Skip to content
Home » டாக்டர் ரஜினிகாந்த் அத்தியாயம் 5

டாக்டர் ரஜினிகாந்த் அத்தியாயம் 5

சற்றே திடுக்கிட்டு நிமிர்ந்தவளுக்கு நடந்தவை புரிய சில நொடிகள் பிடித்தன. கடைக்காரர் இருவரின் காபியையும் ஒன்றாக தயாரித்து கொடுத்திருக்க வேண்டும். இவன் வெகு இயல்பாக  தன்னுடையதை எடுத்துக் கொண்டு, இவளுடயதையும் எடுத்து இவளிடம் நீட்டி இருக்க வேண்டும்.

சட்டென காபியை வாங்கிக் கொண்டு, ஒரு சின்ன  தலையசைப்பில் அவனுக்கொரு  நன்றியை தெரிவித்து விட்டு அவன் முகத்தை பார்த்தவளின் உள்ளம்,  யாரென்றே தெரியாத அவனது  விழிகளில் சிக்கிகொண்டது.

அவனது பார்வை  பெயரே தெரியாத ஒரு உணர்வை  தனக்கு பரிசளிக்கும் பிரமை பெண்ணுக்கு. அவனுக்கும் அதே நிலைதானோ? எதுவுமே பேசாமல் நின்றவர்களுக்கு ஒருவருக்கு ஒருவரை அடையாளம் தெரியவில்லை.

எப்போதும் முன்னே ஓடி வந்து நிற்கும் உள்ளுணர்வு கூட இன்று  ஏனோ அமைதி காக்க, மௌன வனத்தில் தவமிருப்பவர்களை போல சில நொடிகள் நின்றவர்கள், எங்கிருந்தோ கேட்ட வெடி சத்தத்தில் கலைந்தார்கள்

அவளைப் பார்த்ததும் என்ன தோன்றியதோ அவனுக்கே தெரியவில்லை, அனிச்சை செயலாகத்தான் கடையின் மேஜையின் மீதிருந்த அவளது காபியை எடுத்து அவளிடம் நீட்டி இருந்தான் ரஜினிகாந்த்.

“நாம ரெண்டு பேரும் மீட் பண்ற வாய்ப்பே வர மாட்டேங்குதே ரஜினி சர்”

“வரும் வரும். அவசரப் படாதீங்க ஸ்ரீதேவி டாக்டர். நாம மீட் பண்றது ஒரு ஸ்பெஷல் டேவா இருக்கும். அப்போ  ஊரே வெடி வெடிச்சு கொண்டாடும்.”

“நீங்க சொல்றதை பார்த்தால் அந்த நாள் தீபாவளியா இருக்குமோ?”

“இருக்கலாம்”

“ஆங் இருக்கும் இருக்கும்”  இவளின் குரலில் கிண்டல்.

“பார்க்கலாமா? இந்த ரஜினிகாந்த் வார்த்தை எப்போதும் பலிக்கும்”

ஏனென்றே தெரியாமல் இருவர் மனமும் இவர்களின் இந்த பழைய உரையாடலை தொட்டுத் திரும்ப, அந்த நொடியில். ஒலித்தது இவனது கைப்பேசி. அழைத்தது இவனது தங்கை அரசி.

‘இது ஸ்ரீதேவிதானோ?’ எதை உணர்ந்து கேட்டதோ, அவனது மனதிற்குள்ளிருந்து குரலொன்று கேட்டே விட, அவளுக்குள்ளும் அதே கேள்வி எழ ஒரு வித படபடப்பு தொற்றிக் கொண்டது அவளிடத்தில்.

இங்கே அழைப்பது தங்கை. அம்மாவின் உடல் நலம் குறித்து இருக்கும் பதற்றத்துடன் அவள் அவனை அழைக்கக் கூடும். அவளைக் காக்க வைக்கவும் மனமில்லை.

இவளைப் பார்த்துக் கொண்டே ரஜினிகாந்த்  அழைப்பை ஏற்க, வேகமாக விலகி  நடந்தாள் ஸ்ரீதேவி. அவனது அருகில் இருந்திருந்தால் கூட அவனது குரலையாவது அவள்  கேட்டிருக்கக் கூடும். செய்யவில்லையே அவள்.

“சொல்லுங்க சைக்கலாஜி க்வீன்” என்றான் இவன். அவனது  பார்வை மட்டும் கண்ணுக்கெட்டும் தூரத்தில் நின்று காபியை  பருகிக் கொண்டிருப்பவளின்  மீதிருந்தது.

 “அம்மா எப்படிண்ணா இருக்காங்க.?” தங்கையின்  குரலில் ஏகத்துக்கும் கவலை.

இங்கே, அந்த இடத்தை விட்டு விலகி விடு, விலகி விடு என மிரட்டிக் கொண்டே இருந்தது ஸ்ரீதேவியின்  மனசாட்சி.

‘அவன் ரஜினிகாந்தாக இருக்கும் பட்சத்தில் அவனிடம் என்ன சொல்லப் போகிறாய். நடந்த  தவறுகளை என்ன சொல்லி நியாயப் படுத்த முடியும் உன்னால்?’

உள்ளுக்குள் வீசிய கேள்விகளின் சூறாவளியில், சுற்றி இருக்கும் இதமான காற்றையும் குளிரையும் மீறி வியர்த்தது அவளுக்கு.  மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டாள் பெண்.

“ஒண்ணுமில்லடா. நார்மல் பர்ன்ஸ்தான் சீக்கிரம் சரியாகிடும். ரெண்டு நாளிலே வீட்டுக்கு போகலாம். இன்ஃபெக்ஷன்ஸ் அவாய்ட் பண்றதுக்காக ஐ.சி.யூ லே இருக்காங்க. நீ கவலைப் படாதே” ரஜினிகாந்த் தேற்றினான் தங்கையை.

மெலிதாக வீசிய காற்றில் அவனது கேசம் சற்றே கலைந்து விட, வேறு பக்கம் திரும்பி சிகையை சற்றே சரி செய்து கொண்டு,

 “உனக்கு அங்கே எவ்ளோ வேலைன்னு எனக்குத் தெரியும். தீபாவளிக்கே வர முடியலை. அதனாலே நீ அவரசப் பட்டு ஓடி எல்லாம் வர வேண்டாம். பொறுமையா வா.” என்று  சொல்லிக் கொண்டே, அவன் மறுபடியும் அவள் நின்ற திசையில் திரும்ப அங்கே இல்லை நமது பெண் மருத்துவர்.

அவசரம் அவசரமாக அவனது விழிகள் அலை பாய்ந்தன. கண்ணுக்குத் தட்டுப் படவே இல்லை ஸ்ரீதேவி .

சொல்லப் போனால் அங்கேதான் இருந்தாள் பெண். ஆனாலும் அவன் பார்த்து விட முடியாத மறைவில் இருந்தாள் அவள். தூரத்தில் இருந்து அவன் தன்னைத் தேடுவதைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.

ஒரு வழியாக தங்கையிடம் பேசி முடித்தான் நாயகன். காபிக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்து விட்டு சுற்றும் முற்றும் சல்லடை போடும் பார்வையுடன் நடந்தான் நமது நாயகன். கண்ணில் தட்டுப் படவே இல்லை அவள்.

நீண்ட நேரம் அங்கே நிற்கவும் இயலவில்லை அவனால். அம்மாவையும் அப்பாவையும் பார்த்து நீண்ட நேரம் ஆகிறதே.

அவன் நடந்து சென்று மருத்துவமனையின் உள்ளே நுழைந்ததும்தான், தான் நின்ற இடத்தை விட்டு விலகி வந்தாள் ஸ்ரீதேவி.  

அது அவன்தான் என்று மறுபடி மறுபடி உறுதி சொன்ன உள்ளுணர்வை ஓட ஓட விரட்டினாள் அவள்.

‘இங்கிருந்து இப்போது கிளம்பியாக வேண்டும்’ என்று யோசித்துக் கொண்டே அந்தக் காபி கடையின் அருகாமையில் வந்த  அவளின்  பார்வை அந்த மரக்கிளையை மறுபடியும் தொட்டது.

அங்கே அதே இடத்தில் இரண்டு பறவைகள் அமர்ந்து இருந்தன. அதில் இருந்தது அந்த பழைய பறவையா அல்லது புதிய பறவையா என்பதுதான் புரியவில்லை அவளுக்கு.

அப்போது அவளது கைப்பேசி ஒலித்தது. அழைத்தது அவளுடன் பணிபுரியும் ஒரு மருத்துவர் யமுனாதான்.

“டாக்டர் ஹாஸ்பிட்டல்லேதான் இருக்கீங்களா? கொஞ்சம் ஐ.சி. யூ வர முடியுமா?. ஒரு எமர்ஜென்சி”

‘ஒரு வேளை அவன்தான் ரஜின்காந்த் என்றால் உள்ளே போனாள் மறுபடியும் அவனது பார்வையில் பட வேண்டி வருமோ’ தலை முழுவதும் குழப்பம்.

ஆனாலும் எதற்காகவும்  கடமையை விட்டு விலகிப்  போய் எல்லாம் பழக்கமே இல்லையே இவளுக்கு.

“இதோ வரேன். உள் நகர்ந்தாள் பெண் மருத்துவர்.

ஸ்ரீதேவி நமது மருத்துவனை  முன்பு பார்த்தது இல்லையே தவிர, அவனது அன்னையை தந்தையை என இருவரையும் சந்தித்தது உண்டேஅவனது அன்னை அங்கே இருப்பது தெரியாமல் ஐ.சி யூ நோக்கி நடந்தாள் ஸ்ரீதேவி.

இங்கே அறையில் அமர்ந்து இருந்தார் அவனுடய அப்பா. அவள் மருத்துவமனையினுள் நுழைந்த நேரத்தில்

“சாப்பிட்டீங்களாபா நீங்க? எதாவது வாங்கிட்டு வரவா?” என்றபடியே தந்தையின் முன்னால் வந்து நின்றான் மகன்.

“இப்போதான் சாப்பிட்டேன்டா. உனக்காகத்தான் காத்திருக்கேன். இன்னைக்கு தீபாவளி இல்லையா? இங்கே பெங்களூர்லே இன்னைக்கு சாயங்காலம் தானே கொண்டாடுவாங்க. அதுக்குள்ளே நிறைய பேருக்கு டெலிவரி கொடுக்கணும். இன்னைக்கு காலையிலே  நான் கடை திறக்கலை. நிறைய பேர் கால் பண்ணிட்டாங்கடா. நீ கொஞ்ச நேரம் இங்கே இரு. நான் ஒரு நடை திப்பசந்திரா வரைக்கும் போயிட்டு கடையிலே  கொஞ்ச நேரம் இருந்திட்டு வரேன்” அப்பா நகரப் போக அவரைத் தடுத்தான் மகன்.

“நீங்க ரெஸ்ட் எடுங்கப்பா. நான் போய் பார்த்திட்டு வரேன். நான் இருக்கும் போது கவலையே படாதீங்க” அவரைப் பார்த்து புன்னகைத்தான் மகனவன்.

“இது என் டயலாக் ரஜினி சார். நீங்க பேசக் கூடாது. அன்பாக மகனின் தோளை தட்டிக் கொடுத்து விட்டு, அதற்கு மேல் தாமதிக்காமல்   அங்கிருந்த கட்டிலில் படுத்துக் கொண்டு விட்டார் தந்தை.

அவரின் அசதி புரிந்தது மகனுக்கு. எல்லா அழுத்தங்களில்  இருந்தும் அவருக்கு ஒய்வு தேவைப் படுகிறது என்பதும் புரிகிறது.

“கொஞ்ச நேரம் நிம்மதியா தூங்குங்கபா. அம்மாவை பார்த்திட்டு போறேன். அதுக்கு மேலே அவங்களை பத்தி  நான் அங்கிருந்து அப்பப்போ ஃபாலோ பண்ணிக்கறேன்”  என கடையின்  சாவியை எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தான்  ரஜினிகாந்த்.

அதற்குள்ளாக அவனது மருத்துவமனையில் இருந்து வந்தது ஒரு அழைப்பு.

இங்கே ஸ்ரீதேவி நுழைந்த அந்த தீவிர சிகிச்சை பிரிவு சற்றே பரந்து விரிந்து இருக்க, இரண்டு மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இருந்தது அது.

விதி  அவளுக்கு கொஞ்சம் துணையாக வந்திருக்கலாம். வந்திருந்தால் ஒரு வேளை அவனது அன்னையை பார்த்திருப்பாளோ அவள்.

பார்த்திருந்தால் எல்லாவற்றையும் அவரிடம் கொட்டி இருப்பாளோ அவள். கண்டிப்பாக செய்திருப்பாள். அப்படி செய்திருந்தால் வரவிருக்கும் பல பிரச்சனைகள் வராமலே போயிருக்கும்

அவரது முகத்தை  பார்த்த பிறகு எதையும் அவரிடம் மறைக்கும் தைரியம் எல்லாம் இவளுக்கு கிடையாதுதான்.. ஆனாலும் காலம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கணக்கு வைத்திருக்கிறதே என்ன செய்வது.

எது செலுத்தியதோ இங்கே அவனுடைய அம்மா இருந்த பகுதிக்கு எதிர்திசையில் நடந்தாள்  ஸ்ரீதேவி

 “எஸ். டாக்டர் யமுனா” என அவள் முன்னால் சென்று நின்றாள் ஸ்ரீதேவி. ஒவ்வொரு முறை அவளை பெயரிட்டு அழைக்கும் போதும் அவனது அன்னைதான் கண் முன்னே வந்து போவார்.

முதல் முறை அவரை சந்தித்த போதே ஏனோ இவள் மனதோடு ஒட்டிக் கொண்டார் அவனது அன்னை யமுனா. இது நடந்தது எல்லாம் கிட்டதட்ட இரண்டு வருடங்களுக்கு முன்னால்.

வட்ட முகமும் நடுவில் பெரிய வட்ட பொட்டும், கை நிறைய வளையல்களும், தோடும் மூக்குத்தியும் என அழகில் மகாலக்ஷ்மியை கொண்டிருந்தார்.

பொதுவாக மருத்துவர்கள் தங்களிடம் வரும் நோயாளிகளுடன் எந்த விதமான உணர்வு பூர்வமான பந்தத்தையும் உருவாகிக் கொள்ள மாட்டார்கள், உருவாக்கிக் கொள்ளவும் கூடாது. அதையெல்லாம் மீறியும் எப்படியோ அவனது பெற்றோருடன் இவளது மனம் ஒட்டிக் கொண்டது.

அப்போது அவருக்கு  மாதவிடாய் நிற்கப்போகும் தருணம் என்பதால் உடல் நலத்தில் நிறைய மாறுதல்கள், பல வித பயங்கள், சிக்கல்கள். இவள் கற்ற கல்வியும், உளவியலும் முக்கியமாக இவளது அணுகு முறையும் அறுவை சிகிச்சை என்றதும் மிரண்டு போனவர்களுக்கு அத்தனை ஆசுவாசத்தை கொடுத்தது அவர்களுக்கு.

“என் உடம்பிலே எல்லாமே முடிஞ்சு போனதா அர்த்தமாமா? எல்லாத்தையும் வெளியே எடுத்து போடணும்னு சொல்றியே. அது என் பொண்ணையும் பையனையும் சுமந்த கோவில்” கண்ணீர் மழையாக வழிந்தது அன்னைக்கு. “அது எனக்கு அம்மா மாதிரி. எனக்கு சின்ன வயசிலேயே கல்யாணம் ஆகிடுச்சு. ஆனா சில வருஷம் குழந்தை பிறக்கலை. அப்போவெல்லாம் என் கருவறை கிட்டே நான் பேசுவேன், ஒரு குழந்தையை எனக்காக சுமந்து குடு தாயேன்னு. அப்புறம் திடீர்னு ஒரு நாள் அது அந்த வரத்தை கொடுத்தது எனக்கு. இப்போ ஒண்ணில்லை ரெண்டு பிள்ளைங்க எனக்கு “

எழுதிக் கொண்டிருந்த பேனாவை கீழே வைத்து விட்டு நிமிர்ந்து அமர்ந்து அவரைப் பார்த்து புன்னகைத்தாள் ஸ்ரீதேவி.

“நம்மளை  பெத்த அம்மா அப்பாவே ஒரு நாள் நம்மை விட்டு போயிடறாங்கதானே மா?” என்றாள் இதமாக.

“அது சரிதான் ஆனாலும்..”

“நான் உங்ககிட்டே ஒண்ணு கேட்கட்டுமா?”

“கேளும்மா”

“முதலிலே கண்ணை துடைச்சுக்கோங்க சொல்றேன்” என்றாள் பரிவாக. அவர் கண்களை துடைத்துக் கொள்ள மெல்லக் கேட்டாள் நமது மருத்துவர்.

“உங்க பையன் குழந்தையா இருக்கும் போது தூளி கட்டி படுக்க வெச்சு இருப்பீங்க இல்லையா? அந்த புடவை எல்லாம் இப்போ இருக்கா?”

அப்படி ஒரு கேள்வியை எதிர்ப்பார்த்திராதவராக சற்றே திகைத்து விழித்தவர் “அதெல்லாம் பழைய புடவைமா. இவங்க எல்லாம் படுத்து படுத்து அது பழசாகி கிழிஞ்சு போச்சு.”

“அதெல்லாம் என் பையனை பல நாள் சுமந்த தூளி, அப்படின்னு அதை வீட்டிலே வெச்சிருந்தா என்னவாகி இருக்கும்?” இவளது அடுத்த கேள்வி

“குப்பையா கிடந்தது பூச்சி வந்து அரிச்சு இருக்கும்”

“அதேதான். வயித்திலே உங்க பையன்  படுத்திருந்த தூளி பழசா போச்சு. அதை நீக்கிட போறோம் அவ்வளவுதான். அது இத்தனை நாள் தனக்கான வேலையை சரியா செஞ்சு முடிச்சிடுச்சு. இனிமே உள்ளேயே இருந்தா உங்களுக்கு நல்லது இல்லை தானே?”

அவளது புன்னகையிலும் வார்த்தைகளிலும் அவரது கண்ணீர் கொஞ்சம் மட்டுப் பட்டது.

“அப்படியா?” என்றார் குரலில் கொஞ்சம் நம்பிக்கை வந்தவராக. “வேறே எந்த பிரச்சனையும் இல்லையா எனக்கு?”

“அதெல்லாம் எந்த பிரச்சனையும் இல்லை உங்களுக்கு.  வரவும் வராது” இவள் உறுதியாக சொல்ல மகிழ்ச்சி கணவன் மனைவி இருவர் முகத்திலும்.

“நீ ரொம்ப கை ராசி டாக்டர்ன்னுதான் இவர் என்னை உன்கிட்டே கூட்டிட்டு வந்தார். நீதான் ஆபரேஷன் பண்ணுவியா? நீ உள்ளே என் கூடவே இருப்பியா?”

“கண்டிப்பா கூடவே இருப்பேன். நம்ம கூடவே பெரிய டாக்டரும் இருப்பாங்க. எந்த பிரச்சனையும் வராது தைரியமா இருங்க” சொன்னாள் இவள்.

ஆயிரம் சொன்னாலும் கர்ப்பபையை எடுப்பது என்பது பெரிய அறுவை சிகிச்சைதான். ஒரு உயிரை தாங்கக் கூடிய அந்த கருவறை நிறைய தசைநார்கள், ரத்த நாளங்களுடன் பின்னிப் பிணைந்த ஒரு உடல் பாகம். இந்த தசை நார்களையும், ரத்த குழாய்களையும் வெட்டி எடுத்து, சுற்றி இருக்கும் வேறு பாகங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல்  கருவறையை தனியாக பிரித்து எடுக்க  விரல்களில் அத்தனை நுணுக்கம் தேவை.

இவளது வயதையும் அனுபவத்தையும் கருத்தில் கொண்டு அன்றைய தினம் சீனியர் மருத்துவருமே உடனிருப்பதாக முடிவு செய்யப்பட்டது.

அறுவை சிகிச்சை கூடத்திற்கு அவரை அழைத்து செல்வதற்கு செல்வதற்கு முன்பாக இவளுமே அவர்கள் அறைக்கு வர

“இன்னொரு தடவை என் பையன் கூடவும் பொண்ணு கூடவும் பேசிட்டு வந்திடவா?” கேட்டார் அந்த அன்னை . புன்னகையுடன் தலையசைத்தாள் இவள். அவரது பேச்சில் முதல் நாள் இருந்த பயம் குறைந்து இருந்தாலும் ஏதோ ஒரு தவிப்பு  இருக்கத்தான் செய்தது.

வயிற்றை பல முறை தொட்டுத் தொட்டுத் பார்த்துக் கொண்டார் அவர். ஏதோ ஒரு பொக்கிஷத்தை பிரியப் போகும் கவலை இருந்தது அவரிடம்.

“தேவி” என்றார் போகும் வழியில். அவருடைய அழைப்பு டாக்டர் என்பதைத் தாண்டி தேவி என மாறி சில நாட்கள்  ஆகியிருந்தன.

“சொல்லுங்க”

“அப்புறமா சர்ஜரி முடிஞ்சதும் என் கருவறைய என்கிட்டே காட்டுவியா?” அந்தக் கேள்வியில் ஒரு துளி கண்ணீர் கூட வந்து விட்டது நமது மருத்துவருக்கு.

“கண்டிப்பா காட்டறேன்” என்றாள் ஸ்ரீதேவி. இவள் அருகிருப்பதுதான் யமுனாவுக்கு மிகப் பெரிய பலம் போலத் தோன்றியது.

கிட்டதட்ட ஒரு மணி நேர அறுவை சிகிச்சை நல்ல படியாக நிறைவு பெற்றிருக்க, இவளுக்கே ஒரு வகை நிம்மதி வந்தது நிஜம். அறுவை சிகிச்சை முடிந்து இரண்டு நாட்கள் கழித்து அவரால் நடக்க முடிந்த பிறகு அவரை  அழைத்து சென்று ஐஸ் பாக்ஸில் இருந்த கருவறையை காட்டினாள் மருத்துவர்.

ஒரு பிளாஸ்டிக் பையினுள் இருந்ததது ரணங்களுடன் அதைத் தொட்டு மெல்ல வருடிக் கொடுத்தார் யமுனா. இப்போதும் கண்ணீர் கட்டிக் கொண்டது அவருக்கு.

“நான்தான் சொன்னேனே இந்தத் தூளி பழசாகிடுச்சு. நாம விட்டுடலாம்” மனமில்லாமல்தான் அங்கிருந்து அங்கிருந்து நகர்ந்தார் யமுனா.

 அதன் பிறகும் அறுவை சிகிச்சை முடிந்த பிறகான அத்தனை பாதுகாப்பு வழி முறைகளுக்கும் யமுனாவின் உடனிருந்தாள் ஸ்ரீதேவி. எல்லாம் நலம் என்ற ஒரு நாள் வந்த போது சட்டென கேட்டும் விட்டார் யமுனா.

“பேசாம என் பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டு எங்க வீட்டுக்கு வந்திடுவியா தேவி. அவனும் டாக்டர்தான். அதான் அவன் கூட நீ பேசி இருக்கியே. உனக்குத்தான் தெரியுமே. ரெண்டு பேரும் பேசிப் பாருங்களேன். பிடிச்சு இருந்தா மேலே பேசலாம்”

“டாக்டர் தேவி. என்ன ஏதோ யோசனையிலே நின்னுட்டீங்க?” தரை இறக்கினாள் டாக்டர் யமுனா.

ஸ்ரீதேவி தன்னிலை பெற்று அங்கே இருந்த நோயாளியை பரிசோதித்து தேவையான அவசர உதவிகளை செய்து முடித்த நேரத்தில், தனது அழைப்பை முடித்து விட்டு,  தீவிர சிகிச்சை  பிரிவை நோக்கி நடந்தான் நமது கண் மருத்துவன்.

அவனது பார்வை இன்னமும் அவளைத் தேடிக் கொண்டேதான் கிடந்தது என்றாலும், அது என்ன விதியோ இந்த முறை ஒருவர் எதிரில் ஒருவர் வராமலே அவரவர் பாதையில் நடந்தனர்.

சில நொடிகளில் அவனுடைய தந்தை ஜெகன்நாதன் உறங்கிக் கொண்டிருக்கும் அறையை கடந்து நடந்தாள் இவள். நல்ல உறக்கத்தில் இருந்தார் அந்த மனிதர்.

ஒரு வேளை அவர் இவளை பார்த்திருந்தால் கண்டிப்பாக பேசியிருந்திருப்பார்.

பேசுவது என்ன? இவளது ஜாதகம்தான்  அவருக்கு மனப்பாடம் ஆயிற்றே. அதைக் குறித்து  எச்சரிக்கையாக இரு பெண்ணே என்று சொல்லியிருந்திருப்பார். இன்னும் சில நாட்களுக்கு பயணங்களில்  மிக கவனமாக இரு  என்று சொல்லி இருந்திருப்பார்.

இவர்கள் குடும்பத்தில் எல்லோர்  எண்ணையும் இவள் மறித்து விட்ட நிலையில் இந்த செய்தியை அவளுக்கு எப்படி   சொல்வது எனும் குழப்பத்தில்தான் இருக்கிறார் அவனது தந்தை.

சொல்லப் போனால் இவர்களது பிரிவைக் கூட அவரது மனதிற்குள் கணித்துத்தான் வைத்திருந்தார் அவர். அடுத்து எதையெல்லாம் அவள் கடந்து வரவேண்டும் என்பதும் ஓரளவுக்குத் தெரியும் அவனது தந்தைக்கு. இருந்தாலும் நடக்கப் போகும் எதையும் தடுக்கும் சக்தி அவரிடம் இல்லையே.

நமது நாயகன் நாயகி இருவரும்  எதிர் எதிர் திசையில் நடந்த அந்த நேரத்தில் இருவரது கைப்பேசிக்கும் ஒரு புதிய எண்ணில் இருந்து வந்தது ஒரு வாட்ஸ்  ஆப் செய்தி.

அவனது பேன்ட் பேக்கட்டினுள் சிணுங்கிய கைப்பேசியினுள் வந்து நின்றது அந்த செய்தி.

“ஹாய் திஸ் இஸ் டாக்டர் ஸ்ரீதேவி. என்னை நினைவிருக்கிறதா?”

அதே நேரத்தில் இவள் சிணுங்கிய தனது கைப்பேசியை எடுத்துப் பார்க்க அதிலும் ஒரு புதிய எண்ணில் இருந்து ஒரு செய்தி.

“நான் டாக்டர் ரஜினிகாந்த். என்னைத் தெரிகிறதா?”

தொடரும்

அத்தியாயம் ஆறு

டாக்டர் ரஜினிகாந்த் அத்தியாயம் 6 – Praveena Thangaraj Novels

21 thoughts on “டாக்டர் ரஜினிகாந்த் அத்தியாயம் 5”

  1. Avatar

    Nallavargal santhikum bothu mazhai varum. Good signs irukum. Ivargalai vidhi en kashta paduthuthu?
    Who is playing between them?

    1. Avatar

      @priya நல்லவர்கள் சந்திக்கும் போது மழை வரும். எத்தனை அழகான வார்த்தைகள். தொடர்ந்து ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் அத்தனை அழகா கமென்ட் சொல்றீங்க. நன்றி நன்றி நன்றி

  2. Avatar

    ரொம்ப அழகா படிக்கவே ஆசையா இருந்தது இந்த அப்டேட். அநேக வாக்கியங்கள் மனதைத் தொட்டது. கருப்பை – தூளி அந்த ஒப்புமை அழகா, பாசிட்டிவ்வா இருக்கு. வத்சலாவின் மேஜிக் எழுத்துக்கள் கவர்ந்தது. அப்பா, மகன் உரையாடல் இனிமை. யார் இரண்டு பேருக்கும் மெசேஜ் அனுப்பறது? தெரிந்து கொள்ள ஆவல்.

    1. Avatar

      @Devisrinivasan உங்கள் அன்புக்கு ஈடு இணையே கிடையாது. கதையோட ஆரம்பத்தில் இருந்து கூடவே இருக்கீங்க. ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் முதல் கருத்து உங்களோடதா இருக்கு. Feeling blessed Thank u so so much

    1. Avatar

      @kothaihariram நான் ரொம்ப ரசிச்சு எழுதின பகுதியை நீங்களும் ரசிச்சதுக்கு மனம் நிறைந்த நன்றிகள் மா.

  3. Avatar

    ஒரு தூளின் அணைவு ஒரு கர்ப்பப்பை நிகரான பாதுகாப்பை கொடுக்குமாம் குழந்தைக்கு அதை வெகு யதார்த்தமாக கொண்டு வந்தது அருமை

    1. Avatar

      @Muthupriyabalaji Thanks a looooooooooot. கர்ப்பப்பை பகுதியை ரொம்ப ரசிச்சு சொல்லி இருக்கீங்க. நிறைவா இருக்கு எனக்கு. நன்றிகள் மா

  4. Avatar

    நம்ம உடலில் உள்ள ஒரு பகுதிய வெட்டி எடுக்குறாங்கப்போ அவங்களுக்கு வருகிற மனஅழுத்தத்தை கருவறைன்னு காட்டி தூளின்னு சொல்லி அந்த அழுத்தத்தை குறைக்கிற இடம் சூப்பர் WOW அப்படின்னு இருந்தது

    1. Avatar

      @gandhimathi ரொம்ப ரொம்ப நிறைவா இருக்கு உங்க கமென்ட். நான் ரொம்ப ரசிச்சு எழுதின பகுதி இது. இதை நீங்க குறிப்பிட்டு சொன்னது பெரிய சந்தோஷம். நன்றிகள் பல மா

  5. Avatar

    கருவறைய அம்மாவா நினைக்குறது செம்ம பீல்…..
    யாரது புது எண்ட்ரி….
    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *