அவன் ஒன்றும் சொல்லாமல் புன்னகைத்தவாறே கிளம்ப, வீட்டினுள் வரை வந்து விட்டுச் சென்றதால் அவனை இங்கிருப்பவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும் என எண்ணி காலையில் கேட்டுக் கொள்ளலாம் என அவளும் விட்டு விட்டாள்.
Thank you for reading this post, provide your thoughts and give encouragement.
காலையில் எழுந்து அந்த குவார்ட்டஸின் தோட்டத்தைச் சுற்றி நடந்தவளுக்கு அங்கிருந்து மலர்ந்து சிரித்தப் பூக்களைப் பார்க்கையில் அவனின் மர்மப்புன்னகை நினைவு வந்தது.
பெயர் கூடச் சொல்லாமல் சென்றுவிட்டானே என நடந்து கொண்டிருந்தவள் கேட்டருகில் வந்துவிட,
அங்கு நின்ற வாட்ச்மேனிடம்
“நேற்று என்னுடன் வந்தாரே அவர் யார்? ” என வினவினாள்.
வாட்ச்மேனோ, பேந்தப்பேந்த முழித்து விட்டு,
“யாரை மேடம் கேக்குறீங்க, நேத்து நைட்டு நீங்க தனியாத்தான மேடம் வந்தீங்க “என்றார்.
ஏற்கனவே நேற்றிரவில் நடந்ததில் அமிழ்தா அந்த வாட்ச்மேன் மேல் கடுப்பில் இருந்தாள்.
‘அவளை அழைத்து வந்த அந்த மிஸ்டர் கோஸ்ட் கேட்டருகில் நின்று விட்டு அவளைத் தான் வாட்ச்மேனை எழுப்பச்சொன்னான்.
“நீங்களே எழுப்புறது” என்ற அமிழ்தாவிடம்
“நானா உள்ளப் போகணும்”? என்றுவிட்டு அசையாமல் நின்றான் அவன் .
வேறு வழியின்றி அவனைத் தன் முறைப்பால் உபசரித்தவாறு வாட்ச்மேனின் அருகே போய் “அண்ணா அண்ணா “என அழைத்தாள் அமிழ்தா…
அவர் எழாததோடு அந்தப் பக்கம் தலை சாய்த்து குறட்டையும் விட… கடுப்பானவள், அந்தப் பெரிய இரும்பு கேட்டைப் பிடித்து ஒரு உலுக்கு உலுக்கினாள்…
அந்த இடத்தைப் பற்றிய பீதியோடே கண்ணயர்ந்திருந்த மனிதர் அது எழுப்பிய வினோதமான சத்தத்தில் பதறியடித்து எழுந்தார்…
எழுந்த வேகத்தில் தூக்கக்கலக்கத்தில், அந்த இருட்டில்
கேட்டைப் பிடித்தவாறு விரிந்திருந்த தலைமுடி பறக்க நின்றிருந்தவளைக் கண்டு
“அய்யோ பிசாசு பிசாசு” என அலறத்தொடங்க, அதைக் கண்டு அவன் சிரிக்க தொடங்கியிருந்தான்.
“இப்ப எதுக்கு சிரிக்குறீங்க?” என அவனை அமிழ்தா அதட்ட,
அவள் தனியாகப் பேசுவதைப் பார்த்த வாட்ச்மேன் மேலும் பயந்து
“யாரும்மா நீ யார்கிட்டம்மா பேசுற? ” என அவளைக் கேட்க,
அவளோ சிரித்துக் கொண்டிருந்தவனைக் கொலைவெறியுடன் பார்த்தவாறே
” இதோ இங்க சிரிச்சுகிட்டு இருக்கே இந்த பேய்கிட்ட ” எனப் பல்லோடு வார்த்தைகளையும் கடித்துத் துப்பினாள்.
திகிலான வாட்ச்மேனோ
” இன்னொன்னு வேறயா? உன்னைப் பார்த்தாலே பயமா இருக்கும்மா…
அய்அய்யோ … என்னை விட்டுரும்மா…
நான் எந்தத் தப்பும் பண்ணதில்லம்மா…
ஏற்கனவே கஷ்டப்பட்ட ஜீவனம்மா …..” எனத் தன்னுடைய குடும்ப சரித்திரத்தையே ஒப்பிக்க,
இவனும் எந்த உதவிக்கும் வராமல் வெறுமனே சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருக்க,
கஷ்டப்பட்டு அவரை நிறுத்த வைத்து…
தான் யாரென தன்னுடைய அடையாள அட்டையை எடுத்துக் காட்டி…
கதவைத் திறக்க வைத்திருந்தாள். ‘
இந்த நிகழ்வால் காலையிலும் கூட வாட்ச்மேன் ஓர் ஐயப்பார்வையுடனே இவளை நோக்க,
“அது சரி…
இது எங்க கவனிச்சுருக்கும்…
நானே பிசாசா இல்லையான்னு இன்னும் ஆராய்ச்சி நடத்திட்டிருக்கு இது…” எனத் தலையிலடித்தபடி சென்று விட்டாள்.
பின் தகவல் தெரிந்து வந்த பிரதாப் தன்னை அவளிடம் அறிமுகப்படுத்திப் பேசிக்கொண்டே வரவும்தான் அந்த வாட்ச்மேன்க்கு அவள் மனிதஜென்மம்தான் என்னும் நம்பிக்கையே வந்தது.
அவ்வளவு நேரம் கழித்து அசடு வழிய அவர் வணக்கம் வைக்க, அமிழ்தாவும் புன்னகையுடனே அதை ஏற்றுக் கொண்டு வந்து விட்டாள்.
இப்போது பிரதாப் அருணாச்சலம் என்று கூறவும் அவனுடைய நினைவும் சட்டென வந்து விட்டது…
அவன் யார்? இந்த அருணாச்சலம் யார்? என்னும் சிந்தனைகள் அவளுள் ஓடிக்கொண்டிருக்க, ஓடிக்கொண்டிருந்த கார் திடீரென நின்றது.
அமிழ்தா கேள்வியாக பிரதாப்பை நோக்க,
அவர் டிரைவரை நோக்கினார்.
டிரைவர் “பாலத்தில் ஏதோ ஆக்ஸிடன்ட் போல சார்” என்றார்.
“என்னன்னு பாரு” என பிரதாப் டிரைவரிடம் சொல்லிக்கொண்டிருக்க ஆக்ஸிடன்ட் என்ற வார்த்தையைக் கேட்டதும் அவருக்கு முன் அமிழ்தா கீழே இறங்கியிருந்தாள்.
பின்னாடியே பிரதாப்பும் டிரைவரும் இறங்கி ஓட்டமும் நடையுமாக அவளைப் பின்தொடர்ந்தனர்.
சாலையெங்கும் கண்ணாடிச்சிதறல்கள் சிதறிக்கிடந்தது…
பாலத்தின் வாயை மூடியபடி வழிமறித்து லாரி நிற்க,
அதனருகில் சிறுசிறு காயங்களோடு சாய்ந்துநின்ற ஓட்டுநரையும் கிளீனரையும் கண்டவள் அவர்களுக்குப் பெரிய அடியொன்றும் இல்லை என்பதை உறுதிபடுத்திக் கொண்டு என்ன ஆயிற்று என விசாரித்தாள்.
“பாலத்து மேல வந்ததும் திடீர்ன்னு என்ன ஆச்சுன்னே தெரியலம்மா… லாரி என் கண்ட்ரோல்லையே இல்ல… அதே மாதிரியே கண்ட்ரோல் இல்லாம எதித்தாப்ல ஒரு காரும் வர உசிரு போயிருச்சுன்னு நினைச்சேன். ஆனால் நல்லவேளை எந்த தெய்வமோ காப்பாத்திருச்சு… “என நடந்ததைச் சுருக்கமாக அவர்கள் கூற,
ஹாஸ்பிட்டலுக்கு அனுப்புமாறு பிரதாப்பிடம் கண்காட்டிவிட்டு சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்த அருணாச்சலம், சக்தியை நோக்கி நடந்தாள்.
அங்கோ, அருணாச்சலம் சக்தியை அணைத்துக் கொண்டு “அரசு…அய்யாஅரசு…
உனக்கு ஒண்ணமில்லலய்யா” எனப் பிதற்றிக்கொண்டிருந்தார்.
அணைத்திருந்த நிலையில் இருவருடைய முகங்களையும் பாராமல் குரலை மட்டும் கேட்டவள் குரலில் இருந்த பதற்றத்தில் தொனித்த பாசத்தை உணர்ந்து தன்னையறியாமல் புன்னகை பூத்தாள்.
சிறுசிறு காயங்கள் தென்பட்டாலும் இருவரும் நன்றாகவே நின்று கொண்டிருந்தனர். எனவே சற்று ஆசுவாசமடையட்டும் பின் விசாரித்து மருத்துவ மனைக்கு அனுப்பலாம் எனத் தள்ளியே நின்றிருந்தவள் இவர்களைத் தவிர வேறு யாரோ அங்கு இருப்பது போன்ற உணர்வு வர சுற்றிப்பார்த்தாள்.
யாருமில்லையே எனக் குழம்பிக்கொண்டிருந்தவள்
“சார், என்ன சார் பண்றீங்க… என்னைப் போய்… நான் உங்க டிரைவர் சார்…சக்தி… ” என்ற குரலைக் கேட்டுத் திரும்ப,
அருணாச்சலத்தின் அணைப்பை விலக்கி விட்டு பேசிக்கொண்டிருந்தவனைப் பார்த்து “அரசன்… நீ இங்க என்ன பண்ற… ” என அதிர்ச்சியோடு வெளிவந்தன அமிழ்தாவின் வார்த்தைகள்…
(தொடரும்…)
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Interesting
Super