அவளது அன்னை இங்கே வந்ததில் இருந்து அவன் கவனித்த விஷயங்கள் அவனை யோசனையில் தள்ளி இருந்தன.
“இந்த பூமியே ஒரு.. என்ன சொல்றது.. நீங்க…. நீங்க எல்லாரும் இயற்பியல்லே படிப்பீங்களே சர்கியூட் அது போலத்தான். அதிலே பாயும் மின்சாரம்தான் நமக்கு கிடைக்கும் நல்ல விஷயங்கள், வாழ்த்துக்கள் எல்லாம். நாம ஒருத்தருக்கு ஒருத்தர் தப்பு செய்யும் போது, மனசறிஞ்சு ஒருத்தங்களுக்கு துரோகம் செய்யும் போது நம்மை சுற்றி மின்தடை ரெசிஸ்டன்ஸ்ன்னு சொல்றோமில்லையா அது அதிகமாகும். நல்லது எல்லாம் தடைபடும். நம்மாலே பாதிக்க பட்டவங்க மனசு கொஞ்சமாவது ஆறணும். அப்படி ஆறினாத்தான் கொஞ்சமாவது நல்லது நடக்க ஆரம்பிக்கும்.”
முன்பொரு முறை தந்தை சொல்லச் சொல்ல அவரை வியந்து போய் பார்த்திருந்தான் ரஜினிகாந்த். இப்போது ஏதோ புரிவது போலே இருக்க, அந்த நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சுய நினைவுக்கு வந்திருந்தாள் ஸ்ரீலேகா.
அவளது உடலெங்கும் கட்டுக்கள் இருக்க, அவளது அலறல் அவனது செவிகளைத் தொடத் தவறவில்லை.
“நான் எங்கே இருக்கேன். எனக்கு ஒண்ணுமே புரியலை. என்னை சுத்தி ஒரே இருட்டா இருக்கு எங்கே இருக்கேன் யாராவது சொல்லுங்களேன். எனக்கு பயமா இருக்கே”
“அண்ணா.. எனக்கு ஒண்ணுமே புரியலை. ரொம்ப வலிக்குது. ரொம்ப பயமா இருக்கு” முன்பு அழுத அரசியின் வார்த்தைகள் இப்போது நினைவுக்கு வந்தன.
மறுநாள் காலை ஆறு மணி. எப்போதடா விடியும் என்று காத்திருந்தவன் போல கைப்பேசியை எடுத்தான். மழை தனது விளையாட்டுகளை முடித்துக் கொண்டு அப்போதைக்கு விடைப் பெற்று இருந்தது.
“அரசி..” எதிர்முனை அழைப்பை ஏற்றவுடன் பேசினான் இவன் “எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமாடா உன்னாலே?”
“சொல்லுண்ணா.. என்ன செய்யணும்?”
“குளிச்சு சாப்பிட்டு நம்ம டிரைவர் அண்ணா கூட கிளம்பி இங்கே வரியாடா? நீ மட்டும் வா. நான் அப்பாகிட்டே பேசறேன். இப்போ அம்மா அப்பா வேண்டாம். அவங்க அப்புறம் வரட்டும். நீ மட்டும் வரியாடா?”
இவன் பேசிக் கொண்டிருந்த போதே அங்கே வந்தாள் மஹதி. அவளும் இரவு முழுவதும் உறங்கவில்லை. தனது தோழியை பிழைக்க வைக்க அவளால் ஆனதை அவளும் செய்து கொண்டுதான் இருக்கிறாள்.
“யாரு அரிசியை வர சொல்றீங்களா?” கேட்டாள் அவள்.
“ம்” தலையசைத்தான் இவன்.
“நான் புகழை இங்கே வர சொல்லி இருக்கேன். என்னோட ட்ரெஸ் எல்லாம் எடுத்துகிட்டு. அவனோட இவளும் வரட்டும். அதுதான் சரியா இருக்கும்” என முடிவு செய்தாள் பெண். “தேவி கண் விழிக்குற வரைக்கும் நானும் இங்கேயே இருக்கேன்னு கணபதி சார்கிட்டே சொன்னேன். அவர் எனக்கும் ரூம் அர்ரேஞ் பண்ணி கொடுத்து இருக்கார்”
நேரம் காலை பதினோரு மணியை தொட்டுக் கொண்டிருக்க வந்து சேர்ந்தார்கள் புகழும் அரசியும். அவனை நோக்கி நடந்து வரும் தங்கையை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டே இருந்தான் அண்ணன்.
அழகி அவன் தங்கை. சராசரி உயரம். அழகான வட்ட முகமும் நீள் கூந்தலும், பேசும் கண்களும் மற்றவர்களை வசீகரிக்கும் புன்னகையும் அவளின் அடையாளங்கள்.
வெளிர் ஊதா நிறத்தில் இருந்த காட்டன் புடவையை நேர்த்தியாக அணிந்து இருந்தாள் அவள். அவளது செயற்கை கால் அவள் சில உடைகள் அணிவதற்கு ஒரு தடையாகவே இருக்கிறதுதான். இருந்தாலும் தன்னை அத்தனை அழகாக செலுத்திக் கொள்வாள் அரசிப் பெண்.
நேராக அவனருகில் வந்து நின்றாள் தங்கை.
“சொல்லுண்ணா.. நான் என்ன செய்யணும். இப்போ அண்ணியை பார்க்கலாமா?’
அப்போது பார்வையாளர்கள் நேரம் இல்லை எனும்படியால் எல்லாரும் உள்ளே செல்ல அனுமதி இல்லை. இவன் மருத்துவன் எனும்படியால் அரசியை தன்னுடன் அழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தான் ரஜினிகாந்த் .
இரவு அமைதியான உறக்கத்துக்காக கொடுக்கப் பட்ட மருந்தின் வீரியம் குறைந்து அப்போதுதான் சற்றே தெளிந்திருந்தாள் இருந்தாள் ஸ்ரீலேகா.
“அம்மா.. எங்கேம்மா இருக்கே.. எனக்கு ஒரே இருட்டா இருக்குமா.. நீ பக்கத்திலே இருக்கியாம்மா? ஒண்ணுமே தெரியலையே மா. டாக்டர். ….. அய்யோ பயமா இருக்கே”
கண்களில் பட்ட காயங்களினால், கண்களை பதம் பார்த்திருந்த கண்ணாடி துண்டுகளினால் அவளது கண்கள் பாதிக்கப் பட்டிருக்க பார்க்கும் சக்தியை இழந்து கிடந்தாள் ஸ்ரீலேகா.
கொடுக்கபட்ட மருந்துகளின் தாக்கம், உடல் அயர்ச்சி, பார்வை இல்லாமை என எல்லாமுமாக அவளை புரட்டிப் போட உறக்கம் கலைந்தவுடன் மறுபடியும் அலற ஆரம்பித்து இருந்தாள் ஸ்ரீலேகா.
சரியாக அந்த நொடியில் அரசியை அவளின் முன்னால் கொண்டு சென்று நிறுத்தினான் ரஜினிகாந்த். அதற்கு மேல் அவளிடம் எதுவும் சொல்லவில்லை அவன்.
அவன் அப்படியே மௌனமாக நின்று விட திடீரென சிலையாகி விட்டதைப் போல நின்றுவிட்டாள் அரசி. லேகாவின் அலறல் மட்டுமே அவளது செவிகளில் கேட்கும் உணர்வு.
“என்னாச்சும்மா என் காலுக்கு. இனிமே என்னாலே நடக்க முடியாதாமா? ரொம்ப பயமா இருக்குமா. பக்கத்திலேயே இரும்மா” ஏதேதோ நினைவுகள் அவளுக்குள்ளே.
இங்கே லேகா அலறிக் கொண்டிருக்க அவளருகில் வந்தாள் ஒரு நர்ஸ். “மேடம் . இது ஐ.சி.யூ. சத்தம் போடாதீங்க”
“யார் நீங்க? நீங்க டாக்டரா? ஏன் என்னாலே பார்க்க முடியலை. உடம்பெல்லாம் ஏதேதோ மாட்டி இருக்கே. என்னாச்சு எனக்கு?”
“மேடம் கொஞ்சம் பொறுமையா இருங்க” இது அந்த நர்ஸ்.
“என்னாலே பார்க்க முடியலை. டாக்டரை வர சொல்லுங்க” நர்ஸ் சொன்னதை கேட்காமல் அவள் உச்சக்கட்ட தொனியில் கத்திக் கொண்டிருந்தாள்.
அரசி மெல்லத் திரும்ப அவளது கண்களுக்குள் மாற்றி மாற்றி பார்த்தான் ரஜினிகாந்த் “அது யாருன்னு தெரியுதா?”
அரசியிடம் ஒரு பெருமூச்சு “தெரியாம என்ன அண்ணா? நல்லாத் தெரியுது”
“ம்”
முழுவதுமாக இரண்டு நிமிடங்கள் கத்திக் கொண்டிருக்கும் லேகாவையே பார்த்துக் கொண்டிருந்தவள் ரஜினியின் பக்கம் திரும்பினாள். அவள் என்ன சொல்லப் போகிறாள் எனும் தவிப்புடன் அவன் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க
“லெஃப்ட் ஹேண்ட் சைட் இஸ் ஈக்குவல் டு ரைட் ஹேண்ட் சைட். அதுதான் வாழ்கை இல்லையா அண்ணா?” என்றாள் தங்கை.
ஆயிரம் இருந்தாலும் அவளும் மனிதப் பிறவிதானே. இந்தக் காட்சி அவளின் காயத்துக்கு கொஞ்சமாக மருந்து போட்டிருக்க வேண்டுமோ?
“ம்? என்னதும்மா?”
“நாம கணக்கு பாடம் படிக்கும் போது இடது பக்கம் இருக்கிற ஒரு விஷயத்தை வெச்சு ஆரம்பிச்சது அப்படியே நகர்ந்து நகர்ந்து வலது பக்கத்துக்கு வந்து அதே விஷயத்திலே முடிப்போம் தெரியுமா? அதுதான் இப்போ ஞாபகம் வந்தது.”
சொல்ல வேண்டியதை எல்லாம் மிக அழகாக ஒரே வரியில் முடித்திருந்தாளே அவனது தங்கை. ஜெகன்னாதன் மகள் ஆயிற்றே வேறே எப்படி பேசுவாள்.
“இவங்கதான் நம்ம ஸ்ரீதேவியோட அக்காவாம் டா” மெதுவாக சொன்னான் தங்கையைப் பார்த்து.
ஒரு நொடி மாற்றம் கொண்டு பின்னர் சட்டென இயல்பாகிப் போனது அவள் முகம் “ஒரு வேளை இதனாலேதான் அவங்க நம்மை விட்டு விலகிப் போயிட்டாங்களோ?” கேட்டும் விட்டாள் தங்கை.
“எஸ்” வாயைத் திறந்து ஒரு ஆழ் மூச்சை எடுத்துக் கொண்டான் ரஜினிகாந்த்.
“சரி அதை விடு. இப்போ அண்ணி எங்கேண்ணா?”
“அரசி..” வியப்பில் ஊறி இருந்தது அவன் அழைப்பு.
“சொல்லுண்ணா..”
“இன்னமும், எல்லா உண்மையும் புரிஞ்ச பிறகும் தேவியை உன்னோட அண்ணியா நினைக்க முடியுதாடா உன்னாலே?”
“கண்டிப்பா. அவங்க என்ன செஞ்சாங்க?”
“அவ நமக்கு ஆதரவா எதுவுமே செய்யலை அப்படிங்கிறதுதானே பிரச்சனையே. அதுதான் அவளோட குற்ற உணர்ச்சிக்கும் காரணம்.” மெதுவாக வெளி வந்தன அவனின் வார்த்தைகள்.
“குற்ற உணர்ச்சி எல்லாம் எதுக்குண்ணா? இவங்க யாருமே அப்போ நம்ம முன்னாடியே வரலையே. ஆடின ஆட்டம் எல்லாம் லேகாவும் அவங்க மாமாவும் தானே?” அவள் சொல்ல
“அவங்க மாமாவுக்கும் அன் கண்ட்ரோல்ட் டயபடீஸ் போலிருக்குடா. ஒரு கால் எடுத்துட்டாங்களாம்”
அரசியின் புருவங்கள் ஏறி இறங்க, சில நொடிகளில் முகம் கொஞ்சம் குழம்பி கலைந்து தெளிந்து நின்றது.
“அண்ணிகிட்டே நான் பழகின கொஞ்ச நாளிலேயே அவங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணா. அவ்வளவு அன்பா இருப்பாங்க. அவ்வளவு தன்மையா பேசுவாங்க. அவங்க நம்ம வீட்டுக்கு வந்தா எல்லாருமே சந்தோஷமா இருப்போம்ண்ணா. அவங்க அன்பாலேயே நம்மோட காயம் எல்லாம் ஆறிடும்”
பேச்சே வரவில்லை அண்ணனுக்கு. ‘எப்படிப்பட்ட தேவதை எனக்கு தங்கையாக வாய்த்து இருக்கிறாள்’
“அண்ணி எங்கேண்ணா?” அவள் மறுபடி கேட்க
“வா” என்று அவளை அழைத்து சென்று படுத்துக் கிடந்த ஸ்ரீதேவியின் முன்னால் நிறுத்தினான் ரஜினிகாந்த்.
‘என்னாச்சுண்ணா?” சாய்ந்து விட்ட மரம் போல அசைவின்றி கிடந்தவளை பயத்துடன் பார்த்தாள் அரசி.
‘நான் தப்பு செஞ்சுட்டேன். இனி எழுந்துக்க மாட்டேன் அப்படிங்கிற முடிவோட படுத்து இருக்கா போலிருக்கு. ஒரு ட்ரீட்மென்ட்க்கும் ரெஸ்பாண்ட் பண்ண மாட்டேங்குறா” அவனது கண்கள் கலங்கித்தான் கிடந்தன. “நான் நிறைய ட்ரை பண்ணிட்டேன். நீ வேணும்னா பேசிப் பாரு. அண்ணி எழுந்து வாங்கன்னு சொல்லு கேக்கறாளா பார்ப்போம்”
“அண்ணி” அவளது கரம் தொட்டாள் அரசி. அவளிடம் எந்த மாற்றமும் இல்லை. ஏதேதோ பேசிக் கொண்டே இருந்தாள் அரசி. எதற்கும் அசைய மாட்டேன் என்ற பிடிவாதம் ஸ்ரீதேவியிடம்.
ஒரு கட்டத்தில் “அ..ண்..ணி..” தீவிர சிகிச்கை பிரிவு என்பதையும் எண்ணாமல் அரசி சட்டென கூவி விட அவன் அரசியின் தோளில் கை வைத்து அவளை அமைதிப் படுத்த நினைப்பதற்குள், ஸ்ரீதேவியின் உடலில் ஒரு சிலிர்ப்பு ஓடி அடங்கியது.
அவனது கண்களை அவனாலேயே நம்ப முடியவில்லை. நடந்தது நிஜமா பிரமையா என்பதே புரியவில்லை அவனுக்கு.
“அண்ணி நான் அரசி வந்திருக்கேன். எழுந்து வாங்க அண்ணி நம்ம வீட்டுக்கு போயிடலாம். நானும் பெங்களூர் வந்திடறேன். நாம எல்லாம் ஒண்ணா இருக்கலாம். வாங்க அண்ணி.”
இப்போது வந்த அந்த திடீர் சந்தோஷத்தில் அரசி படபடவென பேசிக் கொண்டே போக மறுபடியுமாக அவளது உடலில் சின்னதாய் ஒரு நடுக்கம். இவனது மனதில் பெரிதாக ஒரு நம்பிக்கை நட்சத்திரம்.
“வந்ததுக்கு அண்ணி அசையற மாதிரி இருக்குண்ணா” அரசி சொல்ல மெல்ல தலையசைத்தான் ரஜினிகாந்த். இனி மெடிசின்ஸ்க்கு ரெஸ்பாண்ட் பண்ணுவான்னு நினைக்கறேன்டா. பார்க்கலாம்” அண்ணனின் குரலில் மகிழ்ச்சி.
சில நிமிடங்கள் கழித்து தீவிர சிகிச்சை பிரிவை விட்டு இருவரும் வெளியே வந்த அந்த நேரத்தில் கேட்டாள் அரசி “ஏன்ண்ணா நீ ஏன் லேகாவை ட்ரீட் பண்ணக் கூடாது? நீ சர்ஜரி பண்ணா அவங்களுக்கு பார்வை வரும்தானே?”
ஆடிப் போய் விட்டான் அண்ணன். “எப்படிடா இப்படி யோசிக்குறே?”
“வேறே எப்படிண்ணா யோசிக்கணும். அவங்க இப்படியே கிடக்கட்டும்ன்னா? அப்போ நமக்கும் அவங்களுக்கும் என்ன வித்தியாசம்? நான் ரஜினிகாந்த் தங்கச்சி. இப்படித்தான் யோசிப்பேன்” புன்னகைத்தாள் அந்த அரசி. “இப்படி எல்லாம் என்னை யோசிக்க வெச்சதே நீ தானேண்ணா”
பதிலுக்கு புன்னகைத்தானே தவிர அவளுக்கு பதிலேதும் சொல்லவில்லை அவன்.
அடுத்து வந்த நான்கு நாட்களுக்குள் நடந்தவைகள் எல்லாம் ஒரு கனவு போலத் தான் இருந்தது ரஜினிகாந்துக்கு. ஸ்ரீதேவியின் நிலையில் மடமடவென முன்னேற்றங்கள் ஏற்பட்டன.
அதற்கு என்ன காரணம் என்று மருத்துவனாகிய அவனாலேயே சொல்ல இயலவில்லை. அது மருந்துகள், செய்த வேலையா, அல்லது அரசி அவளிடம் மனதார பேசிய வார்த்தைகள் செய்த வேலையா? விஞ்ஞானமா மெய்ஞானமா எது ஜெயித்தது? அவனுக்கே புரியவில்லை.
இங்கே ஸ்ரீ லேகாவும் மெல்ல மெல்ல தேறிக் கொண்டிருந்தாள் என்றாலும் பார்வையற்ற இருளில் மூழ்கிக் கொண்டிருந்தாள் பயத்தில் மூழ்கிக் கிடக்கிறாளா? செய்த பாவத்தை நினைத்து வருந்துகிறாளா? எதுவுமே புரியவில்லை ரஜினிகாந்துக்கு. அதை புரிந்து கொள்ள முயற்சிக்கவும் இல்லை அவன்.
இன்று எப்படியும் கண் திறந்து விடுவாள் என்பது புரிய வந்த போது ஸ்ரீதேவியின் அருகிலேயே தவம் கிடந்தான் நமது நாயகன். அவளது ஒவ்வொரு அசைவுக்கும் சிறு குழந்தையாய் அவளருகில் ஓடி ஓடி சென்று கொண்டிருந்தான் அவன்.
ஏதோ அவளை புத்தம் புதிதாய் பார்ப்பதைப் போலவே ஒரு எண்ணம். புதிதாக பிறக்கப் போகும் குழந்தையை பார்க்கப் போகும் தாயின் தவிப்பு போலவே இருந்தது அவனது பரபரப்பும்.
மெல்ல மெல்ல கண் திறந்தவளின் அருகில் ஓடி சென்று குனிந்து அவளைப் பார்த்து புன்னகைத்தான் நமது நாயகன்.
“பார்றா நம்ம ஸ்ரீதேவி டாக்டர் கண் திறந்துட்டாங்க” அவனது குரலில் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும்.
விழிகளை இன்னுமாக விரிக்க முயன்றாள் அவனது காதலி.
“எப்படி இருக்கீங்க ஸ்ரீதேவி டாக்டர்?”
எங்கே இருக்கிறோம்? தனக்கு என்ன நடந்திருக்கிறது என்பதெல்லாம் புரிய அவளுக்கு கொஞ்ச நேரம் தேவைப் பட்டது. மெல்ல மெல்ல நடந்தவைகள் அவளது நினைவுக்கு வந்தன. தான் அவனிடம் கடைசியாக கொடுத்த கடிதம் வரை அத்தனையும் அவளது மனதில் ஆடியது.
“அது எப்படி அது? பை ரஜினி சர்ஆ? அப்படி எல்லாம் போக விட்டுடுவோமா உன்னை?” கண் சிமிட்டினான் நாயகன். அரை நினைவிலும் அந்தக் கடிதமே அவளது நினைவில் ஆடியது
“என்ன லெட்டர் ஆ? எல்லாம் படிச்சாச்சு. ரொம்ப யோசிக்காம ரெஸ்ட் எடுடி பைத்தியம்.” என்றான் அவளது காதுக்கு அருகில் சென்று.
அடுத்து சுற்றும் முற்றும் பார்வையை சுழற்றியவள், ஏதோ கேட்க விழைவதைப் போல அவன் முகம் பார்த்து விட்டு கேட்காமல் நிறுத்திக் கொள்ள
“என்ன அக்கா எப்படி இருக்கான்னு தெரிஞ்சுக்கணுமா?” என்றான் மெதுவாக. ஆம் என்று அசைந்தது அவள் தலை.
இதுதான் இவளுக்கும் இவளது தமக்கைக்கும் உள்ள வேறுபாடு என்று தோன்றியது. இவள் எப்படி இருக்கிறாள் என்பதைப் பற்றி அவள் யோசிக்கவே அவளுக்கு இரண்டு நாட்கள் தேவைப் பட்டன. அதற்கு மேலும் எப்படி இருக்கிறாள் என்று தனது அன்னையிடம் கேட்டுக் கொண்டாளே தவிர அதற்கு மேலாக பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை அவள்.
“அவ நல்லாதான் இருக்கா. ஆனா அவ பார்வைதான் பாதிக்கப் பட்டிருக்கு” என்றான் அவள் முகம் படித்தபடியே. அதில் பல வித மாற்றங்கள் வந்து வந்து மறைந்தன.
“இப்போ ரொம்ப யோசிக்காம நல்லா ரெஸ்ட் எடுங்க ஸ்ரீதேவி டாக்டர். உங்களுக்கு கையிலே காலிலே ரெண்டு இடத்திலே எலும்பு முறிவு தவிர வேறே ப்ராப்ளம்ஸ் இல்லை. சீக்கிரம் சரியாகிடும்” என்றான் அவள் கன்னம் தட்டி.
அதன் பிறகு அவளருகில் ஓடி வந்தாள் மஹதி. தோழியர் இருவருக்கும் தனிமை கொடுத்து விட்டு நகர்ந்தான் ரஜினிகாந்த்.
இன்னும் மூன்று நாட்கள் கடந்திருந்த நிலையில் அக்கா தங்கை என இருவருமே அறைக்கு மாற்றப் பட்டு இருந்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தவரை அவளை அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தவனால் அறைக்கு வந்த பிறகு அதைத் தொடர முடியவில்லை.
ஒரு நாளைக்கு பல முறை அவளை அழைத்துப் பேசிக் கொண்டிருந்தாலும் லேகா அவளது அன்னை இருவரும் இருந்த அந்த அறைக்கு செல்லத் தோன்றவில்லை அவனுக்கு.
இந்தத் திருமணம் நடந்தால் வரக் கூடிய நடைமுறை சிக்கல்களும் சலசலப்புகளும் புரிந்தாலும் எந்த நிலையிலும் ஸ்ரீதேவியை விட்டுக் கொடுப்பதாக மட்டும் இல்லை அவன்.
கணபதி மஹதி என இருவரும் பெங்களூர் கிளம்பி இருந்தனர். அவர் கிளம்பும் முன் இவனை அழைக்க அவருடன் காருக்கு நடந்தான் ரஜினிகாந்த். எப்போதும் பேசிக் கொண்டே வருபவர் இன்று கொஞ்ச நேரம் மௌனமாக நடந்தார். பின்னர் திடீரென
“நீ எப்போ பெங்களூர் வரே ரஜினி?”
“மே பி நாளைக்கு சர். தேவி கொஞ்சம் பெட்டர் ஆகிட்டா ஷி வில் டேக் கேர் ஆஃப் எவ்ரிதிங். அப்படியே பை சொல்லிட்டு கிளம்ப வேண்டியதுதான்” என்றான் தரையை பார்த்து நடந்து கொண்டே.
“அவளுக்கு மொத்தமா பை சொல்லப் போறியா ரஜினி?”
“சர்?” திடுக்கிட்டு நிமிர்ந்தான் அவன். அவரது காரின் அருகில் வந்திருந்தார்கள் இருவரும்
“தேவி என்கிட்டே எல்லாம் சொன்னா பா” என்றார் காரின் கதவை திறந்தபடியே.
அவள் மஹதியிடம் கூட எல்லாவற்றையும் சொல்லி விட்டதாக தெரிய வந்தது இவனுக்கு. இவனிடம் மட்டும் அவள் இதுவரை எதுவுமே பேசவில்லை.
“ரஜினி..”
“சர்?”
“இங்கே பாரு ரஜினி, உன் தங்கையை பார்க்கும் போது மனசு வலிக்குது. எப்படி துடிச்சு இருக்கும் அந்த பொண்ணு. பேசாம தேவியை அந்த வீட்டை விட்டு வர சொல்லி கல்யாணம் பண்ணிக்கோ. அதுதான் புத்திசாலித்தனம்.” என்று சொல்லிக் கொண்டே நின்று விட்டவர
“அது இருக்கட்டும் நீ லேகாவோட ஆபத்தல்மொலஜி ரிபோர்ட்ஸ் பார்த்தியா?” நிறுத்தி நிதானமாக கேட்டார்.
“இல்லை சர்” என்றான் அவன். வந்ததில் இருந்து கணபதி லேகாவின் பொறுப்பை எடுத்துக் கொள்ள இவன் அந்தப் பக்கமே திரும்பவும் இல்லை. திரும்பும் மனமும் இல்லை.
“யூ.எஸ் போய் ஸ்பெஷலைஸ் பண்ணிட்டு வந்தியே,. அந்த சர்ஜரி நடந்தாதான் அவளுக்கு பார்வை திரும்ப வரும். அதுவும் கண்டிப்பா வரும்னு சொல்ல முடியாது. 90% சான்ஸஸ் இருக்கு. இந்த சென்னை பெங்களுர் ரீஜன்லேயே நீ ஒருத்தன்தான் இந்த சர்ஜரிலே ஸ்பெஷலைஸ் பண்ணி இருக்கே ரஜினி. ஆண்டவன் எங்கே கொக்கி போட்டு வெச்சிருக்கான் பார்த்தியா” சின்ன சிரிப்பு அவர் இதழ்களில்.
“சர்?” உடல் தூக்கி வாரிப் போட அவர் முகம் பார்த்தான் ரஜினிகாந்த்.
“நான் அவ ரிபோர்ட்ஸ் நல்லா பார்த்துட்டேன். எத்தனை நாள் ஆனாலும் நீ சர்ஜரி பண்ணாதான் அவளுக்கு பார்வை வரும். மத்த டாக்டர்ஸ் பாசிபிலிட்டி இல்லைன்னுதான் சொல்வாங்க. உன்னைத்தான் சஜெஸ்ட் பண்ணுவாங்க. உன்கிட்டதான் வருவா. நீ என்ன பண்ண போறே?.”
எதுவும் பேசாமல் அவர் முகத்தையே பார்த்திருந்தான் அவன்.
“லேர்ன் டு சே நோ ரஜினி. அது ஒண்ணும் குற்றம் இல்லை. அவ செஞ்ச தப்புக்கு அதுதான் தண்டனை. அவளுக்கு சாமர்த்தியம் இருந்தா வேறே டாக்டர் பார்த்துக்கட்டும். அப்படின்னு சாதாரண கணபதியா என்னாலே சொல்ல முடியும். டாக்டர் கணபதியா கண்டிப்பா சொல்ல முடியாது. நீ சாதாரண கணபதியும் இல்லை. டாக்டர் கணபதியும் இல்லை, நீ டாக்டர் ரஜினிகாந்த். நல்ல முடிவா எடு.” என அவனைப் பார்த்து பல அர்த்தங்கள் நிறைந்த புன்னகை ஒன்றை சிந்திவிட்டு அவனது முதுகில் தட்டிக் கொடுத்தார் அவனது ஆசான்.
இப்போதும் எதுவும் சொல்லவில்லை நமது நாயகன்.
“அவ கண்ணு இப்போ இருக்கிற கண்டிஷன்லே எப்படியும் ஆறு மாசம் அப்புறம்தான் அவளுக்கு சர்ஜரி பண்ண முடியும். அதுவரை அவ இருட்டிலேதான் இருக்கணும் பார்ப்போம். சரிப்பா.. நான் கிளம்பறேன். டேக் கேர். சீக்கிரம் ஊருக்கு வந்து சேரு” சொல்லிவிட்டு காரைக் கிளப்பிக் கொண்டு பறந்தார் மனிதர்.
யோசனையுடனே உள் நோக்கி நடந்தான் ரஜினிகாந்த்.
அம்மாவை அப்பாவை எல்லாம் பார்த்து நான்கைந்து நாட்கள் ஆகின்றன. அவர்களுடன் பேசிக்கொண்டுதான் இருக்கிறான் என்றாலும் அப்பாவின் அருகாமைக்கு ஏங்குகிறது மனம்.
நிறையவே யோசித்து விட்டு அன்றிரவு அழைத்தான் தந்தையை. டாக்டர் கணபதி அவனுக்கென கொடுத்திருந்த அறையின் கட்டிலில் சாய்ந்து கொண்டு பேசிக் கொண்டிருந்தான் அவன். இல்லையில்லை அப்பா பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தான் அவன்.
ஏதேதோ கதைகள் பேசிக் கொண்டிருந்தார் அவர். இவனது மனம் ஸ்ரீதேவியை சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது. உண்மைகள் தெரிந்த பிறகும் அவளை அவனால் சுலபமாக ஏற்றுக் கொள்ள முடிந்ததுதான். அவனது பெற்றோர்களால் அதை செய்து விட முடியுமா? அல்லது அப்படி செய்யுங்கள் என்று அவனால் சொல்லத்தான் முடியுமா?
அவர் பேசி முடித்த பிறகு “அப்பா..” என்றான் மெதுவாக.
அதற்கு மேல் பேசும் மொழி மறந்து போனதைப் போலவே வார்த்தைகளை தேடத்தான் வேண்டி இருந்தது.
“சொல்லுப்பா..” அப்பாவின் இதமான குரல் அவனை அணைத்தது.
“அப்பா ..” மறுபடியும் அது மட்டுமே வந்தது.
“ம்.. சொல்லு…”
“சரி விடுங்க.. அப்புறம் நேர்லே பேசிக்கலாம்” என முடித்துக் கொண்டான் அழைப்பை.
ஆனால் மறுநாள் காலை பார்வையாளர் நேரத்தில் அப்படி ஒரு நிகழ்வு நடக்குமென அவன் எதிர்ப்பார்க்கவே இல்லை. அவனுடைய அன்னை, தந்தை, அரசி என மூவரும் வந்து நின்றிருந்தனர் அங்கே.
“உன்னைக் கேட்டா நீ வராதே வராதேன்னுதான் சொல்வே. எங்களுக்கு தேவியை பார்க்கணும்டா” என்றார்கள் பெற்றவர்கள்.
“நடந்தது எல்லாம் அரசி சொன்னா. அது போகட்டும் எத்தனை நாள் பழசை பிடிச்சிட்டு தொங்க முடியும். உனக்கு தேவியை ரொம்ப பிடிக்கும்ன்னு எனக்குத் தெரியும். அவளுக்கு இருந்த கண்டம் எல்லாம் விலகிப் போயாச்சு. இனி நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருப்பீங்க. அரசிக்கு சீக்கிரமே கல்யாணம் வருது. ஆனா ரெண்டு கல்யாணத்தையும் ஒரே மேடையிலே நடத்தக் கூடாது. அதனாலே ஒரு பதினைஞ்சு நாளிலே மார்கழி வர்றதுக்குள்ளே உங்க கல்யாணத்தை முடிச்சிடலாம்னு யோசிக்கிறோம் நானும் அம்மாவும் ” இது அப்பா.
அவர் அருகிலேயே புன்னகைத்தபடியே நின்றிருந்தனர் அம்மாவும் அரசியும். எப்படி எல்லாவற்றையும் இத்தனை எளிதாக கடந்து வந்தார்கள் என்பதுதான் அவனுக்கு மிகப் பெரிய வியப்பாக இருந்தது.
“அப்பா இப்போ எதுக்குப்பா கல்யாணத்துக்கு அவசரம்? பொறுமையா பார்த்துக்கலாம்” தடுமாறித்தான் போனான் நாமது நாயகன்
“அதெல்லாம் பார்க்க முடியாது. உங்க ரெண்டு பேரையும் இப்படியே விட்டா இன்னும் அஞ்சு வருஷம் இழுப்பீங்க. இப்போ உனக்கு அரசிக்கு ரெண்டு பேருக்குமே கல்யாண வேளை வந்தாச்சு. நான் தள்ளிப் போடறதா இல்லை. எந்த ரூம் இந்த ரூம்தானே?” என ஸ்ரீதேவி இருந்த அந்த அறையின் கதவை தட்டிவிட்டு அவர் திரும்ப, கதவு திறக்க அம்மாவும் அரசியும் உள்ளே நுழைய இவன் அப்பாவின் கரத்தை பிடித்துக் கொண்டான்.
இது அத்தனையும் அப்பாவின் வேலை என்று நன்றாகவே புரிந்தது மகனுக்கு. அவன் நேற்று அப்பாவென அழைத்த ஒற்றை அழைப்பு அவரை இங்கே கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது என்பதுதான் சத்தியம்.
இப்போதும் “அப்பா..” என்பதைத் தவிர வேறே வார்த்தைகள் கிடைக்கவில்லை மகனுக்கு.
“அப்பா இருக்கேன் இல்ல ரஜினி சர். அப்புறம் நீங்க ஏன் கவலைப் படறீங்க?” அவர் சொல்லியே விட நெகிழ்ந்து போனது இவனது நெஞ்சம். அது கண்களில் வெளிப்படத்தான் செய்தது.
பொது இடமென்றும் பாறாமல் அபப்வின் பாதம் தொட்டு வணங்குவதைத் தவிர வேறே எதுவுமே தோன்றவில்லை அவனுக்கு. நிமிர்த்தி இழுத்து சேர்த்தணைத்துக் கொண்டார் மகனை.
“சந்தோஷமா இருங்க ரஜினி சர்”
சூப்பர். .. அரசி செம பொண்ணு. .. ரஜினியின் குடும்பம் மாதிரி தற்போது பார்ப்பது அறிது… அரசியின் மனப்பக்குவம் சொல்ல வார்த்தைகள் இல்லை… கடவள் லேகாவுக்கு வைத்தது சரியான தண்டனை. ..
Arumaiyana pathivu 🥰🥰🥰🥰🥰
வாவ் ரஜனி சர் குடும்பமே சூப்பர். அந்த ரஜனி சொல்றாப்போல நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பானே தவிர கை விட மாட்டான்
😢💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
விஞஞானம் மெஞஞானம் எல்லாவற்றையும் அன்பு ஒன்றே ஜெயிக்கும். ஸ்ரீதேவி, ரஜினிகாந்த் இருவரின் உண்மையான அன்பே அவர்களை இணைத்தது. அரசி பெயருக்கேத்த அரசி தான். தனக்கு ஒரு கண் போனால் எதிரிக்கு இரண்டு கண்களும் போகவேண்டும் என்று நினைப்பவர்கள் மத்தியில் இரண்டு கண்களையும் காப்பாற்றிக் கொடு என்ற அவளின் பேச்சு மிகவும் அருமை. டாக்டர் கணபதி மனதில் நிற்கிறார். சரியான நேரம் சரியான அட்வைஸ் . இப்படி நல்லவர்கள் சூழ் உலகில் நாயகன் மட்டும் நல்லவனாக இல்லாமல் போய்விடுவான என்ன ? மிகவும் அழகான எழுத்து.
super super epi . Appa Appa sonnathuke avlo artham purinji inga vanthu ok sollitaru
Arasi , extraordinary girl. Thanaku oru peria paavam panninavangalai mannikka oru pakuvam vendum,athu arasi kitayum avanga parents kittayum niraiya iruku.
Sridevi,hero kural I Vida arasi kuraluku than respond pannina.
Lekha,eye problem ku rajini than surgery panna mudiyum. Kadavul ninaithal nadakkadhathu undaa?
Vidhi valiyathu.
Hero surgery pannuvana?
சூப்பர்….அரசி சின்ன பொண்ணா இருந்தாலும் எவ்வளவு உயர்வா சிந்திக்கிறா???
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
சந்தோஷமா இருங்க ரஜினி சார் – அப்பப்பா என்ன மாதிரியான வார்த்தைகள் அந்த குடும்பத்தின் அனைவரின் குணமும் ரஜினியின் குணமும் இதில் அழகாக வெளிப்பட்டு விட்டது இதைவிட ஒரு நல்ல வர்ணனை இருக்காது செம அப்பா கேரக்டர் அம்மா கேரக்டர் நான் தான் கேரக்டர் அத்தனையும் பாசிட்டிவ் சூப்பர், லேகா அனுபவிப்பது கர்மா வினைகள் அனுபவித்து தான் ஆகணும் அப்படியாவது திருந்தட்டும்
Super😍😍
விஞ்ஞானமா மெய்ஞானமா எதோ ஒன்னு நம்ம ஸ்ரீதேவி டாக்டர் பிழைச்சுட்டாங்க. அரசி உண்மையிலே அரசி தான் தேவியை காப்பாத்தி இருக்கிறாள் லேகாக்கு அறுவைசிகிச்சை செய்யவும் அண்ணனிடம் பேசுகிறாள் டாக்டர் கணபதி ரஜினி சாரிடம் அழகாக பேசி புரிய வைக்கிறார் ரஜினி பேமிலியே அழகு தான்
ஜாதகம் ஜோசியம் பாவம் புண்ணியம் எல்லாம் வாழ்கையில் ஏதோ நேரத்தில் நம்ம மனசு நம்ப தான் செய்யும்… எல்லாமே scientific யா பாக்க முடியாது சில நேரம் மனசும் உணர்வும் சேர்த்து தான் பாக்க முடியும்… லேகா இப்போ கூட அதை உணர போவது இல்ல அது நிச்சயம்…
இப்படி ஒரு குடும்பத்துக்காக குற்ற உணர்வில் வாடுவது சரி தான் ஶ்ரீதேவி… Sorry உன்னை நான் ரொம்ப திட்டிடேன்