தடுமாறியவளைப் தாங்கிப்பிடித்த கரங்களுக்குச் சொந்தக்காரனைப் பார்த்ததும் அமிழ்தாவின் இதழ்கள் தானாய் உச்சரித்தன.
“மிஸ்டர் கோஸ்ட்…”
அவளைத் தாங்கி நிமிர்த்திய அருளாளன், “என்ன? மேடம் ஹாஸ்பிட்டல்ல ஸ்கேட்டிங் பழகிட்டு இருக்கீங்க” என்றான் கிண்டலாக.
அவனை ஒருமுறை முறைத்தவள், “ம்ப்ச் நானே குழப்பத்துல்ல இருக்கேன் நீங்க வேற…” என்றபடி நடக்கத் தொடங்கினாள்.
அவளோடு நடந்தவன் “என்ன குழப்பம் அமிழ்தா” என்றான் தன்மையாக.
சக்தி இருந்த அறையை ஒருவித இயலாமையோடு நோக்கியவள் அவனுடைய அமைதியான குரலுக்கு ஆட்பட்டவளாக “அது வந்து…சக்தி… திடீர்ன்னு எங்கூட..” .எனத் தொடங்கியவள் சட்டென சுதாரித்து “ஒண்ணுமில்ல” என்றபடி நடைவேகத்தைக் கூட்டினாள்.
அவளோடு அதே வேகத்தில் நடந்தவன் “என்கிட்ட சொல்லக்கூடாதா அமிழ்தா” என்றான் மீண்டும் அமைதியாக.
அவனுடைய அந்த ஆழ்ந்தக்குரல் அவளை என்னவோ செய்தது.
இருப்பினும் ஒன்றும் பேசாமல் விறுவிறுவென நடந்து மருத்துவமனை வாயிலுக்கு வந்தவள் அங்கிருந்;த தான் வந்த ஆட்டோவில் ஏறி அமர்ந்தாள்.
பின்னாடியே வந்து ஆட்டோ கம்பியைப் பிடித்தவனோ, “என்மேல என்ன அமிழ்தா கோபம்?யார் மேலயோ இருக்கக் கோபத்தை என்மேல காட்டுனா எப்படி?” என்றான் மீண்டும் தன்மையாகவே.
“ச்ச்… என்ன? என்னமோ பொண்டாட்டிய சமாதானப்படுத்துற புருஷன் மாதிரி வந்து சமாதானப்படுத்திட்டு இருக்கீங்க…யாருங்க நீங்க எனக்கு? உங்க மேல எனக்கு எதுக்கு கோபம் வரணும்? சும்மா உங்க வழியைப் பாத்துட்டுப் போங்க,சொல்லிட்டேன்.
ஆமாம்…” எனக் கத்தியவள் ஆட்டோ டிரைவரிடம் “அண்ணா வண்டிய எடுங்கண்ணா” என்றாள்.
அவள் வெட்டவெளியைப் பார்த்து வெறித்துக் கத்துவதைப் பார்த்த ஆட்டோ டிரைவரும் “என்னவோ ஏதோ” எனமிரண்டுபோய் வண்டியை எடுத்துவிட்டு சற்றுத் தொலைவு சென்றதும்
“இப்ப எங்கம்மா போகணும்” என்றார்.
இன்னும் எரிச்சலும் கோபமும் தணியாமல் இருந்தவள் முடியை ஒதுக்கியவாறே “கலெக்டர் குவார்ட்டஸ்” என்றாள்.
ஓடிக்கொண்டிருந்த ஆட்டோ கிரீச்சிட்டவாறு நின்றது.
“இறங்கும்மா கீழ…”
“என்ன?” அவள் அதிர்ந்து விழித்தாள்
.
“ஆட்டோ அங்கெல்லாம் போகாது…இறங்கும்மா கீழ”டிரைவரின் அதட்டலில் தன்னையறியாமல் கீழே இறங்கியவளின் மூளை சட்டென குயுக்தியாக வேலை செய்தது.
“அண்ணா வீட்டுல தான்ண்ணா பணம் இருக்கு. கையில இல்ல. வீட்டுல போய் இறக்கி விட்டுருங்கண்ணா,அங்கபோய்த்தரேன்.” என்றாள் முகத்தைப் பாவமாக வைத்துக்கொண்டு.
அவர் அவளை மேலும் கீழுமாக நோக்கவே “டபுளா கூடத்தரேன்ண்ணா பிளீஸ்ண்ணா” என்றாள்.
பின்னே? எட்டரைமணிக்கே அவள் நின்றிருந்த இன்றைய சாலையும் ஆளரவமின்றித்தான் இருந்தது. இந்த இலட்சணத்தில் எங்கே போய் ஆட்டோ தேடுவது? எப்படி வீட்டுக்குச் செல்வது? வேலையில் மூழ்கியதில் ப்ரதாப் நம்பரைக் கூட வாங்கவில்லை.அதனால் தான் இந்த நாடகம்…
ஆட்டோ டிரைவர் யோசிப்பதில் தன்னை நம்பிவிட்டதாக அமிழ்தா உள்ளுக்குள் குதூகலிக்க அவரோ தன் சட்டைப்பையினுள் துழாவி இரண்டு ஐம்பது ரூபாய்களை எடுத்து அவள் கையில் திணித்தார்.
“என்னால இவ்ளோதான்மா முடியும்…பத்திரமா போய்ச் சேர்ந்துரும்மா…” என்றபடி ஆட்டோவை எடுத்துக்கொண்டு அவர் கிளம்பிவிட ஆட்டோ சென்ற திசையையே பரிதாபமாகப் பார்த்துக்கொண்டிருந்தவள்,
பின் கையில் படபடத்த இரு ஐம்பது ரூபாய்த்தாள்களைப் பார்த்தாள்.
பின் எப்பொழுதாவது அவரைப் பார்த்தால் கண்டிப்பாகத் திரும்பிக் கொடுத்துவிட வேண்டும் என்ற நினைவுடன் அதனைத் தன் கையிலேயே வைத்திருந்த பணப்பையில் பத்திரப்படுத்தினாள்.
பின்னாலிருந்து ‘ஹ்க்கும்’ என்றொரு செருமல் கேட்க, அவனாகத்தானிருக்கும் என்று தோன்றியதால் பையின் ஜிப்பை மூடுவதிலேயே கவனம் போலக் காட்டிக்கொண்டிருந்தாள்.
“எவ்வளவு நேரம் தான் மூடுன ஜிப்பையே திரும்பத்திரும்ப மூடுவதாக உத்தேசம்?”
அருளாளனுடைய குரல் தான் என்றதும் மேலும் தீவிரமாக ஜிப்பை ஆராய்ச்சி செய்யத் தொடங்கினாள்.
ஒரே ஒரு சந்திப்புதான் என்றாலும் அவனுடைய குரல் அவளுள் ஆழமாகப் பதிந்திருந்தது.
பிடிவாதம் பிடிக்கும் குழந்தை போல முகத்தை வைத்திருந்த அவளைக் கண்டு மெலிதாகப் புன்னகைத்தவன் “நான் கலெக்டர் குவார்ட்டஸ் பக்கமாத்தான் போறேன்.வர்றவங்க வரலாம்…”என்று எங்கேயோ பார்த்து சொல்லி விட்டு நடக்கத்தொடங்கினான்.மெதுவாகத்தான்…
அவன் சில அடி தூரம் நகர்ந்ததும் அமிழ்தா தன்னுடைய ஆராய்ச்சியை விட்டுவிட்டு, அவனைப்பின்தொடர்ந்தாள்.
சற்று நேரம் ஒன்றும் பேசாமலேயே நடந்தவர்கள் தற்போது அருகருகே நடக்கத்தொடங்கியிருந்தனர்.
தன்னுடைய மௌனத்தைக் கலைத்த அமிழ்தா “ஸாரி,யார் மேலயோ இருக்கக் கோபத்தை உங்க மேல காட்டுனது தப்புதான்”என்றாள் தலையைக்குனிந்து கொண்டு.
“நோ ப்ராப்ளம்” என்று புன்னகைத்தவன், “என்ன பிரச்சனை? எங்கிட்ட சொல்லணும்ன்னு தோணுன்னா சொல்லலாம்” என்று மென்மையாக வினவே,
என்ன தோன்றியதோ, “அது…அரசன்…சக்தியரசன்…என்னோட க்ளோஸ் பிரெண்ட்…இன்னும் சொல்லணும்ன்னா உடன்பிறவா உடன்பிறப்புன்னு கூட சொல்லலாம். ஒரு வருசத்துக்கு முன்னாடி வரைக்கும் நான் அவனுக்குத் தெரியாமலோ அவன் எனக்குத் தெரியாமலோ ஒண்ணுமே பண்ணதில்ல. ஆனா இப்ப இங்க வந்து அந்த அருணாச்சலத்துகிட்ட டிரைவரா வேலை பாத்துருக்கான். இப்ப அவரை அப்பாங்குறான். அது கூட பரவால்ல… என்னைத் துரோகிங்கறான்… ஒண்ணுமே புரியல…” என்றாள் பரிதாபமாக.
“ம்ம்ம்…அவருக்கும் உங்களுக்கும் ஏதாவது சண்டை….இல்லன்னா மனஸ்தாபம்?”
“ம்ஹீம் இல்ல…எனக்கு போஸ்டிங் போட்டப்ப கூட அவன்ட்ட தான் முதல்ல சொன்னேன். ரொம்ப சந்தோஷமா என்னை வழியனுப்பி வச்சான்.அதுதான் அவனை இதுக்கு முன்னாடி பாத்தது.அதுக்கப்பறம் இப்பதான் பாக்குறேன்.ஆனா இப்ப இங்க வந்து டிரைவர் வேலை பாத்துகிட்டு இருக்கான்.என்னைத் துரோகிங்குறான்…”
அவளுடைய குரலில் ஆழமான கவலை தெரிந்தது.
ஏனோ அவளுடைய கவலைக்குரல் அவனுக்கு என்னவோ போல் இருந்தது.
அவளைச் சற்றுத் திசைதிருப்ப எண்ணி,
“ஏங்க…அவர் உங்களத் திட்டுனத விட அவர் டிரைவர் வேலை பாத்ததுக்குத் தான் ரொம்ப கவலைப்படுறீங்க… நீங்க கலெக்டர் வேலை பாத்தா எல்லாரும் கலெக்டர் வேலைதான் பாக்கணுமா?” என்றான்.
“ப்ச்…முதுகலை சட்டம் படிச்சுட்டு சுப்ரீம் கோர்ட்டுல பிரபலமான வக்கீல் கிட்ட ஜீனியரா பிராக்டீஸ் பண்ணிகிட்டு இருந்த கோல்ட்மெடலிஸ்ட், அத விட்டுட்டு இங்க வந்து டிரைவர் வேலை பார்த்துகிட்டுஇருந்தா ஒரு பிரெண்டா நான் அத பத்தி யோசிக்கக் கூடாதா?”
“யோசிக்கலாம்…யோசிக்கலாம்…ஆனால் அதெல்லாம் மண்டைல்ல மசாலா இருக்குறவங்க பண்ற வேலையாச்சே…நீ எப்படின்னு தான் ஆச்சரியமா இருக்கு…” சரியான நூல் கிடைத்துவிட்டதென அவன் சிரிக்காமல் வியந்தான்…
முதலில் “ம்ம் அது..” என்றவள் பின் அவன் சொன்னதன் முழு அர்த்தம் மண்டையில் ஏற அவனை ருத்ரகாளியாய் முறைத்தாள்.
பின், “ஆமா என்கிட்ட பேர்கூட சொல்ல நம்பிக்கை இல்லாதவர் கிட்ட என்னுடைய சரித்திரத்தையே ஒப்பிச்சுகிட்டு இருக்க எனக்கு மண்டைல மசாலா இல்லதான…நீங்க சொல்றது சரிதான்…வீடு இருக்க தெரு வந்துருச்சு. இன்னைக்கும் வழித்துணையாய் வந்ததுக்கு தேங்க்ஸ்”என்றுவிட்டு அவள் செல்ல முயல,
“அமிழ்தா ஒரு நிமிஷம்…”
நின்றாள்… ஆனால் இவன்புறம் திரும்பவில்லை.
“என்னோட பேர் அருளாளன்…”
இவன்புறம் சடக்கெனத் திரும்பினாள்.
காலையிலிருந்து கேட்டுக்கொண்டிருக்கும் பெயரல்லவா?
“நானும் உன்னை மாதிரி கலெக்டராத்தான் இருந்தேன், இதே ஊரில…ரெண்டு வருசத்துக்கு முன்னாடி செத்துட்டேன். இப்ப பேயா உலாத்திட்டு இருக்கேன்…டீடெய்ல்ஸ் போதுமா?”
அமிழ்தா இமைக்க மறந்து அவனையே உறுத்து விழித்திருக்க,அவன் தொடர்ந்தான்.
“இந்த ரெண்டு வருசத்துல நான் யாரோட கண்ணுக்கும் தென்பட்டதில்ல…ஆனா நீ கலெக்டரா இருந்தாலும் சின்னப்பொண்ணு…அதோட ரொம்ப நல்லப்பொண்ணு. உனக்கு யாராலயும் எந்த விதத் துன்பமும் ஏற்பட்டுறக் கூடாதுங்கறதுக்காகத் தான் உனக்கு உதவிக்கு வந்தேன்.இந்த ஊர் ரொம்ப மோசமான ஊர். கவனமா இரு…உனக்கு எப்ப எந்த உதவி தேவைப்பட்டாலும் என்னை நீ மானசீகமாகக் கூப்பிட்டாலே நான் அங்க இருப்பேன்.சரியா? போய்த் தூங்கு.” என்று விட்டு திரும்;பி நடக்கத் துவங்கினான்.
“மிஸ்டர் கோஸ்ட்,” அவளது குரல் அதிகாரமாய் ஒலிக்க திரும்பி அவளை ஏறிட்டான் அருளாளன்.
அவனருகே வந்தவள், “பொண்ணுன்னா பேயும் இரங்கும்ன்னு நான் வெறும் பழமொழியா தான் கேள்வி;ப்பட்டுருக்கேன்.நீங்க அத உண்மைன்னு நிரூபிச்சிட்டீங்க பேய் சார். ஐம் பீல் வெரி ப்ரௌட் ஆப் யூ,அப்படியே நெகிழ வச்சுட்;டிங்க…” என ஒற்றை விரலால் நாடகப்பாணியில் வராத கண்ணீரைத் துடைத்தாள்.
அவள் அவன் சொன்னதை நம்பவில்லை என்று புரிந்தது…
உண்மையில் அவளது செய்கையில் அருளாளனுக்குச் சிரிப்புதான் வந்தது.
ஆனால் அதனைக் காட்டாமல் விறைப்பாகவே நின்றான்.
“அநேகமா நீங்க வியூஸ்ஸே வராத குறும்படம் எடுக்குற ஷார்ட் பிலீம் டைரக்டர்ன்னு நினைக்குறேன்.அதுக்கு லொகேஷன் பாக்கத்தான இப்படி தெருத்தெருவா சுத்திகிட்டு இருக்கீங்க…எனக்குப் புரியுது. நான் வேணா உங்களுக்கு ஒரு யோசனை சொல்லட்டுமா” என்று ஹஸ்கி வாய்ஸில் கேட்டவள்,
சுற்றும் முற்றும் பார்த்து விட்டு அவனது உயரத்திற்கு எம்பி, அவனது காதில், “நீங்க நல்லா கதை சொல்றீங்க உண்மை மாதிரியே.
ஆனா என்ன ….கதை தான் ரொம்பக் கேவலமா இருக்கு…இனிமேலாவது நல்லக் கதையா யோசிங்க…பை…குட்நைட்” என்று விட்டு வீட்டை நோக்கி ஓடினாள்.
அவள் ஓடுவதைப் புன்னகையுடன் பார்த்திருந்த அருளாளனின் மனதில், ‘இவளைத் தான் உயிரோடு இருக்கும்போது பார்த்திருக்கலாமே’ என்றொரு எண்ணம் வர ,அதை உணர்ந்தவன், திகைத்துப் போய்ச் சிலையாகச் சமைந்தான்…
(தொடரும்…)
Interesting
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Interesting 👏👏👏