Skip to content
Home » காற்றோடு காற்றாக-6

காற்றோடு காற்றாக-6

6

சங்கரும் ராஜேந்திரனும் வீட்டு வாசலில் விட்டு விட்டுப் போனதும் பிரியா உள்ளே

நுழைந்ததும் தான் தாமதம். மாதவி புயல் போல சீறிக் கொண்டு வந்து அவள் முன் நின்றாள்.

எடுத்த எடுப்பில் முதல் கேள்வி “என்ன பிரியா இப்படி பண்ணிட்டே?”

முதல் நாள் இரவு கொட்டும் மலையில் வெளியே தங்கியதில் மனதிற்குள் அவளுக்குமே சிறு

குருகுர்ப்பு இருக்கத் தான் செய்தது. அதில் இரவில் சரியான உறக்கம் வேறு கிடையாது.

தானே மிகுந்த கஷ்டப்பட்டுக் கொண்டு வீட்டிற்குள் வந்தால் இந்த அம்மா புரிந்து

கொள்ளாமல் வந்ததும் வராததுமாக பாய்கிறாள் என்ற கோபம் முணுக் என்று உள்ளே சிறு

சுடர் விட்டது பிரியாவிற்கு.

“ஏம்மா, நான் தான் ராத்திரியே போன் பண்ணி சொல்லிட்டேனே”

“போன் பண்ணா போச்சா?”

“வேறு என்ன பண்ணுவதாம்?”

“ராத்திரி நேரத்தில இப்படி வெளியே தங்கலாமா?”

“நான் வேண்டுமென்றா தங்கினேன்?”

“கல்யாணம் நிச்சயமானப் பெண்”

“கல்யாணமே ஆயிருந்தாலும் தான் என்ன செய்ய முடியும்?”

“ராத்திரி வெளியே தங்கும்படி ஆச்சுதேன்னு எனக்கு கவலை”

“அம்மா, நான் என்ன பண்ண முடியும்னு சொல்லு” என்று தாயின் கவலைப் புரிந்தவளாக

தன்மையாகவே கேட்டாள் பிரியா. “அந்த வீடு பெண்கள் இருந்த வீடு தான்மா. நான்

அவர்களோடு தான் இருந்தேன்மா”அத்தனை சொல்லியும் மாதவியின் முகம் தெளியவில்லை.

“என்னம்மா..என்னை நம்பலையா நீங்க”

“ச்சை, உன்னை நம்பவில்லை என்றால் நான் என்னையே நம்பவில்லை என்று பொருள்”

“பின்ன என்னம்மா” தாயை அணைத்துக் கொண்டவளை பரிதாபமாகப் பார்த்தாள் மாதவி.

”என்னம்மா?”

“உனக்கு புரிய மாட்டேங்குது.”

“என்ன புரியணும்?”

“உனக்கு மாமியாராகப் போறவளை நெனச்சாத் தான் கவலையா இருக்கு”

“ஏம்மா?”

“அவர்கள் வீட்டில் எப்படி எடுத்துக் கொள்வார்களோ? என்னென பேசுவார்களோ?”

அவர்களுக்கு எப்படித் தெரியப் போகிறது என்று பிரியாவால் கேட்க முடியவில்லை. அப்படி

எல்லாம் அவர்கள் ஒன்றும் சொல்லி விடமாட்டார்கள். சூழ்நிலையை விளக்கினால் புரிந்து

கொள்ளக் கூடியவர்கள் தான் என்றெல்லாம் பிரியா தன் தாய்க்கு தைரியம் சொல்ல

முடியவில்லை. தாயாளோ தனக்கு தைரியம் சொல்லிக் கொள்ள முடியவில்லை. ஏனெனில்

தாய் மகள் இருவருக்கும் தெரிந்திருந்தது பூபதி குடும்பத்தினரைப் பற்றி. நிச்சயமான இந்த

மூன்று மாத காலத்தில் இவர்கள் பட்டிருக்கும் பாடுகள் ஏராளம்.

இந்த நகரத்திற்கு ஏதேனும் வேலையாக அவர்கள் குடும்பத்தினர் வர நேர்ந்தால் இவர்களிடம்

அதை முன் கூட்டியே அறிவித்து இவர்களுக்கு வசதிப்படுமா என்றெல்லாம் கேட்டுக் கொண்டு

வரும் குறைந்த பட்ச நாகரிகத்தைக் கூட அவர்கள் கடைபிடிப்பதில்லை. டேக் இட் அஸ்

கிராண்டட் என்று திடீர் திடீர் என்று வந்து நிற்பார்கள். அது எந்த நேரம் எந்த வேளை என்றும்

பார்ப்பதில்லை.

மாதவி கல்லூரிக்கு சென்று விட்டு மாலை வீட்டிற்கு வந்து பின்பு திருமண அழைப்பிதழ்

கொடுப்பதற்கோ அன்றி திருமணம் சார்ந்த வேலைகளுக்காவோ வெளியே போக கிளம்பி

நிற்பாள். அப்போது மிருனாளினியிடம் இருந்து அழைப்பு வரும். தாங்கள் நகரத்தில் ஒரு

வேலைக்காக கிளம்பி வருவதாகவும் அதற்கு முன்பு மாதவியின் வீட்டிற்கு வந்து விட்டு

செல்வதாகவும் சொல்வாள். ஒரு வார்த்தை நாங்கள் இப்போது வரலாமா? தங்களுக்கு

சவுகரியப்படுமா? என்று கேட்கும் குறைந்த பட்ச பண்பு கூட இருக்காது அவள்

தோரணையில். நான் வருகிறேன். நீ இருந்து தான் ஆக வேண்டும் என்ற தொனி தான்

மாதவியின் மனதில் உறுத்தும். மதுவிற்கோ நமநமவென்று உள்ளூர எரிச்சல் ஊற்றெடுக்கும்.

பிரியா தன்னுடைய புராஜெக்ட் விஷயமாக அரசு அதிகாரிகளின் அப்பாயன்ட்மென்ட்

வாங்கியிருப்பாள். ஆனால் அரசு அலுவலகங்களுக்கே உரிய தாமதம் ஏற்பட்டு மாலையில்

அவள் வீட்டிற்கு வருவதில் தாமதாமகிப் போகும். மாதவிக்கு பிரியாவின் நிலை புரிந்து

அவளை ஒன்றும் கேட்டதில்லை.

மாலையில் திடீரென தொலைபேசியில் அழைத்து இதோ இன்னும் பத்து நிமிஷத்தில் நான்

அங்கே இருப்பேன் என்று சொல்லும் போது மிருனாளினி வருகிறாளே என்று பிரியாவிற்கு

போன் பண்ணினால் ஒன்று அவள் கிளம்பி பாதி வழியில் வந்து கொண்டிருப்பாள். அல்லது

கைவேலையை விட்டு விட்டு கிளம்பி வருவாள். “என்னம்மா, காலையிலேயே ஒரு வார்த்தை

சொல்லியிருந்தால் எனக்கு பதிலாக ரமேஷையோ அல்லது பைஜுவையோ கை

மாத்தியிருப்பேன். இப்படி திடீர் திடீர் என்று கிளம்பி வர சொன்னால் எப்படி?” என்று

அலுத்துக் கொள்வாள்.

“என்னம்மா பண்ணுவது? கல்யாணம் வரை தானே. கொஞ்சம் பொறுத்து தான் போக

வேண்டும்” என்று பிரியாவிற்கு சமாதானம் செய்வதைப் போல தனக்குமே அவள் சொல்லிக்

கொள்வாள்.

பிரியா இல்லாத நேரங்களில் வரும் மிருனாளினி சும்மா போவதில்லை. மாதவி கொடுக்கும்

நல்ல உயர்தர சிற்றுண்டிகள் அவளை அப்படி சும்மா போக விட்டதில்லை. “ஏன் பிரியா

லேட்டாக வருகிறாள்?”

மாதவி சமையலறைக்கும் சாப்பாட்டறைக்குமாக அல்லல்பட்டுக் கொண்டிருப்பாள். மது தான்

தன் வயதிற்கு மீறிய பொறுப்புடன் பொறுமையுடன் பதில் சொல்வாள். “அக்கா அஒரு

புராஜெக்ட் எடுத்திருக்கிறாள். அதன் தொடக்க விழா சம்பந்தமாக வெளியே போக

வேண்டியிருப்பதால் தாமதமாகி விடுகிறது”

“இப்போது தான் இப்படியா? இல்லாவிட்டால் எப்போதுமே லேட்டாகத் தான் வருவாளா?”

“இந்த தொடக்க விழாவிற்கு தான்”

“ஏன் இவளை விட்டால் வேறு யாருமே இல்லையா?”

“இவள் தான் புராஜெக்ட் ஆபிசர்”

“உக்கும். எல்லா வேலையையும் தானே செய்யணும் என்ற நினைப்பு தான். நாம் வேலை

செய்வதற்கு பதில் மற்றவர்களை வேலை வாங்குவதில் தான் அதிகாரிகளின் சாமர்த்தியம்

இருக்கிறது”

“அக்காவுக்கு தானே எல்லாவற்றையும் ஒரு கண் பார்த்துக் கொள்வது பழக்கம்”

“தன்னை விட்டால் ஆளே இல்லை என்ற இறுமாப்பு தவிர வேறு என்ன?”

என்னுடைய அக்கா இறுமாப்பானவள் என்று தெரிகிறதல்லவா பின் ஏன் அவளை உங்கள்

வீட்டுக்கு கொண்டு போகணும்? என்ற பார்வை இருக்கும் அவள் கண்களில். அது புரியும்

மிருனாளினிக்கு. கிட்டத்தட்ட உண்மையின் விளிம்பில் நிற்கும் அந்த கேள்வி மிருனாளினிக்கு

கோபத்தை கொடுக்கும். உண்மையை சொன்னால் யாருக்குமே உடம்பெரியும் அல்லவா!

மரியாதையின் காரணமாக பதில் சொல்லாமல் வாயை மூடிக் கொள்ளும் மதுவை ஒரு

வெற்றிக் கொண்ட பார்வை பார்த்து விட்டு அடுத்தது மாதவிக்கு இலவச உபதேசம் வேறு.

“நான் சொல்றேனேன்னு நெனச்சுக்காதீங்க. நீங்க உங்கள் பெண்களுக்கு ரொம்பவே இடம்

கொடுத்து விட்டீர்கள்”

“இல்ல. நம்ம வீட்ல இருக்கும் வரை தானே அவர்களும் கொஞ்சம் சுதந்திரமாக இருக்க

முடியும்” என்று மாதவியும் சமாளிப்பாள்.

“அதுக்குன்னு பொட்டை புள்ளைங்களுக்கு இவ்வளவு சுதந்திரம் ஆகாது” கீழ்த்தரமான

வார்த்தை மதுவை மனம் நோக செய்யும். ஆனால் மாதவி மதுவிடம் சும்மா இரு என்று

கண்களால் கெஞ்சும் போது அவளாலும் தான் வேறு என்ன செய்ய இயலும்? அமைதியாக

இருப்பாள்.

மிருனாளினி அத்துடன் விடுவதில்லை. அவர்கள் வீட்டின் பாரம்பரியம் அதில் பெண்களின்

நிலை நடைமுறைகள் பழக்க வழக்கங்கள் என்று பெரிய லெட்சரே வைப்பாள். பேராசிரியை

மாதவிக்கு அதும் தமிழ் பேராசிரியை மாதவிக்கு இத்தனாம் பெரிய லெட்ச்சர் தேவையா?.

“என்னவோ, இதெல்லாம் என் மகனுக்குப் பிடிக்காது. பார்த்து நடந்துக்க சொல்லி உங்கள்

பிரியாவுக்கு புத்தி சொல்லுங்கள்” என்று முடிப்பாள்.

கொல்லன் பட்டறையில் ஊசி விற்கும் மிருனாளினியின் முயற்சி தாய் மகள் இருவருக்குமே

அலுப்பைக் கொடுக்கும்.

பிரியாவின் புராஜெக்ட் விஷயமாக அரவிந்தனின் வங்கி கிளையுடன் இணைந்து செயல்பட

வேண்டியிருந்ததால் முதன் முறை சுகந்தியுடன் போனாள் பிரியா. வங்கி மேலாளரை சந்தித்து

இந்த திட்டத்தைப் பற்றி விலக்கி அதில் வங்கியின் பங்கு, வங்கி நடைமுறைகள் பற்றிய

விழிப்புணர்வு முகாமிற்கான திட்டமிடல் கடன் உதவி என்று விரிவாக விவாதித்து திட்டமிட்டு

விட்டு வந்த போது பிரியா அரவிந்தனுக்கு நிச்சயிக்கபட்ட விவரம் அறிந்து எல்லோரும்

உற்சாகமாக அவளை வாழ்த்தினார்கள். பிறகு இருமுறை சங்கருடன் செல்ல நேரிட்ட போது

அரவிந்தனின் முகத்தில் ஈயாடவில்லை. அவனுக்கு பிடிக்கவில்லை என்பதை மிகவும்

அப்பட்டமாகவும் வெளிப்படையாகவும் காட்டிக் கொண்ட அவன் அணுகுமுறை பிரியாவின்

மனதிற்குள் ஒரு சிறு ஊசியால் குத்தியதைப் போலிருந்தது.

“மேடம் அவருக்கு உங்கள் மேலே மிகுந்த ஆசை “ என்று சங்கர் சொன்ன போது கொஞ்சம்

மனம் ஆறியவளாக கேட்டாள்.”அப்படியா?” என்று.

“ஆமாம் மேடம்”

“எப்படி எதை வெச்சி அப்படி சொல்றீங்க?”

“நான் உங்கள் கூட வருவது அவருக்கு பிடிக்கலை மேடம்”

“அது நல்ல விஷயமா?”

“உங்கள் மேலே இருக்கும் பிரியத்தினால் கொஞ்சம் பொசசிவ் ஆக இருக்கிறார். அது ஒன்னும்

தப்பில்லையே”

“தப்பு தான்”

“பாசத்தினால் கொஞ்சம் பொசெசிவாக இருந்தால் தப்பா?”

“அதன் அடிப்படை பொறாமை தானே”

“ஆம். ஆனால் அது உங்கள் மேல் இருக்கும் உரிமையினால் தானே”

நைந்த சிரிப்பு ஒன்று வெளிப்பட்டது அவள் உதடுகளில். அதைக் கண்டவன் “ஏன் மேடம்?’

என்று கேட்டான்.

மறுப்பாக தலையசைத்து ஒரு பெருமூச்சை விட்டு சொன்னாள்.”சின்ன வயசில் எங்க அம்மா

சொல்வாங்க. பொறாமை எந்த ரூபத்திலும் நம் மனதிற்குள் வரக் கூடாது என்று” சொல்லி

விட்டு சங்கரை முகத்துக்கு நேருக்கு நேர் பார்த்து “அது பொசெசிவ்னேஸ் என்பதாக

இருந்தாலும் சரி” என்று.

அவளை விசித்திரமாக பார்த்தான் சங்கர். சரியான உபதேசம். நல்ல அம்மா. எல்லாவற்றுக்கும்

மேலாக நல்லதொரு குடும்பம். மனதிற்குள் சிலாகித்துக் கொண்டான் அவன்.

ஒரு முகூர்த்த நாளில் கல்யாண ஜவுளி எடுக்க நகரத்தில் இருந்த ஒரு பாரம்பரிய மிகக் கைராசி

நிறுவனத்திற்கு சென்றனர் இரு குடும்பத்தினரும். மிருனாளினியின் அக்கா தமயந்தி அவள்

மகள் சாருலதா மூவரும் ஒவ்வொரு புடவையாக தேர்வு செய்து அதை பிரியாவின் மேல்

வைத்து பொருத்தம் பார்த்துக் கொண்டிருந்தனர். இறுதியாக ஒரு மெரூன் கலர் புடவையில்

கையகல தங்க சரிகையில் பட்டு புடவையியை தேர்ந்தெடுத்தார்கள். மிகுந்த டாம்பீகமாகவும்

மிக உயர்ந்த விலையிலும் இருந்த அந்த புடவையை மிருனாளினி தேர்வு செய்தாள்.

பிரியா தனக்காக மற்றவர்கள் புடவை தேர்வு செய்து கொண்டிருப்பதை மிகவும் அமைதியாக

பார்த்துக் கொண்டிருந்தாள். மது ஒரு வயலெட் கலரில் வெள்ளி சரிகையில் ஒரு புடவையை

விற்பனையாளரிடம் பிரித்துக் காட்ட சொன்னாள். அது மிகவும் அழகாக இருந்தது.

பிரியாவிற்கும் பிடித்திருந்தது. அதை அங்கே இருந்து பார்த்து விட்டு பிரியாவின் அருகில் வந்த

மிருனாளினி தன் கையில் இருந்த மெரூன் புடவையை அவள் மேல் போட்டு பார்த்து விட்டு

“பிரியா உனக்கு இந்த புடவையைத் தான் செலெக்ட் பண்ணியிருக்கேன். இது தான் உனக்கு

பொருத்தமாக இருக்கு” என்றாள்.

அவள் சொன்னதை அங்கே தூரத்தில் நின்று குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருந்தனர்

தமயந்தியும் சாருலதாவும். பிரியா அமைதியாக இருந்தாள். ஆனால் பார்வை மதுவின் கையில்

இருக்கும் புடவையில் இருந்தது. அதைக் கண்டு விட்ட மது அவள் அருகில் நெருங்கி

மிருனாளினியைப் போலவே தன் கையில் இருந்த புடவையை அவள் மேல் போட்டு “அக்கா

இது உனக்கு ரொம்ப ரொம்ப அழகா இருக்கு” என்றாள்.

“அரவிந்தனுக்கு வயலட் கலர் பிடிக்காது” மிருனாளினியின் திட்டவட்டமான பதிலில்

மாதவி “மது, அக்காவுக்கு இந்த மெரூன் தான் நல்லாயிருக்கு” என்றாள்.

“பிரியா நீ என்ன சொல்றே?’ கேள்வி இப்போது நேரிடையாக பிரியாவிடம் பாயவும், அவளும்

மது கையில் இருக்கும் புடவையை ஒரு முறை பார்த்து விட்டு மிருனாளினியிடம் மெல்ல

தலையை ஆட்டினாள்.

“மது, நீ சும்மா இரு.” மாதவி காதைக் கடித்தாள்.

“அம்மா, அக்காவுக்கு பொருத்தமா இருப்பது முக்கியமா? பிடித்திருப்பது முக்கியமா?” அவள்

காதருகில் பற்களுக்கிடையில் கடித்து துப்பினாள்.

“ப்ளீஸ். ஒரு புடவைக்காக பிரச்சினைப் பண்ணாதே” கெஞ்சினாள் மாதவி.

“அக்காவுக்கு பிடிச்சிருக்கு இல்ல அந்த வயலட் புடவை. அதையும் சேர்த்தே எடேன்மா”

“அவுங்க ஒரு புடவை தான் எடுக்கணும். அது தான் பழக்கம்”

“இருந்துட்டுப் போகட்டும். நீ அந்த புடவைக்கு காசு கொடு”

“உனக்கு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்”

இவர்கள் பேசுவதை ஒற்றை பாம்பு செவியில் கேட்டுக் கொண்டிருந்தாள் போலும்

மிருனாளினி. புன்னகை சிந்தும் சந்திர பிம்பத்துடன் மதுவிடம்,”மது உனக்கு அந்த புடவை

பிடித்திருந்தால் எடுத்துக் கொள். நான் பணம் கொடுத்து விடுகிறேன்”

“அக்காவுக்குத் தான் அந்த புடவை பிடித்திருக்கு”

“பிரியாவிற்கு வாங்கினாலும் அதை அவள் திருமணத்திற்கு கட்ட முடியாது. இந்த புடவை

தான் எங்கள் குடும்பத்திற்கு ஆகி வந்த நிறம்”

இத்தோடு போயிற்றா! திருமணம் சார்ந்த சடங்குகளில் எல்லாம் இதே வார்த்தை தான் இடம்

பெற்றது. மாதவியின் உடல் உழைப்பும் பொருட் செலவும் கொண்ட சடங்குகளை ”இது தான்

எங்கள் குடும்ப பழக்கம். இது தான் எங்கள் குடும்பத்திற்கு ஆகி வந்தது.” என்று செய்ய

வைத்தாள்.

அதுவே மிருனாளினி ஏதேனும் செய்ய வேண்டியதாயின் அந்த சடங்கை “இது எங்கள்

குடும்பத்தில் பழக்கமில்லை” என்ற ஒற்றை வார்த்தையில் முடித்து விடுவாள்.

என்னவோ இந்த திருமணம் மிருனாளினியின் குடும்பத்தினரின் பாத்தியதைப்பட்ட

விஷயமாகவே பாவித்து கடைசி வரை அதே தோரணையில் செய்தும் வந்தாள். செலவு

பூராவும் தேவநாதனுடயதாக இருந்தது. ஆனால் பாவம் அவரும் அதை மிகுந்த

மனமகிழ்ச்சியுடன் செய்யவே செய்தார். கூடுதலாக பவியத்துடனும்.

“ஒரு பெரிய ராஜ தோரனையில் இருப்பவர்கள், இன்று இப்படி ஒரு சம்பவம் நடந்தது

தெரிந்தால் என்ன சொல்லுவார்களோ” மாதவியின் கவலையை

“கண்டிப்பாக ஏதேனும் பிரச்சினை பண்ணுவார்கள். உன் தலை தான் உருளப் போகிறது”

என்று மேலும் பயங்காட்டினாள் மது.

இவர்கள் இருவரின் பயம் தேவனாதனுக்கும் உள்ளூர ஒரு வித கவலையைக் கொடுத்தது

என்றால் இதற்கு எல்லாமா பிரச்சினை செய்வார்கள்? இது இயற்கையின் விளைவு. யாரால்

முன் கூட்டி கணிக்க முடியும்? யாரால் தான் என்ன செய்ய முடியும்? இந்த காலத்தில் கூடவா

புரிந்து கொள்ளாமல் பிரச்சினை செய்யும் மனிதர்கள் இருக்கக் கூடும். நாம் பெண்கள் இருந்த

வீட்டில் பாதுகாப்பாகத் தான் தங்கியிருந்தோம் என்று சொன்னால் நம்ப மாட்டார்களா?

பார்த்துக் கொள்வோம்.

“அம்மா. பசிக்கிது”

“பிரியா, நீ போய் குளிச்சிட்டு வா. சாப்பிடு”

“அம்மா. நான் சாப்பிட்டு தூங்கப் போகிறேன். என்னை எழுப்பாதே. ராத்திரி பூராவும் சரியான

தூக்கம் இல்லை”

அவ்வளவு நேரமும் பலவாறான சிந்தனையில் மனது உழன்று கொண்டிருந்த போதும் மகள்

பசிக்கிது என்றதும் மனம் பாகாய் உருக சாப்பாடு எடுத்து வைக்கப் போனாள்.

தன் அறையில் வந்து படுக்கையில் படுத்துக் கிடந்த பிரியாவிற்கு மனதிற்குள் பலவித

யோசனை ஓடிக் கொண்டிருந்தது. தொடக்கவிழா அழைப்பிதழை வங்கியின் மேலாளருக்கும்

அரவிந்தனுக்கும் கொடுத்திருந்தாள் பிரியா. அரவிந்தனும் வந்திருந்தான். முன் வரிசையில்

தான் உட்கார்ந்திருந்தான். அவளுடைய கண்ணியமான நேர்த்தியான ஆடையையும் ஒருவித

ரசனையுடன் பார்த்து விட்டு தான் சென்றிருந்தான்.

நிகழ்ச்சி முழுவதும் பிரியாவுடன் சங்கர் ரமேஷ் பைஜுவைப் பார்த்து மனதிற்குள் என்ன

நினைத்துக் கொண்டானோ! நிகழ்ச்சி முடிந்து சற்றே மழை விட்டு மற்றவர்கள் கிளம்பும் போது

அரவிந்தனும் மற்றவர்களைப் போல பிரியாவிடம் வந்து போய் வருகிறேன் என்று விடைப்

பெற்றுக் கொண்டான்.

என்னடா நாம் கல்யாணம் செய்து கொள்ளப் போகும் பெண் இந்த நேரத்தில் இந்த இடத்தில்

மழை நேரத்தில் மற்ற ஆண்களுடன் தனியாக இருக்கிறாளே, அவளை என்னுடன் வருகிறாயா

என்று ஒரு வார்த்தையும் கேட்கவில்லை. போகட்டும். உன் வேலை முடியும் வரை நான்

உன்னுடன் இருக்கிறேன் என்று சொல்லவும் இல்லை. எப்போதும் போல வெரி மச் அபீசியல்

என்பதைப் போல போய் விட்டானே. அவனும் கூட இருந்திருந்தால் நேற்று இரவு மழைக்கு

சாலையில் மரம் விழுந்திருந்தது தெரிந்திருக்கும். ஆற்றோடு போக முடியாததன் காரணம்

தெரிந்திருக்கும். அந்த வீட்டில் பெண்களும் இருந்தார்கள் தான் அவர்களுடன் தான்

தங்கினேன் என்பதும் புரிந்து அவளுக்கு அனுசரணையாக தன் தாயிடம் பேசியிருந்திருக்க

கூடும்.

எல்லாம் கூடும் தான். ஆனால் அவன் தான் தன்னுடன் அந்த இக்கட்டான நேரத்தில்

இல்லையே. இனி பேசி என்ன பிரயோஜனம்?

இவன் தாய் வேறு வந்து என்னென்ன ஆட்டம் ஆடப் போகிறாளோ என்று தன் தாய்

கவலைப்பட்டது நூற்றுக்கு நூறு உண்மை என்பதைப் புரிந்து மேல்கொண்டு யோசிக்க

பயந்தவளாக கண்களை மூடி தூக்கத்தின் வசப்பட்டாள்.

2 thoughts on “காற்றோடு காற்றாக-6”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *