Skip to content
Home » காற்றோடு காற்றாக-8

காற்றோடு காற்றாக-8

அத்தியாயம்-8


டீப்பாயின் மேல் கிடந்த பட்டுப்புடவை நகைகளின் மீது பார்வையைப் பதித்து

அமர்ந்திருந்தார்கள் மூவரும். இன்னும் பிரமை தீரவில்லை.

அவர்கள் நினைத்தது என்ன? இப்போது நடந்திருப்பது என்ன?

சொந்த ஊரில் திருமணத்தில் பிரியாவைப் பார்த்ததும், அவள் பேரழகு தான் முதலில்

கண்களில் பட்டது. யார் வீட்டுப் பெண் என்று விசாரித்ததில் அவள் தேவநாதனின் மகள்

என்று தெரிய வந்தது.

சிறுவயது முதல் தங்களுடைய பள்ளியில் ஆசிரியராக பணிப்புரிந்த ராமநாதனின் மக்களான

கஜநாதனுக்கும் தேவநாதனுக்கும் தங்களிடம் உள்ள விசுவாசமும், பிரமிப்பும் பூபதி

குடும்பத்தினர் அறிந்தது.

முன்பு போல பழைய சொத்துக்கள் இல்லாவிட்டாலும் அதே செல்வாக்கு மிடுக்கு, அதிகாரம்,

டாம்பீகம் படாடோபம் வெட்டி பந்தா வீண் செலவு இத்தனை கல்யாண குணங்களும்

குறைந்தபாடில்லை. பழைய பெருங்காய டப்பா போல “பழைய நினைப்பு தான் பேராண்டி”

என்று போய் கொண்டிருந்தது அவர்கள் வாழ்க்கை.

இது அரசல் புரசலாக நெருங்கிய உறவினர்கள் வட்டத்தில் தெரிய வர ஆணழகனான

மகனுக்கு பெண் கொடுக்க யாருமே தயங்கிக் கொண்டிருந்தனர். என்ன தான் வங்கி

அதிகாரியாக அவன் பணியாற்றிய போதும் அவன் சம்பாதிப்பது அவர்களின் அதீத

செலவுகளுக்கே கட்டி வராது என்பது உறவினர்களின் நினைப்பு. இவர்கள் பெண் கேட்டு

விட்டிருந்த ஒன்றிரண்டு ஜமீன் வாரிசுகளும் தட்டிக் கழித்தே பதில் சொல்லி விட்டார்கள்.

இந்த நிலையில் தான் பிரியாவை திருமணம் செய்ய நினைத்து அதற்கு தேவநாதனும்

சம்மதித்தது. ஏனெனில் பிரியாவின் படிப்பு, உத்தியோகம், சம்பாத்தியம், தகப்பனின்

பின்புலம், அவள் மூலம் வரக் கூடிய நகைகள் சொத்துக்கள், பூபதி குடும்பத்தினரின்

ஆசையை அசைத்துப் பார்த்தது என்னவோ நிஜம். போதாக்குறைக்கு பழைய மிடுக்கு

குறையாமல் தோரணை மாறாமல் இவர்களின் வீண் கௌரவத்திற்கு குந்தகம் விளையாமல்

தேவாநாதன் தங்கள் காலின் கீழ் இருப்பார் என்று எண்ணம் கொண்டனர் பூபதி தம்பதியினர்.

அதற்கு செய்ய வேண்டியது என்னவென்றால் அவ்வப்போது அவர்களிடம் தங்கள்

அதிகாரத்தை செலுத்துவதன் மூலம், தங்கள் மேன்மையை நிலைநாட்டிக் கொள்ளலாம். அதே

நேரத்தில் பிரியாவின் குடுமத்தினர் தங்களிடம் பயமும் பணிவும் கொண்டிருப்பர். தங்கள்

கையை மீறி போக மாட்டார்கள்.

இந்த நிலையில் தான் அன்றைய தொடக்கவிழாவும் அதனைத் தொடர்ந்து பிரியா இரவில்

வெளியே தங்கும்படி நேரந்ததும் அல்வாவைப் போல பூபதி குடும்பத்தினருக்கு சிக்கிக்

கொண்டது.

இதை காரணம் காட்டி தேவநாதன் குடும்பத்தினரை ஒரு பிடி பிடித்து விட்டால் அவர்கள்

நிலை குலைந்து போய் விடுவார்கள். எங்கே மணமகன் வீட்டார் கோபித்துக் கொண்டு

திருமணத்தை நிறுத்தி விடுவார்களோ என்று அஞ்சுவார்கள். பதறுவார்கள். இவர்களும்

போனால் போகட்டும் என்று விட்டுக் கொடுப்பதைப் போல விட்டுக் கொடுத்து பின்பு

திருமணத்தை நடத்தினால் பிரியாவும் காலமெல்லாம் தங்களிடம் நன்றியுடன் இருப்பாள்.

ஒருவேளை நம் அரட்டல் உருட்டலுக்குப் பயந்து பிரியா வேலையை விட்டு விடுகிறேன்

என்று சொல்லி விடக் கூடும். பின்பு அவள் உத்தியோகத்தினால் கிடைக்க கூடிய சம்பாத்தியம்

போய் விடும். அதனால் தான் அவள் சொல்வதற்கு முந்திக் கொண்டு தாங்களாகவே பிரியா

வேலையை விட வேண்டும் என்று சொல்லி பயம் காட்டியது. எப்போதுமே ஒரு வேலையை

செய்யாதே என்று சொன்னால் அதை செய்தே தீருவேன் என்ற எதிர்மறை வினையாற்றும்

உளவியல் ரீதியான அணுகுமுறை தான் வேலையை விட்டு விட சொன்னது.

மூவரும் தேவநாதனின் வீட்டில் போய் ஒரு ஆட்டம் ஆடி விட்டு வந்ததும் அவர்கள்

எதிர்பார்த்தது தேவநாதனும் மாதவியும் வருவார்கள். அல்லது தேவநாதனும் கஜநாதனும்

வருவார்கள். வந்து கெஞ்சுவார்கள். இன்னும் திருமணத்திற்கு பதினனைந்து தினங்களே பாக்கி

இருக்கும் இந்த நெருக்கடியான நிலையில் அவர்களுக்கும் வேறு வழி கிடையாது. பெண்ணின்

நிச்சயம் முடிந்து திருமணம் தடைப்பட்டால் அது பெண் வீட்டாருக்கே பெரும்

தலைகுனிவாயிற்றே. நாம் சற்றே இறங்கி வந்து பெரிய மனது வைத்து சரி. சரி. போகிறது.

இனி இது போல நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி நல்லபடியாக

திருமணத்தை நடத்தி வைத்தால் அண்ணன் தம்பி குடும்பத்தினர் எந்நாளும் நம்மிடம் நன்றி

கடன்பட்டிருப்பார்கள். இது தான் அவர்களின் திட்டம்.

ஆனாலும் கொஞ்சம் அதிகப்படியாகத் தான் ஆடி விட்டோமோ என்ற சிறு உறுத்தல் இருக்கத்

தான் செய்தது. ஆனாலும் பிரியாவிற்கு நண்பர்கள் கொஞ்சம் அதிகம் தான். அம்மா என்ற

அரவிந்தனின் சிணுங்கல் அதை விடப் பெரியது அல்லவா!

ஆனால் நடந்தது என்ன?

யாரை எந்த குடும்பத்தை ஆயுசுக்கும் தங்கள் காலுக்கு கீழ் வைத்துக் கொள்ள வேண்டும் என்று

திட்டமிட்டார்களோ அவர்கள், அந்த அற்ப மானிட பதர்கள், கீழுக்கும் கீழான புழுக்கள்,

தங்களை அண்டிப் பிழைத்த கூட்டம், இப்போது முந்திக் கொண்டு திருமணத்தை நிறுத்தி

விட்டதுகள்.

அழைப்பிதழ் அடித்து ஊருக்கே விநியோகித்தாயிற்று. திருமண ஏற்பாடுகள் ஜரூராக நடந்து

கொண்டிருக்கிறது. தங்கள் மகனுக்கு பெண் கொடுக்க மறுத்த மற்ற பாளையக்காரர்களுக்கு

எதிரில் மற்றவர்கள் மூக்கில் விரல் வைக்க வேண்டி ஆடம்பரமாக செலவழித்த பணம்

அத்தனையும் நட்டமாயிற்று. கௌரவமும் போயிற்று. பிரியா குடும்பத்தினருக்கு ஏதேனும்

பரம்பரை கௌரவம் இருந்தால் தானே அது போயிற்றே என்று கவலைப்பட. இவர்கள்

அப்படியா..! இனி தங்கள் மகனுக்கு மீண்டும் பெண் தேடும் படலத்தை தொடங்க வேண்டும்.

தங்கள் இனத்தில் பெண் தேடி திருமணம் செய்து ..ஏ…அப்பா….! நினைக்கவே மலைப்பாக

இருந்தது.

தாங்கள் அளவிற்கதிகமாக அவர்களை நசுக்க நினைத்தோம். தெற்கே அடிக்கும் காற்று திசை

மாறிப் போச்சு என்ற பழமொழிக்கு நாம் தான் நல்ல உதாரணம் என்ற குற்ற உணர்வு

கொஞ்சமும் இல்லை அவர்களுக்கு. மாறாக, எப்படி நம் சம்பந்தத்தை அவர்கள் நிறுத்தலாம்

என்று ஆங்காரம் தான் எழுந்தது அவர்களுக்கு.

இனி என்ன செய்வது? ஒரு நிமிடம் கூட யோசிக்கவில்லை அவர்கள். மது இவர்கள் வீட்டில்

கொண்டு வந்து புடவையையும் நகையையும் கொடுத்து விட்டு வீடு போய் சேர்ந்திருக்க

மாட்டாள். அவளுக்கு முன்னதாக இவர்கள் போய் அங்கே நின்றார்கள்.

துவார பாலகர்கள் போல நீண்ட பெருத்த ஆகிருதி கோபத்தில் தடதடவென்று ஆட,

வெடித்துக் கொண்டு கிளம்பிய ஆங்காரத்துடன் கூச்சலிட்டார் ராஜா மாரப்ப பூபதி.

“தேவநாதன் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?”

“என்ன?” மிகவும் அமைதியாக கேட்டார் அவர்.

“உங்க இஷ்டத்துக்கு கல்யாணத்தை நிறுத்தி விட்டீங்க.?”

“வேறு என்ன செய்ய சொல்றீங்க மிஸ்டர். பூபதி?”

எப்போதும் தன் முன் பணிவும் பவியமுமாக பேசும் தேவநாதனா இது? அவருடைய படிப்பும்

அது தரக்கூடிய பிரகாசமும் ஒரு நிமிடம் பூபதியை அசர வைத்தது. பேர் சொல்லிக்

கூப்பிடுவாரா இவர்? அவ்வளவு தூரத்திற்கு ஆகிப் போச்சா? இருக்கட்டும். இருக்கட்டும்.

அமைதி. அமைதி. காரியம் பெருசா? வீரியம் பெருசா? இப்போது நமக்கு காரியம் தான்

ஆகணும். பூபதி கொஞ்சம் அமைதியாக இரு என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டார்

பூபதி. திருமணம் மட்டும் நல்லபடியாக நடக்கட்டும். அதுவரை கொஞ்சம் பொறுமை.

“சரி விடுங்க, தேவநாதன். நம் குடும்ப கௌரவம் முக்கியமாச்சே. அதற்கு ஒரு குந்துமணி

அளவற்கு கூட சுணக்கம் நேரிடக் கூடாதே என்று கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு விட்டோம்.”

“அதனால் என்ன! பரவாயில்லை. எங்களால் உங்க கௌரவத்திற்கு எந்த பங்கமும் வர

வேண்டாம்”

“சரி விடுங்க சம்பந்தி. இந்த பேச்சை இத்தோடு விட்டு விட்டு மேற்கொண்டு ஆக

வேண்டியதை பார்ப்போம்”

“மேற்கொண்டு ஆவதற்கு ஒன்றுமில்லை”

“என்ன சம்பந்தி, திரும்ப திரும்ப அறுத்து விட மாதிரியே பேசறீங்க”

சமபந்தியா! இது வரை பூபதி தன்னை அப்படி அழைத்தது இல்லை என்ற எண்ணம் வந்தது

மனதில். அதே கசப்புடன் சொன்னார். “மாதிரி இல்லை. அறுத்தாச்சு”

“அவ்வளவு தானா?”

‘அவ்வளவு தான்”

“ம்…….” உறுமினார் பூபதி. “தேவநாதன் இந்த கல்யாணம் இப்போது நின்று போனால் எங்கள்

கௌரவம் போயிடும்”

“அது எங்கள் பிரச்சினை இல்லை”

மிருனாளினி சம்பந்தமேயில்லாமல் திடீரென்று குறுக்கே பாய்ந்து “இந்த திருமணத்திற்காக

எவ்வளவு செலவு செய்திருக்கிறோம் தெரியுமா?” என்றாள்.

தேவநாதன் அவளை நேருக்கு நேர் ஒரு பார்வை பார்த்து விட்டு ஒன்றும் பேசாமல் வீட்டின்

உள்ளே போய் செக் புக்கை எடுத்து வந்து ரெண்டு லட்ச ரூபாயிற்கு எழுதி கையெழுத்திட்டு

கிழித்து அவர் கையில் கொடுத்தார். உண்மையில் நிச்சயதார்த்தை விமரிசையாக நடத்தியதில்

அவருக்குத் தான் செலவு அதிகம் ஆகியிருந்தது. அத்தனையும் இப்போது வீண் செலவு.

அதுவரை பேசாமல் இருந்த அரவிந்தன் எழுந்து வந்து பிரியாவின் புஜத்தை தொட்டு

தன்புறமாக திருப்பினான்.”பிரியா நீ சொல்லு. நிச்சயிக்கப்பட்ட நம் திருமணம் நிற்கப்

போவுது. நீ சொல்லு. உங்க அப்பா கிட்ட சொல்லு”

அவன் தன்னை தொட்டது அருவருப்பாயிருந்தது. பதில் சொல்லாமல் தோளைக்

குலுக்கினாள். மீண்டும் அவளை தன்புறமாக இழுத்து “சொல்லு பிரியா” என்றான்.

அவன் கையிலிருந்து வேகமாக விடுவித்துக் கொண்டவள் “என்ன சொல்ல?” என்றாள்.

“நம் கல்யாணத்தை நிறுத்த வேண்டாம் என்று சொல் பிரியா. நீ சொன்னால் உங்க அப்பா

கேட்பார் பிரியா”

“எப்பவுமே எங்கள் அப்பா சொல்வது மட்டும் தான் இந்த வீட்டின் வேத வாக்கு. அவர்

சொல்லும் ஒரு வார்த்தை தான் இந்த வீட்டின் தேவகட்டளை” சொன்னவளின் புலிப்பார்வை

அவனை எட்டியே நிறுத்தியது.

கட்டுக்கோப்பான நல்ல பண்பாடான குடும்பம் தங்கள் கை மீறி போய் விட்டது என்பது

அவர்களுக்கு நன்கு புரிந்தது. மனதை வேதனை அழுத்தியது. அந்த நிலையிலும் தாழ்ந்து

போவது அவர்கள் இயல்பல்லவே! அந்த ஆற்றாமையும் அது தந்த அவமானமும் அதன்

விளைவான கோபமும் அவர்களை மென்மேலும் தப்புத் தப்பாக பேச வைத்தது. முதல்

கோணல் முற்றும் கோணல் தானே.

“தேவநாதன் புலிவால் பிடித்த கோவிந்தன் கதையானது இனி உங்கள் கதை. வீணாக

என்னைப் பகைத்துக் கொண்டு விட்டீர்கள். பார்ப்போம். உங்கள் மகள்களை, பெரியவள்

மட்டுமல்ல சின்னவள் ரெண்டு பேரையும் தான் சொல்றேன். இனி யாருக்கு கட்டிக்

கொடுக்கறீங்கன்னு பார்ப்போம். பின் விளைவு தெரியாமல் விளையாடி வினையை இழுத்து

விட்டுக் கொண்டு விட்டீர்கள்” அவருடைய அப்பட்டமான கறுவல் அடிவயிற்றில் இருந்து

ஆங்காரமாக வெளிப்படவே தேவநாதன் அவரையேப் பார்த்துக் கொண்டு நின்றார்.

“நம்ம இனம், நம்ம ஊர் மட்டுமல்ல இந்த பக்கத்தில் வேறு இனத்தில் கூட நீங்கள் உங்கள்

பெண்களை கல்யாணம் செய்து கொடுத்து விட முடியாது. இரண்டில் ஒன்று பார்த்து

விடுவோம்”

“வீணா எதுக்கு கஷ்டப்படனும் மாதவி. ஆண்களுக்கு அவர்கள் கோப தாபம் தான் முக்கியம்.

நீங்கள் பெண் அல்லவா! அதுவும் தாய். கல்யாணம் நிச்சயிக்கப்பட்டு நின்று போனால் இனி

வேறு யார் உங்கள் பெண்ணைக் கட்ட முன் வருவார்கள். யோசியுங்கள் மாதவி” என்று

மிருனாளினியும் தன் பங்கிற்கு மாதவியை மறைமுகமாக மிரட்டவே செய்தாள்.

“பிரியா நாம் ரெண்டு பேரும் ஒரே வளாகத்தில் தான் இருக்கிறோம். கல்யாணம் நின்னதற்கு நீ

என்ன காரணம் சொல்ல முடியும்?’ அரவிந்தன் வேறு பக்கவாட்டில் இடை செருகினான்.

“நீங்க சொன்ன எல்லாவற்றையும் நானும் என் குடும்பமும் யோசித்துப் பார்த்திருக்க

மாட்டோம் என் நிறா நினைத்தீர்கள் பூபதி?”

“ம்..அது தான் சொல்கிறேன். திட்டமிட்டப்படி கல்யாணத்தை நடத்துவது தான் நமக்கு நல்லது”

எகத்தாளமாக சொன்னார் பூபதி.

“எல்லாவற்றையும் யோசித்தவன் இனி என் மகள்களை என்ன செய்யணும்? என்று

யோசித்திருக்க மாட்டேனா?”

“கடைசியாக என்ன சொல்றீங்க?”

“நல்லபடியா கிளம்புங்கன்னு சொல்றேன்”

“இது தான் உங்கள் முடிவா?”

பதில் சொல்லவில்லை தேவநாதன். கொஞ்ச நேரம் பொறுத்துப் பார்த்தவர்கள்

கிளம்பினார்கள். வாசல் கதவருகில் சென்ற பூபதி தேவனாதனை உறுத்துப் பார்த்தார்.

”பார்த்துக்கலாம்”

அவர்கள் சென்ற பின்பு எங்கே மீண்டும் வந்து விடுவார்களோ என்று பயந்தவளாக மது ஓடி

சென்று கதவை மூடி தாழ்ப்பாள் போட்டாள்.

“என்னப்பா இப்படி பேசிட்டு போறாங்க?” மதுவின் கேள்விக்கு பதில் சொல்லாமல் ஏதோ

நினைவாக இருந்தார் தேவநாதன்.

சிறுவயதில் தான் அவர்களைக் கண்டு அதிசயித்ததும் பிரமித்ததும் முற்றிலும் மறந்து

போயிற்று. பூபதி குடும்பம் தங்களை மிகவும் தரம் தாழ்த்தி நடத்தியது கூட அவருக்கு ஒரு

பொருட்டாக இல்லை. ஒரே தாரக மந்திரம் நம் மகள் ராணி மாதிரி இருப்பாள் என்பது தான்.

ஆனால் அந்த மகளுக்கே மரியாதை இல்லை என்றான பின்பு கொஞ்சம் கூட தயங்கவில்லை

இந்த சம்பந்தத்தை முறிக்க. ஆனால் அதற்குப் பிறகும் பூபதி குடும்பம் தங்களை

வெளிப்படையா மிரட்டி விட்டு சென்றதில் மனசு கொந்தளித்தது.

“அப்பா……” நினைவுகளை உதறி தலையைக் உலுக்கி கொண்டவர் “எத்தனை

ஆபத்தானவர்கள்.” என்றார்.

“என்ன பண்ணுவார்களோ?” என்று சற்றே திகிலுடன் சொன்னாள் மாதவி.

“என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். பார்த்துக்கலாம்”

“என்னங்க இப்படி சொல்றீங்க?” அழமாட்டாத குறையாக சொன்னவளை

“இவர்களிடம் நம் மகளைக் கொடுத்து ஆய்சுக்கும் அவள் சந்தோஷத்தைக் கெடுத்து நம்

நிம்மதியையும் தொலைத்திருப்போம். நம் பெற்றோர்களும் முன்னோர்களும் செய்த

புண்ணியம் நம் மகள்இவர்களிடம் தப்பினாள்”

“நிஜம்ப்பா” மது சொல்ல

“மாமாவிடம் ஒரு வார்த்தை ஆலோசித்திருக்கலாம்” என்று ஆதரவிற்கு கஜனாதனை

பற்றியவளாய்.

“அண்ணன் என்ன தெரியுமா சொன்னாரு?” என்று கேட்டு விட்டு அவரே அதற்கு பதிலும்

சொன்னார். ”நல்லவேளை தம்பி. இந்த பாதகர்களிடம் தப்பினோம். பிரியா அவர்களுக்கு

அடங்கிப் போக மறுத்தால் அவளை கொலை செய்யக் கூட அஞ்சமாட்டார்கள் இந்த

படுபாவிகள்” என்று.

“அப்படியா சொன்னாரு?”

“ம்.. நல் நெறியும், பண்பும், சுடர்விடும் அறிவும் அமைதியான அழகும் தெளிந்த நல் புத்தியும்

கொண்டு வைரமாய் மின்னும் நம் மகள் இந்த கொடியவர்களிடம் சிக்கி சீரழிந்து

போயிருந்திருப்பாள் என்று சொன்னார் அண்ணன்.”

கஜநாதனும் அதே போல பேசவே அது தான் உண்மையோ என்ற எண்ணம் தோன்றியது

மாதவிக்கு.

“திருமணம் நின்று போயிற்றே என்ற கவலையை விட அப்பாடா நம் மகள் நல்லவேளையாக

தப்பினாளே அது போதும் என்று இருக்கிறது மாதவி” உண்மையான நிம்மதி அவர் முகத்தில்

இருக்கவே மாதவியும் அத்தோடு அந்த பேச்சை விட்டாள்.

ஆனால் மாதவியின் மனதிற்குள் இத்தனை தூரம் நம்மை அசிங்கப்படுத்தி விட்டுப்

போயிருக்கிறார்களே போதாக்குறைக்கு பயமுறுத்தியிருக்கிறார்களே. மணமேடை வரை வந்து

கல்யாணம் நின்று போனால் திரும்ப நல்லபடி திருமணம் நடப்பது கஷ்டம். அவர்களோ

உள்ளூரில் செல்வாக்கு உள்ளவர்கள். அவர்களை மீறி யார் பிரியாவை திருமணம்

செய்யக்கூடும். சின்ன மகள் திருமணத்தையும் சீரழித்து விடுவதாக சவால் விட்டு

இருக்கிறார்கள். அய்யோ அம்மா….! அப்படி ஏதும் நடந்து விட்டால் இரு பெண்களும்

வாழ்நாள் முழுவதும் தனியாக நின்று விடுவார்களே!

இப்போதைக்கு பிரியாவிற்கு குறிப்பிட்ட சுப முகூர்த்தத்தில் திருமணம் நடந்து விட்டால்

இப்போதைய இந்த வேகம் சுருதி குறைந்து விடும். சின்னவளுக்கும் காலப்போக்கில்

நல்லபடியாக திருமணம் நடந்து விடும். என்ன செய்வது?

“அவர்களை வர சொல்லுங்க. நேர்ல பேசினால் தான் தெளிவாயிருக்கும்” என்று கணவரிடம்

சொன்ன மாதவியின் குரலில் தெளிவின்மை இருந்தது. தயக்கமும் பயமும் அவளை

ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது என்னவோ நிஜம்.

எல்லாவற்றுக்கும் மேலாக பிரியா….! இது எல்லாம் யாருக்கோ நடக்கும் சம்பவங்கள்.

இதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதைப் போன்று பார்வையில் வெறுமையாக

இருந்தாள். பார்வையைத் தாண்டி மனத்திலும் தான் அந்த வெறுமை பரவியிருந்தது.

2 thoughts on “காற்றோடு காற்றாக-8”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *