Skip to content
Home » டாக்டர் ரஜினிகாந்த் அத்தியாயம் 12

டாக்டர் ரஜினிகாந்த் அத்தியாயம் 12

ஷாலினியின் அழைப்பு வந்த பிறகே அவனது உள்ளுணர்வு ஆராய்ச்சிப் பாதையில் நகரத் துவங்கி இருந்தது.

நேரம் இரவு எட்டு மணி. அன்றைக்கான கருத்தரங்குகள் முடிந்து இருக்க இரவு உணவுக்காக அனைவருமே கூடி இருந்தனர் அந்த உணவுக் கூடத்தில். மதியம் உணவருந்திய அதே அரண்மனை கூடத்தில்.

சாண்டலியர் விளக்குகள் இப்போது இன்னும் அதிகமாக மின்னிக் கொண்டிருந்தன. வெளியில் மழை சிறு தூறலாக மாறிப் போயிருந்தது.

டாக்டர் கணபதியில் துவங்கி ரஜினி மஹதி ஸ்ரீதேவி என அனைவருமே இருந்தனர் அங்கே.  இவனைத் தனியே விடாமல் இவனுடனே சுற்றிக் கொண்டிருந்தாள் மஹதி. அது ஸ்ரீதேவியின் பார்வையில் பட்டுக் கொண்டேதான் இருந்தது. பல வகை உணவு வகைகளை ருசித்தபடியே ஒவ்வொன்றை பற்றியும் அவனிடம் கதை அளந்து கொண்டிருந்தாள் அவள்.

“கமான் ரஜினி. என்னை ஏன் அவாய்ட் பண்றீங்க? சரி கல்யாணம் பத்தி நான் இப்போ எதுவும் பேசலை. வாங்க சேர்ந்து சாப்பிடலாம்” அவளைத்  தவிர்க்க முயன்றவனை பார்த்து கேட்கவும் செய்தாள் மஹதி.

அவளைத் தவிர்க்க நிறையவே காரணங்கள் இருக்கின்றன என்பதை அப்போது சொல்லிக் கொள்ளவில்லை. இவன். எப்படியும் இந்த விளையாட்டுகள் சீக்கிரமே ஒரு முடிவுக்கு வரும் எனத் தோன்றிக் கொண்டேதான் இருந்தது அவனுக்கு.

ஒரு கட்டத்தில் மஹதியிடம் பேசுவது ஸ்ரீதேவியை தனதருகில் வர வைக்கும் எனும் நம்பிக்கையுடன் அவளுடனே அமர்ந்து உணவருந்த ஆரம்பித்து இருந்தான் நமது நாயகன்.

“என்ன? பிரியாணி முழு கட்டு கட்டறீங்க போல மஹதி?”

தட்டின் ஓரங்களில் அழகான யானையின் படங்கள் அலங்கரித்து இருக்க, அதில் எளிமையான உணவு வகைகள் சிலதை மட்டும் அடுக்கிக் கொண்டு வந்து  அவள் எதிரில் இருந்த  சோபாவில் புதைந்து அமர்ந்து கொண்டே சின்ன புன்னகையுடன்  கேட்டான் ரஜினிகாந்த்

“கண்டிப்பா. விதம் விதமான பிரியாணி  இருக்கு டாக்டர். நீங்க ட்ரை பண்ணலையா?”

ஒரு அழகிய  சிரிப்பு எழுந்தது அவனிடம் “சொன்னா உங்களுக்கு ஆச்சரியமா இருக்கும். எனக்கு ஏனோ பிரியாணியே  பிடிக்காது”

“என்னது?” மஹதியின் விழிகள் வியப்பில் விரிய இவன் இன்னுமாக சிரிக்க அந்த சிரிப்பை ஜீரணித்துக் கொள்ளவே முடியாததைப் போலவே பார்த்திருந்தாள் ஸ்ரீதேவி.

‘அவர்கள் இருவருக்கும்தான் வாழ்க்கை என்று முடிவான பிறகு அவர்கள் சிரிப்பதில் உனக்கு ஏன் பொறாமை?’ மனசாட்சி கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் எப்போதும் பஞ்சமே இருப்பது இல்லை.

“அப்போ என்னதான் சாப்பிடுவீங்க?” இது மஹதி

“கொஞ்சம் இட்டாலியன் ட்ரை பண்ணிட்டு டெஸ்செர்ட்ஸ் பக்கம் போயிடுவோம். நிறைய வெரைட்டிஸ் இருக்கு” என்றான் அவன்.

கைக்கெட்டும் தூரத்தில் அமர்ந்து கொண்டு உணவருந்திக் கொண்டிருக்கும் ஸ்ரீதேவியை இருவரும் கவனிக்கவே செய்தனர்.

மூன்று நிமிடங்களுக்கு ஒரு முறை மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டுதான் இருந்தனர் என்றாலும் யாரும் எந்த உணர்வையும் வெளிக் காட்டிக் கொள்ளவில்லை.

இத்தனை நேரம் ஆகியும் தோழியர் இருவரும் ஒருவரைப் பார்த்து ஒருவர் புன்னகைத்துக் கொள்ளக் கூட இல்லை.

அடுத்த சில நிமிடங்கள் கழித்து ரஜினிகாந்த் மஹதி என இருவரும் அடுத்த சுற்று உணவுகளுக்காக எழுந்து நடந்தனர். கேக்குகள் இனிப்புகள்  நிறைந்து இருந்த பகுதியை அவர்கள் தொட்ட நேரத்தில்

‘இந்த கேக் ட்ரை பண்ணுங்க ரஜினி. இட்ஸ் எக்ஸலென்ட்.” ஒரு கேக்கை எடுத்து அவனுக்கு அவள் ஊட்டி விட முயல, அவன் அதை கையில் வாங்கிக் கொள்ள முற்பட, அதற்குள்ளாக  அவர்கள் இருவருக்கும் நடுவில் நுழைந்து இருந்தாள் ஸ்ரீதேவி.

“எக்ஸ்கியூஸ் மீ” அவள் உச்சரித்த அந்த இரண்டு வார்த்தைகளில் அத்தனை சூடும் அழுத்தமும்.

ஒரு முறை இருவரையும் பார்த்து விட்டு அவர்களை கடந்து நடந்தாள் அவள். அவளது அந்த செய்கை ஆயிரம் அர்த்தங்களை சொல்லாமல் சொல்லியது.

“என்ன வேணுமாம் அவளுக்கு?” இது மஹதி. அவளது பார்வையில் அத்தனை கோபம்.

“ம்?” என்றவன் அதற்கு மேல் எதுவும் சொல்லவில்லை. அவனின் பார்வை அவனது தேவியின் மீதே இருந்தது.

“அதுதான் நீங்க வேண்டாம்னு விலகிட்டா இல்ல. அப்புறம் எதுக்கு இந்த எக்ஸ்கியூஸ் மீ? உங்களைக் கல்யாணம் பண்ணிக்க போறாளாமா அவ?”

“அவ என்னை கல்யாணம் பண்றாளோ இல்லையோ நம்ம கல்யாணம் கண்டிப்பா நடக்காது. நீங்க ஆசைகளை வளர்த்துக்காதீங்க” என்றான் இவன் அவள் முகம் பார்த்து.

தூரத்தில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தாலும் இவர்கள் மூவரையும் மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருந்தார் கணபதி.

அடுத்த கொஞ்ச நேரத்தில் நால்வருமே சாப்பிட்டு முடித்திருக்க  மஹதி தனது கைப்பேசியுடன் நகர்ந்து இருந்தாள். கொஞ்ச நேரம் கடக்க  ஸ்ரீதேவியின் கைப்பேசிக்கு அதே தெரியாத எண்ணில் இருந்து வந்தது அந்த குறுஞ்செய்தி.

“நானும் உன்னை நெருங்க முயன்று தோற்றுவிட்டேன். குறைந்தபட்சம் இந்த சந்திப்பை நினைவில் வைத்துக் கொள்ளும் வகையில் ஒரு புகைப்படமாவது எடுத்துக் கொள்ள விரும்பவில்லையா நீ? எனக்காக வர மாட்டாயா? இப்படி ஒரு சந்தர்ப்பம் மறுபடியும் நமக்கு கிடைக்கப் போகிறதா என்ன?”

அவன் யாருடனோ மும்முரமாக பேசிக் கொண்டிருக்க  இதை கண்டிப்பாக அவன் அனுப்பவில்லை என்று புரியத்தான் செய்தது அவளுக்கு. இங்கே அருகில் இருந்து தங்களை கவனித்துக் கொண்டே இருக்கும் யாரோ ஒருவர்தான் இதை அனுப்புகிறார்கள் என்றும் புரிந்தது அவளுக்கு.

பார்வையால் சுற்றும் முற்றும் அளந்தவளின் மனமோ அந்த குறுஞ்செய்தியின் கடைசி வரியில் சிக்கிக் கிடந்தது.

 “இப்படி ஒரு சந்தர்ப்பம் மறுபடியும் நமக்கு கிடைக்கப் போகிறதா என்ன?”

அவனும் அவளும் சேர்ந்து இருக்கும்படியான புகைப்படம் ஒன்று கூட இல்லை அவளிடம். சேர்ந்து இருப்பது என்ன, அவனது புகைப்படமே இல்லையே அவளிடம். இருவரும் சேர்ந்து ஒன்று எடுத்துக் கொண்டால்தான் என்ன?

“என்ன? டாக்டர் ஸ்ரீதேவி சுமித்ரா நல்லா சாப்பிட்டீங்களா?” ஆபத் பாந்தவன் போல அருகில் வந்து நின்றார் டாக்டர் கணபதி.

“எஸ் எஸ் டாக்டர்” புன்னகைத்தாள் இவள்.

“சரி எனக்கு ஹானஸ்ட் ரிப்ளை வேணும். உனக்கு ரஜினியை தெரியுமா மா?

“இ.. இல்.. இல்லை டாக்டர்” முகத்திலும் உதடுகளிலும் வார்த்தைகளிலும் தடுமாற்றம் மேலோங்க பொய் சொன்னாள் ஸ்ரீதேவி.

“அப்படியா?” புருவங்கள் ஏறி இறங்கின டாக்டர் கணபதிக்கு “ஓகே. கம் வித் மீ. நான் அவனை உனக்கு அறிமுகப் படுத்தி வைக்கிறேன்”

ஒரு வார்த்தை கூட மறுக்காமல் அவருடன் நடந்தாள் அவள்.

“மீட் டாக்டர் ஸ்ரீதேவி சுமித்ரா மை பாய்” வேறெங்கோ பார்த்துக் கொண்டிருந்தவன் அவரது வார்த்தைகளில் சுழன்று திரும்பினான் .

“ஓ கேள்வி பட்டிருக்கேன் சர். நைஸ் மீட்டிங் யூ டாக்டர்” என புத்தம் புதிதாக புன்னகைத்து, அவளை நோக்கி வெகு இயல்பாய் கை நீட்டுவான்  என அவளே எதிர்பார்க்கவில்லை.

“எனக்கு உங்களை பார்க்கணும்ங்கிறதை விட, அது என்னவோ உங்களை தொட்டுப் பார்க்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு” உள்ளம் பரபரத்து நிற்க அதைத் தோற்கடித்து அவனையும் தோற்கடித்து கரம் குவித்தாள் பெண்ணவள்.

“ப்ளெஷர் இஸ் மைன் டாக்டர்” அவளது வார்த்தைகள் துளித்துளியாய் வெளி வந்தன.

அவனது மீசையோரம் சின்னச் சின்ன கோபப் புள்ளிகள் இருந்தாலும், புன்னகைத்து கை குவித்தான் நமது நாயகன். இவர்கள் விளையாட்டை கவனித்துக் கொண்டுதான் இருந்தார் கணபதி.

 “கேன் ஐ ஜாயின் யூ போத் ஃபார் அ ஃபோட்டோகிராஃப்?” கேட்டதும் கணபதிதான்.

அவரது கேள்விக்கு இருவருமே மறுப்பின்றி உடன் பட்டனர். இதை எல்லாம் எங்கிருந்து பார்த்துக் கொண்டிருந்தாளோ நடப்பது அறிந்து அவர்கள் அருகில் வந்து நின்றிருந்தாள் மஹதி.

“நீங்க ரெண்டு பேர் மட்டும் தனியா ஒண்ணு எடுத்துக்கறீங்களா?” கணபதியின் குரலிலும் கேள்வியிலும் ஆயிரம் அர்த்தங்களும் நிறையவே அன்பும்.

இல்லை என்றும் சொல்லாமல் சரி என்றும் சொல்லாமல் இருவரும் அருகருகே நின்றிருக்க “நானும் ஜாயின் பண்ணிக்கலாமா  டாக்டர்” என ஸ்ரீதேவியை பார்த்துக் கொண்டே அருகே வந்த மஹதி, கணபதியின் கூர் பார்வையில் விலகி நின்றாள்.

“நீங்க அவங்க ரெண்டு பேரையும் ஒரு ஸ்நாப் எடுங்க மஹதி” ஆணையிட்டார் பெரிய மருத்துவர்.

சரியென  செயல் படுத்தினாள் அவள். அப்படி இப்படி என சில பல புகைப்படங்கள்  பதிவு செய்யப் பட உள்ளமெங்கும்  பல வகை அழுத்தங்களும் குழப்பங்களும் அலை மோதினாலும் அந்த தருணத்தை இருவருமே ரசித்தார்கள்.

தோளோடு தோள் உரச நின்றார்கள். புன்னகைத்து மகிழ்ந்தார்கள். இந்தத் தருணம் இன்னும் நீடிக்காதா எனும் தவிப்பு இருவருக்குமே மேலோங்கிக் கிடந்தது.

“ப்ரீ வெட்டிங் ஃபோட்டோ ஷூட்  எல்லாம் நமக்கு உண்டா ரஜினி சர்?” கேட்டிருக்கிறாள் முன்பு ஒரு முறை.

“முதலிலே ப்ரீ வெட்டிங் மீட்டிங் நடக்குதான்னு பார்ப்போம். அதுக்கே இங்கே வழி இல்லை”

“ஹலோ மீட் பண்ண வேண்டாம்னு சொன்னது நீங்கதானே?”

“நான்தான் நான்தான் நானேதான்” அப்போது அலுத்துக் கொண்டான் ஒரு முறை “ஆனாலும் நாம ரெண்டு பேரும் முதலில் மீட் பண்ணும் போது உன்னை அப்படியே என்னோட சேர்த்து கட்டிக்கிட்டு  ஒரு செல்ஃபி எடுக்கறேன் பாரு”

‘அப்படியும் செய்து விடுவானோ?’ எனும் ஒரு சிறு ஏக்கம் கூட அவளுக்கு எட்டிப் பார்க்க அவன் இயல்பாகவே  இருந்தான். இவளுக்குள்தான் மகிழ்ச்சி பூகம்பங்கள்.

புகைப்படம் எடுத்து முடிந்ததும் அவன் அவள் பக்கம் திரும்பினான். இருவர் விழிகளும் ஒன்றுக்குள் ஒன்று மூழ்கி கிடக்க மெல்ல புன்னகைத்தான் அவன் “தேங்க்ஸ் ஸ்ரீதேவி டாக்டர்”

சட்டென குளம் கண்டன அவள் கண்கள். ஆனாலும் அதை மறைக்கும் கலையில் வித்தகியாயிற்றே அவள்.

இந்த புகைப்பட விளையாட்டில் கைப்பேசிகள் அங்கும் இங்கும் இடம் மாற அவளது  கைப்பேசி இவனிடத்திலும்  இவனது அவளிடத்திலும் சென்று நின்றிருந்தது. இவர்கள் பழகிக் கொண்டிருந்த காலத்தில் இருவரும் பேசி வைத்துக் கொண்டு ஒரே போன்ற கைப்பேசியை வாங்கிக் கொண்டார்கள். அதன் உறையும் கூட ஒரே நிறம்

அது அவனது கை சேர்ந்த இரண்டாம் நொடியில் அது அவளுடையது என்பதை கவனித்தும் இருந்தான் ரஜினிகாந்த். அவளைத் தன்னிடம் வந்து பேச வைக்க இதை விட ஒரு அழகான சந்தர்ப்பம் அமையும் என்று தோன்றவில்லை அவனுக்கு.

“ஓகே சர் நீங்க எப்போ ரூம்க்கு வரீங்க ?” என்றான் கணபதியைப் பார்த்து.

“நான் வர கொஞ்சம் லேட் ஆகும்ப்பா. நீ போய் ரெஸ்ட் எடு” கணபதி சொல்லி விட,

“கிரேட் மீட்டிங் யூ டாக்டர் ஸ்ரீதேவி” என அவளிடமும்  விடைப் பெற்றுக் கொண்டு அங்கிருந்து விறு விறுவென நகர்ந்து இருந்தான் நமது மருத்துவன்.

அடுத்த இரண்டாவது நிமிடத்தில் தனது கையில் இருந்த கைப்பேசி தனதில்லை என்பதை உணர்ந்தாள் நமது மகளிர் நல மருத்துவர். ஒரு வேளை  இது அவனுடயதாக இருக்குமோ எனும் எண்ணம் அடுத்து மின்னலென எழுந்தது.

அதே நேரத்தில் அந்த உணவு அரங்கத்தை தாண்டிய ஒரு வரவேற்பு பகுதியில்தான் நின்றிருந்தான் அவன். தரையில் இருந்த பளிங்கு கற்கள் மேலே இருந்த விளக்கொளியை பிரதிபலித்து மின்னிக் கொண்டிருந்தது.

இரவு நேர சோளா ஹோட்டல் பல நூறு விளக்குகளின் ஒளியின் தகதகத்துக் கொண்டிருந்தது. வெளியே மழை அதன் பங்குக்கு மிதமாக விளையாடிக் கொண்டிருந்தது

“என் மொபைலுக்கு  மட்டுமில்லை எனக்கும் நீங்கதான், உங்க பிறந்தநாள்தான் பாஸ்வோர்ட் ஸ்ரீதேவி டாக்டர்” முன்பொரு முறை சொல்லி இருக்கிறான் இவன்.

படபடவென இவள் எண்களை அழுத்த திறந்து கொண்டது அவனது கைப்பேசி. அவசரமாக தனது எண்ணை அவள் அழுத்த அழைப்பு செல்லவில்லை. அவள்தான் அவனது எண்ணை மறித்து வைத்திருக்கிறாளே.

அவள் தனது கைப்பேசியில் இருந்து அழைக்க முயல்வாள் என்பதை ஊகித்து இருந்தான் ரஜினிகாந்த். அவளது கடவு எண்ணையும் அறிந்துதானே இருந்தான் இவன். வெகு இயல்பாக கைப்பேசியை திறந்தவன் அவள் மறித்து வைத்திருந்த இவன் சம்மந்தப் பட்ட எண்களை  எல்லாம் விடுவித்தான்.

பின்னர் அழைத்தான் தனது எண்ணை. “மை லைஃப்” என்று அவள் அவனது எண்ணை பதிந்து வைத்திருப்பது அப்போதுதான் தெரிய வந்தது அவனுக்கு.

அடுத்த இரண்டாம் நொடியில் ஸ்ரீதேவி டாக்டர் என்று ஒளிர்ந்தது அவளது  கையில் இருந்த கைப்பேசி திரை. அவசரமாக ஏற்று விட்டாள் அழைப்பை.

“என் மொபைல் ?” அவனது  குரல் வரும் முன்பே படபடத்தாள் இவள்.

“உன்கிட்டே கொஞ்சம் பேசணும். இங்கே ராஜேந்திரா ஹால் பக்கத்திலே இருக்குற லாபிலே  இருக்குற எஸ்கலேட்டர்  கிட்டே இருக்கேன் வா” என்று சொல்லி விட்டு அழைப்பை துண்டித்து இருந்தான் ரஜினிகாந்த்.

அடுத்த மூன்றாம் நிமிடத்தில் அவனருகில் இருந்தாள் அவனது காதலி. நிமிர்ந்து அவன் முகம் பார்க்கவில்லை அவள் .

அங்கே ஒரு அரசன் குதிரையில் செல்வதைப் போல இருந்த ஒரு நவீன ஓவியத்தில் பார்வையை வைத்தபடியே “என் ஃபோன் குடுக்கறீங்களா” என்றாள்  அவள்.

“ரூம்க்கு போய் பத்து நிமஷம் பேசிட்டு உன் மொபைல்  வாங்கிட்டு போ” என அவளது கைப்பேசியை தனது பேன்ட் பாக்கெட்டுக்குள் திணித்துக் கொண்டு நகரும் படிக்கட்டுகளை நோக்கி நடந்தான் நமது நாயகன்.  

“நான் எங்கேயும் வரலை..எனக்கு..”

“இங்கே வெச்சு ஸீன் கிரியேட் பண்ணாதே” அவளது முகம் பார்த்து சொன்னவனின் தொனியிளும் விழிகளிலும் சூடு இருந்தது. “ரூம்க்குப்  போய் பேசிட்டு போகலாம்”

அதற்கு மேல் எதுவும் வாதிட விரும்பாமல் அவன் பின்னால் நடந்தாள் பெண்.  அவனுடைய அறை இருக்கும் தளத்தை அடைந்து அறையை நோக்கி நடந்தார்கள். வழியெங்கும் அங்கங்கே பண்டைய காலத்து பொருட்களின் வடிவங்களில் பொருட்களும், ஓவியங்களும் சிரித்துக் கொண்டிருக்க, அவை எதையும் ரசிக்கும் மனநிலை இப்போது இல்லை இருவருக்கும்.

அறையை அடைந்து கதவைத்  திறந்தான் ரஜினி காந்த். சில்லென்ற ஏ.ஸி காற்று இருவரையும் ஓடி வந்து தழுவிக் கொண்டாலும் இருவரின் அலைபாய்ந்த மனதையும் தேற்ற முயன்று தோற்றுத்தான் போனது அது.

கதவை மூடி விட்டு  அவளது அருகில் வந்தான் ரஜினிகாந்த்.

“இப்போ சொல்லுங்க ஸ்ரீதேவி டாக்டர். என்னதான் பிரச்சனை உங்களுக்கு?”

தொடரும்

அத்தியாயம் 13

டாக்டர் ரஜினிகாந்த் 13 – Praveena Thangaraj Novels

11 thoughts on “டாக்டர் ரஜினிகாந்த் அத்தியாயம் 12”

  1. Avatar

    ஸ்ரீதேவியின் ஒவ்வொரு ஆசையும் நிறைவேறுகிறது. அவள் ரஜினியோடு கை கோர்க்கும் நாளும் விரைவில் வரட்டும். இருவருக்கும் இடையேயான அன்பு இன்னும் உயிரூட்டத்துடன் இருப்பதால் தான் விலகிய பின்னும் சேரும் வாய்ப்பைத் தருகிறது காலம். சேர்வார்களா ? இதமான அத்தியாயம்

  2. Avatar

    கிடைக்கிற கேப்ல எல்லாம் சிக்ஸர் அடிக்கிறார்ப்பா நம்ம டாக்டர் சர்.,.

    இனியாவது என்ன காரணம்ன்னு ஶ்ரீதேவி டாக்டர் சொல்லட்டும்….
    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  3. Avatar

    இப்ப சொல்லுங்க ஸ்ரீதேவி டாக்டர் என்ன என்னதான் பிரச்சனை, இப்ப வரும் பாருங்க ஒரு முடிவு

  4. Kalidevi

    Who oru feel aguthu story padikum pothu athu kuda ve sernthu poitu iruka mari manasula irukuratha kekura mari ippadi namalaium kepangalanu ethir pakura mari azhaga move aguthu story just oru story mari paka mudila namma kuda irukan oru aal oru friend ku nadakura mari .
    Feeling good🥰

  5. Avatar

    ஸ்ரீதேவி டாக்டர் என்ன பிரச்சனைன்னு சொல்லிருவாங்களா நம்ம ரஜினி சார் இவ்வளவு நாள் மெதுவா இருந்துட்டு இப்ப ஜெட் வேகத்தில் போறார்

  6. Avatar

    ஶ்ரீதேவி உங்க மனசை விட்டு பேசுங்க மா… இப்படி கெஞ்ச விடுறீங்களே இது சரியா…. மஹதி என்ன தான் உங்களுக்கு வேணும்னு இப்படி நடந்துகிறீங்க… சரி ரஜினி சார் க்கு msg பண்ணுறது ரமேஷா அப்போ ஶ்ரீதேவி க் கு msg பண்ணுறது யாரு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *