Skip to content
Home » டாக்டர் ரஜினிகாந்த் அத்தியாயம் 10

டாக்டர் ரஜினிகாந்த் அத்தியாயம் 10

விழிகள் விரிய இன்னொரு முறை அந்தப் பெயரை படித்துக் கொண்டான் அவன். “ஸ்ரீதேவி.எஸ்”. அவனது  முகம் சில நொடிகள் மலர்ந்து போவதை அவனாலேயே தவிர்க்க இயலவில்லை.

‘அவள் தானே? இது அவள்தான் என்று உறுதியாகி விட்டது தானே?’

‘அது எப்படி இந்த உலகத்தில் ஒரே ஒரு ஸ்ரீதேவி.எஸ் தானா என்ன?’ இவனது அறிவு மாற்றி மாற்றி குழப்பிக் கொண்டிருக்க

அவளது பெயரைப் பார்த்ததும் அவனது முகத்தில் வந்த மகிழ்ச்சி அவளுக்கு நிறைய செய்திகளை சொன்னது.

‘எனது பெயரை பார்த்ததும் அவன் ஏன் மகிழ்ந்து போகிறான். அப்படி என்றால் எனது உள்ளுணர்வின் குரல் நிஜம்தானே?’

‘கேட்டால் என்ன? நீதான் டாக்டர் ஸ்ரீதேவி சுமித்ரா வா என்று கேட்டு விட்டால் என்ன?’

“நான்தான் உங்களை பிடிக்கலைன்னு சொல்லிட்டேன். அதுக்கு மேலே எதுக்கு இப்படி வெட்கம் கெட்டு என் பின்னாலே வரீங்க? இப்படி மாத்தி மாத்தி மெசேஜ் அனுப்ப கேவலமா இல்லையா? போதும் இதோட நிறுத்திக்கோங்க. இல்லன்னா விளைவுகள் அசிங்கமா இருக்கும்”

எப்படிப்பட்ட விசித்திரமான படைப்பு  இந்த மனம்? தேவையான நேரத்தில் தேவையான பல விஷயங்கள் மறந்து போவதையும்,  தேவை இல்லாத  நேரங்களில் தேவை இல்லாத விஷயங்கள் நினைவுக்கு வந்து தொலைப்பதையும் நம்மால்  தடுக்கவே முடியாதோ?

‘பேசட்டும். முதலில் அவளே பேசட்டும்’ அவன் பார்வையை சற்றே நகர்த்திக் கொள்ள அவனது ஒவ்வொரு அசைவையும் படித்துக் கொண்டிருந்தாள் அவள்.

 ‘ஒரு முறை. ஒரே ஒரு முறை அவன் பேசி விட்டால் போதுமே  நான் அவனை அடையாளம் கண்டு  கொள்வேனே. அவனது குரல் அந்த அளவுக்கு எனக்குள் ஊடுருவிக் கிடக்கிறதே’ மனம் அங்கலாய்த்து வைத்தது.

‘அடையாளம் கண்டு கொண்டு? அடையாளம் கண்டு கொண்டு என்ன செய்யப் போகிறாய்? அவனோடு பேசி விடப் போகிறாயா? உன்னை வெளிப்  படுத்திக் கொள்ளப் போகிறாயா? அதன் பிறகு அவனுடன் சென்று வாழ்ந்து விடப் போகிறாயா? எப்படி உண்மை எல்லாம் சொல்லி விட்டா? அப்படி சொல்லி விட்டால் அவன் உன்னை ஏற்றுக் கொள்வானா? அல்லது உண்மையை சொல்லாமல் அவனை ஏமாற்றிக் கொண்டு வாழப் போகிறாயா? அது முடியுமா உன்னால்?’

அவளது மனசாட்சி கேட்ட கடைசி கேள்விகளுக்கு  பதிலாக அவளது தலை  தன்னாலே இடம் வலமாக அசைந்தது.

அதே நேரத்தில் அவனது பழைய பேச்சுக்கள் இன்னமும் அவளது காதில் கேட்டுக் கொண்டிருக்க அந்த குரலுக்கு சொந்தக்காரன் இவன்தான் என்று சொல்லிக் கொண்டிருந்தது அவனது கம்பீரமான தோரணை.

‘பேசாமல் அந்த அட்டையை வாங்கிக் கொண்டு உனது வழியைப் பார்த்து கொண்டு செல்’ அவளை மிரட்டினான் மனசாட்சி எனும் அந்த அரக்கன்.

அவனது சொல்படியே தனது அட்டைக்காக அவள் கை நீட்ட அலை பாயும் மனதுடன் அவளது விழிகளை படித்துக் கொண்டே அட்டையை கொடுத்தான் ரஜினிகாந்த்.

இருவருக்கும் ஒருவரை அடையாளம் தெரிந்து கொள்வதும் ஒருவர் புகைப்படத்தை ஒருவர் எங்கிருந்தாவது  தருவித்துக் கொள்வது ஒன்றும் பிரம்ம வித்தை இல்லை. அவனைப் பொறுத்தவரை அரசியே அவளது புகைப்படத்தை வைத்திருக்கிறாள். ஆனால் அவன்தான் இந்த நிமிடம் வரை  அதைப் பார்ப்பதை  தவிர்த்துக் கொண்டே வருகிறான்.

கோவிலின் வாயிலை  நோக்கி இருவரும் ஒன்றாகவே நடந்தார்கள். இருந்தாலும் ஒன்றுமே பேசிக் கொள்ளவில்லை.  ஒருவரை விட்டு ஒருவர் விலகி நடக்கவும் இல்லை. நடக்கத் தோன்றவும் இல்லை. ஏதோ ஒன்று இருவரையும் கட்டிப் போட்டுத்தான் வைத்தது.

இன்று அவனது அன்னையின் பிறந்தநாள் என்று அவளுக்கும் தெரியும். அவருக்கு இந்தக் கோவில் பிடிக்கும் என்பதும் அவளுக்குத் தெரியும். அவள் இங்கே வந்ததும் அதற்காகத்தான்.

;எனதருகில் இருப்பவன் யமுனாவின்  மகன்தானோ? அவனும் அவருக்காகத்தான் வந்திருக்கிறானோ?

மிக மிக  மெலிதான தூறல்கள் அவர்களின் அந்த அருகாமையை ரம்மியமாக்கிக் கொண்டிருக்க,  செருப்பை வைக்க வேண்டிய இடத்தில்  வைத்து விட்டு கோவிலுக்குள் இருவரும் ஒன்றாக நுழைந்த நேரத்தில் இருவர் பார்வையும் இயல்பாக சந்தித்துக் கொள்ள, அவள் ஸ்ரீதேவியேதான்  என்று ஏதோ ஒன்று உறுதி சொல்லியது அவனுக்குள்ளே.

அடுத்த நொடி அவளது விழிகளைப் பார்த்துக் கொண்டே சொல்லியும் விட்டான் ரஜினிகாந்த்  “பார்றா.  இன்னைக்கு சென்னை சென்னை மாதிரியே இல்லை. குளுகுளுன்னு இருக்கு. யாரவது புதுசா பெங்களூர்லேர்ந்து மழையை கூட்டிக்கிட்டு சென்னைக்கு வந்திருக்காங்களா என்ன?”

அவனது புருவங்கள் அவளைப் பார்த்து ஒரு ஏறி இறங்க, அடுத்த நொடி, அவனது பார்வை செய்த  மாயத்தில், அதை விட அந்த “பார்றா” செய்த வித்தையில்  களுக்கென அவளது கண்களில் நீர் கட்டிக் கொள்ளத்தான் செய்தது.  

நான்தான் உன்னவன் என்பதை இதை விட அழகாக சொல்லி விட  முடியுமா என்பது அவளுக்குப் புரியவில்லை.

அதே நேரத்தில் அவனது வார்த்தைகள் வந்த அதே வேகத்தில், அவளது விழிகளில் தோன்றி பளபளத்து நின்ற கண்ணீரே  நான் உன்னவள்தான் என்று சத்தியம் செய்தது அவனிடம்.

சிறு புன்னகை ஒன்று மலர்ந்தது அவனது மீசையோரம்.  இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு சிறு புன்னகையுடன் அவளது முகத்தையே பார்த்திருந்தான் அவன்.

சில நொடிகள் அவளிடமும் அசைவில்லைதான். பின்னர் சட்டென ஒரு நிலைக்கு வந்து கொஞ்சம் விலகி நின்று கொண்டாள் ஸ்ரீதேவி. அவனுக்கு தன்னை அடையாளம் தெரிந்த விட்டது என்பது அவளுக்குப் புரியத்தான் செய்தது.

அதே நேரத்தில்  ‘அடையாளம் தெரிவதினால் ஒன்றும் பெரிதாக மாறி விடப் போவதில்லை. அவனை எப்படி விலக்கி தூர நிறுத்துவது என்பது எனக்குத் தெரியும்’ என்பதே அவளின் முடிவாக இருந்தது.

மெல்ல நகர்ந்து விலகி சன்னதியை நோக்கி நடந்தாள் ஸ்ரீதேவி அவனது மீசையோரம் இருந்த அந்த சின்ன புன்னகையை கலைக்கக் கூட  விரும்பாமல்  அவனும் நடக்க, சன்னதியில் அவன் நின்ற இடத்துக்கு எதிர்ப்பக்கத்தில் சென்று நின்று கொண்டாள் அவள்.

அங்கே சன்னதியில் கம்பீரமாக நின்றிருந்தார் மகாவிஷ்ணு. அவளது கையில் இருந்த அந்த பூச்சரத்தை  வாங்கி மனமார தோளில் சாற்றிக் கொண்டார் அவர்.

அவனது பார்வை நான்கு நொடிக்கு ஒரு முறை அவளிடம் வந்து வந்து போய்க் கொண்டிருக்க அவளுக்கு அங்கிருந்து நகர்ந்து விட வேண்டுமென படபடத்தது.

அவள் இங்கே வந்த நோக்கம் அவனது அன்னையின் பெயருக்கு அர்ச்சனை செய்வதுதான். நினைத்தது போல தேங்காய் பழக் கடைகள் இன்னும் திறக்கவில்லை.

அங்கே வந்த அர்ச்சகரிடம் “அர்ச்சனை பண்ண முடியுமா?” ஒரு வித யோசனை கலந்த குரலில் கேட்டாள் அவள். அவளது குரலில் விலுக்கென நிமிர்ந்தான் ரஜினிகாந்த்.

“பண்ணலாமே. எப்பவும் உதய கால விஸ்வரூப பூஜை முடிய நாழியாகும். அதுக்கு அப்புறம்தான் தீர்த்தம், சடாரி அர்ச்சனை எல்லாம்.  இன்னைக்கு வெள்ளிக்கிழமை இல்லையா. நிறைய பேர் வருவா. அதனாலே சீக்கிரம் ஆயிடுத்து. அதனாலே அர்ச்சனை பண்ணலாம். பேர் நட்சத்திரம் சொல்லுங்கோ” அவர் சொல்ல

“தேங்காய் பழம் எதுவும் கிடைக்கலை” இவளது குரல் மெல்ல தழைய

“அதனாலே என்ன? தாயாருக்கு குங்கும அர்ச்சனை பண்ணுவோம் சொல்லுங்கோ” என்றார் அர்ச்சகர்.

அவன் தரையில் நிற்கிறானா வானத்தில் மிதக்கிறானா என்பது அவனுக்கே புரியாத வண்ணம் அவனது அன்னையின் பெயர் நட்சத்திரம் ராசி என அத்தனையையும் அர்ச்சகரிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் அவள். இமைக்க மறந்திருந்தான் நமது நாயகன்

குங்கும கிண்ணத்தை இவள் தொட்டு முடிக்க. இவனிடம் வந்தார் அர்ச்சகர். ஏதோ ஒரு மந்திர விசையில் கட்டுண்டவன் போன்றதொரு தொனியிலேயே இவன் அம்மாவின் பெயர் நட்சத்திரம் எல்லாம் சொல்லி முடிக்க அர்ச்சகர்  இருவரையும் மாற்றி மாற்றி பார்த்து விட்டு உள்ளே சென்றார்.

அடுத்து அர்ச்சனை முடித்து அவர் ஆர்த்தி தட்டுடன் வர அதில் இருநூறு ரூபாய் தாள் ஒன்றை வைத்தாள் பெண்.  இவனும்  தட்டில் தட்சணையை போட்டு விட, அடுத்து தீர்த்தம் சடாரியுடன் வந்தார் அர்ச்சகர்.

இவன் தீர்த்தம் வாங்கிக் கொண்டு, கண்மூடி தலை வணங்கி சடாரியை பெற்றுக் கொண்டு நிமிர்ந்து கண் திறந்த நேரத்தில் அவள் அங்கே இல்லை.

 “தீர்த்தம் சடாரி எதுவுமே வாங்கிக்காம போயிட்டாளே” அவளைத் தேடியபடியே இவனிடம் சொன்னார் அர்ச்சகர். இவனது கண்களும் அவளை அவசரமாகத் தேடின.

அடுத்து “சரி ஒரு நிமிஷம் இருங்கோ என்று உள்ளே சென்றவர்   “இந்தாங்கோ’ என ஒரு ஒரு பாக்கு மட்டை தொன்னை நிரம்ப சுடச் சுட சர்க்கரை பொங்கலை எடுத்து வந்து அவனிடம் நீட்டினார்.

இருவருக்கும் என்ன பந்தம் என அவருக்கு புரிந்தது என்பதெல்லாம் அவனுக்குத் தெரியவில்லை. இருவரும் ஒரே பெயர் நட்சத்திரத்தை சொன்னதாலோ என்னவோ,

“ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடுங்கோ” என்று அவர் சொல்லி விட,  தலை அசைப்பதை தவிர வேறே எதையுமே செய்ய முடியாதவனாக பிரசாதத்தை வாங்கிக் கொண்டு நடந்தான் ரஜினிகாந்த்.

படிக்கட்டுகளில் ஏறி மேலே உள்ள இரண்டு தளங்களில் உள்ள  அஷ்டலக்ஷ்மிகளையும் தரிசித்துக் கொண்டே வந்தான் நமது நாயகன் என்று சொன்னாலும்,  ஒவ்வொரு சன்னதியிலும் கையில் சர்க்கரை பொங்கலுடன் தனது உள்ளம் கவர்ந்தவளைத்தான்  தேடிக் கொண்டிருந்தான் நமது கம்பீரமான மருத்துவன்.

எங்கேயும் கண்களில் சிக்கவில்லை அவள். எல்லா சன்னதிகளையும் தாண்டி படிகளில் இறங்கி மேல் தளத்தை ஒட்டி இருந்த அந்த முற்றத்திற்கு வந்திருந்தான் ரஜினிகாந்த்.

கோவிலிலேயே மிக மிக அழகான பகுதி அதுவாகத்தான் இருக்குமோ என்று தோன்றும் அளவுக்கு மனதை வசீகரித்தது அங்கிருந்து தெரிந்த நீலக் கடல்.

கடல் காற்று கேசம் கலைக்க சட்டென காணாமல் போனவளை, கையில் இருந்த சர்க்கரை பொங்கலுடன், அவன் தேடிக் கொண்டிருந்த நேரத்தில் பின்னாலிருந்து கேட்டது அந்தக் குரல்.

:ஹாய் டாக்டர். குட் மார்னிங் ” அவன் சுழன்று திரும்பிய திசையில் நின்றிருந்தாள் மஹதி. இவள் இந்த நேரத்தில் இங்கே எப்படி வந்தாள் என்பதுதான் அவனுக்குப் புரியவில்லை.

“குட் மார்னிங் மஹதி” அவன் சொல்வதற்குள் அவள் சர்க்கரை பொங்கலை நோக்கி வந்திருந்தாள்.

“ஹை.. சர்க்கரை பொங்கல்…குடுங்க இப்படி”

அது என்னவோ தனக்கு சொந்தமான எதையோ, அதை விட தன்னவளுக்கு சொந்தமான எதையோ அவள் பிடுங்கிக் கொள்ளும் ஒரு உணர்வு அவனுக்கு.

“மஹதி இது கோவில் பிரசாதம். வேறே ஒருத்தங்களுக்கு குடுக்கணும். நீங்க கொஞ்சமா எடுத்துக்கோங்க” உறுதி இருந்தது அவனது  தொனியில்.

“பார்றா” என்றவளை ஒரு முறை ஏற இறங்கப் பார்த்தான் ரஜினிகாந்த்  “யாருக்கு கொடுக்க போறீங்க? இந்த ஊரிலே யாரைத் தெரியும் உங்களுக்கு?” கேலி இருந்தது அவள் குரலில். “வாங்க நாம ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடுவோம்”

“அவங்க யாரா இருந்தா உங்களுக்கு என்ன? கொஞ்சம் எடுத்திட்டு மீதியை அப்படியே வைங்க” அவனது கரம் பிரசாதத்தை அவளை நோக்கி நீட்டினாலும் இன்னுமாக கண்களை விட்டு மறைந்து போனவளை தேடிக் கொண்டே இருந்தான் நமது மருத்துவன்.

“நீங்க என்னதான் தேடினாலும் நீங்க தேடறவங்க கிடைக்கப் போறதில்லை” என்றாள் அவன் முகம் பார்த்து. அப்படியே மாற்றம் கொண்டது அவனது முகம்.

‘கோவிலிலே கேட்குற வார்த்தை எல்லாம் தெய்வ வாக்குதான் டா” அம்மா அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கிறான் இவன்.

“இந்த உலகத்திலே எந்தப் பொருள் யாருக்காக படைக்கப் பட்டிருக்கோ அது அவங்களைத் தான் போய் சேரும். இப்போ உதாரணத்துக்கு நீங்க எனக்காக  படைக்கப் பட்டிருக்கீங்க. அதனாலே என் கிட்டேதான்  வருவீங்க. என்னை விட்டுட்டு வேறே யாரவது உங்க கிட்டே..”

அவளது  வார்த்தைகள் அவனது செவிகளில் விழுந்த மாத்திரத்தில் கட்டுகடங்காத கோபம் ஒன்று புறப்பட்டது அவனுக்கு.

“வில் யூ ஷட் அப்” அவள் முடிப்பதற்குள்ளாகவே அவளைப் பார்த்து எகிறினான் ரஜினிகாந்த்.

அதன் பிறகு தனக்கு எங்கிருந்து அத்தனை கோபம் வந்தது, என்ன நடக்கிறது அங்கே, என எதையுமே யோசிக்கவில்லை அவன். அவள் அந்த பிரசாதத்தை சாப்பிடப் போகிறாள் என்பதை மட்டும் அவனால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை.

அப்போது அங்கே அந்த முற்றத்தின் ஓரமாக, அமர்ந்திருந்த ஒரு வயதான ஏழைப் பெண்மணி அவனது பார்வையில் விழ விறுவிறுவென அவள் அருகில் சென்றவன்

“இந்தாங்க சாப்பிடுங்க” என மொத்த பிரசாதத்தையும் அவளிடம் கொடுத்திருந்தான்.  அந்தப் பெண்மணி அதை மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொள்ள இப்போது கொஞ்சம் தணிந்தது அவனது தணல்.

இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு வாயை குவித்து கொஞ்சம் காற்றை ஊதி விட்டு திரும்பியவனின் அருகில் வந்து நின்றிருந்தாள் மஹதி. அதற்கு மேல் அங்கே நிற்க விரும்பாதவன் போல அவளை விட்டு விலகி விறுவிறுவென நடந்தான் ரஜினிகாந்த் .

அடுத்த சில நிமிடங்களில், இவன் காரை செலுத்திக் கொண்டிருக்க அழைத்து இருந்தாள் அரசி. காரை சாலையின் ஒரு ஓரத்தில் நிறுத்தி விட்டு அழைப்பை ஏற்றான் அரசியின் அண்ணன்.

“சென்னை எப்படிண்ணா இருக்கு?”

“செம அரசிம்மா. வெயிலே இல்லை” என்றான் உற்சாகமாய். ஆனால் அடுத்த கேள்வி அவனது மொத்த உற்சாகத்தையும் கரைத்து போட்டது.

“அண்ணியும் அங்கேதான் இருக்கங்களா?” சில நொடிகள் மூச்சே வரவில்லை அவனுக்கு. பின்னர் நிதானித்துக் கொண்டு கேட்டான் நமது நாயகன்

“நீ யாரை சொல்றேடா அரசி?”

“நம்ம மஹதி அண்ணியைதான் சொன்னேன். புகழ்தான் சொன்னாங்க,  உங்க ரெண்டு பேர் கல்யாணத்தை  பத்தி அவங்க உங்ககிட்டே பேசி இருக்காங்க அப்ப்டின்னு. நீங்க சீக்கிரம் நல்ல முடிவு சொல்வீங்க அப்படின்னு” படபடவெனதான் பேசினாள் அவள்.

“ஓ…” மெல்ல சொன்னான் இவன்.

 “என்ன ஓ?”

“ம்?” என்று நிறுத்தியவன்  “அடுத்து மேடம் எப்போ ஊருக்கு வரீங்க அதைச் சொல்லுங்க. அம்மா உங்களை பார்க்கணும்னு ரொம்ப வெயிட் பண்றாங்க” அவன் பேச்சை மாற்றிய விதத்திலேயே ஏதோ புரிவதைப் போல இருந்தது தங்கைக்கு.

அந்த விஷயம் அங்கேயே நின்று போக வேறே

“நாளைக்கு முடிஞ்சா ஊருக்கு கிளம்ப ட்ரை பண்றேன் ண்ணா” என ஆரம்பித்து ஏதேதோ பேசி விட்டு முடித்தார்கள் அண்ணனும் தங்கையும்.

இருந்தாலும் ஒரு அண்ணனாக அவனுக்கு இருக்கும் மிகப் பெரிய பொறுப்பு அவன் உன்னே விஸ்வரூபம் எடுத்து நின்றது.

அடுத்த சில நிமிடங்களில் ஸ்ரீதேவி, ரஜினிகாந்த் இருவரும் தங்களது அறைக்கு வந்திருந்தனர். கட்டுக்கடங்காத வேகத்தில் துடித்துக் கொண்டிருந்தது அவர்களது இதயம்.

‘பார்த்து விட்டேன். நான் என்னவனை பார்த்து விட்டேன். அவனுக்கென்ன? அவன் மீது வைத்த கண்களை மறுபடியும் எடுக்க முடியாத அளவுக்கு கம்பீரமாகத் தான் இருக்கிறான். நான் எப்படி இருக்கிறேன்? சரியாக இருக்கிறேனா இன்று?’ அவசரமாகத் தன்னை கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள் ஸ்ரீதேவி.

ஏதோ அவனைப் பார்த்த மாத்திரத்தில் தனக்கும் அழகு கூடிப் போன உணர்வு பெண்ணுக்கு.

‘அதுவெல்லாம் சரி அவனைத் திருமணமா செய்து கொள்ளப் போகிறாய்?’ ஆஜரானது அவளது மனசாட்சி.

அதே நேரத்தில் இங்கே தனது அறையில், டாக்டர் கணபதி குளியல் அறையில் இருக்க, ‘ஆயிரம் இருந்தாலும் பார்த்து விட்டேன் உன்னை. இத்தனை நாட்கள் காத்திருந்து காத்திருந்து கோவிலில் சந்தித்து விட்டேன் உன்னை.’ ரஜினிகாந்த் மகிழ்ந்து கொண்டிருந்தான் தனக்குள்ளே.

‘என்னடி செய்கிறாய் நீ? என்னை விட்டு ஓடிப் போகிறாயா? அப்படி எத்தனை தூரம் போய் விட முடியும் உன்னால்?’ உடை மாற்றிக் கொண்டே கண்ணாடி முன்னால் நின்று கேட்டுக் கொண்டிருந்தான் அவன்.

இப்போது ஒரே நேரத்தில் இருவர் மனமும் அவர்கள் முன்பு பரிமாறிக் கொண்ட பரிசுக்கு சென்றது. இருவரும் பேசிக் கொண்டிருந்த காலங்களில் அதை அவர்கள் அடிக்கடி அணிந்து கொண்டது உண்டு. அதன் பிறகு அது எப்போதும் அவர்களது கைப்பையிலேயே கிடக்கிறது.

அது தங்கத்தினால் ஆன கைக்கடிகாரம். அதில் கடிகாரத்தை தாங்கி நிற்கும் தங்கச் சங்கிலி இவர்களின் பெயரின் வடிவத்திலேயே இருக்கும்.

இருவரும் ஒரே நேரத்தில் அதை வெளியில் எடுத்தார்கள். அவன் அதை  உடனே அணிந்து கொண்டான். எப்படியும் அவள் மறுபடியும் தனது கண் முன்னே வருவாள் என்பது நன்றாகவே தெரியும் அவனுக்கு. அவள் அதைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே அணிந்து கொண்டான் அவன்.

அவளுக்கு இரண்டு மனம்தான்.

‘அது எனது கையில் இருந்தால், அது  அவனது  கண்ணில் பட்டால் நான் இன்னும் அவனையே நினைத்துக் கொண்டிருக்கிறேன் என நினைக்க மாட்டானா? வேண்டாம். அணிய வேண்டாம்’.

‘இன்று ஒரு நாள் மட்டும் அணிந்து கொள்கிறேனே?’

‘வேண்டாம். வேண்டவே வேண்டாம்’

யோசித்து யோசித்து முடித்து கடைசியில் ஜெயித்தது அவளது காதல் மனமாக இருக்க, முடிந்த வரை அது அவனது கண்களில் படாமல் சமாளித்துக் கொள்ளலாம் எனும் எண்ணத்துடன் அணிந்து கொண்டாள் அதை.

சில நிமிடங்கள் கழித்து கருத்தரங்கம் நடக்கும் ராஜேந்திரா அரங்கத்துக்கு வந்திருந்தனர் ரஜினிகாந்தும் ஸ்ரீதேவியும்.

ஸ்ரீதேவி அந்த ஹோடேலின் முகப்பிற்குள் நுழைந்த போதே கண்ணில் பட்டாள் அவள். லேகா. வணிகவியல் மேலாண்மை படித்து விட்டு ஒரு பெரிய கம்பனியில் உயர் பதவியில் இருப்பதைக் காட்டிக் கொண்டிருந்தது அவளது நேர்த்தியான உடையும் நடையும்.

தான் அணிந்திருந்த அந்த மேல் கோட்டை இழுத்து விட்டுக் கொண்டே ஸ்ரீதேவியின்  பக்கம் தனிச்சையாய் திரும்பியவளின் முகம் கொஞ்சம் மலர்ந்தது

ஏதோ ஒரு முக்கியமான சந்திப்பு  என்பதற்காக அவள் இங்கே வந்திருக்கக் கூடும். அவளைச் சுற்றி நான்கைந்து பேர் இருக்க, அங்கிருந்தே இவளைப் பார்த்து “ஹாய்” என கையசைத்து விட்டு உள் நோக்கி நடந்தாள் லேகா. இவர்கள் இருவரின் வாழ்கை கதையில் மிக முக்கிய பாத்திரம் வகித்த லேகா.

தொடரும்

அத்தியாயம் 11

டாக்டர் ரஜினிகாந்த் அத்தியாயம் 11 – Praveena Thangaraj Novels

17 thoughts on “டாக்டர் ரஜினிகாந்த் அத்தியாயம் 10”

  1. Avatar

    செம விறுவிறு அப்டேட் இது. அஷ்டலக்ஷ்மி கோவில் உள்ளே நாங்களும் சென்ற நிறைவு. ரஜினியை தவிர்ப்பது அத்தனை எளிதா என்ன? சர்க்கரைப் பொங்கல் போச்சே. மஹதியின் கையில் இருந்து பிரசாதத்தைப் பிடுங்கியது செம பல்பு மஹதிக்கு. அந்த பரிசு வாட்ச். எதிர்பார்க்கவில்லை. மருத்துவ சம்பந்தப்பட்ட பொருள் என்று நினைத்து இருந்தேன். யார் அந்த லேகா. சத்யாவிற்கு சொந்தமோ ? தெரிந்து கொள்ள வெயிட்டிங்.

      1. Avatar

        நம்ம ரஜினி சாருக்கு எவ்வளவு கோபம் வருது பொங்கலை தூக்கி பாட்டிக்கிட்ட குடுத்தது செம அந்த மூணாவது பறவை மஹதி இல்லையா லேகாவா லேகாவுக்கு நம்ம டாக்டர் ரெண்டு பேருக்கும் ஊள்ள கனெக்ஷன் என்னவா இருக்கும்

  2. Avatar

    Sema update.
    Ashtalakshmi arulaal avargal meet panniyachu. Sarkarai Pongal rendu perum sernthu saapida mudiyalaiye?
    Intha maahathi ya oppo yaaru koopita?
    Watch avangalai watch panna vaikuma?
    Lekha yaar?

  3. Kalidevi

    Yaru pa intha lekha puthu entry ithula avanga rendu per life la important person aame. Sri Yen ippadi odi oliyura rajini una pathutan nee thanu therinjikittan pakama irunthapove una marakala ipo no chance . Mahathi Yen ippadi rajini pinnadiye suthura oruthar ku pidikala nu avanga nadanthukirathula theriyatha apovum suthitu iruka

  4. Avatar

    யப்பா செம விறுவிறுப்பு…..
    எனக்கு மஹதிய விட ஶ்ரீதேவி மேலதான் கடுப்பாகுது என்னதான் பிரச்சினை நம்ம டாக்டர் சர்கிட்ட சொல்ல வேண்டியது தானே….ஓ அந்த கிஃப்ட் வாட்ச்சா??

    லேகா????
    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *