அந்த இடியின் சத்தத்தில் மிரண்டு எழுந்திருந்தாள் பின் இருக்கையில் இருந்த மஹதி. இவர்கள் கார் மழையில் வழுக்கிக் கொண்டு, இருளோடு கலந்து நகர்ந்து கொண்டிருக்க கண்ணுக்கெட்டும் தூரம் வரை பெண்களின் செலிரியோ தென்படவில்லை.
கனமழை தாண்டவமாடிக் கொண்டிருக்க, அவனுக்குள் மெலிதான பய அமிலங்கள் சுரக்க ஆரம்பித்தன.
ஏழெட்டு வருடங்களுக்கு முன்னால் தங்கை அரசி அப்போது படித்துக் கொண்டிருந்த கல்லூரியில் இருந்து இதே போன்றதொரு இரவு நேரத்தில் வந்ததே ஒரு அழைப்பு அப்போது சுரந்த பய அமிலங்களும் இதுவும் ஒரே வகை.
கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரம் வரை அவர்களின் கார் கண்ணில் படவில்லை. அதன் பின் வந்த ஒரு கணத்தில் ரஜினி மஹதி கணபதி என மூவரும் ஒரு சேர அலறினர்
“மை காட்” காரை நிறுத்தி விட்டு மூவரும் இறங்கி ஓடினர், அங்கே சாலையின் நடுவில் கவிழ்ந்து கிடந்த அந்தப் பெண்களின் வாகனத்தை நோக்கி. அந்தக் காட்சியை பார்த்தவுடனேயே உயிர் வரண்டு போனது நமது நாயகனுக்கு.
“தேவி… என் தேவிம்மா..”
காருக்குள் சிக்குண்டு கிடந்தாள் அவள். காரின் கதவு உடைந்து கிடக்க அதன் மீது கவிழ்ந்து கிடந்தாள் ஸ்ரீலேகா.
எந்த வாகனம் இவர்களின் வாகனத்தை இந்த நிலைக்கு தள்ளியது என்பதே தெரியவில்லை. ஆனால் இப்போது யாரும் அருகில் இருக்கவில்லை.
‘நேற்று ஒரு அழகு தேவதையாய் இருந்தாயே. எனது கண்கள்தான் பட்டு விட்டனவோ உன் மீது? அதனால்தான் இந்த வலியும் ரத்தமுமா?’ அவனது உள்ளம் அரற்ற ஸ்ரீதேவியை அந்தக் கோலத்தில் பார்த்ததும் மொத்தமாக உடைந்து இருந்தான் ரஜினிகாந்த்.
“என்னாச்சுடி உனக்கு?” துடித்துப் போனாள் மஹதி. “இப்படி கிடக்கறியே? என்னை மன்னிச்சிடு தேவி. உன்னையும் ரஜினியையும் சேர்த்து வைக்கத்தான் நான், புகழ் அரசி மூணு பேரும் முயற்சி பண்ணோம்.. ஆனா கடைசியில் எல்லாம் இப்படி முடியும்னு நினைக்கலை.”
அரை மயக்கத்தில் இருந்தாள் ஸ்ரீதேவி. இவள் சொல்வது எல்லாம் அவளது காதுகளில் விழுந்து கொண்டுதான் இருந்தன. மஹதியின் கன்னம் வருட முயன்று தோற்ற அவளது ஒரு கரம் கீழே சாய்ந்த வேளையிலும் அவளது இன்னொரு கரம் தனது பர்சை மட்டும் இறுக்கமாக பற்றிக் கொண்டிருந்தது.
இவர்கள் மீது இரக்கம் கொண்டோ என்னவோ மழை சற்றே நின்று போயிருந்தது
“ஃபர்ஸ்ட் எய்ட்” ஆணையிட்டார் கணபதி. “அப்புறம் மத்தது பேசிக்கலாம் என் கார்லே எமர்ஜென்சி கிட் இருக்கு பார்”
மூன்று மருத்துவர்களும் பம்பரமாய் சுழன்றார்கள். அடிப்பட்டுக் இருவரையும் நசுங்கிய காரை விட்டு வெளியேற்றினார்கள். அந்த நெடுஞ்சாலையில் கார்கள் பறந்து கொண்டிருந்த போதிலும். இவர்களுக்காக யாரும் நிற்பதாக இல்லை.
“மஹதி அண்ட் ரஜினி தைரியமா இருங்க. இங்கே கான்ஃபரென்ஸ் வந்த என் ஃப்ரெண்ட் ஒருத்தன் நம்ம பின்னாடியே அவன் கார்லே வந்திட்டு இருக்கான். நான் அவனுக்கு கால் பண்றேன். ரெண்டு கார்லேயும் இவங்க ரெண்டு பேரையும் கூட்டிகிட்டு ஹாஸ்பிடல் போயிடலாம். இங்கே இருந்து கால் மணி நேரம்தான் நம்ம ஹாஸ்பிடல்” அவர் பேசப்பேச மலையளவு தைரியம் வந்திருந்தது மற்ற இருவருக்கும்.
அங்கிருந்து பதினைந்து நிமிட தூரத்தில் கணபதி அவர்கள் குடும்பம் நிர்வகிக்கும் பன்நோக்கு மருத்துவமனை ஒன்று இருந்தது, யார் செய்த புண்ணியம் என்பது புரியவில்லை ரஜினிகாந்துக்கு.
அடுத்த ஐந்தாவது நிமிடத்திலேயே அந்தக் காரும் வந்திருக்க அதில் கணவன் மனைவி என இரு மருத்துவர்கள் இருந்தனர். அடுத்த சில நிமிடங்களில் மஹதி மயங்கிக் கிடந்த லேகாவுடன் அந்தக் காரில் கிளம்பி விட கணபதியின் காரை அவர் செலுத்த பின் இருக்கையில் இருந்தனர் ரஜினிகாந்தும் அவனது உயிர் காதலியும்.
இவர்கள் எத்தனை முயன்றும் அவளது கையில் இருந்த அந்த பர்சை மட்டும் விடுவிக்கவே இல்லை ஸ்ரீதேவி.
மூச்சு திணறிக் கொண்டிருந்த அந்த நிலையில், தனது கண்களில் வழிந்து கொண்டிருந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு அவளின் உடலில் அங்கங்கே பெருகிய ரத்தத்தை நிறுத்த போராடியபடியே காரினுள் தன்னை மடியிலேந்திக் கொண்ட ரஜினிகாந்தை பார்த்து சிறிதாக புன்னகைத்தாள் ஸ்ரீதேவி.
பதிலுக்கு புன்னகைத்தவன் அவளது கையில் இருந்த பர்சை வாங்கி வைக்க முயல “லெ..லெட்..டர்” உங்க..” என்றாள் திணறலாக.
“என்னடா? என்ன லெட்டர்?”
“உங்க.. உங்க..”
“எனக்கா? இதிலே இருக்கா?” என வாங்கிக் கொண்டான் பர்சை
“படிங்க.. ப்ளீ..”
“கண்டிப்பா படிக்கிறேன். நீ ரிலாக்ஸ்டா இருடா எல்லாம் பார்த்துக்கலாம். ரொம்ப வலிக்குதா? என்ன செய்யுது?”
அவன் கேட்க மூச்சு இன்னுமாக திணறியது அவளுக்கு.
ரஜினிகாந்தை பார்த்து இடம் வலமாக தலை அசைத்தாள் ஸ்ரீதேவி சின்ன புன்னகையுடன் அவனது கன்னம் தொட்டு முத்தமிட்டாள். அவளுக்கு உதவி செய்து கொண்டிருந்த அவனது விரல்களை பிடித்துக் கொண்டாள் பெண். அதை மெல்ல வருடின அவள் விரல்கள்.
அந்த நேரத்தில் அவளது உதடுகள் மெல்ல அசைந்தன “பார்றா எனக்காக ரஜினி சர் அழறாரு. பை ரஜினி சர். லவ் யூ ”. அதன் பின்னர் மூடிக் கொண்டன அவள் கண்கள்.
மறுநாள் காலை எட்டு மணி. பெங்களூர் சென்னை நெடுஞ்சாலையில் இருந்த அந்த மருத்துவமனையில் ஓய்ந்து போய் அமர்ந்து இருந்தான் ரஜினிகாந்த். இரண்டு பெண்களும் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தனர்.
விபத்து போலிஸ் விசாரணை என சில மணி நேரங்களுக்குள் ஆயிரம் விஷயங்கள் வந்து வந்து போக அத்தனைக்கும் துணை நின்றார், இன்னமும் நின்று கொண்டிருக்கிறார் டாக்டா கணபதி.
“நீ ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்கே. நான் இது போல பல விஷயங்கள் பார்த்தாச்சு. நான் இவங்களுக்கு பதில் சொல்லிக்கறேன். நீ போய் கொஞ்ச நேரம் அமைதியா ரெஸ்ட் எடு ரஜினி”
அவர் தளர்ந்து நின்ற இவனுக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி வைக்க இப்போது அந்த அறையில் வந்து தனியாக அமர்ந்து இருந்தான் நமது நாயகன். உடலும் உள்ளமும் அலைபுற்றுக் கிடந்தது.
“லெ..லெட்..டர்” உங்க..” அவளது வார்த்தைகள் அவனது நினைவுக்கு வர அவசரமாகத் தேடி எடுத்தான் அவளது பர்ஸை. அடுத்த நொடி அவனது கை சேர்ந்தது அந்தக் கடிதம்.
அவளது பர்சும் கைப்பேசியும் அங்கே ஓரமாக கிடக்க, அவனது கண்ணீர் பெருகி வழிந்து கொண்டிருக்க அந்தக் கடிதத்தை எடுத்தான் ஸ்ரீதேவியின் காதலன்.
நேற்று முன் தினம் இரவு தன்னை சந்தித்து விட்டு சென்ற பிறகுதான் அந்தக் கடிதத்தை எழுதி இருக்கிறாள் என்பது அதில் அவள் குறிப்பிட்டிருந்த தேதியும் நேரமும் தெளிவாக சொன்னது.
“ரொம்ப ஸாரி ரஜினி சர். ரொம்ப ரொம்ப ஸாரி. எந்த நடிப்பும் இல்லாம, எந்த பொய்யும் சொல்லாம, நான் இப்போ மனசார சொல்றேன் உங்களை எனக்கு என் உயிருக்கு மேலே பிடிக்கும்.”
‘இப்போது இந்த வார்த்தைகளுக்கு மகிழ்ந்து போவதா? வருத்தப் படுவதா? அடுத்து என்னடி செய்யப் போகிறேன் நான்?’
அந்த வரியை மட்டுமே பைத்தியம் போல மறுபடி மறுபடி படித்துக் கொண்டிருந்தான் கொஞ்ச நேரம்.
“எப்பவுமே நீங்கன்னா எனக்கு அவ்ளோ ஸ்பெஷல்தான். அது எப்படின்னே தெரியாது. எப்போ நான் சோர்ந்து போய் நின்னாலும் உடனே போன் பண்ணுவீங்க. “என்னாச்சு ஸ்ரீதேவி டாக்டர்? குரல் ஒரு மாதிரியா இருக்கு? உடம்புக்கு என்ன?” அப்படின்னு கேட்பீங்க.
தீபாவளி அன்னைக்கு அந்த காபி பாயின்ட்லே ரெண்டு பேரும் மீட் பண்ணோமே அப்போ கூட, அதுக்கு கொஞ்ச நேரம் முன்னாடி உங்களைத் தேடினேன். உடனே கண்ணு முன்னாடி வந்து காபியை கொடுத்தீங்க. அதுக்கு அப்புறம் இன்னைக்கு காலையிலே கோவிலிலே அந்த
“பார்றா சென்னை சென்னை மாதிரியே இல்லை.. “
அப்போ என்ன சொல்லன்னு தெரியலை ரஜினி சர்.. எதுவுமே சொல்ல முடியாத நிலையில் நின்னேனே நான். அதுக்கு அப்புறம் கையிலே பிரசாதத்தோட என்னை அவ்ளோ நேரம் தேடினீங்க. நான் தூரத்தில் இருந்து பார்த்தேன்,
கண்களை மூடி இடம் வலமாக தனக்குத்தானே தலை அசைத்துக் கொண்டான் ரஜினிகாந்த்.
“இன்னைக்கு மத்தியானம் உங்களைப் பார்த்ததும், நீங்க ஸ்வீட் கொடுத்ததும் என் வாழ்க்கையிலே மிக மிக பொக்கிஷமான நிமிஷங்கள். அப்போவே உங்களை தொட்டுப் பார்க்கணும்னு ஆசை. ஆனாலும் கட்டுப் படுத்திக்கிட்டேன். பட் இப்போ பை சொல்ற சாக்குல உங்க விரல்களை தொட்டு பார்த்துட்டேனே”
தனது நெற்றியில் தானே ஓங்கி அடித்துக் கொண்டான் ‘இந்தக் காதல் என்ற ஒன்றை ஏனடா இறைவா படைத்தாய்?’
“இவ்ளோ எல்லாம் ஆசை வெச்சிருக்கே ஆனா ஏன்டி விலகிப் போனேன்னு கேக்கறீங்க இல்லையா? சொல்றேன்.
“ஸ்ரீலேகா இந்தப் பெயர் ஞாபகம் இருக்கா உங்களுக்கு? எவ்ளோ அபத்தமான கேள்வி இல்லையா இது? உங்களாலே அவ்வளவு ஈஸியா மறக்கக் கூடிய பெயரா அது?”
உண்மைகள்தான் நேற்று இரவே தெளிவாகி விட்டனவே,. இப்போது இதைப் படிக்க பெரிய அதிர்ச்சி இல்லை என்றாலும். அவற்றை அவளது வார்த்தைகளில் படிக்கப் படிக்க உயிர் தடதடக்கதான் செய்தது.
“அது நடந்து ஒரு ஏழெட்டு வருஷம் இருக்குமில்ல? எங்க அக்கா ஸ்ரீலேகா! அடுத்தவங்களை பயமுறுத்தி பார்க்குறது, அவங்களை பதற வெச்சு பாக்குறது, இதெல்லாம் அவளுக்கு ஒரு பொழுது போக்கு. சேடிஸ்ட்ன்னு கூட சொல்லலாம். தப்பே இல்லை.
அப்போ எங்க அக்கா காலேஜ் கடைசி வருஷத்திலே இருந்தா அப்போதான் உங்க தங்கச்சி அந்த காலேஜ் ஹாஸ்டல்லே வந்து சேர்ந்திருக்கா.
உங்க தங்கச்சிக்கு உயரம்ன்னா ரொம்ப பயமாமே. அது தெரிஞ்சதும் எங்க அக்காவுக்கு ரொம்ப சந்தோஷமா ஆகியிருக்கும். ராக்கிங்! உங்க தங்கச்சியை முப்பது செகண்ட் மாடி கைப்பிடி சுவர் மேலே ஏறி நிக்க சொல்லி ராக்கிங். பாவம் அரசி. அவ பயந்து கீழே விழுந்து அதனாலே இப்போ அவளுக்கு ஒரு கால் இல்லை.”
கண்களை மூடிக் கொண்டவனின் விழிகளுக்குள் அந்தக் காட்சிகள் ஓடத்தான் செய்தன.
அந்த நாளின் நடு இரவில், சென்னையில் இருந்த தங்கையின் கல்லூரியில் இருந்து வந்த அழைப்பும், அப்போது இவர்கள் அடைந்த மன உளைச்சலும், இவர்கள் மூவரும் கல்லூரிக்கு பதறியடித்துக் கொண்டு ஓடியதும். அரசி துடித்த துடிப்பும், அவளது வலியும், கதறலும், அம்மாவின் அழுகையும்.
இது எல்லாவற்றையும் தாண்டி கடைசியில் அரசியின் ஒரு காலை மட்டுமே காப்பாற்ற முடிந்திருந்தது அப்போது. அதற்கும் மேலாக அவளது ஒரு வருட படிப்பும் வீணானது.
“நான் நிம்மதியா கல்யாணம் பண்ணி ஹவுஸ் வைஃபா செட்டில் ஆகணும்” என்று அப்போதெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தவள் அதன் பிறகு உடைந்து போனாள்.
“என்னை இனிமே யாரும் கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்களா அண்ணா?” கேட்டு கதறியும் இருக்கிறாள் அரசி. அதனோடு உடைந்து போனார்கள் பெற்றவர்கள் இருவரும். மூவரையும் தாங்கி நின்றவன் இவன் மட்டுமே.
அதன் பிறகு செயற்கை கால் உதவியுடன் அவளை நடக்க வைத்து, தன்னம்பிக்கையை ஊட்டி, சிரிக்க வைத்து, இயல்புக்கு கொண்டு வந்து என வீட்டில் இருக்கும் நேரம் முழுவதையும் அரசியுடனே கழித்தான் ரஜினிகாந்த்.
அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக நிமிர்ந்தவள் இன்று டெல்லியில் உள்ள ஒரு பெரிய கல்லூரியில் உளவியல் துறை பேராசிரியையாக நிற்கிறாள்.
அருகிருந்த பாட்டிலில் இருந்த நீரை பருகி தன்னை ஒரு நிலைக்குத் தள்ளிக் கொண்டு கடிதத்தை தொடரலானான் ரஜினிகாந்த்.
“தெரியாம செஞ்சிட்டேன். சும்மா விளையாட்டுக்கு செஞ்சேன் இப்படி எல்லாம் ஆயிரம் காரணங்கள் சொன்னா அவ. ஆனா எல்லா விவரமும் தெரிஞ்ச அந்த வயசிலே விளைவுகள் எல்லாம் தெரிஞ்சும், திமிரெடுத்து அவ செஞ்ச வேலை அது, அப்படிங்கிறதுதான் உண்மை. நியாயப்படி எங்க அக்காவுக்கு பெரிய தண்டனை கிடைச்சு இருக்கணும். அது கிடைக்கணும்னு நீங்க எல்லாரும் போராடி இருக்கீங்க. ஆனா அப்படி ஒண்ணு நடக்கவே இல்லை.
குறைஞ்ச பட்சம் அந்த காலேஜ் விட்டு கூட அவ நீக்கப் படலை. காரணம் அப்போ மந்திரியா இருந்த எங்க மாமா. அவ மேலே எஃப். ஐ. ஆர் கூட போட விடலை அவர் .
ஜஸ்ட் கொஞ்ச நாள் காலேஜ்லேர்ந்து சஸ்பெண்ட் பண்ணி வெச்சாங்க அவ்ளோதான். அதுக்கு அப்புறம் அதே காலேஜ்லேயே இருந்து எம்.பி.ஏ வரை முடிச்சு இப்போ பெரிய கம்பெனியிலே வேலை பார்க்குறா”
அந்த கடிதத்தை மார்போடு அணைத்துக் கொண்டு சில நொடிகள் இங்குமங்கும் நடந்து கொண்டிருந்தான் ரஜினிகாந்த். பழைய நினைவுகளில் மனம் ஒரு இடத்தில் நில்லாமல் தறிகெட்டு அலைபாய்ந்தது. கண்களின் ஓரம் மட்டும் நீர் தேங்கி நின்றது.
வெளியில் மழை இன்னமும் மிச்சமிருந்தது. மனதை கொஞ்சம் ஆற்றிக் கொள்ள அந்த அறை ஜன்னலின் அருகில் சென்று அதை திறந்து விட்டு மழைக் காற்றை முகத்தில் வாங்கிக் கொண்டான். அதன் அருகில் இருந்த இருக்கை ஒன்றில் அமர்ந்து கொண்டான்.
இப்போது மறுபடியும் அவனது கைக்கு வந்திருந்த அவளது கடிதம் காற்றில் படபடத்தது. அதையே பார்த்துகொண்டு நின்றவனுக்கு அதனுள்ளே இருந்து அவளே பேசிக் கொண்டிருக்கும் பிரமை. தொடர்ந்தான் கடிதத்தை.
“அப்போ நான் மதுரை மெடிக்கல் காலேஜ்லே எம்.பி.பி.எஸ் படிச்சிட்டு இருந்தேன். நடந்தது எதுவும் உடனே தெரியாது எனக்கு. ஒரு தடவை லீவ்லே வீட்டுக்கு வந்த போதுதான் அம்மா இதெல்லாம் சொன்னாங்க.
நடந்த போதே எல்லாம் தெரிஞ்சிருந்தா மட்டும் ஏதாவது செஞ்சு கிழிச்சு இருப்பேனா என்ன? ஒரு மண்ணும் செஞ்சிருக்க மாட்டேன். மௌன சாட்சியா வேடிக்கை பார்த்திருப்பேன்.
அப்போ இந்த விஷயத்திலே நானோ எங்க அம்மாவோ உள்ளே வரவே இல்லை. எல்லாம் எங்க மாமாதான் பார்த்துக்கிட்டார். அப்படி வந்திருந்தா கூட நீங்க எல்லாரும் என்னை, எங்க அம்மாவை எல்லாம் அப்போவே பார்த்திருப்பீங்க. அதுக்கு அப்புறம் என்கிட்டே ட்ரீட்மென்ட் கூட வந்திருக்க மாட்டங்க உங்க அம்மா.
இந்த விஷயம் எனக்குத் தெரிஞ்சதும் ஒரு பொண்ணுக்கு எவ்ளோ பெரிய தப்பு செஞ்சிருக்கா எங்க அக்கா அப்படின்னு கொஞ்ச நாள் அவ கூட பேசாம இருந்தேன். எவ்ளோ நாள் அப்படியே இருக்க முடியும்? அந்த விரதமும் ஒரு நாள் தன்னாலே முடிஞ்சு போச்சு”
“எவ்வளவு கேவலமான குடும்பம் இல்லையா ரஜினி சர் எங்க குடும்பம்?”
உண்மைகள் உயிரை அழுத்த அழுத்த வெளியில் தெரிந்த மழைத் தூரலை பார்த்துக் கொண்டே அமர்ந்து இருந்தான் கொஞ்ச நேரம். பின்னர் மறுபடியும் கடிதத்துக்கு போயின அவன் கண்கள்.
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உங்க அப்பா எனக்கு கால் பண்ணி இருந்தார் ரஜினி சர். உன் ஜாதகத்திலே கண்டம் ஒண்ணு இருக்கும்மா பத்திரமா இருந்துக்கோ அப்படின்னு சொன்னார். உங்களை எல்லாம் கேவலமா பேசி விலகின நான் கூட நல்லா இருக்கணும்ன்னு நினைக்குற உங்க குடும்பம் எங்கே? நாங்க எங்கே?”
எல்லாத்துக்கும் மேலே எனக்கு அரசி ரொம்ப பிடிக்கும் ரஜினி சர். அவளை பார்த்திருக்கேன் பேசி இருக்கேன். ஒரு வரி பேசறதுக்குள்ளே மூணு அண்ணி சொல்லும் அந்தப் பொண்ணு. நான் உண்மையை சொல்லணும்னா உங்க “ஸ்ரீதேவி டாக்டர்” விட அவளோட அண்ணி எனக்கு ரொம்ப பிடிக்கும். ஒரு அண்ணியா அவளுக்கு நிறைய நல்லது செய்யணும்னு நினைச்சு இருக்கேன். அவளுக்கு ஒரு நல்ல தோழியா எப்பவும் இருக்கணும்ன்னு நினைச்சு இருக்கேன்.
என்னோட ஸ்வீட் அரசி ரஜினி சர் அவ. அவளுக்கு துரோகம் பண்ண குடும்பம் சர் எங்க குடும்பம். அந்தக் குற்ற உணர்ச்சியை என்னாலே தாங்கவே முடியலை. இனி என்னாலே அவ முகத்தை பார்த்து பேச முடியுமான்னு கூடத் தெரியலை . இதெல்லாம் தெரிஞ்சா அவ என்னை அண்ணின்னு கூப்பிடுவாளான்னு கூட தெரியலை. அண்ணி அப்படிங்கிறது ஒரு அழகான உறவு. அது கிடைக்குற தகுதிதான் எனக்கு இல்லை. இப்போ கூட பாருங்க நாம பிரிஞ்சதுக்கு அவதான் காரணம்னு வாய் கூசாம சொல்லிட்டு ஓடி வந்திட்டேன்”
“முதலிலே உங்க கூட எல்லாம் பழக ஆரம்பிச்ச போது எங்க அக்காவினாலே பாதிக்கப்பட்டது நீங்கதான்னு எல்லாம் எனக்குத் தெரியலை ரஜினி சர். அதுக்கு அப்புறம் ஒரு நாள் நம்ம அரசியோட கதையை எனக்கு நீங்க சொன்னீங்க பாருங்க அப்போதான் மெது மெது வா உண்மைகள் புரிய ஆரம்பிச்சது. எல்லா உண்மையும் உங்க கிட்டே சொல்லிடலாம், அப்படி எல்லாம் கூட நினைச்சு இருக்கேன். ஆனா தைரியம் வரலை ரஜினி சர். உங்க கோபத்தை வெறுப்பை பார்க்குற தைரியம் மட்டும் எனக்கு வரவே இல்லை.”
ஜன்னலின் வழியே வீசிய காற்று அவனது முகத்தில் வந்து மோதியது. எப்படியோ அந்தக் கடிதம் அவனது கையை விட்டு பறந்து தள்ளி சென்று விழுந்தது. அவசரமாக ஓடிச்சென்று அதைக் கைகளில் அள்ளிக் கொண்டான், ஏதோ அவளையே கையை ஏந்திக் கொள்ளும் உணர்வுடன்.
“உங்க அம்மா சொல்வாங்க. என் பையனுக்கு சுவாசம், சாப்பாடு, சந்தோஷம் எல்லாமே அவனோட டாக்டர் தொழில்தான் அப்படின்னு.
சின்ன வயசிலே அவனோட கண்ணிலே அடி பட்டு கொஞ்ச நாள் கண்ணிலே கட்டு போட்டிருந்தோம். ஒரு வாரம் போல அவனாலே பார்க்க முடியாம இருந்தது. அப்போதான் அவனுக்கு பார்வை இல்லன்னா எவ்வளவு கஷ்டம்னு புரிஞ்சு இருக்கும் போல.
அவனோட அப்பா கூட ஏன்டா கஷ்டப்பட்டு படிக்குறே. எதாவது ஒரு சாதாரண டிகிரி படிச்சிட்டு கடையை பார்த்துக்கோன்னு சொன்னார். ஆனா கண் மருத்துவம்தான் படிப்பேன்னு உறுதியா இருந்து ராப்பகலா படிச்சான்.
பார்வை இருக்கறவங்களோட குறைகளை சரி செய்வதை விடவும் பார்வை இல்லாதவங்களை பார்க்க வைக்குறதுதான்மா பெரிய சந்தோஷம் அப்படின்னு சொல்வான். அதுக்காகவே ஸ்பெஷலா படிக்க அமெரிக்கா போயிருக்கான்.
அவனை என்ன சொல்லி திட்டினாலும் பொறுத்துகுவான். ஆனா அவன் தொழிலையோ டாக்டர்சையோ தப்பா பேசினா அதுக்கு அப்புறம் அவங்க முகத்திலேயே முழிக்க மாட்டன்னு சொல்வாங்க. அந்த கடைசி விஷயத்தைத்தான் நான் உபயோகப் படுத்திக்கிட்டேன்.
உங்க ஹாஸ்பிட்டல் மேலே இருந்த உடல் உறுப்பு திருட்டு பழியை உங்க மேலே போட்டு பேசிட்டு அதைக் காரணமா வெச்சே உங்களை விட்டு ஓடிப் போயிட்டேன் பார்றா எனக்கு கூட நல்ல நல்ல ஐடியா எல்லாம் வந்திருக்கு இல்ல?.”
“நானும் மருத்துவத்தை என் உயிரா நினைச்சு ரசிச்சு ரசிச்சு படிச்ச டாக்டர்தான். நம்ம மேலே அப்படி ஒரு பழி வந்தா எப்படி வலிக்கும்னு எனக்கு நல்லாத் தெரியும். தெரிஞ்சேதான் பேசினேன். தெரிஞ்சேதான் உங்களை காயப் படுத்தினேன்.
சரி இத்தனை நாள் இதெல்லாம் சொல்லலை. இப்போ எதுக்கு திடீர்னு இவ்ளோ பெரிய லெட்டர். இவ்ளோ பெரிய புலம்பல்ன்னு கேக்கறீங்களா? அதுக்கும் காரணம் இருக்கு”
அவனது கைபேசி ஒலித்தது அப்போது. அழைத்தது அரசி.
“அண்ணா பெங்களூர் வந்துட்டேன்ண்ணா.” என்றாள் அவள். “நீ எங்கேண்ணா இருக்கே? அண்ணிக்கு ஏன்ண்ணா இப்படி எல்லாம்? நாங்க எல்லாம் உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கத்தான் பிளான் எல்லாம் போட்டோம் கடைசியிலே இப்படி….” படபடத்தாள் அரசி.
“விதிம்மா… எல்லாம் விதி” என்றான் கொஞ்சம் உடைந்த குரலில் . தேவியின் கடிதம் அவனது நெஞ்சோடு இருந்தது.
“நாங்க எல்லாரும் கிளம்பி வரோம்ண்ணா உடனே”
“இப்போ வேண்டாம் அரசி” என்றான் நிதானமாக “ஆக்சிடென்ட் எப்படி ஆச்சுன்னு அது இதுன்னு போலிஸ் என்குயரி நடக்குது. அது எல்லாம் முடியட்டும். அதுக்கு அப்புறம் நான் சொல்றேன். எப்போ வரணும் யார் வரணும்ன்னு.”
“சரிண்ணா” என்றவள் சிறிது நேரம் பேசி விட்டு அழைப்பை துண்டித்தாள்.
வாய்த் திறந்து ஒரு ஆழ் மூச்சு எடுத்துக் கொண்டவன் மனதை சமன் படுத்திக் கொண்டு கடிதத்தை தொடர்ந்தான்.
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உங்க அப்பா எனக்கு கால் பண்ணி பத்திரமா இருந்துக்கோ மா ன்னு சொன்னார். அப்போதான் எனக்கு புரிஞ்சது நான் பத்திரமா இல்லாம போகவும் வாய்ப்பு நிறைய இருக்கு, உங்க அப்பாவோட வார்த்தைகள், கணிப்புகள் கண்டிப்பா பலிக்கும்னு எனக்கு நல்லாவேத் தெரியும்.
அப்படி எனக்கு ஏதாவது ஆச்சுன்னா அதுக்கு அப்புறமாவது உங்களுக்கு எல்லா விஷயமும் தெரியட்டும்னு தோணிச்சு. அப்போ நீங்க என்னை புரிஞ்சிப்பீங்கதானே.கோபப் பட மாட்டீங்க தானே. அது போதும் எனக்கு. எனக்கு அப்படி ஒரு நிலை வரும் போது இந்த லெட்டரை உங்க கையிலே சேர்த்திடுவேன்”
அவனது கண்களில் மறுபடியும் கோர்த்துக் கொண்டது கண்ணீர்.
“சும்மா எனக்காக அழாதீங்க ரஜினி சர்.. அதுவெல்லாம் வேஸ்ட். அழகா மஹதியை கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருங்க. அவ உங்களை ரொம்ப நல்லா பார்த்துப்பா. அருமையான பொண்ணு அவ. சந்தோஷமா இருங்க ரஜினி சர். அரசியும் புகழோட ரொம்ப சந்தோஷமா இருப்பா. கவலையே படாதீங்க”
“நான் செஞ்சதுக்கு எல்லாம் உங்ககிட்டே மன்னிப்பே கேட்கலையேன்னு யோசிக்கறீங்களா? அந்த வார்த்தை மேலே எனக்கு நம்பிக்கையே இல்லை. அதுவும் தெரிஞ்சே செஞ்ச தப்புக்கு எல்லாம் மன்னிப்பே கிடையாது.”
“சரி ரஜினி சர். நிறைய புலம்பிட்டேன். போதும். இனி நிம்மதியா நான் என் வழியை பார்க்கிறேன். நீங்க உங்க வாழ்கையை பாருங்க. கடைசியா ஒரே ஒரு தடவை….”
“லவ் யூ ரஜினி சர்”
ஸ்ரீதேவி ரஜினிகாந்த்.
என முடித்திருந்தாள் கடிதத்தை. இரண்டு முறை மூன்று முறை நான்கு முறை என மறுபடி மறுபடி படித்து முடித்தான் கடித்ததை. பின்னர் அதில் அழுத்தமாக முத்தமிட்டான் ரஜினிகாந்த்.
இந்த அத்தியாயத்தின் இன்னொரு பகுதி https://praveenathangarajnovels.com/%e0%ae%9f%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d-prefinal-2/
எமோஷனல் அப்டேட். பிளாஷ் பேக் இப்படி லெட்டர் மூலமா அழகா சொல்லலாம்னு தெரிஞ்சுது. லேகா அவ எல்லாம் மனுஷியா ? பார்றா – இந்த வார்த்தை வர இடம் எல்லாம் அவளோ அழகா இருக்கு. ரஜினிகாந்த் உண்மையை ஏற்கனவே கெஸ் பண்ணிட்டார். இருந்தாலும் தேவி பக்கம்இருந்தும் அதை தெரிந்து கொண்டது சூப்பர். மன்னிப்பு பற்றி சொல்ற இடம் அருமை. அரசி நிஜமாவே அரசி தான். அத்தனை பெரிய விபத்தில் இருந்து மீண்டு இப்போ இந்த பொசிஷன் லே இருக்கிறது பெரியவிஷயம். அடுத்த பார்ட்லே என்ன டுவிஸ்ட் இருக்கோ ? இதோ போறேன்
parra ippadi sri devi ku accident panni serious ah vachitingle intha situation la rajini unmai theriyanum nu ellathaium letter la eluthi vachita devi . antha nilamailaum rajini sir kaiya touch panni feel panathu romba alagu evlo tha kattu paduthi vachalum oru sila unarvugal intha mari nerathula veli padum atha ellam ethupanga thane athe tha devi ninachi iruka alaga irunthuchi flashback next epi la devi ku ethum agatha mri irukanum
லேகா என்ன பொண்ணு இவ, எல்லோர் வாழ்க்கையிலும் விளையாடி இருக்கா, ரஜனி ஏற்கனவே கெஸ் பண்ணி இருந்தாலும் ஸ்ரீதேவி லெட்டர் மூலமா தெரிஞ்சிக்கிறது புது ஐடியா வா இருக்கு, ப்ளாஷ்பேக்க இப்படி லெட்டர் மூலமா கூட சொல்லலாமோ? அடுத்த பார்ட்ல என்ன இருக்குன்னு போய் படிச்சிட்டு வரேன்
நினைச்சேன் இவங்க பிரிவு இந்த லேகாவால தான் இருக்கும்னு ஓரு குடும்பத்துக்கு இவ்வளவு பெரிய கஷ்டத்தை கூடுத்துட்டு எப்படி நிம்மதியா இருக்கா அவளால் இவங்க இரண்டு பேரும் கஷ்டப்படறாங்க
இவங்களை சேர்த்து வைங்க
Very emotional.
Srilekha ivvalavu mosamaanavala?
Sridevi paavam. Enga rajini sir kagavaavathu sridevi naalabadiya varanum.
இந்த எபி இமோஷனல் எபி ரஜினி சார் ஸ்ரீதேவி டாக்டரை பாத்து அழறது தேவி லெட்டர் உள்ள பர்ஸை கையில் அழுத்தமா வச்சிருக்குறது லெட்ட.ரை படித்து முடிந்து போன நிகழ்வுகளை நினைத்து பார்ப்பது அரசியின் கால் போவது அழுத்தமா எழுதியிருக்கிங்க ஸ்ரீதேவி டாக்டர் அவ்வளவு உடம்பு முடியாத நிலையிலும் லெட்டரை யாரிடமும் குடுக்காதது புன்சிரிப்புடன் ஐ லவ்யு சொல்லுவது நான் உங்களுக்கு வேண்டாம்ன்னு சொல்லி கண் மூடுவது செம எபி
செம்ம கண்ணுல தண்ணி வர வச்சுடீங்களே…. இப்படி ஒரு ஃப்ளாஷ்பேக் இருக்கும்ன்னு நினைக்கல…
ஶ்ரீதேவி போல தங்கைக்கு லேகா போல அக்காவா??..
Emotional epi💕💕💕💕💕
Super😍👍👍
லேகா என்ன ஒரு மட்டமான குரூர புத்தி உனக்கு…. பாவம் அரசி….
அரசி call பண்ணும் போது ரஜினி sir sonna விதிமா எல்லாம் விதி எனக்கு ஆறுயில் இருந்து அறுபது வரை ரஜினி நினைவுக்கு வந்துட்டார்….