Skip to content
Home » டாக்டர் ரஜினிகாந்த் அத்தியாயம் 3

டாக்டர் ரஜினிகாந்த் அத்தியாயம் 3

அதே நேரத்தில் பெங்களூர் நகரின் இன்னொரு பகுதியில் இருந்த அந்த பன்நோக்கு மருத்துவமனையும் தீபாவளியை மறந்து இயங்கிக் கொண்டுதான் இருந்தது.

அது ரஜினிகாந்தின் அன்னை அனுமதிக்கப் பட்டிருக்கும் அதே மருத்துவமனைதான். அந்த மருத்துவமனையில் இருந்த ஒரு அறைக்குள் நேற்று பிறந்த ஒரு குழந்தையின் தொடர் அழுகுரல் கேட்டுக் கொண்டே இருந்தது.

அந்த அறையை கடந்து நடந்த அந்த மருத்துவர், சற்றே நின்று யோசித்து விட்டு, பின்னர் கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தாள்.

அவள் அணிந்திருந்த இளம் மஞ்சளும் பச்சையும் கலந்த சிறு சிறு பூக்கள் வரைந்த டாப்சும் கறுப்புப் பேண்டும் அதன் மேல் இருந்த வெள்ளைக் கோட்டும் அவளுக்கு அழகையும், கம்பீரத்தையும்  கொடுக்கத்தான் செய்தன.

“வாங்க டாக்டர்” சட்டென எழுந்து வரவேற்றார் அங்கே இருந்த அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு பெண். “நானே உங்களை கூப்பிடணும்னு இருந்தேன்” என்றார் அழகு தமிழில்.

“ஏன் பாப்பா. இவ்ளோ அழறா?” என்றபடியே அங்கே தொட்டிலில் இருந்த குழந்தையை வெகு லாவகமாக அள்ளிக் கொண்டாள் அந்த மருத்துவர்.

“பசி டாக்டர்” இது குழந்தையின் அம்மா. அந்த பெண்ணுக்கு இருபத்தி ஒன்பது வயது.

“நேத்து மதியம் பிறந்தது.  இன்னும் சரியா பால் குடிக்கலை. எனக்கு தாய்ப்பால் சுரக்கலை டாக்டர். நீங்க குழந்தைக்கு  ஆறு மாசத்துக்கு வேறே எதுவும் கொடுக்கக் கூடாது தாய்ப்பால் மட்டும்தான்னு  சொல்லிட்டீங்க. அது பசியிலே கத்துது. குழந்தைகள் டாக்டர் வந்து கொஞ்ச நேரம் பார்ப்போம், இல்லேன்னா குழந்தைக்கு ட்ரிப்ஸ் போட்டுடுவேன்னு சொல்லிட்டு போறாரு. எனக்கு பயமா இருக்கு டாக்டர்.” அந்தத் தாயின் குரலில் கண்ணீரும். கொஞ்சம் கோபமும், கொஞ்சம் ஆதங்கமும் , கொஞ்சம் பயமும் என எல்லாமும் கலந்து நின்றது.

இப்போது ஒரு சிறு புன்னகை வந்தது இந்தப் பெண் மருத்துவரின் இதழ்களில். அவள் குழந்தையை லாவகமாக ஏந்திக்  கொண்ட விதத்திலேயே அதன் அழுகை கொஞ்சம் மட்டுப்பட்டு இருந்தது.

“கொஞ்சம் முயற்சி பண்ணா பாப்பா அழகா பால் குடிப்பா. இருங்க ட்ரை பண்ணலாம்” என அவள் அந்த குழந்தையின் அம்மாவின்  அருகில் வர

“எனக்கு பால் வரலை டாக்டர்” என்றது அந்தப் பெண்.

இப்போதும் புன்னகை மாறவில்லை நமது மருத்துவரின் இதழ்களில். “நீங்க என்கிட்டே முதலிலே வரும் போது என்ன சொன்னீங்க? எனக்கு இந்தப் பிரச்சனை இருக்கு, அந்தப் பிரச்சனை இருக்கு. குழந்தையே பிறக்காது. முயற்சி பண்றது எல்லாம் வேஸ்ட் அப்படி இப்படின்னு சொன்னீங்க. இப்போ ஒரே வருஷத்திலே ராணி மாதிரி வந்து பிறந்து இருக்கா பாப்பா. அதுவே நடக்கும் போது பால் வராதாமா? ஆபரேஷன் பண்ணி குழந்தையை எடுத்ததினாலே பால் சுரக்க கொஞ்ச நேரமாகும் அவ்ளோதான். குழந்தை குடிக்க ஆரம்பிச்சா எல்லாம் சரியாகிடும்” என்றபடியே அங்கே இருந்த அழைப்பு மணியை அழுத்தி  வெளியே இருந்த நர்சை அழைத்தாள் மருத்துவர்.

அடுத்த சில நிமிடங்களில் அந்த பெண் சரியான வகையில் அமர்ந்திருக்க அவள் கையில் குழந்தையை கொடுத்தாள் மருத்துவர். அவளது விரல்கள் குழந்தையின் கன்னம், உள்ளங்கால் என சில இடங்களில் வருடி விட, சில நிமிட முயற்சிக்குப் பின் குழந்தை  மெல்ல மெல்ல பால் அருந்தத் துவங்கியது. ஒரு மாயம் போலவே அந்தப் பெண்ணின் தாய்ப்பால் அந்த குழந்தையின் பசியை ஆற்ற துவங்கி இருந்தது.

“நீங்க தெய்வம் டாக்டர்” என அந்த மருத்துவரின் கையை பிடித்துக் கொண்டாள் அந்தப் பெண்ணின் தாய் “என் பொண்ணுக்கு குழந்தை பிறக்கவே பிறக்காதுன்னு நினைச்சேன். எல்லாம் உங்க கை ராசி. ஊருக்குள்ளே சும்மாவா உங்களை கைராசி டாக்டர்ன்னு சொல்றாங்க. இதோ நீங்க தொட்டதும் என் பேத்தி பால் குடிக்குறா”

“அதெல்லாம் ஒண்ணுமில்லைம்மா. ஆண்டவன் எந்த நல்ல விஷயத்தை எந்த நேரத்திலே கொடுக்கணுமோ அந்த நேரத்திலே சரியா கொடுப்பான்” என புன்னகைத்தாள் அவள்.

மகளிர் நலம் மற்றும் முதியோர் நலம் இரண்டுமே படித்து, தனது தொழிலை உயிராக நினைத்து மதித்து, காதலித்து  பணியாற்றிக் கொண்டிருக்கும் இளம் வயது மருத்துவர் தான் அவள்.

“உங்க பேர் என்னம்மா?” கேட்டாள் அந்த இளம் பெண்ணின் தாய்.

“ஸ்ரீதேவி”

“அய்யோ.. அத்தனை அழகான பேரு. எனக்கு நடிகை ஸ்ரீதேவி ரொம்ப பிடிக்கும்”

“ஓ.. அப்படியா? சரி நான் வரேன் மா” அவள் நகர எத்தனிக்க

“உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா மா” அந்தப் பெண்மணி கேட்டு வைக்க இவள் இல்லையென தலையசைக்க

“சீக்கிரமே உங்களுக்கு ஒரு ரஜினிகாந்த் கிடைக்கட்டும்” சொல்லியும் விட்டாள் அந்தப் பெண். ஒரு நொடி நின்று பின் துடித்தது அவளது  இதயம்

“தப்பா நினைக்காதீங்க. எனக்கு சினிமாவிலே அந்த ஜோடி ரொம்பப் பிடிக்கும்”

“அதெல்லாம் நினைக்கலை” காற்று போலத் தான் வந்தது நமது மருத்துவரின் குரல்.

ரஜினிகாந்த்! அது அவளது வாழ்க்கையை மாற்றிப் போட்ட ஒரு பெயர்தானே.

நேரில் ஒருவருக்கு ஒருவர் பார்த்துக் கொள்ளாமலே, வளர்ந்த அந்த காதல்!  அதை உடைத்துப் போட்டது யார்? வேறே யார். இவள்தான்.

‘காரணம்? காரணம் அவனுக்கு இதுதான் நல்லது என்று இவள் முடிவு செய்து கொண்ட அவனது  நலமா? அல்லது இவளது சுய நலமா?’ யோசித்தபடியே அந்த அறையின் கதவை சாத்திக் கொண்டு வெளியே வந்தாள் ஸ்ரீதேவி.

முன்பொரு முறை அவளிடம் சிகிச்சைக்கு வந்த அவனது அன்னையின் மூலமாகத்தான் திருமணப் பேச்சு வந்தது. திருமணப்  பேச்சு வருவதற்கு முன்பாகவே அவனது  அன்னையின் மருத்துவர் எனும் முறையில் அவனுடன் பல முறை பேசி இருக்கிறாள் இவள்.

ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக அவனுடைய அன்னைக்கு அவசர சிகிச்சையாக அவருடைய கர்ப்பபையை நீக்க வேண்டி வந்த நேரத்தில் ரஜினிகாந்த் இருந்தது வெளிநாட்டில். மூன்று மாத ஆராய்ச்சி படிப்புக்காக இவன் அமெரிக்கா சென்றிருந்த நேரமது.

அவனுடைய தங்கை அப்போதுதான் டெல்லியில் புது வேலையில் சேர்ந்திருக்க, இங்கே அவனது அன்னையும் தந்தையும் மட்டுமே இருக்க வேண்டிய நிலை.

அறுவை சிகிச்சை என்றதும் அத்தனை பயம் அவனது அன்னைக்கு. மகன் வெளிநாட்டில் இருப்பது வேறு அவரது தைரியத்தை பல மடங்கு குறைத்து இருந்தது.

மகனின் எண்ணைக் கொடுத்து, அவனை அழைத்து பேசச் சொன்ன அவனது அன்னை யமுனாவை பார்க்கப் பாவமாக இருந்தது ஸ்ரீதேவிக்கு.

அவனுடைய எண்ணை வாங்கி அதைப் கைப்பேசியில் பதித்துக் கொண்டு அன்னையின் சிகிச்சை சம்மந்தமாக பல முறை பேசி இருக்கிறாள் அவனிடம்.

‘எஸ் டாக்டர் ஸ்ரீதேவி” இப்படிதான் துவங்குவான் எப்போதும். அவனது வார்த்தைகளிலும் குரலிலும் இருக்கும் கண்ணியமும், கம்பீரமும் அப்போதே அவளைக் கவரத்தான் செய்தது.

அவனுடய அன்னை முற்றிலுமாக குணமாகி, அவன் வெளிநாட்டில் இருந்து திரும்பி, இருவர் வீட்டிலும் திருமணப் பேச்சு வந்து இருவரும் பேசிக் கொள்ளுங்கள் என்று இரு பக்க பெரியவர்களும்  சொன்ன பிறகு அவனது எண்ணை எடுத்து வைத்துக் கொண்டு, என்னவென துவங்கலாம் குறுஞ்செய்தியை என இவள் யோசித்துக் கொண்டிருந்த போதே அங்கிருந்து வந்தது குறுஞ்செய்தி

“ஹாய் ஸ்ரீதேவி டாக்டர் சொல்லுங்க”

அவனது டாக்டர் ஸ்ரீதேவி, இப்போது ஸ்ரீதேவி டாக்டர் என மாறிப் போயிருந்தது.  அதோடு இவள் துவங்குவதற்கு முன்னால் அவன் முந்திக் கொண்ட விதமும் சட்டென ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தியது பெண்ணுக்கு.

“எஸ் டாக்டர் சொல்லுங்க” இவள் மெல்ல அழுத்தினாள் வார்த்தைகளை.

“கால் பண்ணவா?” அதிலும் அவனே முந்திக் கொண்டான்.

“சரி” என்று சென்றது இவளது பதில். மூன்றாம் நொடி  அழைப்பு ஒலித்தது.

படித்தது மருத்துவம். எத்தனையோ மனிதர்களுடன் சரளமாக பேசி வளைய வருவது இவளது வாடிக்கையாக இருந்த போதும், அவ்வளவு ஏன் இதற்கு முன் அவனுடன் பல முறை பேசி  இருக்கிறாள் என்ற போதும் கூட, இன்று கொஞ்சம் படபடத்துத்தான் போனது ஸ்ரீதேவிக்கு.

அழைப்பை ஏற்று மெலிதான ஒரு “ஹலோ”வுடன் இவள் ஆரம்பிக்க கொஞ்சம் மௌனம் அங்கே.

அவன் இப்போது இவளது குரலை ரசிக்கிறானோ என்று ஒரு எண்ணம் வந்து போனது இவளுக்கு. இத்தனை நாட்களாக ஒரு வித மரியாதை கலந்த பேச்சுக்கள்தான் ஓடி இருக்கின்றன இருவரிடத்திலும்.

“கட்டிக்கறீங்களா ஸ்ரீதேவி டாக்டர்” அவனது முதல் கேள்வி மென் தூறலாய் வந்து விழ சில்லென சிலிர்த்து போனாள் இவன்

“ஆங் என்னது?” அவளது குரலே கூட புன்னகைத்து இருக்குமோ என்னவோ அவனுக்குள் புது உற்சாகம்

“அது என்னமோ நான் உங்களை பொண்ணு பார்க்க வரணுமாமே. சரி அப்படின்னு, உங்களுக்கே தெரியாம உங்களை பொண்ணு பார்க்குற ப்ளான்லே சீக்ரெட்டா உங்க ஹாஸ்பிட்டல்க்கு அம்மாவோட வந்து காத்திருந்தேன். எங்கே? ரெண்டு சி.செக்ஷன். ரெண்டு நார்மல் டெலிவரி ஸ்ரீதேவி  டாக்டர் இந்தியாவோட ஜனத்தொகையை கூட்டுவதிலே  மும்முரமா இருந்தீங்க. எனக்கு மட்டும் கால்ஷீட் கிடக்கவே இல்லை. சரின்னு திரும்பி வந்திட்டேன்.” கணீர் என்ற அவனது  குரல் படபடவென பேசி முடிக்க சிரித்து விட்டாள் இவள்.

“நீங்க சொல்லுங்க. இப்போ கூட மீட் பண்ணலாம்” சில வார்த்தைகளில் இவள் முடித்தாலும் தேனில் கரைந்து வந்தது இவள் குரல்.  இப்போதுமே அதை ரசிப்பதை போலவே சில நொடி மௌனித்து விட்டுதான் பேசினான்.

“நான் ‘ரஜினிகாந்த்!’. அப்படி நீங்க நினைச்ச போதெல்லாம் என்னை பார்த்திட முடியாது டாக்டர்”

“பார்றா. பை தி வே எனக்கு உங்க பெயர் ரொம்ப பிடிச்சு இருக்கு” என்றாள் இவள்.  

இங்கேதான் துவங்கியது இந்த “பார்றா”. அவன் எப்போதும் அத்தனை ரசிப்பான் அதை.

“அப்போ என் பேர் மட்டும்தான் பிடிச்சு இருக்கா? என்னை பிடிக்கலையா?” வேண்டுமென்றே கொக்கி போட்டான் அவன்.

“இல்ல.. இல்ல.. அப்படி எல்லாம் இல்ல..” அவசரமாக வந்தது இவள் பதில்.

“அம்மாடி எவ்ளோ அவசரம். அப்போ ரொம்ப பிடிச்சு இருக்கோ?”

“அப்படியும் வெச்சுக்கலாம்..” இவள் மெல்ல சொல்ல அழகான சிரிப்பு அவனிடம்.

“அது எப்படி நேர்லே பார்க்காம முடிவு பண்ணீங்க?”

“யமுனா அம்மா மேலே நீங்க வெச்சிருக்குற பாசம் தெரியும். அவங்க குணமும் தெரியும். யமுனா அம்மா  பையன் கண்டிப்பா தப்பானவரா இருக்க மாட்டார்னு தெரியும்”

“அட.. அட.. அட..” என்றான் அவன்

“ஆனாலும் நீங்க என்னை பார்க்க வேண்டாமா?” கேட்டாள் அவள்.

“அதான் சொன்னேனே. நான் ரஜினிகாந்த். எப்படி மாத்தி மாத்தி கேட்டாலும் என்னை நீங்க இப்போ பார்க்க முடியாது ஸ்ரீதேவி டாக்டர்”

“நான் உங்களை காக்க வெச்சதுக்கு பனிஷ்மென்ட்டா? அதனாலேதான் நான் உங்களை அவ்ளோ சீக்கிரம் பார்க்க முடியாதா?”

“அய்யோ.. எங்க ஸ்ரீதேவி டாக்டரை நான் பனிஷ் பண்றதா? வாய்ப்பே இல்ல” குரலை இறக்கி சற்றே கிசுகிசுத்து அவன் சொன்ன விதமும், அவனது அந்த ஸ்ரீதேவி டாக்டர் என்ற அழைப்பும்  அவளை மேகத்தில் நடை பயில வைத்தது.

“எங்க ஸ்ரீதேவி டாக்டரை, எங்க அம்மாவை தைரியமா சர்ஜரி பண்ணிக்க வெச்சு, மறுபடியும் ஆரோக்கியமா நடக்க வெச்ச எங்க ஸ்ரீதேவி டாக்டரை என்னாலே இந்த ஜென்மத்திலே எதுக்கும் பனிஷ் பண்ண முடியாது. இத்தனைக்கும் சர்ஜரி டைம்லே நானோ என் தங்கையோ பக்கத்திலேயே இல்லை. .எல்லாமே எங்க ஸ்ரீதேவி டாக்டரோட அன்புதான் திறமைதான், கைராசிதான்”

இந்த வார்த்தைகளை காதுக்குள் பேசிய விதத்தில், அந்த உணர்வில் கொஞ்ச நேரம் ஸ்தம்பித்துத்தான் போனாள் பெண். கொஞ்ச நேரம் வார்த்தைகளின்றிப் போனாள் அவள்.

“இப்போ ஏன் பார்க்க முடியாதுன்னா இன்னைக்கு நான் சிங்கப்பூர் கிளம்பிட்டு இருக்கேன். அங்கே ஒரு மாசம் ஒரு சின்ன டிரைனிங்”

அப்போதெல்லாம் “குட் மார்னிங் ஸ்ரீதேவி டாக்டர்” காதுக்குள் கேட்கும் அவனது குரலுடன்தான் துவங்கும் இவளது காலைப் பொழுதுகள்.

அதற்காக நாள் முழுவதும் பேசிக் கொண்டே இருப்பார்கள் என்றெல்லாம் இல்லை. காலையில் ஒரு அழைப்பும், இரவில் நேரமிருந்தால் ஒரு அழைப்பும் தான் எப்போதும்.

அதே நேரத்தில் இவளுக்கு ஏதாவது பிரச்சனையோ உடல் நல குறைபாடோ, ஏதோ ஒன்றின் காரணத்தால்  இவள் சற்றே தளர்ந்து நிற்கும் சமயங்களை எப்படித்தான் உணர்ந்து கொள்வானோ, அப்போதெல்லாம் சரியாக அவளை கைப்பேசி வழியாக அணைத்துக் கொள்வான் ரஜினிகாந்த்.

“என்னாச்சு ஸ்ரீதேவி டாக்டர்? குரல் ஒரு மாதிரியா இருக்கு? உடம்புக்கு என்ன?”வருடும் அவன் வார்த்தைகள்.

அவனை விட்டு விலகி ஒரு வருடம் போல இருக்குமா இந்த ஒரு வருடத்தில் அவனது அழைப்புகளை அத்தனை தேடுகிறது மனது. இன்றும் கூட அவனையும் அவனது அழைப்பையும் தேடுகிறது அவளது உள்ளம். 

அது ஏனோ நேரில் சந்திக்கும் வாய்ப்பு மட்டும் அமையவே இல்லை இருவருக்கும். இவர்கள் இருவரும் அதற்காக எடுத்துக் கொண்ட முயற்சிகள் எல்லாம் ஏதோ ஒரு காரணம் கொண்டு தடை பட்டுக் கொண்டே இருந்தன.

“ஸ்ரீதேவி டாக்டர். உங்களுக்கும் எனக்கும் நடுவிலே எதுவோ ஒண்ணு நின்னு தடுக்குது. அது என்னதுன்னு தெரியலை. நாம இப்போ மீட் பண்ண வேண்டாம். நேரடியா நிச்சியத்திலே சந்திச்சுகிட்டா என்ன?” ஒரு நாள் கேட்டான் அவன். “என்னமோ அதுதான் நல்லதுன்னு தோணுது.”

“எனக்கு முன்னாடி எங்க அக்கா இருக்கா ரஜினி சர். அவளுக்கு கல்யாணம் செட் ஆகிட்டா ரெண்டு கல்யாணமும் ஒண்ணா கூட வைக்கலாம்னு சொல்றாங்க எங்க அம்மா. பட் அவ எதுக்கும் அசைஞ்சு கொடுக்க மாட்டேங்குறா. அதனாலே நம்ம நிச்சியம் எப்போ நடக்குமோ தெரியலையே”

“அதெல்லாம் சீக்கிரம் நடக்கும் கொஞ்சம் பொறுமையா இருப்போம்” சொன்னான் இவன்.

“எங்க ரஜினி சர் சொன்னா சரிதான்” ஒப்புக் கொண்டாள் இவள். எதனால் அப்படி ஒரு முடிவுக்கு வந்தார்கள் என்று இன்று வரை அவளுக்கே புரியவில்லை. அதன் பின்னரும் அதற்கு முன்னரும் கூட புகைப்படங்களை கூட பகிர்ந்து கொள்ளவில்லை இவர்கள்.

இவள் கூட அவனது அன்னை, தந்தை, அவர்களின்  கடை என எல்லாவற்றையும் பார்த்தது உண்டு. ஆனால் அவன் ஒரு முறை இவளது அன்னையை சந்தித்ததோடு சரி. மற்றபடி இவளது வீட்டில் யாரையும் பார்த்தது இல்லை ரஜினிகாந்த்.

“ஒரு வீரனுக்கு ஒரு மிகப் பெரிய வலி எதுன்னு தெரியுமா. கர்ணனுக்கு நடந்த மாதிரி,  வித்தை பலிக்காம மறந்து போறதுதான். அதே போலதான் நம்மை மாதிரி டாக்டர்ஸ்க்கும். நம்ம  வித்தை வேலை செய்யலைன்னா ரொம்ப கஷ்டம்.” எப்போதோ சொல்லி இருக்கிறான் இவன்.

“அது எப்படி வேலை செய்யாம போகும் உங்களுக்கு எல்லாம் நல்ல படியாதான் நடக்கும்” அப்படி சொன்னவள்தான் இவள்.

“யமுனா அம்மா  பையன் கண்டிப்பா தப்பானவரா இருக்க மாட்டார்னு தெரியும்” சொன்னவள்தான் இவள்.

அதன் பிறகு அவை எல்லாவற்றையும் ஒரே கைப்பேசி அழைப்பில் உடைத்து போட்டவளும் இவளேதான். அதுவும் ஒரு மருத்துவர் தினத்தில்தான் உடைத்துப் போட்டாள்.

“ஹாப்பி டாக்டர்ஸ் டே” என உற்சாகமாக துவங்கியவனை நொறுக்கினாள் இவள்.

“அதான் ஊரெல்லாம் பேசறாங்களே உங்க ஹாஸ்பிட்டல்லே தானமா கிடைச்ச கருவிழியிலே ஆரம்பிச்சு  எல்லாத்திலேயும் ஸ்கேம்ன்னு. அத்தனை திருட்டுன்னு. அதிலே எல்லாத்திலேயும் உங்களுக்கும் பங்கு இருக்குன்னு.  நீங்க எல்லாம் ஒரு டாக்டரா?” தெரிந்ந்தே தான் ஆரம்பித்தாள் அவள். அவன் மீது எந்த குற்றமும் இல்லை என்று தெரிந்தேதான் ஆரம்பித்தாள்.

“ஸ்ரீதேவி டாக்டர் என்னாச்சு உங்களுக்கு?” நிதானமாகத் தான் கேட்டான் அவன் “எதுக்கு இப்படி எல்லாம் பேசறீங்க?

 “உங்களோட பழகின்னேன்னு சொல்லவே எனக்கு அசிங்கமா இருக்கு. சரியான திருடன். துரோகி. உங்க கல்விக்கு நீங்க செஞ்ச துரோகம் இது. இப்படி இருந்தா உங்க வித்தை உங்களுக்கு பலிக்காமத்தான் போகும்  “

“ஸ்ரீதேவி டாக்டர். என்னாச்சு? கண்டிப்பா நீங்க இதெல்லாம் மனசார பேசலை”

கருவிழி திருட்டு என்று ஒன்று நடக்கவே இல்லை என்று தெரிந்தும், அவனுக்கு எப்படி பேசினால் வலிக்கும் என்று தெரிந்தும் இப்படி பேசினால் இவளை மொத்தமாக வெறுத்து விலகி விடுவான் எனத்  தெரிந்தும் பேசினாள் இவள்.

“உங்க மனசிலே என்ன இருக்கு ஸ்ரீதேவி டாக்டர். எதையோ மறைக்க இப்படி எல்லாம் பேசறீங்க”

அவன் கேட்க கேட்க விடாமல் அதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தாள் இவள்.

“நீங்க நேர்லே வாங்க ஸ்ரீதேவி டாக்டர். நாம பேசுவோம். என் முகத்தை பார்த்து இதெல்லாம் சொல்லிடுங்க பார்போம்”

நிறுத்தவில்லை அவள் திரும்பத் திரும்ப அதே வார்த்தைகள்.

“நேர்லே வாடி. வந்து என் முகத்தை பார்த்து பேசு. உன்னாலே அது முடியாது. சத்தியமா முடியாது. உன் மனசிலே வேறே என்னமோ இருக்கு”

அவனும் திரும்பத் திரும்ப அதையேதான் சொல்லிக் கொண்டிருந்தான்.

“நாம முடிச்சுக்கலாம் மிஸ்டர் ரஜினிகாந்த். உங்களை இனிமே நான் நான் டாக்டர்ன்னு கூப்பிட மாட்டேன். ஏன்? கூப்பிடவே மாட்டேன்” இதுதான் இவள் பேசிய  கடைசி வார்த்தை..

அதன் பின் அவன் அனுப்பிய குறுஞ்செய்திகளுக்கும், பேச முயன்று அழைத்த அழைப்புகளுக்கும் எந்த பதிலும் கொடுக்கவில்லை இவள். ஒரு கட்டத்தில்

“நான்தான் உங்களை பிடிக்கலைன்னு சொல்லிட்டேன். அதுக்கு மேலே எதுக்கு இப்படி வெட்கம் கெட்டு என் பின்னாலே வரீங்க? இப்படி மாத்தி மாத்தி மெசேஜ் அனுப்ப கேவலமா இல்லையா? போதும் இதோட நிறுத்திக்கோங்க. இல்லன்னா விளைவுகள் அசிங்கமா இருக்கும்’

என ஒரு குறுஞ்செய்தியை அனுப்பி விட்டு, எப்படிப்பட்ட ஆண்மகனின் தன்மானத்தையும் சீண்டிப் பார்க்கும்  வார்த்தைகளை   அவன் மீது வீசி விட்டு அவனது எண்ணையே தனது கைப்பேசியிலிருந்து மறித்திருந்தாள் ஸ்ரீதேவி..

அவள் விலகிய பிறகு, அவள் அவனை சபிப்பது போல வார்த்தைகளை பிரோயோகித்த பிறகும் கூட அவன் மென் மேலும் வளர்ந்து உயர்ந்து கொண்டேதான் இருக்கிறான்.

வெளியில் காட்டிக் கொள்ளா விட்டாலும் அவனைப் பற்றிய செய்திகளை கேள்விப் பட்டுக் கொண்டுதான் இருக்கிறாள் இவள். ரகசியமாக மகிழ்ந்து கொண்டுதான் இருக்கிறாள்.

தலைவலி இப்போது அவளை வாட்டி எடுத்தது. அவன் எதிரில் வந்து நின்றால் எல்லாவற்றையும் அவனிடம் கொட்டி விடலாம் என்று கூட தோன்றியது. அதற்கு அவன் எதிரில் வருகிறான் என்பதை அவள் உணர்ந்து கொள்ள வேண்டுமே!

அதற்கும் மேலாக அப்படி எல்லாம் எல்லாவற்றையும் அவனிடம் கொட்டிவிட முடியுமா என்ன? சாத்தியமே இல்லை.

அப்படி என்ன அவன் எங்கே இருக்கிறான் என்று தெரிந்து கொள்ள முடியாத தூரத்திலா இருக்கிறான். அப்படி எல்லாம் இல்லை. இதோ விரல் நுனியில் இருக்கிறது அவனது எண்.

இருந்தாலும் அவள் செய்து விட்ட தவறுகள் அவளது  விரல்களை கட்டிப் போட்டு வைத்திருக்கின்றன.

அதே நேரத்தில்  காலம் அவனை தனது எதிரில் கொண்டு வந்து நிறுத்தி விடாதா, ஏதாவது ஒன்று இருவரையும் சேர்த்து வைத்து விடாதா  எனும் ஏக்கம் வந்து வந்து போகிறது.

அவனது அன்னையை அவன் அனுமதித்து இருப்பது இந்த மருத்துவமனையில்தான் என்பது அவனைப் பற்றி இத்தனை யோசிப்பவளுக்கு தெரியவில்லை.

அதே போல தனது அன்னை இருக்கும் இந்த மருத்துவமனையில்தான் கடந்த ஆறு மாதங்களாக அவள் பணி புரிந்து கொண்டிருக்கிறாள் என்பதையும் அவன் அறிந்திருக்கவில்லை.

தொடரும்

அத்தியாயம் நான்கு

டாக்டர் ரஜினிகாந்த் அத்தியாயம் 4 – Praveena Thangaraj Novels

21 thoughts on “டாக்டர் ரஜினிகாந்த் அத்தியாயம் 3”

  1. Avatar

    ஏன் இப்படி ? ஸ்ரீதேவி டாக்டரும், எங்க ரஜினி சர் ரெண்டும் நல்லாதானே போய்ட்டு இருந்துது. வழக்கமா ஹீரோ, ஹீரோயின் ரெண்டு பேருக்கும் ஃபான் பேஸ் சரி விகிதமா இருக்கும். இந்த தடவை ரஜினி சர் தான் ஸ்கோர் பண்ண போறார். குடிச்சிட்டு விழுந்து கிடப்பாங்க சொன்னதுக்கே சரியான பனிஷ்மெண்ட் கொடுத்த ரஜினி சர், அவன் தொழிலுக்கே துரோகம் செய்ததாக சொன்னதுக்கு என்ன தண்டனை கொடுப்பானோ ? படிக்கக் காத்து இருக்கிறேன் வத்சலா.

    1. Avatar

      @devisrinivasan உங்கள் வார்த்தைகள் எனக்கு மிகப் பெரிய ஊக்கம். கதை ரசிச்சு படிச்சதற்கு நன்றிகள் பலபல .
      உங்கள் கேள்விக்கான பதில்கள் விரைவில்

  2. Avatar

    Hero , heroine rendu perum sema.
    Hero voice phone la kekkum bothu heroine melt aaguraanga.
    But why she is behaving like this?
    Hero paavam .seekiram intro kudunga.

  3. Avatar

    ஏன் இப்படி? பார்க்காமலேயே மலர்ந்த காதல் இப்படி வாடிப்போச்சு? எதனால் இப்படி பண்ணா?

  4. Avatar

    செம… தன் தொழிலையும் தன்னையும் தெரியாதவர் தவறாக பேசியதற்கே தண்டனை கொடுத்தான் இப்போ என்ன பன்ன போறானோ

    1. Avatar

      @kothaihariram உங்கள் வார்த்தைகள் எனக்கு மிகப் பெரிய ஊக்கம் கொடுக்குது . நன்றிகள் பலபல .
      உங்கள் கேள்விக்கான பதில்கள் விரைவில்

  5. Avatar

    ஸ்ரீதேவி டாக்டர் ரஜினி சார்ரை லேசில் பாக்க முடியுமா ஸ்ரீதேவி டாக்டர் அப்படி பேசினதுக்கு பின்னாடி என்ன பிரச்சனை இருக்கோ உங்களுக்கு என்ன பிரச்சனைன்னு தெரிஞ்சுக்க உங்க ஆஸ்பிட்டலுக்கு எங்க சார் ரஜினிகாந்த் சார் வந்து கிட்டு இருக்கார்

  6. Pingback: டாக்டர் ரஜினிகாந்த் அத்தியாயம் 2 - Praveena Thangaraj Novels

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *