Skip to content
Home » காற்றோடு காற்றாக-20

காற்றோடு காற்றாக-20

20

“சங்கர், டில்லியில் இருந்து இப்போது தான் நாங்க ஊருக்கு வந்தோம். எல்லாரையும் கூட்டிக்

கொண்டு நாளைக் காலை நேரே மண்டபத்திற்கு வந்து விடுகிறோம்” மாதவன் சொன்னான்.

“நீ பத்து நாளைக்கு முன்பே போயிட்டேன்னு சொன்னாங்க அப்பா”

“ஆமாம்க்கா. ஆண்பிள்ளை இல்லாத வீடு. நீ தான் வீட்டு மருமகனுக்கு மருமகனாகவும்

மகனாகவும் இருந்து அவுங்களுக்கு ஒத்தாசை பண்ணனும்னு அம்மா சொன்னதாலே நான்

பத்து நாளைக்கு முன்பே வந்துட்டேன்”

“பிரியா கூட லீவு கிடைக்கலைன்னு ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் வந்தாள் என்று

சொன்னாள்”

“ஆமாக்கா. பாவம் மாமா. தனியாளா எத்தனை தான் செய்வாரு? பிரியா வரும் போது

வரட்டும்னு நான் முன்னமே வந்துட்டேன்”

“எல்லாரும் வந்துட்டாங்களா சங்கர்”

“அவுங்க பெரியம்மா பெரியப்பா மச்சானுங்க அத்தை குடும்பம்னு எல்லா சொந்தமும் வந்து

இறங்கியாச்சு”

“சரி. பார்த்துக்கோ. பிரியாட்ட சொல்லிடு”

மதுப்பிரியாவிற்கு திருமணம். மாப்பிள்ளை அர்ஜுன் வீட்டாரும் இதே நகரத்தினர் தான்.

தேவநாதனுடன் பணியாற்றும் பேராசிரியை அவர்களின் உறவின் முறையில் நல்ல வரன்.

ஆஸ்திரேலியாவில் பணியாற்றுகிறான். திருமணம் முடிந்ததும் மதுவும் அவனுடன் செல்ல

வேண்டும். அர்ஜுனுக்கு ஒரே ஒரு தங்கை அவளை உள்ளூரில் கொடுத்திருக்கிறது.

படிப்பு முடிந்து மேல்படிப்பு படிக்க வேண்டும் என்று மது ஒரே பிடிவாதம். திருமணத்திற்கு

மறுத்து தகராறு செய்து கொண்டிருந்தவள் மாப்பிள்ளைப் பையன் அர்ஜுனனைக் கண்டதும்

மறுப்பேதும் சொல்லாமல் சட்டென்று ஓகே உங்கள் இஷ்டம் என்று சொல்லி விட்டாள்.

இந்த தடவை தேவநாதனின் எதிர்பார்ப்புக்கான அளவுகோலை மாதவி நிராகரித்து விட்டாள்.

பெரிய இடம் சிறு வயது கனவு மெத்த படிப்பு என்று எதுவும் செல்லாது. மதுவுக்கு மணமகனை

பிடித்திருக்கணும். அது ஒன்று தான், ஒன்று மட்டுமே முக்கியம். பெண் பார்த்து விட்டு

அர்ஜுன் குடும்பம் போனதும் ஒன்றுக்குப் பத்து முறையாக தேவநாதன் மதுவிடம் உனக்கு

விருப்பமா என்று கேட்டே கல்யாணத்தை உறுதிப்படுத்தினார். சங்கரும் அவன் நண்பர்கள்

மூலமாக அர்ஜுனை விசாரித்து விட்டு பையன் நல்ல பையன் என்று அறுதியிட்டு உறுதியாக

சொன்னான். நிச்சயதார்த்தமும் திருமணம் சார்ந்த எல்லா வைபவங்களும் மிகவும்

எளிமையாகவே நடந்தது. பிரியாவும் சங்கரும் நிச்சயதார்த்ததிற்கு வந்து சென்றார்கள்.

வழக்கம் போல சுந்தரவல்லி தன் மகனுடன் ஆரவாரத்துடன் வந்து இறங்கி விட்டிருந்தாள்.

வந்ததுமே மதுவிடம் தான் தன் வம்பை ஆரம்பித்தாள். ”என்ன மது, நீயாவது உங்க அப்பா

பார்த்த பையனை கட்டிக்கிறியா? அல்லது உங்கள் அக்கா மாதிரி இது காதல் கல்யாணமா?”

“இல்லத்தே. அப்பா பார்த்தது தான்” என்றாள் அவளும் தன்மையாக.

“பார்ப்போம். இன்னும் ரெண்டு நாட்கள் இருக்கு”

“ஆமாம். இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு” என்றாள் யதார்த்தமாக.

“அதுக்குள்ள எதுவும் நடக்காமல் இருக்கனுமேன்னு கவலையா இருக்கு”

“என்ன நடந்து விடும்?”

அவள் அந்த கேள்வியைக் கேட்கவே இத்தனை நேரமும் காத்திருந்ததைப் போல உடனே

சொன்னாள். ”நிச்சயதார்த்தம் முடிஞ்சி கல்யாணத்தை முடிக்கிறதுக்குள்ள என்னன்னவோ

நடக்குது இந்த காலத்தில. நம்ம பிரியாவைப் போல”

ஏதும் நடந்து விடாதா? கல்யாணம் நின்று விடாதா? இந்த தடவையாவது நம் மகனுக்கு

இவர்கள் பெண்ணைத் தந்து விட மாட்டார்களா? என்ற அங்கலாய்ப்பு மிகத் துல்லியமாக

தெரிந்தது சுந்தரவல்லியின் பேச்சில். அவள் நோக்கம் அப்பட்டமாக வெளிப்பட்டது அவள்

உடல் மொழியில்.

“ஏன் இப்படி எல்லாம் பேசறீங்க?’ இடையில் கோபமாக கேட்டாள் பிரியா. ”வாயை

வெச்ச்சிக்கிட்டு சும்மா இருங்க” என்று சொல்லணும் தான் ஆசை. ஆனால் இதையே சாக்காக

வைத்து ஒரு சண்டையை வலிய இழுப்பாள். எதற்கு வம்பு?

“நீ ஏன் சண்டைக்கு வரே?”

“ஏன் அத்தை இப்படி அச்சானியமா பேசறீங்க?” மது அழாத குறையாக கேட்டாள்.

“நான் என்ன இல்லாததையும், இதுக்கு முன்னாடி நடக்காததையுமா பேசறேன்? நல்ல பிள்ளை

மாதிரி உங்க அப்பா காட்டின பையனை நிச்சயம் பண்ணிட்டு கல்யாணத்துக்கு பத்து நாள்

இருக்கையில் காதலித்தவனைக் கட்டிக்கிடலையா நீ?”

உள்ளே சிவுச்சிவு என்று ஏறிய கோபத்தை அடக்கியவள் “ஆமாம். காதலிச்சவனைத் தானே

கட்டிக்கிட்டேன். இப்போ என்ன அதுக்கு?” தைரியமாக நெஞ்சை நிமிர்த்தி நேர் கொண்ட

பார்வையுடன் சுந்தரவல்லியைக் கேட்டாள் பிரியா.

இதை சுந்தரவல்லி எதிர்பார்க்கவில்லை. விமாலாச்சி மாதவியைப் போல நம் வாய்க்கு பயந்து

பின் வாங்கி விடுவாள். அல்லது தான் கூறிய அபாண்டத்திற்கு அஞ்சி கண்ணீர் விடுவாள்

என்று தான் எதிர்பார்த்தாள். ஆனால் சத்தியமாக இந்த ஆக்ரோஷத்தை பிரியாவிடம்

எதிர்பார்க்கவில்லை அவள்.

தன் தோல்வியை அவ்வளவு எளிதில் ஒப்புக் கொள்பவளா சுந்தரவல்லி? அந்த நேரம் உள்ளே

வந்த மாதவியைப் பிலுபிலுவென பிடித்துக் கொண்டாள்.

“பாரு அண்ணி, பாரு. எப்படி பேசுது இந்த பிரியா பொண்ணு?”

“விடுங்க அண்ணி” சுந்தரவல்லியை சமாதானம் செய்ய முற்படவில்லை.

“விடுங்க அண்ணியா…….! நம்ம அண்ணன் வீடாச்சே என்று கல்யாணத்துக்கு ரெண்டு நாள்

முன்னாடி வந்தா உங்களுக்கும் பெரியண்ணிக்கும் என்னைக் கண்டால் ஏகத்தாளமா இருக்கு.

எல்லாம் இந்த அண்ணன்களை சொல்லணும். பொண்டாட்டிக்கு பயந்தவங்க”

அவளுடைய கூப்பாடைக் கேட்டுக் கொண்டே சமையலறையில் கை வேலையை விட்டு

விட்டு வந்த விமாலாட்சிக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. மாடிப்படிக்கட்டில் நின்று

கொண்டிருந்த மதுவைப் பார்த்தாள். அவள் பார்வையின் கேள்வி புரிந்து மது அக்காவின்

பக்கம் ஒரு பார்வை பார்த்தாள். ஓ பிரியாவுடன் தான் பிரச்சினையா? வல்லி கத்துவதைப்

பார்த்தால் பிரியா நன்றாக திருப்பிக் கொடுத்திருக்கிறாள் என்று புரிந்து அவளைப் பார்த்து

வலது கை கட்டை விரலை தம்ஸ் அப் காட்டி விட்டு மீண்டும் அடுக்களைக்குள் சென்று

விட்டாள். ”சரி தான். நன்றாக கொடுக்கட்டும். வல்லியின் வாய்க்கு பயப்பட பிரியா ஒன்னும்

எங்களைப் போல அல்ல. தேவை தான் வல்லிக்கு. எங்களை என்ன பாடுபடுத்துவாள்.

பிள்ளைகளிடம் அதுப்போல வைத்துக் கொண்டால் இப்படித் தான் திரும்ப கிடைக்கும்”

பிரியாவிற்கு அன்று சங்கர் சொன்னதன் அர்த்தம் புரிந்தது. இது தான் காற்றின் போக்கிற்கு

எதிர்த்து நிற்காமல் இருப்பது. பழைய பிரியாவாக இருந்தால் வல்லியின் இந்த பேச்சிற்கு

கோபம் மூண்டிருக்கும். அது சங்கரிடம் வெடித்திருக்கும். இப்போது சங்கர் சொல்லியதைப்

போல காற்றோடு காற்றாக நின்று “ஆமாம். அதுக்கு என்ன இப்போ?” என்று மாற்றி

யோசித்ததால் தன்னை டென்சன் பண்ணுவதை நோக்கமாக கொண்டு ஒரு யுத்தத்திற்கு

ஆயத்தமான வல்லியை டென்சன் பண்ணினதில் பரம திருப்தி பிரியாவிற்கு.

இந்த சந்தோசத்தை சங்கரிடம் சொல்லணும். ஆமாம், சங்கர் எங்கே? மதியம் சாப்பாட்டிற்கும்

காணவில்லை. எங்கே போனான்? அப்பாவிடம் கேட்கலாம் என்றால் உன்னிடம்

சொல்லாமலா போனார் என்று தன்னையே எதிர் கேள்வி கேட்பார். அதனால் யாரிடமும்

எதுவும் கேளாமல் சங்கர் வருவதற்கு காத்திருந்தாள்.

மதியம் மூன்று மணி சுமாருக்கு சங்கர் ஒரு கூடை நிறைய காய்கறிகளை தோளில் சுமந்தவாறு

உள்ளே வந்தவன் பிரியாவின் பார்வைக்கு பதில் வல்லியின் வாய்க்கு அகப்பட்டுக்

கொண்டான்.

“அடடா, என்னப்பா நீ போய் காய்கறி வாங்கி கிட்டு வரே?”

“அதனால் என்ன பெரியம்மா”

“அதனால் என்னவா? நல்லா சொல்லுவியே. நீ இந்த வீட்டு மாப்பிள்ளை தம்பி. மறந்துடாதே”

“இதுவும் நம்ம வீடு தானே” சொன்னவன் மேற்கொண்டு அங்கே நிற்காமல் மீண்டும் வெளியே

போய் விட்டான் ஒரு கூடையை எடுத்துக் கொண்டு வர.

அம்பு அவனிடமிருந்து இப்போது பிரியாவிடம் பாய்ந்தது. ”என்ன பிரியா, வீட்டு

மாப்பிள்ளையை இப்படி வேலை வாங்குறீங்க?”

பிரியாவே சங்கர் கூடையைத் தூக்கிக் கொண்டு வருவதைக் கண்டு கொதி நிலையில்

இருந்தாள். “அதுக்கு இப்போ என்னை என்ன பண்ண சொல்றீங்க?”

“ஆஹா, அப்படியே உங்க அம்மா மாதிரி நடிப்பு. ஒன்னும் தெரியாத மாதிரி புருஷனை நல்லா

வேலை வாங்க தெரியுது. பரவாயில்லை போ. பொழச்சுக்குவே”

“அத்தை……” பல்லைக் கடித்தாள்.

“என்னவாம் அத்தைக்கு?”

“சும்மா இருங்க. எனக்கு ரொம்ப கோபம் வந்துடும்”

“ஆங். நல்லா வருமே கோபம்?” கழுத்தை நொடித்தவாறு சொன்னாள். ”உண்மையை

சொன்னால் உடம்பு எரியத் தான் செய்யும்”

அதற்குள் கூடையுன் உள்ளே வந்த சங்கர் பிரியா கோபமாக இருப்பதைப் பார்த்து விட்டு

காரணம் புரியாமல் திகைத்தான். கைகால் கழுவி சாப்பிட்டு விட்டு அவர்கள் அறைக்கு வந்த

போதும் பிரியா சற்றும் கோபம் தணியாமல் இருந்தாள். ஏசியின் குளிர்ச்சியிலும் கோபத்தின்

உஷ்ணத்தில் இருந்தாள்.

“அப்பாடா…..” என்று கட்டிலில் உட்கார்ந்தான். அப்படியே அவள் மடியில் சாய்ந்தான். அவள்

நகர்ந்து உட்கார்ந்து கொண்டாள்.

”ஓ, கோபமா”

பதிலில்லை. ஒருவேளை சாப்பிட தாமதமாக வந்ததற்கு கோபமாக இருக்கிறாள் போலும்

என்று நினைத்து “மார்கெட்டிற்கு போய் காய்கறிக்கும் மளிகை சாமான்களுக்கும் லிஸ்டைக்

கொடுத்து விட்டு இலை வாங்கி கொண்டு வந்தால் சாமான் எல்லாம் கட்டியாச்சு. எடுத்துட்டுப்

போக ஆள் இல்லை என்கின்றான். ராத்திரி சமையலுக்கு வேணும். நாலு மணிக்கு சமையல்

காரவங்க வந்துடுவாங்க. என்ன செய்ய? ஆள் வரும் வரை பார்த்துக் கொண்டு நிற்க

முடியுமா? நானும் டெம்போ டிரைவரும் சேர்ந்து தூக்கிக் கொண்டு வந்துட்டோம்”

அவனுடைய நீண்ட விளக்கத்திற்குப் பின்பும் பிரியா வாயைத் திறக்கவில்லை. அவளை

பார்த்தவன் அவளுடைய மௌனத்தை சகித்துக் கொள்ள இயலாமல் “ஏன் பிரியா அந்த

அம்மா பேசினதுக்கா இவ்வளவு கோபமா இருக்கே?”

………….

“அது தான் ஏட்டிக்குப் போட்டியா பேசுமே”

……….

“நம்ம வீட்ல நான் செய்யக் கூடாதா?”

“இது ஒன்னும் நம்ம வீடு இல்லை” பட்டென்று வெடித்தாள்.

“இல்லையா…?”

“இல்லை”

“சரி. செஞ்சிட்டேன். இப்ப என்ன?”

“எதுக்காக செய்யணும்?”

“உனக்காக செய்யணும்”

“எனக்காகவா?”

“ஆமாம். உனக்காகத் தான்”

“எனக்காக என்ன வேண்டுமானாலும் செய்வீங்களா?”

“ஆமாம். இதென்ன கேள்வி?”

“ம்……” என்று உருமியவள் முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்டாள்.

அவளை தன்புறம் திருப்பி “அது போகட்டும் பிரியா. என்னை யாரோ என்னவோ பேசிட்டு

போறாங்கன்னு விடேன். உனக்கேன் கோபம் வருது”

பதில் இல்லை.

“என்னைப் பாரேன்”

அவள் தலையை தன் புறம் திருப்பினவன் அதிர்ந்தான். பிரியாவின் கண்களில் கண்ணீர்.

இதை அவன் எதிர்பார்க்கவில்லை என்று அவன் முகத்தின் திகைப்பு சொல்லியது.

அதே அறை. ஏசியின் குளிர்ச்சி. அதே அழுகை. முதலிரவின் அதே நிகழ்ச்சி. ரிவைண்ட்.

ஆயாசமாக இருந்தது சங்கருக்கு. குரல் தாழ்ந்து விட்டது அவனுக்கு.”ஏன் பிரியா, இன்னும்

அவ்வளவு வெறுப்பு. அப்படித் தானே”

இல்லை என்று தலையாட்டினாள்.

“பிறகு?”

பதில் சொல்லாமல் மீண்டும் கண்ணீர் சிந்தினாள்.

“அவ்வளவும் வெறுப்பு..”

“ஊஹூம்”

“என் மேல் வெறுப்பு இல்லை. ஆனால் எதற்காக அழுகிறாய் என்று எனக்குப் புரியவில்லை”

கண்களை ஒருமுறை மூடித் திறந்தாள். கீழுதட்டை பல்லால் கடித்துக் கொண்டாள்.

”அவ்வளவும் விருப்பு”

“என்ன? என்ன சொன்னே?”

திகைப்புடன் கேட்டவனை கண்கள் சுழற்றி மையமாக மையலுடன் பார்த்தாள்.

“என்னை பிடிச்சதுக்கா இந்த அழுகை?”

மீண்டும் உதடு சுழித்தவள் கீழ் வானம் சிவந்ததைப் போல உள்ளே எழுந்த நாணத்தால்

சிவந்தாள்.

அவள் நாணத்தை ரசித்தவன் “இல்லை. இவனிடம் சொல்லும்படியாகி விட்டதே என்று

அழுகையா?”

கண்களை துடைத்துக் கொள்ள முயற்சிக்காமல் அவனை நன்றாக நிமிர்ந்து பார்த்து மூக்கை

உறிஞ்சி மெல்ல புன்னகைத்தாள்.

“இவனிடம் சொல்லும்படியாகி விட்டதே என்று தானே அழுதாய்?”

ஆம் என்று தலையாட்டினாள்.

அவள் முகத்தை நிமிர்த்தி மென்மையாக அவள் நெற்றியில் முத்தமிட்டு “அப்படின்னா,

உன்னை எனக்கு பிடிச்சிருக்குன்னு நான் எப்பவோ அழுதிருக்கனுமே”

“இது என்ன புதுக்கதை?” சுவாரஸ்யமாக கேட்டாள்.

கண்களில் குறும்பு கூத்தாட இடது புருவத்தை உயர்த்தி கேட்டான்.”எது?”

“எப்போதிலிருந்து என்னை நீங்கள்…….?” மீண்டும் நாணம் இடைப்பட தயங்கினாள்.

“எது? நான் உன்னைக் காதலிப்பதா?”

பதில் சொல்லாமல் என்னவோ அதிசயத்தை சொன்னவனைப் போல திகைப்புடன்

அவனையே பார்த்தாள். அவள் தலையை ஆசையாய் ஒரு முட்டு முட்டி விட்டு சொன்னான்.

“நான் உன்னை முதன்முதலில் சந்தித்தது இன்னும் என் நினைவில் இருக்கிறது”

அவளுமே அன்றைய அந்த நினைவில் தலையை ஆட்டினாள்.

“நம் அலுவலகத்தில் உன் அறையின் உள்ளே நுழைந்தேன். நீ நிமிர்ந்து என்னை ஒரு

பார்வைப் பார்த்தாய்” பரவசமாக இருந்தது அவன் முகம்.

“ஆனால் புதிதாக வந்திருக்கும் அதிகாரி என்ற நினைப்பிற்கும் மேல் கர்வம் பிடித்தவள் திமிர்

பிடித்தவள் என்ற எண்ணம் தான் தோன்றியது”

“ஷீலா……”

குறுக்கிட்டான்.”நெனச்சேன்” என்றவன்

“அவள் ஏன் என்னைப் பற்றி அப்படி சொல்லியிருப்பாள் என்று இப்போது உனக்கும் காரணம்

புரிந்திருக்கும்”

“கொஞ்ச நாளிலேயே புரிந்து விட்டது”

“அப்பாடா தப்பிச்சேன்” என்றவன் அவளைப் பார்த்து புன்னகைத்தான்.”போக, போக நான்

படிச்சிருந்தது எல்லாம் நீயும் படிச்சிருந்தே. பேசுவதற்கு நம்மிடையே பொது விஷயங்கள்

நிறைய இருந்தது. அப்படித் தானே”

“ஆமாம்” என்று அவளுமே ஒப்புதலாக தலையாட்டினாள்.

“உன்னுடன் இயல்பாக பேச முடிந்தது. பதிலுக்குப் பதில் வார்த்தையாடுவதில் ஒரு

சுவாரஸ்யம் இருந்தது. தப்பாக எடுத்துக் கொள்வாயோ என்று தயங்காமல் நினைத்ததை

நினைத்ததுப் போல என்னால் பேச முடிந்தது. மொத்தத்தில் நான் நானாக இருக்க முடிந்தது”

“கற்றோரை கற்றோரே காமுறுவர் இல்லையா?”

“உண்மை தான். ஆனால் எப்போதும் உன்னை ஒரு அதிகாரியாக வைத்தே பேசி

பழகியவனுக்கு உன்னை முதன் முதலில் ஒரு பெண்ணாக அதுவும் அழகான பெண்ணாகப்

பார்த்த நாள் மறக்கவே முடியவில்லை”

அவன் கண்களின் ரசனையைக் கண்டவள் “தொடக்க விழா அன்று தானே” என்றாள்.

“ஆமாம்” என்றவன் மீண்டும் “என்னவொரு அழகு” அவன் வர்ணனையிலும் கண்களின்

பரவசத்திலும் பிரியா தன்னை புதிதாக உணர்ந்தாள்.

“தேவதையாய் படி ஏறி வந்து கொண்டிருந்தாய்”

அவளுக்கும் அந்த நிகழ்ச்சி கண்களில் வந்து நின்றது. மனது அவன் பேச்சில் இருந்தது.

“அதுவரை என் அறிவிலிருந்த உன் மீதான என் ஈர்ப்பு, மனசில் இருந்த நினைப்பு அதையும்

தாண்டி என் உடலையும் ஏன் ஒவ்வொரு அணுவையும் வியாபித்தது” என்றவன்.”அப்படியே

உன்னை……” என்று நிறுத்தி கட்டிலில் உட்கார்ந்து கொண்டிருந்த அவளை தூக்கி தன்னோடு

இறுக அனைத்துக் கொண்டான். அவள் அன்றே உணர்ந்திருந்த அந்த நொடி…….! அப்பா….!

இப்போதும் அவனுடைய உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிந்தது.

“ஏன் என்னிடம் சொல்லவில்லை?” என்று கேட்டாள் மெல்ல.

“ஒன்று பண்பாடு. ரெண்டாவது….” நிறுத்தியவன் அவள் கண்களில் இருந்த கேள்வியை கண்டு

“அரவிந்தன் படிப்பு பதவி அந்தஸ்து என்று எல்லா வகையிலும் என்னை விட உனக்கு

ஏற்றவன்” என்று சமாதானம் சொன்னான்.

“அப்படி என்று நீங்கள் நினைத்தீர்கள்”

“ஆமாம்”

“அதனால் என் மேல் உள்ளக் காதலைக் கூட சொல்லாமல் இருந்து விட்டீர்கள். அப்படித்

தானே”

‘ஆமாம்”

“அப்புறம் என்ன பண்ணியிருப்பீங்க?”

“வேலையை ராஜினாமா செய்து விட்டு இந்த ஊரை விட்டு என் வீட்டுகேப் போய் விடலாம்

என்று நினைத்திருந்தேன்”

“முன்பே சொல்லியிருந்திருக்கலாம் நீங்கள்” ஆற்றாமையுடன் சொன்னாள். எத்தனை இரவுகள்

இவனிடம் தான் கொண்டிருந்த காதலை காட்டிக் கொள்ள இயலாமல் தனக்குள் அடை காத்து

வைத்திருந்து தவித்திருந்தாள்.

“ஆமாம் நீங்கள் ஏன் முன்பே சொல்லவில்லை?’ பொய் அதிகாரமும் போலி மிரட்டலுமாக.

ஆனால் அவனோ போலித்தனமில்லாத சுத்த உண்மையுடன், ஆழ்ந்த குரலில் சொன்னான்.

”உன் பார்வை பிரியா. உன் பார்வை”

“என் பார்வைக்கு என்னவாம்?”

“அந்த கண்களில் தான் எத்தனை வெறுப்பு?’

“வெறுப்பு இல்லாத நேரத்தில் சொல்ல முடியாதா?” மீண்டும் மிரட்டலாக.

“முதலிரவில் சொல்லி விடலாம் என்று தான் உள்ளே வந்தேன்” என்று தயங்கி நிறுத்தினான்.

“சொல்ல வேண்டியது தானே. தேவையில்லாத எத்தனை பேச்சுக்கள் பேசினீர்கள். எங்க

அப்பா சொன்னாரு, ஆட்டுக்குட்டி சொன்னாருன்னு வம்பு பண்ண மட்டும் முடிஞ்சுது?”

“நீ என்னை திட்டியிருந்தால் கூட பரவாயில்லை என்று சொல்லியிருப்பேன்.”

“திட்டறாங்க” என்றாள் மையலுடன்.

“ஆனால் நீயோ அழ செய்தாய்”

“அன்றைக்கு இருந்த மன நிலையில் நான் வேறு என்ன செய்திருக்க முடிந்திருக்கும்?”

“கையாலாகாத உன் அழுகை என்னை நிலை குலைய வைத்து விட்டது”

“இப்போது மட்டும் எப்படி சொன்னீர்களாம்?”

“இப்போதும் உன் பார்வை தான் காரணம்”

“என்ன சொல்லியது என் பார்வை?”

“சொல்லவில்லை. கொடுத்தது”

“எதை கொடுத்தது?”

“உன்னிடம் சொல்லி விடலாம் என்னும் திடத்தைக் கொடுத்தது”

“ஓஹோ”

“ஆம். பிரியா. இப்போதெல்லாம் உன் கண்களில் தெரியும் காதலும் கருணையும் தான்

உண்மையை சொல்வதற்கு திடம் தந்தது”

அன்றைய நினைவில் மேலும் தொடர்ந்து சொன்னான். “உன் பெரியப்பாவும் அப்பாவும்

ஒருநாள் என் ரூமிற்கு வந்தார்கள். எதற்கு என்று புரியவில்லை. உன் அப்பாவின் சிறு வயது

கனவு, அரவிந்தனின் ராஜ பரம்பரை பதவி படிப்பு என்று சொல்லி விட்டு தன் மகளான

உன்னை பொக்கிஷமாக பாதுகாத்தது, ஒரு மழை இரவில் வெளியே தங்கும்படி ஆனது,

அதனால் ஏற்பட்ட அபவாதம், அதனால் பூபதி குடும்பத்தினர் பிரியாவை வேலையை விடச்

சொல்லி வற்புறுத்துவது என்று சொல்லிக் கொண்டே போனார்கள் அண்ணன் தம்பி

இருவரும்”

பிரியாவிற்கும் இதை எல்லாம் மறந்து விடலாம். ஆனால் மன்னிக்க கூடிய நிகழ்வல்லவே.

“உண்மை தான். அன்று வீடே சோகமயமாக இருந்தது”

“இதை எல்லாம் ஏன் என்னிடம் வந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் இருவரும் என்று

எனக்கு உண்மையில் புரியவில்லை பிரியா. கழிவிரக்கமா? சுயவிளக்கமா?”

“அன்றைக்கு அவர்கள் நிலை அது போல இருந்தது”

“எனக்கும் அது புரிந்ததினால் தான் பட்டென்று அப்படி ஒன்றைக் கேட்டு விட்டேன்”

சிரித்தான்.

“என்ன?”

“சார், பிரியாவை எனக்கு கல்யாணம் செய்து வைத்து விடுங்கள் என்று”

“அப்படியா கேட்டீங்க?” என்று வியந்தாள்.

தன் பெற்றோர்கள், மாதவியின் வற்புறுத்தலினால் திருமணம் குறிப்பிட்ட நாளில் நடந்தாக

வேண்டும் என்ற தன் நிர்கதியான நிலையினால் சங்கரை வற்புறுத்தியிருப்பர்கள் என்று

நினைத்திருந்தாள். அவனும் ஒரு நிர்பந்தத்தில் தான் அவளை மணந்திருப்பான் என்று

நினைத்ததும் உண்டு. ஆனால் இவன் தான் என்னை மணக்க கேட்டிருக்கிறான்.

“ஏன் அப்படி கேட்டீர்கள்?”

“திட்டமிட்டு தேடுவதில்லையே காதல். கிடைக்காது என்று சர்வ நிச்சயமாக தெரிந்தே

ஏங்குவது தானே காதல்”

“அப்படி என்றால்?”

“அப்படி என்றால் அப்படித் தான்” கண்களுக்குள் சிறு வெட்கம் ஒளிந்திருந்தது அவனுக்கு.

“அது சரி. நீங்க கேட்டதற்கு என்ன சொன்னார்கள்?”

“அவர்கள் எங்கே சொன்னார்கள்?”

“பிறகு?”

“நான் கேட்ட ஒரு கேள்வியில் அடிபட்டார்ப் போல திகைத்து தான் போனார்கள். நான்

சுதாரித்துக் கொண்டேன். உன் மேல் உள்ள ஆசையால், காதலால் அவர்கள் நிலவரம்

புரியாமல் கேட்டு விட்டேன். திடீரென்று கேட்ட கேள்விக்கு நான் நியாயம் செய்தாக

வேண்டும். தொண்டையை சரி செய்து கொண்டு நிதானமாக உறுதியாக சொன்னேன்.”

சொன்னவன் நிறுத்தினான். பிரியாவை ஆழ ஊடுருவிப் பார்த்தான். என்ன பார்வை இது?

சிலிர்த்துக் கொண்டாள் அவள்.

அன்று இவர்களுக்குள் நடந்த உரையாடலை நினைவில் கொண்டு வந்தான் சங்கர்.

“சார், உங்கள் கனவுகள் கற்பனைகள் ஆசைகள் எல்லாம் மிகவும் நியாயமானதே. ஆனால்

ஒன்றை யோசிக்க வேண்டும் நீங்கள்”

“எதை?”

“உங்கள் எண்ணப்படி அரவிந்தனுடன் பிரியாவிற்கு திருமணம் ஆகியிருந்தால் ராஜா

அரவிந்தனின் அரண்மனையில் பிரியா என்னும் உங்கள் பொக்கிஷம் பத்தோடு

பதினொன்றாக இருந்திருக்கும். இல்லையா.” அண்ணன் தம்பி இருவரும் யோசிப்பதற்கு சற்று

இடமளித்தவன் மேலும் தொடர்ந்தான்.

“ஆனால் எனக்கு…..?”

“உனக்கு…..?”

“எனக்கு……பிரியா ஒரு தேவதை…! அவளை, என் தேவதையை என் இதயத்தில் வைத்துக்

கொள்ள மாட்டேன்”

“அடப்பாவி. ஏன்.?” வீறிட்டாள் பிரியா.

“ஏனெனில்.. இதயத்தின் நினைப்புகள் கவலைகள் வருத்தங்கள் துக்கங்கள் துன்பங்கள்

ஆகியவற்றில் ஏதாவது ஒன்று, இதயத்தில் இருக்கும் என் தேவதையை நெருக்கி விடக் கூடும்”

“சூப்பர்”

“ம்……..அதனால்….!.”

“அதனால்…..?”

“என் தேவதையை என் கண்ணுக்குள் வைத்துக் கொள்வேன். வெளியிலிருந்து அவளை எதுவும்

தீண்டாதவாறு அவளை இமையாய் பாதுகாப்பேன்”

‘அப்பா என்ன சொன்னாரு?”

“என் வார்த்தையில் இருந்த சத்தியம் அதன் அடிப்படையான என் காதல் அவருக்குப்

புரிந்ததோ என்னவோ என் வார்த்தையில் திருப்தியும் சந்தோஷமும் ஆகி விட்டார்”

“ஒஹோ…அப்படியா?” என்று கேட்ட பிரியா தன் கரங்களை மாலையாக்கி அவன் கழுத்தை

சுற்றிப் போட்டு ஆழமாக அவன் கண்களுக்குள் பார்த்தாள்.

“என்ன பார்க்கிறே பிரியா?” அருமையாக கேட்டான் அவள் அன்பு கணவன்.

“கண்ணுக்குள் தேவதை என்று சொன்னீர்களே, தெரிகிறாளா என்று பார்த்தேன்”

அவளை இடையோடு சேர்த்து அணைத்து காதலாய் கசிந்துருகி கேட்டான்.”தெரிகிறாளா?”

என்று.

அவன் காதல் அவள் உயிரை உருக்க, அவளும் அதே உணர்வில் பதில் சொன்னாள்.

”தெரிகிறாள்” என்று.

சுபம்

G Shyamala Gopu. 

தொடர்ந்து வாசித்து கருத்து அளிக்கும் அனைவருக்கும் நன்றி. உங்கள் விமர்சனத்தை கருத்தை எதிர்நோக்கி…  

4 thoughts on “காற்றோடு காற்றாக-20”

 1. Avatar

  உங்கள பாராட்டுவதற்கு வார்த்தைகளை நான் தேடுறேன் அந்த அளவுக்கு கதை ரொம்ப அருமையா
  இருக்கு …
  உங்களுடைய எழுத்தோட நடையாகட்டும் இல்ல… வார்த்தைகளின் பிரயோகமாகட்டும் … அனைத்தும் மிகவும் அருமையா இருந்தது ..
  நிறைய புது வார்த்தைகள் பயன்படுத்தி இருந்தீங்க…
  அனைத்தும் அருமை…

 2. Avatar

  அருமை! மிகவும் அருமையான கதை. அதற்குள் முடிந்துவிட்டதே என்று ஏங்க வைக்கும் நடை! பாரம்பரிய முறைகளை பறைசாற்றி படித்த இளைஞர்களுக்குகான பொறுப்பு என்ன என்பதை சிறப்பாக ஒரு அழகான காதலுடன் கூறியுள்ளீர்கள்! கௌரி யின் கதாபாத்திரமும் அவரை வலது கரம் என்று கூறியதும் மிகவும் சிறப்பு! மேலும் மேலும் இது போன்ற சிறந்த படைப்புகளை வழங்க வேண்டும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *