Skip to content
Home » காற்றோடு காற்றாக-9

காற்றோடு காற்றாக-9

9

ஊரில் இருந்து வந்திறங்கிய கஜநாதனின் குடும்பமும் கவலையோடு அமர்ந்திருந்தார்கள்

தேவநாதனின் வீட்டின் முன்னறையில். முதல் நாள் இரவு பிரயாணத்தில் உறங்கவும் இல்லை.

மனதின் கவலை முகத்தில் அலுப்பாக அமர்ந்திருந்தது. நேற்று தேவநாதன் சொன்னதை

இன்று மது மீண்டும் விளக்கமாக சொன்னாள். நடுநடுவே வழக்கம் போல மாதவியின் பயம்

கலந்த கேள்விகள்.

கேட்டு முடித்து விட்டு கஜநாதன் தம்பியைப் பார்த்தார். ”தம்பி, இவர்கள் எத்தனை

ஆபத்தானவர்கள்? யப்பா…” என்றார்.

“நீங்க தானே சின்ன வயசுல அவுங்க இப்படி அவுங்க அப்படின்னு ரொம்ப சொல்வீங்கப்பா”

ரிஷியின் கேள்வியை மதுவின் கண்கள் அமோதித்தது.

“உண்மை தான். சின்ன வயசுல இவுங்களைப் பார்த்து பிரமித்துக் கிடந்தது உண்மை தான்.

ஆனால் இவர்களுக்கு இப்படியும் ஒரு முகம் இருக்குன்னு எங்களுக்கே இப்போது தானே

தெரிகிறது” என்றார் தேவநாதன்.

“விடு தம்பி. நல்லவேளை பிரியாவைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்திருருந்தால் அவள்

மட்டுமல்ல நாமும் அவுங்களுக்கு காலத்துக்கும் அடிமை தான்”

“ஆமாம் அண்ணா, பிரியா மட்டுமல்ல நாமும் தப்பினோம்”

“இப்போது என்ன செய்வது?” ரிஷியின் கேள்வி எல்லோரையும் ஒருவர் முகத்தை ஒருவர்

பார்த்துக் கொள்ளும்படி செய்தது.

“ம்” கஜநாதன் யோசனையாக இருந்தார்.

“மாமா, கல்யாணம் குறித்த நாளில் நடக்கணும் மாமா” என்று கண்கள் கலங்கினாள் மாதவி.

“எப்படிம்மா? பூபதியிடம் தம்பி கல்யாணத்தை நிறுத்த சொல்லிட்டானே”

“சும்மாயிரு மாதவி. ஏதோ நாம கும்பிடுற தெய்வம் தான் அந்த கடைசி நிமிஷத்திலே அவுங்க

சுயரூபத்தைக் காட்டிக் கொடுத்திருக்கு. திரும்ப ஆரம்பிக்காதே” விமலா திடப்படுத்தினாள்

மாதவியை.

“பூபதி குடும்பத்தை சொல்லவில்லை”

“அப்புறம்?”

“எப்படியாவது அன்னைக்கு என் மகளுக்கு கல்யாணம் ஆகணும்” என்றாள் மீண்டும்.

“இல்லாட்டா மணவறை வந்து திருமணம் நின்று போனால் அப்புறம் அத்தனை லேசில்

மீண்டும் திருமணம் நடப்பது கொஞ்சம் கஷ்டம்” என்று மாதவியுடன் சேர்ந்து இப்போது

ஆமாம் என்று விமலாச்சியும் கவலைப்பட்டாள்.

“மாமா. நீங்களாவது என்னை புரிந்து கொள்ளுங்களேன் ப்ளீஸ்”

“ஆமாங்க. மாதவியின் கவலை நியாயமானது தான்”

“என்னம்மா நீயும் சின்னம்மாவைப் போல பேசறே? உடனே கல்யாணம் பண்ணும்னா

எப்படிம்மா?”

“ரிஷி உனக்கு உள்ளூர்காரவங்களைப் பத்தி தெரியாது”

“என்ன தெரியாது? எல்லாம் தெரியும். பொறாமை பிடிச்ச ஜனங்கள்”

“ஏற்கனவே நாம அண்ணன் தம்பி குடும்பம் ரொம்ப ஒத்துமையா இருக்கோம்னு எப்பவுமே

பொறாமை தான்”

“நிறைய பேரு நம்ம பிரியாவைக் கேட்டு நாம அவுங்களுக்குப் பிடி கொடுத்ததில்லை”

“இப்போது இந்த விஷயம் கேள்விப்பட்டால் வெறும் வாயை மெல்றவங்களுக்கு அவல் கிடச்ச

மாதிரி ஆகிப் போகும்”

“அதுலயும் நம்ம சுந்தரி இருக்காளே” என்று அவளை நினைத்த மாத்திரத்தில் விமலாச்சிக்கு

அழாத குறை தான்.

“ஏனம்மா?” என்று அவள் அருகில் போய் ஆதுரத்துடன் கேட்டாள் மது.

கஜனாதனின் ஒன்று விட்ட சகோதரி. பெரியப்பா மகள். உள்ளுரிலே கட்டிக் கொடுத்து

கணவர் பிள்ளையோடு வசித்து வருபவள். “உனக்கு அவளைப் பற்றி முழுசா தெரியாது” அவள்

நினைவில் சிலிர்த்துக் கொண்டாள் விமலா.

தெரிந்தது. சுந்தரி எப்படிப்பட்டவள் என்று சொல்லாமே எல்லாருக்கும் புரிந்தது. ஆம்.

விடிந்ததும் விடியாததுமாக கஜநாதனின் வீட்டுக்கு அப்பேர்ப்பட்ட சுந்தரி வந்து நின்ற போது

தான் அவள் எப்படிப்பட்டவள் என்பது மட்டுமன்றி பூபதி குடும்பத்தினர் எத்துனை

ஆபத்தானவர்கள் என்றும் புரிந்தது. அன்றைய விடியலை விளக்கமாக சொன்னாள் விமலா.

ஊர்வம்பு பேசுவதில் அதீத ஆர்வமுடைய சுந்தரவல்லி சொன்ன விஷயத்தின் சாராம்சம் தான்

இது.

“கஜநாதன் தேவநாதனின் பவியத்தை நடிப்பு என்று புரியாமே உண்மை என்று நம்பி

அவர்கள் வீட்டில் பெண் எடுக்க சம்மதித்து விட்டோம். நம் தரத்துக்கும் அந்தஸ்திற்கும்

பரம்பரைக்கும் கொஞ்சம் கூட ஏற்ற இடம் இல்லை என்று பெரியவர் சூரப்பர் எத்தனையோ

தடுத்தும் கூட கேளாமல் பிடிவாதமாக பிரியாவைத் தான் கட்டனும் என்ற ஒற்றை முடிவில்

நிலையாக நின்றோம். ஏனெனில் மத்திய தர குடும்பம், பெற்றோர்கள் பேராசிரியர்களாக

பணியில் இருக்கின்றனர் பெண்ணை பண்பாட்டுடன் வளர்த்திருப்பார்கள் என்ற பேராவலில்

இந்த கல்யாணத்துக்கு கேட்டதே”

“மிருனாளினி நாச்சியாரின் சகோதரிக்கும் அவர்கள் குடும்பத்திற்கும் சுத்தமாக பிரியாவைப்

பிடிக்கவில்லை. சுமாரான அழகு. இருந்தாலும் இருவரும் ஒரே வளாகத்தில்

பணியாற்றுகிறார்களே போக்குவரத்திற்கு சுலபமாக இருக்கும் என்று தான் மிருனாளினி

அவர்களை சமாதானம் செய்தது”

“ஆனால் இப்போது தான் பூபதி குடும்பத்தினருக்கு ஒரு விஷயம் தெரிய வந்தது. பிரியா

தன்னுடன் வேலை செய்யும் ஒருவனுடன் நன்றாக ஊரை சுற்றுகிறாள் என்று நேரிலே பார்த்து

விட்ட தங்கள் மகன், இதுவரை பிரியா எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டுப்

போகட்டும். இனிமேல் அது போல இருக்க கூடாது என்று கண்டித்ததாகவும் முடியாவிட்டால்

வேலையைக் கூட விட்டு விடும்படி சொன்னதாகவும் வீட்டில் இருந்து கணவனையும்

குடும்பத்தையும் கவனித்துக் கொள்ளும்படி சொன்னதாகவும், ஊரில் அரண்மனை உள்ளது

அதில் நாங்கள் இருந்து கொள்வோம் என்று தன்மையாகவே சொல்லியிருக்கிறார்கள்.

அதற்கு பிரியாவும் அவள் தங்கை, அது தான் அந்த சின்ன ராட்சசி இருக்கிறதே அதுவும்

பேசிய பேச்சுக்கள் இருக்கிறதே அப்பப்பா, ஏன்னா பேச்சு! தாங்க முடியவில்லை.

வாய் மேலேயே ரெண்டு போடாமல் இவர்களைப் பேச விட்டு வேடிக்கைப் பார்த்துக்

கொண்டு நிற்கிறார்கள் பெற்றவர்கள்.

இவை எல்லாவற்றையும் விட பெண்களைப் பெற்ற தகப்பன் இருக்கிறானே, இவனெல்லாம்

படித்தவன் பேராசிரியராக வேலை பார்ப்பவன் மரியாதை தெரிந்தவனாக இருப்பான் என்று

நம்பியது தப்பு. பொட்டச்சிங்களை அடக்கி வைக்காமல் என் மகள் சந்தோஷம் தான் எனக்கு

முக்கியம் என்கின்றான்.

தாயோ மகா பஜாரி. அந்த வீட்டில் அவள் வைத்தது தான் சட்டம். அந்த வீட்டு ஆம்பிள்ளை

அவள் காலுக்கு கீழே. பெண்களை அதிகம் செல்லம் கொடுத்து கெடுத்து குட்டிச்

சுவராக்கியிருக்கிறாள். அந்த வீட்ல நண்டு சிண்டெல்லாம் நாட்டாமை செய்துங்க.

இறுதியாக அப்பாடா நல்லவேளையாக நாங்கள் இந்த கல்யாணத்தை நிறுத்தி விட்டோம்.

மொத்தத்தில் அந்த கடவுள் தான் எங்களைக் காப்பாற்றினது. தப்பித்தோமடா சாமி

என்கின்றார்கள்”

“ஏன்ப்பா, அந்த அத்தையைஅவ்வளவு தூரம் பேச விட்டுக் கேட்டுக் கொண்டிருந்தீர்களா?”

தூத்துக்குடியில் இருந்து இங்கே வந்திருந்த சின்னவன் ரிஷிக்கு கோபத்தில் கண்கள்

சிவந்திருந்தது.

“வேறு என்னப்பா செய்வது? அவுங்க சொன்னதை மட்டும் சொன்னாளா? இல்லை கூடவே

ரெண்டு பிட்டு சேர்த்துப் போட்டு சொன்னாளான்னு யாருக்கு தெரியும்?”

“ஏன் வேறு என்ன சொன்னாள்?’ தேவநாதன் கேட்டார்.

“நீங்க சொன்னீங்களாம் பிரியாவை உறவுல தான் கொடுக்கப் போறோம்னு” விமலா

தேவனாதனிடம் சொன்னாள்.

“நாம சொல்லாததையும் சேர்த்து சொல்லுவாள்”

“அதோடு விட்டாளா? அந்த நரி”

“ம்”

“எப்படி அண்ணா வேறு ஒருத்தனோடு சுற்றிக் கொண்டிருந்த பெண்ணை என் மகனுக்கு

எடுக்க முடியும் என்று கேட்டாளே ஒரு கேள்வி”

“எது/? எது? “ பதறித் தான் போனார்கள் பிரியாவின் பெற்றோர்.

“ஆமாம் தம்பி எனக்கும் இப்படித் தான் கோபம் வந்தது” என்றவர் “ஏன் வல்லி நாங்கள் வந்து

உன் கிட்ட கேட்டோமா உன் மகனுக்கு எங்கள் பொண்ணை எடு என்று”

“நன்றாகக் கொடுத்தார் பெரியப்பா”

“உடனே பம்மிட்டாளே. அது இல்லண்ணே.சுத்து வட்டாரத்திலே நான் மட்டும் தானே

உங்களுக்கு சொந்தம்னு இருப்பது என்றாள் வல்லி”

“அதுக்குன்னு?

“என் கிட்ட தானே கல்யாண வயசுல பையன் இருக்கான்”

“ஏன் இப்படி வம்புக்கு அலையுது அந்த அத்தை?”

“என்னிடம் பையன் இருக்கிறான் என்று நமக்கு நினைப்பூட்டுகிறாளாம்”

“போயும் போயும் இவள் மகனுக்குத் தானா நான் இத்தனை அருமை பெருமையா பெண்ணைப்

பெத்து வளைத்து வெச்சிருக்கேன்?”

“நாள் பூராவும் குடிச்சிட்டு வேலை வெட்டிக்குப் போகாமல் ஊரை சுத்திக்கிட்டு

பொம்பிள்ளைங்க கிட்ட வம்பு பண்ணிக்கிட்டு ஆத்தாவை அடிச்சி காசு பிடிங்கிகிட்டு திரியற

நாய்க்கு நம்ம பொண்ணு வேணுமா?” அண்ணனாக கேட்டான் அப்போது தான் ஊரிலிருந்து

வந்து இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அண்ணன் மகேஷ்.

“எல்லாம் கணக்கு அண்ணா. இவன் சம்பாதிக்காட்டி என்ன? வேலைக்குப் போய் சம்பாதிக்கும்

பிரியாவைக் கட்டி வைத்து விட்டால் அத்தைக்கு தொல்லை விட்டது இல்லையா?”

‘அதுக்கு..?”

“விடிஞ்சதும் விடியாததுமாக வந்து நின்று விட்டார்கள் அந்த அத்தை”

“கல்யாணம் நின்னு போச்சுன்னு அவுங்களுக்கு யார் சொன்னது?”

“வேறு யார்? மிருனாளினி தான் கூப்பிட்டு சொன்னாங்களாம்”

“சரி தான். மிருனாளினி சொன்னதும் இங்கே ஓடி வந்து விஷயத்தை சொன்னதைப் போலவும்

ஆயிற்று. பிரியாவுக்கு வேறு யாரையும் யோசிக்கும் முன்பு தன் மகனை ஞாபகப்படுத்தியதை

போலவும் ஆயிற்று”

“வெரி க்ளவர்” மது ஆச்சரியப்பட்டுக் கொண்டாள்.

“யப்பா, சுந்தரவல்லியை நெனச்சா……ஷ்…அப்படா!”

“ஏன் பெரியம்மா இத்தனை பயப்படறீங்க?”

‘கரப்பான் பூச்சியைப் பார்த்தால் பயப்படுவோமா? அதைப் போலத் தான் இந்த வல்லி”

“பாவம் அக்கா நீங்க. நான் வருஷத்துக்கு ஒருமுறை தான் வருவேன். அவ்வப்போது ரெண்டு

நாள் வந்துட்டு போயிடுவேன். நீங்க தான் உள்ளூரிலே இருந்து கிட்டு அவகிட்ட அவஸ்தைப்

படுவது”

“இத்தனைக்கும் நம் சொந்த நாத்தனார் இல்ல மாதவி அவள். நம்ம மாமனாரின் அண்ணன்

மகள். அதுக்கே அவ அலட்டற அலட்டல் இருக்கே”

“பெரியப்பா ஒன்னும் சொல்ல மாட்டாரா பெரியம்மா?”

“அவருக்கும் தெரியும் மது. ஆனாலும் என்ன செய்ய? வீட்டுக்கு அவள் ஒருத்தி தானே பெண்

பிள்ளை. தங்கச்சி வேறே. கொஞ்சம் பாசம் தான் அண்ணன்மார்கள் இருவருக்கும்”

“மது, அம்மா இப்படி சாதாரணமா சொல்றாங்களேன்னு பாக்கிறியா? அத்தை சரியான

அடாவடி, திமிர்த்தனம் ஜாஸ்தி. போதாக்குறைக்கு இப்போது பிரியாவை தன் மகனுக்கு

கட்டிடனும்னு பேராசை வேற”

“உனக்கு அவுங்களை நல்லா தெரியுது இல்லண்ணா”

“நானும் ராஜாவும் ஒண்ணா படிச்சவங்க தானே. சின்ன வயசிலேயே சோம்பேறி அவன்”

என்றான் ரிஷி.

“நல்லவேளை நம்ம பிரியாவை இவுங்க வீட்ல கொடுக்கலை”என்றாள் மாதவி.

“வாணலிக்கு தப்பி அடுப்புக் குழிக்குள்ள விழுத மாதிரி ஆகிடும்” என்றாள் விமலாச்சி.

“கடவுள் ஒரு முறை பிரியாவைக் காப்பாற்றி விட்டார். இதோ இந்த இடரையும் நல்லபடியாக

தாண்டி விடட்டும்”

“கடவுள் பிரியாவுக்கு நல்லதே செய்வார்” என்று அவள் தலையை ஆதுரத்துடன் தடவிக்

கொடுத்தார் கஜநாதன்.

“இந்த முகூர்த்தத்திலேயே பிரியாவுக்கு திருமணத்தை நடத்தி விட வேண்டும்” என்று முதலில்

ஆரம்பித்த இடத்திற்கே வந்து நின்றாள் மாதவி.

“ஆமாங்க” என்றாள் விமலாச்சி.

“ம்…” கொஞ்ச நேரம் யோசித்து விட்டு “ஏன் தம்பி, நம்ம சின்ன தாத்தாவின் பேரன் நம்ம

பங்காளி அண்ணன் குபேரன் மகன் தனசேகருக்கு கேட்கலாமா?”

“கேட்கலாம் அப்பா” என்று அவசரமாக இடை மறித்தான் மகேஷ்.

“பையன் நல்ல பையனா மகேஷ்?”

“ஆமாம் சித்தப்பா. ரொம்ப நல்ல பையன். அவுங்க குடும்பமும் ரொம்ப தன்மையானவங்க”

“கேட்டு பார்ப்போமா அண்ணா”

“இல்லடா தம்பி. இந்த பூபதி குடும்பத்தினர் உள்ளூருக்குள்ள என்னென்ன சொல்லி

வெச்சிருக்காங்களோ? நாம போய் அவசரமா திருமணத்திற்கு கேட்டால் பூபதி வீட்டினர்

சொன்ன அவதூறை நம்பி வேறொரு பையனுடன் சுற்றிக் கொண்டிருந்தவளை அவசர

அவசரமாக நம்ம தலையில் கட்டிடப் பார்க்கிறார்கள் என்று எண்ணக் கூடும். அது தான்

யோசிக்கிறேன்”

“அப்படியானால் என்ன தான் பண்ணுவது?”.

“கொஞ்ச நாளைக்கு இந்த பிரச்சினையை ஆறப் போடுவோம்”

“அது தான் சரி” என்றான் மகேஷ்.

“பெரியண்ணா ஒரு விஷயத்தை மறந்துட்டு பேசறீங்க”

“சொல்லு”

“அக்காவை நெனச்சிப் பாத்திங்களா?”

“ஏன் அக்காவுக்கு என்ன?”

“பிரியா நீ அந்த அரவிந்தனை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று

நினைக்கிறாயா?” கேள்வி மகேஷுடையது. ஆனால் பதிலுக்காக வீட்டினர் மொத்தமும்

காத்திருந்தார்கள்.

“சொல்லு பிரியா? கல்யாணத்தை நிறுத்தினதாலே உனக்கு கஷ்டமா?” கஜாநாதன் கேட்டார்.

“சொல்லு பிரியா, உனக்கு இந்த கல்யாணத்தை நடத்தனும் என்றால் இப்போதே பூபதியிடம்

பேசுகிறோம்” என்றார் தேவநாதன்.

“நான் ஒன்றும் சொல்லவில்லை அப்பா”

“சரியான பதில் சொல்லும்மா?”

“உங்கள் இஷ்டம் அப்பா”

“அப்புறம் என்ன மது?’

“பெரியப்பா எதிர்த்து பேசுவதாக தயவு செய்து நினைத்து விடாதீர்கள்”

“இல்லை பாப்பா. தைரியமா சொல்லு. நாலு பேர் வெளியாட்கள் நம் வீட்டை பத்தி பேசுவதை

விட நமக்குள்ள பல விஷயங்களையும் அலசி ஆராய்ந்து பார்த்து முடிவெடுக்கணும். அதில்

இளைஞர்கள் நீங்களும் கலந்து கொண்டு தர்கித்து முடிவெடுப்பது தான் நல்லது. அதிலும் உன்

அக்காவை பத்தி உனக்கு தான் நல்லா தெரியும். சொல்லு பாப்பா”

“தேங்க்ஸ் பெரியப்பா. ஒரே ஒரு விஷயம் தான் என்னை உறுத்துது”

“எதுவாக இருந்தாலும் தைரியமாக சொல்லு”

“அக்காவுக்கு யாரோடு கல்யாணம் நிச்சயம் ஆச்சோ அவனும், யாருடன் அவளை இணைத்து

பேசினார்களோ அதனால் இந்த கல்யாணமும் நின்று போனதோ அவனும் அக்காவுடன் ஒரே

வளாகத்தில் தான் பணியாற்றுகிறார்கள்”

மது சொல்லி முடிக்கவும் எல்லோரும் திரும்பி பிரியாவைப் பார்த்தார்கள்.

“அக்காவுக்கு எப்படி இருக்கும். யோசிங்க பெரியப்பா”

எதிர்பாராத தாக்குதலுக்கு ஆளானவளைப் போல அமர்ந்திருந்தாள் பிரியா. அவளைப் பார்த்த

கஜநாதனின் மனசு மிகவும் இளகிப் போயிற்று. பாவம் இந்த பெண். நம் ஆசை பாரம்பரியம்

கனவு என்றெல்லாம் சொல்லி அரவிந்தனை கட்டிக் கொள்ள சம்மதித்தாள் இவள். ஆனால்

இப்போதோ தேவையில்லாத அபவாதம் ஒருபுறம், இது எப்படி ஆகுமோ என்ற திகில்

மறுபுறம், நான் உங்களைக் கல்யாணம் கேட்டேனா? என்ற பார்வையுடன்

உட்கார்ந்திருந்தவளைக் கண்டதும் பெற்றவருக்கு சங்கடமாக இருந்தது. அப்பாக்களுக்கு

மனம் பாகாய் உருகியது. அந்த இடமே கனத்த மௌனத்தில் அடர்ந்திருந்தது.

சட்டென்று மௌனத்தைக் கலைத்தாள் மாதவி.”பேசாமல் அந்த பையன் சங்கருக்கே நம்ம

பிரியாவைக் கட்டிக் கொடுத்து விடுவோம்”

எல்லாரும் திகைத்து தான் போனார்கள். ஆனால் விமாலாச்சி மட்டும்” அது தான் சரி” என்று

உடனே ஒப்புக் கொண்டாள்.

தன்னைக் கற்பழித்தவனையே தேடிச் சென்று திருமணம் புரியும் புதியபாதை திரைப்படத்தின்

கதாநாயகியின் மனோபாவம் தான் அவளுக்கும்.

கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாகிப் போனது மதுவுக்கு. நாம் அக்காவின் நிலையை

நினைத்துப் பார்த்தால் அது இப்படி பூமராங் ஆகி பிரியாவிடமே வந்து நிற்கும் என்று அவள்

எண்ணவில்லை. அக்கா என்ன சொல்வாளோ என்று அவள் முகத்தையேப் பார்த்துக்

கொண்டிருந்தாள் மது.

“பிரியா நீ என்னம்மா சொல்றே?” என்று தேவநாதன் கேட்டப் போது ஏனோ முதல் தடவை

அப்பா நம்மை இதைப் போல கேட்கவில்லையே என்று கழிவிரக்கமாகிப் போயிற்று

அவளுக்கு.

என்ன பதில் சொல்வாள் அவள்?

அவளை யோசிக்க விட்டு விட்டு எல்லோரும் அங்கிருந்து நகர்ந்தனர்.

அவளுக்கு யோசிக்க வேண்டியிருந்தது.

அதுவும் சங்கரை பற்றி தீவிரமாக யோசிக்க வேண்டியிருக்கிறது.

2 thoughts on “காற்றோடு காற்றாக-9”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *