Skip to content
Home » கொல்லிப்பாவை – அத்தியாயம் 1

கொல்லிப்பாவை – அத்தியாயம் 1

அத்தியாயம் 1

“ஹலோ கார்த்திக்…” மெல்லிய குரலில் பேசினாள் பிரத்தியங்கரா.

“என்ன ப்ரீ உங்க வீட்டுல நம்ம விசயத்தை பேசிட்டியா?” என்று எதிர்முனையில் ஆர்வமாக கேட்டான் கார்த்திக்.

“அப்பா முன்னாடி தான் உக்காந்துருக்கேன். நான் அப்பறம் பேசறேன்.” என்று அழைப்பை துண்டித்தாள் பிரத்தியங்கரா.

அழகான நீண்டு கருத்து அடர்ந்த கூந்தல் பிரத்தியங்கராவிற்கு. அதில் தான் கார்த்திக் முதன் முதலில் மயங்கியது. அதன் பின்பு தான் அவளின் ஆழமான கண்கள் அவனை ஈர்த்தன. பொறுமையாக பார்த்த பொழுது அவளின் மாநிறத்திற்கும் குறைவான நிறம், கொஞ்சம் ஏமாற்றம் தந்தது அவனுக்கு. என்ன இருந்தாலும் வெள்ளையாய் இருந்தால் அது தனி அழகல்லவா! அவனை சொல்லி குற்றமில்லை; அது பெரும்பாலான இந்தியர்களின் மனநிலை! 

பார்க்கவும் பழகவும் ஏதோ ஒரு விதத்தில் கார்த்திக்கை ஈர்த்துக் கொண்டே இருந்தாள் பிரத்தியங்கரா. 

ஹெச்ஆர் டெஸ்கில் தான் கார்த்திக் பணி புரிகிறான். இன்டர்வியூவிற்கென்று பிரத்தியங்கரா வந்த தினம் முதல் அவன் கண்கள் அவளையன்றி வேறொரு பெண்ணை பார்த்ததே இல்லை! அப்படி ஓர் ஈர்ப்பு அவளிடம்.

இன்றோடு அவன் பிரத்தியங்கராவிடம் தன் காதலை சொல்லி நேசப்பயிர் வளர்த்து மூன்று வருடங்கள் ஐந்து மாதங்கள் பன்னிரண்டு நாட்கள் ஆகின்றன. கார்த்திக்கின் வீட்டிலும் பிரத்தியங்கராவின் வீட்டில் கல்யாண நெருக்கடி கொடுப்பதால், இருவரது வீட்டிலும் பேச வேண்டும் என முடிவெடுத்து இருந்தனர். அதன் படியே முதலில் பிரத்தியங்கரா தன் வீட்டாரிடம் பேச வேண்டும் என கார்த்திக் சொல்லி இருந்தான். பிரத்தியங்கரா வீட்டில் பச்சை கொடி காட்டிவிட்டால், தன் வீட்டில் சம்மதம் வாங்குவது எளிது என்று எண்ணினானோ என்னவோ!

தங்கள் காதலை சொல்ல நாள் குறித்து, அந்நாளில் பயத்தோடு பிரத்தியங்கரா தன் தந்தையின் முன் அமர்ந்திருந்தாள்.

“அப்பா…” என்றாள் பயத்தோடு.

“யாரு மா அந்த பையன்?” முஷ்தீபுகள் ஏதுமின்றி கேட்டார் மணியரசு.

“அப்பா…” என்று ஆச்சர்யத்தில் விரிந்தன பிரத்தியங்கராவின் விழிகள்.

“வயசு பொண்ணு முக்கியமான விசயம் பேசனும்னு சொல்லறப்பவே புரியாத அளவுக்கு நான் ஒன்னும் தத்தி இல்லை மா.” என்றவர், மேலும் தொடர்ந்து

“அந்த பையனை பத்தி சொல்லு. முழுசா விசாரிச்சு, எங்களுக்கு திருப்தியா இருந்து, அதே சமயம் நம்ம குடும்பத்துக்கும் செட் ஆவான்னு தோணினா, அந்த பையனுக்கே உன்னை கட்டி வைக்கிறோம். ஆனா அவன் குணத்துல அப்படி இப்படி இருக்குனு கொஞ்சம் கேள்வி பட்டாலும் அதுக்கு அப்பறம் நீ அப்பா சொல்லுறதை தான் கேக்கனும்.” என சொல்லி முடிக்க, அவரை வந்து அணைத்துக் கொண்டாள் பிரத்தியங்கரா.

“தேங்க்ஸ் ப்பா… லவ் யூ ப்பா…” என்று கன்னம் கிள்ளி முத்தம் கொஞ்சினாள் மகள்.

“நீங்க ஒத்துக்க மாட்டீங்கனு ரொம்ப பயந்தேன் ப்பா…” உள்ளத்தை மறைக்காமல் சொன்னாள்.

“உன்னை கஷ்டப்படுத்தி அழ வைச்சி நான் என்ன பண்ணப்போறேன் டா… உன்னோட சந்தோசம் தான் என்னோட சந்தோசமும்.” என்றார் மணியரசு.

“தேங்க்ஸ் ப்பா… நான் இப்பவே போய் கார்த்திக்கிட்ட பேசறேன்.” என பிரத்தியங்கரா மகிழ்ச்சியில் படபடக்க,

“நான் சொன்னபடி பையன் முதல்ல நல்லவனானு விசாரிச்சுக்கறேன் மா. அப்பறமா நீ அந்த பையன்கிட்ட சொல்லிக்கோ.” என்ற கண்டிப்பான தந்தை வெளிய வர, பொங்கிய பாலில் தண்ணீர் தெளித்தது போல் ஆனது பிரத்தியங்கராவின் ஆனந்தம்.

ஒரு வார காலம் ஊர்ந்து செல்வது போல் இருந்தது பிரத்தியங்கராவிற்கு. கார்த்திக்கை பற்றி விசாரிப்பதாக மணியரசு சொன்ன நாளில் இருந்து, பிரத்தியங்கராவின் மனதிற்கு பெரும் முரசு ஒன்று கொட்டிக் கொண்டே இருந்தது. கார்த்திக்கை பற்றி நன்றாக தெரிந்தாலும் எந்தவித தவறான தகவலும் தந்தையை சென்றடைந்து விடக் கூடாதே என்று மனம் பதறிக் கொண்டே இருந்தது. இந்த ஒரு வார காலமும் அவள் அவளாகவே இல்லை. கார்த்திக்கிடமும் உண்மையை சொல்ல முடியவில்லை; தந்தையின் கட்டளை அது! மொத்ததில் பிரத்தியங்கராவிற்கு மண்டையே வெடித்து விடும் போல் இருந்தது.

“பிரத்தியங்கரா…” என தந்தை அழைத்ததும் கால்கள் நடுங்கவே ஹாலிற்கு சென்றான் பிரத்தியங்கரா.

“அப்பா…” என பயந்தபடியே அவருக்கு எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள்.

தந்தை கார்த்திக்கை வேண்டாமென்று ஒரு வார்த்தை சொல்லிவிட்டால், பிரத்தியங்கராவின் வாழ்க்கை எனும் புத்தகத்தில், கார்த்திக் எனும் அத்தியாயம் அன்றோடு முடிந்துவிடும். ஏனெனில் பிரத்தியங்கராவிற்கு தன் தந்தை மீது எத்தனைக்கு எத்தனை பிரியமோ, அத்தனைக்கு அத்தனை மரியாதையும் பயமும் கூட! ஆகையால் அவர் கிழித்த கோட்டின் அருகில் கூட செல்ல மாட்டாள் பிரத்தியங்கரா. 

பிரத்தியங்கராவின் அம்மா சௌந்தர்யாவை பற்றி சொல்ல வேண்டுமானால், கணவரின் குணநலன்களை அப்படியே பிரதிபலிக்கும் கண்ணாடி அவர்‌. அவருக்கென்ற தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் கூட இல்லாதவர். சில நேரங்களில் பிரத்தியங்கரா தன் அன்னையை பற்றி யோசிக்கும் பொழுது, ஒரு நாளும் ஒரு பொழுதேனும் தன் அன்னையை போல், தன்னால் இருக்க முடியுமா என்று நினைத்துப் பார்ப்பாள். முடியவே முடியாதென்று மூளை சொல்லும். அப்படியும் சிறிதே கற்பனையை ஓட்டிப் பார்த்தாள் என்றால், என்னமோ சிறை வாசம் இருப்பது போல் அவளுக்கு மூச்சு முட்டுவதாக தோன்றும். கார்த்திக்கும் சில நேரங்களில் அப்படி தானே தன்னை எண்ண வைப்பான் என தோன்றிய நொடியில் இருந்து இதெல்லாம் தேவையற்ற எண்ணங்கள் என்று அவற்றை ஒதுக்கி வைத்துவிடுவாள் அவள்.

“அந்த பையனை பத்தி நான் நல்லா விசாரிச்சிட்டேன் மா…” என்று சொல்லி மணியரசு பேச்சை நிறுத்தி, தன் மகளை பார்க்க, அவளுக்கோ இருதயம் இல்லாமலே போய்விடும் எனும் அளவில் தப்பாட்டம் போட்டுக் கொண்டிருந்தது.

“நல்ல பையனா தான் தெரியறான். அந்த பையனோட அப்பா அம்மாவோட வீட்டுக்கு வந்து பொண்ணு கேட்க சொல்லு…” என்று மணியரசு சொன்னதும் தான், பிரத்தியங்கராவிற்கு உயிரே வந்தது.

“அப்பா…” என்று ஆயாசமாய் பெருமூச்சை வெளி இட்டவள், “பயமுறுத்திட்டீங்க ப்பா…” என்றாள்.

“சும்மா விளையாடினேன் டா…” என்றவர்,

“விசாரிச்ச வரை பையனை பத்தி நல்லவிதமா தான் சொல்லுறாங்க… அப்பாக்கு பரம திருப்தி.” என முடிக்க,

“என்னங்க அவங்க ஆளுங்க எப்படி?” என்று சாதியை பற்றி பூடகமாக கேட்டார் சௌந்தர்யா.

“எல்லாம் நம்ம ஆளுங்க தான். ஆனா பிரிவு வேறையா வரும் போல… ஆனா என்ன நம்ம பொண்ணு ஆசைப்பட்டால…” என பெருந்தன்மை போல மணியரசு கூறினாலும், கார்த்திக் அவர்கள் இனத்தை சேர்ந்தவன் என்பதே மணியரசு சம்மதிக்க முதல் காரணம்.

“வசதி எப்படி?” சௌந்தர்யா.

“சென்னையிலையே சொந்த வீடு இருக்கு. அது போக சொந்த ஊர்லையும் வீடு தென்னந்தோப்புனு எல்லாம் இருக்கு. ஆனாலும் நம்ம அளவுக்கு அவங்க வசதி இல்லை.” மணியரசு.

“ஏன்ங்க நாம வேணா வேற இடம் பாக்கலாமா? நம்மள விட வசதி கம்மிங்கறீங்க?” சௌந்தர்யா.

தாய் தந்தையின் பேச்சை அடி வயிற்றில் புளி கரைக்க கேட்டுக் கொண்டு அமைதியாய் இருந்தாள் பிரத்தியங்கரா.

“நம்மளை விட சொத்து அதிகமா இருந்தா நம்ம பொண்ணு அந்த வீட்டுக்கு வேலைகாரியா மாறிடுவா. நம்மள விட சொத்து கம்மியா இருந்தா போற வீட்டுல மகாராணியா இருப்பா… நமக்குனு இருக்கறது அவ ஒரு பொண்ணு தானே? அவ ஆசை தானே நமக்கு முக்கியம்!” மணியரசு.

பிரத்தியங்கராவின் ஆசையை தான் முக்கியம் என மணியரசு பேசினாலும், சாதியும் பணமும் இல்லாவிட்டால் இந்த காதல் என்றோ காற்றாகிப் போயிருக்கும். ஏனோ சந்தோசம் பெருகி ஊற்றாகுவதற்கு பதில் மனம் பாரமாய் கனத்தது பிரத்தியங்கராவிற்கு.

“பிரத்தியங்கரா நீ போய் அந்த பையன்டா பேசுமா… சீக்கிரமே அவங்க வீட்டு ஆளுங்களை வர சொல்லு. உனக்கும் வயசு ஏறிட்டே போகுது பாரு.” என்று தந்தை சொல்ல,‌ புன்னகை சிந்தயவளின் மனதிற்கு மத்தாப்பூ பூற்கவே இல்லை.

‘என்ன அப்பா கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லியும், ஒரு சந்தோசமும் மனசுக்குள்ள வரவே இல்ல. ஏன் ஒரு மாதிரி பயமாவே இருக்கு.’ தன் மனதை பற்றி தனியே இருக்கும் பொழுது யோசித்து பார்த்தாள் பிரத்தியங்கரா.

பால்கனியில் அமர்ந்தவாறு வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவளை, அவளின் செல்போன் இசைத்து, அவளின் எண்ணங்களுக்கு தடை போட்டது. செல்போனை எடுத்துப் பார்த்தாள். தொடுதிரையில் கார்த்திக்கின் பெயரை காட்டியது.

“சொல்லு கார்த்திக்.” இன்னமும் மனம் தெளியாமல், பேசினாள் பிரத்தியங்கரா.

“எங்க இருக்க?”

“வீட்டுல…”

“ஏன் என்னை ஒரு வாரமா அவாய்ட் பண்ணுற? சரியா பேச மாட்டேங்குற…  உங்கப்பன் நம்ம லவ்வுக்கு எதுனா பிரச்சனை பண்ணுறானா?” ஏக வசனத்தில் பேசினான் கார்த்திக்.

பிரத்தியங்கராவின் மனதில் சுருக்கென்று முள் தைத்தது.

“கார்த்திக்…” என்று கடுமையான குரலில் அவனை அழைத்தாள்.

“என்ன புதுசா குரலை உசத்துற? உங்கப்பனை சொன்னதும் உனக்கு கோபம் வந்துடுச்சா? யாரோ என்னைப் பத்தி வெளிய விசாரிக்கறாங்கன்ற டென்சன்ல நானே இருக்கேன். நீ என்னடா என்கிட்ட பேசவும் மாட்டேங்குற… வாழ்க்கையே வெறுப்பா இருக்கு.” என மொத்த கடுப்புகளையும் அவள் மீது ஏற்றி வைத்தான் கார்த்திக்.

“உன்னை பத்தி விசாரிச்சது எங்கப்பா தான்.” தட்டையாக சொன்னாள்.

“உங்கப்பாவா? உங்கப்பா ஏன் என்னை பத்தி விசாரிக்கனும்?”

“நம்ம லவ்வை பத்தி என் அப்பாட்ட சொன்னதும், பையன் நல்லவனானு விசாரிக்கறேன். நல்ல பையனா இருந்தா கட்டி வைக்கறேன் சொன்னார்.”

“என்ன… என்ன சொன்னாரு உங்கப்பா?” அதீத ஆர்வமும் மரியாதையும் கலந்து இருந்தது அவனின் வார்த்தைகளில்.

“உன்னை உங்கப்பா அம்மாவோட வீட்டுல வந்து பேச சொன்னாரு…” 

பிரத்தியங்கரா எவ்வளவு முயன்றும் அவள் வார்த்தைகளில் கூட மகிழ்ச்சி இருக்கவில்லை.

“ஹேய் இதல்ல நீ முதல்ல சொல்லி இருக்கனும்.” வார்த்தைகள் துள்ளிக் குதித்தது அவனின் மகிழ்ச்சியில்.

“எங்க என்னை சொல்ல விட்ட? உங்க வீட்டுல ஒத்துப்பாங்களா கார்த்திக். எனக்கு என்னமோ பயமா இருக்கு.”

“அதெல்லாம் கவலை படாத… எங்க அப்பா எதுவும் சொல்ல மாட்டாரு. எங்கம்மா தான் ஜோசியம் ஜாதகம்னு சுத்துவாங்க… மத்தபடி லவ்வுக்கெல்லாம் எதுவுமே சொல்ல மாட்டாங்க… முதல்ல போய் நான் பசங்களுக்கு ட்ரீட் வைக்கறேன். பை.. லவ் யூ…” என்றவன் பிரத்யங்கராவின் மறுமொழியை கூட கேட்காமல் அழைப்பை துண்டித்து விட்டு சென்றுவிட்டான்.

பிரத்தியங்கராவிற்கு ஏமாற்றமாக இருந்தது.

சில நாட்கள் கழித்து…

மணியரசும் சௌந்தர்யாவும் அவர்கள் அருகில் பிரத்தியங்கராவும் அமர்ந்திருக்க, அவர்களுக்கு எதிரே தமயந்தி, செல்வராஜ் மற்றும் கார்த்திக் அமர்ந்திருந்தனர். கார்த்திக்கின் குட்டித் தங்கை 12வது படிப்பதால் அவள் வரவில்லை.

“எங்களுக்கும் உங்க பொண்ணை பிடிச்சிருக்கு. ஆனா ஜாதகம் செட் ஆனா தான் இந்த கல்யாணம் நடக்கும்.” கறாராய் சொன்னார் தமயந்தி.

பதற்றத்தில் நெற்றியை தேய்த்தான் கார்த்திக். பயத்தில் உறைந்தாள் பிரத்தியங்கரா.

“ம்மா என்ன மா இது?” என்று சின்ன குரலில், தன் அன்னையிடம் சீற,

“சும்மா இரு டா…” என்று அவனை அடக்கினார் தமயந்தி.

“நீங்க சொல்லுறதும் சரி தான்ங்க… சின்னப் பிள்ளைங்க ஆசைப்படுதுனு கட்டி வச்சிட்டு நாளைக்கு அதுங்க கஷ்டப்படுறதை பார்த்துட்டு நம்மாள சும்மா இருக்க முடியாது இல்லையா?” என்று விட்டு மணியரசு சிரிக்க, தமயந்தியும் வலுக்கட்டாயமாய் சிரித்து வைத்தார்.

பேச்சு வார்த்தைகள் முடிவடைந்து, எந்த ஜோசியரை பார்க்க வேண்டும், யார் பக்கம் பார்ப்பது, அலைபேசியிலே ஜாதகம் பறிமாறிக் கொள்வது எல்லாம் முடிந்து, கார்த்திக்கின் குடும்பம் கிளம்பிய பொழுது, பெருமழையில் சிக்கினார் போல் உணர்ந்தாள் பிரத்தியங்கரா.

“என்னடா மா ஒரு மாதிரியா உக்காந்துருக்க?” என்று மணியரசு கேட்க,

“ஒன்னுமில்லைப்பா…” என்று சமாளித்தாள்.

“அந்த பையன் உன்னை எதாச்சும் சொன்னானாமா? சொல்லு அவனை ஒரு வழி பண்ணிடறேன்.” என்றார் மணியரசு.

“ச்சே ச்சே… அதெல்லாம் இல்லை ப்பா. டெக்னாலஜி எவ்வளவோ முன்னேறிடுச்சு ஆனா இன்னமும் நீங்க ஜாதகம் சோசியம் பார்த்து தான் கல்யாணம் பண்ணி வைப்பேன்னு சொல்லுறீங்களே… அதான் ஒரு மாதிரியா இருக்கு.” என்றாள் மனதை மறையாமல்.

“நமக்கு முன்னாடி இருந்த பெரியவங்க இதையெல்லாம் சொல்லிருக்காங்கன்னா அதுக்கு ஏதோ அர்த்தம் இருக்கும் டா… நாம அதை கட்டாயம் மதிக்கனும்.” என்று அழுத்தமாக சொன்னார் மரியரசு.

பிரத்தியங்கராவின் தலை அவள் சம்மதமின்றியே ஆடியது.

“குட்…” என்றவர், “ஏய் சௌந்தர்யா பிள்ளைக்கு பிடிச்ச ஸ்வீட் எதாச்சும் பண்ணி குடு…” என்று இல்லாளிடம் கட்டளை பிறப்பித்தார்.

12 thoughts on “கொல்லிப்பாவை – அத்தியாயம் 1”

  1. Avatar

    Love marriage kuda kattaya kalyanam panradhu maadhri indha kudumbam tan pannum pola…. Pullainga aasai tan mukkiyam sollitu adhula avanga asaiyum thinikardhu…

    Story super ah irukku…. Skrm adutha epi podunga sis….

  2. Avatar

    கல்யாணத்துக்கு அப்பா அம்மா சம்மதம் கிடைச்சும் பிரதிக்கு ஏன் மகிழ்ச்சி இல்லை ஜாதகத்துல ஏதாவது பிரச்சனை வருமா?

    1. Avatar

      கார்த்திக் தனக்கு சரியானவன்தானான்னு ஒரு டவுட் அவளுக்குள்ள அதான் குழம்புறா 😁😁😁

    1. Avatar

      நம்ம ஊர்ல எல்லா மேரேஜ்லையும் மெயின் வில்லனே ஜாதகம்தான்ங்க. கட்டாயம் தந்திடறேன் சிஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *