Skip to content
Home » டாக்டர் ரஜினிகாந்த் அத்தியாயம் 6

டாக்டர் ரஜினிகாந்த் அத்தியாயம் 6

மதிய நேரம். அம்மாவை தீவிர சிகிச்சை பிரிவில் சென்று பார்த்து விட்டு  தங்களது கடைக்கு வந்து சேர்ந்திருந்தான் ரஜினிகாந்த். கிளம்பும் முன் அங்கே இருந்த தனது நண்பர்களிடம் அவளைப் பற்றி விசாரிக்கவும் தவறவில்லை.

“டாக்டர் ஸ்ரீதேவி சுமித்ரா இங்கே வொர்க் பண்றாங்களாடா? எனி ஐடியா?”

“எஸ்” பட்டென வந்தது பதில் “சில மாசங்களா..” அந்தப் பதிலில் ரஜினிகாந்தின் விழிகள் விரிந்தன.

“ஏன்டா? வேண்டியவங்களா?” நண்பனின் விழிகளில் கேள்வியும் குறும்பும்.

“அம்மாவோட டாக்டர்டா  அவங்க” என எளிமையாக முடித்தான் நமது மருத்துவன்.

அதற்கு மேலாக அவளைப் பற்றி விசாரித்ததில் அவள் மூன்று நாட்கள் விடுப்பில் சென்றிருப்பதாக ஒரு செய்தி வந்து அவனது தலைக்குள் இறங்கியது.

“உங்களுக்கும் எனக்கும் நடுவில் ஏதோ ஒண்ணு நின்னு  தடுக்குது ஸ்ரீதேவி டாக்டர். அது எப்போ விலகும்னு தெரியலை” சொல்லிக் கொண்டான் தனக்குள்ளே.

பெங்களூர் நகரின் முக்கிய பகுதியில் இருக்கும் அவர்களது கிளை இது. எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் கிளை என்றும் சொல்லலாம்.

இவனது தாத்தா முதலில் துவங்கிய கடை இது. வாடிக்கையாளர்கள் உள்ளே வந்து விரும்பும் பொருட்களை எடுத்துக் கொள்ளும் வகையில் இல்லாமல், வேலை செய்பவர்கள் பொருட்களை அளந்து எடுத்துத் தரும் வகையில் தான் இருக்கும் இந்தக் கிளை.

கடையின் முன் பக்கம் பொருட்களும் இடது  பக்கம் கணிணியுடன்  கூடிய மேஜையும் உண்டு. கடையின் பின்புறம் பொருட்களை சேகரித்து வைக்கும் அறையும் உண்டு.

தனது தந்தையின்  இரு சக்கர வாகனத்தில்தான் வந்திருந்தான் கடைக்கு. கடையின் முன்னால் இவனது வண்டி  வந்து நின்ற சில நிமிடங்களிலேயே, கடைத் திறக்கப்பட்டு கடையில் வேலையாட்கள் அவர்கள் வேலையை துவங்கி இருக்க. அங்கிருந்த கணினியில்  கடந்த இரண்டு நாட்களின்  வரவு செலவுகளை குறித்தபடியே அமர்ந்து இருந்தான் நமது ரஜினிகாந்த்.

பார்வையில் பிரச்சனை உள்ள விழிகளுடன் விளையாடும் அவனது விரல்கள் ஒரு மாற்றத்திற்காக கணிணியுடன் விளையாடிக் கொண்டிருந்தன.  

நேரம் மாலை ஆறு மணியை தொட்டுக் கொண்டிருக்க, அங்கங்கே சில வெடி சத்தங்கள், இன்று தீபாவளி என்பதை அவனுக்கு  நினைவுப் படுத்திக் கொண்டு இருக்க  அவர்கள் கடையின் வாசலில் ஒரு கார் வந்து நின்றது.

இவன் அமர்ந்து இருந்த இடத்தில் இருந்து அந்தக் காரை பார்த்திருக்க முடியும் என்றாலும் எப்போதும் போல தனது கவனம் முழுவதையும் தான் செய்யும் வேலைக்கு தானம் கொடுத்திருந்தவனின் விழிகள் கணிணியின் உள்ளேயே இருந்தன.

அந்தக் காரின் உள்ளே இருந்து இறங்கினர் ஒரு அண்ணனும் தங்கையும். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டனர். இங்கே கணிணி முன்னால் அமர்ந்து இருந்தவன் இன்னமும் நிமிர்ந்து பார்க்கவே இல்லை.

அதற்கும் மேலாக வேலை மும்முரத்தில் கைப்பேசியை துழாவும் எண்ணமும் கூட வரவில்லை அவனுக்கு. அதனால் அவனுக்கு மதியம்  வந்த குறுஞ்செய்தி பார்க்கப் படாமல், திறக்கப் படாமல் அப்படியே கிடந்தது

வேலை நேரத்தில் சுற்றும் முற்றும் வேடிக்கை பார்ப்பது என்பது எல்லாம் இத்தனை வருடங்களில் அவனால் கற்றுக் கொள்ளவே முடியாத ஒரு விஷயமாக இருந்திருக்கிறதே. என்ன செய்வது!

அவன் முன்னால் வந்து நின்றார்கள் அவர்கள் இருவரும்.

“ஹாய் டாக்டர். ஹாப்பி தீபாவளி” அந்தப் பெண்,  அவனது முன்னால் வந்து நின்று அழைத்த பிறகுதான்  நிமிர்ந்தான் நமது மருத்துவன்.

அவள் மஹதி. அவனுடன் பணி புரியும் மருத்துவர்தான் அவளும். கடந்த ஆறு மாதங்களாக அவனுடன் பணி புரிகிறாள் மஹதி.

அடர் நீல காட்டன்  புடவையும் இரண்டு  தோள்களிலும் படர்ந்து கிடக்கும் கூந்தலும், பெரிய நகைகள் இல்லாத, வெகு எளிமையான அலங்காரமுமாக  இருந்தாள் அவள்.

அவள் அருகே நின்றான் அவன். கொஞ்சமாக மடக்கி விடப் பட்டு  டக்கின் செய்யப்பட்ட முழுக்கை சட்டையும், அதற்கேற்ற பேண்டும் நேர்த்தியான சிகையும் தாடி மீசை எதுவுமே இல்லாத அப்பழுக்கிலாத முகமும் அவன் எங்காவது பேராசிரியராகத்தான் இருப்பான் என்றே எடுத்துரைத்தது.

“ஹலோ டாக்டர். ஹாப்பி தீபாவளி . ஐ அம் டாக்டர் புகழ். உங்களை மாதிரி எம்.பி.பி.எஸ் டாக்டர் இல்லை நான், ரிசர்ச் பண்ணி பி.எச்.டி முடிச்ச நிஜமான டாக்டர்” என்று அவனைப் பார்த்து புன்னகைத்து சொன்ன அந்த புகழை முதல் பார்வையிலேயே பிடித்துத்தான் போனது ரஜினிகாந்துக்கு.

 “நான் மஹதியோட ஒரே அண்ணன். அவ எனக்கு ஒரே தங்கச்சி. உங்க வீடு மாதிரியேதான் அளவான குடும்பம்”

“ஓ ரியலி. தட்ஸ் கிரேட். நைஸ் டு மீட் யூ. ஹாப்பி தீபாவளி. ” என எழுந்து அவனுடன் கை குலுக்கியவன் “வாங்க மஹதி. ஹாப்பி தீபாவளி ” என அவளையும் வரவேற்றான்.   

அவர்கள் இருவருக்கும் நாற்காலிகள் கொண்டு வர சொல்லி தனக்கு எதிரே அமர வைத்தான் அவர்களை. “உட்காருங்க ரெண்டு பேரும்”

அடர் நீல நிற சேலை அந்த மருத்துவ பெண்ணுக்கு ஒரு அழகான கம்பீரத்தை கொடுத்தது என்னவோ உண்மைதான். அவள் நமது மருத்துவனையே பார்த்திருக்க, அவனது  பார்வை புகழ் மீது இருந்தது. புகழ் சொன்ன வார்த்தைகள் தங்கை அரசியை நினைவுப் படுத்தியது.

இவை அவள் அடிக்கடி சொல்லும் வார்த்தைகள்தான் “நீயெல்லாம் என்ன டாக்டர்? டாக்டரேட் வாங்கணும்னா ஏதாவது ரிசர்ச் பண்ணணும். நீ என்னத்தை பண்ணி கிழிச்சே? உங்க சீனியர்ஸ் பண்ணதை அப்படியே காப்பி அடிச்சிட்டு இருக்கே. நான் ஆகி காட்டறேன் பார் நிஜமான டாக்டர்”

“என்னடா? இவன் பேசறது நம்ம அரசி பேசற மாதிரி இருக்கேன்னு நீங்க நினைச்சா யூ ஆர் கரெக்ட் டாக்டர் ரஜினிகாந்த். நானும் அரசியும் டெல்லியிலே கொஞ்சம் க்ளோஸ்தான். உங்க எல்லார் சம்மதமும் கிடைச்சா இன்னமும் க்ளோஸ் ஆகலாம்னு எங்க ரெண்டு பேருக்கும் ஆசை” புகழ்  சொல்ல வந்த அந்த விஷயத்தை மிக அழகாக திறந்தான்.

“ம்?” வியப்பில் மேலுழும்பி இறங்கின நமது மருத்துவனின் புருவங்கள்.  “யூ மீன் .. யூ மீன் டு சே..அரசி.. அரசிக்கும் உங்களை பிடிச்சு இருக்கா?” அவனுக்குள் நிஜமாகவே நிறைய சந்தோஷம்.

“ரொம்பவே” புன்னகைத்தான் புகழ்

“நீங்களும் டெல்லியிலே வொர்க் பண்றீங்களா?” கேட்டான் மருத்துவன்.

மஹதி  தனது  குடும்பம் பற்றி ஓரளவு சொல்லி இருக்கிறாள். எல்லா வகையிலும் தங்கள் குடும்பத்திற்கு ஏற்ற குடும்பம்தான் அவர்களுடையது என்பது புரிந்துதான் இருந்தது நமது கண் மருத்துவனுக்கு.

“எஸ் உங்க தங்கச்சி கூடவே இருக்கேன்” சொன்னான் புகழ்.”நீங்க எல்லாரும் அனுமதி கொடுத்தா காலம் பூரா இருப்பேன்”

இன்னமும் வியப்பு தீரவில்லை இவனுக்கு. இந்த அரசிப் பெண் காதல் எல்லாம் செய்கிறதா என்ன? சற்று முன் பேசும் போது கூட எதுவும் சொல்லவில்லையே. சில நொடிகள் யோசித்தவன் புகழைப் பார்த்து மெல்லக் கேட்டான்

“உங்க வீட்டிலே அரசி பற்றி எல்லாம் பேசிட்டீங்களா? அவங்களுக்கு எல்லாம் சம்மதமா?”

“எஸ் எஸ். எல்லாருக்கும் முழு சம்மதம். உங்க சைட்லே உங்ககிட்டேதான் ஸ்டார்ட் பண்றோம். அரசி என்னையே பேச சொன்னா. அதுவும் உங்க கிட்டே முதலிலே ஆரம்பிச்சாதான் சரியா வரும்னு சொன்னா. உங்க அம்மா ஹாஸ்பிடல்லே இருக்கிறதையும் அவதான் சொன்னா.  இன்னைக்கு நல்ல நாள் இன்னைக்கே ஆரம்பிக்கலாம்னு எங்க அப்பா விரும்பினார். முதலிலே அங்கே ஹாஸ்பிடல்லே போய் அவங்களை பார்த்திட்டு, நீங்க இங்கே இருக்கீங்கன்னு தெரிஞ்சுகிட்டு இங்கே வந்தோம்” புகழ் சொல்ல மகிழ்ச்சி வெள்ளம் நமது மருத்துவனின் மனதிலும் முகத்திலும்.

“என்ன சாப்பிடறீங்க ரெண்டு பேரும்” என்றான் குரலில் தொற்றிக் கொண்ட சின்ன பரபரப்புடன்.  “ஸ்வீட் எதாவது வாங்கிட்டு வர சொல்றேன். அதோட சேர்த்து ரெண்டு பேருக்கும் காஃபி. ஓகே வா” என அனுமதி வாங்கிக் கொண்டு

“லிங்கப்பா..” என அங்கே வேலை செய்பவரை அழைத்து அவர்களுக்கு வேண்டியதை வாங்கிக் கொண்டு வர சொல்லி விட்டு, தனக்கு ஒரு காபி மட்டும் சொல்லி விட்டு இவர்கள் பக்கம் அவன் திரும்ப

“யூ நோ ரஜினிகாந்த்? நான் இங்கே வேலை பார்க்க வந்த இந்த ஆறு மாசமா, எங்க வீட்டிலே உங்களை  பற்றி அவ்வளவு பேசி இருக்கேன். அரசி உங்க தங்கச்சி அப்படின்னு தெரிஞ்சவுடனேயே எல்லாருக்கும் அவ்ளோ சந்தோஷம்” அவனை ஆழமாக பார்த்தபடியே சொன்னாள்  மஹதி. அந்தப் பார்வையில் வேறே அர்த்தங்கள் இருப்பதாகவே தோன்றியது அவனுக்கு.

“ஓ ரியலி?” என்றான் இதழ்களில் புன்னகையை ஒட்டிக் கொண்டு.

சில நாட்களாகவே அவளது பேச்சில், செயல்களில் சில மாறுதல்களை கவனிக்க முடிந்தது நமது மருத்துவனால்.. அதனாலேயே அவளுடன் அதிகம் பேச்சுக்கள் வைத்துக் கொண்டது இல்லைதான் இவன்.

அவளிடம் ஒரு முறை நாசூக்காக சொல்லியும் இருக்கிறான் இவன்

“நானும் காதலிச்சு இருக்கேன் மஹதி. அது கை சேரலை. இருந்தாலும் என்னோட வாழ்கையின் ஒரே காதல் அவள்தான்”

“உங்க அப்பாவுக்கு ஜோசியத்திலே நிறைய நம்பிக்கைன்னு சொல்வீங்க தானே? எங்க அப்பாவும் கிட்டத்தட்ட அதேதான். அதனாலே அரசி கிட்டே பிறந்த தேதி நேரம் எல்லாம் வாங்கி அவ ஜாதகத்தை குறிச்சு பொருத்தம் எல்லாம் பார்த்துட்டார். பொருத்தம் அற்புதமா இருக்காம். அங்கே வீட்டிலே எல்லாருக்கும் ரொம்ப சந்தோஷம். அவங்களுக்கு ஒரே கண்டிஷன் மட்டும்தான் இருக்கு” என அவனை பார்த்து  படபடத்து நிறுத்தினாள் மஹதி.

அவளது பார்வையை அவசரமாக படித்த மருத்துவனுக்கு ஏதேதோ புரிந்தது. அடுத்து வரும் வார்த்தைகளுக்கு தயாராக காத்திருந்தான் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அதற்கான பதில் தயாராக இருந்ததா அவனிடம்? அதுதான் மிகப் பெரிய கேள்விக்குறி.

 “அது என்ன கண்டிஷன்னா உங்க வீட்டுக்கு பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்க விரும்பறாங்க எங்க அம்மா அப்பா” மிக அழகாக சொல்லி முடித்தாள் மஹதி.

சற்றே மூச்சு முட்டும் உணர்வு நமது மருத்துவனுக்கு. தன்னை நிலைப்படுத்திக் கொள்ள இயல்பாய் தனது வலது புரம் திரும்பியவனுக்கு கண்ணில் பட்டது அங்கே இருந்த கடவுள் படங்களுக்கு அருகில் இருந்த அந்த சின்னப் பெட்டி.

“ஹேய்.. இன்னைக்கு நான் திப்பசந்திராலே இருக்குற நம்ம கடைக்கு வந்திருந்தேன் தெரியுமா?” முன்பு ஒரு முறை சொல்லி இருக்கிறாள் ஸ்ரீதேவி.

“அம்மாவை பார்த்தாச்சு அப்பாவை பார்த்தாச்சு. கடைய பார்த்தாச்சு. என்னைத் தவிர மத்த எல்லாத்தையும் பாருங்க  ஸ்ரீதேவி டாக்டர் நீங்க”

“உங்களைத்தான் நான் காலம் பூரா பார்த்திட்டே இருக்கப் போறேனே ரஜினி சர். அப்புறம் என்ன? நம்ம  கடைக்கு வந்து நான் இன்னைக்கு ஆயிரம் ரூபாய்க்கு வியாபாரம் பண்ணேன். வந்தவங்களுக்கு பொருள் எல்லாம் கட்டி கொடுத்தேன். அந்தப்  பணம் உங்க அப்பா தனியா எடுத்து ஒரு பெட்டியிலே போட்டு வெச்சிருக்கார். நம்ம கல்யாணம் முடிஞ்சதும் என் கையாலே கோவிலிலே சேர்க்கணுமாம்”

சரியாக அந்த நேரத்தில் இனிப்பும், காபியும் வந்து அவனது சிந்தனையை கலைத்து, அவனையும்  காப்பாற்றியது. கணிணி இருந்த அந்த மேஜையின் மீது இனிப்புகளும் காபியும் வைக்கப் பட

“சாப்பிடுங்க முதலிலே” என்றவன் தனது காபியை எடுத்துக் கொண்டு தனது சுழல் நாற்காலியில் சாய்ந்து கொண்டான். கண்களை மூடிக் கொண்டான்.

காபி மெல்ல மெல்ல உள்ளே இறங்க நாற்காலி மெல்லத் தான் அசைந்தது. ஆனால் அவனது தலைக்குள்ளே  பல நூறு ரயில்கள் ஒரே நேரத்தில் தடதடத்தன. தங்கையின் வாழ்கையோடு சேர்ந்த ஒரு சின்ன வலைக்குள் சிக்கிக் கொண்ட உணர்வு அவனுக்கு.

“எது நடந்தாலும் என்னை விட்டுட மாட்டீங்க தானே ரஜினி சர் ?” காதுக்குள் ஸ்ரீதேவியின் கேட்க விலுக்கென கண் திறந்தான் ரஜினிகாந்த்.

“சொல்லுங்க டாக்டர், நல்ல உற்சாகமா இருந்தீங்க. உங்க கல்யாண பேச்சு எடுத்ததும் சைலென்ட் ஆகிட்டீங்க” அங்கே வந்திருந்த பாசந்தியை சுவைத்துக் கொண்டே கேட்டான் புகழ்.

உளவியல் துறை பேராசிரியருக்கு முகம் வைத்து மனம் படிப்பது ஒன்றும் சிரமம் இல்லையே.

“அப்படி எல்லாம் இல்லை. என் கல்யாணத்தை பற்றி நான் எதுவும் முடிவு பண்ணலை இன்னும்” என்று அவன் நிதானமாக சொன்ன போது ஒலித்தது அவனது கைப்பேசி.

“ஜஸ்ட் அ மினிட். நீங்க சாப்பிடுங்க” என தனது நாற்காலியை விட்டு  எழுந்தவன் தனது பேன்ட் பேக்கட்டில் இருந்து கைப்பேசியை எடுத்துக் கொண்டு சற்றே நகர்ந்து வந்தான். அவனது மருத்துவமனையில் இருந்து அழைப்பு.

அழைப்பை ஏற்று பேசி முடித்து விட்டு, அதைத் துண்டித்த போதுதான் கண்ணில் பட்டது மதியம் வந்திருந்த அந்த குறுஞ்செய்தி.

“ஹாய் திஸ் இஸ் டாக்டர் ஸ்ரீதேவி. என்னை நினைவிருக்கிறதா?”

தொடரும்

19 thoughts on “டாக்டர் ரஜினிகாந்த் அத்தியாயம் 6”

  1. Avatar

    என்ன இது புது சிக்கல்? டாக்டர்
    என்ன செய்ய போகிறார்?

    1. Avatar

      @kothaisuresh. கோதை மா உங்க கேள்விக்கான பதில் விரைவில் தெரியும். தொடர்ந்து படிச்சு கருத்துகள் சொல்வதற்கு நன்றிகள் பலப்பல

  2. Kalidevi

    Interesting . pakathula irunthum paka mudila . ipo inga tha irukanganu therinjikittan inum pakala. aduthu romba naal kalichi msg vanthu iruku sri devi kitta irunthu papom next move enanu

  3. Avatar

    Namma Rajini sir kandippa Sridevi doctora vitudamattar….Aanalum intha visayatha epadi samalika poraroo…

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  4. Pingback: டாக்டர் ரஜினிகாந்த் அத்தியாயம் 5 - Praveena Thangaraj Novels

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *