Skip to content
Home » காற்றோடு காற்றாக-18

காற்றோடு காற்றாக-18

18

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த சங்கரைப் பார்த்துக் கொண்டு படுத்திருந்தாள் பிரியா. ஜுரம்

விட்டிருக்கும் போலும். போர்த்தியிருந்த போர்வை விலகி இருந்தது. அதை சரியாக

போர்த்தலாம் என்று அவன் குறுக்கே கையை நீட்டினாள். நன்றாகத் தூங்கிக்

கொண்டிருந்தவன் இவள் கை மேலே படவே திடுக்கிட்டு விழித்து கண்களைத் திறந்தான்.

ஏதோ குழப்பமாக ஒரு பார்வை பார்த்தான். அவனை மெல்ல தட்டினாள் அவள். அவளை

நன்றாகப் பார்த்தான். ஆனால் இன்னும் கண்களில் குழப்பம் தீர்ந்தபாடில்லை. ஆழ்ந்த

உறக்கத்தில் விழிப்பு வந்தால் குழந்தைகள் எழுந்து குழம்பிப் பார்க்குமே ஒரு பார்வை. அதே

தான். மீண்டும் மெல்லமாக அவனை தட்டினாள்.”தூங்குங்க”

“விடிஞ்சிருச்சா?”

“ஏன்?”

“போகணும்”

“எங்கே போகணும்?”

“இன்னைக்கு வங்கிக்கு போகணும்” தூக்கத்தில் உளறியது குரல்.

“இன்னைக்கா?”

“ம்”

“இன்னைக்கு ஞாயிற்றுக் கிழமை. தூங்குங்க”

“ஓ..ஞாயித்துக் கிழமையா? அதான் நீ இன்னும் எழுந்துக்கலையா?”

“இப்ப மணி என்ன தெரியுமா?”

“ம்…”தூக்கத்தில் தேய்ந்தது குரல்.

“ராத்திரி மணி பன்னெண்டு”

“சரி” என்று திரும்பிப் படுத்தவன் சட்டென்று உடனே உறங்கி விட்டான். இன்றைக்கு

வங்கிக்கு போகணும்னு நெனச்சிட்டு இருந்திருப்பான் போலும். அதே ஞாபகம் தான்.

இவளுக்குத் தான் தூக்கம் வரவில்லை. மனதில் என்னெனவோ நினைவுகள்.

கல்யாணம் ஆன புதிதில் ரொம்பவே தொல்லை பண்ணுவான் சங்கர். திடீர் திடீரென அவளை

அணைத்துக் கொள்வதும், சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும், அவளை இழுத்துப்

பிடித்து முத்தமிடுவதும், அவள் குளித்து விட்டு குளியலறையிலிருந்து வெளியே வந்ததும்,

பின்னால் இருந்து தோளின் வளைவில் முகம் புதைத்து வாசம் பிடிப்பதும், எவ்வளவு இடம்

இருந்தாலும், தன்னை உரசியே அமருவதும், இரவில் மூச்சு முட்டி போகுமளவு கைகளில்

இறுக்கிக் கொண்டு உறங்குவதும், என்று தன்னுடைய இருப்பை அவளுக்கு உணர்த்திக்

கொண்டே இருப்பான். அவள் தன்னுடையவள் என்பதை அவளுக்கே உணர்த்தும் விதமாக.

ஏற்கனவே அவனிடம் எரிச்சல் கொண்டிருந்த பிரியாவிற்கு அவன் செய்கைகளும் நோக்கமும்

மேலும் எரிச்சலை உண்டாக்கியது. அவளை முழுமையாக ஆக்கிரமித்துக் கொள்வான். அவள்

அறியாமலே. ஆனால் அவள் சம்மதத்துடன்.. அதை எல்லாவற்றையும் விட, அவன்

தொடுகையில் தன்னை மறக்கும் தன்னைக் கண்டு தான் அவளுக்கு மேலும் எரிச்சல் ஊட்டியது.

அரசனல்லூர் புதிய சூழ்நிலை. புது மனிதர்கள். அவனைத் தவிர வேறு யாரையும் தெரியாது.

அவனைத் தவிர வேறு யாரும் இல்லவும் இல்லை. அவனும் வேலையை விட்டு விட்டு ஊரோடு வந்து விட்டதால் அதிக நேரம் அவளோடு செலவிட்டான்.

சிவன் கோயில், ஊர் எல்லையில் இருக்கும் அம்மன் கோயில், அசோக்கின் பண்ணை வீடு,

மற்றும் அல்லாது நகரத்தில் ரெண்டு சினிமாவுக்கு கூட அழைத்துப் போனான். பிரியாவைப்

பொறுத்தவரை வாழ்க்கை இவ்வளவு தான் என்பது போல அமைதியாகவே போய்க்கொண்டிருந்தது.

அவன் பண்ணையில் விவசாய வேலையைத் தொடங்கிய போது அவனுக்காக இணையத்தில்

அவன் கேட்கும் விவரங்களைத் தேடி குறிப்பு எடுத்து தருவதும், பண்ணையை விஸ்தரிக்க வங்கிக் கடனுக்கு விண்ணப்பிப்பதும், அதற்கான கடன் தொகை சார்ந்த திட்ட அறிக்கை

தயாரிப்பதில் உதவுவதும் என்று எந்நேரமும் பிரியா சங்கருடனே அதிக நேரத்தை

செலவிட்டாள். அவன் கவனம் இப்போதெல்லாம் விவசாயத்தின் பால் திரும்பியதால்

இவளால் அப்பாடா என்று இருக்க முடிந்தது.

சமயம் கிடைக்கும் போதெல்லாம் மாமனாரின் அலுவல் அறைக்கு சென்று புத்தகங்கள்

எடுத்துப் படிப்பாள். அவளுடைய ஆர்வத்தைக் கண்ட மகாதேவனும் நீண்ட நாட்களுக்குப்

பிறகு தன்னுடைய அலுவல் அறைக்கு வந்து அவளுக்கு புத்தகங்கள் எடுத்துக் கொடுத்து

படிக்க சொல்வதும், சேமித்து வைத்திருக்கும் புத்தகங்களில் வாங்கியது எது? வந்தது எது?

இந்த புத்தகம் எங்கே எப்போது வாங்கியது அல்லது யார் இந்த புத்தகத்தைக் கொடுத்தார்கள்

என்றெல்லாம் அந்த புஸ்தகத்தின் ரிஷிமூலம் தொடங்கி அதன் சாராம்சம் வரை அவளிடம்

விளக்குவார்.

பிரியாவிற்கு தன் வீட்டில் புத்தகங்களை வாசித்து விட்டு தன் தந்தையுடன் அதைப் பற்றி

விலாவாரியாக தர்கித்தவைகள் ஞாபகம் வரும். அதே போல இங்கேயும் மாமனாரிடம்

புத்தகங்களைப் பற்றி விவாதித்து தெளிவு பெறுவாள். அவளுக்கு விளக்கும் வண்ணம்

மகாதேவனும் தன் பழைய நினைவுகளுக்கு நீந்தி சென்று மீண்டு வருவது உண்டு.

எப்போதுமே வயதானவர்களுக்கு அவர்கள் பேசுவதைக் கேட்பதை விட நாம் என்ன செய்து

விட முடியும்? தந்தை தேவநாதன் அடிக்கடி சொல்வதுண்டு. தானத்தில் சிறந்தது செவி தானம்

தான் என்று. அதைத் தான் செய்தாள் மனமுவந்து.

ராஜலக்ஷ்மி அம்மாளுக்கு சமையலறையில் சிறு சிறு உதவிகள் செய்து கொடுத்து

நாளடைவில் அவளிடம் சமையல் கற்றுக் கொண்டு இப்போது நன்றாகவே சமைக்க

தொடங்கியிருந்தாள் பிரியா. மேலும் கிராம பெண்களுக்கே கைதேர்ந்த கலைகளான

வண்ணகோலம் போடுவதும் அடர்த்தியாக பூ கட்டுவதும் மாலைத் தொடுப்பதும் சிறு சிறு

தையல் வேலைகளை மெசினில் அடிக்க கற்றுக் கொண்டதுமாக பயனுள்ள வகையில் அவள்

பொழுது போயிற்று. இதற்கு முன்பு தங்கள் ஊருக்குப் போகும் போது இதை எல்லாம் கற்றுக்

கொள்ள சொன்னவர் யாரும் இல்லை. பிறர் செய்வதை இவள் பார்த்ததும் இல்லை. அதனால்

அவளுக்கும் மிகப் பெரிய விருப்பமோ ஆர்வமோ இல்லை.

அண்ணன்கள் நல்ல உத்தியோகத்தில் உள்ளனர். ஆனால் அவர்கள் நோக்கம் உழைப்பு

சேமிப்பு என்பது அவர்களுக்கானது மட்டுமானது. இங்கோ இந்த நண்பர்களின்

செயல்பாடுகள் அவர்களை மட்டுமன்றி இந்த நாட்டின் பொருளாதாரத்தையும் உயர்த்தக்

கூடியதாக இருந்தது. இன்று சங்கரை நம்பி பத்துக் குடும்பங்கள் பிழைக்கிறது. அவன் மேல்

ஒரு மரியாதையை உண்டாக்கியிருந்தது.

கௌரியிடம் நினைப்பு போயிற்று. சங்கருக்கு சுகம் இல்லாத அன்று அவள் பதறியது

நினைவிற்கு வந்தது. எப்படி துடித்து விட்டாள். எத்தனை ஒரு பரபரப்பு. எத்தனை அக்கறை.

மனது அன்றைய நினைவில் இருந்தது. ஒரு மனைவியாக தன்னை விட கௌரிக்கு அவனிடம்

அதீத உரிமை இருக்கிறது என்று நினைத்தது ஒரே ஒரு நிமிடம் தான்.

ஆனால்……! ஒன்றை ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும். சங்கருக்கு என்றில்லாமல் தனக்கு

என்றாலும் கூட கெளரி இதே அக்கறையோடு தான் பரபரத்திருப்பாள். ஏனெனில் அவள்

சுபாவம் அது. எல்லோரிடமும் அன்பாக இருக்கவும் எல்லோருக்கும் அக்கறையோடு பார்த்து

பார்த்து செய்வதும் அவள் இயல்பு. அன்பாகவே இருக்கப் பிறந்தவள். அன்பால்

படைக்கப்பட்டவள். அவளை தப்பாக நினைக்காதே என்று பிரியாவின் நியாய புத்தி அவளைஇடித்தது.

ஆனால் அவளோ இப்போது சங்கரை விட மூன்று பங்கு உழைத்துக் கொண்டிருக்கிறாள்.

பண்ணையிலும் அவள் வீட்டிலும் இங்கே நம் வீட்டிலும் தான். அப்புறம் என்ன? கெளரி

நம்மிடம் பேசுவதே குறைந்து விட்டது என்பதாலா நமக்கு இந்த எரிச்சல்? ஊஹூம். அதுஇல்லை.

அமைதியாக அமர்ந்து யோசித்தாள். சங்கரின் தொல்லைகள் தனக்கு மிகுந்த

எரிச்சலூட்டியதே. இப்போது அவன் பேசாவிட்டால் நமக்கு நிம்மதியாக இருக்க வேண்டுமே.

ஆனால்…….! ஆனால் அப்படி இல்லையே. ஏதோ ஒரு தவிப்பு இருக்கிறதே. காரணம்

இல்லாமல் கௌரியிடம் பொறாமை கொள்ள வைக்கிறதே. அவனும் தான் ஆகட்டும்.

எந்நேரமும் கெளரி சங்கருடனே இருக்கிறாள். அவர்களுக்கு ஒரே மாதிரியான வேலை.

உண்மை தான். இருக்கட்டுமே. அதற்காக?

மனசு கனத்து கண்கள் கசியத் தொடங்கியது அவளுக்கு. என்ன ஆச்சு நமக்கு? என்ன தான்

வேண்டும் எனக்கு? என்பதை அறிவின் துணை கொண்டு மனதின் மூல முடுக்குகளில் எல்லாம்

தேடிய போது தென்பட்ட உண்மை பிரியாவை அயர வைத்தது.

எப்போது? எப்படி? ஏன்?

கேள்விகளுக்கு பதில் இல்லை. ஆனால் உண்மை புரிந்தது.

கண்களில் கண்ணீர் பெருகியது.

இதோ இந்த நள்ளிரவில்…

சங்கர் புரண்டு படுத்து அவள் மேல் தன் கையைப் போட்டுக் கொண்ட போது அவளுக்கு

நன்றாக நிச்சயமாயிற்று. தன் இடம் எது என்பது. அவன் கைக்கு வாகாக தன்னை அவனுடன்

பொருத்தி கொண்டாள் பிரியா.

இவ்வளவு நேரமும் மனம் கிடந்து தவியாய் தவித்ததின் காரணம் தன்னுள் அழகாய் பூத்த காதல். இந்த காதலில் தான் நம் உள்ளங்கள் எப்படி எல்லாம் பந்தாடப்படுகிறது என்று

நினைத்தவளுக்கு அவனுடன் ஆசையாய் பேசிட வார்த்தைகள் உள்ளத்தில் மோதும். ஆனால்

அருகில் பார்க்கும் போதோ மௌனமாகிப் போகும் அவள் மொழிகள். இதோ இந்த

கைச்சிறையில் வாகாக தன்னைப் பொருத்திக் கொண்ட இந்த நேரம் என்னவோ மீண்டும்

தாயின் கர்பத்தில் உருவானதைப் போல் ஒரு மாயத் தோற்றம்.

அவள் கண்களின் ஓரத்தில் ஈரம் கன்னத்தில் தடம் பதித்திருந்தது.

2 thoughts on “காற்றோடு காற்றாக-18”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *