Skip to content
Home » டாக்டர் ரஜினிகாந்த் அத்தியாயம் 9

டாக்டர் ரஜினிகாந்த் அத்தியாயம் 9

“ஹாய்..”

இருவரது பார்வையும் அங்கே செல்ல அங்கே நின்றிருந்தாள் அவள்! மஹதி! தொடக்கத்தில் இருந்தே இவர்களை சற்று இடைவெளி விட்டு பின் தொடர்ந்துதான் வந்து கொண்டிருக்கிறாள் அவளும்

“குட் ஈவினிங் சர்” என்று டாக்டர் கணபதியை  பார்த்து புன்னகைத்தாள் மஹதி.

“குட் ஈவினிங் மஹதி” அவர் சொல்ல

“ஹலோ டாக்டர் ரஜினிகாந்த்” என்று அவனோடு ஒட்டி நின்று அவனது முழங்கையோடு தனது கரங்களை அவள் கோர்த்துக் கொண்ட அந்த நேரத்தில் அங்கே அந்த உணவகத்தின் வாசலுக்கு வந்து நின்றது ஸ்ரீதேவியின் கார்,

இங்கே மஹதியின் கரங்களை விலக்கி விடவே முயன்றான் ரஜினிகாந்த்.

‘என்ன செய்து கொண்டிருக்கிறாள் இவள்?’ உள்ளுணர்வு உறுத்த இவனது பார்வை ஒரு முறை சுற்றும் முற்றும் பார்த்து விட்டுத்  திரும்பியது.

“என்ன சார் நம்ம ரஜினி சர் நல்லா டிரைவ் பண்றாரா?” என்று டாக்டர் கணபதியை  குடைந்த படியே அவனோடு இன்னுமாக ஒட்டிக் கொண்டு நின்று கொண்டாள் அவள்.

இங்கே ஸ்ரீதேவியின்  செலிரியோ கார் நிறுத்தத்தில் சென்று நின்றது. இவர்கள்  மூவரும் கார் நிறுத்தத்திற்கு வெகு அருகில் எல்லாம் இருந்து விடவில்லை என்றாலும் அங்கிருந்து  கண்ணுக்கெட்டும் தூரத்தில் நின்றார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

காரை நிறுத்தத்தில் சரியான கோணத்தில் நிறுத்தி விட்டு ஒரு ஆழ் மூச்சு எடுத்துக் கொண்டாள் ஸ்ரீதேவி. கை தனிச்சை செயலாக கைப்பேசியை எடுக்க கண்ணில் பட்டு வைத்தது அந்த குறுஞ்செய்தி.

அந்த உணவகத்தின்  பெயரை குறிப்பிட்டு இங்கே இருக்கிறேன் என்னை சந்திக்கும் ஆசை இருந்தால் உடனே வா என்று  குறிப்பிடப் பட்டிருந்தது அதிலே.

அதை அனுப்புவது அவன்தானா எனும் குழப்பம் இருந்த போதிலும் அதைப் பொய் என்று ஒதுக்கவும் தோன்றவில்லை அவளுக்கு. அது யார் என்று ஆராயும் பொறுமையும் இல்லை. உள்ளுணர்வு அவன் வருகிறான் என்றே சொன்னது.

சுவாசம் விட்டு விட்டு கிடைத்துக் கொண்டிருந்தது ஸ்ரீதேவிக்கு.  ‘அப்படி என்றால் இப்போது அவன் முன்னால் சென்று நிற்கப் போகிறாயா? இதுவரை செய்தது போதாது என்று அவனது மனதை இன்னுமாக ரணமாக்க போகிறாயா? 

அவள் மனசாட்சி கேட்ட கேள்விக்கு அவளிடம் பதில் இல்லை.

‘அவனைத் திருமணமா செய்து கொள்ள முடியும் உன்னால்? அது இல்லை எனும் போது அவன் முன்னால் போய் நிற்பதில் ஏன்ன அர்த்தம் இருக்கிறது?’

இருந்தாலும் காதல் மனம் அவளை இறங்கு, இறங்கி விடு என மிரட்ட, காரை விட்டு  மெல்ல இறங்கி நின்றாள்  ஸ்ரீதேவி.

அடர் நீல ஜீன்சும் கருப்பும் வெள்ளையும் கலந்த டாப்சுமாக, மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக்  கொண்டு  நின்றவளின் பார்வையில் முதலில் விழுந்தது ரஜினிகாந்தும் கணபதியும் வந்திருந்த கார். அதன் எண்தான் குறுஞ்செய்தியில் வந்ததே. அதைப் பார்த்ததுமே உள்ளுக்குள் பனிச்சாரல்.

‘அப்படி என்றால் அவன் இங்கேதான் எங்கேயோ இருக்கிறானோ?’ பரபரத்துப் போனது அவளுக்கு.

பல வித கலவையான உணர்வுகளுடன் பார்வையை சுழற்றியவளின் கண்களில் விழுந்தனர் அந்த மூவரும். அதில் அவளுக்கு அடையாளம் தெரிந்தது மஹதியை மட்டுமே.

இவள் நின்று கொண்டிருந்த இடத்தில் இருந்து அவளால் டாக்டர் கணபதியின்  முகத்தை ஓரளவு பார்க்க முடிந்தது. அவர்தான் டாக்டர் கணபதி என்பதை அந்தக் குறுஞ்செய்தியில் குறிப்பிட்டு இருந்ததை வைத்து அறிந்து கொண்டாள் பெண். அதே நேரத்தில் அவனும் விழுந்தான் அவளது பார்வையில்.

ஆனால் அவளுக்கு முதுகு காட்டி நின்றிருந்தவனின் முகத்தை அவளால் பார்க்க முடியவில்லையே.

‘அவன் தானே? அது அவன் தானே?’ குல்ஃபியை சுவைத்துக் ஒண்டு நின்றிருந்தவனை விட்டு பார்வையை நகர்த்த முடியவில்லை அவளால்.

 ‘போய் விடவா? அவனருகில் போய் விடவா? அருகே சென்று அவனது முகத்தை  பார்த்து விடவா?’ என்று அவள் உள்ளம் பரிதவித்த நேரத்தில் சொல்லி வைத்தார் போல சில நொடிகள் ஸ்ரீதேவியை நோக்கி திரும்பி விட்டு மறுபடியும் திரும்பிக் கொண்டாள் மஹதி.

மஹதி இவளை கவனித்திருக்க நியாயமில்லை என்றுதான் தோன்றியது ஸ்ரீதேவிக்கு . அதே நேரத்தில் மஹதி அவனோடு ஒட்டி நிற்க முயல்வதையும் , அவன் சற்றே விலகி நிற்பதையும் இவளால் நன்றாகவே புரிந்து கொள்ள முடிந்தது.

ஒரு கட்டத்தில் அந்த கணபதி சாருடன் பேசிக்கொண்டே அவனது கரத்தை மஹதி தனதோடு கோர்த்துக் கொள்ள இவளுக்கு உயிர் உடைந்து போனது.

‘சாதித்து விட்டாள் மஹதி. தான் சொன்னதை செய்து காட்டி விட்டாள் மஹதி’ இவளது உயிருக்குள் சூறாவளி. அவளது அருகில் சென்று அவளின் கன்னங்களில் மாற்றி மாற்றி அறைந்து விடத்தான் விழைந்தது ஸ்ரீதேவியின் உள்ளம்.

கட்டுப்படுத்திக் கொண்டாள். தன்னைத் தானே கட்டுப் படுத்திக் கொண்டாள். இதுவரையிலும் அவன் இவள் பக்கமாக திரும்பி இருக்கவும் இல்லை அவனது முகத்தை பார்க்கும் சந்தர்ப்பமும் இவளுக்கு கிடைக்கவில்லை.

‘வேண்டாம். எதுவும் செய்ய வேண்டாம். ஆயிரம் இருந்தாலும் மஹதி அவனை நன்றாக பார்த்துக் கொள்ளத்தான் செய்வாள்’ தன்னை தானே சமாதானப் படுத்திக் கொண்டாள் ஸ்ரீதேவி.

‘அவனை நான் திருமணம் செய்து கொள்வது இந்தப் பிறவியில் இல்லை எனும் பொழுது அந்த இடத்திற்கு அவள் வந்து விட்டுப் போகட்டுமே’ உள்ளத்தின்  ஒரு பகுதி சொன்னாலும் அவளது காதல் மனம் மஹதியை கற்பனையில் அடித்து துவைத்துக் கொண்டிருந்தது.

ஒரு கட்டத்தில் உள்ளே சென்று விடலாம் என்று முடிவெடுத்துக் கொண்டவளாக, இந்தப் பக்கம் திரும்பாமல் முதுகு காட்டியே நின்றவனை ஒரு முறை பார்த்து விட்டு உணவகத்தின் உள் நோக்கி நடந்தாள் ஸ்ரீதேவி.   

அடுத்த சில நிமிடங்கள் கடந்து இருக்க, மஹதி தனது தோழிகளுடனும், ஆண்கள் இருவரும் ஒன்றாகவும் தங்களது காரை நோக்கி வந்து கொண்டிருந்த அந்த நேரத்தில் அவனது கைப்பேசியை தொட்டது தெரியாத எண்ணில் இருந்து வந்த அந்த குறுஞ்செய்தி.

‘நீ எந்த உணவகத்தில் இருக்கிறாயோ அங்கேதான் நான் இருக்கிறேன். முடிந்தால் என்னை அடையாளம் கண்டு கொள் பார்க்கலாம். அதைப் பார்த்ததும் ஒரு நொடி நின்று விட்டான் ரஜினிகாந்த். அவனது பார்வை ஒரு முறை வேகமாக சுழன்றது.

‘நிஜமாகவே இங்கே இருக்கிறாளா? எங்கிருந்தாவது என்னைப் பார்த்துக் கொண்டு இருக்கிறாளா என்ன? இந்தக் குறுஞ்செய்திகளை அனுப்பவது ஒரு வேளை  அவளாகவே இருக்குமோ?’

“என்னாச்சு பா?” இவனை கலைத்தார் கணபதி .

“ஓ.. ஒண்ணுமில்லை சர்” என்று அவருடன் நடந்தவன் கார் நிறுத்தத்திற்கு வர அவளது செலிரியோ அவனது பார்வையில் விழுந்தது. அந்த எண் அவனுக்கு மனப்பாடம் ஆயிற்றே. அவர்களது காருக்கு பக்கத்திலேயேதான் நின்றிருந்தது அது.

அனிச்சை செயலாக அவனது கரம் அந்தக் செலிரியோவை ஒரு முறை தொட்டு வருடியும் விட்டது.

‘என்னடி செய்து வைக்கிறாய் என்னை? ஏனடி வதைத்து வைக்கிறாய் எனது உள்ளத்தை” பேச்சின்றி அவன் அவளது கார் மீது கை வைத்துக் கொண்டே நின்று விட்ட நேரத்தில், அவர்கள் காருக்கு அருகிலேயே நின்றிருந்த தங்களது காரின் அருகில் நின்று கொண்டு அவனையே பார்த்துக் கொண்டிருந்த மஹதி கண்களில் விழுந்தாள்.

அது ஸ்ரீதேவியின் கார் என்பது நன்றாகவே தெரிந்துதான் இருந்தது அவளுக்கும். அவனது நிலை அவளுக்கு நன்றாக புரிந்து இருக்க, இங்கே அவளின் முன்னால் ஸ்ரீதேவியை சந்தித்து எந்த ஒரு காட்சியையும். எந்த ஒரு நாடகத்தையும் அரங்கேற்றி விடத் தோன்றவில்லை ரஜினிகாந்துக்கு.

 “நீ டிரைவ் பண்றியா ரஜினி கொஞ்ச நேரம். நல்லா சாப்பிட்டேன். கொஞ்ச நேரம் அப்படியே உட்கார்ந்து என்ஜாய் பண்ணிட்டு வரேன்” கணபதி கேட்க

“ஷூர் ஷூர் சர்” என அவரிடமிருந்து காரின் சாவியை வாங்கிக் கொண்டு அவளது காரை ஒரு முறை பார்த்து விட்டு தங்களது வண்டியின் ஓட்டுனர் இருக்கையில் ஏறி அமர்ந்து கொண்டான் ரஜினிகாந்த்.

இவர்களது கார் நிறுத்தத்தை விட்டு வெளியேறிய அதே நேரத்தில், உணவகத்தின் உள்ளே  கைகளுக்குள் முகத்தை புதைத்துக் கொண்டு கண் மூடி அமர்ந்து இருந்தாள் ஸ்ரீதேவி.

சில நிமிடங்கள் கடந்து இருக்க கார் முழு வேகம் எடுத்திருக்க

“ரஜினி” மெதுவாக அழைத்தார் சீட்டை தளர்த்திக் கொண்டு சாய்ந்து இருந்த கணபதி .

“சர்?”

“பை எனி சான்ஸ் அந்த மஹதி பொண்ணுதான் நீ விரும்பின பொண்ணா?”

“அய்யோ இல்லை சர்” கிட்டதட்ட அலறி விட்டான் இவன். சிரித்து விட்டார் கணபதி .

“ஏன்பா இப்படி அலறுறே?”

“இல்ல சர்.. அது.. அவ .. வேறே வேறே பொண்ணு சர்”

“யாருப்பா அது. அவளும் டாக்டரா? எனக்கு சொல்ல மாட்டியா அவளைப் பத்தி?” என அவன் முகம் பார்த்தார் அவனது நலம் விரும்பி.

“அவ ஸ்ரீதேவி சர்” இவன் மெல்ல சொல்ல

“வாவ் பெயர் பொருத்தம் கூட ரொம்ப நல்லா இருக்கு மை பாய்” என்றார் அவர் “எனக்கு சினிமாலே அவங்க ஜோடி ரொம்ப பிடிக்கும்”

மெல்ல சிரிக்கத்தான் முடிந்தது இவனால்.

“என்னப்பா சிரிக்குறே? காதல் கை கூடலையா?’ என்றார் இதம் மேவிய குரலில்.

“தெரியலை சர்” இவன் சாலையைப் பார்த்துக் கொண்டே பதில் சொல்ல நிமிர்ந்து அமர்ந்து விட்டார் அவர்.

“என்னப்பா சொல்றே? என் கதையை விட பெரிய கதையா இருக்கும் போலிருக்கே”

முன்னால் தனக்கு வழி விட்ட லாரியை கடந்து முன்னேறிக் கொண்டே ஒரு ஆழ் மூச்சை எடுத்துக் கொண்டான் ரஜினிகாந்த்.

“அவளை இதுவரை நான் பார்த்தது இல்லை. அவளும் என்னைப் பார்த்தது இல்லை. சர். கைக்கெட்டும் தூரத்திலேதான் சர் இருக்கா. ஆனா கை சேர முடியாத தூரத்தில் இருக்கா”

அவனாகத் தொடரட்டும் என்று குறுக்கே எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்து இருந்த டாக்டர் கணபதியின்  பார்வை, அவரது சதுர வடிவ கண்ணாடியின் வழியே அவனை முழுவதுமாக படித்துக் கொண்டிருந்தது.

“அவ பேர் ஸ்ரீதேவி சர். ஸ்ரீதேவி சுமித்ரா. அவங்க அப்பா சின்ன வயசிலேயே அவங்களை விட்டு எங்கோயோ போய்ட்டாங்க. அவங்க  அம்மா சுமித்ராதான்  அவளையும்  அவளோட அக்காவையும் வளர்த்தது.”

“ஓ ஒரு அக்கா உண்டா ஸ்ரீதேவிக்கு?” அவர் கேட்டுக் கொண்டிருக்க, மெலிதான மழைக் காற்றை கிழித்துக் கொண்டு வழுக்கிக் கொண்டிருந்தது அவர்களின் பென்ஸ்

“எங்க அம்மாவோட ஒரு சர்ஜரி நேரத்திலேதான் அவளோட அறிமுகம்” என அவள் வேலைப் பார்த்த அந்த மருத்துவனையின் பெயரையும் அவரிடம் சொன்னன் ரஜினிகாந்த்.

“ரெண்டு பேரும் நேர்லே பார்த்துக்குற சந்தர்ப்பம் ஏனோ கிடைக்கலை சர். போன்லே நிறைய பேசிக்கிட்டோம். ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் ரொம்ப ரொம்ப நேசிச்சோம். அப்புறம் நம்ம ஹாஸ்பிட்டல்லே அந்த ஸ்கேம் பத்தின பிரச்சனை வந்த போது ஏன் வந்தது எப்படி வந்ததுன்னு புரியாமலேயே எங்களுக்குள்ளே ஒரு மனஸ்தாபம். வார்த்தைகளினாலே என்னோட மனசை உடைச்சிட்டு போயிட்டா சர். என்னை பத்தி என்ன சொல்லி இருந்தாலும் பரவாயில்லை, நான் உயிரா நினைக்குற என்னோட மருத்துவத்தை வெச்சு என்னை தப்பா பேசிட்டா சர்” என்றவன் சில நொடிகள் மௌனமாகிப் போனான்.

பின்னர் மெல்ல சொன்னான்  “அதுக்கு அப்புறம் எல்லாமே நின்னு போச்சு சர். ”

“உனக்கு தொடர விருப்பம் இருக்கா ரஜினி?” எல்லாவற்றையும் கேட்டு விட்டு ஒரு கொக்கியை போட்டார் கணபதி .

“நான் முதலில் முயற்சி பண்ணேன் சர். அவ இறங்கி வரலை. என்னையும்  என் குடும்பத்தில் உள்ள எல்லார் நம்பரையும்  ப்ளாக் பண்ணிட்டா சர்”

“இப்போ தொடர விருப்பமா?” அவரது கேள்வியில் கொஞ்சம் அழுத்தம் இருந்தது. அவரைப் பார்த்து விட்டு திரும்பி சாலையில் பார்வையை வைத்துக் கொண்டான் ரஜினிகாந்த்.

“தொடர விருப்ப்மாவா? உயிருக்குள்ள வெச்சு பார்த்துக்க விருப்பம் சர்” அவன் சொல்லி விட அழகான புன்னகை மலர்ந்தது டாக்டர் கணபதியின் இதழ்களில்.

 “ரஜினி” என்றார் குரலில் இதத்தை  மட்டுமே வைத்துக் கொண்டு “எனக்கு அந்த ஸ்ரீதேவியை பற்றி தெரியாது. ஆனா அவங்க பேசினதுக்கு வேறே என்னவோ காரணம் இருக்குன்னு மனசுக்கு தோணுது”

“வேறே என்ன சர் கரணம் இ ருக்க முடியும். அவ என்னை நம்பலை அல்லது அவளுக்கு என்னை பிடிக்காம போயிருக்கும்”

“இல்லை மை பாய். தேர் ஷுட் பீ சம் அதர் ஸ்ட்ராங் ரீசன். கொஞ்சம் நிதானமா யோசி”

“அதுவும் அப்பப்போ தோணும் சர். பொதுவா எனக்குமே ஒருத்தர் முகத்தை பார்த்ததும் அவங்க மனசு ஓரளவு புரியும் சர். ஆனா நான் ரொம்ப நேசிச்ச அவளை மட்டும்  என்னாலே புரிஞ்சுக்கவே முடியலை. ஒருத்தங்க மேலே ரொம்ப அன்பு வெச்சா அந்த அன்பே நம்ம கண்ணை மறைச்சு அவங்களோட குறை நிறைகளை நாம தெரிஞ்சுக்க முடியாம பண்ணிடும் போலிருக்கு சர்.”

இதற்கு எந்த பதிலும் சொல்லாமல் ஏதோ ஒரு வித யோசனையுடன் அவனையே பார்த்தபடி அமர்ந்து இருந்தார் கணபதி .

அவர்களது கார் அங்கே ஏற்பட்ட ஒரு சின்ன வாகன நெரிசலில் காத்திருக்க பார்வையை அருகிருந்த ஒரு மரத்தின் மீது வைத்தான் ரஜினிகாந்த்.

அதன் மீதிருந்த குட்டி அணில்கள் இரண்டு ஒன்றை ஒன்று துரத்தி விளையாடிக் கொண்டிருந்தது. உடன் பிறந்த பாசம் மனிதர்களுக்கு மட்டும்தான் உண்டா? அல்லது மிருங்கங்களுக்கும் உண்டா?

அதைப் பார்த்ததும் அரசியின் ஞாபகம் வந்து போனது அவனுக்கு .  தனக்குத் தானே புன்னகைத்துக் கொண்டான் ரஜினிகாந்த்.

அடுத்த சில மணி நேரங்களில் சென்னையின் ஹோட்டல் சோளாவை நெருங்கிக் கொண்டிருந்தது ரஜினிகாந்தின் கார். டாக்டர் கணபதி அங்கே உரையாற்றுகிறார் என்பதினால் இந்த கருத்தரங்கின் அமைப்பாளர்களால் அவருக்கு அங்கேயே ஒரு அறை ஒதுக்கப் பட்டிருந்தது.

“சர்.. நான் இங்கே பக்கத்திலே இன்னொரு ஹோடேலில் ரூம் போட்டிருக்கேன். “என அவன் சொல்ல வந்ததை சொல்வதற்கு  முன்னாலேயே உள்ளே பாய்ந்திருந்தார் கணபதி .

“கேன்சல் பண்ணு மேன் அதை. என் கூட ஸ்டே பண்ணு. அதுக்குதானே உன்னை கூட்டிட்டு வந்தேன்”

“இல்லை சர் உங்களை பார்க்க யாரவது ஸ்பெஷல் கெஸ்ட்ஸ் வருவாங்க. நான் நடுவிலே..”

“அதெல்லாம் எவனும் வர மாட்டான். எல்லாரும் கான்ஃபரென்ஸ் ஹாலோட சரி. டோன்ட் வொர்ரி மை பாய்” என்று அவனது முதுகை தட்டினார் “அது என்னமோ எனக்கு உன்னோட வேவ் லெங்க்த் சிங்க் ஆகுது. இன்னைக்கு டிராவல் எனக்கு அவ்வளவு பிடிச்சது. இந்த ரெண்டு நாள் நிறைய மனசு விட்டு பேசுவோம் பா”

அதற்கு மேல் அவனால் மறுக்க முடியவில்லை.

சோளா ஹோடேலின் முகப்பு அவர்களை வரவேற்றது. அங்கே நேர்த்தியாக அணிவகுத்து நின்ற செடிகளும் அதன் மீதிருந்த மலர்களும் அவர்களைப் பார்த்து புன்னகைத்தன.

அங்கிருந்த  அலங்கார  சிற்பங்களும் வரவேற்பு பகுதியும் சோழர் கால கட்டிட கலையை, கோவில்களை  மையமாக கொண்டு அமைக்கப் பட்டு இருந்தன. நான்கு நுழை வாயில்களை கொண்டு பல பகுதிகளாக பிரிக்கப் பட்டு பிரமாண்டமாக நின்றது அந்த  ஹோட்டல்.

இவர்களின் உடமைகளை எடுத்துக் கொண்டு காரை உரிய இடத்தில நிறுத்தும் பொறுப்பை அங்கிருந்த சிப்பந்திகள் எடுத்துக் கொண்டனர்.

அவன் இங்கே வருவது இதுவே முதல் முறை . அங்கே தங்குவதற்கு ஒரு நாள் வாடகை பதிமூன்றாயிரத்தை தாண்டும் என கேள்விப் பட்டிருக்கிறான் அவன்.

அதே நேரத்தில் ஹோட்டல் சோளாவின் அருகில் இருக்கும் இன்னொரு ஹோடேலில் அறையை பதிவு செய்து வைத்திருந்தாள் ஸ்ரீதேவி. அதை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தாள் அவள். 

மஹதியும் அங்கேதான் தங்குகிறாள் என்பதை மட்டும் அவள் அறிந்திருக்கவில்லை. தெரிந்திருந்தால்தான் தங்கும் இடத்தை மாற்றிக் கொண்டிருப்பாளோ என்னவோ.

இங்கே இவர்களை ஹோட்டல் சோளா அரவணைத்து கொண்டது. இவர்கள் வரவேற்பில் நுழைய அரசர கால அரண்மனையின் சாயலில் இருந்த பிரம்மாண்ட படிக்கட்டுகளும், அதற்கு அழகு சேர்க்கும் விதமாக வீற்றிருந்த இரண்டு குதிரைகள் மற்றும் இரண்டு சக்கரங்களின்  வடிவில் இருந்த  வெண்கல சிற்பங்களும் அவர்களை ரசிக்க வைத்தன. . அங்கிருந்த சின்னதான செயற்கை குளத்தில் அல்லி மலர்கள் பூத்து இருந்தன.

அங்கங்கே விதம் விதமான உணவு விடுதிகள் இருந்ததை பார்த்து புன்னகைத்துக் கொண்டே நடந்தார் கணபதி. கால்களை இதமாக வருடிக் கொடுக்கும் கார்பெட்டுகளை தாண்டி மின்னல் வேக மின் தூக்கியில் தங்களது அறையை அடைந்து இருந்தனர் இருவரும் .  

தொங்கும் சாண்டிலியர் விளக்குகளும், அங்கிருந்த மெத்தை, சோபாக்கள், குளிர்பதன பெட்டி, பிஸ்கட்டுகள், உலர்  பழங்கள் என பலவும் அவர்களுக்காக அங்கே காத்திருந்தன.

இவர்கள் உடை மாற்றிக் கொண்டு வருவதற்குள் வரவேற்பு பானம் என இரண்டு கோப்பைகளில் இளநீர் கொண்டு வரப்பட்டது.

“என்னதான் இருந்தாலும் நம்ம ஊர்லே எல்லாம் தென்னன்தோப்பிலே பறிச்சு நேரடியா குடிக்குற இளநீர் டேஸ்ட் இல்லைப்பா இதிலே. மதியம் ரோட்டிலே குடிச்சோமே அது நல்லா இருந்தது,, அப்போ இருந்த மனநிலையிலே என்னாலே ரசிச்சு குடிக்க முடியலை. நாம ஊருக்கு திரும்ப போகும் போது எனக்கு ரோட்டிலே இளநீர் வாங்கித் தரவேண்டியது உன் பொறுப்பு ரஜினி சொல்லிட்டேன்” அந்த கோப்பையில் இருந்ததை சுவைத்துக் கொண்டே சொன்னார் டாக்டர் கணபதி .

“கண்டிப்பா வாங்கித் தரேன் சர்” புன்னகைத்தான் ரஜினிகாந்த்.

இரவு பன்னிரெண்டு மணி .அவர் நாளை ஆற்ற வேண்டிய உரையை படித்து சரி பார்த்து முடித்திருந்தனர் ஆண்கள் இருவரும். வெளியே மழை விளாசிக் கொண்டிருந்தது.

எல்லாம் அதன் போக்கில் நடந்து கொண்டிருந்த போதும் அவள் இங்கே வந்திருக்கிறாளா? வந்தால் எங்கே தங்கி இருக்கிறாள் எனும் கேள்விகள் அவனுக்கு வந்து போய் கொண்டேதான் இருந்தன.

டாக்டர் கணபதி உறங்கி விட அறையை விட்டு வெளியே வந்து மெல்ல உலவ ஆரம்பித்தவனின் பார்வையில் விழுந்தான் இந்த கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவன்.

அவனிடம் மெல்ல பேச்சு கொடுத்ததில் அவள் இங்கே வந்திருக்கிறாள் என்பதை தெரிந்து கொண்டான் ரஜினிகாந்த் . அதே வேகத்தில் அவள் தங்கியிருந்த ஹோடேலின் பெயரையும் அவன் தெரிந்து கொண்டான்.

“அவங்க உங்கலுக்கு தெரிஞ்சவங்களா டாக்டர். நாளை கழிச்சு அவங்களோட ஜீரியாட்ரிக் பிரசன்டேஷன்தான் சர். அது இந்த கருத்தரங்கத்தோட முக்கியமான பிரசன்டேஷன்.” உபரி தகவலாக சொன்னான் அந்த ஒருங்கிணைப்பாளன்.

அவளை சந்திக்கும் நேரம் நெருங்கி வருவதை மட்டும் நன்றாக உணர முடிந்தது அவனால்.

மறுநாள் காலை மிதமான மென் தூறல்களுடன் விடிந்து இருந்தது. அதிகாலை நேரத்திலேயே விழிப்பு வந்து விட்டிருந்தது அவனுக்கு

அம்மாவின் பிறந்தநாள் அவனது மனதிலாடிக் கொண்டிருந்தது. குளித்து முடித்து விட்டு வந்து  அவரை கைப்பேசியில் அழைத் வாழ்த்தியும் இருந்தான் மகன்.

அஷ்டலக்ஷ்மி கோவில் அம்மாவுக்கு ரொம்பவுமே பிடிக்கும். அங்கே சென்று விட்டு வரலாம் இருந்தால் என்று ஒரு எண்ணம் பிறந்தது ரஜினிகாந்துக்கு.

நேரம் காலை ஆறு மணியை தொட்டுக் கொண்டிருந்தது.

“குட் மார்னிங் ரஜினி” என்றபடியே அப்போதுதான் கண் விழித்தார் கணபதி . “அதுக்குள்ளே குளிச்சு ரெடியாகிட்டியா?”

“குட் மார்னிங் சர். குளிச்சிட்டேன். அம்மாவுக்கு இன்னைக்கு பிறந்தநாள் சர். அவங்களுக்கு சென்னை அஷ்டலக்ஷ்மி கோவில்ன்னா ரொம்ப பிடிக்கும். அங்கே போய் அவங்களுக்காக வேண்டிகிட்டு வந்திட்டு கான்ஃபரென்ஸ் போகலாம்னு ஒரு யோசனை சர்”

“ஷூர். போயிட்டு வா. நான் அதுக்குள்ளே ரெடி ஆகுறேன்” சொன்னார் அவர். “கான்ஃபரென்ஸ்க்கு முன்னாடி பிரேக்ஃபாஸ்ட் ரொம்ப முக்கியம். ஸோ அது முடியறதுக்குள்ளே வந்திடு. டேக் மை கார். நான் இன்னும் கொஞ்சம் தூங்கிட்டு அப்புறம் எழுந்து  ரெடி ஆகுறேன்”

கடகடவென திட்டங்களை வகுத்துக் கொடுத்தார் மனிதர்.

அடுத்த சில நிமிடங்களில் அவனது கைவண்ணத்தில் கார் அஷ்டலக்ஷ்மி கோவில் நோக்கி பறந்து கொண்டிருந்தது. மழையின் காரணமாகவோ என்னவோ சாலையில் எப்போதும் இருக்கும் பரபரப்புகள் இல்லை.

அடுத்த இருபது இருபத்தி ஐந்து  நிமிடங்களுக்குள்ளாகவே கோவிலை அடைந்து இருந்தான் ரஜினிகாந்த். காரை நிறுத்தத்தில் நிறுத்தியவன் அங்கே இருந்த ஸ்ரீதேவியின் காரை கவனிக்கவில்லை.

மழையின் புண்ணியத்தில் அங்கே அதிக கூட்டம் தென்படவில்லை. கோவிலின் கோபுரத்துடனும் அதன் மீதிருந்த பறவைகளுடனும்  மழைத் தூறல்கள் விளையாடிக் கொண்டிருக்க, அதை ரசித்தபடியே  நின்று விட்டான் சில நொடிகள்.

இவனுக்கு கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்வது எல்லாம் அத்தனை பழக்கம் இல்லைதான். பல வருடங்களாக படிப்பு வேலை என இதிலேயே மூழ்கிக் கிடந்தாகி விட்டது.

 “கோவிலுக்கு போகும் போது வெறுங்கையோட போகாதேடா. ரெண்டு முழம் பூவாவது வாங்கிட்டு போ” எப்போதாவது அதிசயமாக கோவிலுக்கு செல்லும் போது அம்மா சொல்வார்.

கோவில் திறந்து கொஞ்ச நேரமே ஆகியிருக்க வேண்டும். சுற்றி இருந்த பூக்கடைகள் இன்னும் திறக்கப் படவில்லை போலும். சுற்றும் முற்றும் இவன்  பார்வையை சுழல விட அங்கே கண்ணுக்கெட்டும் தூரத்தில் தனது கையில் இருந்த கூடையில் கொஞ்சம் மலர்களுடன் நின்றிருந்தாள் ஒரு பூ விற்கும் பெண்.

இவன் பூ வாங்குவதற்காக அவள் அருகில் சென்று நின்ற போது அந்த கூடையில்  இருந்த மலர்களின் மீது பதிந்தது ஒரு வளைக்கரம். இவன் விழிகளை நிமிர்த்த அதில் விழுந்தது அந்த முகம். அன்று இவன் மருத்தவமனையின் காபி பாயிண்டில் சந்தித்த அதே முகம்.

அவளுக்குமே அவனது முகம் பரிச்சயமானதாக இருந்திருக்க வேண்டும் என்பது அவளது முக பாவத்தில் இருந்து புரிந்தது அவனுக்கு.

இருவருக்கும் தேவையான அளவுக்கு பூக்கள் அந்தப் பெண்ணிடம் இல்லை. அது புரிந்ததைப் போலவே ஸ்ரீதேவி பூவின் மீதிருந்த தனது கையை மெல்ல  விலக்கிக்கொள்ள

“ஒண்ணு ஒன்றரை முழம்தான் இருக்கும் பூ” என்றாள் அந்தப் பூ விற்கும் பெண். “இன்னைக்கு என்னமோ, காலையிலே அஞ்சு மணிக்கு வந்தேன், ஒரு மணி நேரத்திலேயே எல்லா பூவும் வித்துருச்சு.  இந்தாங்க தம்பி ரெண்டு பேருமா சேர்ந்து இதை கோவிலிலே கொடுத்திருங்க” என இருந்த பூச்சரத்தை அவனது கையில் கொடுத்திருந்தாள் அந்தப் பெண்.

அதற்குள் தனது கைப்பையில் இருந்து ஸ்ரீதேவி காசை  துழாவி எடுக்க “காசெல்லாம் வேண்டாம்மா. இன்னைக்கு நல்ல வியாபரம். அதனாலே இந்தப் பூவை கோவிலிலே கொடுத்திருங்க” சொல்லி விட்டு சென்று விட்டாள் அந்தப் பெண்மணி.

சில நொடிகள் இருவருக்குமே என்ன செய்வது என்று தெரியவில்லை. பின்னர் அவனது முகத்தில் ஒரு சின்ன இதம் பரவ  பூச்சரத்தை ஸ்ரீதேவியை நோக்கி நீட்டினான் நமது  கண் மருத்துவன்.

எப்போதும் எல்லாவற்றக்கும் சுனாமிக்கு இணையாய் பொங்கும் எண்ண அலைகள், இன்று  அடங்கிப் போய் நிற்க கொஞ்சம் கூட யோசிக்காமல் அதை வாங்கிக் கொண்டவள் இப்போது அவனது முகத்தை நேராகப் பார்த்தாள்.

கோவிலுக்கு வருவதற்கென அவன் அணிந்திருந்த வேஷ்டியும், மழைக்காக அதை சற்றே மடித்து கட்டியிருந்த பாங்கும் அதன் மேலிருத்த காபி போடி நிற சட்டையும் அவனுக்கு ஒரு அழகான கம்பீரத்தை கொடுத்தன.

அவனுடைய மனநிலையும் அவளது மனநிலைக்கு சற்றும் மாறுபடவில்லை. அவள் அணிந்திருந்த அடர் பழுப்பும் கருப்பும் கலந்த அந்த சல்வார் உடை அவளது உயரத்துக்கு அத்தனை பாந்தமாய்  இருந்தது.

கழுத்தை ஒட்டி நின்ற அந்த தங்கச் சங்கிலியும் காதோடு ஒட்டி நின்ற தோடுகளும் அவளுக்கு மெருகூட்டின. பிறவியிலேயே வந்ததோ கற்ற கல்வி கொடுத்ததோ அவளது பார்வையில் அப்படி ஒரு தன்னம்பிக்கை.

தன்னை மிக அழகாக செலுத்திக் கொண்டிருந்தவளை சில நொடிகள் பார்த்தவனின் தலைக்குள்ளே கேள்வி பிறந்தது.

‘ஏன் இப்படி இப்படி பார்த்து வைக்கிறேன் இந்தப் பெண்ணை? ‘இது நிஜமாகவே அவள்தானா?’

இப்போது லேசான தயக்கத்தில் அவனது பார்வை கொஞ்சம் தாழ அவனது பார்வையில் விழுந்தது அது. கீழே கிடந்த  அவளது வங்கி அட்டை.

அவனதை குனிந்து எடுத்த போதுதான் அவளும் அதை கவனித்தாள். பூ விற்கும் பெண்ணுக்கு காசு கொடுக்க எடுத்த போது அது தவறி கீழே விழுந்திருக்கக் வேண்டும்.

அதை எடுத்துவிட்டான் நமது மருத்துவன். ஏதோ முன்பே சொல்லி வைத்தார் போல அவனது பார்வை அந்த அட்டையின் மீது பொறிக்கப் பட்டிருந்த அவளது பெயரின் மீது விழுத்தது.

“ஸ்ரீதேவி.எஸ்” என்று பதிக்கப் பட்டிருந்தது அங்கே.

தொடரும்

அத்தியாயம் 10

டாக்டர் ரஜினிகாந்த் அத்தியாயம் 10 – Praveena Thangaraj Novels

16 thoughts on “டாக்டர் ரஜினிகாந்த் அத்தியாயம் 9”

  1. Avatar

    Sema interesting a poghuthu story. Travel details, varnanai nice. Oru vazhiya rendu perum paarthutaanga. Prachanai yaaral nu inimel theriyuma?

  2. Avatar

    எஸ். ரெண்டு பேரும் பார்த்தாச்சு. ஆனால் தங்களின் இணை தான் என உணர்வார்களா? டாக்டர் கணபதி நல்லா ஸ்கோர் பண்ணறார். மஹதி – நீ தோழியா ? வில்லியா ? சீக்கிரம் கண்டுபிடிங்க டாக்டர் சர். விறுவிறுப்பாக இருந்தாலும் மழையின் இதம் அத்தியாயத்தில் உணர முடிந்தது. அடுத்து என்னவோ ?

    1. Avatar

      @Devisrinivasan உங்க வார்த்தைகள் எப்பவுமே பெரிய நம்பிக்கை கொடுக்கும் எனக்கு. ” மழையின் இதம்” இது பார்த்தபோது ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்தது. நன்றிகள் பலப்பல

  3. Kalidevi

    Super superb epi. Rendu perum pathutanga first rajini tha kandu pidika poran sridevi thanu. Ena tha pakala nalum avanga palaguna vitham iruku la atha ullunarvu sollum athu mari ivanga pakurathu ithula azhagana malai paravigal nu oru itham paravuthu padika padika interesting ah poguthu story. Intha mahathi tha nadula etho confuse pani vitu iruka namma sridevi ah

  4. Avatar

    ஸ்ஸ்ஸ்..அப்பா கடைசில ரொம்ப பரபரப்பா ஆகிடுச்சு… அடுத்த என்னாகுமோன்னு.. இருக்கு …
    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  5. Pingback: டாக்டர் ரஜினிகாந்த் அத்தியாயம் 8 - Praveena Thangaraj Novels

  6. Avatar

    ஒருவழியா ரெண்டு பேரும் பாத்து கிட்டாங்க ஆனா கண்டு பிடிச்சிருவாங்களா ஒவ்வொரு எபியும் எதிர்பார்ப் போட முடிக்கிறிங்களே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *