Skip to content
Home » டாக்டர் ரஜினிகாந்த் அத்தியாயம் 7

டாக்டர் ரஜினிகாந்த் அத்தியாயம் 7

ஒரு முறை அவனது உடல் முழுவதும் சந்தோஷ பேரலை பரவி  ஓய்ந்தது உண்மை. கடைக்கு பக்கத்தில் இருந்த வீட்டின் வாசலில் பெரிய சரவெடி ஒன்று வெடித்து முடிக்க அது முடியும் வரை  கைப்பேசியை விட்டு விழி அகற்றாமல் அந்த வார்த்தைகளையே  பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் ரஜினிகாந்த்.

அதே நேரத்தில் தனது வீட்டில் இருந்தாள் ஸ்ரீதேவி. வீட்டில் நாளை கோவிலுக்கு கிளம்பும்  வேலைகள் நடந்து கொண்டிருந்தன. வருடா வருடம் இந்த நேரத்தில் வீட்டில் உள்ள சொந்தங்கள் அனைவரும் ஒன்று கூடி குல தெய்வம் கோவிலுக்கு செல்வது வழக்கம்.

சொந்தங்கள் வருவதும், இவளிடம் நலம் விசாரிப்பதும் என நகர்ந்து கொண்டிருந்தது நேரம். அம்மா அருகில் வந்தாள்.

“எப்பவுமே குல தெய்வம் கோவில் போனா உன் உயிர் தோழி உன்னோட ஒட்டிகிட்டே வருவாளே. இந்த தடவை வரலையா?”

அம்மா கேட்டதுமே அவளது முகத்தில் மாற்றம்.

“உன்னைத்தாண்டி கேக்கறேன். அவளைப் பத்தி என்கிட்டே இப்போவெல்லாம் என்கிட்டே பேசவே மாட்டேங்குற? என்னாச்சு?”

“அப்படி எல்லாம் இல்லை மா. அவளுக்கு கொஞ்சம் வேலை அதான்” அம்மாவின் முகம் பார்க்காமல் சொல்லி விட்டு  நகர்ந்தாள்.

அவளது  பெரியம்மாவின் பேரன் அவளுடன்  ஒட்டிக் கொள்ள அவனது நச்சரிப்பில் வீட்டில் இருந்த பட்டாசுகளை எடுத்துக் கொண்டு, அம்மாவிடமிருந்து தப்பித்து  அவனோடு விளையாட கிளம்பினாள் ஸ்ரீதேவி.

தனது தோழியிடம் பேசி ஆறு மாதங்களுக்கு  மேல் ஆகின்றன என்றும் இப்போது அவளிடம் பேசும் சூழ்நிலை கூட இல்லை என்றும்  அம்மாவிடம் சொல்லவா முடியும்?

சிறிது நேரம் கடந்திருக்க கவனம் பட்டாசில் இருந்தாலும் மனம் மதியம் அந்த தெரியாத எண்ணில் இருந்து வந்த குறுஞ்செய்தியில் இருந்தது.

“நான் டாக்டர் ரஜினிகாந்த். என்னைத் தெரிகிறதா?”

‘இது என்ன கேள்வி. இந்த பூமியில் உன்னைத் தெரியாமல் வேறு யாரைத் தெரியப் போகிறது எனக்கு. இன்று முழுவதும் உன்னைத் தானே நினைத்துக் கொண்டிருந்தேன். நீயும் அப்படித்தானோ?

ஒரு வேளை மதியம் வந்தது நீ தானோ? ஒரு  வேளை மறுபடியும் என்னைத் தேடுகிறாயோ? வேண்டாம். அது மட்டும் வேண்டாம்’

விரல்கள் அந்த குழந்தைக்கான இன்னொரு மத்தாப்பை கொளுத்திய நேரம் உள்ளம் பல கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தது.

‘இந்தக் குறுஞ்செய்தியை அனுப்பியது அவன்தானா? அல்லது வேறே யாருமா? அது அவன் என்றால் அப்படி என்றால் மதியம் அந்த காபி பாயிண்டில் வந்தது அவன்தான் என்பது உறுதியாகிறதா?

அதே நேரத்தில் கிட்டத்தட்ட அதே விதமான கேள்விகளுடன்தான் அதே விதமான குழப்பங்களுடன்தான் இருந்தான் ரஜினிகாந்த்.

‘குறுஞ்செய்தியை அனுப்பியது அவள்தானா? அப்படி திடீரென அனுப்பக் காரணம் என்ன? அப்படி என்றால் மதியம் அந்த காபி பாயிண்டில் வந்தது அவள்தான் என்பது உறுதியாகிறதா? அது ஏன் வேறொரு எண்ணில் இருந்து அனுப்பி இருக்கிகிறாள்?’

வெடி வெடித்து முடிந்ததும்தான் புகழும், மஹதியும் காத்திருப்பது நினைவுக்கு வர அந்த மேஜையை நோக்கி நடந்தான் நமது மருத்துவன்.. தனது நாற்காலியில் வந்து அமர்ந்தவனை குடைந்தது மஹதியின் பார்வை.

“என்ன டாக்டர் மொபைல் உள்ளிருந்து ஏதாவது பூதம் வந்ததா என்ன?” என்றாள் சின்ன நக்கலுடன்.

“ம்?” என்ற அவனது அழுத்தமான நிமிரலில் சற்றே இறங்கியவள் 

“இல்ல உங்க முகம் பார்க்க அப்படி இருக்கு” என முடித்தாள்.

ஒரு முறை அவளைத் திரும்பிப் பார்த்து  முறைத்தான் புகழ். அவளின் நக்கல் அவனுக்குமே பிடிக்கவில்லை போலும்

“சொல்லுங்க டாக்டர்” என்றான் புகழ் குரலில் நிறைய மரியாதையை சேர்த்துக் கொண்டு “வீட்டிலே எங்க அம்மா கேட்டா நாங்க  என்ன பதில் சொல்லணும்”

“அரசி உங்க வீட்டு மருமகளா வர நான் பொறுப்புன்னு சொல்லுங்க” என்றான் புன்னகையுடன்.

“ஆஹான்.” சாய்ந்து அமர்ந்து கொண்டான் புகழ் “அப்போ ரஜினிகாந்த் எங்க வீட்டு மருமகனாக யார் பொறுப்பு ?” அவனது விழிகளும் இதழ்களும் ஒரு சேர புன்னகைத்தன.

“அது பத்தி இப்போ முடிவெடுக்க முடியாத சூழ்நிலையில் இருக்கேன் மிஸ்டர் புகழ்..”

“டைம் எடுத்துக்கோங்க. பத்து நாள், பதினைஞ்சு நாள் டைம் எடுத்துக்கோங்க. உங்க அம்மாவும் நல்ல படியா வீட்டுக்கு வரட்டும். அதுக்கு அப்புறம் எல்லாம் முடிவு பண்ணிக்கலாம். ஆனால் டாக்டர்  புகழ் கல்யாணமும், டாக்டர் ரஜினிகாந்த் கல்யாணமும் ஒரே மேடையில்தான் நடக்கணும். நடக்க வைப்பேன்” என்றபடியே தங்கையின் பக்கம் பக்கம் திரும்பியவன் “ஓகேதானே மஹதி” என்றான் புகழ்.

“கண்டிப்பா” என்றாள் தங்கை.

மனதில் இருப்பது எல்லாவற்றையும் உள்ளேயே வைத்துக் கொண்டு இருவரையும் மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டே அமர்ந்து இருந்தான் நமது கண் மருத்துவன்.

“ஓகே சர். கிரேட் மீட்டிங் யூ. நீங்களும் நீங்க கொடுத்த பாசந்தியும் ரொம்ப அருமை. சீக்கிரம் நல்ல செய்தியோடு சந்திப்போம்” என எழுந்து புகழ் கை நீட்ட, எழுந்து நின்று அவனுடன் கை குலுக்கினான் ரஜினிகாந்த்.

இருவரும் கிளம்பி  சென்ற பிறகுதான் கவனித்தான் அதை. மஹதி அமர்ந்து இருந்த இடத்தின் அருகில் மேஜை மேலேயே இருந்தது அவளது கைப்பேசி. மறந்து விட்டு சென்று விட்டாள் போலும். அதை எடுக்க எப்படியும் வருவாள். அல்லது நாளை மருத்துவமனையில் அதை கொடுத்துக் கொள்ளலாம் என்று அவன் நினைத்த நேரத்தில் ஒலித்தது மஹதியின் கைப்பேசி.

இவனது புருவங்களை சுருங்க வைக்கும் விதமாக “சுமித்ரா! ஸ்ரீதேவி மாம்!” என்று ஒளிர்ந்தது திரை. அவனது தலைக்குள் நிறைய சுனாமிகள்.

சில நிமிடங்கள் கடந்து அவன் நினைத்தபடியே  மஹதி மறுபடியும் கடையில் வந்து நின்ற போது  கடையின் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தான் நமது மருத்துவன். எதிர்முனை சொன்ன மளிகை பொருட்களை எல்லாம் குறித்துக் கொண்டிருந்தான் அவன் ..

“இன்னும் அரை மணி நேரத்தில் வீட்டுக்கு பொருள் எல்லாம் வந்திடும் சர். நீங்க ஜி பே பண்ணிடுங்க” வேலைக்குள் தன்னை தொலைத்தவனை கலைக்க விரும்பாதவளாக நின்றிருந்தாள் கொஞ்ச நேரம்.

பேசி முடித்து விட்டு, அங்கிருந்த வேலையாட்களுக்கு ஆணைகளை கொடுத்து விட்டு அவன் கணிணியின் பக்கம் திரும்ப

“ஹாய் டாக்டர் ” என்றாள் இவள் கிசுகிசுப்பாக . அவளது குரலில் விழிகளை நிமிர்த்தினான் ரஜினிகாந்த்.

“என்னோட மொபைல் இங்கே வெச்சிட்டு போயிட்டேன் டாக்டர் சார். சொல்லப் போனா வேணும்னே வெச்சிட்டு போயிட்டேன். அதை சாக்கு வெச்சு தனியா திரும்ப வரலாம்னு பிளான். உங்ககிட்டே தனியா பேச வேறே வழி தெரியலையே. இந்த வாய்ப்பை விட்டா நீங்க தனியா சிக்க மாட்டீங்க ” படபடவென சொன்னாள் அவள்.

“அதுதான் நீங்க சொல்ல வேண்டியது எல்லாம் சொல்லிட்டீங்களே அப்போவே. இன்னும் என்ன பேசணும்.?” என்றான் கணிணியை பார்த்துக் கொண்டே. அவளது அலட்டலை பெரிதாக சட்டை செய்யவில்லை ரஜினிகாந்த் .

 “மின்சாரக் கண்ணா” அழைத்தாள் அவனை.

“வாட்?” நிமிர்ந்தான் அவன்

“நீங்க படையப்பா படம் பார்த்தது இல்லையா?” அவளது விழிகளில் கூர்மை.

“ஸோ நான் படையப்பா நீங்க நீலாம்பரியா?” சலிப்பாக நெற்றியை தேய்த்து விட்டுக் கொண்டான் “எனக்கு நிறைய வேலை இருக்கு. என்னதான் வேணும் உங்களுக்கு?”

“ம்…உங்களை கல்யாணம் பண்ணிக்கணும். பண்ணிக்கிட்டு குழந்தை குட்டி பெத்துகிட்டு சந்தோஷமா வாழணும்” அவள் சொல்ல வாயை குவித்து காற்றை ஊதினான்.

“எரிச்சலா இருக்கா?” கேட்டாள் இவள்.

“நிறையவே” பட்டென வந்தது அவனது  பதில். “நான் என்னோட லவ் பத்தி முன்னாடியே உங்ககிட்டே சொல்லி இருக்கேன். அப்படி இருந்தும் நீங்க எந்த தைரியத்திலே என்கிட்டே பேசிட்டு இருக்கீங்க?”

 “அதுதான் உங்களை கார்னர் பண்ண  தங்கச்சியை  உங்க முன்னாடி நிறுத்தி இருக்கேனே? அந்த தைரியத்திலேதான் பேசிட்டு இருக்கேன்”

“அப்படியா?”

 “என்ன அப்படியா? அது என்ன லவ். பார்த்தது இல்லை. தொட்டது இல்லை. ரொமேன்ஸ் பண்ணது இல்லை. அப்புறம் எப்படி அது லவ் ஆகும்?”

பதில் சொல்லாமல் அவள் முகத்தை ஆழமாக பார்த்தான் ரஜினிகாந்த். அது என்னவோ அந்த கேள்விக்கான பதிலை தெரிந்து கொள்ளும் ஆர்வம் அவள் முகத்தில்  நிரம்பி இருந்தது. இவனுக்கு  அந்த ஆர்வத்துக்கு தீனி போடும் எண்ணம் இல்லை.

“உண்மையிலேயே பக்கத்திலே இருந்து பார்த்திட்டே இருந்தாதான் ஒருத்தரை ஒருத்தருக்கு பிடிக்கும்” மெல்ல சொன்னாள் அவள்.

இப்போதும் ஒரு “அப்படியா?” மட்டுமே பதிலாக கிடைத்தது அவளுக்கு.

“உண்மையிலேயே உங்களுக்காகத்தான் ஆறு மாசம் முன்னாடி இந்த ஹாஸ்பிட்டல்லே சேர்ந்தேன். நான் பக்கத்திலே பக்கத்திலே வந்தாலும் உங்க சைடுலேர்ந்து எந்த ரெஸ்பான்சும்  இல்லை. அதுக்கப்புறம்  என்னடா பண்றதுன்னு யோசிச்சுகிட்டே இருந்தேன். அப்போதான்  உங்க தங்கச்சி எங்க அண்ணன் விஷயம் தெரிஞ்சது. உடனே உங்க தங்கச்சியை வெச்சு உங்களுக்கு ஒரு பெரிய செக் வெச்சேன் எப்படி?”.

மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக் கொண்டு நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து கொண்டு அவள் முகம் பார்த்தான். மெல்ல இடம் வலமாக அசைந்தது அவன் தலை.

“அப்படின்னா நம்ம கல்யாணம் நடக்காதுன்னு சொல்ல வரீங்க அப்படிதானே?” படபட வேகம் அவள் வார்த்தைகளில் “அப்படி எல்லாம் சொல்ல முடியாதே உங்களாலே. அப்படி சொல்லிட்டா நீங்க அரசியோட அண்ணன்ன்னு சொல்றதிலே எதுவும் அர்த்தம் இருக்கா என்ன?”

பதிலே பேசாமல் சுழல் நாற்காலியை ஆட்டிக் கொண்டே அமர்ந்து இருந்தான் ரஜினிகாந்த்.

“உங்களுக்கு இன்னொரு ஷாக்கிங் நியூஸ் சொல்லவா? உங்களோட எக்ஸ் லவர் ஸ்ரீதேவி என்னோட உயிர் தோழி” அவள் சொல்ல பெரிய அதிர்ச்சி எல்லாம் இல்லை அவனுக்கு. சற்று முன் வந்த அவளது அம்மாவின் அழைப்பின் காரணம் புரிந்தது ரஜினிகாந்துக்கு.

அப்படி எல்லாம் மனதில் இருப்பதை சட்டென வெளிப்படுத்தி விடும் குணம் கொண்டவன் இல்லையே அவன். அவளையே பார்த்தபடி அவன் பேசாமல் அமர்ந்து இருக்க

 “என்ன? இவ என்னடா பொம்பளை. இவ என்னடா டாக்டர்ன்னு எல்லாம் தோணுதா? ரொம்பவும் யோசிக்காதீங்க சர். நான் ஒண்ணும் மெகா சீரியல் வில்லி கிடையாது. ஒரு பிராக்டிகலான பொண்ணு.”

……………………….

“எனக்கும் உங்களைப் பிடிக்கும். அதை சொன்னதிலேதான் ஆறு மாசமா தேவி என் கூட பேசலை. அவ உங்க கூட இருக்கும் போது நான் நடுவில் வந்தா ரொம்ப தப்பு. அவதான் உங்களை  வேண்டாம்னு விட்டுட்டா இல்லையா? அது நடந்து ஒரு வருஷம் ஆச்சு. அப்புறம் நான் உங்களை கல்யாணம்  பண்ணிக்கறதிலே என்ன தப்பு?” படபடவென பொறிந்தாள் மஹதி.

மனதில் இருப்பவை எல்லாவற்றையும் பேசட்டும் என்று அமர்ந்து இருந்தான் மருத்துவன்.

“இவ எல்லாம், என்ன ஃபிரெண்ட்ன்னு யோசிக்கறீங்களா? ஏன் தியாகியா இருந்து காதலர்களை சேர்த்து வெச்சாதான் நல்ல ஃப்ரெண்டா என்ன? இப்பவும் நான் அவளுக்கு நல்ல தோழி தான். இப்பவும் அவளுக்கு ஒரு பிரச்சனைன்னா நான்தான் முன்னாடி  போவேன் அதிலே எந்த மாற்றமும் கிடையாது.” அவள் பேசி முடிக்க

“மஹதி” என்றான் மருத்துவன் “இது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். எனக்கு யாரு மனைவியா வரணும்னு நான்தான் முடிவு பண்ணணும்” எல்லா கேள்விகளுக்குமான ஒற்றை பதிலாக வார்த்தைகளை அளந்து எடுத்து அழுத்தமாக சொன்னான் அவன்.

“பண்ணுங்க பண்ணுங்க. ஆனா ஒண்ணே ஒண்ணு சொல்றேன். மஹதிக்கு பொய் சொல்றது ஏமாத்துறது இதெல்லாம் பிடிக்காது. நான் எப்பவும் எல்லாமே நேருக்கு நேர்தான்.” அவள் சொல்ல அவளை  ஏற இறங்கப் பார்த்தான் ரஜினிகாந்த்.

 “வர்ற இருபத்தி ஒண்ணு, இருபத்தி ரெண்டு சென்னை ஹோட்டல் சோளாலே ஒரு மெடிக்கல் கான்ஃபரென்ஸ் இருக்கு தெரியுமா? அதுக்கு நீங்களும் வரீங்கன்னு நினைக்கிறேன். நானும் வரேன். அது முடிஞ்சதும் உங்களோட  முடிவை தெளிவா சொல்றீங்க. சொல்ல வைப்பேன். பார்ப்போமா?”

இப்போதும் அவனிடம் மௌனம் மட்டுமே இருக்க

“ஏன் பயமா இருக்கா? அப்படிதானே இருக்கும் தங்கச்சி வாழ்க்கையாச்சே” அவளது பார்வை அவனது தன்மானத்தை வெகுவாகவே சீண்டியது. “ஏதாவது சொல்லுங்க   டாக்டர் சர்”

“ஒன்ஸ் அகைன் ஹே…ப்..பி.. தீ..பா..வ…ளி மஹதி” அவளால் அர்த்தமாக்கிக் கொள்ள முடியாத ஒரு புன்னகை இருந்தது அவனது இதழ்களில். “உங்க விருப்பபடியே நாம கான்ஃபரென்ஸ்லே நம்ம விளையாட்டை நடத்திக்குவோம். இப்போ நீங்க கிளம்பலாம்.”

“வெரி குட். வெரி குட். ஹாப்பி தீபாவளி ரஜினிகாந்த் சர். நான் இப்போதைக்கு கிளம்பறேன்” சொல்லி விட்டு அவள் நகர, அவனது நாற்காலி இன்னமும் மெல்ல அசைந்து கொண்டே இருந்தது. அவனது அந்த புன்னகையும் கொஞ்ச நேரம் மாறவில்லை.

பெங்களூரின் தீபாவளி எப்போதும் மாலை நேரத்தில்தான் களை கட்டும். அதை அங்கே மெல்ல மெல்ல கூட ஆரம்பித்து இருந்த ஒளியும் ஒளியும் நிரூபித்து கொண்டிருந்தன.

இப்போது முதல் வேலையாக தங்கையைத் தான் அழைத்தான். இவனுக்குள் ஆயிரம் குழப்பங்கள் இருந்தாலும் ஒரு அண்ணனாக அவளின் மகிழ்ச்சி இவனுக்கு பேரானந்தம்.

அங்கே அழைப்பு ஏற்கப்பட கொஞ்ச நேரம் பிடித்தது.

“கு…ட் ஈ…வி…னிங் மே…ட..ம்” வேண்டுமென்றே வார்த்தைகளை இழுத்துதான் சொன்னான் இவன்.

புகழ் மூலமாக அவன் இங்கே வந்து சென்ற செய்தி அரசியை எட்டி இருக்கும் என்பதை அறிந்துதான் இருந்தான் ரஜினிகாந்த். அதனால்தான் அழைப்பை ஏற்க அவளுக்கு ஒரு தயக்கம் என்றும் புரிந்துதான் இருந்தது அவனுக்கு.

“கு.கு… ட். ஈவினிங் அண்ணா” அவள் தழைந்த குரலில் சொன்னாள்.

“என்ன அண்ணா நொண்ணா. அண்ணனுக்கு தெரியாம எல்லா வேலையும் பார்க்க வேண்டியது. ஆனா அதுக்கு அப்புறம் அண்ணா ஆட்டுக்குட்டி அப்படின்னு குழைய வேண்டியது”

“இ..இல்ல.. நான் எதுவும் பண்ணலைண்ணா அவங்கதான் விரும்பறேன்னு..”

“விரும்பறேன்னு சொன்னானாக்கும். உடனே மேடம் வீட்டிலே பேசுங்கன்னு சொல்லி இருக்கீங்க. பெரிய மனுஷி ஆகிட்டீங்க. என்ன செய்யறது?” அவனது குரலில் ஒரு போலியான கோபம் இருக்க

“அப்படி எல்லாம் இல்லைண்ணா..” எதிர்முனையில் கொஞ்சம் கலவரம் இருக்கத்தான் செய்தது. “நான் நீங்க எல்லாரும் என்ன சொன்னாலும் கேட்பேன்”

“அப்படியா? புகழை விட்டுடுன்னு விட்டுடுவியா” என்றான் ஒரு சின்ன மிரட்டல் தொனியில்.

“சரி அண்ணா” தங்கை தயக்கத்துடன் சொல்ல சிரித்து  விட்டான் இவன்.

“ஆனா நாங்க யாரும் அப்படி எல்லாம் சொல்ல மாட்டோம் டா” என்றான் இதமாக.

உண்மை அதுதான் வீட்டில் அவளது ஆசைக்கு குறுக்கே நிற்க யாரும் இல்லை. அவள் கடந்து வந்த பாதையை பார்க்கும் வேளையில் அவளது ஆசைக்கு குறுக்கே நிற்பது நியாயமே இல்லை என்பதும் எல்லாருக்குமே தெரியும்.

“நிஜமாவா?” சந்தோஷ பேரலை டெல்லி முனையில்.

“நிஜமாதான் டா. நான் நேரம் பார்த்து அப்பா கிட்டே பேசிட்டு உனக்கு சொல்றேன் என்ன?”

“தேங்க்ஸ் ண்ணா” என்று  குதூகலித்த தங்கையுடன் கொஞ்ச நேரம் பேசி விட்டு அழைப்பைத் துண்டித்தான்.

பெங்களூரின் தீபாவளி மிளிர ஆரம்பித்து இருக்க  கடையை மூடிவிட்டு அம்மாவை பார்க்க கிளம்ப வேண்டும் என்ற எண்ணமும் வந்தது அவனுக்கு.

அதற்கு ஆயத்தமானவனுக்கு எழுந்த ஒஉர் சின்ன உந்துதலில். ஒரு முறை தனது பர்சை எடுத்து அதிலிருந்து  ஸ்ரீதேவி  முன்பு அனுப்பிய அந்தப் பரிசை வெளியே எடுத்துப் பார்த்துக் கொண்டான்.

“ஹாய் திஸ் இஸ் டாக்டர் ஸ்ரீதேவி. என்னை நினைவிருக்கிறதா?” அந்தக் குறுஞ்செய்தி இப்போது  மனதில் ஆடியது. அதை அனுப்பியது ஸ்ரீதேவிதானோ? மெலிதாக ஒரு சந்தேகம் எட்டிப் பார்த்தது அவனுக்கு.

இப்போது அதைப் பற்றி எதுவும் குழப்பிக் கொள்ள விரும்பாமல் தனக்குத்தானே இடம் வலமாக தலை அசைத்துக் கொண்டு கிளம்பலானான் நமது மருத்துவன்

ஒரு வாரம் கடந்திருந்தது. அம்மா வீட்டுக்கு வந்து இரண்டு மூன்று நாட்கள் ஆகியிருக்க அவரது உடல் நலமும் ஓரளவு தேறியிருந்தது. அரசி புகழ் பற்றிய விஷயங்களை மேலோட்டமாக சொல்லி இருந்தான் அவர்களிடம். மஹதி பற்றி எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை அவன்.

“நான் சென்னைக்கு போயிட்டு வந்த பிறகு அவங்க வீட்டுக்குப் போய் பேசுவோம் பா” சொல்லி இருந்தான் அவர்களிடம்.

நாளை மதியம்  அவன் சென்னைக்கு கிளம்ப வேண்டும்.

பொதுவாக இது போன்ற மருத்துவ கருத்தரங்குகளுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பே முன் பதிவு செய்துவிடுவது வழக்கம். அங்கே பல பெரிய மருத்துவர்களின் அறிமுகங்கள் கிடைக்கும்.

பல புதிய ஆராய்ச்சிகள் புதிய சிகிச்சைகள் பற்றிய தகவல் பரிமாற்றங்கள், மேற்படிப்புக்கான வழிமுறைகள் என பல விஷயங்கள் அங்கே கலந்துரையாடப் படும்.

எல்லாவற்றுக்கும் மேலாக இங்கே அவனது மருத்துவமனையின் உரிமையாளர்களில் ஒருவரான டாக்டர் கணபதி அதில் உரையாற்றுவதாக இருந்தார். அவனையும் இதற்கு முன்பதிவு செய்யச் சொன்னதும் அவர்தான்.

அம்மாவுக்கு அவனை அனுப்புவதற்கு அரை மனம்தான். நாளை மறுநாள் அம்மாவின் பிறந்தநாள்  வேறு. இருந்தாலும் எப்போதும் போல அப்பா கொடுத்த வார்த்தைகளில்தான் கிளம்பிக் கொண்டிருந்தான் நமது மருத்துவன்.

“இப்போ என்னடா? ரொம்ப வருஷம் கழிச்சு நானும் என் பொண்டாட்டியும் உங்க ரெண்டு பேர் தொந்தரவு எல்லாம் இல்லாம அவ பிறந்தநாளை கொண்டாட போறோம். அதிலே உனக்கு என்னடா பிரச்சனை? ரெண்டு நாள்தானே சந்தோஷமா போயிட்டு வா. எங்களையும் சந்தோஷமா இருக்க விடு ” அவனது முதுகில் செல்லமாக ஒரு அடி வைத்தார் தந்தை.

இவர்கள் மருத்துவமனையிலிருந்து டாக்டர் கணபதியையும் சேர்த்து மூவர் மட்டுமே அங்கே போவதாக பதிவு செய்யப் பட்டு இருந்தது. அதில் ஒன்று இவன், இரண்டாவது மஹதி.

 டாக்டர் கணபதி! .அவர் அறுபது வயதை  நெருங்கிக் கொண்டிருக்கும் சீனியர் மருத்துவர். அவர்கள் மருத்துவமனையின் உரிமையாளர்களில்  அவரும் ஒருவர். அவர் அந்த கருத்தரங்கில் முக்கிய உரையாற்றுவதாக இருந்தது.

அவருக்கு ரஜினிகாந்தின் மீது எப்போதுமே ஒரு அன்பு உண்டு. இவனைப் பார்த்தாலே “மை டியர் ரஜினிகாந்த் ” என்பார்.

இன்றும் கூட  அவன் மருத்துவமனையை விட்டு கிளம்பும் நேரத்தில் அறைக்கு அழைத்து இருந்தார்.

“குட் ஈவனிங் சர்” என உள்ளே நுழைந்தான் இவன்.

சற்றே பருமனான உடல் வாகும், கண்களில் அணிந்து இருக்கும் பெரிய சதுரமான மூக்குக் கண்ணாடியும்  கூட  அவருக்கு கம்பீரம்தான். அவரைப் பார்த்ததுமே எல்லாருக்கும் அவர் மீது ஒரு மரியாதை தன்னாலே பிறக்கும்.

“வெல்கம்.. வெல்கம் வெல்கம் மை டியர் ரஜினிகாந்த்”  என்றார் அவர்.

ஒரு ஆசிரியரின் முன்னால் நிற்கும் மாணவனின் பாவத்துடன்தான் நின்றான் ரஜினிகாந்த். கல்லூரி நாட்களில் சில நாட்கள் இவனுக்கு ஆசிரியராகவும் இருந்தவர்தான் கணபதி. அதனாலேயே எப்போதும் அவர் முன்னால் உட்காருவதற்கு கூட தயக்கம்தான் இவனுக்கு.

“அட உட்காருப்பா” என்றார் சின்ன புன்னகையுடன். அதன் பிறகே அமர்ந்தான் இவன்.

“நாளைக்கு கான்ஃபரென்ஸ் வரே தானே?”

“கண்டிப்பா சர்”

“அப்போ வொய் டோன்ட் யூ ஜாயின் வித் மீ. நம்ம கார்லேயே போவோம். எனக்கும் ஒரு கம்பனி வேணும். ஐ என்ஜாய் டிரைவிங் மை பாய். அதனாலேயே ஃபிளைட் வேண்டாம்னு சொன்னேன். பட் என் பொண்ணு என்னை தனியா போக விட மாட்டேங்குறா. நீ வந்தா விட்டுடுவா. டிரைவர் வேண்டாம். நாம ரெண்டு பேரும் மாத்தி மாத்தி டிரைவ் பண்ணுவோம்  என்ன சொல்றே? ரொம்ப நாள் ஆச்சுபா இப்படி லாங் டிரைவ் போய்”

“மை ப்ளெஷர் சர்” உடனே ஒப்புக் கொண்டான் இவன். நாளை  மதியம் கிளம்பலாம் என முடிவு செய்து கொண்டனர்.

அவன் ஊரில் இல்லாத போது முடிக்க வேண்டிய ஒன்றிரண்டு வேலைகளை தனது உதவியாளன ரமேஷா வசம் ஒப்படைத்தான் ரஜினிகாந்த்.

“ஊருக்கு போயிட்டு வரேன் ரமேஷா. அப்பாவும் அம்மாவும் தனியா இருக்காங்க. அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. ஸோ எதாவது தேவைன்னா உடனே அவங்களுக்கு ஹெல்ப் பண்ணு” அழகான கன்னடத்தில் சொன்னான் அவனிடம்.

“டன் சர்” என்றான் அவன் “எதிலே சர் கிளம்பறீங்க? ஃபிளைட்டா?”

“இல்லை ரமேஷா. கணபதி சர் கூட கார் லே போறேன்”

“ஓ.. ஓ.. ஒகே சர்” தலையசைத்தான் அவனது நலம் விரும்பியான ரமேஷா.

மறுநாள் மதியம் இவன் தயாராகிக் கொண்டிருந்த அந்த நேரத்தில் வந்தது அந்த குறுஞ்செய்தி. மறுபடியும் அதே தெரியாத எண்ணில் இருந்துதான்.

“உன்னிடமிருந்து பதில் எதிர்பார்த்து தோற்றுப் போனேன். பரவாயில்லை இருக்கட்டும். எப்படியும் சோளா கருத்தரங்குக்கு வருகிறாய் தானே. அங்கே சந்திக்கலாம். நானும் காரில்தான் வருகிறேன். எனது கார் எண் உனக்கு நினைவில் இருக்கிறதுதானே. மறந்திருந்தால் குறிந்துக் கொள்” என்று புன்னகைத்து முடிந்து இருந்தது அது.

தொடரும்

அத்தியாயம் 8

டாக்டர் ரஜினிகாந்த் அத்தியாயம் 8 – Praveena Thangaraj Novels

17 thoughts on “டாக்டர் ரஜினிகாந்த் அத்தியாயம் 7”

  1. Avatar

    viruviru update nu sollalam. mahadhi , rajini convo ellam sema smart ah irundhdhu. Mahadhi villi madhiri irundhalum, aval than merger ah iruppalo nu thonudhu. and rajni sir gethu sema. Waiting to read more

  2. Avatar

    ரஜினி பேருக்கு ஏத்தா மாதிரியே செம்ம கெத்து, மீதி விஷயத்த என்ன முடிவெடுக்கப் போகிறான்?

    1. Avatar

      @muthupriyabalaji உங்க கமென்ட் பெரிய சந்தோஷம் எனக்கு. தொடர்ந்து படிச்சு கருத்துகள் சொல்வதற்கு நன்றிகள் பலப்பல மா.

  3. Avatar

    யாருப்பா அது கண்ணாமூச்சி ஆடுறது….

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  4. Avatar

    மஹதி பேச்சுக்கு ரஜினி சார் செம கெத்தா பதில் குடுத்துட்டார் இடையில் வந்த பறவையாய் மஹதி இருப்பாங்களோ வருகிற கால் பிராங்க் கால்ன்னு ரஜினி சார் கண்டுபிடிச்சுட்டார் ஸ்ரீதேவி டாக்டர் எப்ப கண்டு பிடிப்பாங்கன்னு தெரியலை மஹதி சென்னையில என்ன செய்ய போறாங்கன்னு பாப்போம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *