத்து மின்சாரத்தை தாங்களே உற்பத்தி செய்து கொள்வது.

ஏற்கனவே இருந்த பண்ணைக்குட்டையை இன்னும் பெரிதாக்கி மீன் வளர்ப்பது, என்று

ஏகப்பட்ட வேலைகள். வீடு கட்டும் வேலையை மகாதேவன் மேற்பார்வையிடும் பொறுப்பை

எடுத்துக் கொண்டார். ஆளாளுக்கு ஒரு வேலை. அத்தனையும் மிகுந்த உற்சாகமாக செய்ய

முன் வந்தார்கள் மகாதேவன் தம்பதியினர். பத்து வயது குறைந்தார் போல சுறுசுறுப்பாக

இருந்தார்கள்.

கௌரிக்குத் தான் இதில் முக்கிய பங்கு. எல்லோரையும் எல்லா வேலைகளையும்

ஒருங்கிணைப்பது அவள் தான். அதிலும் சங்கர் வெளி வேலையாக அலையும் போது வீட்டில்

நடக்கும் வேலைகள் அத்தனைக்கும் அவள் தான் பொறுப்பு. அதை அவள் மிகவும் திறம்பட

செய்தாள்.

இத்தனை வேலைபளுவிற்கு இடையில் சங்கருக்கு பிரியாவுடன் நேரம் செலவிட

இயலவில்லை. இதுநாள் வரை அவளை சுற்றி சுற்றி வந்த காதல் கணவன் இல்லை அவன்.

எந்நேரமும் பிசி தான். இவள் வீட்டில் இருக்கும் போது கூட அவன் வெளியே சுற்றிக்

கொண்டிருக்க நேர்ந்தது. வீட்டிற்கு வந்ததும் குளித்து உணவருந்தி பிரியா சமையல்கட்டை

ஏறக்கட்டி விட்டு வருவதற்குள் உறங்கி விடுவது வாடிக்கையாகிப் போனது. உறக்கம் வராமல்

பிரியா உறங்கிக் கொண்டிருக்கும் கணவனை வேடிக்கைப் பார்ப்பதும் கூட வாடிக்கையாகிப்

போன விஷயம்.

இப்போதும் அதேப்போல தன்னருகில் அசந்து உறங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தாள்.

இதுநாள் வரை பிரியாவை தன் கைவளைவில் இருத்திக் கொண்டு மென்மையாக அவள்

காதருகே பாடுவான் சங்கர். அந்த ஆழந்த குரலும், அந்த குரலில் இருந்த ஜீவனும் பாவமும்

அதை எல்லாம் மீறிய காதலும் தனக்கே தனக்காக மட்டும் மனமுருகிப் பாடும் இந்த நிமிஷமும்

இரவின் தனிமையும் இருளும் இரவு விளக்கின் மென்மையான வெளிச்சமும் ஜன்னலில்

தெரியும் நிலாவும் இயற்கையான காற்றும் அந்த காற்றுக்கு அசைந்தாடும் மரங்களும்….! ஓ…!

எல்லாவற்றுக்கும் மேலாக ஆண்மையின் திடத்தோடு அருகில் படுத்திருக்கும் கணவனின்,

கணவன் வாசமும்……….!ம்…..! இப்போதெல்லாம் இல்லை…….! நீண்ட ஒரு பெருமூச்சு

விட்டாள் பிரியா.

சின்னதாக ஒரு சமயம் கிடைத்தாலும் அவளை இழுத்து அணைத்து முத்தமிட்டு செல்வதும்,

குளித்து விட்டு வருபவளை பின்னால் இருந்து தோள் வளைவில் முகம் புதைத்து வாசம்

பிடிப்பதும், அவள் கண்ணாடியின் முன் நின்று கொண்டு அலங்காரம் செய்கையில்

படுக்கையில் படுத்தவாறே அவளை குறுகுறுவென்று கணவன் பார்வை பார்த்துக்

கொண்டிருப்பதுமான, எந்த உல்லாச சல்லாபத்திற்கும் இப்போதெல்லாம் இடமில்லை.

சந்தர்ப்பமும் இல்லை.

அப்படியே தூங்காமல் படுத்துக் கிடக்கையில் அவர்களுக்கிடையே இருக்கும் பேச்சும்

அவரவர் புதிய வேலையில் புதிய சூழலில் இருக்கும் சம்பந்தமான பேச்சுக்களாக மட்டுமே

இருக்கும்.

கௌரிக்கு பண்ணையில் வேலையிருந்ததால் இப்போதெல்லாம் பிரியா காலையில்

சமையலறைக்கு வரும் வரையில் தான் இருக்க முடிந்தது. அதனால் கௌரியுடனும்

அதிகப்படியான பேச்சுக்கு நேரமில்லை. இடமில்லை என்பது தான் சரி.

பிரியா விடுமுறை நாளில் பண்ணையை சுற்றிப் பார்க்க கிளம்பினாள். நல்ல முன்னேற்றம்

இருந்தது. சங்கரின் அதீத உழைப்பு தெரிந்தது. ஆர்வ மிகுதி தான். வேறு என்ன? இவளை

பார்த்ததும், கையை ஆட்டினான். அவனருகே சென்றவள் அவன் செய்யும் வேலையை சற்று

நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள். என்னவோ ஆண்டாண்டு காலமாக செய்து

கொண்டிருப்பதைப் போல ஒரு நேர்த்தியுடன் அவன் வேலை செய்வதை கண்டு ரசித்தவள்

அவன் கௌரியுடன் வேலை சம்பந்தமாக பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு விட்டு, போய்

வருகிறேன் என்றவாறே அங்கிருந்து நகர்ந்து விட்டாள். அவளை இரு என்று இருவருமே

சொல்லவில்லை.

பிரியாவிற்கு எரிச்சலாக இருந்தது. தான் மட்டும் அன்னியப்பட்டு நிற்பது போல இருந்தது.

அவர்களுடன் பேசுவதற்கு இவளுக்கோ விஷய ஞானம் இல்லை. அவர்களோ அவர்கள்

வேலையைத் தவிர வேறு எதுவும் பேசுவதாக இல்லை.

ஒரு சாயங்காலத்தில் பிரியா அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு திரும்பிய போது சங்கர்

கட்டிலில் படுத்திருந்தான். எப்போதும் வேலை வேலை என்று சுற்றிக் கொண்டிருந்தவன்

அதுவும் சமீபத்தில் இரவு தாமதாமாகத் தான் வீடு திரும்பிக் கொண்டிருந்தவன் இந்நேரம்

படுக்கையில் படுத்துக் கிடப்பது வித்தியாசமானதாக இருந்தது. போர்வையால் போர்த்திக்

கொண்டிருந்தான். கண்கள் மூடியிருந்தது. தூங்குகிறானா? திரை சீலைகள் இழுத்து

விடப்பட்டு அறையே வெளிச்சமில்லாமல் இருட்டாக இருந்தது.

சற்று நேரம் அவனருகே நின்று பார்த்தாள். “உடம்பு சரியில்லையா? இந்நேரம் இப்படி

படுத்திருக்க மாட்டானே? என்ன ஆச்சு? கிட்டப் போய் நெற்றியில் தொட்டுப் பார்ப்போமா?

காலையில் கூட நன்றாகத் தானே இருந்தான். உடம்பிற்கு சரியில்லை என்றால் ஒரு போன்

பண்ண கூடாதா? ஒருவேளை போன் பண்ண முடியாத வகையில் அவ்வளவு முடியாமல்

இருக்கானா?” மனதிற்குள் பலவாறாக யோசித்தவாறே அவன் அருகில் நெருங்கி நெற்றியைத்

தொடப் போனாள்.

“வேண்டாம் பிரியா, எழுப்பாதே” கையில் காஞ்சிப் பாத்திரம் கொண்டு உள்ளே வந்தாள்

கெளரி.

“ஏன்? என்னாச்சு?”

“இந்த விவசாய வேலைகள் செய்து பழக்கம் இல்லை அல்லவா! அது தான் உடம்பு வலியில்

ஜுரம் வந்திருச்சு”

“எப்போதிலிருந்து?”

“காலையில் இருந்து”

“டாக்டரிடம் போகவில்லையா?”

“தென்னவன் சாருக்கு போன் பண்ணினேன். அவர் டாக்டரை அழைத்துக் கொண்டு வந்து

பார்த்துட்டு போனார்”

“இன்னும் தூங்கறாரே”

“ஆமாம். ஊசி போட்டிருக்கு. அது தான் தூங்கி கிட்டு இருக்கறாப்பல”

அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள் பிரியா. ராஜலக்ஷ்மி அம்மாள் பிரியாவுக்கு காப்பிக் கொண்டு வந்து தந்தாள்.

“நான் வந்து வாங்கிக் கொண்டிருப்பேன்” என்று சிநேகமாக புன்னகைத்தாள் பிரியா.

“பரவாயில்லைம்மா” என்றவள் “பாவம். ரொம்ப கஷ்டப்படறான்.என்ன செய்ய? போக போக

பழகிக்குவான்” என்று அவன் தலையை தொட்டு பார்த்து விட்டு போனார்.

படுத்திருந்த சங்கர் திடீரென்று புரண்டு எழுந்து வாந்தி எடுத்தான். பிரியா சுதாரித்து எழுந்து

கொள்ளும் முன்பு கெளரி சட்டென்று நகர்ந்து அதை தன் கையில் வாங்கிக் கொண்டாள்.

குளியலறைக்கு சென்று கைகளைக் கழுவிக் கொண்டு ஒரு துண்டை நீரில் முக்கி நனைத்துக்

கொண்டு வந்து சங்கரின் முகம் வாயை துடைத்து விட்டாள். அவனைப் பிடித்து கட்டிலின்

தலைமாட்டில் சாய்த்து உட்கார வைத்து கஞ்சியை ஒரு லோட்டாவில் ஊற்றிக் கொடுத்தாள்.

ஒரு வாய் பருகியவன் உமட்டிக் கொண்டு வரவே எருக்களித்தான். அருகே நின்று

கொண்டிருந்த கெளரி அவன் நெஞ்சையும் முதுகையும் நீவி விட்டாள். கண்களைத் திறந்து

பிரியாவைப் பார்த்தவன் “எப்போ வந்தே?” என்று கேட்டவன் அவள் பதில் சொல்லும் முன்பு

மீண்டும் கண்ணயர்ந்து விட்டான்.

2 thoughts on “காற்றோடு காற்றாக-17”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *