Skip to content
Home » கொல்லிப்பாவை அத்தியாயம் – 2

கொல்லிப்பாவை அத்தியாயம் – 2

அத்தியாயம் 2

மணியரசும் சௌந்தர்யாவும் ஒரு சோபாவில் அமர்ந்திருக்க, ஒற்றை சோபா ஒன்றில் அவஸ்தையாக அமர்ந்திருந்தாள் பிரத்தியங்கரா. அவளுக்கு எதிரே தற்போது ஊரிலே மிகவும் பிரபலமாக உள்ள சோதிடர் ஒருவர் அமர்ந்திருந்தார்.

பிரத்தியங்கரா கார்த்திக் இருவரின் ஜாதகத்தை நீண்ட நேரமாகவே ஆராய்ந்து கொண்டிருந்தார் சோதிடர்‌. பின்னர் தலையை தூக்கி, மணியரசுவிடம், “உங்க பொண்ணு ஜாதகமும் பையன் ஜாதகமும் அமோகமா பொருந்தி இருக்கு. பத்துக்கு ஒன்பது பொருத்தம் இருக்கு. தாராளமா உங்க பொண்ணை கட்டி குடுக்கலாம்.” என்று சொன்னதும் தான், பிரத்தியங்கராவால் நன்றாகவே மூச்சு விட முடிந்தது.

திருமணத்திற்கு தடை இல்லை என்று சொன்னதும் முகம் விகசிக்க அமர்ந்திருந்தவள், அடுத்து சோதிடர் சொன்னதை கேட்டு கடுப்பின் உட்சிக்கே சென்றாள்.

“ஆனா…” என்று இழுத்தார் சோதிடர்.

“எதுவா இருந்தாலும் பரவால சொல்லுங்க சாமி…” என்று ஊக்கினான் மணியரசு.

‘இப்பொழுது என்ன சொல்ல போகிறாரோ?’ என்ற பதட்டத்தோடு அமர்ந்திருந்தாள் பிரத்தியங்கரா.

“உங்க பொண்ணுக்கு இன்னும் ஒரு ஆறு மாச கால அளவுல ஒரு பெரிய கண்டம் காத்திருக்கு!” என்று மணியரசுவின் தலையில் குண்டை போட்டார் அந்த சோதிடர்.

“என்ன சொல்லுறீங்க சாமி?!” என்று பதறினர் மணியரசுவும் சௌந்தயார்வும்.

“உங்களுக்கு இது தெரியாதா? இதுக்கு முன்ன பாத்த ஜோசியருங்க யாரும் சொல்லலையா?” என்று கேட்டார் அந்த சோதிடர்.

மனைவியை சங்கடமாய் ஒரு முறை பார்த்துவிட்டு, “பொண்ணு பொறந்தப்போ ஜாதகம் எழுதினதோட சரிங்க சாமி. அடுத்து அவளுக்கு ஜாதகம் பாக்க வேண்டிய தேவை வரலை. அதனால நாங்க அதை பத்தி யோசிக்கவே இல்லை. இப்ப தான் கல்யாணப் பேச்சு எடுக்கவும் ஜாதகம் பாக்குறோம்.” என்றார் மணியரசு.

“பொண்ணு பூப்படைஞ்சப்போ புதுசா ஒன்னு எழுதுவாங்களே… அப்ப கூட பாக்கலையா?” என்று கேட்டார் சோதிடர்.

மணியரசுவும் சௌந்தர்யாவும் இல்லை என்று சொல்லி முழிக்க, சங்கடத்தில் நெளிந்தாள் பிரத்தியங்கரா. அவளுக்கு இது போன்ற பேச்சுகள் எல்லாம் புதிது.

“ஓஓஓ… அப்படிங்களா?” என்ற சோதிடர், “இருங்க இன்னும் ஒரு முறை நான் ஜாதகத்தை பாக்குறேன்.” என்றார். இம்முறை முன்பை விட சற்றே நேரம் எடுத்து அவளின் ஜாதகத்தை ஆராய்ந்தார் சோதிடர்.

“இப்போ நான் சொன்ன அந்த கண்டம் உங்க மகளுக்கு வரவும் செய்யலாம். அதே சமயம் வராமலும் போகலாம்.” என்றார் சோதிடர் கொஞ்சம் யோசனையோடு.

“குழப்பறீங்களே ஜோசியரே…? ஒன்னும் புரியலையே?” என்று கேட்டார் மணியரசு.

“உங்க பொண்ணோடோ ஜாதக கட்டம் அப்படி இருக்குங்க ஐயா. ஒரு நேரம் பாத்தா உங்க பொண்ணுக்கு மிக பெரிய ஆபத்து வர்றா போல தெரியுது. ஒரு நேரம் பார்த்தா சுத்த ஜாதகமாட்டம் இருக்கு. எனக்கே கொஞ்சம் புரியாம தான் இருக்கு!” என்றார் சோதிடர்.

“என்னங்க சாமி நீங்களே இப்படி செல்லலாமா?” என்று பயந்து போய் சௌந்தர்யா கேட்டார்.

“நம்ம கையில எதுவுமே இல்லையே மா. எல்லாமே நம்மை படைச்ச இறைவன் கையில தானே இருக்கு! உங்க பொண்ணு ஜாதகத்தை பாக்குறப்போ,‌ உங்க குலதெய்வம் ரொம்ப உக்கிரமானதா இருக்கும்னு நினைக்கிறேன்.” என்றார் சோதிடர்.

“அப்படி எங்க தாத்தா சொல்லி கேள்வி பட்டுருக்கேன்.” என்றார் மணியரசு.

“நீங்க உங்க குலதெய்வத்தை கும்பிட்டதே இல்லையா?” என்று சற்றே அதிர்ச்சியான குரலில் கேட்டார் அந்த சோதிடர்.

“இல்லைங்க சாமி…” என்றார் மணியரசு சங்கடமாக.

“அது எவ்வளவு பெரிய தப்பு தெரியுமாங்க ஐயா? குலதெய்வத்தை கும்பிடாம விட்டா குலமே நாசமா போயிடும்!” என்று பயமுறுத்தினார் சோதிடர்.

இதையெல்லாம் கேட்க கேட்க பிரத்தியங்கராவிற்கு எங்காவது சென்று தலையை இடித்துக் கொள்ளலாம் போல இருந்தது. ஏதோ திருமணத்திற்கு தான் ஜாதகத்தை பார்க்கிறார்கள்; ஊரில் அனைவரும் வழக்கமாக செய்வது தானே என்று தான் அமர்ந்திருந்தாள் பிரத்தியங்கரா. ஆனால் அதற்கு மேல் சோதிடர் சொன்னதெல்லாம் அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதுவரை வராத ஆபத்து தான் இன்னும் ஆறு மாதத்தில் வந்துவிட போகிறதா என்று நினைத்துக் கொண்டாள். தன் தந்தையை ஏமாற்றி பணம் வாங்குவதற்காகவே அந்த சோதிடர் அப்படி பேசுவதாக எண்ணினாள்.

“எங்க தாத்தா காலத்துலையே எங்க குடும்பம் சென்னைக்கு வந்து செட்டில் ஆகிட்டாங்க சாமி. முதல்ல எங்க தாத்தா குலதெய்வ வழிபாட்டுக்கு போயிட்டு வந்துட்டு தான் இருந்தாரு. அப்பறம் அவருக்கு உடம்பு முடியாம படுத்த படுக்கை ஆன பின்னாடி எல்லாமே விட்டு போச்சுனு எங்க பாட்டி சொல்லுவாங்க.” என்றார் மணியரசு.

“உங்க குல தெய்வம் என்னனாச்சும் தெரியுங்களா?” என்று கேட்டார் சோதிடர்.

“கொல்லிமலையில இருக்க எட்டுகை அம்மன் தான் எங்க குல தெய்வம்னு பாட்டி சொல்லியிருக்காங்க.” என்றார் மணியரசு.

“கொல்லிமலையே ஒரு வினோதமான மலை. இன்னமும் அங்க சித்தர்கள் உலாவறதா மக்கள் நம்புறாங்க. அவ்வளவு ஏன்? நானே அதை நம்புறேன். அதை காவல் காக்குற சக்தி வாய்ந்த கொல்லிப்பாவையா உங்க குல தெய்வம்?! தப்பு பண்ணிட்டீங்களே ஐயா! அந்த மாதிரி உக்கிரமான தெய்வத்தை வழிபடாம பாதியிலேயே நிறுத்த கூடாது. நீங்க மூனு தலைமுறையா குல தெய்வத்தையே வழி படாமா விட்டுருக்கீங்க. அதனால கூட உங்க பொண்ணுக்கு ஆபத்து வரலாம். நீங்க ஒன்னு பண்ணுங்க. குடும்பத்தோட எட்டுக்கை அம்மன் கோவிலுக்கு போயி பொங்கல் வச்சி வேண்டிக்கோங்க. அதுமட்டும் இல்லாம உங்க பொண்ணை ஒரு மண்டலத்துக்கு தினமும் எட்டுக்கை அம்மனுக்கு விளக்கு போட சொல்லுங்க. பிரச்சனை எதுவும் இல்லாம எல்லாமே சுமூகமா முடிய வாய்ப்பிருக்கு!” என்று கடைசியாக பரிகாரம் போல ஏதோ சொல்லி மணியரசு மற்றும் சௌந்தர்யாவின் வயிற்றில் பாலை வார்த்தார் சோதிடர்.

“அப்ப நான் போயிட்டு வர்றேங்க…” என்று சோதிடர் எழுந்துக் கொள்ள, பூஜை அறையில் வைத்திருந்த பழத்தட்டை எடுத்து வந்தார் சௌந்தர்யா. அதில் சோதிடருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை வைத்து கொடுத்தார் மணியரசு.

சோதிடர் வெளியே செல்லும் வரை பல்லை கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் பிரத்தியங்கரா.

“அப்பா…” என்று கத்தினாள் பிரத்தியங்கரா.

“பிரத்து… அப்பா முன்னாடி இப்படியா கத்துவ? என்ன‌ பழக்கம் இது?” என்று குரலை உயர்த்தினார் சௌந்தர்யா.

“விடு சௌந்தர்யா… சின்ன பிள்ளை தானே…” என்றார்‌ மணியரசு.

“அந்த சின்ன பிள்ளை தான் யாரையோ காதலிச்சு, இப்ப கல்யாணம் வரைக்கும் வந்திருக்கு.” என்று சௌந்தர்யா நொடித்துக் கொள்ள, பிரத்தியங்கராவிற்கு எதுவோ இதயத்தை துளைத்த உணர்வு.

“என்னடாம்மா?” என்று பரிவோடு மணியரசு கேட்க, கண்கள் கலங்கும் போல் இருந்ததால், “ஒன்னுமில்லப்பா… தெரியாம கூப்பிட்டான். சாரி.” என்றவளின் குரல் ஒடுங்கிப் போய் ஒலித்தது.

“பாரு நீ பேசுன பேச்சுல பிள்ளையோட குரலே உள்ளுக்க போச்சு…” என்று வருந்தினார் மணியரசு.

“பிள்ளையாம் பிள்ளை சரியான தொல்லை.” என்று‌ முணுமுணுத்தார் சௌந்தர்யா.

வீட்டிற்கு ஒரு பிள்ளை, அதுவும் பெண் பிள்ளை என்பதால் அதீத செல்லத்துடனே வளர்ந்தவள் பிரத்தியங்கரா. வீட்டிற்கு வெளியில் கூட இது போல சுடுசொல்லை அவள் கேட்டதில்லை. எல்லா இடத்திலுமே கொஞ்சம் ஸ்பெஷலாய் இருந்து விட்ட காரணத்தினால், பெற்ற ‌அன்னையே ஒன்று சொல்லும் பொழுது சுருக்கென்கிறது.

“அவ கிடக்காம்மா. நீ போயி நல்லா ரெஸ்ட் எடு. நான் கொஞ்சம் சம்பந்தி வீட்டுல பேசிட்டு வர்றேன்.” என்றார் மணியரசு.

“சரிங்க ப்பா…” என்றவள் தனதறைக்கு சென்றாள்.

மனதிற்குள் எதுவோ ஒன்று உருண்டுக் கொண்டு அவளை அலைக்கழித்து பயமுறுத்திக் கொண்டே இருந்தது. ஆனால் அது என்னவென்று தான் அவளுக்கு புரியவில்லை. யோசனைகளிலே உழன்றுக் கொண்டே இருப்பவளுக்கு காலமும் நேரமும் விரைந்து செல்வது கண்ணிலும் கருத்திலும் படவில்லை.

இரவு வந்தும் மனம் ஒரு நிலையில் இல்லாமலே இருக்க, மொட்டை மாடியில் சற்று நேரம் காற்றாட நடந்து விட்டு வந்தாள் பிரத்தியங்கரா. இரவின் தனிமையும், குளிர்ந்த காற்றும், தோட்டத்து பூக்களின் வாசமும் என அந்த நேரம் மிக ரம்மியமாக இருந்தது. எதை பற்றியும் சிந்திக்காமல் சிறிது நேரம் அங்கேயே அவள் அமர்ந்து விட, மனம் சற்றே சமன்பட்டது. கொஞ்சமே கொஞ்சம் உற்சாகமாய் இருந்தது போலவும் இருந்தது.

மணி பத்தை தொடும் நேரம், கீழிருந்து சௌந்தர்யா குரல் கொடுத்த பின்பு தான் இறங்கி வந்தாள் பிரத்தியங்கரா.

“என்னமா இன்னைக்கு போயி இவ்வளவு நேரம் மாடில இருந்துருக்க?” என்று மணியரசு சாதாரணம் போல வினவினார்.

முன்பென்றால் மணியரசு இப்படி கேட்கும் பொழுது, மனதில் உள்ளதை எல்லாம் கொட்டி விடுவாள்; ஆனால், இப்பொழுது எல்லாமே வேறு விதமாக தோன்றுகிறது அவளுக்கு. என்னமோ மணியரசுவின் கிடுக்கு பிடியில் சிக்கிக் கொண்டது போல.

“கொஞ்சம் தலை வலிக்கற‌ மாதிரி இருந்துச்சேன்னு மாடிக்கு போனேன் ப்பா. ப்ரெஸ் ஏர் நல்லா இருக்கவும் அப்படி உக்காந்துட்டேன்.” முழு பொய்யும் அல்லாது முழு உண்மையும் அல்லாது சொன்னாள் பிரத்தியங்கரா.

“சரி டா… ரொம்ப நேரம் முழிச்சிருக்காம போயி சீக்கிரமா தூங்கு.” என்று மணியரசு சொல்ல, புன்னகையுடன் தலையாட்டிவிட்டு அறைக்குள் நுழைந்தாள்.

படுக்க போகும் முன்பு, அலைபேசியை எடுத்து, ஏதேனும் தகவல் வந்துள்ளதா என்று பரிசோதித்தாள் பிரத்தியங்கரா. கார்த்திக்கிடம் இருந்து 13 அழைப்புகள் வந்திருந்தன. அதை பார்த்ததுமே முகம் சுருங்கி போனது பிரத்தியங்கராவிற்கு.

கொஞ்ச நேரம் ரிலாக்ஸாக இருந்துவிட்டு வரலாம் என்று பிரத்தியங்கரா அலைபேசியை அறையிலே வைத்துவிட்டு சென்றிருந்தாள். இப்பொழுது பார்த்தால், கார்த்திக்கிடம் இருந்து இத்தனை அழைப்புகள் வந்திருந்தது. 

கார்த்திக்கை நினைத்த மாத்திரம் மனதிற்குள் ஒரு பயம் உருண்டது பிரத்தியங்கராவிற்கு.

9 thoughts on “கொல்லிப்பாவை அத்தியாயம் – 2”

  1. Avatar

    எப்பொழுதும் ஆழ மனதிற்கு தெரியும் எதுவும் தப்பிதமாய் நடக்கும் என்றால் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *