Skip to content
Home » காற்றோடு காற்றாக-7

காற்றோடு காற்றாக-7

7

நல்ல உறகத்தில் இருந்தாள் பிரியா. எங்கோ தொலை தூரத்தில் யாரோ கத்துவதைப் போல

இருந்தது. நாம் கனவு கொண்டிருக்கிறோமா? அல்லது உண்மையில் யாரேனும்

கத்துகிறார்களா? எழுந்து பார்க்க இயலாமல் படுத்துக் கிடந்தாள் தூக்கமும் அலுப்பும் சேர்ந்து.

பிரியா பிரியா என்று யாரோ சொல்வது கேட்டது. ஊஹூம். எழுந்து கொள்ள முடியவில்லை.

சரி பார்ப்போம். நாம் தேவை என்றால் அம்மாவோ மதுவோ வந்து எழுப்புவார்கள். பார்த்துக்

கொள்ளலாம் என்று புரண்டு படுத்தவள் மீண்டும் உறங்கி விட்டாள்.

அவள் காதில் விழுந்தது பிரமை அல்ல. உண்மை தான். பிரியா மேலே போய் படுத்து அரை

மணி நேரம் தான் ஆகியிருக்கும். வீட்டின் முன்னால் ஒரு இன்னோவா கார் வந்து நின்றது.

நிற்பதற்கு முன்பே அவசர அவசரமாக கதவு திறந்து கொண்டு உள்ளே இருந்து குதிக்காத

குறையாக இறங்கினார் மாரப்பனும் மிருனாளினியும். அரவிந்தன் எப்போதும் போல

இப்போதும் மிகவும் அமைதியாகவே இறங்கி வீட்டின் உள்ளே நடந்து வந்தான்.

அவன் பெற்றோர் இருவரும் பெரும் புயலுக்கான ஆக்ரோஷத்துடன் வீட்டின் உள்ளே வந்து

நின்றார்கள். கார் சத்தம் கேட்டதுமே தேவநாதனும் மாதவியும் வெளியே வந்து எட்டிப்

பார்த்தவர்கள் இவர்களைக் கண்டதும் மிகவும் பவியமாகவே அவர்களை வரவேற்றனர்.

உள்ளுக்குள் பிரியாவைப் பற்றி தான் விசாரிக்க வந்திருக்கின்றனர் என்பது புரிந்த போதும்

அவர்களாகவே பேச்சை ஆரம்பிக்கட்டும் என்று அமைதி காத்தனர். தேவநாதனின் மனதிற்குள்

இவர்களுக்கு என்ன தெரியும்? எவ்வளவு தூரத்திற்கு தெரியும்? யார் இவர்களுக்கு தகவல்

சொல்லியிருக்க கூடும்? என்று யோசனை ஓடிக் கொண்டிருந்தது.

எங்கே? உள்ளே நுழைந்ததுமே ஆரம்பித்தாள் மிருனாளினி. தேவநாதன் சற்று முன் வந்து

“வாங்க சம்பந்தி” என்று வரவேற்றார்.

“நாங்கள் வருவது இருக்கட்டும். பிரியா வந்து விட்டாளா?” மிருனாளினியின் நேரிடை கேள்வி

நச்சென்று நெத்தியடியாக இறங்கியது.

“வந்து விட்டாள். உறங்கிக் கொண்டிருக்கிறாள்” மாதவி மதுவிடம் அக்காவை எழுப்பி விடு

என்று கிசுகிசுத்தாள்.

“நேற்று இரவு முழுவதும் அவள் வீட்டிற்கு வரவில்லை அல்லவா?”

“யார் சொன்னது?” மாதவி தயங்கி தயங்கி கேட்டதே மிருனாளினிக்கு நிச்சயம் ஆயிற்று தான்

கேள்விப்பட்ட செய்தி உண்மை தான் என்று.

“எங்கள் மேல் அக்கறை உள்ளவர்கள் இங்கே இருப்பார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்

மாதவி”

“உட்காருங்கள்” தேவநாதன் மாரப்பரை கேட்டுக் கொண்டார். ஆனால் அவருடைய

பார்வையோ உக்கிரமாக இருந்தது.

கிட்டத்தட்ட ஆழ்ந்த உறக்கத்தின் மடியில் இருந்த பிரியாவிற்கு மது வந்து எழுப்பும் போது

ஒன்றுமே விளங்கவில்லை.”அக்கா உன் மாமியார் குடும்பம் வந்திருக்கு. எழுந்திரு. உன்னை

அம்மா கூப்பிடறாங்க. வாக்கா”

ஒருமாதிரி சமாளித்துக் கொண்டு எழுந்தவள் முகத்தைக் கழுவிக் கொண்டு கீழே இறங்கி

வந்தாள். அவளைப் பார்த்ததும் மீண்டும் மிருனாளினியே கேட்டாள்.”என்ன பிரியா, ராத்திரி நீ

வீட்டுக்கே வரலியாமே”

“ஆமாம்” என்றாள் மொட்டையாக.

“எங்கே தங்கினே?”

“நேத்து நிகழ்ச்சி முடிந்து வரும் போது மழைக்கும் காத்துக்கும் ஒரு பெரிய மரம் அடியோடு

சாய்ந்து சாலையை அடைத்துக் கொண்டு விழுந்து கிடந்தது. அதனால் வர முடியவில்லை”

“சரி, எங்கே தங்கினே?”

“அங்கே பக்கத்திலே ஒரு வீட்டிலே” இவர்கள் என்ன நம்மை இப்படி விசாரணை

செய்கிறார்கள் என்று சிறு எரிச்சல் மனதிற்குள் நமநமவென்று இருந்தது. மாரல் போலிசிங்

செய்கிறார்கள்.

“ஓஹோ”

“காலையில் மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்து சீரானதும் வந்தேன்”

இரண்டு பாக்கெட்டிலும் கையை விட்டுக் கொண்டு பிரியாவையே உறுத்துப் பார்த்துக்

கொண்டு நின்றான் அரவிந்தன்.”இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லாயில்லை”

“எங்க கௌரவம் என்னாவது?” அவ்வளவு நேரமும் வாயை மூடிக் கொண்டிருந்த மாரப்பர்

வார்தைகளை கடித்து துப்பினார்.

“எங்கள் அந்தஸ்திற்கு….ம்…என்ன சொல்வது?”

“உங்களை ரொம்ப வருஷமா தெரியுமே என்று உங்கள் வீட்டில் பெண் எடுக்க நினைத்தோம்.

ஆனால்…”

“உங்களுக்கெல்லாம் கௌரவம் என்பதே இருக்காதா?”

“ஏன் மாதவி, நான் இங்கே வரும் போதெல்லாம் படித்து படித்து சொன்னேன். பெண்

பிள்ளைகளுக்கு இத்தனை சுதந்திரம் கொடுக்கக் கூடாது. தலைக்கு மேல் தூக்கி வைத்து ஆடக்

கூடாது என்று”

“நீ என்ன சொல்றது நான் என்ன கேட்பதுன்னு நெனப்பு”

மாறி மாறி இருவரும் பேசிக் கொண்டே போனார்கள். அந்த இடமே சூடாக இருந்தது. அதை

தணிக்க எண்ணி, “எதிர்பாராமல் நடந்து விட்டது” என்றார் தேவநாதன் மிகவும் பவ்வியமாக.

“தனக்குத் தான் எல்லாம் தெரியும். தன்னை விட்டால் வேறே ஆளே இல்லை என்ற நினைப்பு

தான் இருக்க கூடாது என்பது”

பிரியாவால் அதற்கு மேல் மௌனமாக இருக்க முடியவில்லை. “உங்க மகனும் நேற்று

விழாவிற்கு வந்திருந்தார்”

“ஆமாம். வந்திருந்தேன் தான்”

“என் கூட இருந்திருக்கலாம் இல்லே”

“ஏன்? அது தான் உன் கூட உன் நண்பர்கள் இருந்தார்களே. நான் வேறு வீணாக அங்கே

நிற்பானேன் என்று தான் வந்து விட்டேன்” ஆங்காரமாய் குறுக்கிட்டான் அரவிந்தன்.

“தப்பில்லை. சரியாகத் தான் சொன்னீர்கள். என் நண்பர்கள் தான் என்னுடன் இருந்தார்கள்”

“அதனால் நண்பர்களுடன் இரவில் வெளியே தங்குவியா?” இவளை குற்றம் சொல்லுவதை

மட்டுமே நோக்கமாகக் கொண்டு பேசினாள் மிருனாளினி.

“அதனால் தான் நானும் சொன்னேன். இவரும் என் கூட இருந்திருக்கலாம் என்று”

“ஆமாம், நீ ஊர் ஊராக வேலை வேலைன்னு உன் நண்பர்களுடன் சுற்றுவே. உன் கூடவே

என் பையனும் அலையனுமா?”

“வேண்டாம் பிரியா, அப்படியாவது நீ வேலை பார்க்க வேண்டும் என்றில்லை. நாளைக்கே நீ

வேலையை ராஜினாமா செய்து எழுதிக் கொடுத்து விடு” திட்டவட்டமாக சொன்னாள்

மிருனாளினி.

“வேலையை எழுதிக் கொடுக்கறதாவது? கொடுத்து விட்டு…..ம்……கொடுத்து விட்டு என்ன

செய்வது?”

“ஏன்? என்ன பண்ணனும்? கல்யாணம் செய்து கொண்டு பிள்ளை குட்டிகளைப் பெற்றுக்

கொண்டு குடும்பத்தை பார்த்துக் கொள்வது”

“ஹா அதற்கா நான் இத்தனை படித்தேன்?”

“பொட்டச்சிங்க படிச்சிட்டா வேலைக்குப் போக வேண்டும் என்று ஏதேனும் சட்டம்

இருக்கிறதா என்ன?”

“நீங்கள் படிச்சிருந்தால் தெரியும்?” மது வாய்க்குள் முனகியது மிருனாளினியின் காதில்

விழுந்து விடவே அவள் புறம் திரும்பி “நானும் கல்லூரியில் போய் படித்தவள் தான். இப்போ

வீட்டில் இருந்து குடும்பத்தைப் பார்த்துக் கொள்ளவில்லையா?”

“சரி ஏதோ நடந்தது நடந்து போச்சு. இனி இதைப் போல நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம்”

என்று பவியமாகவே சொன்னார் தேவநாதன்.

மாரப்ப பூபதி தேவனாதனைப் பார்த்து மிகத் தெளிவாக சொன்னார்.”தேவநாதன் உங்கள்

மகள் நாளைக்கே வேலையை எழுதிக் கொடுத்து விடட்டும். அது தான் எங்கள் முடிவு”

மாரப்ப பூபதி குடும்பத்தினர் போய் விட்டிருந்தனர். புயல் அடித்து ஓய்ந்ததைப் போல்

இருந்தது வீடு. ஒருவரும் வாயை திறக்கவில்லை. எங்கே வாயைத் திறந்தால் அடுத்தவர் மேலே

விழுந்து கடித்து குதறி விடுவார்களோ என்ற பயம். தேவநாதனை நினைத்து தான்

எல்லாருக்கும் பயம்.

தேவநாதன் மிகவும் அமைதியாக தன் அறையில் அமர்ந்திருந்தார். அறையின் திரை சீலைகள்

இழுத்து விடப்பட்டிருந்தது. அறையின் உள்ளே விளக்கு பொருத்தப்படாமல் இருட்டாக

இருந்தது. இரவு சாப்பாடு நேரம் கடந்தும் தேவநாதன் அறையை விட்டு வெளியே

வரவில்லை. மது மெல்ல அறைக்குள் எட்டிப் பார்த்தாள். இருட்டுக்குள் போய் அவர் அருகில்

நின்றாள். அப்போதும் அவரிடமிருந்து அசைவில்லை. மெல்ல அவர் தோளின் மீது கையை

வைத்தாள். ஊஹூம். அப்போதும் அசைவில்லை. மெல்ல அசக்கியப்படி “அப்பா” என்று

மெல்ல அழைத்தாள்.

தேவநாதன் என்னும் பொம்மை உயிர் பெற்று அசைந்தது.”உம்”

“சாப்பிட வாங்கப்பா”

“ம்…”

“சாப்பிட வாங்கப்பா” என்றாள் மீண்டும்.

“வேண்டாம்மா. பசிக்கலை”

“ஏனப்பா?”

“இல்ல. வேண்டாம்”

“அவுங்க பேசிட்டு போனதையே நெனச்சிக்கிட்டு இருக்கீங்களா?”

“ம்”

“நாம என்னப்பா பண்றது?”

அவர்களின் பேச்சுக்குரல் கேட்டு மாதவியும் அவள் பின்னாலேயே பிரியாவும் அறையின்

உள்ளே வந்தார்கள். மது அவர் அருகில் இருந்த கட்டிலில் உட்கார்ந்திருந்தாள்.

“சாப்பிட வாங்க” மாதவி தயங்கி சொன்னாள்.

“அப்பாவுக்கு மனசு சரியில்லைம்மா”

“என்ன பண்றது? எதிர்பாராமல் நடந்து விட்டது. அவர்கள் குணம் நமக்கு தெரிந்து போயிற்று.

இனி இது போல நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது தான். வேறு என்ன

பண்ணுவது?” மாதவி தாயாக ஆறுதலாக சொன்னாள்.

“ப்ச். இது இல்லாட்டி இன்னொன்னு. எதுக்கெடுத்தாலும் ஏதாவது சொல்றதுன்னா எப்படி?”

தேவநாதன் சொல்லவே,

“கரெக்ட் அப்பா, இது இல்லாட்டி இன்னொன்னு” என்றாள் மது. ஆனால் தேவநாதனின்

குரலில் இல்லாமல் ஏதோ குறி சொல்பவளைப் போல திடீரென்று உற்சாகமாக. என்ன

என்பதைப் போல மாதவி மதுவைப் பார்க்க, புரிந்து கொண்ட பார்வையாக தேவநாதன்

மதுவைப் பார்த்தார்.

“அப்பா பேசாமல் இந்த கல்யாணத்தை நிறுத்தி விடுவோமா?”

“ம். சரி” ஒற்றை வார்த்தை திடமாக வந்தது தேவநாதனின் வாயில்.

“எது…? எது? ஏ சின்ன சனியனே என்ன சொன்னே?’ எதிரே சாய்ந்து நின்று கொண்டு

இவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த மாதவி பதறியவளாய் மதுவை அடிக்கப்

பாய்ந்தாள்.

அவள் அடியை தன் வலது கையால் தடுத்தவாறே”என்னம்மா சொன்னேன். கல்யாணத்தை

நிறுத்தி விடலாம் என்று சொன்னேன்” என்றாள் மீண்டும் அழுத்தமாக.

“அச்சாநியமாக உளறாதே” படால் என்று மதுவை ஒரு போடு போட்டவள் கணவனைப்

பார்த்து “இந்த சின்ன நாய் பேசுவதை கேட்பீர்களா?” என்றாள் குரல் கம்ம. மனசு ஆறாமல்

மீண்டும் அவளை அடிக்கப் போனாள். அவளை தன் கையால் அணை கட்டிக் கொண்டே

மதுவை இழுத்து தன் பின்னால் விட்டவர் “மாதவி, அவளை ஒன்னும் சொல்லாதே. எனக்குமே

அது தான் மனசுல ஓடிக் கொண்டிருக்கிறது” என்றார். மாதவி ஓய்ந்து போய் கட்டிலில்

உட்கார்ந்தாள். பிரியாவிற்கோ ஆச்சரியம் கண்களில் உட்கார்ந்திருந்தது.

மது எழுந்து போய் மாதவியின் தோளை சுற்றி கையைப் போட்டுக் கொண்டு அவள்

கண்ணுக்குள் ஆழமாகப் பார்த்தாள்.”அம்மா, இங்கே பாரு. என்னைப் பாரு”

“பூபதி குடும்பம் எத்தனைப் பெரியது. இப்போ….நீ இப்படி சொல்றியே?”

“பூபதி குடும்பம் மிகவும் பணக்கார குடும்பம் என்றா நம் அப்பா அங்கே அக்காவை கொடுக்க

நினைத்தார்?”

“இல்லை. அவர்கள் பழைய ராஜ குடும்பம் ஆச்சே. மிருனாளினி நாச்சியர் மாதிரி நம் மகளும்

செல்வாக்கு அதிகாரம் அந்தஸ்து என்று வாழ்வாள் என்று நினைத்து தானே அப்பா

ஆசைப்பட்டார்.”

“ம்” தேவநாதன் ஒரு நீண்ட பெருமூச்சை எடுத்து விட்டார். அதில் அவருடைய ஆசை

நிராசையான கண்ணீராய் கசிந்திருந்தது.

கண்கள் கலங்க அமர்ந்திருந்த தந்தையைபோ பார்த்துக் கொண்டே பெரிய மனுஷியைப்

போல நிதானமாக பேசினாள் மது. “அம்மா, நாம் சில விஷயங்களை தெளிவுப்படுத்திக்

கொள்வோம். சரியா?”

கண்களை துடைத்துக் கொண்டு கணவனைப் பார்த்தாள் மாதவி. அவருமே மதுவின் பேச்சை

ஆழமாக கேட்டுக் கொண்டிருந்தார். “அம்மா, எனக்குத் தெரியும் இந்த கல்யாணத்திற்காக

உங்கள் சக்திக்கு மீறியே அக்காவிற்கு நீங்கள் சீர் செனத்தி வரதட்சனை என்று மனசார

செய்றீங்க. எதுக்கும்மா?”

நிறுத்தியவள் மாதவியின் பதிலான “அவள் சந்தோஷமும் உயர்வும் தானே நமக்கு முக்கியம்”

என்றதை குறுக்கே இடை செருகினாள். “அதை விட அவள் சந்தோஷமாக இருக்கணும். அது

தானே அம்மா எல்லாத்தையும் விட முக்கியம்”

பிரியா தன் தங்கை மது பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தாள். வியப்பாக இருந்தது. இந்த

மது நம்மை விட ரெண்டு வயது சின்னவள், விளையாட்டுப் பிள்ளை என்று எல்லோரும்

நினைத்துக் கொண்டிருந்தவள் எப்படி இப்படி திட்டமும் தெளிவுமாக பேசுகிறாள்.! இவள்

விளையாட்டுப் பெண் அல்ல. எதையும் ஆராய்ந்து அறிந்து சரியாக கணக்கு எடுக்கும்

புத்திசாலிப் பெண். அதற்கும் மேல் தன் மனதில் இருப்பதை தெளிவாகவும் துணிச்சலாகவும்

யாராக இருந்தாலும் சொல்லி விடக் கூடிய சாமர்த்தியசாலி. தனக்கு ஒரு சகோதரன் இல்லை

என்ற குறை இல்லாமல் ஒரு மூத்த சகோதரனைப் போல தனக்காக் பெற்றவர்களிடம்

வாதாடும் அவளை மனதிற்குள் சிலாகித்துக் கொண்டாள் பிரியா. மனதில் அவளுக்கான அன்பு

பெருக்கெடுத்தோடியது.

“இந்த மூன்று மாதமாக நம்மை அதிலும் குறிப்பாக உங்களை அவர்கள் அலட்டின அலட்டலை

பொறுத்துக் கொண்டீர்களே. ஆமாவா? இல்லையா?”

“ஆமாம்” மெல்ல தலையை ஆட்டினாள்.

“ஏன்?”

“ராஜ பரம்பரை. அப்படித் தான் தோரணையாக இருப்பர்கள். அதை எல்லாம் ஒரு

பொருட்டாக கொண்டு குற்றம் காணக் கூடாது என்று தான்”

“நேத்திக்கு அக்காவின் தொடக்கவிழா நிகழ்ச்சிக்கு போயிருந்த அரவிந்தன் என்ன

செய்திருக்கணும்?”

“அதைத் தான் நானும் இத்தனை நேரம் மனசுக்குள்ளே கேட்டுக் கொண்டிருந்தேன் மதும்மா.

கூடவே இருந்து அழைத்துக் கொண்டு வந்திருக்கலாம் இல்ல”

“அதை தான் அக்காவும் கேட்டாள். ஆனால் அதுக்கு அந்த புத்திர சிகாமணி என்ன

சொல்லிச்சு”

“மரியாதை இல்லாமல் பேசக் கூடாது” மாதவி கண்டிப்பானக் குரலில் அதட்டினாள்.

“சாரிம்மா”

“நமக்கு வேண்டாதவர்களாக இருந்தாலும் வயதில் பெரியவர்களை மரியாதை இல்லாமல்

நடத்தக் கூடாது”

“இவ்வளவு பண்பாடு இருக்கும் நீங்கள் எங்களுக்கும் அதை தான் சொல்லி வளர்த்தீர்கள்.

சாரிம்மா”

சரி விடு. இப்ப என்ன செய்வது?”

“ஒன்னு அக்காவோடு கூட இருந்திருக்கணும். இல்லாட்டி அக்காவை கையோடு அழைத்துக்

கொண்டு வந்திருக்கணும்.”

“ஒரு வார்த்தை வறியான்னு கேட்டிருந்தால் நான் சங்கரிடம் எல்லாவற்றையும் ஒப்படைத்து

விட்டு கூடவே வந்திருப்பேன்” முதன் முதலில் வாய் திறந்தாள் பிரியா.

“எவனாவது……..சாரி. யாராவது தான் கட்டிக்கப் போற பொண்ணை இப்படி அம்போன்னு

விட்டுட்டு போவானா? இவனை நம்பி எப்படிம்மா நம் அக்காவை கட்டிக் கொடுப்பது?”

சின்னவளாக இருந்தாலும் மதுவின் கேள்வியில் இருந்த நியாயம் மாதவியின் வாயை

அடைக்க அவள் தன் கணவரைப் பார்த்தாள். அவர் கண்களிலும் மதுவின் கேள்வி தான்

நிழலாடிக் கொண்டிருந்தது.

“வார்த்தையில் கூட மரியாதை இல்லாமல் பேசக் கூடாது என்று எங்களை வளர்த்தீர்கள்.

ஆனால் அந்த அரவிந்தனோ தான் கட்டிக் கொள்ளப் போகும் பெண்ணிற்கு குறைந்தபட்ச

மரியாதைக் கூட கொடுக்காமல் என்ன பேச்சு பேசி விட்டு போனார்கள் பார்த்தியாம்மா”

“மாதவி…” தேவநாதன் நிதானமாக அழைத்தவர் மனதிற்குள் தீர்மானித்து விட்டவராக, ”மது

கேட்பதில் நியாயம் இருக்கு மாதவி. அத்தனையும் உண்மையும் கூட. என் மகள் ராணி மாதிரி

வாழனும் என்பது தான் என் ஆசை கனவு எல்லாம். ஆனால் அதை விட முக்கியம் அவள்

மரியாதையாக நடத்தப்பட வேண்டும் என்பது தான் முக்கியம்.”

“வந்தார்களே. என்ன பேச்சு பேசிட்டு போனார்கள்” கேட்டுக் கொண்டே அப்பாவின் அருகில்

போய் நின்றாள். “அப்பா, உங்களுக்கு தெரியாது. அம்மா எதையும் உங்களிடம்

சொல்வதில்லை. அவர்கள் ஒவ்வொரு முறையும் அம்மாவை போட்டுத் தொனப்பி

எடுப்பார்கள். அக்காவை வளர்த்தது சரியில்லை என்று ரொம்பவே அலட்டுவார்கள்”

“அப்படியா மாதவி”

“ம்”

“ஒருநாளாவது அவர்கள் நம் வீட்டுக்கு வருவதற்கு முன்பு ஒரு போன் பண்ணலாம்

இல்லையா?”

“பண்ண மாட்டார்கள் என்ன?” தேவநாதன் மாதவியைக் கேட்க, அவள் இல்லையென

மறுப்பாக தலையசைத்தாள்.

“உங்களுக்கே தெரியும் அப்பா. இந்த புராஜெக்ட் மத்திய மந்திரிக்கு எத்தனை முக்கியமானது

என்று. திடீல் திடீல் என்று போன் பண்ணி உடனே கிளம்பி வா. மாப்பிள்ளை வீட்டினர்

வந்திருக்கிறார்கள். உன்னைக் கேட்கிறார்கள் என்று இந்த அம்மா பதறுவார்கள். நானும்

கைவேலையை அப்படியே போட்டு விட்டு ஓடி வரும்படியாகி விடும்” என்றாள் பிரியா.

“நாம் திரும்ப ஒரு கேள்வி ஒரே ஒரு கேள்வி கேட்டால் எப்படி இருக்கும்?” மது கொஞ்சம்

ஆங்காரமாகே கேட்டாள். அவள் சொன்னதற்கு ஒப்புதலாக தலையை ஆட்டினார் தேவநாதன்.

“ஆனால் அம்மா அப்படி எல்லாம் பெரியவர்களிடம் மரியாதை இல்லாமல் பேசக் கூடாது

என்று தடுத்து விடுவார்கள்” என்றாள் மது. சொன்னவள் அப்பாவிடம் தொடர்ந்தாள்.”பாவம்

அப்பா இந்த அம்மா. அந்த மிருனாளினி நாச்சியார் வருகிறார்கள் என்றாலே ரொம்ப கிலி

அடிச்சி போயிடுவாங்க. வந்து விட்டு போன பிறகோ காற்றில் அடிப்பட்ட செடி மாதிரி வாடி

வதங்கி போயிடுவாங்க”

“ஏன் இதை எல்லாம் என்னிடம் முன்பே சொல்லவில்லை?”

“எப்படி சொல்வது?உங்களுக்கு இந்த சம்பந்தம் எத்தனை முக்கியம் என்பது தான்

தெரிந்ததாயிற்றே” மாதவி கழிவிரக்கத்துடன் சொன்னாள்.

“அப்பா, புடவை எடுக்கப் போன அன்னைக்கு அந்த அம்மா அக்காவைப் படுத்தின பாடு

இருக்கே…ம்..அப்பா….”

“நல்லவேளையாக இன்றைக்கு இந்த சம்பவம் என் கண் முன் நடந்ததினால் எனக்கு தெரிய

வந்தது. இல்லாட்டி இதையும் என்னிடம் சொல்லியிருந்திருக்க மாட்டாய். இல்லையா மாதவி”

“எங்களையும் உங்களிடம் சொல்ல விட்டிருக்க மாட்டார்கள் அப்பா”

“எனக்கு தெரிய வராது என்ற நினைப்பா?”

“தெரிந்து நீங்கள் கேட்டாலும் இதை சாதாரனாமான விஷயம் என்பதைப் போன்ற ஒரு

தொனியில் மழுப்பி விடுவார்கள்”

“உம் …” என்ற பெருமூச்சுடன் சொன்னார். ”இன்னைக்கு ஒருநாள் பாடே பெரிசா இருக்கே.

எப்படித் தான் நீங்கள் அந்த அம்மாவை சமாளித்தீர்களோ?”

“ஆமாம். ரொம்ப தான் கஷ்டம்”

“ஆரம்பமே இப்படி இருந்தால் நம்மால் கடைசி வரை தாக்குப் பிடிக்க முடியுமா?”

“ரொம்ப கஷ்டம்” மது தான் பெரிய மனுஷி மாதிரி பதில் சொன்னாள். அவள் தலையை

வாஞ்சையுடன் தடவிக் கொடுத்தவர் “மது, கல்யாணத்தை நிறுத்தி விடுவோம்” என்றார்.

“நிச்சயிக்கப்பட்ட கல்யாணத்தை நிறுத்துவது என்றால்….! பூபதி குடும்பம்….! யோசித்துப்

பார்த்தீர்களா?”

“மாதவி ஒருநாள் பிரச்சினையை எதிர்கொள்ள பயந்தோமென்றால் வாழ்நாள் முழுவதும் நம்

பிரியா அங்கே படப்போகும் கஷ்டத்தை பார்க்க நம்மால் முடியுமா?”

முடியாது என்பதாய் மறுத்து தலையை அசைத்தாள் மாதவி. தேவநாதன் மதுவிடம் ”மது,

நிச்சயதார்த்ததிற்கு கொடுத்த துணிமணி, புடவை நகைகளைக் கொண்டு போய்

அவர்களிடமே கொடுத்து விட்டு திருமணம் முறிந்தது என்று சொல்லி விட்டு வந்து விடு”

“அப்பா…..அவர்கள் ஏதேனும் கேட்டால்?”

“எங்கள் மகள் வேலையை விட மாட்டாள். அவளுடைய சந்தோஷம் தான் எங்களுக்கு

முக்கியம் என்று அப்பா சொன்னார். என்று பதில் சொல்லி விடு”

தீர்மானித்து விட்டதனால் தெளிவாக யோசிக்க முடிந்தது அவரால். “மாதவி நான் என்

அண்ணனுக்கு விஷயம் சொல்லி விட்டு வருகிறேன்” என்று போனை எடுத்துக் கொண்டு

மாடிக்குப் போனார் தேவநாதன்.

அங்கே தான் இருந்தாள் பிரியாவும். அன்றைக்கும் அவளைக் கேட்டு அவளுடைய

திருமணத்தை முடிவு செய்யவில்லை அவளுடைய பெற்றோர். இன்றைக்கும் இந்த

திருமணத்தை நிறுத்தி விடலாமா என்று ஒரு வார்த்தைக் கேட்கவில்லை. அன்றைய திருமணம்

அவருடைய கனவென்றால் இன்றைய திருமண நிறுத்தம் என்பது அவருடைய முடிவு.

அவளுடைய திருமணத்தில் அவளுக்கு பங்கும் இல்லை. பாகமும் இல்லை. அரவிந்தனுடன்

திருமணம் என்ற போது மிகப் பெரிய கிளர்ச்சியோ சந்தோஷமோ அவளுக்குள்

ஏற்படவில்லை. தந்தையின் கனவும் சந்தோஷமும் முக்கியம் என்ற ஒற்றை தாரக மந்திரம்

மட்டும் தான் இத்தனை நாளும் மிருனாளினியின் அக்கப்போரை சகித்துக் கொள்ள வைத்தது

பிரியாவை.

ஆனால்……!

இந்த திருமணத்தை நிறுத்த சொல்லி தேவநாதன் பூபதி குடும்பத்தினரிடம் வலியுறுத்திய இந்த

நிமிடம் ஏனோ அவளுக்கு மனதிற்குள் ஒரு சிறு நிம்மதி பரவுவதை தடுக்க முடியவில்லை

என்பது தான் நிஜம்.

2 thoughts on “காற்றோடு காற்றாக-7”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *