அத்தியாயம் 6
“பெரியப்பா…” என பூபதி ஆரம்பிக்க,
“ஒரு சாமியாடி உடம்புல உயிர் இருக்க வரை வனபத்ரகாளி வேற ஒரு உடம்புல இறங்க மாட்டா. ஆனா அன்னைக்கு உன் உடம்புல வந்து இறங்கிருக்கான்னா, அடுத்த சாமியாடியா அந்த தெய்வமே உன்னை தான் பூபதி தேர்ந்தெடுத்துருக்கு! இந்த குடுப்பினை வேற யாருக்குமே கிடைக்காது பூபதி. அதை வேண்டாம்னு நீ ஒதுக்க கூடாது.” என்றார் மார்த்தாண்டம்.
மார்த்தாண்டத்தின் ஆகிருதியான உடலமைப்பும் கம்பீர குரலும் பூபதியை மறுத்து பேச விடவில்லை.
“சரி பூபதி நீ வீட்டுக்கு போ. நான் கொஞ்ச நேரம் இங்க இருந்துட்டு வர்றேன்.” என்றார் மார்த்தாண்டம்.
பூபதி விட்டால் போதுமென அங்கிருந்து சென்றுவிட்டான்.
ஆழமான நீர்நிலையையே பார்த்துக் கொண்டிருந்தார் மார்த்தாண்டம்.
மார்த்தாண்டாம் பூபதியிடம் சொன்னது போல, சாமியாடி குறி சொல்லுபவர்களின் உயிர் உடலில் இருந்து பிரியும் நொடி வரை, அவர்களின் குலதெய்வமான வனபத்திர காளி அவர்களை விட்டு நீங்க மாட்டாள் என்பது ஐதீகம். மார்த்தாண்டத்தின் தாத்தா இறக்கும் பொழுது வரை கூட அவர் தான் சாமியாடி குறி சொன்னார். அவருக்கு பின்னால், வனபத்திரகாளி மார்த்தாண்டத்தின் உடலுக்குள் நுழைந்து விட்டாள். மார்த்தாண்டத்தின் தந்தைக்கோ, சிற்றப்பன்களுக்கோ மாமன்மார்களுக்கோ எவருக்குமே கிடைக்காத அரிய வாய்ப்பு அது!
மார்த்தாண்டம் உயிரோடு இருக்கும் பொழுதே வனபத்திரகாளி, பூபதியின் உடலில் வந்து இறங்கியது என்பது அபாயத்தை குறிப்பதாகும். மார்த்தாண்டத்தை விட்டு வனபத்திரகாளி வேறு உடலுக்கு செல்ல தயாராக இருக்கிறாள். பிரச்சினை அதுவல்ல.
மார்த்தாண்டம் எத்தனையோ வீரியமிக்க ஏவல்களையும் கட்டுகளையும் முறியடித்து உள்ளார். குட்டி சாத்தான்களையும் மோகினிகளையும் விரட்டி அடித்து உள்ளார். இவைகளை ஏவி விட்டவர்கள் எல்லாம் மார்த்தாண்டத்தின் மீது கடும் கோபத்தில் உள்ளனர். இதுவரை மார்த்தாண்டத்தின் உயிரை அவைகளிடம் இருந்து காத்தது வனபத்திரகாளியின் அருள் ஒன்றே! அவள் உறைந்திருக்கும் உடலை எவராலும் ஒன்றும் செய்ய முடியாது; விதிக்கப்பட்ட மரணத்தை தவிர!
என்ன தான் குடம் பால் நன்மை தருவதாக இருந்தாலும் அதில் விழும் துளி நஞ்சானது, பாலின் தன்மையை மாற்றிவிடும். அது போல தான் மார்த்தாண்டமும். என்ன தான் அவர் மற்றவர்களுக்கு உதவி செய்தாலும், நல்ல குணம் படைத்தவராக இருந்தாலும், அவரின் பேராசை தான் பாலில் கலந்த நஞ்சானது.
மார்த்தாண்டத்தின் முப்பாட்டனுக்கு முப்பாட்டன் முன்பாக இருந்தவர்களுக்கு ஒரு பேராசை! அது பல அதிசயங்களையும் மர்மங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கும் கொல்லிமலையை அதன் காவல் தெய்வமான கொல்லிப் பாவையும் மொத்தமாக தங்கள் வசப்படுத்துவது!
கொல்லிமலை என்பது சாதாரண மலை மட்டும் கிடையாது. அங்கே பல சித்தர்கள் தவம் புரிந்து கொண்டு இருந்துள்ளனர். அகத்தியர், கோரக்கர், பாம்பாட்டி சித்தர், கடுவெளி சித்தர் என பலர் தவம் புரிந்துள்ளனர். அவர்களை தொந்திரவு செய்யும் பேய்களை பிசாசுகளையும் கொல்லிமலையின் காவல் தெய்வமான கொல்லிப்பாவை, பேய் பிசாசுகளையும் அரக்கர்களையும் கெட்ட எண்ணங்களை உடையவர்களையும் தன் சக்தியினால் அழித்துவிடுவாள்.
கொல்லிப்பாவைக்கு என பல்வேறு சக்திகள் உள்ளன; அவளை காற்றோ வெயிலோ மழையோ எதுவும் செய்யாது. ஊழியால் (காலம்) கூட அவளை நெருங்க முடியாது. பஞ்ச பூதங்களும் அவளுக்கு அடக்கமே! அவளின் சிரிப்பே அரக்கர்களை அலறவிடும். அத்தகைய சக்தி படைத்தவளை தங்கள் வசப்படுத்தி, அவளை தங்களின் ஏவலாளியாக வைத்து கொள்ள வேண்டும் என்பது மார்த்தாண்டத்தின் பரம்பரை ஆசை.
கொல்லி மலையில் மட்டுமே கிடைக்கும் அரியவகை மூலிகைகள் ஏராளம் உண்டு. அம்மூலிகைகளின் உதவியோடு மாண்டவனை உயிர் பிழைக்க வைக்கவும் முடியும்; உயிர் பிழைத்தவனை மாள வைக்கவும் முடியும். அந்த மூலிகைகள் கைவசம் இருந்தால், இவ்வுலகையே ஆள முடியும். அந்த மூலிகைகளை பறிக்க கொல்லிப் பாவையின் அனுமதி வேண்டும். எனவே தான், கொல்லிப்பாவையை தங்களின் ஏவலாளியாக மாற்ற வேண்டும் என மார்த்தாண்டத்தின் முன்னோர்கள் எண்ணினர்.
சூரிய கிரகணத்தன்று, சந்திர கிரகணம் நிகழும் பொழுது பிறந்து, நல் வழியில் நல் குடியில் வளர்க்கப்பட்ட கன்னி பெண்ணை பலி கொடுத்து, அதன் மூலமே கொல்லிப்பாவையை அடைய முடியும். அப்படி சந்திர கிரகணத்தில் பிறந்து, நல் வளர்ப்புடைய பெண்ணை தேடி கண்டுபிடிப்பது என்பது அரிதினும் அரிது. ஏனெனில் பொதுவாகவே கிரகண பொழுதுகளில் குழந்தை பெற்று கொள்வதை மக்கள் விரும்ப மாட்டார்கள். அதையும் மீறி பிறக்கும் குழந்தைகள் ஒன்று தலைவனாக மாறும் அம்சத்தை பெற்றிருப்பார்கள். அல்லது தீய சேர்க்கைகள் இருந்தால், அவர்களை போல மோசமான ஆட்களை பார்க்க முடியாது.
தலைவனாகும் பண்புடன் ஒரு குழந்தையை வளர்ப்பது என்பது அவ்வளவு எளிதல்ல! நூறாண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடக்கும் அதிசய சம்பவம் அது!
ஒவ்வொரு தலைமுறையாக ஆண்களிடம் கொல்லி மலையையும், கொல்லிப் பாவையையும் பற்றி சொல்லி சொல்லி வளர்ப்பார்கள். என்றோ பற்றிய சிறு தீப்பொறி அணையாது பல கைகளால் பாதுகாக்கப்பட்டு இன்று மார்த்தாண்டம் வரையிலும் வந்து நிற்கிறது.
மார்த்தாண்டத்தின் தாத்தா இறப்பிற்கு பின்பு, கொல்லி மலையையும் கொல்லி பாவையும் அடையை வேண்டும் என்கிற அவா, அவர்களின் குடும்பத்திற்கு குறைந்து கூட போனது எனலாம். அதற்கு வாழ்க்கை முறை மாற்றங்களும் சூழ்நிலைகளும் முக்கியமான காரணியாகும். ஆனால், மார்த்தாண்டத்திற்குள் அணையா நெருப்பாய் கொல்லிப்பாவையை அடக்க வேண்டும் என்ற ஆசை கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது.
பிரத்தியங்கராவின் ஜாதகத்தை பல சோதிடர்களிடம் காட்டி விட்டார் மணியரசு. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கூறினார்கள். சிலர் பிரத்தியங்கராவிற்கு பேராபத்து இருப்பதாகவும், அதற்கு செய்ய வேண்டிய பரிகாரங்கள் லிஸ்ட்டையும் சொன்னார்கள். எல்லாம் பல ஆயிரங்களில் இருந்தன. இன்னும் சிலரோ பிரத்தியங்கராவின் ஜாதகம் சுத்த ஜாதகம் என அடித்து சொன்னார்கள். வெகு சிலர் மட்டும் தான் அவள் பிறந்த நேரத்தை கணக்கிட்டு, ஆளுமை மிக்க சக்தியாக வருவாள் என கூறினர்.
சௌந்தர்யா ஜோசியர்கள் சொன்ன அத்தனை பரிகாரங்களையும் ஒன்று விடாது பிரத்தியங்கராவை செய்ய வைத்தார். நம்பிக்கையோ பிடிப்போ எதுவுமின்றி அன்னையின் திட்டலுக்கு பயந்து அவற்றை எல்லாம் செய்தாள் பிரத்தியங்கரா.
பிரத்தியங்கரா வேலையை விடுவதாக தன் தோழர்களிடம் சொன்ன பொழுது அவர்கள் தான் மிகவும் அதிர்ந்து போயினர்.
“ஹே பிரி நீ எதுக்கு வேலையை விடனும்? மேரேஜ் லீவ் எடுத்துட்டு கன்டினியூ பண்ணலாமே?” என அவளது டிஎல் முடிந்த அளவிற்கு அவளை வேலையை விடாமல் இருக்க சொல்லி கன்வின்ஸ் செய்ய பார்த்தார். புன்னகையோடே முடியாது என மறுத்துவிட்டாள் பிரத்தியங்கரா.
“ஏன் பிரி என்னமோ போல இருக்க?” சுஹா கேட்டாள்.
பிரத்தியங்கராவின் முகமே கலை இழந்து போயிருந்தது. கலகலப்பாக எல்லோரிடமும் பேசி சிரித்து பழகும் ரகம் பிரித்தியங்கரா இல்லை என்றாலும், இளமைக்கே உரிய துறுதுறுப்பும் பிரகாசமும் அவள் முகத்தில் இருக்கும். ஆனால் இப்பொழுதெல்லாம் முகம் இருளடைந்து தான் காணப்பட்டது.
“உன் ஆளு எதாச்சும் சொன்னாரா?” என கேட்டான் பாலா.
“அப்படிலாம் இல்லை…” என ஏனோதானோவென பதில் சொன்னாள் பிரத்தியங்கரா.
“என்னனு சொல்லு பிரி. முடிஞ்சா நாங்க எதுனா ஹெல்ப் பண்ணுறோம்.” என்றாள் சுஹா.
“கல்யாண பேச்சு ஆரம்பிச்சதுல இருந்தே எங்கம்மா அடிக்கடி குத்தி காட்டி பேசுறாங்க சுஹா. வலிக்குது! சொன்னாலும் புரிஞ்சிக்க மாட்டேங்குறாங்க.” என பிரத்தியங்கரா சொல்லும் பொழுது, ஏறத்தாழ அவள் குரல் உடைந்தே போயிருந்தது.
கண்களில் ஓரம் துளிர்த்து நின்ற கண்ணீர் துளிகளை நாசூக்காக ஒற்றை விரலால் ஒற்றி எடுத்தவள், “ஜாதகம் ஜோசியம்னு ரொம்ப போட்டு படுத்துறாங்க சுஹா. எனக்கு ஏதோ தோசம் இருக்காம். அதை சரி பண்ணுறேன்னு பரிகாரம் அது இதுன்னு ரொம்ப அலைய வைக்கிறாங்க. பிடிக்கலைன்னு சொன்னா, நீ லவ் பண்ணது கூட தான் எனக்கு பிடிக்கலைன்னு மூஞ்சில அடிக்கற மாதிரி பேசுறாங்க. எனக்கு என்னமோ நான் என் வீட்டுலையே இருக்கற மாதிரி இல்லை சுஹா. வேற ஏதோ வீட்டுல யாருன்னே தெரியாதவங்க கூட இருக்க போல இருக்கு. ஒவ்வொரு முறையும் ஜோசியம் பரிகாரம்னு போயி நிக்குறப்போலாம் ஏதோ நான் பெரிய தப்பு பண்ணா போல இருக்கு. உடம்பெல்லாம் கூசுது.” என சொல்லி முடிக்கும் முன்பு முற்றாக உடைந்து போனாள்.
கேட்டுக் கொண்டிருந்த சுஹாவிற்கும் பாலாவிற்கும் சங்கடம் தான்.
கார்த்திக் எதாவது சொல்லி பிரத்தியங்கரா மனதை நோகடித்திருந்தால், அவனிடம் சென்று சண்டை இட கூட சுஹானா தயாராய் தான் இருந்தாள். ஆனால் பிரத்தியங்கராவின் பெற்றோரிடம் சென்று என்ன சொல்ல?
அமைதியாக நாட்கள் கடந்தது. அப்படி தான் எல்லோரும் நினைத்து கொண்டிருந்தார்கள். ஆனால், பிரத்தியங்கராவிற்கு ஒவ்வொரு நாளுமே ஒருவித போராட்டமாக தான் சென்றது.
பிரத்தியங்கரா வேலை விடுவதாக சொல்லி பேப்பர் போட்டும், அவளது டிஎல் புண்ணியத்தில் நான்கு மாதங்கள் கழித்து தான் வேலையே விட முடிந்தது. அதற்குள் வீட்டிலும் அலுவலகத்திலுமாக சேர்ந்து அவளை படுத்தி எடுத்துவிட்டனர். வீட்டால் கண்காண தேசம் எதாவது ஒன்றிற்கு ஓடியே விடுவாள் போல.
கார்த்திக் முன்பு போல எல்லாம் அவளிடம் வம்பு செய்வதில்லை. பேச வாயை திறந்தாலே பிரத்தியங்கரா முந்திக் கொண்டு ஏதாவது சொல்லி அன்றைக்கு முழுக்க அவனை வாயே திறக்க முடியாதபடி செய்துவிடுகிறாள். ஆகையால் அமைதியாய் இருப்பதே சால சிறந்தது என அதையே பின்பற்ற ஆரம்பித்துவிட்டான் கார்த்திக். விட்டது தலைவலி என இருந்து கொண்டாள் பிரத்தியங்கரா.
இடைப்பட்ட காலத்தில் கொல்லிமலைக்கு அருகில் வீடு வாங்கி அதில் மகளை தங்க சொல்லலாம் என திட்டம் போட்டார் மணியரசு.
குலதெய்வம் என கும்பிட போய், மனுஷன் அங்கேயே தங்க வேண்டும் என சொல்லிவிடுவாறோ என்ற பயத்தில் அதெல்லாம் முடியாது என கத்தி ஆர்ப்பாட்டம் செய்த சௌந்தர்யா, இருப்பதிலே சிறந்த ஒரு ரெசார்ட்டை பிரத்தியங்கராவிற்காக புக் செய்தார். கூடவே ரென்டல் கார் ஒன்றையும் ஏற்பாடு செய்துவிட்டார்.
ஒரு வழியாக பெரும் போராட்டத்தோடு கொல்லிமலையை சென்று அடைந்தாள் பிரத்தியங்கரா.
எங்கோ இருக்கும் மலை ஒன்றில் இருக்கும் ரிசார்ட் எப்படி இருக்குமோ? குறைந்தபட்சம் கழிவறைகளாவது சுத்தமாக இருக்குமோ என்ற கவலைகளுடனே கொல்லிமலைக்கு வந்தாள் பிரத்தியங்கரா.
பிரத்தியங்கராவின் எண்ணங்களை எல்லாம் தவிடு பொடி ஆக்கும் வண்ணம் அங்கிருந்த ரிசார்ட்டுகள் அழகழகாய் இருந்தன. அதுவும் சௌந்தர்யா புக் செய்திருந்த மூன்வால்க் ரிசார்ட் (கற்பனையான ரிசார்ட்) மிக அழகாக அரை வட்ட வடிவில் இருந்தது.
முகப்பில் இருந்தே சின்ன சின்ன செடிகளோடு, அரை வட்ட வடிவில் நல்ல விஸ்தரமாய் இருந்தது. ஒரு பக்கம் கட்டிடம் என்றால், மறுபக்கம் மலையின் கொள்ளை அழகு தெரியும் படியாக கட்டப்பட்டிருந்தது.
பேமிலி ரூம் தான் புக் செய்திருந்தார் சௌந்தர்யா. வேலையாட்கள் பைகளை கொண்டு வந்து வைக்க, திரைச்சீலையை விலக்கினாள் பிரத்தியங்கரா. மாலையில் சூரியன் அஸ்தமிக்கும் அழகியதொரு காட்சி. காணவே அத்தனை பிரம்பிப்பாய் இருந்தது. கண்கள் அங்கிருந்து நகரவே மாட்டேன் என்றது அவளுக்கு.
ஊட்டியோ கொடைக்கானலோ கூட ஒரு வாரத்தில் போரடித்துவிடும்; அந்த அளவிற்கு இல்லாத கொல்லி மலையில் எப்படி 48 நாட்கள் தங்குவது என மனதிற்குள்ளே புழுங்கிக் கொண்டிருந்தாள் பிரத்தியங்கரா. ஆனால், அந்தியில் சூரியன் அஸ்தமனமாகும் அந்த காட்சியை கண்டவுடனே, அதன் அழகின் மயங்கி, தன் மனதில் இருந்த எண்ணங்களை எல்லாம் அவசர அவசரமாக அழித்தாள்.
Intresting 👍👍👍👍
interesting . apo prathiyangara vachi marthandam ethana seivara illa avaluku ethana aeiduma
Interesting. .. Thrilling
Super😍😍👍